யார் தேசத் துரோகிகள்..? நளினியா..? இன்றைய அரசியல்வாதிகளா?

02-04-10

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவர் என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் கலைஞர், தான்தான் உலகிலேயே ஒப்பற்ற மனித இனத் துரோகி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.
டெல்லிக்கார அம்மாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. தான் உயிருடன் இருக்கின்றவரையில் அதிகாரத்தில் இருந்தாக வேண்டும். அதற்காக எதை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பதாக நளினியை விடுதலை செய்ய முடியாது என்கிற வார்த்தையில் சொல்லிவிட்டார்.
இதற்காக அவர் சொல்லியிருக்கின்ற காரணங்கள் மிக மிக அற்பமானவை.


1. ராஜீவ் கொலை தொடர்பாக அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும்
,​​ கொலையாளிகளுடன் முழுமையாக ஒத்துழைத்துள்ளார்.​ இதன் மூலம் அவர் கொடூரமான குற்றத்தைப் புரிந்துள்ளார்.

பத்தாண்டுகளை சிறையில் கழித்த நிலையில் விடுவிக்கப்பட்ட கொலைக் குற்றவாளிகள் அனைவருமே கொடூரமான குற்றங்களைச் செய்தவர்கள்தான். இதில் நளினியை மட்டும் ஏன் தனித்துப் பார்க்க வேண்டும்..?
2. சிறையில் அவர் பட்ட மேற்படிப்பும்,​​ பட்டயப் படிப்பும் பெற்றுள்ளார்.​ இதன் மூலம் அவரது மனப்போக்கு ​ மாறியுள்ளதாகக் கருத முடியாது.​
சிறையில் அவர் விடுதலைப்புலிகள் கொள்கை விளக்க முழுக்கங்களை எழுப்பவில்லை. அவர்களது செயலை நியாயப்படுத்தும் வகையில் புத்தகங்கள் எழுதவில்லை. பேசவில்லை. பேட்டியளிக்கவில்லை. மனதைத் திசை திருப்பி படிப்பில் இறங்கினார்.

3. இதுவரை அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.​ தனது செயல்களுக்காக வருத்தமும் தெரிவிக்கவில்லை.

இதுவரையிலும் ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளன்று நூற்றுக்கணக்கான கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டு அதற்கு வருத்தப்பட்டு கதறியழுத பின்பா விடுவிக்கப்பட்டார்கள். அல்லது இவர்களிடம் இது தொடர்பாக ஏதேனும் ஒப்புதல் கடிதம் எழுதி வாங்கப்பட்டுள்ளதா..? இருந்தால் ஆதாரமாக காட்ட முடியுமா..?
4. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டால்,​​ அவரை தன்னுடைய பாதுகாப்பில் வைத்துக் கொள்வதாக நளினியின் தாயார் உத்தரவாதம் அளித்துள்ளார்.​
சோனியா காந்தி தன் பாதுகாப்பில் வைத்துக் கொள்வதாகத் தெரிவித்திருந்தால்கூட அதிலொன்றும் தவறில்லை.
5. இது தொடர்பான வழக்கில் நளினியின் தாயாரும்,​​ சகோதரரும்கூட சிறையில் அடைக்கப்பட்டு,​​ பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். நளினியின் தாயார் சென்னையிலுள்ள ராயப்பேட்டையில் வசிக்கிறார்.​ நளினி விடுதலை செய்யப்பட்டால் அவரது தாயாருடன் அந்தப் பகுதியிலேயே வசிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.​
ராயப்பேட்டை என்ன ராஜஸ்தானுக்கே போகட்டும். அதனால் உங்களுக்கென்ன பாதிப்பு..?

6. அந்தப் பகுதி அதி முக்கியப் பிரமுகர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வசிக்கும் பகுதி.​ அமெரிக்கத் தூதரகமும் அருகிலேயே உள்ளது. விடுதலைக்குப் பிறகு நளினி இந்தப் பகுதியில் தனது தாயாருடன் வசித்தால் அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று ராயப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த இன்ஸ்பெக்டர் ரொம்பவும் பயந்து சுபாவம் உள்ளவராக இருப்பதால் அவரை உடனடியாக போலீஸ் வேலையிலிருந்து விடுவித்து வீட்டுக்கு அனுப்பலாம்..
19 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டு வெளியே வருபவர் வந்தவுடன் மனித வெடிகுண்டாக மாறப் போகிறாரா..? அல்லது யாருக்கும் அது தொடர்பாக டிரெயினிங் கொடுக்கப் போகிறாரா..?
7. ஒரு குழந்தைக்கு தாயாக உள்ளதால்,​​ தன்னை விடுவிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது.
ஒரு குழந்தை என்பதுதான் பிரச்சினையா..? பத்து குழந்தைகள் என்றால் உடனேயே விடுவித்திருப்பீர்களா..? ஒரு குழந்தை என்றாலும் அதன் அருகாமையையும் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் இழந்துள்ளார். இந்தப் பெரிய தண்டனையே அவருக்குப் போதாதா..?


8. அவர் இந்திய தேசத்துக்கு எதிரான குற்றத்தை
செய்துள்ளார்.​ எனவே,​​ 18 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளதால் தன்னை விடுவிக்குமாறு அவர் கோருவதையும் ஏற்க முடியாது.

2000 சீக்கியர்கள் கொலைக்குக் காரணமான ஜெகதீஷ் டைட்லரும், அவருடைய அடிப்பொடிகளும் இன்றைக்கும் நாடாளுமன்றத்தின மைய மண்டபத்தில் உலாவருகிறார்.
போபர்ஸ் ஊழலில் பணத்தை பங்கு போட்டுக் கொண்டு இன்றைக்கும் வெட்கமில்லாமல் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது காங்கிரஸ் அரசு.. இது தேசத்துக்கு எதிரான துரோகம் இல்லையா..?
பாபர் மசூதி இடிப்பை தூண்டிவிட்டு இடிக்கின்றவரையில் வேடிக்கை பார்த்து நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே ஆப்படித்த பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் வெளியில்தான் உலா வருகிறார்கள். அவர்கள் செய்தது தேசத் துரோகம் இல்லையா..?
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் முடிந்த அளவுக்கு சுரண்டியெடுத்து தனது கொல்லைப்புறத்தில் இருக்கும் மாட்டுக்கு தானியமாக வாங்கிப் போட்டிருக்கும் லாலு யாதவ் கயிற்றுக் கட்டிலில் காலாட்டிக் கொண்டு படுத்தபடி பேட்டியளிக்கிறாரே.. இவர் ரொம்பவே தேச பக்தரா..?
மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி வருட முடிவில் 32 கோடி ரூபாய்க்கு கணக்குக் காட்டி விட்டு ஆயிரத்து ஐநூறு முறை ரெக்கார்ட் பிரேக் அடிக்கின்றவகையில் வாய்தா வாங்கி புகழும், சொத்தையும் சேர்த்திருக்கும் புரட்சித் தலைவி அம்மா செய்தது தேசத் துரோகம் இல்லையா..?
தனது மகனின் தூண்டுதலால் நடத்தப்பட்ட தாக்குதலினால் உயிரிழந்த அப்பாவிகளை கருத்தில் கொள்ளாமல் மகனைக் காப்பாற்ற வேண்டி மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் அப்பீல் செய்யாமல் நடுநிலைமை டான்ஸ் ஆடும் கலைஞர் ரொம்பவே தேசபக்தரா..?
9. குற்றச்சூழல்,​​ குற்றத்தின் தன்மை ஆகியவற்றைப் பார்க்கும்போது,​​ முன் கூட்டியே விடுதலை செய்யுமாறு பரிந்துரைக்க இது சரியான வழக்கல்ல என்று ஆய்வுக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனால் ஆட்சிக்கு பாதிப்பு வரும் என்கின்றபோது முடிவுரையை இப்படித்தானே ஆரம்பிப்பீர்கள்..?
10. ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை தமிழக அரசு கவனமாக பரிசீலித்தது. நளினியை முன் கூட்டியே விடுதலை செய்வதாலும்,​​ராயப்பேட்டை பகுதியில் அவர் வசிப்பதாலும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாது என்று நளினியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.​ அதனடிப்படையிலேயே அவரை விடுதலை செய்ய நன்னடத்தை அதிகாரி பரிந்துரைத்துள்ளார். ஆனால்,​​ சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.​ மண்டல நன்னடத்தை அதிகாரி இந்த இரு அறிக்கைகளையும் ஆராய்ந்து முன்கூட்டியே விடுதலைக்குப் பரிந்துரைக்க இது சரியான வழக்கு இல்லை என்று கூறியுள்ளார்.
நாளை இதே நன்னடத்தை அதிகாரி பரிந்துரைக்கும் அத்தனைக்கும் இது போன்று நீங்களும் ஒரு பிரேக் போட்டுத்தான் விடுதலை செய்வீர்களா..?

11. அதேபோல், ​​ உளவியல் நிபுணரின் அறிக்கையிலும் நளினியை ஏன் விடுதலை செய்ய வேண்டும் என்பதற்கான முடிவான காரணங்கள் எதையும் குறிப்பிடவில்லை.

உளவியல் நிபுணர் எதற்கு..? அனைத்துக் கைதிகளையும் உளவியல் நிபுணரை வைத்து ஆராய்ச்சி செய்து அவரிடமும் சர்டிபிகேட் வாங்கித்தான் வெளியில் விட்டீர்களோ..?
12. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு,​​ நளினியை முன்கூட்டியே விடுதலை செய்யக் கூடாது என்ற ஆலோசனைக் குழுவின் பரிந்துரை ஏற்கப்படுகிறது.​ நளினியின் மனுவை நிராகரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடிந்த அளவுக்கு காங்கிரஸ் ஆட்சியை பகைத்துக் கொள்ளாமல் அவர்களை அண்டியே பிழைப்பை நடத்தி இன்னமும் மூன்று தலைமுறையை அரியணையில் அமர்த்திவிட முடிவு கட்டிவிட்டீர்கள்..
இவர் ஆயிரம் காரணங்கள் சொல்லலாம்.. ஆனால் வெறும் பத்து நாட்கள் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள், ‘பதிலுக்குப் பதிலாக’ ஐயாவை உள்ளே தூக்கி வைத்தபோது உலகமே இடிந்து விழுவதைப் போல கதறித் துடித்த இவருக்கு சிறைச்சாலையின் வலி உணர்ந்திருந்தும், அது எல்லாவற்றையும்விட தான், எனது, எனது குடும்பம் மட்டுமே முக்கியம் என்பதையே மீண்டும், மீண்டும் பல வழிகளில் இப்போதும் நிரூபித்து வருகிறார்.

முதலில் இவர் நல்ல மனநிலையில் இருக்கிறாரா..? பொது வாழ்க்கைக்குத் தகுதியானவர்தானா..? என்பதைக் கண்டறிய உளவியல் நிபுணரின் சோதனையை இவருக்குத்தான் நடத்த வேண்டும்.

19 ஆண்டு காலம் சிறையைவிட்டு வெளியே வர விடாமல் வைத்திருப்பது என்பது ஒருவரைக் கொலை செய்ததற்கு சமம். அவர் செய்தது குற்றம்தான். ஆனால் மன்னிக்கக் கூடியது. உலகில் நடக்கும் அத்தனைக் குற்றங்களுக்கும் காரணம் சூழ்நிலைதான்.

அவருடைய வயது, அவருடைய அப்போதைய குடும்பச் சூழல், அவருடய சுபாவம் எல்லாம் ஒன்று சேர்ந்து அவருக்குத் துரோகமிழைத்துவிட்டன. அதற்கு 19 ஆண்டுகள் என்பது மிகக் கொடுமை..

ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பு வெறும் 8 ஆண்டுகள் சிறையில் இருந்தாலே போதும். அவர்களை விடுவித்தாக வேண்டும் என்கிறது. ஆனால் இந்தக் கயவர்கள் தங்களது வசதிக்காக மட்டுமே அதனை பயன்படுத்தி வருகிறார்கள்.

மதுரையில் கம்யூனிஸ்ட்டு கட்சி கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை பத்தாண்டு முடிவதற்குள் விடுவித்தார்கள். லீலாவதி கொலையும் ஒரு தேசத் துரோகம்தானே..! ராஜீவ்காந்தி கொலை போன்றதுதானே அதுவும்.. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்..?

ஒன்றே ஒன்று.. அதில் நளினியின் பங்கு அந்த விஷயம் தெரிந்திருந்தது அவ்வளவுதான்.. ஆனால் இதில்.. கொலை செய்தவர்களே இவர்கள்தான். இவர்களுக்கு விடுதலையாம்.. அந்தப் பெண்ணுக்கு ஆயுள்காலச் சிறையாம்..!

மனுநீதிச் சோழன் பரம்பரை என்று வெட்கமில்லாமல் மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக் கொள்ளும் இந்த முறைகெட்ட அரசியல்வாதிகள்தான் உண்மையான தேசத் துரோகிகள்..!

இவர்களைப் போன்ற கேடுகெட்டவர்கள் என்றைக்கு அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்களோ அன்றைக்குத்தான் உண்மையிலேயே இந்த நாட்டுக்கு விடுதலை..!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: