உன்னைப் போல் ஒருவன் – குங்குமம் இதழ் விமர்சனம்

27-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


கமல் ‘உன்னைப் போல் ஒருவனை’ எடுத்தாலும் எடுத்தார். போதும், போதும் என்கிற அளவுக்கு அர்ச்சனைகளை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். தவறு அவர் மீதும், வசனகர்த்தா மீதும், இயக்குநர் மீதும் இருக்கிறது என்பதால் இது இந்தக் கூட்டணிக்குத் தேவைதான் என்று நான் நினைக்கிறேன்.

‘ஒரு மேட்டரை எடுத்தா முழுசா செஞ்சிரணும்.. இல்லைன்னா தூக்கம் வராது’ன்றதாலதான் போனா போகுதுன்னு வெகுஜனப் பத்திரிகைகளின் விமர்சனத்தையும் நமது விமர்சனத் தொகுப்பில் இணைக்க முடிவு செய்தேன்.

தினம்தோறும் வெறும் ஆயிரம் பேர் படிக்கின்ற அல்லது புரட்டுகின்ற அல்லது லேசாக லுக் விடுகிற இந்த வலையுலகத்தில் எழுதும் வலைப்பதிவர்கள் இந்தப் படத்தை ஆழ்ந்து, திறனாய்ந்து, யோசித்து, பரிசோதனை செய்து எழுதியதைப் போன்று ஒரு உண்மையான திறனாய்வு விமர்சனம் வெகுஜனப் பத்திரிகைகளிலும் வரும் என்று நானும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

விமர்சனங்கள் வந்தன. ஆனால் நான் எதிர்பார்த்தவைகள் அதில் இல்லை. அனைத்துமே அப்படியொரு கோணமே தங்களுக்குத் தோணவில்லை என்பதைப் போல் கமலஹாசன் என்னும் கலைஞானிக்கு சோப்பு போட்டு நாங்கள்லாம கியூவுல நிக்குறோம்ண்ணே என்று பரணி பாடியிருக்கிறார்கள். சரி போகட்டும். அவங்களுக்கும் பிஸினஸ்ன்னு ஒண்ணு இருக்கே. அதையும் பார்க்கணும்ல்ல..

ஆனால் நாங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் என்று சரடு விடுகிறார்களே…. அதுதான் கொஞ்சம் இடிக்கிறது..

நீங்களும் படித்துப் பாருங்கள்..

உன்னைப் போல் ஒருவன் – குங்குமம் விமர்சனம்

பயங்கரவாதத்தை எதிர்க்கும் துணிவும், தெளிவும் இருந்துவிட்டால் சாமானியர்கள்கூட தீவிரவாதிகளை நடுங்கச் செய்துவிட முடியும் என்று உணர்த்தியிருக்கும் புதிய சிந்தனைப் படம். இந்தியில் நீரஜ் பாண்டே எழுதிய கதையை தமிழில் சக்ரி டோலடி இயக்கியிருக்கிறார்.

ஒரே நாளில் நடக்கும் இந்தக் கதை, பணியில் இருந்து விடுவித்துக் கொண்ட போலீஸ் கமிஷனர் மோகன்லாலின் நினைவுகளில் கடந்த காலத்துக்குப் போகிறது. வெடிகுண்டுகள் தயார் செய்து கொண்டு போய் சென்னையின் முக்கியப் பகுதிகளில் கமல் வைத்துவிட்டு வரும் ஆரம்பக் காட்சி அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்தது. அதன் தொடர்ச்சியாக குண்டுவெடிப்புகளில் கைதான தீவிரவாதிகளை விடுவிக்கச் சொல்லி அவர் பேரம் பேசுவது அதைவிட அதிர்ச்சி.

சாமானிய மனிதனாக வரும் கமலுக்கு ஒரே காஸ்ட்யூம்தான். எடுத்துக் கொண்ட பாத்திரத்தில் இருந்த இடத்தைவிட்டு நகராமல் அடக்கி வாசித்திருக்கும் கமலின் நேர்மை பாராட்டத்தகுந்தது. ஒரு தீவிரவாதிபோல் ஆரம்பித்து, நம்மில் ஒருவனாக நிலை பெறுகிறவரை மிகையில்லாமல் நடித்திருக்கிறார்.

தன் செயலுக்கான நியாயத்தை அவர் விளக்கும் காட்சியில் பெண்ணுறுப்பு வழியே கைவிட்டு குழந்தையை எடுத்துக் கர்ப்பிணிப் பெண்ணை சமூகவிரோதிகள் கொன்ற கொடுமையைச் சொல்லி, “அது என் மகள். இல்லைன்னா என் சகோதரன், நண்பனின் மகளா இருந்தாத்தான் அதை உணர முடியுமா?” என்று கேட்டு உடையுமிடம் உருக வைக்கிறது.

மோகன்லாலின் முதிர்ச்சியும், கண்டிப்பான பார்வையுமே அவரை ஒரு போலீஸ் கமிஷனராக ஒத்துக் கொள்ள வைக்கிறது. ஒரு மலையாளியாகவே நடித்திருப்பதால் அவரது தமிழும் உறுத்தாத இயல்புடன் ஒட்டிக் கொள்கிறது.

அச்சுறுத்தல் ஒரு பக்கம்.. அதிகார எல்லைகள் ஒரு பக்கமுமாக அழுத்தும் சுமையில் கமலுடன் அவர் நடத்தும் கிளைமாக்ஸ் பேச்சு குறிப்பிடத்தகுந்த பதிவு, அதிகாரியாகக் கையாலாகாத நிலையில், சம்பந்தப்பட்டவரைக் கண்ணாலாவது பார்த்துவிட முடிவு செய்து கமலை அவர் சந்திக்கும் கடைசிக்கட்டம் அற்புதம்.

தலைமைச் செயலாளராக வரும் லட்சுமியும் இருக்கும் எல்லைக்குள் தனது ஆற்றலைப் பதிவு செய்திருக்கிறார். கணேஷ் வெங்கட்ராம், பரத் ரெட்டி, எஸ்.பிரேம்குமார் இளம் போலீஸ் அதிகாரிகளுக்கு பொருத்தமாக இருக்கிறார்கள். கணேஷ் வெங்கட்ராமுக்கு ஆக்ஷனிலும் கலக்க அருமையான வாய்ப்பு. ஆளுக்கேற்ற வேடத்தில் அடக்காமாகப் பொருந்தியிருக்கிறார் சேனல் நிருபராக வரும் அனுஜா.

ஆங்கிலம், புத்திசாலித்தனம் கலந்த வசனங்களில் ஆங்காங்கே எள்ளலும் கலந்து எழுதியிருக்கிறார் இரா.முருகன். தனக்குப் பாதுகாப்பு கேட்டு வரும் நடிகர் ஸ்ரீமன் “நான்தான் தமிழ்ல நம்பர் ஒன் ஸ்டார்..” எனும்போது “அதுதான் உங்க கம்ப்ளையிண்ட்டா..?” என்று மோகன்லால் கேட்குமிடம். உதாரணம்.

ரெட் ஒன் கேமிராவில் பதிவு செய்த மனோஜ்சோனியின் ஒளிப்பதிவில் குறிப்பிடத்தகுந்த ஆச்சரியம் எதுவும் இல்லை. பின்னணி இசையோடு முடிந்துபோகும் ஸ்ருதிகமலின் இசை படத்தோடு ஒன்றியிருக்கிறது.

யதார்த்தமாக கதையை உணரச் செய்ய இந்திய நிகழ்வுகளையே படத்தின் பின்னணிச் செய்தியாக்கியிருப்பது நல்ல பலனைத் தந்திருக்கிறது. அந்த வகையில் முதல்வரின் கோபாலபுரம் இல்லமும் படத்துக்குள் இடம் பெற்றிருப்பது அட..

முக்கியப் பாத்திரங்கள் கவனத்தைக் கவர்ந்தாலும், துணைப்பாத்திரங்களிடம் தெரியும் நாடகத்தனமான நடிப்பு ஒரு குறை. அதேபோல் கமலின் நியாயம் தெரிய வந்ததும், அவரது போன் நம்பரை டிரேஸ் செய்யும் இளைஞரும், புகைப்படத்தை வைத்து அடையாளம் சொன்ன போலீஸும் பின்வாங்குவது வழக்கமான கமர்சியல் டிராமா.

சீரியஸான கட்டத்தில் கமிஷனருக்கு வரும் பெர்சனல் போன் கால் காமெடி பல படங்களில் பயன்படுத்தப்பட்ட பழைய சரக்கு. நூற்றுக்கணக்கான மீடியாக்கள் குவிந்துவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் ஒரு சேனலில் இப்படியொரு செய்தி வந்தால் மற்றவர்கள் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டிருக்க மாட்டார்களா..?

தீவிரவாதத்தை வேரறுக்க தீவிரவாதம்தான் சரியான வழி என்பதை அழுத்தமாகச் சொல்லியிருப்பது எதிர்வினையாகும் நீதிதான்.

ஒன்பது வருடங்களுக்கு முன் தீவிரவாதம் தவிர்த்து அஹிம்சையை வலியுறுத்திய கமலை காலம் இப்படி மாற்றியிருப்பது விந்தைதான்..

ஹே ராம்..!!!

நன்றி : குங்குமம் விமர்சனக் குழு

இணைப்புகள் :

குமுதம் இதழ் விமர்சனம்

ஆனந்தவிகடன் இதழ் விமர்சனம்

தமிழன் எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்

சினிமா எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: