ஆறாவது வனம் – திரை விமர்சனம்

02-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கமர்ஷியல் படம்தான்னு முடிவு பண்ணிட்டா அது மாதிரியே செஞ்சுப்புடணும்.. இல்லை.. அவார்டு படம்ன்னா அது மாதிரியே கிழிச்சுப்புடணும்.. இந்த ரெண்டு மாதிரியும் இல்லாம புது மாதிரியா சிந்திக்கிறேன்னு சொல்லி இப்படி படம் எடுத்தா எப்படி விமர்சனம் எழுதுறது..?

கொஞ்சமாச்சும் விமர்சனம் எழுதறதுக்கு இடம் கொடுக்கணுமில்லையா..? 75 ரூபா கொடுத்து படம் பார்க்க வந்தா, கழுத்துல கத்தியை வைச்சு கடைசிவரைக்கும் உக்கார்றான்னு சொன்ன மாதிரி இப்படியா..?

இப்படியொரு சொதப்பலான படத்தை இதுவரைக்கும் நான் பார்த்ததில்லடா சாமி..! அம்புட்டு கொடுமை..!

இப்பல்லாம் புதுசா கிரியேட்டிவ்வா படத்தோட போஸ்டரை மட்டும் டிஸைன் செஞ்சுக்குறது.. விளம்பரத்தை அதே மாதிரி நல்ல கிரியேட்டர்கிட்ட கொடுத்து மோல்டு பண்ணிக்கிறது..! அப்படியே வாராவாரம் துட்டு கொடுத்து படத்தை பத்தி பில்டப் கொடுக்கிறது.. இப்படி எல்லாவிதத்திலும் இந்தப் படத்தைப் பத்தி விளம்பரப்படுத்தியிருந்ததால.. ஏதோ புரட்சியைத் தூண்டப் போற படம்னு நினைச்சு போய் உக்காந்தா..!?????????????

சமீபத்தில ரெண்டு வருஷத்துக்குள்ள வந்த அத்தனை கிராமத்துப் படங்கள்ல இருந்தும் ஒவ்வொரு சீனையும் எடுத்துப் போட்டு அதுக்கேத்தாப்புல ஒரு கதையை எழுதி எடுக்கத் தெரிஞ்சவரைக்கும் எடுத்துத் தள்ளியிருக்காரு இயக்குநரு.. அவரைக் குத்தம் சொல்லி புண்ணியமில்லை. சட்டில இருந்தாத்தானே அகப்பைல வரும்..?

ஆறாவது வனம்ன்றது ஒரு ஊரு. அந்த ஊர்ல ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் பண்ணா கவுரவமா கொலை பண்ணிப்புட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.. 


அந்த ஊர்ப் பொண்ணு ஒண்ணு வழக்கம்போல ரவுடியான ஹீரோவை காதலிச்சுத் தொலைக்குது.. அந்தப் பொண்ணுக்கு ஒரு தாய்மாமன்.. இவன்தான் படத்துல வில்லன்னு உங்களுக்குத் தனியா சொல்ல வேண்டாம்னு நினைக்கிறேன்.. தாய்மாமன் தாலி கட்டப் போற நாள்ல, பொண்ணு  ஹீரோவோட ஊரைவிட்டே எஸ்கேப்பாகுது..

அந்தச் சமயத்துல ஆக்சிடெண்ட்ல ஹீரோ தலைல அடிபட்டு மென்ட்டல் ஆகிடறார்.. அவரைக் காப்பாத்துறேன்னு சொல்லி தாய் மாமா, டிராமா போட்டு ஹீரோவை ஆஸ்பத்திரில இருந்து வெளில துரத்திர்றாரு.. அவரைத் தேடி அலுத்துப் போய் ஓய்ஞ்ச பின்னாடி தாய் மாமன் மேல பரிதாபப்படுது பொண்ணு. அவரையே கட்டிக்கலாம்னு இன்னொரு தடவை கல்யாணத்துக்கு தேதிய குறிச்சு வைக்க..


திடீர்ன்னு நம்ம ஹீரோவுக்கு எல்லாம் சரியாகி ட்ரீட்மெண்ட் கொடுத்த டாக்டரை பீச்சுல பார்த்து கரீக்ட்டா அடையாளம் கண்டுபிடிச்சு விசாரிச்சு, காதலியைத் தேடி ஊருக்குத் திரும்பி வர்றாரு.. தாய் மாமன் ஆளுங்க அவனை அடிச்சு, உதைச்சு, கொலை செஞ்சு செங்கல் சூளைக்குள்ள திணிச்சு வைச்சர்றாங்க..

அன்னிக்கு ராத்திரி மப்புல, மாப்ளைக்காரன் மாமனார்கிட்ட இதை உளறிக் கொட்ட.. ஒட்டுக் கேக்குற பொண்ணு மறுநாள் வைக்கிறா பாருங்க ஆப்பு..! ஒட்டு மொத்த ஊர் ஜனத்தையும் கல்யாண விருந்துல விஷம் வைச்சு கொன்னுடறா.. தானும் செத்துர்றா.. தாய் மாமன் இதனாலேயே பைத்தியமாகி அதே ஊர்ல திரியறான்.. கூடவே அவன் அல்லக்கை ஒருத்தனும்.. 


இந்தத் தாய் மாமன் செத்தவுடனேயே அவனைக் குழி தோண்டிப் புதைச்ச இடத்துல ‘ஆறாவது வனம்’ன்ற ஊர் பேரோட போர்டை நட்டுட்டு நடையைக் கட்டுறாரு அல்லக்கை. இதுதாம்பா இந்தக் காவியப் படத்தோட கதை..!

“மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு மிகவும் சோதனைக் களமாக அமைந்தது ஆறாவது வனத்தில் அவர்கள் அஞ்ஞாத வாசம் புரிந்த காலகட்டம்தான். அதேபோல காதலில் மிகுந்த சோதனைகளை காதலனும் காதலியும் எதிர்நோக்கும் காலகட்டத்தைச் சித்தரிப்பது இந்த ‘ஆறாவது வனம்’.

ஒரு இளம் ஜோடியின் காதலுக்காக ஒட்டு மொத்த மக்களும் ஊரைக் காலிபண்ணிக் கொண்டு போக, கடைசியில் அந்த ஊரில் இரண்டே இரண்டு பேர் மட்டும் மிஞ்சுகிறார்கள். இப்போதும் அந்த கிராமம் அப்படியே இருக்கிறது. இன்றுவரை அந்த இருவர் மட்டுமே அந்த ஊரில் வசிக்கிறார்கள். இந்த உண்மைச் சம்பவம்தான் ஆறாவது வனம்.

இந்த கதைக்கு உயிரூட்ட சம்பந்தப்பட்ட அந்த கிராமத்துக்கே போய் படமாக்க எண்ணினோம். ஆனால் அந்த கிராமத்தில் மிச்சமிருக்கும் அந்த இருவர் கடைசிவரை இதற்கு அனுமதி மறுத்துவிட்டார்கள்.


வேறு வழி இல்லாததால், பொருத்தமான வேறொரு கிராமம் தேடியபோது இந்த சிங்கராம்பாளையம் கண்ணில் பட்டது. கதைக்குப் பொருத்தமாகவும் இருந்தது.

ஷூட்டிங்குக்காக ஊரை ஒட்டுமொத்தமாக ஒரு நாளைக்கு மட்டும் காலி செய்து தர முடியுமா என்று அந்த மக்களைக் கேட்டபோது முதலில் கடுமையாகக் கோபப்பட்டனர். எங்க ஊரை காலி பண்ணச் சொல்ல நீ யாருய்யா என்றுதான் கேட்டார்கள்.

ஆனால் அவர்களுக்கு பொறுமையாக, அந்த உண்மைக் காதல் சம்பவத்தையும் இப்போது ஏற்பட்டுள்ள ஷூட்டிங் சிக்கலையும் சொன்னோம். அவர்கள் ஊர்க்கூட்டம் நடத்தி ஒருமனதாக எங்களுக்கு ஒத்துழைக்க முடிவு செய்தார்கள். பெரியவர் சிறியவர் குழந்தைகள் என்ற பேதமில்லாமல் அனைவரும் எங்களுக்காக ஊரைவிட்டு வெளியேறிய காட்சி கண்ணில் நீரை வரவழைத்தது. அவர்களுக்கு நன்றி சொல்லக் கூட நா எழவில்லை.

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தப் படத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு செய்துவிட்டார்கள் சிங்கராம்பாளையம் மக்கள்.

தமிழ் சினிமாவில் இதற்கு முன் வேறு எந்தப் படத்துக்காவது மக்கள் இந்த அளவு ஒத்துழைப்பு கொடுத்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான்…” என்றார் இயக்குநர் புவனேஷ்.

இம்புட்டு பில்டப்பு இந்தப் படத்துக்குத் தேவையா..? படத்தின் கதைதான் இப்படியென்றால் இயக்கம்..!? எஸ்.வி.சேகரின் டிராமாகூட பரவாயில்லை என்றே நினைக்கிறேன்.

முதல் இருபது நிமிஷத்துல ஏதோ ‘அவதார்’ பட ரேஞ்சுக்கு படத்தோட கதையைச் சொல்லப் போறதா நினைச்சு. மெதுவா உருட்டிப் புரட்டிக் கொண்டு போகும்போதே நினைச்சேன்.. எனக்கு நேரம் சரியில்லையோன்னு..! அது நிசம்தான்..!


கன்னடத்துல கதாநாயகனா பல படங்கள்ல நடிச்ச பூஷன் அப்படீன்றவர் ஹீரோவா நடிச்சிருக்காரு.. இவருக்கு நம்ம விஷால் பரவாயில்லைதான்..! கடைசிவரைக்கும் ஒரே மாதிரியே முகத்தை வைச்சிருந்தால்தான் நடிப்புன்னு டைரக்டர் நினைச்சிருக்காரு.

வித்யான்ற கேரளத்துப் பொண்ணு ஹீரோயின்.. முக அழகு ஓகே.. ஆனா நடிப்பு.. இருந்தாலும், வரவழைக்கத் தெரியாத இயக்குநரா இருக்கிறதால பழியை அவர் மேலேயே போட்டுக்கலாம்..!
 
படத்துக்கு இன்னும் பில்டப்பு வேணும்னு நினைச்சு வேணும்னே ஒரு ‘கிஸ்’ சீனை திணிச்சிருக்காங்க.. அதுக்காக ஒரு வாரம் கோடம்பாக்கத்துல அலப்பறை பண்ணிட்டாங்க.. “பொண்ணு நடிக்க மாட்டேன்னு சொல்லிருச்சு.. அப்புறம் எப்படியோ கெஞ்சி, கூத்தாடி நடிக்க வைச்சோம்”னு..! 

சரி.. அதையாவது உருப்படியா எடுத்துக் காட்டினாங்களா..? இதுல “மூணு கேமிராவை வைச்சு எடு்த்தோம்”னு ஒரு கதை வேற..! இதுக்குப் பதிலா பழைய தமிழ்ச் சினிமால காட்டுற மாதிரி, இடைல பூவை காட்டிட்டுப் போயிருக்கலாம். இப்படி ரீல் விட்டும் தியேட்டருக்கு கூட்டம் வரலைன்றத பார்த்தா.. நம்மாளுக அம்புட்டு அறிவாளிகளான்னு ஆச்சரியமா இருக்கு..!?

படத்துல கொஞ்சமாச்சும் நடிச்சிருக்கிறது  தாய் மாமனா வரும் போஸ்வெங்கட்தான். ஆனா அதுக்காக 2 மணி நேரம் மிளகாய்த்தூள் மேல உக்காந்திருக்க முடியுமா..?

கிளைமாக்ஸ் காட்சி லொகேஷனை தேடிக் கண்டுபிடிச்ச நேரத்துக்காவது, கதை டிஸ்கஷனுக்கு டைம் ஒதுக்கியிருக்கலாம்..! இல்லாட்டி எடுத்தவரைக்கும் யாராவது பெரிய இயக்குநர்கள்கிட்ட படத்தைப் போட்டுக் காட்டி ஏதாவது கரெக்ஷன் கேட்டிருக்கலாம்.. பாக்யராஜ், பார்த்திபன்கிட்ட அஸிஸ்டெண்ட்டா இருந்திட்டு இப்படி படம் எடுத்தா, அவங்க பேர் கெடாதா..?

சந்திரன் தியேட்டர்ல 55 ரூபா டிக்கெட்ல படம் போடும்போது அஞ்சு பேர் உக்காந்திருந்தோம்..  அரை மணி நேரம் கழிச்சு திரும்பி பார்த்தேன் 2 பேரை காணோம்.. அடுத்த அரை மணி நேரம் கழிச்சு திரும்பிப் பார்த்தேன். அடுத்த 2 பேரையும் காணோம்.. இடைவேளைக்கு அப்புறம் நான் ஒரே ஆளு ரொம்பத் தைரியமா தன்னந்தனியா உக்காந்திருந்தேன்னா பார்த்துக்குங்கோ..!

ஏற்கெனவே மாசாமாசம் தியேட்டருக்கு வர்ற கூட்டம் குறைஞ்சுக்கிட்டே போகுது..! இது மாதிரி மாசத்துக்கு ஒரு படம் வந்தா போதும்.. தியேட்டர்கள் காத்தாடுவது உறுதி..!

எவ்வளவுதான் சொதப்பலான கதையாக இருந்தாலும் சுமாரான நடிகர்களை வைத்து தேற்றிவிடும் இயக்குநர்களும் இங்கேதான் இருக்கிறார்கள். சுமாரான திரைக்கதையில் நடிகர்களின் ஸ்கோப்பால் தப்பித்த படங்களும் உண்டு..! இது இரண்டுமில்லாமலும் எடுக்கத் தெரியாமல் மாட்டிக் கொள்ளும் படங்களுக்கு உதாரணம் இத்திரைப்படம்.

படம் முடிந்து வெளியில் வரும்போது ‘களவாணி’ படம் பார்க்க ஒரு கூட்டம் நின்று கொண்டிருந்ததை பார்த்து கொஞ்சம் சந்தோஷம் வந்தது. பேசாமல் இதைப் பார்த்த நேரத்தில் இரண்டாவது முறையாக அதையாவது பார்த்துத் தொலைந்திருக்கலாம்..

இது மாதிரி இயக்கமே இல்லாமல் எடுக்கப்பட்டு. தயக்கமே இல்லாமல் தியேட்டரை விட்டு ஓடுகின்ற படங்களை பார்ப்பது எங்க தலையெழுத்து..? உங்களுக்கென்ன..? போய் அவங்கங்க சோலியைப் பாருங்கப்பூ..!


புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : http://www.indiaglitz.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: