இப்படியும் ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்..!

12-06-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேற்று தற்செயலாக நான் படிக்க நேர்ந்த ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

இதுதான் அந்தச் செய்தி..

1954-ம் வருடம். குடியாத்தம் இடைத்தேர்தலில் தலைவர் காமராஜர் போட்டியிட்டார். அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டு மக்கள் அங்கீகாரத்திற்காக இந்தத் தேர்தலைச் சந்தித்தார். கம்யூனிஸ்ட் கட்சி அவரை எதிர்த்து நின்றது. தமிழ்நாட்டில் மற்ற எல்லாக் கட்சிகளும் அவரை ஆதரித்தன.


சொல்லப் போனால் குடியாத்தத்துக்கும், காமராஜருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. “அங்கே நிற்க வேண்டாம்.. அது உங்களுக்குப் பாதுகாப்பான தொகுதியில்லை..” என்று பலரும் அவரைப் பயமுறுத்தினார்கள். “நீங்கள் விருதுநகர்க்காரர். அந்த வட்டாரத்திலேயே ஏதாவது ஒரு தொகுதியில் நிற்பதுதான் உசிதம்..” என்றனர்.

தலைவர் அவர்களது விவாதத்தை மறுத்துவிட்டார். “நான் தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர். எல்லாப் பகுதி மக்களும் என்னை ஏற்றுக் கொள்கிறார்களா என்பது தெரிய வேண்டும். முடிவு எப்படியிருந்தாலும் பரவாயில்லை. எனக்காக ஒரு தொகுதியைக் காலி பண்ணச் சொல்வது முறையில்லை. இடைத்தேர்தல் வந்திருக்கிற தொகுதியில் நிற்கிறதுதான் நியாயம்..” என்று கூறிவிட்டார்.

தேர்தலில் கடுமையாக வேலை செய்தார். கிராமம், கிராமமாகப் போனார். குடிசைகளிலெல்லாம்கூட உட்கார்ந்து மக்களிடம் பேசினார். திறந்த ஜீப் ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் நின்று கொண்டே தெருக்களில் ஊர்வலமாக வந்தார். அந்த ஜீப்பில் அவரோடு நான் நிரந்தரமாக உட்கார்ந்திருப்பேன். அரசாங்கத்தின் பாதுகாப்பு அதிகாரி என்கிற முறையில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் என்னிடம் அன்பாயிருப்பார் தலைவர். “கிருஷ்ணன் ஏறிட்டானா?” என்று கேட்ட பிறகே காரை எடுக்கச் சொல்வார். அந்தக் காரில் பெரும்பாலும் திருவண்ணாமலை அண்ணாமலைப் பிள்ளை இருப்பார். இவர் காமராஜரின் மிக நெருங்கிய நண்பர்.

ஒரு நாள் பகல் பொழுது.. உச்சிவேளை.. திறந்த ஜீப்பில் தலைவர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். ஒரு திருப்பத்தில் ஜீப் குலுங்கியபோது மேலிருந்த கம்பி குத்தியதில் பின்னால் இருந்த என் தலையில் அடிபட்ட ரத்தம் கொட்டியது.

தலைவரின் பிரச்சாரம் தடைபட்டுவிடக் கூடாதே என்னும் கவலையில் நான் சமாளித்துக் கொண்டு ரத்தத்தைத் துடைத்துக் கொண்டிருந்தேன். வழி நெடுக கூடியிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டு வந்த தலைவர், ஒரு கட்டத்தில் என் தலையில் இருந்து வடிந்து கொண்டிருந்த ரத்தத்தைப் பார்த்துவிட்டார்.

“டேய் என்னாச்சு உனக்கு..? என்னது ரத்தம்?” என்று அதிர்ந்து போய் கேட்டார். “ஒண்ணுமில்லய்யா.. ஒண்ணுமில்ல..” என்றேன். “என்னா ஒண்ணுமில்லன்றேன்..? இவ்வளவு ரத்தம் கொட்டுது.. மூளையிருக்கா உனக்கு..? என்ன அண்ணாமலை நீயுமா பார்த்துக்கிட்டு வர்ற..? நிறுத்து காரை.. உடனே இவனை ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு போ..” என்று சத்தம் போட்டார்.

எங்களை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு அவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். மருத்துவமனையில் எனக்குத் தலையில் கட்டுப் போட்டு  வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தனர். குடியாத்தத்தில் தலைவர் தங்குவதற்காக ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்திருந்தனர். அந்த வீட்டில் என்னை ஒரு கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அண்ணாமலைப் பிள்ளை மீண்டும் தலைவரிடம் போய்விட்டார்.

அன்று பகல் முழுக்கப் பிரச்சாரத்தில் இடையிடையே அடிக்கடி என்னைப் பற்றிக் கேட்டுக் கொண்டேயிருந்தாராம் தலைவர். “அண்ணாமலை.. கிருஷ்ணனுக்கு சாப்பாடு ஏற்பாடு பண்ணுனியா..? மருந்து, மாத்திரையெல்லாம் வாங்கிக் கொடுத்தியா..?” என்று திரும்பத் திரும்பக் கேட்டாராம்.

இரவு பதினோறு மணியிருக்கும். தலைவர் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். நான் வீட்டு வாசலில் இருந்த மரத்தடியில் காற்றுக்காகக் கயிற்றுக் கட்டிலைப் போட்டு படுத்திருந்தேன். நஏராக என்னிடம் வந்தார் தலைவர். என் தோள் மீது கையை வைத்து மிகுந்த வாஞ்சாயோடு, “என்ன கிருஷ்ணா.. இப்போ வலி எப்படியிருக்கு..? சாப்பிட்டியா..?” என்று விசாரித்துவிட்டுத்தான் வீட்டுக்குள் போனார்.

கட்சிக்காரர்கள் ஏராளமாய் வந்திருந்தனர். அவர்கள் எல்லாருக்கும் மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிச் சொல்லியனுப்பிவிட்டு பன்னிரெண்டு மணி அளவில் படுக்கப் போனார் தலைவர். நானும் கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டேன்.

நல்ல தூக்கத்தில் இருந்தபோது என்னை, “டேய் கிருஷ்ணா.. எந்திரி.. எந்திரி..” என்று என்னைத் தட்டி எழுப்பினார் தலைவர். தலைவரின் குரல் கேட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தேன். “வானம் என்னமா மின்னிக்கிட்டிருக்கு..? பயங்கரமா இடி இடிக்குது.. மழை கொட்டப் போகுதுன்னேன்.. பிடி.. பிடி.. கட்டிலை அந்தப் பக்கம் பிடி.. உள்ள வந்து படு.. வா..” என்று பரபரப்போடு சொன்னபடியே நான் படுத்திருந்த கட்டிலின் ஒரு பக்கத்தைப் பிடித்துத் தூக்கப் போனார்.

நான் ஆடிப் போனேன். “ஐயா நீங்க அதெல்லாம் செய்யக் கூடாதுய்யா.. நான் தூக்கிட்டு வரேன்.. நீங்க போங்கய்யா..” என்று பதறினேன். “டேய் கிறுக்கா.. மழை வந்துக்கிட்டிருக்கு.. உனக்கு ஏற்கெனவே தலைல அடிபட்டிருக்கு.. ஈரம் பட்டுச்சுன்னா ரொம்ப ஓபத்திரவமாயிரும். மொதல்ல கட்டிலைப் பிடிண்ணே..” என்று என்னை அதட்டினார்.. வேறு வழியில்லாமல் அவரும், நானுமாய்க் கட்டிலைப் பிடித்து உள்ளே கொண்டு வந்து போட்டோம்.

நான் உள்ளே வந்து படுப்பதற்கும், மழை பெய்வதற்கும் மிகச் சரியாயிருந்தது. தலைவர் உரிய நேரத்தில் என்னை வந்து உள்ளே அழைத்திருக்காவிட்டால், நான் நனைந்திருப்பேன். இது பெரிய விஷயமில்லை.. வாசலில் தூங்கிக் கொண்டிருந்த செக்யூரிட்டியைக் கூப்பிட்டுக்கூட என்னை உள்ளே அழைத்து வரச் சொல்லியிருக்கலாம்.. ஒரு முதலமைச்சரே வந்து எனக்காக கட்டிலைத் தூக்கிக் கொண்டு போனதை, இப்போது நினைத்தாலும் என் உடம்பு புல்லரிக்கிறது.

அந்த மகத்தான தலைவரின் அவ்வளவு பெரிய அன்புக்கு நான் பாத்திரமானது என் முன்னோர் செய்த புண்ணியம். ஒரு எம்.எல்.ஏ., எம்.பி. ஆகிவிட்டால்கூட தலைகால் புரியாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் காமராஜர் ஒரு தெய்வம். அந்தத் தெய்வத்தோடு 36 ஆண்டுகள் இருக்கக் கிடைத்தது நான் செய்த பாக்கியம்.

– சொன்னவர் திரு.ஆர்.கிருஷ்ணன், பெருந்தலைவர் காமராஜரின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி

(நன்றி : சிகப்பு நாடா, ஜூன் 1-15, 2010)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: