மிளகா – திரை விமர்சனம்

26-06-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

படத்தின் உயிர்நாடியான கதைக்கரு எதைச் சுற்றியிருக்கிறது தெரியுமா..? ஒரு இளம் பெண்ணின் இடுப்பைத்தான்…! சூப்பரா இருக்குல்ல..!????????

“அந்த அழகான, மடிப்பான இடுப்பில் தைரியம் இருந்தால் கை வைத்து கிள்ளி விடுடா பார்ப்போம்.. அப்பத்தான் நீ ஆம்பளை.. எவ்வளவு பெட்டு?” என்று ஹீரோவை அவனது அல்லக்கை கூட்டம் உசுப்பிவிட.. இதனால் ரோஷப்பட்டு, தூண்டப்பட்ட ஹீரோ, ஹீரோயினின் இடுப்பைக் கிள்ளி விட்டு விட்டு எஸ்கேப்பாகிவிடுகிறார். இதில்தான் கதையே ஆரம்பிக்கிறது..!

கோபத்துடன் திரும்பிய ஹீரோயின் தற்செயலாக அந்தப் பக்கமாக வரும் ஒரு வில்லனை அடித்துவிட.. அதுவரையில் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் அந்தத் தம்பி வில்லன்.. அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக கடத்த முயல்கிறான்.


இந்தக் களேபரத்தில் தற்செயலாக தலையில் அடிபட்டு தம்பி வில்லன் பைத்தியமாகிவிட.. ஹீரோயினை அண்ணன் வில்லன்கள் அவளது குடும்பத்தினரிடமிருந்து பிரித்து தங்கள் வீட்டில் பலத்த பாதுகாப்போடு தங்க வைத்து படிக்க வைக்கிறார்கள். அவளது படிப்பு முடிந்தவுடன் பைத்தியமான தம்பிக்கு அவளையே திருமணம் செய்து வைக்கக் காத்திருக்கிறார்கள்..!

இப்படியொரு சம்பவத்திற்குத் தான்தான் காரணம் என்பதே இடைவேளைக்குப் பிறகுதான் ஹீரோவே சொல்கிறார். அதே ஊரில் யாருக்கும் அடங்காமல் சலம்பிக் கொண்டிருக்கும் ஹீரோவையும், இவர்களையும் சண்டையில் கோர்த்துவிட்டால் தான் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்து ஹீரோயின் ஹீரோவை இவர்களுடன் சேர்த்து வைத்து வம்பிழுக்க.. ஹீரோவுக்கும், வில்லன்களு்ககும் இடையில் சண்டை மூள்கிறது..!

கடைசியில் ஹீரோ கதி.. ஹீரோயின் கதி..? பைத்தியத்தின் கதி..? இதுக்கெல்லாம் முடிஞ்சா தியேட்டருக்கு போய் பார்த்து தெரிஞ்சுக்குங்க..!

இந்த கோடம்பாக்கத்து கதாசிரியர்கள் மதுரை மாவட்ட மக்களை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை..! மதுரையில் தெருவுக்குத் தெரு ரவுடிகள் மயம்தான் என்பதை சித்தரிப்பதுபோல் நமது கோடம்பாக்கத்து சினிமாக்கள் வருவதை கண்டிக்கத்தான் வேண்டும்..!

இதில் மதுரைக்கார பாஷை என்று சொல்லி தமிழை ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவிதமாக கொத்துப் புரோட்டா போட்டுக் குதறிக் கொண்டிருக்கிறார்கள்..!

நட்ராஜ் என்னும் ஹீரோவுக்கு பெரிதாக நடிப்பில்லை.. ஏதோ வருகிறார். பேசுகிறார்.. சண்டை போடுகிறார்.. நடனமாடுகிறார். அவ்வளவுதான். உடனிருந்து கலக்குவது சிங்கப்புலிதான்..

இதில் இன்னும் இரண்டு ரவுடிக் கூட்டம்.. ஒன்றுக்கு கராத்தே வெங்கடேசன் தலைவர்.. மற்றொன்று லோக்கல் ரவுடிக் கும்பல்.. இளவரசு தலைமை. அவரே சொல்கிறார்.. “அஞ்சாறு வைப்பாட்டிகளை வைச்சு ஒப்பேத்திக்கிட்டிருக்கேன்..” என்று..! இதைவிட மதுரைக்காரர்களை வேறு எப்படியும் கேவலப்படுத்திவிட முடியாது..!

அதிலும் இன்னுமொரு கேவலம்.. காமெடி என்கிற பெயரில் ஊமையாக நடிக்கின்ற ஒருவரை அவ்வப்போது மட்டம் தட்டிப் பேசுவது.. படம் முழுக்க இந்தக் கொடுமை.. இப்போதுதான் ஒரு அளவுக்கு தமிழ்ச் சினிமாவில் மாற்றுத் திறனாளிகளையும், திருநங்கைகளையும் அடையாளப்படுத்தி வருகிறார்கள். இந்த நேரத்தில் இப்படிச் செய்யலாமா..?


கதாநாயகியாக பூங்கொடி. அமைதியான தோற்றத்திற்கு செம பார்ட்டி. அம்மணியிடம் வேறு எந்த நடிப்பையும் எதிர்பார்க்க வேண்டாம் என்று நினைத்துவிட்டார்கள். கோரிப்பாளையத்திலும் இதே போலத்தான்..! ஆனாலும் பாடல் காட்சிகளிலாவது கொஞ்சம் சிரிக்க வைத்தார்களே என்று ஆசுவாசப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்..! 

எப்படியாச்சும் ரசிகர்களை இழுக்க வேண்டுமே என்றெண்ணி சுஜா என்ற குத்தாட்ட நாயகியை வீட்டு ஓனராக்கி மஜா பாடல்களுக்கு செறிவூட்டியிருக்கிறார்கள். இடையில் வழக்கம்போல பிராமணப் பெண்களை கிண்டல் செய்வதையும் நிறுத்தவில்லை.. கூடவே இரட்டை அர்த்த வசனங்களையும் வைத்து சுள்ளான்களையும், குஞ்சுகளையும் திருப்திபடுத்தியிருக்கிறார்கள்..!

இப்படத்தின் பாடல்கள் கேட்கும்படியாக இருந்தது எனக்கு ஆச்சரியம்தான்.. கருவாப்பையா ஸ்டைலில் ஒரு பாடல் கேட்பதற்கும், காண்பதற்கும் நன்றாக இருந்தது..! இறுதியில் எண்ட் டைட்டில் காட்சியில் ஒலிக்கும் “சிரிச்சுப் பார்க்குறேன்.. பழகிப் பார்க்கிறேன்..” என்ற பாடலை காட்சிகளுக்குள்ளேயே வைத்திருக்கலாம்.. நன்றாக இருந்தது..! கடைசிவரையில் டைட்டிலை படிக்க வைக்க இவர்கள் எடுத்திருக்கும் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்..! சபேஷ் முரளிக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு திருப்பு முனைதான்..!

படத்தின் திரைக்கதையில் வேகம் இருந்தாலும், ஒட்டு மொத்தப் படத்தையும் புறந்தள்ளும் வகையில் கொஞ்சம்கூட லாஜிக்கே இல்லாத வகையில் கதையை அமைத்திருப்பதுதான் பெரும் சோகம்..!

கல்லூரி பெண்ணை கடத்தி வந்து தங்கள் வீட்டில் வைத்திருக்கிறார்களாம். அவர்களுடைய பெற்றோரை எங்கோ மறைத்து வைததிருக்கிறார்களாம்..! இந்தப் பெண்ணை படிக்க வைக்கிறார்களாம். கொஞ்சமாவது நம்பும்படியாகவாவது திரைக்கதை எழுதியிருக்கலாம். கடைசிவரையிலும் மதுரையில் போலீஸ் என்ற ஒரு பிரிவினர் என்னதான் செய்கிறார்கள் என்பதைக் காட்டவேயில்லை..!

எப்போது பார்த்தாலும் வீட்டில் யாராவது ஒருவரை கட்டி வைத்து உதைக்கிறார்கள்.. வாயில் வாழைப்பழத்தைத் திணித்து தண்ணீர் குடிக்க வைத்து அடிக்கிற அடியில் ரத்த வாந்தி எடுக்க வைக்கிறார்கள்..! இப்படி சித்ரவதையில் போலீஸையும் மிஞ்சிய ரவுடிகள்தான் மதுரையில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டத்தான் இந்த படமோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது..!


படம் பார்க்கும்போது இதற்கு முன் மதுரையை மையப்படுத்தி வந்த படங்களின் பல காட்சிகள் கண் முன்னே வருவதைத் தவிர்க்க முடியவில்லை..

படத்தில் கதாநாயகனைவிடவும் உருப்படியாக நடித்திருப்பவர் வில்லன் தாண்டவன்தான்..! ஆனாலும் இன்னும் ஒரு படத்தில் இதேபோல் வில்லனாக நடித்தால் திகட்டிவிடும்.. அண்ணன் மனைவிகளை, தம்பி மனைவிகளை இப்படித்தான் வீட்டில் அத்தனை பேரும் “வாங்கடி.. போங்கடி” என்று சொல்லி முகத்தில் சோற்றை வீசுவார்களோ..? இது என்ன டைப் கலாச்சாரம் என்று தெரியவில்லை.. இனிமேல்தான் விசாரிக்க வேண்டும்.. யாராவது தமிழர்கள்தான் சொல்ல வேண்டும்..!

பைத்தியம் பிடிக்கும் தம்பியாக தானும் நடித்திருக்கிறார் இயக்குநர் ரவிமரியா. ஒண்ணும் சொல்றதுக்கில்லை.. இன்னொரு வில்லனாக மூன்றே காட்சிகளில் வந்து போகிறார் வெயில் படத்தி்ன் வில்லன் கராத்தே வெங்கடேசன்..! இவரையாவது நன்கு பயன்படுத்திக் கொள்வதைப் போல் திரைக்கதையை மாற்றியிருக்கலாம்..!

சிங்கப்புலி வழக்கம்போல டைமிங்சென்ஸ் டயலாக்குகளை அள்ளி வீசுகிறார். ஆனாலும் பல இடங்களில் புரியவில்லை.. டயலாக்கே புரியாமல் கை தட்டுகிறார்கள் மக்கள்.. சிரிப்பு படம்ல்ல.. அதுதான்..!

இளவரசுவின் கட்டை விரல் துண்டாடப்படும் காட்சியில் அவரது தவிப்பும், அல்லக்கைகளின் அல்லாடலும், டென்ஷனும் பெரிதாக ரசிக்க வைத்தது..!

எல்லாவற்றையும்விட கிளைமாக்ஸில் வைக்கிறார்கள் பாருங்கள் ஒரு டிவிஸ்ட்டு.. படா தமாஷா கீதுப்பா.. அது நாள்வரையில் பைத்தியமாக இருந்த ரவிமரியா கார் ஆக்ஸிடெண்ட்டில் டக்கென்று குணமடைகிறாராம்.. பின்னிட்டாரு கதாசிரியர் ரவிமரியா..! அவார்டே கொடுக்கலாம்..!


பாலிவுட்டில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய தமிழர் நட்ராஜ். மதுரைக்காரர்..! பார்ப்பதற்கு லட்சணமாக இருப்பதால் தானே ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். இவருக்கேற்றாற்போன்ற தயாரிப்பாளர்கள் கிடைத்துவிட.. ரவி மரியாவின் கதை, திரைக்கதை, வசனத்தில் இப்படத்தை எடுத்து வெளியிட்டிருக்கிறார்..!

புதுமுக நடிகர் என்பதால் கூட்டம் தியேட்டருக்கு வராது என்பதையறிந்து யார், யாரையெல்லாம் சீன் காட்ட வைத்தால் விளம்பரம் செய்ய எளிது என்பதைக் கண்டறிந்து அவர்களையே நடிக்க வைத்திருக்கிறார்..!

எல்லாம் இருந்தும் என்ன புண்ணியம்..? கதையில் ஒரு நம்பகத்தன்மை இல்லாததாலும், சீரியஸாக இருக்க வேண்டிய காட்சிகளிலெல்லாம் காமெடியைத் திணித்து இது சீரியஸ் படமா? காமெடி படமா? என்கிற குழப்பத்தைக் கொண்டு வந்து திணித்துவிட்டதாலும் படம் மனதில் நிற்க மறுக்கிறது..

இந்தப் படத்தை இந்திக்கும் கொண்டு போகிறார்களாம்.. “இந்தி ‌‌ரீமேக்கில் ஜான் ஆபிரஹாம், தீபிகா படுகோன் நடிப்பதாகவும், படத்தை சு‌ஜித் சர்க்கார் இயக்கப் போகிறார். தெலுங்கு ரீமேக் உரிமையை தாணு வாங்கியிருக்கிறார். அதில் அல்லு அர்ஜூன் அல்லது பிரபாஸை நடிக்க வைக்க தாணு முடிவு செய்துள்ளதாக” ஹீரோ நட்ரா‌ஜ் தெ‌ரிவித்துள்ளார். இது தமிழ்ப் படத்தின் விளம்பரத்திற்காகத்தான் என்பது தெளிவு..! இருந்தாலும் இதனை அப்படியே தெலுங்கிலும், இந்தியிலும் எடுத்து தொலைந்து போவார்கள் என்று நான் நம்பவில்லை..

அவர்களாவது பிழைத்துப் போகட்டும்..!

மிளகா – பொழுது போவலைன்னா போவலாம்..!

டிப்ஸ் -1

கோலாகலமாக கேஸட் வெளியிட்டு விழாவையும், படத்தின் முன்னோட்ட விழாவையும் நடத்தியும் படம் போணியாகவில்லை. தியேட்டர்கள் கிடைப்பதில் அல்லாடத் துவங்க.. கடைசி நேரத்தில் கலைப்புலி தாணு கை கொடுத்திருக்கிறார்.. புது மாதிரியான ஒரு வியாபாரத்திற்கு அவருடன் கை கோர்த்திருக்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளர்கள்.

தாணு முன் நின்று இப்படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்து கொடுப்பார். அதற்கு குறிப்பிட்ட அளவுக்கு பணத்தை ஒவ்வொரு தியேட்டரில் இருந்தும் தாணு எடுத்துக் கொண்டு மிச்சப் பணத்தை தயாரிப்பாளருக்குக் கொடுத்துவிடுவார். இதுதான் பக்கா அக்ரிமெண்ட்டாம்..

தயாரிப்பாளர் இதற்கு ஒத்துக் கொண்டதால் தாணுவே அவசரம், அவசரமாக தனக்குத் தெரிந்த வழிகளில் தியேட்டர்களைப் பிடித்து படத்தை வெளியிட வழி செய்திருக்கிறார்..!

டிப்ஸ் -2 :

நான் நேற்று இரவு ஏவி.எம். ராஜேஸ்வரியில் பார்த்தேன்.. மொத்தம் 50 பேர் வந்திருப்பார்கள்.. ஏதோ பிட்டு படம் என்று சொல்லிவிட்டார்களோ என்னவோ எண்ணி 6 பெண்கள் மட்டுமே வந்திருந்தார்கள்..!

இதில் ஒருவர் ஏதோ ஒரு படத்தின் கதாநாயகி என்பதை ஸ்டில்களை பார்த்த ஞாபகத்தில் என் ஹைப்போதலாமஸ் சொன்னது..!

வரும்போது டிரைவருடன் மட்டும் தியேட்டருக்குள்ளே வந்தவர், இடைவேளையின்போது பெருத்த தொந்தியுடன் கூடிய ஒரு சினிமா பெருசுடன் ஒட்டி உரசிக் கொண்டு அமர்ந்திருந்தார். போகும்போது.. ஸாரி கவனிக்கவில்லை..!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: