என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த துரதிருஷ்டம் உங்களுக்கு வந்திருக்க வேண்டாம்தான்..! ஆனால் எனக்கும் வேறு வழியில்லை..!!
அதிர்ஷ்டத்தை என் வாழ்க்கையில் நான் இதுவரையிலும் பார்த்திருக்காத காரணத்தினாலும், இனிமேலும் பார்ப்பேன் என்று நினைக்கக்கூட முடியாத நிலையில் நான் இருப்பதினாலும் இது எனக்குப் புதியதல்ல.
உதிர்ந்த இலைகளெல்லாம் காற்றின் ஊடலையும் தூசிகளை உள்வாங்கிக் கொண்டு குறைந்தபட்சத்தை வெளிக்காட்டி நல்லதொரு தொண்டுள்ளம் செய்வதை நாம் உணர்ந்ததில்லை. உதிராமல் இருந்துவிடலாமே என்று அதுவும் நினைப்பதில்லை.. காலமாற்றம் நமக்கு மட்டுமல்ல.. இயற்கையின் அத்தனைக்கும் உண்டு. சிறகுகள் உதிர்ந்து சருகுகளாகி அப்போதும் அவைகள் யாரோ ஒரு இயற்கையின் படைப்புகளுக்குப் பயன்படுகின்றன என்பதுதான் அவற்றின் சிறப்பு.
வந்தோம்.. சென்றோம்.. என்றில்லை.. அத்தனையிலும் ஒரு காரண, காரியம் இருக்கிறது என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தாலே வாழ்க்கையின்போக்கில் நாமும் போய்விடலாம்.
அப்படித்தான் யயாதியின் வம்சத்தில் ஒருவனாக வேட்கை கொண்டலையும் அவன் வழித்தோன்றலில் எளியவனாக எதையோ தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன். அது எது என்பதுதான் இன்றுவரையில் தெளிவாகப் புலப்படாததால் கண்ணில் படுபவற்றையெல்லாம் அற்புதம், அழகு என்றெல்லாம் மிகை உணர்ச்சியின் விளம்பில் நின்று வினாவெழுப்ப மனமில்லாமல் மனம் நிற்கிறது.
இடைத்தங்கலில் இளைப்பாறி, களைப்பாறிய உள்ளம் உற்சாகமாகி மீண்டும் குதிரையோட்டத்துக்கு தயாரானதுபோல் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டு வந்திருக்கிறேன். வருவது வரட்டும்.. போகிற போக்கில் என் தோல் உரிவதையும் காலச்சுழற்சியின் ஒரு அங்கமாக நினைத்து அதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கிடைத்திருப்பது குறித்து சந்தோஷம்தான்.
அந்த சந்தோஷத்துடனேயே மீண்டும் பதிவெழுத வருகிறேன்.. வந்திருக்கிறேன்.. இடையில் எழுதாமல் போனவைகள் எத்தனை.. எத்தனையோ.. அத்தனையும் திரும்பவும் எழுத எண்ணினாலும் கொட்டிப் போட்ட வார்த்தைகளை அத்தனையையும் அள்ளிவீசினாலும் தகுந்த இடம், சமயம் பார்த்து பிரயோகிக்கவில்லையெனில் அவை அத்தனையும் வீண்தான் என்று வில்லாதி வில்லன் அர்ஜூனனுக்கு யயாதியின் வாரிசு தர்மன் அருளிய உரை எனக்கு நியாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.
கடந்ததை மறந்து, நடந்ததை விட்டெண்ணி இனி வருவதை எதிர்கொள்வோம் என்று மறுபடியும் கடிகார முள் போன்று தரையிறங்கியிருக்கிறேன்.
ஓடுவதும், குதிப்பதும், சிரிப்பதும், சந்தோஷப்படுவதும், அழுவதும், துக்கப்படுவதுமாக அனைத்துமே இனி இங்கேயே இருக்கட்டுமே என்றெண்ணி எழுத முயல்கிறேன்.
வருகையை எதிர்பார்த்து பயத்துடன் காத்திருக்கும் நண்பர்களுக்கும், ஆவலுடன் எதிர்பார்க்கும் அன்பர்களுக்கும், சொல்லொண்ணா நட்பை மறைத்துவைத்துக் கொண்டு முகமன் மட்டுமே காட்டி வரும் நட்பாளர்களுக்கும் எனது இனிய நட்பு கலந்த அன்பு வணக்கம்.