Archive for நவம்பர், 2009

யோகி – திரைப்பட விமர்சனம்

நவம்பர் 27, 2009

27-11-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘டூட்ஸி’ என்கிற ஆப்பிரிக்க திரைப்படத்தின் ரீமேக்தான் இந்த ‘யோகி’ என்கிற தமிழ் திரைப்படம்..

பணத்துக்காக எதையும் செய்யும் தாதா கும்பலின் தலைவன் யோகி. வேட்டை என்று சொல்லப்படும் தங்களது தாதா பணிக்காக ஒரு நாள் கிளம்புகிறார்கள். சுனாமி என்கிற ஹோட்டலுக்குள் புகுந்து வேலையாட்களைக் கட்டிப் போட்டுவிட்டு, ஹோட்டல் அறைகளுக்குள் தடாலடியாக நுழைந்து தங்கியிருந்தவர்களைத் தாக்கித் தங்களது வேட்டையை நடத்துகிறார்கள் யோகியும், அவனது ஆட்கள் மூன்று பேரும்.

காருக்குரிய பெண் வேகமாக வெளியே ஓடி வர பின்னால் துரத்தி வந்த போலீஸ் காரால் தாக்கப்பட்டு கீழே விழுகிறாள். யோகி வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு ஓட முயல.. காரின் பின் சீட்டில் அம்சமாகப் படுத்திருக்கும் கைக்குழந்தை வீரிட்டு அழுக.. இனிதான் கதையே..

அந்தக் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டுப் போக மனமில்லாமல் தூக்கிச் சென்று வளர்க்கிறான் யோகி. அதற்காக அவன் படும் சிரமங்களும், அந்தக் கஷ்டத்துடன் குழந்தையை வளர்க்க முயலும் அவனது நோக்கத்திற்கான காரணம் என்ன என்பதிலும்தான் யோகியின் பிறப்பு முதல் இன்றைய வரையிலான ஜாதகமே சொல்லப்படுகிறது.

இன்னொரு புறம் போலீஸ் காரில் மோதி மருத்துவமனையில் பேச்சுமூச்சில்லாமல் கிடக்கிறாள் குழந்தையின் அம்மா. குழந்தையின் அப்பா நகரின் அத்தனை வட்டங்களுக்கும் படையெடுத்து லோக்கல் தாதாக்களிடம் பணத்தை அள்ளிக் கொடுத்து பணத்தையும் கொடுத்து குழந்தையை மட்டும் மீட்டுக் கொடுக்கும்படி கெஞ்சுகிறான்.

போலீஸும் ஒரு பக்கம் குழந்தையைத் தேடுகிறது. லோக்கல் தாதாக்களும் தேடுகிறார்கள். இந்தத் தேடுதல் கடைசியில் யோகியின் கைக்கும் வருகிறது. யோகியும் குழந்தையும் என்ன ஆனார்கள் என்பதுதான் மீதிக் கதை..

இப்படியொரு மாற்று மொழி திரைப்படத்தின் கதையையும், திரைக்கதையையும் அப்படியே காட்சி மாறாமல் சுட்டுத் திரைப்படமாக்க நிச்சயம் அசாத்தியமான தைரியம் வேண்டும். அந்த தைரியம் இத்திரைப்படத்தின் கதை ஆசிரியராக தன் பெயரைப் போட்டிருக்கும் இயக்குநர் சுப்ரமண்யசிவாவுக்கு உண்டு. இதற்காக அவரைப் பாராட்டியே தீர வேண்டும்.

அமீரின் அறிமுகக் காட்சியிலேயே கை தட்டல் பறக்கப் போகிறது என்று எதிர்பார்த்து போயிருந்த எனக்கு தியேட்டரின் உள்ளே நடந்த ‘உல்டா’ அதிர்ச்சியைத் தந்தது. ‘நாடோடிகள்’ திரைப்படத்தின் முதல் காட்சியில் சசிகுமாருக்கு கிடைத்த வரவேற்பை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.

இத்திரைப்படத்திற்கு அமீர் எதற்கு என்பது புரியவில்லை. தனது உடலை கொஞ்சம் ஏற்றி, இறக்கி மற்ற நடிகர்களுக்கு சவால் விடுவதைப் போல சிக்ஸ் பேக்கெல்லாம் வைத்து காட்டியிருக்கிறார். சண்டைக் காட்சிகளுக்கு வழக்கம்போல டெக்னாலஜி இருப்பதால் அதனை வைத்துத் தப்பித்துக் கொண்டார். மற்ற காட்சிகளில்..?

நடிக்க வேண்டிய காட்சிகளில் அது தேவையில்லாததுபோல் அமீரின் மீது சுமையைச் சுமத்தாமல் விடுபட வைத்து அவரைக் காப்பாற்றியிருக்கிறார் இயக்குநர்…

தமிழ்ச் சூழலுக்கு புதிய விஷயமே மதுமிதாவுக்கும் குழந்தைக்குமான உறவுதான். இந்த விஷயம்தான் ‘டூட்ஸி’யிலும் முக்கியமானதாக இருந்தது.. செய்நேர்த்தியினால் அந்தக் காட்சிகள் மட்டும் ரசிகர்களால் மிகவும் ரசிக்கக்கூடிய வகையில் எடுத்திருக்கிறார் இயக்குநர்.

கிட்டத்தட்ட குடிசைப் பகுதியாக இருக்கும் அந்த இடத்தில் குழந்தையின் சப்தங்கள்கூட வெளியில் கேட்காமல் இருக்கிறது என்று இயக்குநர் சொல்வது கொஞ்சம் காமெடியாக இருந்தாலும், கதையை நகர்த்தியாக வேண்டுமே என்கிற அவரின் தவிப்புக்காக அதனை நாம் கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாம்.

குடியும், போதையும், புகையும் இளைஞர்களை எந்த அளவுக்கு ரசிக்க வைக்கும் என்பதற்கு இந்தப் படமும் ஒரு சாட்சி. முதல் காட்சியில் இருந்து இறுதிவரையில் புகை பொங்காத ஷாட்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு அந்த ரவுடியிஸத்தை அப்பட்டமாகக் காட்டுவதாக நினைத்து போதை வஸ்துக்களை பரப்பியிருக்கிறார்கள்.

இன்றைய இளைய சமுதாயத்தினரின் எண்ணவோட்டங்கள் வெறுமையான கொண்டாட்டங்கள் மட்டுமே என்பதற்கு இத்திரைப்படத்தில் கைதட்டல்கள் கிடைத்த காட்சிகளை வரிசைப்படுத்தினால் தெளிவாகிறது.

கூடவே எதுவெல்லாம் நமக்கு தவறாகப் படுகிறதோ அதற்கெல்லாம் மற்றுமொரு நியாயமும் உண்டு என்பதையும் உறுதிப்படுத்துகிறது ரசிகர்கள் கூட்டம். பேருந்தில் நடக்கும் முதல் கொலைக்குக் கிடைத்த கைதட்டல் இதைத்தான் உறுதிப்படுத்தியது. அது வெறும் பணத்துக்காக நடக்கும் கொலைதான். அதற்குமா..?

தன்னைப் பள்ளிக்கூடம் போக விடாமல் தடுத்து, தனது அம்மாவை சித்ரவதைப்படுத்தி, சிறு குழந்தையான தங்கை சாவுக்குக் காரணமாக இருந்து, அம்மாவின் தற்கொலைக்கு சிறிதும் வருத்தப்படாத தனது அப்பாவுக்கு சிறுவன் யோகி கொடுக்கும் தண்டனையின்போதுதான் தியேட்டரே கரவொலியில் கலகலத்தது. மறுபடியும் உள்ளுக்குள் ஒரு பயம்.. வரவேற்பு எதற்கெல்லாம் கிடைக்கிறது என்று பார்த்தால் எதிர்காலத்தை நினைத்து பயமாகத்தான் இருக்கிறது..

சிறிய சிறிய வெட்டு, வெட்டான காட்சிகளால் கதையை நகர்த்திவிட முடியும் என்று நம்பியிருக்கிறார் இயக்குநர். இயக்குநருக்கு பக்கபலமாக ஒளிப்பதிவாளரின் ‘நச்’சான படப்பதிவு. சண்டைக் காட்சிகளில் ‘எடிட்டிங் தெய்வம்’ கண்வித்தை காட்டியிருக்கிறார். முதல் பாடல் பல ‘முன்னாள் ஹிட்’டுகளின் கலவை. ஆனால் ஆட்டம் அசத்தல் ரகம்.. அமீர் ஹீரோவாக நிற்பது இங்குதான்.. இன்னும் மூன்று பாடல்கள் இருந்தன. தனியாகக் கேட்டால்தான் புரியும்போலிருந்தது.

உடன் நடித்த அக்மார்க் திருவான்மியூர் சென்னைவாசிகளுக்கு அதே மேக்கப். ஏதோ இது போன்ற ரவுடித்தனம் செய்பவர்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்து அது போலவே செயற்கைத்தனம் மிக்க அலங்கோலத்துடன் காட்சியளிக்கிறார்கள்.

அமீரின் நண்பனாக கவிஞர் சினேகன் படம் முழுவதும் பவனி வருகிறார். அவர் முடிவுறும் காட்சியில் பாய்கின்ற துப்பாக்கிக் குண்டின் சப்தம் தியேட்டரில் அத்தனை பேரையும் உலுக்கிவிட்டது. ஹேட்ஸ் ஆஃப் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் அண்ட் சவுண்ட் ரிக்கார்டிங்..

இயக்கத்தில் சிற்சில இடங்களில் நகைச்சுவையும், திடுக் திருப்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன. முக்கியமாக முதல் கொலைச் சம்பவம், ரவுடிகள் கூட்டத்திற்கிடையில் புகுந்து வெளியேறும் அமீர் மின்னல் வேகத்தில் செய்கின்ற கத்தி டச்.. பாம்பை அகற்றியவுடன் குழந்தை பளீரென்று சிரிப்புடன் பார்க்கின்ற காட்சி.. குழந்தையுடன் நண்பர்கள் அமர்ந்திருக்கும் காட்சி.. இறுதியில் குழந்தையின் அம்மா என்ட்ரியாவது என்று பல இடங்களில் இயக்குநரின் கலக்கல் நன்றாகவே இருக்கிறது.

ஹோட்டலில் நங்கையருடன் ரூம் போட்டுத் தங்கியிருக்கும் இன்ஸ்பெக்டர்.. அந்த இன்ஸ்பெக்டரிடமே கொள்ளையடித்துவிட்டதால் மனிதர் கருவிக் கொண்டு திரிவது.. அவருடைய துப்பாக்கியின் மூலமாக நடந்த ஒரு கொலைக்காக மேலதிகாரியிடம் வெளிப்படையாக உண்மையைச் சொல்லி தன்னைக் காப்பாற்றும்படி இன்ஸ்பெக்டர் சொல்கின்ற காட்சி என்று முடிந்த அளவுக்கு இயல்பை காட்டியிருக்கிறார் இயக்குநர்.

மதுமிதா இயல்பாகவே நன்கு நடிப்பவர்தான்.. இப்படத்திலும் அதை இன்னும் கொஞ்சம் செய்திருக்கிறார். இந்த கேரக்டரை செய்வதற்கு நடிகைகள் பலரும் முன் வராதததற்கான காரணம் திரைப்படத்திலேயே உள்ளது. தைரியமாக முன் வந்த மதுமிதாவுக்கு அதற்கான பரிசுகள் காத்திருக்கின்றன. சந்தேகமேயில்லை.

கஞ்சா கருப்பு என்கிற நடிகரை வேஸ்ட்டாக்கியிருக்கிறார்கள். ‘நன்றிக்கடனை’ செவ்வனே செய்திருக்கிறார் கஞ்சா. ஆனால் கதையுடன் ஒட்டாததால் கவனத்தில் கொள்ள முடியவில்லை. ஆனால் வருகின்ற காட்சிகளில் கொஞ்சம் நகைக்க வைக்கிறார். படத்தை முடித்து வைக்க இவர் வருகின்ற காட்சியில் இயக்குநரின் ‘டச்’ நச்..

“நான் செய்றதெல்லாம் எனக்குத் தப்பாவே தெரியலை..” என்று யோகி சொல்வதன் மூலம் அவனுக்குத் தெரிந்த நியாயம், அநியாயம் எது என்பதை இயக்குநர் சொல்லிவிட்டதால் நமக்கும் அதனை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. “உலகத்துல நல்லவங்களும் இருக்காங்க..” என்ற மதுமிதாவின் அறிவுரைக்கு “எங்க இருக்காங்க..?” என்ற யோகியின் கேள்வி நச் பதில்..

ஒருவகையில் இந்தக் கேள்விக்கு விடை தேடுவதுதான் இத்திரைப்படம். தேடினால் கிடைக்கும். ஆனால் எப்படி தேடுவது என்றுதான் இந்த யோகிக்கும், அவனைப் போன்ற ஆட்களுக்கும் தெரியவில்லை.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் வன்முறையின் உச்சக்கட்டம். சண்டைக் காட்சியில் தென்படும் உக்கிரத்தை சற்றுக் குறைத்திருக்கலாம். ஒரிஜினல் திரைப்படத்தில் இது போன்று இல்லை.. குழந்தையை மீண்டும் அவர்கள் வீட்டிலேயே ஒப்படைக்க வருவதுதான் ஒரிஜினல் கிளைமாக்ஸ். இதை மட்டும் தமிழுக்காக கொஞ்சம் மாற்றியிருக்கிறார்கள். ஆனால் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்றே நினைக்கிறேன்..

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று..

வனவிலங்குகள் வாரியம், சுகாதாரத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்று குழந்தைகள் வாரியமும் திரைப்படங்களின் மீது ஏதாவது கட்டுப்பாடுகளை விதித்தால் நல்லதோ என்று இத்திரைப்படத்தை பார்த்த பின்பு தோன்றுகிறது.

ஒரு கைக்குழந்தையின் அழுகையையும், அதனை காட்சிகளுக்காக படுத்தியிருப்பதை பார்த்தால் கொடூரமாக இருக்கிறது. கதைக்குத் தேவையானது என்றாலும் அந்த எறும்பு காட்சியையும் பாம்பு குழந்தையின் மீது ஊர்கின்ற காட்சியிலும் நமக்கு மனம் பகீரென்கிறது.. விலங்களுக்காகவாவது ஒரு வாரியம் இருக்கிறது.. குழந்தைகளுக்கு..? யார் இதையெல்லாம் கேட்பது..?

‘கத்திக்குக் கத்தி..’ ‘பல்லுக்குப் பல்..’ என்பதை விளக்கித்தான் மாதந்தோறும் 10 திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று என்பதுபோல் ஆனது மிகப் பெரிய சோகம்..

நல்லதொரு திருப்புமுனையைத் தர வேண்டிய கிளைமாக்ஸ் சீனை, ‘சினிமாட்டிக்காக’ முடித்ததினால், ‘யோகி’யின் மீதான பரிதாப உணர்வை பார்வையாளனுக்குள் ஏற்படுத்தவேயில்லை. ஆனாலும்..

யோகி – அமீருக்கு ஒரு யோகம்தான்..!!!