இது எந்தப் படத்தோட சீனுன்னு சொல்லுங்க..?

08-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்த் திரைப்படங்களில் ஏதேனும் மனதைக் கவரும் காட்சிகளைக் காண்கின்றபோதும், வசனங்களைக் கேட்கின்றபோதும் எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாய் இருக்கிறதே என்று மனம் சந்தோஷப்படும்.

அதே சமயத்தில் ஏதாவது ஒரு வெளிநாட்டுத் திரைப்படத்தில் பார்த்த காட்சிகளாக இருந்து அது தமிழ்ப்படுத்தப்பட்டிருந்தால் ஓகே.. அந்த சீன்தானா என்று மனம் ஒரு கண்டுபிடிப்பாளர் நிலையில் கெக்கலிக்கும்.

யாருக்கு எது பிடிக்கிறதோ அதை மற்றவர்களுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் தவறில்லை. அதனால்தான் படித்த புத்தகங்களில் இருந்து நல்ல, நல்ல செய்திகளை நாமும் பல்வேறு இடங்களில் இருந்து தொகுத்து நமது வலைத்தளத்தில் வழங்குகிறோம். அந்த வகையில் கருத்து திருட்டு என்று சொல்லி சினிமாக்காரர்களை குற்றம் சொல்வதற்கு நமக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

நம்முடைய பாணி புத்தகங்களில் இருந்து தட்டச்சு செய்து வலைத்தளங்களில் வெளியிடுவது.. சினிமாக்காரர்களின் பாணி வேற்று மொழி திரைப்படங்களில் இருக்கும் காட்சிகளை நமது சினிமாவில் காட்டுவது.. இரண்டு ஒன்றுதானே..

எதற்கு பீடிகை.. விஷயத்துக்கு வருகிறேன்.


நேற்று தற்செயலாக நடிகர் நாகேஷ் அவர்களைப் பற்றிய சில புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தேன். அதில் நாகேஷ் 2003-ம் ஆண்டு ‘கல்கி’ இதழில் எழுதிய(சொன்ன) அவரது ‘வாழ்க்கை அனுபவங்களின் கதை’யைத் தொகுத்து ‘சிரித்து வாழ வேண்டும்’ என்ற தலைப்பில் ‘வானதி பதிப்பகம்’ புத்தகமாக வெளியிட்டிருக்கிறது.

அதில் ’10-ம் பக்கத்தில்’ துவங்கும் ‘பாஸ் மார்க் வாங்கினால் புத்திசாலியா?’ என்ற தலைப்புடன் கூடிய ‘3-வது அத்தியாயத்தில்’, அவருடைய சிறு வயது பருவத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நாகேஷ் மிக அழகாக விவரிக்கிறார். படிக்க, படிக்க எனக்குள் ஒரு ஆர்வத்தையும், முடிவில் ஒரு சின்ன எதிர்பாராத ட்விஸ்ட்டையும் தந்தது.

நீங்களும் படியுங்கள்..

இனி பேசுவது திரு.நாகேஷ்..

“என் அப்பா ரொம்பக் கண்டிப்பானவர். ‘நான் நன்றாகப் படிக்கணும். நல்ல மார்க் வாங்கணும்’ என்று எப்போதும் சொல்லும் டிபிகல் அப்பா.

தாராபுரத்தில் அக்ரஹாரத்தில் கடைசி வீடு எங்களுடையது. எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் ராமகாந்தராவ் என்று ஒருத்தர் இருந்தார். பள்ளிக்கூட ஆசிரியர். அவருக்கு கோபால் என்ற பையன். தினமும் பையனை விடியற்காலை நாலரை மணிக்கெல்லாம் எழுப்பிவிடுவார். பையனும் எழுந்தவுடன் சத்தம் போட்டுப் படிக்க ஆரம்பித்துவிடுவான். நிசப்தமான விடியற்காலை நேரத்தில், எதிர்வீட்டு கோபால் படிப்பது ஊருக்கே கேட்கும். எதிர்வீட்டில், விடியற்காலை எழுந்து சப்தம் போட்டு ஒரு பையன் படிக்கிறான் என்றால், மற்ற அப்பாக்கள் சும்மா இருப்பார்களா? என் அப்பாவும் என்னை தினமும் நாலரை மணிக்கு எழுப்பிவிடுவார். எழுந்திருக்காவிட்டால் அடிதான்..

எதிர்வீட்டுப் பையன் ‘அக்பர்’, ‘அசோகர்’ என்று உரக்கப் படிப்பது, எனக்குத் தொந்தரவாக இருக்கும் என்பது ஒரு பக்கம். ‘மனசுக்குள்ளேயே படிக்காதே.. உரக்க வாய்விட்டு சத்தம் போட்டுப் படி.. இல்லைன்னா நீ முழிச்சுக்கிட்டு இருக்கியா? தூங்கிட்டியான்னு எனக்குத் தெரியாது’ என்ற என் அப்பாவின் தொல்லை இன்னொரு பக்கம்.. எனவே, எதிர்வீட்டு சத்தத்தைவிட அதிகக் குரல் எடுத்து நானும் படிப்பேன்.

இந்த மாதிரிக் கூத்து பல நாள் அதிகாலையில் நடந்திருக்கிறது. நான், கோபால் உட்பட எங்கள் தெருவிலிருந்து ஏழெட்டு பேர் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுதினோம்.

ரிசல்ட்..?

எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை ரிசல்ட் வெளியானது. விடியற்காலையில் எழுந்து சப்தம் போட்டுப் படித்து ஊரை எழுப்பி, எனக்கும் திட்டு வாங்கிக் கொடுத்த எதிர்வீட்டுப் பையன் கோபாலைத் தவிர, எங்கள் தெருவிலிருந்து பரீட்சைக்குப் போன நாங்கள் எல்லோரும் பாஸ் பண்ணிவிட்டோம்.”

இனி உண்மைத்தமிழன்..

இப்போது புரிந்திருக்குமே இது எந்தத் திரைப்படத்தில் பார்த்த காட்சி என்று..?

படித்து முடித்தவுடன்தான் இதனை எங்கயோ விஷுவலாக பார்த்திருக்கிறோமே என்று தோன்றியது. புரிந்தவுடன் பரவாயில்லை. ஒரு சிறந்த வெற்றிப் படத்தில் இது இடம் பெற்றிருக்கிறது என்பதில் ஒரு சிறிய சந்தோஷம் எனக்குள் வந்தது.

‘பசங்க’ திரைப்படத்தில் நான் பார்த்து வெகுவாக ரசித்தக் காட்சிகளில் இதுவும் ஒன்று..!

நல்ல விஷயங்களை யார் எங்கேயிருந்து எடுத்தாலும், கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. திரைப்படத்தின் காட்சிகளில்கூட ‘அக்பர்’, ‘அசோகர்’ என்றே உண்மைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பெயர்களை வைத்ததில் இருந்தே, இயக்குநர் பாண்டிராஜின் ‘எடுத்துக் கொடுத்த நேர்மை’ எனக்குப் புரிகிறது.

ஒவ்வொருவரின் அனுபவங்கள்தான் மற்றவருக்கு பாடங்களாகும் என்பது உலகப் பழமொழி. அந்த வகையில் இயக்குநர் பாண்டிராஜ் மீதான நன்மதிப்பு எனக்குள் கூடுகிறது.

ஒருவேளை இயக்குநரின் சொந்த அனுபவமே இப்படியொரு காட்சியை வைக்கும் முடிவை அவருக்குள் ஏற்படுத்தியிருக்கலாம்.. இப்படியும் சில அனுபவங்கள் பலருக்கும் வாய்க்கும்தானே..

அப்படிப் பார்த்தால் நாகேஷின் வாழ்க்கையில் கிடைத்த ஒரு அனுபவம், இயக்குநர் பாண்டிராஜுக்கும் கிடைத்திருக்கிறது போலும் என்று நாம் நினைத்துக் கொள்வோம்.

என்ன நான் சொல்றது..?

புத்தகம் பற்றிய விமர்சனத்தை வேறொரு பதிவில் பார்ப்போம்..!

புத்தகம் பற்றிய விபரங்கள்

“சிரித்து வாழ வேண்டும்
நாகேஷின் வாழ்க்கை அனுபவங்கள்
தொகுப்பாசிரியர் எஸ்.சந்திரமெளலி
விலை ரூபாய் 100.
வானதி பதிப்பகம்
23, தீனதயாளு தெரு
தி.நகர்
சென்னை-600017.
தொலைபேசி எண் : 24342810 / 24310769
http://www.vanathi.in
vanathipathippakam@vsnl.net

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: