Archive for the ‘அப்துல்கலாம்’ Category

அப்துல்கலாம் ஏன் வேண்டும்?

ஜூன் 23, 2007

23-06-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

நமது அடுத்த ஜனாதிபதியாக யார் வர வேண்டும் என்று நாடு முழுவதும் பட்டிமன்றங்கள் பட்டிதொட்டியெங்களும் பறந்து கொண்டிருக்கின்றன. இதில் எனது தரப்பு வாதம் உங்களுக்காக.. சுருக்கமாக..

அப்துல்கலாம் ஏன் வர வேண்டும்?

1. ஜனாதிபதி மாளிகை அரசியல் கூடாரமாகாது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் கூடாரமாக இருக்கும்.

உதாரணம் :

1. சோனியா பிரதமராவதற்கு கலாம் காட்டிய உறுதியான எதிர்ப்பு.

2. ‘ஒருவரே இரண்டு பதவிகளில் நீடிக்கலாம்’ என்று மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்தது.

இந்த மசோதாவை திரு.கலாம் திருப்பி அனுப்பியது, மக்கள் மத்தியில் அரசியல் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்பதில் எனக்கு ஐயமில்லை.

ஆனால் இரண்டாவது முறையாக வந்தபோது கையப்பமிட்ட செயல், எந்த ஒரு ஜனாதிபதி இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார் என்றாலும் எதிர்ப்பு பதிவாகியுள்ளதே.. அந்த எதிர்ப்பில் நம்மைப் போன்ற சாதாரண பொதுமக்களின் கருத்துக்களும் உண்டு என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2. அரசுகள் சொல்வதையெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு ஒத்துக் கொள்ளும்
இயந்திரத்தனமான அரசியல்வாதி அல்ல அவர்.

முதல் முறையாக வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தின்போதே தன்னுடன் இத்தனை
பேர்தான் உடன் வர வேண்டும். சம்பந்தப்படாத துறை அதிகாரிகள் யாரும்
வரக்கூடாது என்பதில் இன்றளவும் உறுதியாக இருப்பவர் கலாம்.

3. ஜனாதிபதி என்பவர் எப்போதாவது மக்களிடையே பேசுவார் என்ற நிலைமை
மாறி, ‘இன்னைக்கு நம்மாளு என்ன பேசுனாரு..?’ என்று நாட்டு மக்களையே பேச
வைத்த பெருமை இவரையே சேரும். இதுவே ஒரு வகை விழிப்புணர்வுதான்.

4. இவருடைய சொந்தங்களும், பந்தங்களும் இன்றுவரையில் எந்தவொரு அதிகாரத்
துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக செய்தியே இல்லை. காரணம், இவருடைய
உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.

5. ஜனாதிபதி மாளிகையை ஓய்வெடுக்கும் மாளிகை என்றிருந்த பெயரை சுற்றுலாத்
தளமாகவும் உருமாற்றி நமது மாளிகை, நமது ஜனாதிபதி என்று பொதுவில்
தேசியத்திற்கான அடையாளத்தை மீண்டும் உண்டுபண்ணியவர் கலாம்.

6. அரசுகள், ஆள்வோரிடம் இவருடைய தொடர்பும், பேச்சுவார்த்தையும் மிக மிக
நாகரீகத்தைத் தொட்டிருந்தது. எவ்வித சர்ச்சையும் கிளப்பவில்லை இவருடைய
நடவடிக்கைகள்.

ஜெயில்சிங் ஜனாதிபதியாக இருந்தபோது பிரதமர் ராஜீவ்காந்தியுடன் ஏற்பட்ட
மோதல் பிரசித்தி பெற்றது. டெல்லி பாலம் விமான நிலையத்தில்
ஜெயில்சிங்கை வெளிநாட்டிற்கு வழியனுப்ப வந்த ராஜீவ்காந்தியை, ‘போடா
சின்னப் பயலே..’ என்று ஜெயில்சிங் கோபப்பட்டு பேசியது பதிவு செய்யப்பட்ட
ஒன்று..

7. யாராக இருந்தாலும் அவருடைய மாளிகை கதவுகள் திறந்திருந்தது என்பது
வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. தன் வாழ்க்கையில் இவ்வளவு
மக்களை சந்தித்திருக்கும் ஒரே ஜனாதிபதி, இவராகத்தான் இருப்பார்.

8. வெறும் கண்காட்சி தலைவராக அல்லாமல் அரசுக்கு நிஜமான யோசனை
சொல்லும் அளவுக்கு புத்திசாலியாகவும் இருந்தார். அதனால்தான் கடைசி
நேரத்திலும் இந்தியாவில் இரு கட்சி ஆட்சி முறை வேண்டும் என்றார்.

9. கடைசியாக அந்த மாளிகையை காலி செய்யும்போது கையில் இரண்டு
சூட்கேஸ்களை மட்டுமே தனது சொத்தாக எடுத்துக் கொண்டு வரப் போகிறார். இது
ஒன்றிற்கே மறுபடியும் அவர் அங்கே குடியிருக்க வேண்டும்.

1997-ம் ஆண்டு ஜனாதிபதி பதவியிலிருந்து ரிட்டையர்டாகி வீட்டுக்குச் சென்ற
சங்கர்தயாள்சர்மா, ’50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால்தான் மாளிகையை காலி
செய்வேன்’ என்று அடுத்த ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் குடி வருவதற்கு முதல்
நாள் அன்றைய குஜ்ரால் அரசை பிளாக்மெயில் செய்து இந்திய நாட்டு மக்களின்
பணத்தை பறித்துக் கொண்டு போனது அநேக இந்தியர்களுக்குத் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.

காமராஜர் மறைந்த அன்று அவருடைய வீட்டுக்கு விரைந்து சென்ற அமைச்சர்
ராஜாராம், அங்கேயிருந்த பீரோவைத் துழாவிய போது கிடைத்த பணம் வெறும் 300
ரூபாய்தான் என்பதையும் இந்த நேரத்தில் நீங்கள் மறந்துவிடக்கூடாது..

ஆனால் பிரதீபா பாட்டீல் குடியேறிவிட்டால் என்ன ஆகும்?

1. அறிவிக்கப்படாத இன்னொரு பிரதமராக இருப்பார் பிரதீபா.

2. எதிர்க்கட்சிகளின் கோரிக்கை மனுக்கள் உடனுக்குடன் 10, ஜன்பத் ரோட்டிற்கு
பேக்ஸில் அனுப்பப்படும்.

3. எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் இன்னொரு கட்சியின் தலைமை அலுவலகமாக ஜனாதிபதி
மாளிகை உருமாறும்.

4. அடுத்த தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பதவியேற்க சோனியாவை வீடு
தேடிச் சென்று அழைத்து வருவார் என்பது உறுதி.

5. ஒருவேளை தொங்கு நிலை பாராளுமன்றம் உருவானால் காங்கிரஸ் கட்சியை
எப்பாடுபட்டாவது ஆட்சியில் அமர்த்த உதவுவார். இந்த நோக்கத்தில்தான் இவர்
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதில் எனக்கு ஐயமில்லை. இப்போது
கலாமைவிட இவர் தகுதி பெற்றவரா என்பதைவிட கலாமைவிட சோனியாவுக்கு
இவர் விசுவாசமானவர் என்ற ஒரு அம்சத்திட்டத்தில்தான் இவர் கொண்டு
வரப்பட்டுள்ளார்.

6. அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பே அவருடைய குடும்பத்தினர் பற்றிய சர்ச்சைகள்
எழும்பி விட்டன. ஜனாதிபதி மாளிகை மட்டும்தான் பத்திரிகையாளர்களின் candid
camera-வில் சிக்காமல் இருந்தது. இனி வரும் காலங்களில் அதுவும் சேர்ந்துவிடும்.

7. அரசியல் சரி.. ஆட்சி நிர்வாகம் சரி.. மக்கள் பணி..? 50 வருடமாக
அரசியல்வாதியாகவே இருந்தவர்களுக்கு இப்போதைய நாட்டு மக்களின் அன்றாடத்
துயரங்களைப் பற்றி என்ன தெரியும்?

8. ஒரு பொம்மை ஜனாதிபதி.. கயிறு அவருடைய கட்சித் தலைவரின் கையில்..
இப்படி ஒரு அவப்பெயரை சம்பாதிக்கப் போகிறார் இந்த பிரதீபா பாட்டீல்.

9. இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக ஒரு பெண் அலங்கரித்தார் என்ற பெயரும்,
ஒரு பெண் இந்தியாவில் ஜனாதிபதியாக வருவதற்கே 60 ஆண்டுகள் பிடித்துவிட்டது
என்ற பொருமலும்தான் நமக்கு மிச்சமாகப் போகிறது..

ஜெய்ஹிந்த்!!!