கற்றது களவு – திரை விமர்சனம்

10-06-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மாஸ் ஹீரோ இல்லை..! பெரிய ஹீரோயின் இல்லை..! இயக்குநரும் தெரியாதவர்..! ஆனால் படக் கம்பெனி மட்டுமே தெரியும்..! பரவாயில்லை போனால் போகிறது.. பத்தோடு பதினொண்ணு என்றுதான் தியேட்டருக்குள் நுழைந்தேன்.


‘அலிபாபா’ படத்தின் ஹீரோ கிருஷ்ணாதான் இதிலும் ஹீரோ. இவர் ‘பில்லா’ படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் தம்பியும்கூட.  படத்தின் தயாரிப்பாளர் இவர்களின் தந்தை ‘பட்டியல்’ சேகர்..! 

தற்போதையக் காலக்கட்டத்தில் அத்தனை பேரும் ஐ.டி. முடித்து ஐந்திலக்கத்தில் சம்பளம் வாங்குவதை லட்சியமாகக் கொண்டிருக்கும் சூழலில் பி.காம் பாடத்தை விரும்பி ஏற்று படிக்கிறார் ஹீரோ.

ஸ்டூடண்ட்ஸ் பிளான் என்று சொல்லி ஒரு அருமையான திட்டத்தை ரெடி செய்து ஒரு வங்கியின் தலைவரிடம் கொடுக்கிறார். இதனை வைத்து தானும் முன்னேறலாம் என்பது ஹீரோவின் கணக்கு.. அந்தத் தலைவரோ அந்தத் திட்டத்தை தான்தான் உருவாக்கியதாகச் சொல்லி மத்திய அமைச்சரிடமே நல்ல பெயர் எடுத்து தனது வளத்தைப் பெருக்கிக் கொள்கிறார்.

இந்தக் கோபத்தில் ஹீரோ இருக்கும்போது ஏர்ஹோஸ்டஸாக வேண்டுமென்ற லட்சியத்தோடு வீட்டை விட்டு வெளியே வரும்  வேணி என்னும் ஹீரோயினை சந்தித்துத் தொலைக்கிறார். இங்கு ஆரம்பிக்கிறது சடுகுடு ஆட்டம்.

வேணியை வைத்து அந்த வங்கி தலைவரை மடக்கி பணம் பறிக்கிறான் ஹீரோ. அது சுபத்தில் முடிய.. கெட்டவன் என்று பெயரெடுப்பது இவ்ளோ ஈஸியா என்கிற ஆர்வத்தில் அடுத்தடுத்து வில்லங்க வேலைகளில் இறங்குகிறார்கள் ஹீரோவும், ஹீரோயினும்.

கடைசியாக ஒரு மத்திய அமைச்சர், மத்திய ஆட்சியை கவிழ்க்க பெரும் பண்ககாரர்களுடன் டீலிங் செய்வதை ஒட்டுக் கேட்டு அவரிடமிருந்து பணம் பறிக்க முயல.. இவர்களது கிராப் தலைகீழாகிறது.

லோக்கல் போலீஸ் ஒரு பக்கம் துரத்த.. மந்திரியின் ஏற்பாட்டில் உளவுத்துறை போலீஸ் இன்னொரு பக்கம் துரத்த.. காதலர்களான ஹீரோவும், ஹீரோயினும் தப்பிக்கிறார்களா என்பதுதான் மீதிக் கதை.

நிஜமாகவே படத்தின் இயக்கம் அசத்தலாக இருக்கிறது. மேக்கிங் பெர்பெக்ஷன். ஹீரோ பெரிய ஆளாக இல்லாததாலும், வலுவான மார்க்கெட்டிங் செய்யாததாலும், வெளியில் பேச்சு பெரிதாக அடிபடாததாலும், நிறைய படங்களோடு வரிசையில் வந்ததாலும் படம் மாட்டிக் கொண்டது என்று நினைக்கிறேன்.

முதல் காட்சியில் அந்த சேஸிங்கிலேயே நிமிர வைத்துவிட்டார்கள். கலக்கல்.. புகுந்து விளையாடியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா. பல இடங்களில் கேமிராவின் கோணம் படம் தமிழ்ப் படம் இல்லை என்பதை போலவே காட்டியது.

நல்ல கதையும், நல்ல இயக்குநரும் சிக்கினால் ஒளிப்பதிவில் என்ன வித்தை வேண்டுமானாலும் காட்டலாம் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். ராமேஸ்வரம் கடலில் கிருஷ்ணாவுடன் போடுகிற சண்டை காட்சிகளை படமாக்கிய விதத்தில் இயக்குநருக்கு எனது ஷொட்டு..!

ஹீரோ கிருஷ்ணா.. அலிபாபாவைவிட பரவாயில்லை. கொஞ்சம் முன்னேற்றமடைந்திருக்கிறார். கஷ்டப்பட்டுதான் நடித்திருக்கிறார்..! சம்பத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டு தப்பிக்க வழியில்லாமல் கெஞ்சுகின்றபோது நிஜமாகவே பல படங்களில் நடித்த நடிப்பு தெரிகிறது.

இன்னொரு அசர வைத்த நபர் சம்பத். மனுஷன் படத்துக்கு படம் பின்றாருப்பா.. வில்லனா, நண்பனா என்பதையே தெரியாத அளவுக்கு தனது உடல் மொழியையும், வசன உச்சரிப்பையும் வைத்து முதல் 4 ரீல்களை ஓட்டி விட்டார். இறுதிக் காட்சியில் மனுஷன் சிரிக்கின்ற சிரிப்பை வைத்தே டென்ஷன் எகிறுகிறது..

டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மத்திய மந்திரியின் பாதுகாவலராக வந்து லாஜிக் மீறலோடு கிருஷ்ணாவைத் தேடியலைகிறார். புது சரக்கு என்பதால் இவரையும் பார்த்து ரசிக்க முடிகிறது..!


தியேட்டர் கேண்டீன் சமோசா மீது வரக்கூடிய ஆர்வம்கூட ஒரு சராசரி ரசிகனுக்கு ஹீரோயின் விஜயலட்சுமி மீது வரவில்லை. ஹீரோயின் என்றால் ஏதாவது ஒரு ஈர்ப்பு இருக்க வேண்டும்.. பெயரில் மட்டும் தமிழை வைத்துக் கொண்டால் போதும் என்று நினைத்துக் கொண்டார்களோ.. ம்ஹூம்.. பாடல் காட்சிகளில் மட்டும் ஏதோ ஆடுகிறார்.. மற்றபடி யூஸ் அண்ட் த்ரோதான்..

மத்திய அமைச்சராக அமரர் வி.எம்.சி.ஹனீபா. மனுஷனுக்கு இது மாதிரியான கேரக்டர்கள் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி..! இவ்ளோ சீக்கிரமாக அவர் போய்ச் சேர்ந்திருக்க வேண்டாம் என்பதை அவரே இதில் நிரூபித்திருக்கிறார். மனம் இன்னமும் வருத்தப்படுகிறது..!

இது மாதிரியான த்ரில்லர் அண்ட் ஸ்பீட் படங்களை கெடுப்பதற்காகவே ஏதாவது ஒன்றை செய்து வைத்திருப்பார்கள். சொந்த செலவில் சூனியம்போல். இங்கேயும் கஞ்சா கருப்புவின் காமெடி சீன்கள் அப்படித்தான் இருக்கின்றன. படத்தின் டெம்போ எகிறிக் கொண்டிருக்கும் நேரத்தில் இடையில் புகுந்து காத்தை இறக்கிவிட்டதைப் போலாகிவிட்டது கருப்புவின் எண்ட்ரி..


பிற்பகுதியில் வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் முமைத்கானின் சீன்களும், அங்கே கல்யாண் வந்து தேடுவது போன்ற காட்சிகளும் ஏனோ டல்லடித்ததால் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டிருந்தது.

ஆனாலும் படம் முழுவதுமே ஏதோ ஒரு வித்தியாசம் தெரிகிறது. துவக்கத்தில் வரும சேஸிங் காட்சியை எடுத்திருக்கும் விதமே இதற்கு சாட்சி. கிருஷ்ணா உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இதேபோல் ஒவ்வொரு காட்சியையும், ஷாட்டையும் வித்தியாசமாக எடுக்க வேண்டும் என்று நினைத்து அதில் 99 சதவிகிதத்தை பூர்த்தி செய்திருக்கும் இயக்குநரை பாராட்டியே ஆக வேண்டும்..!

கிளைமாக்ஸ் காட்சியில் நம்ப முடியாத திருப்பங்களுடன் ஏற்படும் திடீர் பரபரப்புக்கு கை தட்டத்தான் தோன்றியது. ஆனால் கோயன் பிரதர்ஸ் ரேஞ்ச்சுக்கு அக்காட்சியை வைத்துத் தொலைத்துவிட்டதால் மனம் தொலைந்துபோய்விட்டது.. ஹாட்ஸ் ஆஃப் டைரக்டர்..! உங்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் உண்டு..!

மக்களே.. ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்.!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: