Archive for the ‘அறிமுகம்’ Category

வந்துட்டேனுங்கோ..! வணக்கமுங்கோ..!

ஏப்ரல் 16, 2007
எனது இனிய வலைத்தமிழ் மக்களே..

அனைவருக்கும் வணக்கம்.
சென்ற மார்ச் மாதம் 23-ம் தேதியன்று துவங்கப்பட்ட எனது இந்த வலைத்தளம், இன்று முதல் தமிழ்மணத்தின் திரட்டியில் இணைக்கப்பட்டு உங்களையெல்லாம் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதை நினைத்துப் பெருமையடைகிறேன்.
இப்படியொரு வலைப்பதிவு உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த சகோதரர் ‘தடாலடி’ ஜி.கெளதம் அவர்களுக்கு முதற்கண் எனது இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வலைத்தளத்தைப் பற்றிக் கேள்விப்பட்டாகிவிட்டது. அதில் நாமும் இணைய வேண்டும் என்ற எண்ணத்தில் யாரிடம் சென்றால் அதற்குத் தீர்வு கிடைக்கும் என்று நான் சென்னைத் தெருக்களில் அலைந்தபோது, “எல்லாச் சாலைகளும் ரோமபுரி நோக்கியே செல்கின்றன” என்ற புகழ் பெற்ற வாக்கியத்தைப் போல் அனைவரும் கை காட்டியது அருமைச் சகோதரர், எனதருமை கெழுதகை நண்பர் திரு.பாலபாரதியை நோக்கி..!
தொடர்பு கொண்டு உதவி கேட்டபோது வாஞ்சையுடன் அழைத்தார் திரு.பாலபாரதி. அவர் கொண்டுள்ள கொள்கைளும், நான் கொண்டுள்ள கொள்கைகளும் வேறு வேறு என்றாலும்கூட அதைப் பற்றி சிறிதும் மனதில் கொள்ளாமல் அருகில் அமர வைத்து, கை பிடித்து சொல்லிக் கொடுத்து, விழி மேல் விழி வைத்து வரைந்து காட்டி எனது வலைத்தளத்தை உருவாக்கிக் கொடுத்த அவர்தம் கைகளை முத்தமிடுகிறேன். சகோதரர் பாலபாரதிக்கு எனது அன்பார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
அன்பிற்கினிய பதிவர்களே.. வலைப்பதிவிற்கு நான் புதியவன்; மாணவன். ஆயிரக்கணக்கான வலைப்பதிவுகளில் பல லட்சக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி தங்களுக்குள் இணையதளம் மூலம் ஒரு இணைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது பெரும் உவகை ஏற்பட்டது.
ஆனால் உள்ளே வந்து வலைப்பதிவுகளை படிக்கத் துவங்கியபோது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவே இல்லை. பொதுவாக வலைப்பதிவு ஏற்படுத்தும் திறமைசாலிகள் கண்டிப்பாக பட்டறிவும், எழுத்தறிவும் படைத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் அப்படியே. அப்படியொரு அறிவாளிகளின் சபையை நானும் பார்க்கப் போகிறேன் என்ற ஆனந்தத்தில் உள்ளே நுழைந்த எனக்கு இங்கே படித்த, கண்ணில்பட்ட சில விஷயங்கள் தொண்டைக்குழியில் சிக்கிக் கொண்ட முள் மாதிரி இருக்கிறது.
அன்பர்களே.. நண்பர்களே.. சகோதரர்களே.. சகோதரிகளே.. நாம் அனைவரும் முதலில் மனிதர்கள். பின்பு பிறந்த நாட்டால் இந்தியர்கள். பேசுகின்ற மொழியால் தமிழர்கள். அவ்வளவே.. நமக்குள் வேறு எந்தப் பேதமும் இல்லை. பேதம் பார்ப்பவர்கள் மனிதர்களாகவே இருக்க முடியாது.
பிராமணர், பிராமணல்லாதார் என்று வலைப்பதிவிலேயே பிரச்சினைகள் வந்துவிட்டது, எந்த அளவிற்கு இந்த அரசியல்வாதிகள் நம் இளைஞர்களான சகோதரர்களை கெடுத்துக் குட்டிச் சுவராக்கி வைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.
உலகத்தில் நீ என்ன ஜாதி என்று கேட்டு பேசத் தொடங்குகிற பழக்கம் அநேகமாக இந்தியாவில், நம் தமிழ்நாட்டில்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் பொழுது விடிந்து, பொழுது போனால் இங்கேதான் ‘ஜாதி’, ‘ஜாதி’ என்று சொல்லி இளைய சமூகத்தினரின் மூளையை சலவை செய்து வைத்திருக்கிறார்கள். இந்த பதவி வெறி பிடித்த அரசியல்வாதிகளால்தான் தமிழ்நாட்டில் ‘ஜாதி’ என்கிற வார்த்தையே அழிக்க முடியாத ஒரு அங்கமாகப் போய்விட்டது.
சகோதரர்களே..!
நாம் 2007-ம் ஆண்டில் இருக்கிறோம். இனி வரும் காலங்களிலாவது நம் இளைய தலைமுறை அதாவது நம்முடைய பிள்ளைகள், பேரன்களாவது ‘ஜாதி’ என்ற அரக்கன் இல்லாத சூழ்நிலையில் வாழ வேண்டும் என்ற கொள்கையோடு நாம் செயல்படுவோம்.
அப்போதுதான் நம் பிள்ளைகளை நாம் இந்த இருபத்தொண்ணாம் நூற்றாண்டிற்கு தயார் செய்ததாக ஒரு அர்த்தம் இருக்கும்.
தயவு செய்து வலைப்பதிவுகளில் ஜாதி மோதல் வேண்டாம். நாம் அனைவரும் பேசுகின்ற தமிழ் மொழியால் தமிழர்கள். அவ்வளவே..
உலகில் நிகழும் நிகழ்வுகளை நமக்குள் கருத்து பேதமில்லாமல் பகிர்ந்து கொள்வோம். நல்ல விஷயங்கள் எது? கெட்ட விஷயங்கள் எது? என்பதனை யாரும் யாருக்கும் கேட்காமல் கொடுத்து உதவுவோம். பண்பட்ட, மனிதத்தனம் உள்ள ஒரு சமூகத்தை உருவாக்க நாம் நம்மால் முடிந்ததைச் செய்வோம்.
நமக்குள் கோபம் வேண்டாம். குரோதம் வேண்டாம். பகை வேண்டாம். முட்டல், மோதல்கள் வேண்டாம்..
சாதி, சமய, சடங்குகளற்ற புதிய தமிழகத்தை படைக்க இந்த நேரத்தில் உறுதி காண்போம்.
வாழ்க.. வளர்க..