மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணை இவர்களுக்கு மட்டும் இல்லையா..?

18-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்ற மாதத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களும்,, மேற்படிப்பு படிக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் பயிற்சிக்கான உதவித் தொகையை உயர்த்திக் கொடுக்கும்படி தினம்தோறும் பல்வேறு வகையான போராட்டங்களை அறிவித்து நடத்தியபோதிலும் அசைந்து கொடுக்காமல் அரசிடம் அந்த அளவுக்கு நிதி இல்லை என்று கூலாக கை விரித்துச் சொன்ன அதே தமிழக அரசுதான், நடந்து முடிந்த சட்டமன்றத் தொடரின் இறுதி நாட்களில் ஒரு சின்ன முணுமுணுப்பு, கோரிக்கைகள், கேள்விகள்கூட எழாத நிலையிலும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளத்தை உயர்த்துவதாக அறிவித்தது.

சம்பளத்தை உயர்த்த வேண்டிய நிலைமையிலா பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களின் நிலைமை உள்ளது.? கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர மற்றக் கட்சி எம்.எல்.ஏ.க்களில் முக்கால்வாசி பேர் இப்போதே கோடீஸ்வரர்கள்தான்.

கட்சி அவர்களை தேர்தலில் நிறுத்தியபோதே “எத்தனை வருடங்களாக மக்கள் சேவை செய்து வருகிறீர்கள்..?” என்றா கேட்டார்கள்..? “எவ்வளவு செலவு பண்ண முடியும்..?” என்றுதானே சட்டையைப் பிடிக்காத குறையாகக் கேட்டிருக்கிறார்கள். நின்றார்கள்.. ஜெயித்தார்கள். இதோ இந்த ஐந்தாண்டு காலத்தில் கூட, குறைய என்றாலும்கூட தேர்தலுக்காக செலவழித்த தொகையைவிட பத்து மடங்கு சம்பாதித்துவிடுவார்கள். போதாதா..?

சம்பள உயர்வு.. சம்பள உயர்வு என்கிறார்களே.. இவர்களுடைய சம்பளக் கதையை பாருங்கள்..

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகச் சம்பளம் வழங்கப்படுகின்றது.

மகாராஷ்டிராவில் மாதம் 52 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் எம்.எல்.ஏ.க்களின் உதவியாளர்களுக்கான சம்பளம் 8000 ஆயிரம் ரூபாயும் அடக்கம். ஆனால் இதன்படி பார்த்தால் தமிழக எம்.எல்.ஏ.க்களுக்குத்தான் நாட்டிலேயே அதிக சம்பளம். தமிழகத்துக்கு அடுத்தபடியாக கோவா மாநிலத்தில் 45 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.

ஆரம்பத்தில் 250 ரூபாய் சம்பளமாக இருந்த தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் இன்று 50 ஆயிரம் ரூபாயைத் தொட்டுள்ளது. அதுவும் 2006-ல் அமைந்த இந்த தி.மு.க. ஆட்சியின் துவக்கத்தில் 16 ஆயிரம் ரூபாய் மட்டுமே எம்.எல்.ஏ.க்கள் வாங்கிய நிலையில், மூன்றாண்டுகளில் மூன்று மடங்கு சம்பளம் மற்றும் இதரப் படிகள் உயர்த்தப்பட்டுள்ளன.

தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு 1964-ம் ஆண்டு 250 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டது. எவ்வித படிகளும் கிடையாது.

இதுவே 1971-ல் ஈட்டுப்படியாக 100 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டது. 1978-ல் ஈட்டுப்படி 350 ரூபாயாகவும், தொலைபேசி படியாக 150 ரூபாயும் சேர்த்து மொத்தம் 750 ரூபாய் வழங்கப்பட்டது.

கடந்த 2007-ம் ஆண்டு வரை 2000 ரூபாய் வரை என்ற அளவிலேயே இருந்தது. எனினும் 1997-ல் ஈட்டுப்படி 3500 ரூபாயாகவும், தொகுதி படி 625 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.

1998-ல் தொகுதிபடி, தபால்படி ஆகியவை தலா 875 ரூபாயாகவும், தொலைபேசிபடி 1750 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. 1999-ல் தொலைபேசிபடி மட்டும் 1000 ரூபாய் உயர்த்தப்பட்டு 2750 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. அப்போதுதான் மொத்தச் சம்பளம் பத்தாயிரம் ரூபாயைத் தாண்டியது.

பின்னர் 2002-ம் ஆண்டு புதிதாக தொகுப்புபடி என 2000 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டது. 2001-ல் ஈட்டுப்படி 4000 ரூபாயாகவும், தபால்படி 2000 ரூபாயாகவும், தொலைபேசிபடி 4000 ரூபாயாகவும், தொகுப்பு படி 2500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இதனால் மொத்தச் சம்பளம் 16 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது.

அதிமுக ஆட்சி அமைந்த 2001-ல் உயர்த்தப்பட்ட இந்த 4000 ரூபாய் உயர்வைத் தவிர அந்த ஆட்சி முடியும்வரை எம்.எல்.ஏ.க்களுக்கான சம்பளம் மற்றும் படிகள் உயர்த்தப்படவில்லை.

தி.மு.க. ஆட்சி 2006-ல் வந்ததும் ஈட்டுப்படியில் 2000 ரூபாய், தொகுதி படியில் 2000 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் மொத்தம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றனர்.

இதற்கு அடுத்த ஆண்டான 2007-ல் புதிதாக வாகனப்படி என 5000 ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் 2008-ல் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் 2000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாக கடந்தாண்டு உயர்த்தப்பட்டது. அப்போது ஈட்டுப்படி, தொகுதிபடி, தபால்படி, தொலைபேசிபடி ஆகியவை தலா ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு மொத்தம் 30 ஆயிரம் ரூபாயாக மாறியது.

இந்த ஆண்டு ஏப்ரலில் வாகனப்படி 5000 ரூபாயில் இருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் சம்பளம் 3000 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதால் மொத்தச் சம்பளம் 50 ஆயிரமாக மாறியுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 1.21 கோடி ரூபாய் செலவாகும்.

இப்போது ஆட்சியில் அள்ளிக் கொண்டிருப்பவர்களை மட்டும் கவனித்தால் போதுமா..? ஏற்கெனவே பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களைக் கவனிக்க வேண்டாமா..?

இதன்படி முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் 8 ஆயிரம் ரூபாயில் இருந்து பத்தாயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. நான்காயிரம் ரூபாய் ஓய்வூதியமாகப் பெறும் அல்லது ஒரு ஆண்டுக்குக் குறைவாக எம்.எல்.ஏ. பதவி வகித்தவர்களுக்கும் இந்த உயர்வு நீட்டிக்கப்படும். இதனால் அரசுக்கு 2.25 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

மறைந்த எம்.எல்.ஏ.க்களின் வாரிசுகளுக்குக் குடும்ப ஓய்வூதியமாக 2 ஆயிரம், 3 ஆயிரம், 4 ஆயிரம் என மூன்று நிலைகளில் வழங்கப்படுகிறது. இந்த வேறுபாடுகளைப் போக்கி அனைவருக்கும் ஒரே வீதத்தில் குடும்ப ஓய்வூதியமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தும்போது குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் அதில் 50 சதவிகிதம் உயர்த்தப்படும்.

அரசு மருத்துவமனைகளில் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இலவச சிகிச்சையளிப்பதைப் போல மறைந்த எம்.எல்.ஏ.க்களின் வாரிசுகளுக்கும் இலவச சிகிச்சையளிக்கப்படும். இந்த ஊதிய உயர்வுகள் அனைத்தும் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலாக்கப்படும்.

முதல்வர் மற்றும் அமைச்சர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு வாகனங்களை அரசே கொடுப்பதால் வாகனப்படி கிடையாது. தொலைபேசிபடி, தபால்படி போன்றவையும் கிடையாது. எனினும் இவற்றை பயன்படுத்த வரம்பு ஏதும் இல்லாததால் எவ்வளவு வேண்டுமானாலும் அமைச்சர்கள் பயன்படுத்தலாமாம்.. இதனால் அமைச்சர்களைப் பொறுத்தவரையில் 28 ஆயிரம் ரூபாய்தான் சம்பளமாகப் பெறுவார்களாம்.

தமிழ்நாட்டில் ஒரு தமிழனின் சராசரி மாத வருமானம் 2 ஆயிரம் ரூபாயைக்கூடத் தொடவில்லை. ஆனால் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் 50000 ரூபாயைத் தொட்டுவிட்டது..

இதோ இன்றைக்கு அங்கன்வாடி பணியாளர்களும், சத்துணவு பணியாளர்களும் ஊதிய உயர்வு கேட்டு கோட்டைவரை ஊர்வலம் நடத்தப் போவதாக அறிவித்தவுடன் அரசே பத்திரிகைகளில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

அதன்படி பார்த்தால் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கான மாதச் சம்பளம் குறைந்தபட்சம் 3180 என்றும், அதிகப்பட்சம் 4134 என்றும் அரசே ஒத்துக் கொண்டுள்ளது.

இதை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்..? ஒரு குடும்பத்துக்கு மாதம் 4000 ரூபாய் போதும். அதிலேயே அவர்களால் குடும்பம் நடத்த முடியும் என்று அரசே முடிவு செய்தால், இதே அளவு சம்பளத்தை எம்.எல்.ஏ.க்களுக்கும் கொடுக்கலாமே.. அவர்களுக்கு மட்டும் ஏன் 50000 ரூபாய் சம்பளம்..?

ஏற்கெனவே எம்.எல்.ஏ.க்களுக்கான நிதியில் கமிஷன்.. மணல் கொள்ளையைக் கண்டு கொள்ளாமல் இருக்க கமிஷன்.. அந்தத் தொகுதிக்குட்பட்ட போக்குவரத்து கழகங்களில் ஆள் சேர்க்க கமிஷன்.. ரோடு, காண்ட்ராக்ட் பணிகளில் கொள்ளை கமிஷன்.. என்று சகலவிதங்களிலும் பணம் சேர்த்துக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு சம்பளம் கொடுப்பதே வேஸ்ட்.. இதுல இன்னும் சம்பள உயர்வு வேறயா..?

இப்போது விலைவாசி விற்கின்ற விலையில் பருப்பையும், புளியையும் கடையில் கண்ணால் பார்த்துவிட்டு பேசாமல் வீட்டுக்கு வரலாம் போலிருக்கிறது. இந்த லட்சணத்தில் கடைநிலைப் பணியாளர்களான இவர்களுக்கே இது போதும்.. அடங்கிட்டுப் போங்க என்று எச்சரிக்கும் அரசு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து பணத்தை நீட்டுவதன் காரணம் என்ன..?

கூட்டுக் கொள்ளைதானே..? “நான் நிறைய அடிக்கிறேன்.. அதுல உனக்கும் கொஞ்சம் கொடுக்குறேன்.. சத்தம் போடாம இரு..” என்று அன்பாக பணத்தால் அடித்து வெளிப்படையாகச் சொன்னால் லஞ்சமாக அரசு செலவிலேயே கொடுத்து அற்புதம் செய்திருக்கிறது இந்த அரசு.

இந்த லட்சணத்தில் கூடவே இன்னொரு கொடுமையும் அன்றைக்கு நடந்தது.. சென்னையை அடுத்த சோளிங்கநல்லூரில் தலா இரண்டரை கிரவுண்டு நிலத்தினை எம்.எல்.ஏ.க்களுக்கு ஒதுக்கீடு செய்யவும் அரசு முடிவெடுத்துள்ளதாக அன்றைக்கு சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்தார்.

மக்களுக்காக ஒரு கக்கூஸ் கட்ட வேண்டுமென்றால்கூட “அடுத்த வருஷம் கட்டலாம். கைல காசு இல்லை.. பட்ஜெட்ல துண்டு விழுகுது..” என்றெல்லாம் வசனம் பேசி சமாளிக்கும் இந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அச்செய்தியைக் கேட்டவுடன் நிமிட நேரத்தில் முதல்வர் பேசிக் கொண்டிருக்கும் அந்த நேரத்திலேயே, அவர்களுக்குள்ளேயே கையெழுத்து வேட்டை நடத்தி முதல்வரிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்துள்ளார்கள்.

இந்தக் கூத்தை எங்க போய் சொல்றது..?

இது மாதிரியான மின்னல் வேக நடவடிக்கைகளை என்றைக்காவது இவர்கள் மக்கள் நலப் பணிகளில் காட்டியிருக்கிறார்களா..?

இன்றைக்குக்கூட காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரப்பாக்கம் ஏரிக்குள் புத்தகப் பையைத் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு இடுப்பளவு தண்ணீரில் நடந்து வந்து கரையில் ஏறியவுடன் மாற்று உடை அணிந்து கொண்டு பள்ளிக்குச் செல்லும் நிலைமையில் மாணவர்களும், மாணவிகளும், அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் இருக்கிறார்கள்.

இதனைப் பற்றி இவர்கள் ஏன் இவ்வளவு அக்கறையாகக் கவலைப்படவில்லை.. தங்களுக்கு என்றவுடன் இந்த அயோக்கியர்களுக்கு எவ்வளவு வேகம் பிறக்கிறது பாருங்கள்.. இவர்களெல்லாம் மக்கள் பணி செய்யவா வந்திருக்கிறார்கள்?

எதிர்ப்புகள் எழுந்தவுடன் “அப்படியொரு பேச்சுதான் இருக்கிறது.. சும்மா தர மாட்டோம்.. காசு வாங்கிட்டுத்தான் தருவோம். அதுக்கும் அவங்க ஒத்துக்கிட்டாங்க..” என்றெல்லாம் பூசி, மெழுகியிருக்கிறார் முதல்வர்.

தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி அந்தப் பகுதியில் ஒரு கிரவுண்டு நிலம் 30 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இரண்டரை கிரவுண்ட் என்றால் 75 லட்சம் ரூபாய் வருகிறது.. இந்த அளவுக்கு பெரும் தொகையில் நிலத்தை விற்றாலும், வாங்குவதற்கு எம்.எல்.ஏ.க்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு எதற்கு சம்பள உயர்வு..?

தெரியாமல்தான் கேட்கிறேன்.. இந்த எம்.எல்.ஏ.க்களும், இவர்கள் சார்ந்த கட்சிக்காரர்களும் மேடைதோறும் “நான் மக்களுக்காக உழைப்பவன்.. ஓய்வு, உறக்கம் இன்றி உழைப்பவர்கள், போராடுபவர்கள்.. மக்கள் சேவையே மகேசன் சேவை.. கொள்கை குன்றுகள் நாங்கள்.. மக்களுக்காக உயிரைக்கூட விடுவேன்.. அதை செய்வேன்.. இதைச் செய்வேன்.. அப்படி பிடுங்குவேன். இப்படி கிழிப்பேன்..” என்றெல்லாம் வாய் கிழிய வக்கனை பேசுகிறார்களே..

இந்த சம்பளத்தை மட்டும் எப்படி வெட்கமில்லாமல் கை நீட்டி வாங்கிக் கொள்கிறார்கள்..?

மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணையெல்லாம் எங்களுக்கு இல்லை என்று சொல்லாமல் சொல்கிறார்களோ..?

வாழ்க இந்திய ஜனநாயகம்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: