டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு – சூளைமேட்டில் அன்றைக்கு நடந்தது என்ன..?

17-06-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்கிற குரல்கள் ஆக்ரோஷமாக எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் தலைவரான டக்ளஸ், தேவானந்தா தற்போது இலங்கையில் ராஜபக்சே அமைச்சரவையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் துறை மந்திரியாக இருக்கிறார்.


கடந்த வாரம் டெல்லி வந்த ராஜபக்சேவுக்கு இந்திய  அரசியன் பாரம்பரிய மரியாதையும், விருந்தும் கொடுத்து கெளரவித்தனர் ஜனாதிபதியும், பிரதமரும். ராஜபக்சேவுக்கு கொடுக்கப்பட்ட அதே வரவேற்பும், மரியாதையும் அவருடன் வந்திருந்த டக்ளஸ் தேவானந்தாவுக்கும் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் கொலை, கொலை மிரட்டல், ஆள் கடத்தல் வழக்குகளில் தமிழகக் காவல்துறையில் தேடப்படும் குற்றவாளியாகக் கருதப்படும் டக்ளஸூக்கு மத்திய அரசின் மரியாதையா..? அவரை கைது செய்து தமிழகக் காவல்துறையிடம் ஒப்படைக்க மத்திய அரசு முன் வர வேண்டும் என்று கருத்து உருவாக.. விவகாரம் பூதாகரமானது.

அதே சமயம், “டக்ளஸ் தேவானந்தா மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார் டக்ளஸ். இந்தத் தகவலை டெல்லி போலீஸாருக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம்..” என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவிக்க.. இந்த விவகாரம் மேலும் பரபரப்பானது.

இந்நிலையில் தங்களின் இந்தியப் பயணத்தை மிக ஜாலியாக முடித்துக் கொண்டு ஹாயாக இலங்கைக்குச் சென்றுவிட்டனர் ராஜபக்சேவும், டக்ளஸூம்.

தமிழகத்தின் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் மீது மிக வலிமையாக இருப்பது. இளைஞர் திருநாவுக்கரசை சுட்டுக் கொன்ற வழக்கு.

1986-ல் சென்னை சூளைமேட்டில் முத்துஇருளாண்டி காலனியில் நடந்த இந்த கொடூரம் அப்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தக் கொலை வழக்கு உட்பட நிலுவையில் உள்ள வழக்குகளின்படி டக்ளஸை கைது செய்ய தமிழகத்திற்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்கிற கருத்துக்கள் எதிரொலிக்கும் நிலையில் “அப்போது நடந்தது என்ன..?” என்பதை அறிய முத்து இருளாண்டி காலனிக்குச் சென்றோம்.

திருநாவுக்கரசு பற்றி அங்கேயிருந்த பொதுமக்களிடம் விசாரித்தபோது, “மறக்கக் கூடிய சம்பவமா அது..? மிக கொடூரமாக நடந்த துப்பாக்கிச் சூடு. சினிமாவுல கூட பார்த்திருக்க மாட்டீங்க.. அப்படி இருந்தது அன்னிக்கு..” என்ற காலனி மக்கள், “திருநாவுக்கரசுவின் அப்பா, அம்மால்லாம் இறந்து போயிட்டாங்க. அவரோட அண்ணன் நடராஜன் குடும்பம் இங்கதான் இருக்கு. அவரைப் போய் பாருங்க..” என்றனர்.

தனது மனைவி ரத்னாவுடன் ஒண்டுக் குடும்பத்தில் வசித்துக் கொண்டிருக்கிறார் நடராஜன். அவரைச் சந்தித்து திருநாவுக்கரசு பற்றி பேசித் துவங்கியதும் அப்படியே சோகத்தில் மூழ்கிவிட்டார் நடராஜன்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “இலங்கையிலும் சரி.. இங்கேயும் சரி.. தமிழன் உயிருன்னா அவங்களுக்கு கேவலமா போயிருச்சு. இந்த 24 வருஷத்துல ஒரு முறைகூட போலீஸ்காரங்க இந்த விஷயத்தைப் பத்தி எங்ககிட்ட விசாரிக்கவே இல்லைங்க..” என்று ஆதங்கப்பட்டார். அப்போது அவரது முகத்தில் கடந்த கால சம்பவத்தை நினைத்து ஆத்திரமும், கோபமும் கொப்பளித்தது.

மீண்டும் ஒரு முறை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசிய நடராஜன், “சின்ன வயசிலேயே எங்கப்பா செத்துட்டாரு. எங்கம்மாதான் எங்களை வளர்த்தாங்க. அவங்களும் என் தம்பி திருநாவுக்கரசு கொல்லப்பட்ட மறு வருஷம் இறந்துட்டாங்க. திருநாவுக்கரசுக்கு நேர் மூத்தவன் நான். எங்களுக்கு 1 அக்கா. 4 தங்கைகள். மொத்தம் ஏழு பேர் நாங்க.

இந்தக் காலனி முழுக்க அரிஜன மக்கள்தான். எங்க காலனிலேயே என் தம்பி திருநாவுக்கரசுதான் அப்போ அதிகம் படிச்சவன். எம்.ஏ. பட்டதாரி. அதனால அவனுக்கு ஏக மரியாதை. அவனும் மக்களுக்கு ஏதேனும் பிரச்சினைன்னா முன்னால வந்து நிப்பான். பொது சேவையைத்தான் தனது உயிராக நினைச்சான்.

இந்தப் பகுதி மக்களுக்காக ‘உடற்பயிற்சிக் கழகம்’னு ஆரம்பிச்சு சேவை செஞ்சான். இந்த ஏரியா முனையில இப்போ கார்ப்பரேஷன் ஸ்கூல் ஒண்ணு இருக்கு. 1986-ல அந்த இடம் காலியா கெடந்துச்சு. அந்த இடத்துல ஒரு ஜிம் ரெடி பண்ணினான். எங்க காலனி மக்கள் மட்டுமல்லாது இதனையொட்டியுள்ள திருவள்ளுவர்புரம் மக்களும் ஜிம்முக்கு வந்து உடற்பயிற்சி செய்வாங்க.

இப்போ இருக்குற மாதிரி அன்னிக்கு வீடுகளெல்லாம் இல்ல. ஒரே ஒரு மாடிதான் வீட்டுக்கு. இந்த ஏரியாவுல ஒரு வீட்ல 10 இளைஞர்கள் தங்கியிருந்தாங்க. 25, 26 வயசு அவங்களுக்கு இருக்கும்.

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான பத்மநாபா இயக்கத்தை(அப்போது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.) சேர்ந்த இளைஞர்கள்ன்னு அரசல்புரசலா எல்லாருக்கும் தெரியும். இந்த குரூப்புக்கு டக்ளஸ்தான் லீடர் மாதிரி. ஆனா எல்லாருமே அவரைப் பேரைச் சொல்லியே கூப்பிடுவாங்க. காலையிலேயும், சாயந்தரமும் திருநாவுக்கரசோட ஜிம்முலதான் உடற்பயிற்சி செய்வாங்க. ராத்திரியானா தண்ணியடிச்சிட்டு ஒரே கும்மாளமாக இருக்கும். இலங்கையில பிரச்சினைங்கிறதால இங்க வந்து தங்கியிருக்காங்கன்னு நாங்கள்லாம் நினைச்சோம். ஆனா அந்தப் படுபாவிங்க.. என் தம்பியை சுட்டுக் கொல்லுவாங்கன்னு தெரியாமப் போச்சு..

1986 நவம்பர் 1-ம் தேதி. அன்னிக்கு தீபாவளி. ஊரே பட்டாசு வெடிச்சு கொண்டாடிக்கிட்டு இருந்துச்சு. மதியம் ரெண்டரை, மூணு மணி இருக்கும். தீபாவளிங்கிறதால அந்த 10 பேரும் இங்குள்ள சாராயக் கடையில நல்லா குடிச்சிட்டு ஒரு பொட்டிக் கடையில நின்னு முறுக்கும், பழமும் வாங்கித் துன்னுட்டு காசு கொடுக்காம போகப் பார்த்திருக்காங்க.

‘காசு கொடுங்க’ன்னு கடைக்காரர் கேட்க.. அவங்களுக்குள்ளே வாய்த் தகராறு. அந்த கடைக்காரரை அவங்க அடிக்க.. அப்போ அங்க நின்னுக்கிட்டு இருந்த எங்க காலனி ஆள் ஒருத்தர், கடைக்காரருக்கு சப்போர்ட் பண்ணி கடுமையா பேசியிருக்காரு. உடனே அவனுங்க எங்க ஆளைப் போட்டு கண்ணு மூக்கு தெரியாம தாக்க.. அவரோட அலறல் சப்தம் கேட்டு காலனி மக்கள் நாங்க எல்லாம் ஓடினோம்.

காலனி மக்கள் ஓடி வர்றதை பார்த்து அவனுங்க வீட்டுக்குள்ளே ஓடிப் போய் ஆளாளுக்கு தூப்பாக்கியைத் தூக்கிட்டு வந்துட்டானுங்க. டக்ளஸ்ங்கிற ஆளோட கையில ஏ.கே.47 துப்பாக்கி.

‘எவனாவது நெருங்கி வந்தீங்க.. சுட்டுப் பொசுக்கிருவேன்’னு காட்டுக் கத்துக் கத்திக்கிட்டே வானத்தை நோக்கி டக்ளஸூம் இன்னும் ரெண்டு, மூணு பேரும் படபடன்னு துப்பாக்கியால சுட்டாங்க. இதனால, மக்களெல்லாம் அப்படியே நின்னுக்கிட்டு கற்களைத் தூக்கி அவங்க மேல வீசினோம்.

அதுக்குள்ளே ‘துப்பாக்கியால சுடுறானுங்க.. சுடுறானுங்க’ன்னு மக்கள் கூச்சல் போட.. அப்போ வீட்ல சாப்பிட்டுக்கிட்டிருந்த என் தம்பி திருநாவுக்கரசுவும், மச்சான் குருமூர்த்தியும் வெளில ஓடி வந்தாங்க. டக்ளஸ் கும்பல் துப்பாக்கியை வைச்சுக்கிட்டு வீதியில அங்குமிங்கும் நடந்துக்கிட்டே ஆக்ரோஷமா குரல் கொடுத்ததைக் கேட்டுக்கிட்டே ‘சுட்டுடாதீங்க ஸார்.. சுடாதீங்க ஸார்’ன்னு அவர்களை நோக்கி என் தம்பி போனான்.

‘போகாத தம்பி.. போகாத தம்பி’ன்னு காலனி மக்கள் சொல்ல.. அதைப் பொருட்படுத்தாம அவர்களைச் சமாதானப்படுத்துறேன்னு திருநாவுக்கரசு முன்னேற.. இதனால ஆத்திரமடைஞ்ச டக்ளஸ், என் தம்பியைப் பார்த்து படபடவென சுட.. நாலஞ்சு குண்டுகள் திருநாவுக்கரசு நெஞ்சைத் துளைத்தது. அதுல ஒரு குண்டு அவன் நெஞ்சைத் துளைச்சு வெளியேறி பக்கத்துல இருந்த சுவத்தைத் தூக்கியது. அந்தச் சுவத்துல அரை அடிக்குப் பள்ளம். அப்படின்னா அந்தத் துப்பாக்கியின் வேகம் எவ்வளவு இருந்திருக்கும்னு பார்த்துக்குங்க..

துப்பாக்கிக் குண்டுகள் பட்டு அப்படியே கீழே விழுந்து உயிருக்குப் போராடினான் என் தம்பி. டக்ளஸின் வெறிச்செயலைக் கண்டு கொதிச்சுப் போன எங்க மக்கள், ‘டேய்.. டேய்.. டேய்..’ன்னு கத்திக்கிட்டே அவனுங்களை நோக்கி ஓடினோம். இதைப் பார்த்து மீண்டும் சுட்டது அந்தக் கும்பல். இதில் என் மைத்துனர் குருமூர்த்திக்கும் ரவி என்கிற இளைஞனுக்கும் குண்டடிபட்டது.

அவனுங்க துப்பாக்கியைக் காட்டி மிரட்ட காலனி மக்கள் எல்லாம் கற்களை வீசியும், டயர்களை கொழுத்தியும் அவனுங்க மீது வீசினோம். எரியாவே களவரமானது. பயந்த சுபாவம் உள்ள மக்களெல்லாம் வீட்டுக்குள்ளே போய் கதவைச் சாத்தி அடைச்சுக்கிட்டாங்க. உடனே அவனுங்க வீட்டுக்குள்ளே போய் ஹெல்மட்டையும் ராணுவ உடையையும் மாட்டிக்கிட்டு மொட்டை மாடிக்கு ஏறிட்டானுங்க. ஒவ்வொரு வீட்டு மொட்டை, மொட்டை மாடியா தாவிக்கிட்டே நடை போட்டானுங்க..

கையில இருந்த துப்பாக்கியைத் தூக்கித் தூக்கி வானத்துல சுட்டு மிரட்டுனாங்க.. அவனுங்க வீட்டுக்குள்ளே ஓடிய சமயத்தில் சட்டென ஓடிப் போய் என் தம்பியைத் தூக்கிட்டு வந்து ஆட்டோவில் ஏத்திக்குட்டு பறந்தோம். ஆனா.. போற வழியிலேயே என் தம்பி உயிர் போயிருச்சு..” என்று சொல்லி கண் கலங்கினார்.

மேலும் தொடர்ந்த நடராஜன், “மொட்டை மாடியில் நின்னுக்கிட்டு துப்பாக்கியால் மக்களை மிரட்டிக் கொண்டிருக்க.. ஏரியாவே பதட்டமாயிருச்சு. இந்தச் சம்பவத்தை அறிந்து ஒரு வேனில் போலீஸ்காரங்க வர.. வேனில் இருந்த அவங்களை இறங்கவிடாமல் வேனை நோக்கி சராமரியா சுட்டாங்க. வேன் அப்படியே யூ டர்ன் எடுத்துக்கிட்டுப் பறந்தது.

கொஞ்ச நேரத்துல அப்போதைய சட்டம் ஒழுங்கு ஐ.ஜி.ஸ்ரீபால், போலீஸ்காரங்களோட வந்து இறங்கினார். ஏரியாவை முழுக்க தங்கள் கஸ்டடியில் எடுத்துக் கொண்டது போலீஸ். சரணடையுமாறு எவ்வளவோ கெஞ்சியும் அந்த கொலைகாரக் கும்பல் ஒப்புக் கொள்ளவில்லை. போலீஸ் கமிஷனர் தேவாரம் இங்கு வர வேண்டும் என்று அவர்கள் சொல்ல.. அவரும் வந்தார். அதன் பிறகு அவரிடம்தான் அந்த 10 பேரும் சரணடைந்தார்கள்.

டக்ளஸ் உட்பட 10 பேர் மீதும் கொலை வழக்குப் போட்டது போலீஸ். ஆனா ஒரு முறைகூட எங்ககிட்ட விசாரிச்சு, சாட்சிகளை சேர்த்து அவனுங்களுக்குத் தண்டனை வாங்கித் தர போலீஸ் முயற்சி எடுக்கவே இல்லை.. என் தம்பியை சுட்டுக் கொன்னதுமில்லாம மக்களைக் கொல்லவும் துணிஞ்சிருக்கானுங்க..

ஆனா அவனுங்களுக்குத் தண்டனையே இல்லை. தமிழன் உயிரென்ன இவனுங்களுக்கு மயிரா..? இலங்கையிலும் சுட்டுக் கொல்றானுங்க.. இங்கேயும் சுட்டுக் கொல்றானுங்க.. இந்தச் சம்பவம் நடந்து 24 வருஷமாச்சு. தேடப்படுற குற்றவாளின்னு சொல்லுது போலீஸ். ஆனா அந்த டக்ளஸ் ராஜமரியாதையோட இந்தியாவுக்கு வர்றான். பிரதமரோட விருந்து சாப்பிடுறான். அவனை கைது பண்ண எந்த நடவடிக்கையும் எடுக்கலை. என் தம்பியோட சாவுக்கு இந்தியாவுல நீதி கிடைக்காதா?” என்றார் கதறியபடியே..

நடராஜனின் மனைவியும், திருநாவுக்கரசின் அண்ணியுமான ரத்னா, “என் கொழுந்தனார் உயிரோட இருந்திருந்தா எங்க காலனியும், எங்க குடும்பமும் எவ்வளவோ வளர்ச்சி அடைஞ்சிருக்கும். அன்னைக்கு நடந்த சம்பவத்தை இப்போ நினைச்சாலும் குலை நடுங்குது. மக்களை மிரட்டி, ஜனங்க மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு கொலைகாரன் வெளிப்படையா உயிரோடு இருக்கான்னு தெரிஞ்சும் அரசாங்கம் கம்முன்னு இருக்குன்னா செத்துப் போனது ஒரு ஏழை. அதுவும் தாழ்த்தப்பட்டவன்கிறதாலதானே..? தாழ்த்தப்பட்டவங்க சுட்டுக் கொல்லப்பட்டா இந்தியாவுல நீதி கிடைக்காதா..? இலங்கையில் தமிழர்களைச் சுட்டுக் கொன்ற ராஜபக்சேவுக்கும், தமிழகத்தில் தமிழனைச் சுட்டுக் கொன்ன டக்ளஸூக்கும் விருந்து கொடுக்கிற இந்திய அரசாங்கமே.. எங்களுக்கு நீதி கிடைக்காதா..? அந்தக் குற்றவாளியை தூக்குல போட்டாத்தான் என் கொழுந்தன் ஆன்மா சாந்தியடையும்..” என்று குமுறினார்.

டக்ளஸ் கும்பலால் குண்டடிபட்டவரும், திருநாவுக்கரசுவின் தங்கை கணவருமான குருமூர்த்தி, “என் கை விரலில் குண்டுபட்டதால், ஓட்டை மட்டுமே விழுந்துச்சு. என் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனா என் மச்சினன் மாதிரியே ரவிங்கிற ஒருத்தருக்கும் குண்டடிபட்டுச்சு. அவனையும் தூக்கிக்கிட்டு ஆஸ்பிட்டலுக்கு போனாங்க. கே.எம்.சி.ல ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு பிறகு ஸ்டான்லியில் அட்மிட் பண்ணினாங்க. ஒரு நாள் அந்த ரவி உயிரோட இருந்தான். மறுநாள் செத்துட்டான். ஹாஸ்பிட்டலில் உயிர் போனதால இந்த மரணத்தை மறைச்சிட்டாங்க..” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்த குருமூர்த்தி, “இந்த கேஸ் ஹைகோர்ட்ல வந்தப்போ முதல் ஹியரிங்குக்கு என்னையும் அழைச்சுக்கிட்டு போனாங்க. அப்போ டக்ளஸ், ரமேஷ், ராஜன், முரளின்னு 10 பேரை நிறுத்தனாங்க.. அவ்வளவுதான்.. ரெண்டாவது ஹியரிங்கிற்கு போனப்போ அதுல 2 பேரை காணோம். அவங்க செத்துப் போயிட்டதா சொன்னாங்க. அப்புறம் 3-வது ஹியரிங்ல 3 பேர் செத்துப் போயிட்டதா சொன்னாங்க. 4-வது ஹியரிங் வந்தப்போ, ‘எல்லோருமே செத்துப் போயாச்சு.. கேஸை மூடிட்டோம். இனிமே நீங்க வரத் தேவையில்லை’ன்னு அரசு வக்கீல் சொன்னாரு.  

அதுக்குப் பிறகு அந்த வழக்கு பத்தின நியூஸே வரலை. ஆனா இப்போ திடீரென டக்ளஸ் இந்தியாவுக்கு வரவும்தான் எங்களுக்கு அந்த கொலைகாரன் உயிரோட இருக்கிறதே தெரியுது. இவ்வளவு காலமும் உயிரோடுதான் இருந்திருக்கிறான். இலங்கையில மந்திரியாவும் இருக்கான். தேடப்படும் குற்றவாளின்னு இப்போ அறிவிக்கிற போலீஸ்.. இவ்வளவு காலமும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தது..? என் மச்சான் சாவுக்கு நீதி கேட்க தமிழக மக்கள்தான் உதவணும்..” என்றார்.

இந்த நிலையில் ‘தமிழக போலீஸாரால் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் கைது செய்யப்பட வேண்டும்’ என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி.

அப்போது டெல்லியில் இருந்த டக்ளஸ், “1987-ல் நடந்த இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி எனக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டது” என்றார்.

இது பற்றி வக்கீல் புகழேந்தியிடம் பேசியபோது, “1987-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ‘இலங்கையில் போராளிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெற வேண்டும். அந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்’ என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர.. தமிழகத்தில் நடத்தப்பட்ட குற்றச் செயல்கள் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.

மேலும் திருநாவுக்கரசை டக்ளஸ் சுட்டுக் கொன்றது 1986-ல். ஒப்பந்தம் கையெழுத்தானது 1987-ல். அடுத்து டக்ளஸ் மீது ஆள் கடத்தல், கொலை மிரட்டல் வழக்கு 1988-1989-களில் போடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்திற்குப் பிறகும் இவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதால் ஒப்பந்தத்தைக் காட்டி டக்ளஸ் தப்பிக்கவே முடியாது.

போலீஸாரால் தேடப்படும் ஒரு குற்றவாளி இலங்கை அரசில் மந்திரியாக இருப்பதும், இந்தியாவுக்கு சுதந்திரமாக வந்து போவதும் கண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால்.. இந்தியச் சட்டத்திற்கு தலைக்குனிவையே ஏற்படுத்தும்..” என்றார்.

இதே நேரத்தில், இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவானதில் முக்கியப் பங்காற்றியவரும் இப்போது தே.மு.தி.க. கட்சியின் அவைத் தலைவருமாகவும் இருக்கும் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இது பற்றி அளித்துள்ள பேட்டி இது.

கேள்வி : இந்திய இலங்கை அரசுகள் செய்து கொண்டு ஒப்பந்தத்தின்படி டக்ளஸுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது சரியா..?

பண்ருட்டி பதில் : “1987-ல் இந்திய இலங்கை அரசுகள் உடன்பாடு செய்து கொண்டபோது தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆரால் அனுப்பி வைக்கப்பட்டு அந்த நிகழ்வில் பங்கு கொண்டவன் நான். டக்ளஸ் சொல்வதுபோல அவர் செய்த குற்றங்கள் மன்னிக்கப்படவில்லை. அத்தகைய பிரிவு எதுவும் அந்த ஒப்பந்தத்தில் இல்லை. போராளிக் குழுக்கள் முன் வந்தால் அவர்கள் ஆயுதங்களை ஒப்படைக்க மட்டுமே அதில் ஒரு ஷரத்தில் வழி வகை செய்யப்பட்டது. தனிப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டால் அதற்குச் சம்பந்தப்பட்டவர்கள்தான் பொறுப்பு.

டக்ளஸை பொறுத்தவரை சென்னை சூளைமேடு பகுதியில் சட்டவிரோதமாகத் துப்பாக்கியால் ஒருவரைச் சுட்டுக் கொன்றார். அதில் நான்கு பேர் காயம் அடைந்தனர். இதில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்றுவரை தேடப்படும் குற்றவாளிதான். எந்த மன்னிப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை.”

கேள்வி : டக்ளஸ் உங்களை அந்தச் சமயத்தில் சந்தித்தாரா..?

பண்ருட்டி பதில் : “இப்போது இலங்கையில் அமைச்சராக இருக்கும் அவர் அப்போது பெரிய ஆள் இல்லை. போராளிக் குழுக்களின் சார்பில் பத்மநாபா, முகுந்தன், சிறீசபாரத்தினம், பாலகுமார், பிரபாகரன், பாலசிங்கம் போன்றவர்கள்தான் எம்.ஜி.ஆரை சந்திக்க வருவார்கள். நான் உடன் இருப்பேன்.

1980-களின் கடைசியில் ஒரு முறை டக்ளஸ் என்னைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து ‘யாழ்ப்பாணம் சென்று விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்த நிதியுதவி தாருங்கள்’ என்று கேட்டார். நான் திருப்பியனுப்பிவிட்டேன். அதைத் தவிர எப்போதும் அவர் என்னைச் சந்தித்ததில்லை.”

கேள்வி : டக்ளஸ் மீதான வழக்குகள் பற்றி, பத்திரிகை மூலம்தான் தெரிந்து கொண்டேன் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளாரே..?

பண்ருட்டி பதில் : “சட்டம், ஒழுங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் என்றாலும், தமிழகத்திலும் மத்திய உளவுத்துறை செயல்படுகிறது. டக்ளஸ் பற்றி அவர்களுக்குத் தெரியாமல் இருக்க நியாயம் இல்லை. இவரைப் போல யார் வெளிநாட்டில் இருந்து வந்தாலும் மத்தியஉளவுத்துறை அவர்களைக் குறித்து அறிக்கை அளிப்பது வழக்கம். பார்வதி அம்மாளுக்கு முதலில் விசா கொடுத்துவிட்டு உளவுத் துறை கூறியதன் பேரில்தானே பின்னர் திருப்பியனுப்பினார்கள். எனவே உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பேச்சு நம்பத் தகுந்ததாக இல்லை.

போபர்ஸ் ஊழல் வழக்கு குவாத்ரோச்சி, போபால் விஷ வாயு கசிவு வழக்கு ஆண்டர்சன் என அரசுக்கு வேண்டியவர்கள் எத்தகைய தவறு செய்தாலும் அவர்களை வரவேற்பதும், வேண்டாதவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் தொல்லை கொடுப்பதும்தான் இங்கே நடைமுறையாக இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் இது தொடர்பான வழக்கு கடந்த திங்கட்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து மத்திய, மாநில அரசுகள் தங்களது நிலையைத் தெரிவிக்க வேண்டுமென்று கூறி வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

நன்றி : நக்கீரன் வார இதழ் – ஜூன் 16-18, 2010

 
ஜூனியர் விகடன் – 20-06-2010

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: