தேவலீலை – திரை விமர்சனம் – மதுர பெருசு தருமிக்கு சமர்ப்பணம்

17-07-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“குருவே தங்கள் சித்தப்படி நடப்பேன்..

உனக்கு மங்களம் உண்டாகட்டும்..

கற்றுக் கொடுத்த குருவையே கொன்றுவிட்டாயே.. இது நீச பாவமில்லையா..?

இளவரசி.. தங்களைக் காணாமல் அரசர் அங்கே கவலைப்படுவார்..

என் மணாளனைக் கண்டுபிடிக்காமல் நான் நாடு திரும்ப மாட்டேன்..

அந்த மூன்று பெண்களையும் அடைந்தே தீருவேன்..

எனது சக்தி எப்படிப்பட்டது என்பதை நீயே நேரில் காணப் போகிறாய்..

துஷ்டனே.. விலகிச் செல்.. என் வழியில் குறுக்கிடாதே..

குழந்தாய் நீ கேட்டது கிடைக்கும். விரும்பியது அனுகூலமாகும்.. வெற்றி நிச்சயம்..”


– இப்படியெல்லாம் தூயத் தமிழை 70 எம்.எம். திரையில் பார்த்து வெகு நாட்களாகிவிட்டது. அந்தக் குறையைத் தீர்த்து வைத்திருக்கிறார்   பிரபாகரன் என்ற இயக்குநர். 

இந்தப் படம் ஆஸ்கார் விருதுக்குரிய திரைப்படம். சந்தேகமேயில்லை. இதன் கதை இதுவரையில் தமிழ்த் திரையுலகில் யாருமே சிந்திக்காத கதை.. இது மாதிரியான கதைகளையெல்லாம் சிந்தித்து எழுத வேண்டுமெனில் நீங்கள் பிரபாகரனைப் போல பகுத்தறிவுவாதியாக இருந்தால் மட்டுமே முடியும்..

ஆதி காலமாம். ஒரு குரு தனது சிஷ்யனுக்கு எதை, எதையோ சொல்லிக் கொடுத்து ஆளாக்குகிறார். பரிசாகத் தனக்கு குரு கொடுத்த வாளால் அவரையே வெட்டி வீழ்த்திவிட்டு நானே இவ்வுலகின் ராஜா என்கிறான் அந்தக் கிறுக்கன். கிழக்கு, மேற்கு, வடக்கு என்ற மூன்று திசைகளில் காணப்போகும் மூன்று கன்னிகளையும் அடைந்தால் அவன் உலகையே ஆளும் சக்தியை அடைவான் என்று குரு சொன்னதை உடன் இருக்கும் ஒரு அல்லக்கையும் ரிப்பீட் செய்ய கதை தொடர்கிறது. ஒவ்வொரு திசையில் இருந்து ஒரு பெண் கிடைக்க மூவரையும் அடைவதற்கு ஐயா அல்லல்படுகிறார். கடைசியில் கன்னிகளை அடைந்தாரா அல்லது கைலாசத்தை அடைந்தாரா என்பதுதான் கதை. அட்டகாசம்ல்ல..

படத்துல மொத்தமே பத்தே பத்து கேரக்டர்கள்தான். இதுல நாலு பேர் பெண்கள்.. முன்பு ஒரு காலத்தில் மதுரையின் மது தியேட்டரில் சொப்னசுந்தரி படம் பார்த்த நினைப்புதான் வந்தது. கதைதான் டுபாக்கூர் என்றால், எடுத்தது கூடவா..?

இது மாதிரி கதைகளை அல்வா சாப்பிடுவதுபோல் சுட்டுத் தள்ளிய மலையாள கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு கோவில் கட்டலாம் போலத் தோன்றியது இந்தக் கர்மத்தை பார்த்த பின்பு..  வசந்த் டிவியில் பகல் நேர ஸ்லாட் டைமில் ஓடும் சீரியல்கூட இதனைவிட கச்சிதமாக எடுத்திருப்பார்கள். அவ்வளவு கன்றாவி..

காட்சியமைப்புகள்தான் சோதனையைக் கொடுத்தனவென்றால், எடுத்த விதம்.. ஏதோ கேமிராவைக் கையில் வைத்துக் கொண்டு ஹேண்டியாகவே சுட்டுத் தள்ளியிருந்தாலும் அதில் ஒரு ஒழுங்கு வேண்டாமா..? இதுதான் இப்படியென்றால் நடிப்பு.. அட்சரச் சுத்தம்.. ஒருத்தர்கூட டேக்ல நடிக்கலை.. ரிகர்சல்ல நடிச்ச மாதிரி நடிச்சுத் தொலைஞ்சிருக்காங்க..

பாதி வசனம் பேசி முடிக்கிறதுக்குள்ள ஷாட் மாறுது.. லிப்ஸ் தடம் மாறுது.. கேமிரா எங்கிட்டோ இருக்கு.. இவுக எங்கிட்டோ பார்த்து பேசுறாங்க.. பெண்களை காட்டுகின்றபோது மட்டும் கேமிரா அனைத்து பகுதிகளையும் வளைத்து, வளைத்துச் சுட்டுத் தள்ளியிருக்கிறது. அவர்களது நோக்கம் அதுதான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது..

இடையில் நிறைய பிட்டு படங்கள் எடுத்திருக்கும் வாய்ப்பு இருந்தது போல எனக்குத் தோன்றியது. ஆனால் எடுத்தார்களா என்று தெரியவில்லை. எடுத்திருந்தால் திருச்சியைத் தாண்டி இணைத்து ஓட்டுவார்கள் என்று நினைக்கிறேன்.

மிஞ்சிப் போனால் இந்தப் படத்துக்காக 30 லட்சம் ரூபாய் செலவாயிருக்கும். இதில் பிரிண்ட் போடுவதற்கு மட்டுமே கூடுதல் செலவாகியிருக்கும்.. 

படத்தில் நடித்த பெண்கள் எக்குத்தப்பாக ‘திறமை’யை காட்டித் தொலைத்த, சில ஸ்டில்ஸ்களை அவசரம், அவசரமாக மீடியா பக்கம் தள்ளிவிட்டது தயாரிப்பு தரப்பு. பின்பு மீண்டும் அதே அவசரமாக தொடர்பு கொண்டு “அதை மட்டும் போட்டுறாதீங்க.. மேட்டர் படம்னு நினைச்சு கூட்டம் வராம போயிரும்” என்று சொல்லி தடுத்ததாக பத்திரிகைச் செய்தி கூறுகிறது.

இவுங்க சொன்னாத்தான் பிட்டு படம்னு தெரியணுமாக்கும். போஸ்டரே தெள்ளத் தெளிவா சொல்லுதே.. நான் பார்த்தவரையிலும் இன்றைக்குத்தான் சக்தி கருமாரி தியேட்டர்ல 75 சதவிகிதம் கூட்டம்.. மதராசபட்டினத்துக்குக்கூட இந்தக் கூட்டம் இல்லப்பா..!

ஆனால் படம் எதிர்பார்த்தது போல் இல்லாததால் படம் முடிந்தவுடன் ஆபரேட்டரின் நான்கு தலைமுறையையே நாறடித்துவிட்டுத்தான் ஒரு கும்பல் படியிறங்கியது.. கிழிப்பதற்கு குஷன் சேர்கள் இல்லாததால் அவர்களால் முடிந்தது இதுதான்..!

இந்தக் கண்றாவிக்கு நானும் வேற அறுபது ரூபாயை செலவழிச்சுத் தொலைஞ்சிருக்கேன்.. யாரைக் கேட்டுடா போனன்னு கேக்குறீங்களா..? எல்லாம் நம்ம தம்பிமார்களுக்காகத்தான். போய்த் தொலையாதீங்கப்பான்னு எச்சரிக்கை செய்யலாம்னுதான்..!

இதுக்கு மேலேயும் யாராவது இந்தப் படத்துக்குப் போயி பார்த்துப்புட்டு வந்து விமர்சனம் எழுதுனீங்க.. ஒரு மாசத்துக்கு அவங்களுக்கு மைனஸ் குத்து குத்திருவேன்.. ஜாக்கிரதை..!

டிஸ்கி-1 : மதராசப்பட்டினம் படத்துக்குத்தான் முதல்ல விமர்சனம் எழுதலாம்னு நினைச்சேன். ஆனா அந்தப் படம் பார்க்கும்போது பக்கத்துல வந்து உக்காந்த ஒரு குடிகாரத் தமிழ்க்குடிமகன் செஞ்ச கொடுமையால படத்துல முழுசா லயிக்க முடியாம போயி இப்போ எழுதறதுக்கே எதுவும் வர மாட்டேங்குது.. ச்சே.. எங்க போனாலும் இந்த குடிகாரனுங்க தொல்லை தாங்கலப்பா..

டிஸ்கி-2 : நேற்றைக்குத்தான் நமது மதுரைக்கார பெரியவர், இனமானப் பேராசிரியர், நண்பர் தருமி அவர்கள் தனது களவாணி படத்தின் விமர்சனத்தில் தமிழ்ச் சினிமாவின் இன்றைய நிலைமையைப் பற்றி வருத்தத்துடன் ஏதேதோ சொல்லியிருக்கிறார். அன்னார் அவர்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு கொஞ்சம் விமர்சனம் எழுதினால் தன்யனாவேன்.. அதற்காகத்தான் அந்த சமர்ப்பணம் போர்டு..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: