கோட்டா சீனிவாசராவுக்கு எனது ஆறுதலும், வருத்தங்களும்..!

21-06-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேற்று மாலை அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டபோது சட்டென ஒரு நிமிடம் எனக்குள் தூக்கிவாரிப் போட்டது, “ஏண்டா முருகா.. அவருக்கு ஏன் இந்தக் கொடுமை..?” என்று..

அவ்வளவுதான்.. அடுத்த நிமிடத்தில் நாட்டில் தினம்தோறும் நடக்கின்ற சாலை விபத்துக்களில் அதுவும் ஒன்றாகி மனம் தன்னைத்தானே சமாதானமாக்கிக் கொள்ள, மனமும் வேறு வேலைகளில் ஈடுபட்டாகிவிட்டது.

ஆனால் நேற்றைய இரவில் ஜெமினி தொலைக்காட்சியில் உடைந்து போய் சுக்குச் சுக்கலான நிலையில் இருந்த எனது அபிமானத்துக்குரிய அந்த மனிதரைப் பார்த்தவுடனேயே இடம் மாறிய எனது மனம் இந்த நிமிடம்வரையிலும் அந்த நிகழ்வில் இருந்து வெளியில் வர மறுக்கிறது..

கோட்டா சீனிவாசராவ் என்கிற பெயரை தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து போய்விட முடியாது.. கம்பீரமான தோற்றம்.. கள்ளச் சிரிப்பு.. நொடிக்கொரு முறை மாறும் முக பாவனை.. வில்லனா.. நல்லவனா என்பதே தெரியாத வகையிலான நடிப்பு.. வில்லத்தனத்திலேயே நகைச்சுவையை கலந்து கொடுக்கும் சாமர்த்தியம்.. இப்படி எல்லாவற்றுக்கும் ஒரே நடிகராக அக்மார்க் முத்திரை குத்தப்பட்டு தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நபராக இருக்கிறார்.


இவருடைய ஒரே மகன் கோட்டா பிரசாத். வயது 39. திருமணமாகி இரண்டு பையன்கள் இருக்கிறார்கள். நேற்று தற்செயலாக மதிய விருந்துக்கு ஹோட்டலில் போய் சாப்பிட வேண்டும் என்று முடிவெடுத்து குடும்பத்துடன் கிளம்பியிருக்கிறார். மனைவி மற்றும் பிள்ளைகள் காரில் பின்னால் வர.. பிரசாத் தனக்கு மிகவும் பிடித்தமான தனது வெளிநாட்டு பைக்கை ஓட்டிச் சென்றிருக்கிறார்.

ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நரசிங்கி என்னும் இடத்திற்கு வரும்போது எமன் ஒரு லாரி உருவத்தில் வந்து பிரசாத்தின் பைக்கை தாக்கியிருக்கிறான். மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் புண்ணியமில்லை.. உயிரற்ற உடலாகத்தான் பிரசாத்தை வெளியில் கொண்டு வர முடிந்திருக்கிறது.


ஷூட்டிங்கிற்காக பெங்களூர் சென்றிருந்த கோட்டா சீனிவாசராவ் ஹைதராபாத்துக்கு அவசரமாக ஓடி வந்தும் உயிரற்ற தனது மகனைத்தான் பார்க்க முடிந்திருக்கிறது..

எத்தனையோ சினிமாக்களில் அவரும் நல்ல, பாசமான, உண்மையான அப்பாவாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். படம் பார்த்த ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறார். இன்றைக்கு தாங்க முடியாத ஒரு சோதனையை அவர் வெளிப்படுத்தியவிதம் அவர் மீது விவரிக்க முடியாத ஒரு ஈர்ப்பை வைத்திருந்த என்னை மாதிரியான சினிமா ரசிகர்களால் சட்டென்று ஜீரணிக்க முடியவில்லை.

1978-ல் இருந்து நடித்து வரும் கோட்டா சீனிவாசராவை எனது பால்ய வயதில் இருந்தோ அல்லது எப்போது தெலுங்குத் திரைப்படங்களை விரும்பி பார்க்கத் துவங்கினேனோ அப்போதிலிருந்தே ரசிக்கத் துவங்கிவிட்டேன். முப்பத்தைந்து வருடங்களாக இன்றுவரையிலும் அவரைப் பற்றிய ஒரு பிம்பம் என் மனதில் இருக்க.. இன்றைக்கு அந்த பிம்பம் உடைந்து போன சூழலில் என்னாலும் இதனை வெளியில் சொல்லாமல் இருக்க முடியவில்லை..

கோட்டா பிரசாத் தற்போதுதான் தனது தந்தை வழியில் நடிக்க வந்திருக்கிறார். சித்தம் என்கிற தெலுங்கு திரைப்படத்தில் ஜே.டி.சக்கரவர்த்தியின் இயக்கத்தில் ஜெகபதிபாபுவிற்கு வில்லனாக நடித்து தனது நடிப்பு கேரியரைத் துவக்கியிருக்கிறார். பின்பு தனது தந்தையுடனேயே ஒரு படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். தற்போது கைவசம் மூன்று திரைப்படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இதுநாள் வரையிலும் திரையுலகத்திற்குள் கால் வைக்காமல் தான் உண்டு, தனது கிரானைட் பிஸினஸ் உண்டு என்று இருந்தவர், கோட்டா சீனிவாசராவ் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது திரையுலக லைம் லைட்டிற்கு வர வேண்டிய கட்டாயமாகிவிட்டது.

முதல் படத்திலேயே அடையாளம் காணும் அளவுக்கு நடித்திருக்கும் கோட்டா பிரசாத்திற்கு அடுத்தடுத்து அழைப்புகள் வர.. அத்தனையிலும் கையெழுத்திட்டுவிட்டு காத்திருந்தவரைத்தான் எமன் கொள்ளை கொண்டு போயிருக்கிறான்.


அஞ்சலி செலுத்த வந்தவர்கள் முன் அழுகையை கட்டுப்படுத்த பல்லைக் கடித்துக் கொண்டு கோட்டா சீனிவாசராவ் பட்ட கஷ்டத்தை தொலைக்காட்சியில் பார்த்தபோது, இந்தக் கொடூரம் வேறு யாருக்கும் வரக்கூடாது என்று நினைக்கத் தோன்றுகிறது..

சோகத்தில் பெரும் சோகம், புத்திர சோகம் என்பார்கள். தான் உயிருடன் இருக்க தான் பெற்ற பிள்ளைக்கு கொள்ளி வைப்பது என்பது மிகப் பெரும் கொடுமை என்பார்கள்.. தனக்கு மிகவும் நெருக்கமான பாபுமோகனையும், பிரம்மானந்தத்தையும் பார்த்தவுடன் கட்டுப்படுத்த முடியாமல் மீறிய அவரது அழுகையை பார்த்து என் கண்களும் சட்டென்று கலங்கிவிட்டன.

பைக் ஓட்டுவதில் பெரும் ஆர்வமுள்ள பிரசாத் ஆசையாக அந்த பைக்கில் அமர்ந்த நிலையில் எடுத்திருந்த புகைப்படத்தை துக்கம் விசாரிக்க வந்தவர்களிடத்திலெல்லாம் காட்டியபடியே கண் கலங்கிய ஒரு தந்தையின் பரிதவிப்பை இன்றைக்கு சீனிவாசராவ் மூலமாக நான் பார்த்தேன்..

“எங்க அப்பா கூடவே அவருக்கு சரிக்கு சமமான எதிர் வில்லனா நடிக்கணும்.. அதுதான் என்னோட திரையுலக லட்சியம்..” என்று கடைசியாக பேட்டியளித்திருக்கும் பிரசாத்தின் கனவு நிராசையானது சோகம்தான்..
இறந்தவர் யாராக இருந்தால்தான் என்ன..? யார் வீட்டில் நடந்தாலும் அது சாவுதானே..?

ஆனாலும் தந்தையர் தினத்தன்றே.. ஒரு தந்தைக்கு இந்தக் கொடுமை நடந்திருக்கக் கூடாதுதான்.. அவரது ஆன்மா சாந்தியாகட்டும்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: