ஈரம் – திரைப்பட விமர்சனம்

12-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நம்ப முடியாத கதையை நம்புவது போல் எடுத்திருக்கிறார்கள். “ஏதோ ஒரு ஆங்கிலப் படத்தின் உல்டா” என்கிறார்கள். நான் அந்த ஆங்கிலப் படத்தை பார்க்கவில்லை. எனவே உறுதிப்படுத்த முடியவில்லை.

சைக்கோ கணவன் தனது மனைவியைக் கொன்றுவிட.. ஆவியான மனைவி, கணவன் தன்னைக் கொலை செய்யத் தூண்டுதலாக இருந்தவர்களை தண்ணீர் உருவத்தில் உருக்கொண்டு கொலை செய்வதுதான் கதை. இதற்கு லாஜிக் பார்க்காமல் நம்மை நம்ப வைக்க ரொம்பவே பிரயத்தனம் செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் அறிவழகன்.


வாசுதேவன் திருச்சியில் படித்துக்கொண்டிருக்கும்போது ரம்யாவை பார்த்தவுடன் காதல் கொள்கிறார். ரம்யாவுக்கும் அவரைப் பிடித்துப் போக ரம்யாவின் வீட்டுக்கு வந்து பெண் கேட்கிறார். அவள் அப்பாவோ வாசுதேவனின் எதிர்கால லட்சியமான காவல்துறை வேலையை மனதில் வைத்து பெண் தர முடியாது என்று மறுத்து பாலகிருஷ்ணன் என்னும் தொழிலதிபருக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

அந்த பாலகிருஷ்ணனுடன் ரம்யா சென்னையில் இல்லறம் நடத்தி வரும் சூழலில்தான் மர்மமான முறையில் இறந்து போகிறார். வழக்கை விசாரிக்க வருவது இப்போது அதே பகுதியில் அஸிஸ்டெண்ட் கமிஷனராக இருக்கும் வாசுதேவன். தனது காதலியின் மரணத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்பதை உணர்ந்து மேலதிகாரிகளிடம் வற்புறுத்தி கேஸை மூடிவிடாமல் தொடர்ந்து நடத்த..

அதே அபார்ட்மெண்ட்டில் தொடர்ந்து மூன்று கொலைகள்.. யார் செய்தது என்று விரட்டிப் பிடித்து கண்டுபிடிக்கிறார்.. ஆனால் குற்றவாளி இவர்தான் என்பதை துளியும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றாலும், காட்சியமைப்புகளால் இப்படித்தான்.. நம்புனா நம்பு.. நம்பாட்டி இடத்தைக் காலி பண்ணு என்று சொல்லிவிட்டார் இயக்குநர்.


படத்தின் பெயரைப் போலவே காட்சிக்கு காட்சி ஈரம்தான்.. மழையும், தண்ணீரும் தென்படாத காட்சிகளே கிடையாது.. படத்தின் துவக்கக் காட்சியிலேயே மர்மக் கதை என்பதை மனதில் நிலை நிறுத்தி விடுகிறார் இயக்குநர்.

அவ்வப்போது வசனத்திலும், காட்சியமைப்பிலும் தியேட்டரில் கை தட்டல்கள் தூள் பறக்கிறது.. அபார்ட்மெண்ட்டுக்கு வந்து செல்லும் காதலனை தியேட்டர் டாய்லெட்டில் வைத்து கொலை செய்யும் காட்சியில் ஆவி நடந்து செல்வதை முதல் முறையாகக் காட்டும்போதே நம்ப வைத்துவிடுகிறார். இதன் பின் அவர் சொல்வதை நம் மனது செல்லாது என்று சொன்னாலும், இப்படியும் இருக்கலாமோ என்ற எண்ணத்தில் இறுதிவரையில் உட்கார வைத்துவிட்டார் இயக்குநர்.

ஒளிப்பதிவாளர் பிரமிக்க வைத்திருக்கிறார். பிரேமுக்கு பிரேம் அழகாக ஜொலிக்கிறது ஒளிப்பதிவு. பருவநிலை மந்தமான காலக்கட்டத்திலேயே முழு படத்தினையும் எடுத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் வாசுதேவனின் அலுவலகத்தில்கூட ஜன்னலைத் திறந்தவுடன் சூரியன் உள்நுழையும் ஒளி அவர்மேல் படுவதைப் போல் எடுத்திருக்கும் சிரத்தையை பாராட்டத்தான் வேண்டும்.

பிரதிபிம்பங்களான காட்சிகள் வரிசை கட்டி வந்து கொண்டேயிருக்கின்றன. புதிய இயக்குநர் என்றாலும், ஷங்கரின் வாரிசு என்பதால் காட்சிக்கு காட்சி வித்தியாசமான கோணங்களையும், காட்சியமைப்புகளையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

நடிப்பில் முதல் ஸ்கோர் கதாநாயகி சிந்துமேனன்தான்.. மலையாள தேசத்துக்கே உரிய முகக்களை. வருத்தமோ, சிரிப்போ முகம் காட்டுகின்ற முழுக்க முழுக்க டைட் குளோஸப் காட்சிகளிலேயே படம் பிடித்திருப்பதால் இவருடைய நடிப்பு நன்றாகவே நமக்குத் தெரிகிறது. வேறு கதாநாயகிகளை போட்டிருந்தால் டைட் குளோஸப்பிற்கு சான்ஸே இல்லை.


வாசுதேவனாக நடித்திருக்கும் ஆதியை விடவும், சைக்கோ கணவனாக நடித்திருக்கும் நந்தாவே பிரமாதமாக செய்திருக்கிறார். எந்த நேரம் நல்லபடியாக பேசுகிறார். எப்போது சைக்கோவாக மாறிவிட்டார் என்பதை யூகிக்கவே முடியாத அளவுக்கு செய்திருக்கிறது இவரது கேரக்டர்.

மிருகம் படத்தில் காட்டிய ஒரிஜினாலிட்டி நடிப்பு ஆதிக்கு இதில் மிஸ்ஸிங்.. எல்லாருக்கும் வருவதுதான் வரும் என்பதால் இனி வரும் படங்களில் இவரிடம் உட்கார்ந்து மல்லுக்கட்ட வேண்டாம்..
ஒவ்வொரு காட்சியிலுமே கதையை நகர்த்திக் கொண்டே போவதால் மர்மம் கூடிக் கொண்டேயிருக்க.. நடிகர்களின் நடிப்புத் திறமை இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டு கதையே பிரதானமாக இருந்ததினால் நடிகர்களின் நடிப்பு இங்கு தேவையில்லாத ஒன்றாக இருக்கிறது.

சின்னச் சின்ன ட்விஸ்ட்டுகள் ரசிக்கும்படி உள்ளது. முன்னாள் மாமனாரை நந்தா பார்க்கப் போனதோடு காட்சியை கட் செய்ய அடுத்தக் காட்சியில் வாசுவின் முன்னாள் காதலி என்பதால்தான் அவன் இந்த வழக்கைத் தேவையில்லாமல் இவ்ளோ தூரம் இழுத்துவிட்டு டார்ச்சர் செய்வதாக காதலியின் அப்பாவின் புகார் மனுவோட டிஜிபி பேசுவது செம ட்விஸ்ட்..

பின்னணி இசை பல இடங்களில் பின்னியிருக்கிறது. டாய்லெட் சீனில் காதலன் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து அதிரும் காட்சி, காதலி தன் வீட்டில் கண்ணாடியை பார்த்து அலறும் காட்சி.. நந்தாவின் பார்ட்னர் காரில் போகும்போது ஆக்ஸிடெண்ட்டில் மாட்டும் காட்சி.. தண்ணீர் உருண்டோடி வந்து கொண்டிருப்பது.. என்று அத்தனை கொலைக்களத்திலும் புகுந்து விளையாடிருக்கிறார் புதிய இசையமைப்பாளர் தமன்.

பின்னணி இசை ஓகே என்றாலும் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ஏனோதானோவென்று போட்டு காட்சிகள்கூட மனதில் ஒட்டாமல் உள்ளது. அதில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாம்..


ஒளிப்பதிவும், இசையமைப்பும் படத்திற்கு பக்க பலம் என்றால் படத்தின் டப்பிங்கில் அநியாயத்திற்கு கோட்டை விட்டிருக்கிறார்கள். ‘பொக்கிஷம்’ படம் போலவே இதிலும் கேரக்டர்கள் உதடு பிரிக்காமலேயே பேசி நடித்திருக்க.. டப்பிங் கலைஞர்கள் பெரும்பாடுபட்டிருக்கிறார்கள். கால்வாசி வசனங்களை மென்று துப்பிவிட.. வசதிக் குறைவான தியேட்டர்களில் ரசிகர்கள்பாடு திண்டாட்டம்தான்.

ஷூட் செய்யப்பட்டிருந்த ஒரு கிளைக்கதையை எடிட்டிங்கில் தூக்கியெறிந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஹீரோயினுக்கு குழந்தை பிறந்து அது பள்ளி செல்லும் பருவத்தில் இருக்கும்போதுதான் இந்தக் கொலைகள் நடப்பதாக முன்பு ஷூட் செய்யப்பட்டிருந்ததாம். அது ‘ஆசை’ படத்தின் கதையை அப்படியே உல்டா பண்ணுவதுபோல் ஆகிவிடும் என்று கடைசியில் யோசித்தவர்கள், அந்த போர்ஷனையே தூக்கிக் கடாசிவிட்டார்களாம்.. எடுத்த காசு போயே போச்சு..


ஹீரோயின் தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்திருக்கும் சூழலிலும் கேஸில் மர்மம் உள்ளது என்பதற்காக ஒரு வலுவான காரணத்தைக் கொடுக்காதது ஒரு குறைதான். இன்னொன்று ஹீரோவின் தோற்றமே புரொபஸரை போல் இருக்க அவர் கையில் புத்தகத்தைக் கொடுத்து காலேஜுக்கு அனுப்பி அவர் கூடவே இருக்கும் மாணவ நண்பர்களாக நம்ம கேபிள் சங்கர் மாதிரி ரெண்டு புள்ளை பெத்த வயதானவர்களையே நடிக்க வைத்திருப்பது கொஞ்சம் காமெடி.. நல்லவேளை.. யாருக்கும் அதிகமான காட்சிகளைக் கொடுக்காமல் பட், பட்டென்று முடித்ததால் எதுவும் தப்பாகத் தோன்றவில்லை..

ஷங்கர் மெகா பட்ஜெட் இயக்குநர் என்றாலும், மினிமம் பட்ஜெட் தயாரிப்பாளர் என்ற பெயரையே எடுத்துள்ளார். மூணு கோடிதான் என்று திட்டம் போட்டுப் படத்தைத் துவக்கி, நாலரை கோடிவரை கொண்டு வந்த இயக்குநர் மீது அசாத்திய கோபத்துடன்தான் இருந்தாராம் ஷங்கர். ஆடியோ ரிலீஸ் பங்ஷனின்போது இந்த கோபம் வெளிப்படையாகத் தெரிந்தததாகச் சொல்கிறார்கள்.

ஆனாலும் கொடுத்த காசுக்கு வஞ்சகமில்லாமல் எடுத்திருக்கிறார் இயக்குநர். பாராட்டுக்கள்.. கதாநாயகி சிந்துமேனன் இத்திரைப்படம் வெளிவந்து சூப்பர் ஹிட்டானால் தனது மார்க்கெட்டும் ஏறும்.. தயாரிப்பாளர்கள் வந்து குவிவார்கள். அப்போது சம்பளத்தை ஏற்றிவிடலாம் என்று வந்த வாய்ப்புகளை ஏற்காமல் தட்டிக் கழித்து வந்தார். இனி அவர் சம்பளம் ஏறுமா என்பது சந்தேகம்தான்..

படத்தின் அனைத்துக் குறியிடூகளுமே மேல்தட்டு வர்க்கத்தையே சுற்றி சுற்றி வருவதால் இப்படம் பி அண்டி சி வட்டாரங்களில் எந்த அளவுக்கு எடுபடும் என்பது கேள்விக்குறி.

‘யாவரும் நலம்’ அளவுக்கு மிரட்டவில்லையென்றாலும் அதில் முக்கால்வாசியை இப்படம் தொட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்.

இதுவே இப்படியென்றால் அடுத்து வரவிருக்கும் ஷங்கரின் அடுத்தப் படமான இந்திரா செளந்தர்ராஜனின் கதை, மர்மதேச இயக்குநர் நாகாவின் ‘அனந்தபுரத்து வீடு’ எந்த அளவுக்கு மர்மத்தைக் காட்டப் போகிறதோ தெரியவில்லை..?

அதற்கு முன்பாகவே ‘இரட்டைச்சுழி’யை ரிலீஸ் செய்துவிட்டால் ஷங்கருக்கும், நமக்கும் நல்லது..

ஈரம் – பார்க்கலாம் ஒரு முறை..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: