Archive for the ‘அமெரிக்க அதிபர் தேர்தல்’ Category

அமெரிக்க அதிபர் தேர்தல்-2008 ஒரு பார்வை

செப்ரெம்பர் 17, 2008

17-09-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அமெரிக்காவில் உலகத்தின் அடுத்த ஆண்டவனைத் தேர்ந்தெடுக்கும் திருவிழா களை கட்டத் தொடங்கிவிட்டது. ஜனநாயகக் கட்சி, குடியரசு கட்சி என்று இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நம்மூர் வடக்கத்திய தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு இடமளித்து வருகின்றன. ஆனால் நமது நாட்டு ஜனாதிபதி தேர்தல் பற்றி அமெரிக்க ஊடகங்கள் பத்தோடு பதினோறாவது செய்தியாகத்தான் போடுவார்கள். இதனைப் பற்றி நாமும் கவலைப்படுவதில்லை. நிற்க..


ஒபாமாவோ, அல்லது ஜான் மெக்கயினோ இருவரில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அது இந்தியாவைப் பொறுத்தவரை பெரிய அளவுக்கு எந்த மாற்றத்தையும் தரப் போவதில்லை. அமெரிக்க அதிபர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு அருகில் இருக்கும் கண்டங்களைக் கவனித்துக் கொள்ளும் அதிகார லாபியைத் தாண்டி எதுவும் செய்துவிட மாட்டார்கள்.

அந்த ஆலோசகர்களில் பெரும்பாலோர்க்கு ஆசியா என்றாலே பாகிஸ்தான் என்ற இன்னொரு அமெரிக்க மாநிலம் இங்கே இருப்பது ஒன்றுதான் நினைவுக்கு வரும். மற்றவையெல்லாம் பின்னர்தான்.

நம் ஊர் தேர்தல் பிரச்சாரத்திற்கு நாம் செலவழிக்கும் தொகையே நமக்கு வாயைப் பிளக்க வைக்கிறது என்றால் அங்கே ஆகும் செலவைக் கேட்டால் தலையே சுற்றுகிறது.

இதுவரையிலும் தேர்தல் செலவுகளுக்காக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பாராக் ஓபாமா 37,499,525 டாலர்களைத் திரட்டியுள்ளாராம். இன்றுவரை செலவான தொகை 57,246,263. கையிருப்புத் தொகை 65,837,810 என்றெல்லாம் கணக்கு வேறு காட்டியிருக்கிறார்கள்.

குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெயினும் சாதாரணமாக இல்லை.. 20,355,226 டாலர்களைத் திரட்டியுள்ளார். 32,385,310 டாலர்களை இதுவரையில் செலவழித்துள்ளாராம். கையிருப்புத் தொகை மட்டும் கொஞ்சமாகத்தான் வைத்துள்ளார். 21,417,463 டாலர்களாம்.

ஆனால் இவ்வளவு பணத்திற்கு அந்த ஊரில் ஏற்படும் செலவுகள் என்ன என்பதுதான் தெரியவில்லை.

நம்மூரில் சாதாரண வார்டு உறுப்பினர் தேர்தல் செலவைக் கூட கவுன்சிலர்கள் நம் கண்ணுக்குக் காட்டுவதில்லை.. கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் நம் நாட்டு அரசியலின் நேர்மை பல் இளிக்கிறது.

நம்மூரில் சிங்கிள் டீயைக் குடித்துவிட்டு “புறப்படு உடன்பிறப்பே.. கயவர்களைக் கூண்டோடு அழித்தொழிப்போம்..” என்ற கவிதையைப் படித்துவிட்டு கொடியோடு கிளம்புபவன் எப்போது பசி வருகிறதோ.. அப்போது இருக்கின்ற இடத்தில் கிடைப்பதைச் சாப்பிட்டுவிட்டு தூக்கம் வரும்போது வீடு திரும்புவான்.(உண்மையானத் தொண்டர்களை மட்டுமே சொல்கிறேன்) ஆனாலும் இவனுக்கு செலவானதாக ஒரு கணக்கு பணம் வைத்திருப்பவரின் கள்ளக்கணக்குப் பதிவேட்டில் ஏறியிருப்பது இவனுக்குத் தெரியாது. நம் ஊர் அரசியல் ஸ்டைலே தனிதான்..

அங்கே இரு தரப்பு பிரச்சாரக் கூட்டத்திலும் ஆளாளுக்கு நம்மூர் போலவே தட்டிகளில் புகைப்படத்தை ஒட்டி வைத்து கோஷம் போடுகிறார்கள். கை தட்டுகிறார்கள். நம்மூரைப் போல பேச விடாமல் கத்திக் கொண்டேயிருப்பது என்கிற நொச்செல்லாம் இல்லாததால் பார்க்கப் பிடிக்கிறது.

பாராக் ஒபாமா ஜனாதிபதி தேர்வுக்கு ஆளாகியிருக்கும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் என்பதால் முதல் சிறப்பைப் பெறுகிறார். ஒரு வேளை வெற்றி பெற்றாரென்றால் இரண்டாவது சிறப்பையும் பெறுவார்.

இல்லினாய்ஸ் மாகாண செனட் உறுப்பினர் என்கிற கட்சித் தகுதி இவருக்கு உண்டு. வயது கம்மிதான்.. 47 என்கிறார்கள். போதும்.. ஒரே திருமணம்தான்.. இரண்டு பெண் குழந்தைகள்.. இதுவும் போதும்.. சாதாரண குடும்பப் பிரச்சினைகள் என்னென்ன என்பதை கொஞ்சமாவது தெரிந்து வைத்திருப்பார்.

ஆனாலும் ஒரு பிரச்சினை.. ஜெயித்து வருகின்ற அனைத்து ஜனாதிபதிகளும் அந்த வெள்ளை மாளிகையில் குடியேறுகிறவரைக்கும்தான் சாமான்யனாக தெரிகிறார்கள். மாளிகையில் பால் காய்ச்சியவுடன் கண்டம் விட்டு கண்டம் வந்து அனைவரையும் காய்ச்சுகிறார்கள். அது என்ன கிரகம் புடிச்ச வீடோ.. தெரியலை..?

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இவரும் ஒரு குண்டை போட்டிருக்கிறார்.. மென்பொருள் துறைக்கு வழங்கப்பட்டிருக்கும் நிதி சலுகைகளை கட் செய்யப் போவதாகச் சொல்லியிருக்கிறார். இது எந்த அளவுக்கு அவருக்கு பூர்வீக ஓட்டுக்களை வாரி வழங்கப் போகிறது என்பது தெரியவில்லை.

அதே போல் இராக்கில் இருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்வது என்பது உடனேயே முடியாது என்பதை மூடி மறைத்து கொஞ்சம் லேசுபாசாக ஒத்துக் கொண்டிருக்கிறார். ஒபாமா ஆட்சிக்கு வந்தாலும் இரண்டாண்டுகள் கழித்துதான் கடைசி அமெரிக்க ராணுவ வீரனும் ஈராக்கில் இருந்து வெளியேற முடியும் என்கிறது அமெரிக்க பாதுகாப்புத் துறை.

கறுப்பினத்தவர், இருப்பவர்களில் இளைஞர், புஷ் கட்சியைச் சேராதவர் என்ற மூன்றுவித வடிவங்களில் பாராக் தவழ்ந்து கொண்டிருப்பதால் இந்தியத் திருநாட்டின் பொது அறிவு படைத்த மக்களின் எதிர்பார்ப்பு ஜனாதிபதியாக இவரே இருக்கிறார் என்பது மட்டுமே உண்மை.

குடியரசுக் கட்சியில் ஜான்மெக்கயின் என்கிற 72 வயதான கிழவர், அரிஸோனா மாகாண மூத்த செனட்டராக இருந்தவரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

72 வயது என்றவுடன் நம்மூர் தலைவர்களை மனதில் வைத்து கைத்தடி ஊன்றி, தடவித் தடவி நடப்பார் என்று எதிர்பார்த்தேன்.. மனிதர் ஒபாமா போலவே சுறுசுறுப்புத் திலகம்.. மைக்கில் குட்பை சொல்லிவிட்டுத் திரும்பிய வேகத்தில் மனைவியை இழுத்து அணைத்து முத்தமிடுகிறார். புன்னகை மாறாமல் மேடையின் இரு புறமும் சென்று கையசைக்கிறார். “பதிலுக்குப் பதில் ஒப்பாரி வைக்க முடியாது. எனது செயல்களே என்னை நிரூபிக்கும்..” என்று ஒபாமாவுக்கு கச்சிதமாகப் பதில் சொல்கிறார்.

இரண்டு முறை மோதிரம் மாற்றிக் கொண்ட அனுபவம் இவருக்கு உண்டு. முதல் மனைவியை முறைப்படி டைவர்ஸ் செய்துவிட்டே இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். அந்த வகையில் நாம் பெருமைப்படக்கூடிய அரசியல்வாதிதான்.

வியட்நாம் போரில் அமெரிக்கப் போர்ப் படையில் வீரராகப் போரிட்டிருக்கிறார். இது ஒன்று போதுமே.. நமக்கு இவரைப் பிடிக்காமல் போவதற்கு.. இப்படித்தான் இந்தியத் திருநாட்டின் ஊடகங்கள் முதலிலிருந்தே ஒபாமாவைத் தூக்கிப் பிடித்து வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார்கள்.

“ஈராக் போர் முடியாது.. இப்போதைக்கு வாபஸ் கிடையாது.. ஈரானுடன் மோதிதான் தீர வேண்டுமெனில் அதுவும் நடக்கும்..” என்றெல்லாம் இவர் திருவாய் மலர்ந்திருக்கிறார். ஸோ, நமக்கு இவர் பிடிக்காமல் போவதில் ஆச்சரியமில்லை.

ஜனாதிபதியாக ஆகியே தீருவேன் என்பதைவிட தனது கணவர் பில் கிளிண்டனை வெள்ளை மாளிகையின் ஹவுஸ் ஹஸ்பெண்ட்டாக்கி காட்டுவேன் என்று சபதமெடுத்து சூறாவளியாய் உழைத்த ஹிலாரியைத்தான் ஒபாமா துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பார் என்று நானும்தான் வெகுவாக நம்பியிருந்தேன். ஆனாலும் மனிதர் என் கனவைப் பொய்யாக்கி ஜோ பிடன் என்ற 66 வயதான டெல்வர் மாகாண செனட் உறுப்பினரை துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுத்துவிட்டார்.

ஒபாமா வயதில் சின்னவர்.. ஜோ பிடன் வயதில் பெரியவர்.. இந்த ரேஞ்ச்சில் ஜான் மெக்கெயினும் நிச்சயமாக ஏதாவது ஒரு கோல்மால் செய்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனாலும் மகா கோல்மால் செய்துவிட்டார். இவர்கள் மூன்று பேருமாவது செனட் உறுப்பினர்கள். குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜான் மெக்கெயின் தேர்வு செய்த சாரா பாலின் என்கிற பெண்மணி அலாஸ்கா மாகாண கவர்னராம்.

இவரது வயது 44-தான்.. ஒரே கணவர்தான்.. ஆனால் 5 குழந்தைகள். கடைசியாக ஆண் குழந்தை பிறந்து 7 மாதங்கள்தான் ஆகிறதாம். முன்னாள் அலாஸ்கா மாகாண அழகிப் போட்டியில் ரன்னராக வந்தவராம். இப்போதும் பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கிறார். அலாஸ்கா எப்போதுமே பனி மூடியே இருக்குமென்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. அதனால்தான் இப்படியொரு கவர்னரைத் தேர்வு செய்திருக்கிறார்களோ என்று தெரியவில்லை.

அந்தக் கட்சியைப் போலவே சாரா பாலினும் பழமைவாதியாகத்தான் தென்படுகிறார். “ஓரினச் சேர்க்கை மகா பாவம்” என்கிறார். “அபார்ஷனா? கூடவே கூடாது..” என்றிருக்கிறார் பாலின்.

அழகு, அறிவு, கட்சியின் கொள்கைப் பிரச்சாரப் பீரங்கி, குறிப்பாக மீடியாக்களின் கவனத்தை முற்றிலுமாக தங்கள் மீதே நிலை கொத்த வைக்கலாம் என்ற ரீதியில் பாலினின் தேர்வு மெக்கெயின் ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த கதைதான் என்கிறார்கள்.

தேர்தல் பிரச்சாரத்தில் இந்த நால்வரும் மறைமுகமாகத் தங்களது குடும்பத்தின் மூலம் மக்களை நெருக்குவதாக ஊடகங்கள் பறை சாற்றுகின்றன.


ஜான் மெக்கெயின் தனது முதல் மனைவி, பையன்களுடன் கார் விபத்தொன்றில் சிக்கினாராம். அந்த விபத்தின் காரணமாக அவரது முதல் மனைவி நீண்ட பல வருடங்கள் மருத்துவ சிகிச்சையில் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்ததாம்.. அதன் பின்தான் இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். ஆனாலும் முதல் மனைவியின் மருத்துவச் செலவுகளுக்குப் பணமும், வீடும் கொடுத்துவிட்டுத்தான் டைவர்ஸ் வாங்கியதாக அவரது பயோடேட்டா பறை சாற்றுகிறது.

ஜோ பிடனுக்கும் இதே வகையான ஒரு சோகம். அவருடைய முதல் மனைவி Neilia Hunter தனது ஒரு வயதுக் குழந்தையுடன் கார் விபத்தொன்றில் மரணமடைந்த சோகமும் இவருக்கு உண்டு. அதன் பின் மூன்றாண்டுகள் கழித்து இரண்டாவதாக Jill Tracy Jacobs என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார். ஸோ.. அதுக்கு இது சரியாப் போச்சு என்ற அளவோடு நிற்க.. சாரா பாலின் பின்னால் வேறு ஒரு கதையோடு வந்திருக்கிறார்.


அம்மணியை ஏன் மெக்கெயின் தேர்வு செய்தார் என்றால், முதல் காரணமாக பெண் என்பதால் கிடைக்கின்ற ஒரு அனுதாப ஓட்டுக்கள் கொஞ்சம் கூடுதலாக கிடைத்துவிட்டால், கடந்த தேர்தல் போல கடைசி நேர கட்டப் பஞ்சாயத்து செய்தாலாவது பிழைத்துவிடலாம் என்றெண்ணியிருக்கிறார் போலும்..

கூடவே சாரா பெலினுக்கு கடைசியாக பிறந்த பையன் டவுன் சின்ட்ரோம் என்னும் குறைபாடு வியாதியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரே தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி அனுதாபத்தை ஊக்குவிக்குமா அல்லது வெறும் ஊக்கை மட்டுமே கிளப்பிவிட்டு விக்காமல் போய்விடுமா என்பது தெரியாத பட்சத்தில் அவரிடத்திலிருந்தே இன்னொரு பூதம்.

அம்மணியின் 17 வயது பெண்ணான டிரிக் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். நம் ஊரில் காதோடு காது வைத்தாற்போல் கலைக்கும்படியான சூழலையெல்லாம் பாலின் உருவாக்கவில்லை. அந்தப் பெண்ணையும் ஊர், ஊராகக் கூட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு அப்பனாக அப்பாவியாக அருகில் நிற்கும் பையனைக் காட்டி, “இவனுக்கே என் மகளைக் கட்டி வைப்பேன்..” என்று உண்மையான குடும்பத் தலைவியாகச் சொல்லிவிட்டார். ஸோ.. இப்படியொரு பொறுப்பான பொம்பளையா என்று அமெரிக்க தாய்க்குலங்கள் கைக்குட்டை நனையும் அளவுக்கு கண்ணீர் விட்டுவிட்டால் என்னாகும் என்று தெரியவில்லை.

ஆனாலும் எதிர்த் தரப்பும் விடவில்லை.. அம்மணியைப் பற்றித் தோண்டித் துருவிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு விஷயம் சிக்கியிருக்கிறது. அலாஸ்கா மாகாணத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரியை மிக சமீபத்தில் பதவி நீக்கம் செய்திருக்கிறார் பாலின். அது என்னவெனில் பாலினின் இளைய சகோதரிக்கும், பிரிந்திருக்கும் அவரது கணவரான போலீஸ்காரருக்கும் இடையில் அவர்களது குழந்தை வளர்ப்பு சம்பந்தமாக அவரது கணவரை மிரட்ட போலீஸை பயன்படுத்தச் சொன்னார். நான் மறுத்தேன். அதனால்தான் என்னை நீக்கிவிட்டார் என்று நமது தெலுங்குப் பட கதையாக அம்பலப்படுத்துகிறார் அந்த போலீஸ் அதிகாரி.

வழக்கமான அரசியல்வாதியாக பாலின் இதை மறுத்துள்ளார். ஆனாலும் இனை விசாரிக்க ஒரு கமிட்டி போட்டுள்ளார்களாம். அதன் விசாரணையில் பாலின் மீதும் தவறு இருப்பது தெரியவர முதலில் அலாஸ்கா மக்களிடம் பாதி மன்னிப்பு கேட்டுள்ளார் பாலின். இறுதி விசாரணை அடுத்த மாதமாம். அதுவரையில் பத்திரிகைகளுக்கு நல்ல தீனிதான்..

ஒபாமாவைப் பொறுத்தமட்டில் எடுத்த எடுப்பிலேயே அமெரிக்க பழமைவாதிகள் வைத்த புகார் அவர் ஒரு முஸ்லீம் அல்லது முஸ்லீம் போல வளர்க்கப்பட்ட நபர் என்பதுதான். முஸ்லீம் என்றால் அமெரிக்கர்களுக்கு ஆகாதா? ஏன் அமெரிக்க குடியுரிமை பெற்ற முஸ்லீம் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக ஆகக் கூடாதா? என்றெல்லாம் எனக்குள் கேள்விகள் எழுகின்றன.

ஆனால் ஒபாமா தப்பித் தவறிக்கூட இது மாதிரியான ‘தேசத்துரோக’ கேள்வியை கேட்கவில்லை. “நான் முறைப்படி ஆச்சாரமாக வளர்க்கப்பட்ட கிறிஸ்துவன்தான். என்னை நம்புங்கள்..” என்று சொல்லியிருக்கிறார்.

போகப் போக இந்தப் பிரச்சாரக் கூட்டங்கள் வயதானவர், இளைஞர், பெண், பாவமானவர் என்றெல்லாம் போய் அங்கேயும் இந்தியா போல் அமெரிக்க மக்கள் அதீத உணர்ச்சிவசப்பட்டு முட்டாள்தனம் செய்துவிடுவார்களோ என்று பயமாகத்தான் இருக்கிறது.

நம் நிலைமைக்கு ஒபாமா வந்தாலும் சரி.. மெக்கெயின் வந்தாலும் சரி.. எல்லாம் ஒன்றுதான்.. பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை அவர்கள் எப்போதும் நிறுத்தப் போவதில்லை.. அவர்களுக்கு வழங்க வேண்டிய, செய்ய வேண்டிய கடமையை செய்யத்தான் போகிறார்கள். அங்கே மிக்-26 கொடுத்தால் நமக்கு F-16-ஐ நீட்டுவார்கள். இரண்டு பக்கமும் கொடுத்துவிட்டு காசு அள்ளப் போவது அவர்கள்தான். சிக்கல் நமக்குத் தொடரத்தான் போகிறது.

போதாக்குறைக்கு நமது அணு ஒப்பந்த விவகாரத்தில் அண்ணன் புஷ் அவர்கள் கடைசியில் தனது முகத்திரையைக் காட்டிவிட்டார். ஆனால் அந்த உண்மையை நமது மன்னமோகனசிங்குதான் நமக்குத் தெரிவிக்காமல் டபாய்த்து வருகிறார். வருகின்ற 24-ம் தேதி புஷ்ஷை சந்தித்து கஷ்டப்படாமல், கையெழுத்துப் போட்டுவிட்டு இந்தியாவை அடமானம் வைத்துவிட்டு வரத்தான் போகிறார்.

ஒருவேளை புஷ் காலத்திலேயே அது நிறைவேறாவிட்டாலும் பின்னாளில் எந்த ஜனாதிபதி வந்தாலும் நமது சரணடையும் சாசனம் அங்கே ஏற்றுக் கொள்ளப்படத்தான் போகிறது. என்ன அப்போது புஷ் தனது பண்ணை வீட்டில் கொக்கு பிடித்து விளையாடிக் கொண்டிருப்பார். அவ்வளவுதான்..

21ம் நூற்றாண்டாக இருந்தும்கூட இன்னமும் கறுப்பினத்தவர்கள் மத்தியில் நிலவி வரும் நிற வேறுபாடு ஒபாமா பதவியேற்றவுடனேயே காணாமல் போகும் என்று நான் நம்பத் தயாரில்லை. அது நம் ஊரில் குண்டு வெடித்தால் ஊரில் இருக்கும் முஸ்லீம்களையெல்லாம் அழைத்து விசாரிக்கிறார்களே.. அது போலத்தான் வழி, வழியாக உணர்வில், உள்ளத்தில் ஊறிப் போன விஷயம்.. அதை அழித்தொழிப்பது என்பது மற்ற நிறத்தவர்களின் கையில்தான் இருக்கிறதே ஒழிய.. அதே கறுப்பினத்தவர்களிடத்தில் இல்லை.

“எல்லாம் சொல்லிவிட்டு உன்னுடைய சாய்ஸ் எது என்று சொல்லாமல் போயிட்டியேடா பரதேசி..” என்று என்னை நீங்கள் திட்டுவதற்கு வாய்ப்புக் கொடுக்காமல் நானே சொல்லிவிடுகிறேன்..

பாராக் ஒபாமா வந்தால் பரவாயில்லை. இரண்டாண்டுகள் கழித்து என்றாலும்கூட பரவாயில்லை.. ஈராக் என்ற தேசத்தை சின்னாபின்னப்படுத்தியது போதும்.. போதும் வா என்று தனது ராணுவத்தினரை அழைப்பதே வரும் ஆண்டுகளுக்கு நமது உலகத்திற்கு நன்மை தரும் செயல் என்பதால் நான் அவரையே ஆதரிக்கிறேன்.

வரட்டும்.. வந்து பார்க்கட்டும்.. நாமும் பார்ப்போம்.

பின்குறிப்பு :

நம்முடைய மரியாதைக்குரிய அமெரிக்க வலைப்பதிவர்கள் பலர் சேர்ந்து 2008, அமெரிக்க அதிபர் தேர்தல் நிகழ்ச்சிக்காக தனி வலைத்தளத்தை உருவாக்கி அதில் துவக்கம் முதல் இன்றுவரையிலான பல்வேறு நிகழ்வுகளையும், தகவல்களையும் தொகுத்து வைத்துள்ளார்கள். அதன் முகவரி இது http://uspresident08.wordpress.com. இங்கேயும் சென்று பொறுமையாக, முழுமையாக பல்வேறு புதிய செய்திகளையும், ஆழமானத் தகவல்களையும் படித்துத் தெளிந்து கொள்ளுங்கள்.