Archive for the ‘அனுபவங்கள்’ Category

“நாங்க மட்டும் இல்லைன்னா.. இந்த வேலைக்கு யாரை கூப்பிடுவீங்க..?” – பதிவர்களே பதில் சொல்லுங்கள்..!

திசெம்பர் 9, 2008


09-12-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நட்ட நடுநசியில், நடுத்தெருவில் நீங்கள் மட்டும் தனியாக சேர் போட்டு அமர்ந்திருக்கும் அனுபவத்தை உங்களில் யாராவது பெற்றிருக்கிறீர்களா..?

சில நாட்களுக்கு முன் எனக்கு நடந்தது.

என்னுடைய மிக நெருங்கிய அக்கா ஒருவர் சென்னையில் இருக்கிறார். நான் அவ்வப்போது உடல்நிலை சரியில்லாத நேரங்களில் அவர்கள் வீட்டிற்குச் சென்று ஓய்வு எடுப்பது வழக்கம். வஞ்சகமில்லாத பாசக்காரர்கள் அவரும், அவருடைய கணவரும். சில நாட்கள் அவர்கள் வீட்டிலிருந்தே வேலைக்கும் சென்று வந்திருக்கிறேன்.

சென்ற வாரம் தாங்கள் குடியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு தாம்பரம் அருகே புதிதாக வாங்கியிருந்த வீட்டிற்கு குடி புகுந்தார்கள். அவர்களுக்கு ஒரே பையன். இப்போது அமெரிக்காவில் பொட்டி தட்டிக் கொண்டிருக்கிறான். “துணைக்கு ஆள் இல்லாத காரணத்தால் என்னால் வர முடியுமா..?” என்று கேட்டார் அக்கா.

அதற்காகத்தானே அவதாரம் எடுத்திருக்கிறேன். முடியாது என்று சொல்வேனா..? “வருகிறேன்..” என்றேன். அவர்கள் அழைத்தது போல் சனிக்கிழமை இரவில் அவர்களது வீட்டில் ஆஜரானேன்.

“நம்மால் முடிந்ததை பேக் செய்து வைப்போம். மீதியை வருகின்ற ஏஜென்ஸிக்காரர்கள் செய்து கொள்வார்கள்..” என்றார் மாமா. அந்த ஏஜென்ஸிக்காரர்கள் பற்றி கேட்டேன். “Packers and Movers” என்றார் மாமா. அப்படியொரு தொழில் இப்போது சென்னையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது என்று அவர் சொல்லி சில உதாரணங்களையும் தெரிவித்தார்.

“ஒரே நாளில் மூன்று அஸைன்மெண்ட்டுகளைக்கூட கையில் எடுப்பார்கள். அவ்வளவு வேகமாக பேக் செய்வார்கள். ஒரு பொருள் உடைந்தாலும் அதற்கு நஷ்டஈடு தந்துவிடுவார்கள். உடையாமல் கொண்டு வந்து தருவதற்குத்தான் அவர்களுக்கு சம்பளம்..” என்றார் மாமா.

சனி இரவு விடிற்காலை 3 மணிவரை பேக் செய்தோம். மறுநாள் காலை 10 மணிக்குள்ளாக பாதியைக் கட்டி முடித்துவிட்டு ‘அக்கடா’ என்று காலை நீட்டி அமர்ந்து மாமா ஏஜென்ஸிக்காரர்களுக்கு போன் செய்தார். ‘இதோ வருகிறோம்’.. ‘அதோ வருகிறோம்’.. ‘வந்து கொண்டேயிருக்கிறோம்..’ என்றெல்லாம் சொல்லியபடியே இருந்தார்கள். நேரம் ஓடியதுதானே தவிர, ஆட்கள் வரவில்லை.

அக்கா இப்போது இருந்த வீட்டின் தெரு மிக மிக பிஸியான தெரு. பிரதான சாலையை இணைக்கக்கூடிய தெரு என்பதால் எப்போதும் கார்கள், டூவீலர்களின் அணிவகுப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும். அதனால் அந்த பிளாட்டில் இருப்பவர்களில் யாராவது வீட்டைக் காலி செய்தாலோ அல்லது புதிதாக வீட்டுக்குக் குடி வருகிறார்கள் என்றாலோ அவர்கள் வருகின்ற நேரம் அல்லது செல்கின்ற நேரம், விடியற்காலை அல்லது பின்னிரவு என்பதாகத்தான் இருக்கும். அல்லது ஞாயிறு பகலாக இருக்கும்.

காலையில் இருந்து காத்திருந்து இரவு 10.20 மணிக்குத்தான் லாரி வந்து சேர்ந்தது. மொத்தம் 4 பேர் டிரைவருடன் சேர்த்து. டிரைவர்தான் கேப்டனை போல். நான்கு பேருமே இளந்தாரிகள். இளைஞர்கள்.. பேச்சில் அச்சு அசலாக மெட்ராஸ் பாஷை பாடை கட்டி உட்கார்ந்திருந்தது. ஆனால் செயலில் சூப்பர்சானிக் விமானம் போல..

மடமடவென வேலையில் இறங்கினார்கள். வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்தவுடனேயே எத்தனை அட்டைப் பெட்டி பார்சல்கள் தேவைப்படும், எத்தனை சாக்குகள் தேவைப்படும் என்பதனை கண்களாலேயே முடிவு செய்து கனகச்சிதமாக எடுத்து வந்தார்கள்.

இதன் பின் வேகம், வேகம், வேகம்தான்.. அக்கா வீடு முதல் மாடியில் இருந்தது. இறங்கி அங்கிருந்து ஒரு 20 நடை நடந்துதான் ரோட்டிற்கு வர வேண்டும். பார்சல்களைக் கட்டி முடிக்க இரவு 12.30 ஆனது. அதன் பின் ஒவ்வொரு பொருளாக கொண்டு வந்து லாரியில் ஏற்றினார்கள். மாமா என்னை லாரியின் அருகில் நின்று கவனித்துக் கொள்ளும்படி சொன்னார். நானும் சென்றேன்.

அவ்வப்போது வந்து சென்ற கார்கள், டூவிலர்களைத் தவிர தெருவில் மயான அமைதி. நான்கைந்து நாய்கள் மட்டும் என்னை அடையாளம் கண்டு அருகில் வந்து குரைக்கத் துவங்கின. தொகுதி விட்டு தொகுதி வரும் யாரையும் நாய்கள் மட்டுமே மிக எளிதாகக் கண்டு கொள்ளுமாம். ஏதோ புத்தகத்தில் படித்தது.

கையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டில் இருந்து ஒன்று, இரண்டாக தூக்கியெறிந்து அவைகளை சிநேகம் பிடித்துக் கொண்டேன். அவ்வளவுதான்.. ஆடத் துவங்கிய வால், லாரி அந்தத் தெருவைக் கடக்கும்வரையில் உடன் ஓடிவரும்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கீழே சாய்ந்தது.

எவ்வளவு நேரம்தான் நிற்பது என்றெண்ணி ஏற்றவிருந்த சேரை மடக்கி அதில் உட்கார்ந்தேன். இடை, இடையே நாய்களுடன் கொஞ்சல் பேச்சு.. “உங்களுக்கெல்லாம் கவலையில்ல.. நிம்மதியா இருக்கீங்க.. வீடு மாத்தணும்னு இவ்ளோ பேஜாரு இல்ல.. கிடைக்கிறத சாப்பிட்டுட்டு, இருக்குற இடத்துல இருந்துட்டு, சோறு போடுறவனுக்கு வாலாட்டிட்டு நல்ல பேர் எடுத்திட்டு முருகன் கூப்பிடும்போது போய்ச் சேரலாம்.. நாங்களும்தான் வந்து மாட்டிக்கிட்டிருக்கோம்.. அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா உங்களை மாதிரிதான் பொறக்கணும்னு முருகன்கிட்ட வேண்டியிருக்கேன்..” என்று நாய்களோடு பேசிய என் பேச்சு அந்த நால்வரையும் வெகுவாகக் கவர்ந்து கொண்டுதான் இருந்தது.

அவ்வப்போது என்னருகில் வந்து நான் பேசுவதைக் கேட்டுவிட்டு சிரித்தபடியே போய்க் கொண்டிருந்தார்கள். என்ன, ‘லூஸ¤’ன்னு சொல்லலை.. அவ்ளோதான்.. ஆனாலும் அவர்களும் வேலையில் கெட்டி. அப்போதைக்கப்போ ரெண்டு சிகரெட்டை பற்ற வைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். இரண்டு புல் பாட்டில் தண்ணீர் காலி. ஆனால் ஒரு இளைஞர், வாஷிங்மெஷினை முதுகில் சுமந்து வந்த போது அதிர்ச்சியில் நான் எழுந்தேவிட்டேன்.

ஆத்தாடி.. என் பேகை குனிஞ்சு தூக்கமே எனக்கு முதுகு வலிக்கும்.. இது எப்படி? ‘அதுலேயும் சிரிச்சுக்கிட்டே செய்றாங்களே முருகா..’ என்று என்னை ரொம்பவே அவஸ்தைப்படுத்தியது அந்த இரவு. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடன் பேசத் துவங்கினேன். அனைவருக்குமே சொந்த ஊர் இதுதான். படிப்பு வயதில் குறைந்த ஒருவர் மட்டுமே 7-ம் வகுப்பு பாஸ். மற்றவர்கள் 4. 5, 6, என்று எண்ணிக்கை கணக்கில்தான்.

“ஏன் படிக்கவில்லை..?” என்றேன். சிரித்துக் கொண்டே சொன்னார் டிரைவர். “ஏன் படிக்க வைக்கலைன்னு கேளுங்க..”. எனக்கு சுருக்கென்றது. ஆஹா.. இவர் லேசுபட்ட ஆளில்லை சாமின்னு நினைச்சேன். “காலையில இருந்து வரலியே..?” என்று பேச்சைக் கொடுத்தபோது இன்று காலையில் இருந்து அவர்கள் இதுவரையில் இதுபோன்ற 3 வேலைகளை முடித்துவிட்டுத்தான் இங்கு வந்திருப்பதாகச் சொன்னார்கள். என்னால தாங்க முடியல.. “எப்படிங்க..?” என்றேன்.

அப்போதும் சிரிப்புதான்.. “என்ன செய்யறது சொல்லுங்க..? வேலை வரும்போது செஞ்சுத்தான் ஸார் ஆகணும்..” என்றார் டிரைவர். “இல்லை. இவ்ளோ கடுமையா உழைக்குறீங்களே.. உடம்பு தாங்குமா..?” என்றார். இன்னொருவர் சொன்னார்.. “தாங்குறவரைக்கும் உழைச்சுத்தான் ஸார் ஆகணும்.. வீட்ல அடுப்பு எரியணும்ல்ல..” என்றார் இன்னொருவர்.

நேரமானதால் பேச்சைக் குறைக்க வேண்டி வந்தது. இடையில் கடமை வீரர்களாக காவல்துறையினர் டூவீலர்களில் ரவுண்டு வந்து என்னருகே சடக்கென்று நிறுத்தினார்கள். “என்ன ஸார்?” என்றார்கள். “வீட்டைக் காலி பண்றோம்..” என்றேன். “இந்த நேரத்துலயா..?” என்றார் ஒரு காவலர். என்னை முந்திக் கொண்ட பில்லியன் காவலர், “பகல்ல ரோடு கிளியரா இருக்காது. அதான்.. இந்தத் தெருவே இப்படித்தான்.. சரி.. சரி..” என்று சொல்லிவிட்டு என் எதிரில் தன் முன்னங்கால்களைத் தாங்கிக் கொண்டு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்றிருந்த நாய்களை பார்த்து தன் தடியைக் காட்டி மிரட்டிவிட்டுப் போனார்.

ஒரு வழியாக இரவு 3.30 மணிக்கு அனைத்தையும் லாரியில் ஏற்றி புது வீட்டுக்குப் பயணமானோம். அக்காவுக்கு வருத்தமோ வருத்தம். 20 வருஷமா இருந்த வீட்டை காலி பண்றோமேன்னு பீலிங். மாமாவுக்கு ரொம்பவே சந்தோஷம். மகனுக்காக ஒரு வீட்டை வாங்கிக் கொடுத்தாச்சே என்ற கடமையாற்றிய திருப்தி.

தாம்பரம் அருகே புது வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது விடியற்காலை 4 மணி. அங்கேயும் unpack நடந்தது. இங்கே வீடு 2-வது மாடியில். “லிப்ட் இருப்பதால் தப்பித்தீர்கள்” என்று லாரிக்காரர்களிடம் சொல்லி சந்தோஷப்பட்டேன். என் வாய்முகூர்த்தம் பலித்துவிட்டது. பிரிட்ஜ், வாஷிங்மெஷின் இரண்டையும் லிப்ட் மூலமாக கொண்டு சென்ற பின்பு திடீரென்று ஓவர் லோடு காரணமாக லிப்ட் இயங்க மறுக்க.. டிரைவரைத் தவிர மற்ற மூவருக்கும் லேசான மனவருத்தம். ஆனாலும் முகத்தில் எந்தவித ரியாக்ஷனையும் காட்டாமல் மற்றவைகளையும் படியேறியே கொண்டு வந்து வைத்தார்கள்.

ஒரு கட்டில், 3 பீரோக்கள், 10 சாக்குப் பைகள், 18 பெரிய டிவி சைஸ் அட்டைப் பெட்டிகள், டிவி, 4 டேபிள்கள், கிரைண்டர் என்று அவர்கள் சுமந்தது ஒரு குட்டி நிவாரணப் பொருட்கள். சட்டை முழுவதும் நனைந்து தொப்பலாகிய நிலையில் எனக்கு பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. இடையிடையே தண்ணீர் மட்டுமே குடித்தவர்கள்.. டீ கேட்டார்கள். அக்கா பால்பாக்கெட் வாங்கி வர மறந்துவிட, கொடுக்க முடியவில்லையே என்று அவர்களுக்கும் மனம்கொள்ளா வருத்தம்.

விடியற்காலை 5.45 மணிக்கு அவ்வளவு வேகமாக வேலையைச் செய்து முடித்தார்கள். கீழ் மூச்சு, மேல் மூச்சு வாங்க நின்றவர்கள் வீட்டின் வாசலுக்குப் போய் நின்று கொண்டார்கள். உள்ளே அழைத்தும் வர மறுத்தார்கள். “அது எங்க ஏஜென்ஸில சொல்லிருக்கிற விதிமுறை ஸார்.. வேலைய முடிச்ச பின்னாடி, வீட்டுக்குள்ள நிக்கவே கூடாதுங்கறது ஓனர் உத்தரவு..” என்றார்கள்.

மொத்தமாக 3000 ரூபாய் பில். மாமா பணத்தைக் கொடுக்க நான் அவர்களது லாரி வரையிலும் சென்று அவர்களை வழியனுப்பி வைத்தேன். படிக்கட்டுகளில் இறங்கும்போது மெதுவாகக் கேட்டேன்.. “நீங்களும் நல்லா படிச்சிருக்கலாம்ல.. வீட்ல படிக்க வைச்சிருப்பாங்க. எங்களை மாதிரி ஆயிருக்கலாம்…” என்று இழுத்தேன்.

நால்வருமே சிரித்துக் கொண்டார்கள். “இப்ப நினைச்சு என்ன ஸார் ஆகப் போகுது..?” என்றார் ஒருவர். இன்னொருவர் “நினைக்கிறதே வேஸ்ட்டு..” என்றார் மற்றொருவர்.. “வீட்ல அப்பன், ஆத்தா இருந்திருந்தா படிக்க வைச்சிருப்பாங்க ஸார்” என்று எங்கோ பார்த்தபடியே சொன்னார் மூன்றாமவர். டிரைவர் மட்டுமே பதில் சொல்லாமல் வந்து கொண்டிருந்தார்.

“என்ன ஸார் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறீங்க?” என்றேன். லாரி அருகே வந்தவர் பின்புறக் கதவை பூட்டியபடியே “நீங்க என்ன படிச்சிருக்கீங்க?” என்றார். சொன்னேன்.. “படிப்புக்கு ஏத்த வேலை பாக்குறீங்களா..?” என்றார். “ஆமாம்..” என்றேன்.

“சரி.. எல்லாரும் உங்களை மாதிரியே படிச்சு, உங்க வேலை மாதிரியே தேடிட்டுப் போயிட்டா.. பின்ன இந்த மாதிரி வேலைக்கு யாரைத் தேடுவீங்க..? யார் வருவாங்க..? நீங்களே எல்லாத்தையும் தூக்கிருவீங்களா..?” என்றார்.

அந்த கார்த்திகை மாத குளிரிலும் என் உடம்பு குப்பென்று வியர்த்தது. மற்ற மூவரும் நான் என்ன பதில் சொல்வேன் என்று எதிர்பார்த்து ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்க.. என்ன பதில் சொல்வது என்று எனக்கும் தெரியவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போய் மெளனமாக நின்றேன்.

மின்னல் வேகத்தில் கதவுகளை மூடிவிட்டு என் தோளில் கை வைத்து தட்டிக் கொடுத்துவிட்டு “அப்பால பார்க்கலாம் ஸார்.. ஸார்கிட்ட நம்ம கார்டு இருக்கு.. வேற யாருக்காச்சும் வேலை இருந்தா சொல்லு.. வர்றோம்.. என்ன வர்ட்டா..?” என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு லாரியில் ஏறி அமர்ந்தார் டிரைவர்.

அந்த விடிந்தும், விடியாதப் பொழுதில் தெருமுனையில் மறையும் வரையில் அந்த லாரியையே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு இப்போதுவரையிலும் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

உங்களுக்குத் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்கள் பதிவர்களே..