என் இனிய வலைத்தமிழ் மக்களே..
‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ என்றொரு திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன்னால் காண நேர்ந்தது. அப்பா-மகன் உறவு பற்றிய ஒரு விவரணக் களம்தான் அந்தப் படத்தின் கதை. படத்தின் ஹீரோவான ஜெயம் ரவி தமிழில் ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தைக் கையில் வைத்திருப்பதால் அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டுமே என்பதற்காக சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகளைத் திணித்து ஒரு வெற்றிகரமான திரைப்படமாக உருவாக்கினார்கள்.
அதே கதையை அப்படியே தோசையைத் திருப்பிப் போடுவதாக நினைத்துப் பாருங்கள். அப்பா-மகள் என்று.. அதுதான் இந்த ‘அபியும், நானும்’.
முன்னதில் ஜெயம்ரவி என்றால் இதில் த்ரிஷா. த்ரிஷா சண்டையிடுவதை தியேட்டர் ஆபரேட்டர்கூட விரும்பமாட்டார் என்பதால் அவர்களுடைய விருப்பத்திற்காக சில பாடல் காட்சிகளில் நடனமாடியிருக்கிறார் ஹீரோயின் த்ரிஷா. அவ்வளவுதான்.. மீதிக் கதையை நீங்கள் அதில் பார்த்ததுதான்.
“அப்பாவாக மட்டுமல்ல; அம்மாவாகவும் நான்தான் இருப்பேன்” என்று பிடிவாதம் பிடித்து மகள் மீது பாசத்தைக் கொட்டுகின்ற அப்பா.. தோளுக்கு மேல் வளர்ந்தவுடன் தானே தனக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயலும் மகள்.. தன்னிடம் கேட்காமல் எதையும் செய்யாத மகளா இவள் என்று கண் கலங்கும் அப்பா.. அவருக்கு தான் செய்தது சரி என்பதை உணர வைக்க முயன்று தோற்கும் மகள்.. கணவரின் அளவுக்கு அதிகமான பாசத்தைக் குறையென்றோ, தவறு என்றோ சொல்ல முடியாத மனைவி.. கடைசியில் சில அனுபவங்களின் மூலம் வாழ்க்கையே இப்படித்தான் என்பதை தந்தை உணர்ந்து கொள்வது.. இப்படி பல பக்கங்களிலிருந்தும் கதையை நகர்த்தியிருக்கிறார் ராதாமோகன்.
இந்தக் கதையை ராதாமோகன்தான் பிரகாஷ்ராஜிடம் சொன்னதாக பத்திரிகைகளில் படித்தேன். அது ‘பொய்’யாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நிச்சயம் பிரகாஷ்ராஜ்தான் ராதாமோகனிடம் கதைக்கருவைச் சொல்லி இப்படி ஒரு ஒன் லைனில் படம் செய்யலாம் என்று சொல்லியிருக்கலாம் என கருதுகிறேன்.
ஏற்கெனவே அம்மா-மகன், அப்பா-மகன் சண்டை, சச்சரவு எல்லாம் வந்து தொலைந்துவிட்டது. இப்போது அப்பா-மகள் மட்டும்தான் பாக்கி என்று இந்தக் கதையைத் தேர்வு செய்திருக்கிறார்கள் போலும்.
சர்தார்ஜிகளை பற்றி யாரோ போகிற போக்கில் ராதாமோகனிடம் தவறாகச் சொல்லிப் புலம்பியிருக்கிறார்கள் போல.. படத்தின் பிற்பாதியில் கதையை நகர்த்துவதற்கு சர்தார்ஜிகளின் குணநலன்களை துணைக்கு அழைத்து, கிட்டத்தட்ட பஞ்சாப் சிங்கங்கள் பற்றிய பிரச்சாரப் படமாகவும் ஆக்கிவிட்டார்.
“யாரையோ காதலிக்கிறாளே மகள்.. வரட்டும் பார்க்கலாம்..” என்று விமான நிலையத்தில் பிரகாஷ்ராஜ் காத்திருக்க டர்பன் அணிந்த சீக்கிய இளைஞனை காட்டிய உடனேயே எனக்குப் புரிந்துவிட்டது, “இனி இப்படம் பார்வையாளர்களிடமிருந்து விலகி வெகுதூரம் செல்லப் போகிறது..” என்று.. நிஜமாகவே அது போலத்தான் நடந்துள்ளது. அநியாயத்திற்கு ஹிந்தி மற்றும் ஆங்கில வசனங்கள்.. ஒரே ஒரு இடத்தில் மட்டும் படத்தின் ஒட்டு மொத்த வசனத்தையும் அந்த சீக்கிய மாப்பிள்ளை சொல்வதால், அங்கே மட்டும் சப்டைட்டிலாக தமிழ்படுத்தியிருந்தார்கள்.
“உங்களுக்கு என்னதாம்பா பிரச்சினை..?” என்று பிரகாஷ்ராஜிடம் படத்தில் வரும் அனைத்து கேரக்டர்களும் கேட்டுவிட்டார்கள். கிட்டத்தட்ட படம் பார்த்த பார்வையாளர்களின் கேள்வியும் இதுதான்.
ஹீரோ இல்லாமல் ஹீரோயின்தான் நம்மிடம் இருக்கிறார் என்பதால் சண்டைக் காட்சிகளையும், சொடுக்குப் போட்டு சவால்விடும் காட்சிகளையும், ஒரு வரி டயலாக் பேசுவதையும் வைக்க முடியாது என்பதால் இதில் காட்சிகள் மற்றும் வசனத்தின் மூலமாக மாப்பிள்ளையைப் பற்றி உயர்வாகப் பேசி, அவர்தம் இனத்தின் பெருமையை கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்திப் பேசி தன் தந்தையிடம் தான் செய்தது சரி என்று சாதிக்க வேண்டிய கட்டாயம் நமது ஹீரோயினுக்கு.
படத்தின் துவக்கமே சுத்த ஹம்பக்.. வாக்கிங் வரும் இடத்தில் அப்போதுதான் முதல் முறையாக சந்திக்கும் பிருத்விராஜிடம் தனது மகள் பற்றிப் பேசத் துவங்கும் பிரகாஷ்ராஜ், பிருத்விராஜை தனது இல்லத்திற்கே அழைத்து வந்து காபி கொடுத்துதான் படத்திற்கு சுபம் போடுகிறார். ஒரே நாளில் சொல்லப்படும் கதையாக போய்க் கொண்டிருக்க.. சுவையான வசனங்களால் மட்டுமே தப்பித்தார் இயக்குநர்.
வசனகர்த்தா விஜி துணையில்லாத திரைப்படம் என்பதால் எப்படியிருக்குமோ என்று நானும் பயந்துதான் இருந்தேன். ஆனால் இதுலேயும் அதே போல் வழக்கமான ராதாமோகனின் டயலாக் டெலிவரிகள் நச்சென்று இருந்தது.
சிற்சில சுவாரஸ்யமான காட்சிகள்.. ப்ரீ கேஜிக்காக க்விஸ் புத்தகத்தை மனப்பாடம் செய்வது.. பள்ளியில் க்யூவில் நிற்பது. இண்டர்வியூவில் பேசுவது.. மகள் அழைத்து வரும் பிச்சைக்காரனுக்கு பெயர் வைத்து மகளின் “ப்ளீஸ்பா..” என்கிற வார்த்தையில் கரைந்து போவது.. பிரைம் மினிஸ்டரிடம் போனில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பேசுவது.. தலைவாசல் விஜய்யிடம் தனது மகளைப் பற்றிப் பேசி கண்கலங்குவது.. என்று பிரகாஷ்ராஜின் நடிப்புக்கு விளக்கமே தேவையில்லை. மனிதர் பின்னியிருக்கிறார்.
தமிழக இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னி குமாரி, திருவளர்ச்செல்வி த்ரிஷா நடித்து நான் பார்க்கும் முழு முதற் திரைப்படம் இதுதான் என்பதால் என்னிடம் அவருடைய நடிப்பு பற்றி சொல்ல ஏதுமில்லை. கூடவே அவருக்கும் நடிப்புக்கான வாய்ப்பும் இப்படத்தில் இல்லை. பேசவேண்டிய டயலாக்கை, பேச வேண்டிய இடத்தில் மனப்பாடம் செய்து ஒப்பித்துவிட்டார்.. அவ்ளோதான்.. ஆனால் குளோஸப் காட்சிகளில் ‘குழந்தை’ கொள்ளை அழகு.
சில வருடங்களுக்குப் பின்பு இன்றுதான் சுண்டக்கஞ்சியை ராவாக குடித்த குரலைக் கேட்டேன். ஐஸ்வர்யாவுக்கு அவரது குரல்தான் பிரதான நடிப்புத் தளம். பிரகாஷ்ராஜை மிரட்டுகிற காட்சிகளிலெல்லாம் அவருடைய குரல் வளம் பின்னியெடுக்கிறது. சில சமயங்களில் அவர் அன்பாகப் பேசுவதுகூட மிரட்டல் போல் தெரிவதுதான் கொஞ்சம் டூமச்.
‘அழகிய தீயே’, ‘மொழி’, திரைப்படங்களில் “கதை இதுதான்.. இதைப் பற்றித்தான் போகிறது.. இதைத்தான் சொல்லப் போகிறோம்..” என்பதை தெள்ளத் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்த திரைக்கதை அமைப்பு, இத்திரைப்படத்தில் இல்லாததுதான் படத்தின் மிகப் பெரிய குறை.
100-ல் 1 மனிதனுக்கு பிரகாஷ்ராஜ் போல் மகனுக்கோ, மகளுக்கோ தான்தான் எல்லாம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு மனிதனின் கதைதான் இது என்பதை சொல்ல வந்த இயக்குநர் ராதாமோகன் அழுத்தமான திரைக்கதையில்லாமல் சிற்சில காட்சிகளை வைத்து படத்தினை நகர்த்த முயன்று இடைவேளைக்கு பின்பு அநியாயத்திற்கு போர் அடிக்கிறது.
இதற்கு முன் வந்திருந்த பாசப் போராட்டத் திரைப்படங்களில் ஒரு காட்சியிலாவது பார்வையாளர்களை கைக்குட்டையை எடுக்க வைத்திருப்பார்கள். அந்த ஒரு காட்சியினால்தான் அந்தத் திரைப்படங்களும் வெற்றி பெற்றிருக்க சாத்தியக்கூறுகள் உண்டு. ஆனால், இத்திரைப்படத்தில் எந்தவொரு காட்சியும் என் மனதில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒவ்வொரு சோகக் காட்சியிலும், ஒவ்வொரு உணர்ச்சிப் போராட்டக் காட்சியிலும் காமெடி வசனங்களை திணித்து அக்காட்சியின் தன்மையையே நீர்த்துப் போக வைத்துவிட்டார் இயக்குநர். பின்பு எங்கிருந்து ஒட்டுதல் வரும்..?
குடும்பத்தோடு ஒரு படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாகச் சென்று பார்க்கலாம்.. தவறில்லை.. அவ்வளவுதான் சொல்ல முடியும்..
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மிஸ்டர் ராதாமோகன்.