கட்டா மீத்தா – ஹிந்தி திரைப்படம் – விமர்சனம்

29-07-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1988-ம் வருடத்தில் ஒரு நாள் ‘சித்ரம்’ என்ற மலையாளப் படத்தை மதுரை மினிப்பிரியா தியேட்டரில் பார்த்துவிட்டு, தியேட்டரில் இருந்து வெளியே வருவதற்குள்ளேயே  மோகன்லாலின் தீவிர ரசிகனாக மாறிப் போனேன்.  

அதுவரையிலும் அந்த மோகன்லாலை திண்டுக்கல் என்.வி.ஜி.பி. தியேட்டரிலும், கணேஷ் தியேட்டரிலும் காலை காட்சியாக ஓட்டப்படும் மலையாள பிட்டு படங்களில் பார்த்ததோடு சரி..

அந்த அற்புதமான மகா கலைஞனின் உண்மையான நடிப்பை இதன் பின்பு அடையாளம் கண்டு, அதன் பின்னான லால் சேட்டனின் நல்ல மலையாளப் படங்களின் தமிழக வருகையின்போது தவறாமல் பார்த்துவிடுவது எனது வழக்கம்.

அப்படித்தான் ஒரு நாள் மதிய வேளையில் மதுரை மினிப்பிரியா தியேட்டரில் நான் பார்த்து வயிறு வலிக்கும் அளவுக்கு சிரித்துத் தொலைத்த படம் ‘Vellanakalude Nadu’. வெளங்காலுடு நாடு.. உச்சரிப்பு சரியா..? அர்த்தம் என்ன என்று தெரியவில்லை. ‘வெளங்காத நாடு’ என்றா..? யாருக்குத் தெரியும்..?

கொட்டாக்காரா சீனிவாசனின் கதையில் பிரியதர்ஷனின் இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா, லிசி நடித்திருந்திருந்தார்கள். மலையாள மண்ணின் மணத்தோடு கொஞ்சமும் நாடகத்தனம் இல்லாமல் மிக யதார்த்தமாக லஞ்ச ஊழலில் சிக்கித் தவிக்கும் நமது அரசு இயந்திரங்களின் நிலைமையை வெளிப்படையாகச் சொல்லியிருந்தார் பிரியதர்ஷன்.

இந்தப் படத்தைத்தான் இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது ஹிந்தியில் ‘கட்டா மீத்தா’வாக ரீமேக் செய்திருக்கிறார் பிரியதர்ஷன்.

மோகன்லால் வேடத்தில் அக்சய் குமார். ஷோபனா இடத்தில் த்ரிஷா. 


சச்சின் டிக்காலே என்னும் வேடத்தை ஏற்றிருக்கும் அக்சய்குமார் ஒரு முனிசிபல் ரோடு காண்ட்ராக்டர். காண்ட்ராக்ட் என்றால் கோடிக்கணக்கில் அல்ல.. ஏதோ சின்னதாக சில லட்சங்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களை மட்டுமே பெற்று ரோடு போட்டுக் கொடுக்கும் வேலையைச் செய்து வருகிறார்.

இந்த பணிக்காக முனிசிபல் அலுவலகத்தில் யாருக்கும் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று ஒற்றைக் காலில் நிற்பதால் இவருக்கு வர வேண்டிய பாக்கித் தொகைகள் எல்லாம் அப்படியே முனிசிபல் ஆபீஸ் பைலில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.. 


இதனால் தொடர்ந்து வேலைகளைத் தொடர்வதற்கு கையில் பணமில்லாமல் தனது வாட்ச், செயின், வீட்டில் இருக்கும் அலங்காரப் பொருட்கள் என்று அத்தனையையும் அடகோ, விற்பனையோ செய்து தொழிலாளர்களுக்கு பணத்தை பட்டுவாடா செய்து பொழைப்பை ஓட்டி வருகிறார் அக்சய்.

தொழிலில்தான் பிரச்சினை என்றால் வீட்டில் அதைவிட..! அவரது அக்காக்களின் கணவர்மார்கள், அண்ணன், அப்பா, அம்மா என்று யாருமே அக்சயை புரிந்து கொள்ளாதவர்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் அக்சய் ஒரு உருப்படாதவர்.. பொழைக்கத் தெரியாதவர் என்பதுதான்..!


அக்சயின் அக்கா கணவர்களில் ஒருவர் அதே முனிசபல் ஆபீஸில் லஞ்சத்தில் திளைக்கும் தலைமைப் பொறியாளர். லோக்கல் அரசியல்வியாதிகளுடன் இணைந்து ஊர் நிலத்தையெல்லாம் தனது நிலம் என்று சொல்லி பெரிய, பெரிய நிறுவனங்களிடம் விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்க்கும் பார்ட்டி. இவருக்குத் துணை இன்னொரு மாமா. அவர் அக்சயை போல சில லட்சங்கள் மதிப்புள்ள காண்ட்ராக்டுகளை ஏற்காமல் கோடிகளில் செய்பவர்.

இந்த இரண்டு மாமாக்களும், அரசியல் வியாதிகளுடன் இணைந்து கட்டிய ஒரு மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலர் இறந்து போகிறார்கள். இந்தப் பழியில் இருந்து தப்பிக்க தங்களது வீட்டில் பல வருடங்களாக வேலை செய்து வரும் கார் டிரைவரை(டினு ஆனந்த்) பாலத்தை குண்டு வைத்தது தகர்த்ததாக பொய் சொல்ல வைத்து போலீஸில் சரணடைய வைக்கிறார்கள். பின்பு அவரை கொலையும் செய்து விடுகிறார்கள்.


அக்சயின் கல்லூரி காலத் தோழியான த்ரிஷா முனிசிபல் கமிஷனராக அதே ஊருக்கு வருகிறாள். தனது பழைய கணக்கு வழக்குகளையெல்லாம் அவளிடம் பேசப் போகும் அக்சய்.. அவள் தன் மீது இன்னமும் கோபத்தில் இருப்பதை உணர்ந்தாலும், தான் நேர்மையானவன் என்பதை த்ரிஷாவின் மனதில் பதிய வைக்க முயல்கிறான்.

அக்சயின் பொறியாளர் மாமா, த்ரிஷாவுடன் ஸ்பாட்டுக்கு வந்து ரோட்டை தோண்டியெடுத்து வெறும் மணலை கொட்டித்தான் அக்சய் ரோடு போட்டிருப்பதாகவும், இதனால் அவனுக்கு பணத்தை செட்டில் செய்யக் கூடாது என்றும் சொல்ல அக்சய் டென்ஷனாகிறார்.


த்ரிஷாவும் அக்சயும் ஒருவர் மாற்றி ஒருவர் தவறாகவே அர்த்தம் புரிந்து கொண்டு காலை வாரிவிட்டுக் கொண்டிருக்க அக்சய் கொஞ்சம் ஓவராகவே போய்விடுகிறார். த்ரிஷாவுக்கு லஞ்சம் கொடுப்பது போல் ஒரு செட்டப் செய்து அவரை லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் மாட்டிவிட்டு சஸ்பெண்ட் செய்ய வைக்கிறான்.

த்ரிஷா அசிங்கப்பட்ட மனநிலையில் தற்கொலைக்கு முயல.. இதன் பின்பு அக்சய் மருத்துவமனைக்கு ஓடோடி போய் தன் நிலையை விளக்க.. த்ரிஷா இப்போது அதனையும், அவனையும் ஏற்றுக் கொள்கிறார்.

அக்சயின் தங்கையை மாமாக்களின் அரசியல் தோஸ்த்து ஒருவன் கல்யாணம் செய்து கொள்கிறான். அக்சய் இதனை கடுமையாக எதிர்த்தும் பலனில்லாமல் போகிறது..


இடையில் மாமாக்களும், அண்ணன்களுமாக சேர்ந்து அரசு நிலத்தை ஆட்டையைப் போடுகிறார்கள். பெரிய நிறுவனம் ஒன்றுக்கு அதனை விற்பனை செய்து லாபம் பார்க்க நினைக்கிறார்கள்.

மேம்பாலம் இடிந்து விழுந்ததில் தனது குடும்பத்தையே இழந்த  ஆஸாத் என்பவர் இவர்களை பாலோ செய்து ரகசியமாக படமெடுத்து அதனை த்ரிஷாவிடம் கொண்டு வந்து கொடுக்க அது இப்போது அக்சயின் பார்வைக்குப் போகிறது..!

சில நாட்களில் அக்சயின் தங்கை திடீரென்று தற்கொலை செய்து கொள்ள.. இதன் காரணம் அக்சயுக்கு முதலில் தெரியவில்லை. பின்புதான் தெரிகிறது..!

அந்த மேம்பால வழக்கு சம்பந்தமான பைலை அரசியல்வியாதியின் வீட்டில் இருந்து ஆஸாத் சுட்டு வந்தது அரசியல்வியாதிக்குத் தெரிய வர.. ஆஸாத்தை போட்டுத் தள்ள ஆள் அனுப்புகிறான்.

ஆஸாத் தப்பித்தாரா..? அக்சய் தங்கையின் சாவுக்குக் காரணம் என்ன..? மாமாக்களின் கதி என்ன என்பதுதான் மிச்சக் கதை..!

படம் 2 மணி 40 நிமிடங்கள் என்கிறார்கள். எனக்கு நேரம் போனதே தெரியவில்லை. இத்தனைக்கும் எனக்கும் ஹிந்திக்கும் ஸ்நானப் பிராப்தம்கூட இல்லை.. குச் நஹிதான்.. இருந்தாலும் ரசிக்க முடிந்தது..!

தெரிந்த கதைதானே என்பதாலும், நகைச்சுவை திரைப்படம் என்பதால் நடிப்பே போதுமே என்றெண்ணிதான் படத்திற்குப் போயிருந்தேன். என்னை ஏமாற்றவில்லை பிரியதர்ஷன்..!


முதல் பாதி முழுவதிலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், மலையாளத்தில் இருந்த பல காட்சிகளை பாலிவுட்டின் தன்மைக்காக நீக்கியிருக்கிறார்.

அக்சய்யுக்கு நகைச்சுவை கை வந்த கலை என்பதை இதற்கு முந்தைய பல திரைப்படங்களில் காண்பித்துவிட்டார். ஓவர் ஆக்ட்டிங் இல்லாத நடிப்பு..! குடையை பின் சட்டையில் மாட்டிக் கொண்டு கழுத்தை இறுக்கிப் பிடித்த சட்டையுடனும், கண்ணில் சன் கிளாஸூமாக அறிமுகமாகும் காட்சியில் இருந்து இறுதிச் சண்டைக் காட்சிக்கு முன்பு வரையில் அவரிடம் பாலிவுட் ஹீரோவின் சாயல் இல்லை என்றே சொல்லலாம்..!


அரசியல்வியாதிக்கும், தனது தங்கைக்கும் திருமணம் நடக்கப் போவதைத் தெரிந்து கொண்டு வீட்டிற்கு வந்து அப்பாவிடமும், அம்மாவிடமும் குதிக்கின்ற இடத்தில் பக்கா சென்டிமெண்ட்.. இறுதிக் காட்சியில் இன்னும் கொஞ்சம்..!

கையில் காசில்லாமல் ஆட்டோவில் பந்தாவாக வந்திறங்கி டீ வாங்க காசு கேட்பவனிடம் தனது வாட்ச்சை கழட்டி கொடுத்துவிட்டு போவது முதல்.. இது மாதிரி எத்தனை, எத்தனை நாள் நாம வேலை பார்த்திருப்போம் என்பது போல் பணத்திற்காக தனது தொழிலாளர்களை தாஜா செய்கின்ற வேலையில் ரொம்பவே உழைத்திருக்கிறார்.

நகைச்சுவை என்பதை வெறும் வசனத்தில் மட்டுமல்ல.. காட்சியமைப்பிலும் அசத்தியிருக்கிறார் பிரியதர்ஷன்.. ரோடு ரோலர் த்ரிஷாவின் வீட்டை இடித்துவிட்டு உள்ளே போகும் காட்சியில் சிரிக்காதவர்கள் நிச்சயம் மன நோயாளிகள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு காட்சி தத்ரூபம்.. டிவியில் கிரிக்கெட் ஓடிக் கொண்டிருக்க… ஒரே நொடியில் ரோடு ரோலர் நடு வீட்டில் வந்து நிற்கும் காட்சியை த்ரிஷாவின் அப்பா ஓரக்கண்ணில் பார்க்கும் காட்சி மறக்க முடியாதது..!


அதே போல் அஸ்ரானி இரண்டு போன்களிலும், அக்சய் மற்றும் மற்றொரு ஆளிடமும் மாறி மாறி பேசி வியாபாரம் பேசுகின்ற காட்சியையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்..! ரொம்ப நாள் ஆச்சுய்யா இந்த மனுஷனை ஸ்கிரீன்ல பார்த்து..!

முனிசிபல் ஆபீஸ் காம்பவுண்ட்டில் ரோடு ரோலர் பழுது பார்க்கும்போது நடக்கும் கூத்தும் சிரிப்பை அள்ளிக் கொட்டியது..!


த்ரிஷா.. வருடாவருடம் அழகு கூடிக் கொண்டே போகிறது இந்த தேவதைக்கு.. ஆனால் இந்தப் படத்தில் இந்த தேவதையின் அம்மாவாக நடித்தவரும் ஒரு தேவதையாக இருந்தது ஆச்சரியம்தான்..! மலையாளத்தின் ஷோபனா சுமந்த மெச்சூரிட்டியான கேரக்டர் என்பதால் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் ஏமாற்றம்தான். வெறும் சேலை மட்டுமே ஒருவருக்கு அதிகாரப் பொலிவையும், தோற்றப் பொலிவையும் காட்டிவிடாதே..? முகம்னு ஒண்ணு இருக்கே.. பச்சைப் புள்ளைகிட்ட போய் பிரம்பை கொடுத்து கிளாஸ் நடத்துன்னு சொன்ன மாதிரி ஆயிப் போச்சு..!

பாடல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் அழகாக இருக்கிறார் த்ரிஷா. அதிகமாக பிரியதர்ஷனை டென்ஷனாக்காமல் நடித்து முடித்திருக்கிறார் போலும்..!

ஜானி லீவர், அருணா இராணி, நீரஜ் வோரா, ராஜ்பால் யாதவ் என்று சில முகங்கள் பார்த்தவைகளாக இருந்தன.. மணிகண்டனின் ஒளிப்பதிவிற்கு அதிகம் வேலையில்லை.. பாடல் காட்சிகளில் மட்டுமே தெரிகிறார்.. ஆனால் கலை இயக்குநர் சாபு சிரிலுக்கு வேலை பெண்டை கழட்டியிருக்கும் என்பது போட்டிருக்கும் செட்டுகளை பார்த்தாலே தெரிகிறது..!

நகைச்சுவை என்று வந்த பின்பு எதற்கு லாஜிக் என்பதால் பாடல் காட்சிகளையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை..! த்ரிஷாவை பார்த்தவுடனேயே டூயட்டுக்கு ஓடும் அக்சய்க்குப் பின்னால் பிளாஷ்பேக் கதை இருந்தாலும் அது ஒட்டாமல் போய்விட்டது..!

ஒரே ஒரு காட்சியில் யானையை வைத்து புல்டோஸரை இழுத்து வருகிறார்கள். இந்த ஒரு காட்சிக்காக கடைசி நிமிடத்தில் இந்தப் படத்தை வெளியிட விடாமல் தடா உத்தரவு போட்டது விலங்குகள் வாரியம்.. கடைசியில் கோர்ட்வரைக்கும் சென்றுதான் தடையை உடைத்து படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்..!
 

வெறும் 30 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் இப்படம் வெளி வருவதற்கு முன்பாகவே 18 கோடி லாபத்தைச் சம்பாதித்துவிட்டது என்கின்றன மும்பை பத்திரிகைகள்..!

முதல் மூன்று நாட்களில் மட்டுமே 30 கோடி ரூபாயை உலகம் முழுவதும் அள்ளிவிட்டதாம் இப்படம். இது உண்மையெனில் இனி வருவதெல்லாம் கொழுத்த லாபம்தான்..!

உலகளாவிய மார்க்கெட் உள்ள ஒரு நடிகர் நடித்திருக்கும் பாலிவுட் திரைப்படம் வெறும் 30 கோடி ரூபாய்க்கு தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நமது, கனம் மாட்சிமை தாங்கிய, தமிழ்த் திரைப்பட உலகின் சுளுவான், சுள்ளான், குஞ்சு நடிகர்களெல்லாம் கொஞ்சம் மனதில் வைத்துக் கொள்வது அவர்களுக்கும் நல்லது.. தமிழ்ச் சினிமாவுலகத்திற்கும் நல்லது என்று நினைக்கிறேன்.

இந்த உண்மையான வெற்றிக்கு மூல காரணம் கொட்டாக்காரா சீனிவாசன்தான்.. மனிதர் எத்தனை எத்தனை வெற்றிப் படங்களுக்கான கதைகளை தாரை வார்த்திருக்கிறார்..? ஈகோ பார்க்காமல் இவரிடம் கதை வாங்கி இயக்கிய இயக்குநர்கள்தான் மலையாளப் படவுலகில் அதிகம்..!

மலையாளத் திரையுலகின் ஆரோக்கியத்திற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்..! நாம..!? கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் இப்படி நான்கையும் நாமளே போட்டுக்கிட்டால்தான் நம்ம படம்.. இப்படித்தான் நமது தமிழ் இயக்குநர்களின் மனநிலை இருக்கிறது..!

ம்.. என்னவோ போங்க..! இந்த மாதிரி படத்தையெல்லாம் தமிழ்ல ரீமேக் செஞ்சிருந்தா எவ்ளோ நல்லாயிருந்திருக்கும்..!?

கட்டா மீத்தா – அவசியம் பார்த்து சிரிக்க வேண்டிய திரைப்படம்..!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: