பொக்கிஷம் – திரை விமர்சனம்

முருகன் துணை


சென்னை

14-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களுக்கு..!

உங்களுடைய அன்பு உண்மைத்தமிழன் எழுதுவது..

நான் இங்கு நலம்.. நீங்கள் நலம்தானே.. எத்தனை நாட்கள்தான் நேருக்கு நேராக பேசுவது.. போனில் பேசுவது.. ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமே என்று இன்றைக்கு கடிதம் மூலமாக உங்களிடம் பேசுகிறேன்.

காரணம் நம்ம இயக்குநர் சேரன் அண்ணன்..!

தமிழ்ச் சினிமாவுக்குள் வருகின்ற இயக்குநர்களும், கோலோச்சுகின்ற இயக்குநர்களில் பெரும்பாலோரும் “உள்ள வந்தோமா? ரெண்டு படம் பண்ணினோமா? நாலு காசு பார்த்தோமா? வீடு, வாசல் வாங்கினோமா? பொண்டாட்டி, புள்ளை, குட்டிக பேர்ல சொத்து வாங்கினோமா..? செட்டில் ஆனோமா?”ன்னு இருக்கும்போது இவரை பாருங்க.. பொழைக்கத் தெரியாத மனுஷன்..

“படத்துக்குப் படம் ஏதாவது சொல்லணும் பாஸ்.. செய்யணும் பாஸ்.. மக்களை உசுப்பி விடணும் பாஸ்.. சிந்திக்க வைக்கணும் பாஸ்.. படம் பார்த்து முடிச்சவுடனே அவனவன் தனக்குள்ள இருக்குற அந்த பழைய டயரிக் குறிப்பைத் திறந்து படிக்கணும் பாஸ்..” அவனை கிளறிவிடுறதுலதான் இருக்கு ஒரு இயக்குநரோட வெற்றி – இப்படி ஒரேயொரு குறிக்கோளோடு தொடர்ந்து திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார் சேரன் அண்ணன்.

2 ஆண்டுகளுக்கு முன்பு வந்த அவருடைய மாயக்கண்ணாடி பல பேருடைய நிஜக்கண்ணாடியை உடைத்தெரிந்தது எனக்கு நன்கு நினைவிருக்கிறது.

தன்னைத் தானே ‘திறமையானவன், விண்ணுலகை மண்ணுக்குக் கொண்டு வருபவன்.. வித்தகன், ஜெயிப்பதற்காகவே பொறந்தவன்.. என்னை ஜெயிக்க யாரும் இல்லை’ என்றெல்லாம் கற்பனா உலகத்தில் மிதந்து திரிந்து அலைந்து கஷ்டப்பட்டு, பின்பு உண்மை தெரிந்து கண் விழித்துப் பார்ப்பதற்குள் எத்தனை தூரம் வாழ்க்கையோட்டத்தில் பின் தங்கியிருக்கிறோம் என்பதை மட்டுமே உணர முடிந்த என்னைப் போன்ற ஒரு சில அபாக்கியவாதிகளின் கதையைத்தான் அந்த மாயக்கண்ணாடியில் சுண்டிவிட்டிருந்தார்.

அதற்குப் பின் ‘இரண்டாவது ஆட்டோகிராப்’ என்று அவராலேயே சொல்லப்பட்டு வெளி வந்துள்ளது இந்த ஆட்டோகிராப் பார்ட் டூ ‘பொக்கிஷம்’.


எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் படம் திரைக்கு வந்துள்ளது. இன்று காலை முதல் காட்சியை ‘உதயம் தியேட்டரில்’ பார்த்தேன். ஹவுஸ்புல்தான்.. எனக்கே ஆச்சரியமாக இருந்தது. பள்ளிக்கூடச் சிறுவர்கள், வேலை வெட்டி இல்லாத வாலிபர்கள் என்றில்லாமல் பல்வேறு தரப்பட்டவர்களும் வந்திருந்தது சேரன் மீதான அவர்களது நம்பிக்கையையே காட்டுகிறது.

லெனின் என்கிற கப்பலில் வேலை செய்யும் ஒரு இந்து பொறியாளனுக்கும், நதீரா என்கிற முஸ்லீம் பெண்ணுக்கும் 1970-களில் ஏற்பட்ட காதல் கதையே இத்திரைப்படம்.

லெனினின் மகன் மகேஷின் மூலமாகத்தான் திரைப்படம் துவங்குகிறது.. கல்கத்தாவில் பணியாற்றிக் கொண்டிருந்த லெனின் தனது தந்தையின் ஆபரேஷனுக்காக சென்னை வந்தவன், அதே மருத்துவனையில் பக்கத்து படுக்கையில் அட்மிட்டாகும் அம்மாவுடன் வரும் நதீராவைப் பார்க்கிறான்.

இப்படி பார்த்து, பேசி, பழகி, அவளுக்கும், அவளது தாயாருக்கும் பல உதவிகள் செய்து, அவளுடைய தமிழ் இலக்கிய ஆர்வத்திலும், பேச்சிலும் ஈர்க்கப்பட்டு அவளுடன் காதல் கொள்கிறான். அந்தக் காதல் வெற்றி பெற்றதா இல்லையா என்பதே இந்த பொக்கிஷம்..

படத்தின் முற்பகுதியில் லெனின்-நதீரா காதல் முழுவதுமே இலக்கியங்களாலேயே எழுதப்பட்டிருக்கிறது.. தொடரப்பட்டிருக்கிறது.. வார்த்தைகள், தோய்ந்த தமிழ் எழுத்துக்களால் படிக்கப்படுகிறது. ஒரு அளவுக்கு மேல் போனால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதைப் போல், திரையரங்கில் அளவுக்கு மீறிய சலசலப்பு.. வெளிநடப்பு.. கோபம்.. கிசுகிசு.. செல்போன் பேச்சு என்று முதல் காட்சியிலேயே என்னை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.

பாடல் காட்சிகளிலும் கவிதைத்தனமாகவே அண்ணன் சேரன் எடுத்துத் தள்ளியிருப்பதால் முதல் காட்சி ரசிகர்களுக்கு அது உகந்ததாக இல்லை என்பதை உணர முடிந்தது. ஆனால் காட்சிகள் அருமையாகத்தான் இருந்தன.

திரைக்கதை இவ்வளவு இறுக்கமாக இருக்கும் என்று நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. காதல் கதை என்பதால் காதலில் என்னவெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்த்து வந்திருந்த ரசிகர்களுக்கு இது 1970-ல் நடக்கும் இலக்கியக் காதல் என்பதை புரிய வைப்பது எப்படி என்பதே புரியவில்லை.

மகேஷ் டிரங்க் பெட்டியைத் திறந்து தனது தந்தையின் காதல் கடிதங்களைப் பார்க்கின்றபோதே அருகில் இருக்கும் ‘முறியடிப்பு’ என்கிற ரஷ்ய நாவலைப் பார்த்தபோதே, கதை எனக்குப் புரிந்துவிட்டது.. குறியீடாகத்தான் தனது காதலை துவக்கியிருக்கிறார் அண்ணன் என்று.

நதீரா தனது காதலை வெளிப்படுத்திய கடிதத்தை பார்த்தவுடன் கண் கலங்கி அழுகும் நிலையில் சேரனை பார்த்தபோது, கொஞ்சம் கோபம்தான் வந்தது. இன்னும் எத்தனை படங்களில்தான் இவர் இத்தனை மென்மையானவராக நடிப்பார் என்று தெரியவில்லை.

நதீராவைத் தேடியலையும்போது ஊர், தெரு, வீடு, போஸ்ட் ஆபீஸ், வயல், கடல், என்று குறியீடுகளாகத் தொட்டுக் காண்பித்து கடைசியில் உடைந்து போன படகில் தனது உடலைத் திணித்துக் கொண்டு கிடப்பது பரிதாபம்தான்.

நதீராவாக நடித்திருக்கும் பத்மப்பிரியா இப்படத்திற்காக ஹோம்வொர்க்கே செய்திருக்கிறார். நாகூர் பகுதியில் ஒரு முஸ்லீம் குடும்பத்து வீட்டிற்கே சென்று அவர்களுடன் ஒரு வாரம் தங்கியிருந்து மேற்படி முஸ்லீம் வீட்டுப் பெண்கள் எப்படி இருப்பார்கள் என்றெல்லாம் டிரெயினிங் எடுத்தாராம்.

போர்வையைப் போன்று அந்த பர்தாவைப் போர்த்திக் கொண்டு பாதி கண்களைக் காட்டி எந்த ஆடம்பரமும் இல்லாமல் அறிமுகமாகும் அந்தக் காட்சியே அழகானது. பார்வையிலேயே அவரது அறிவு தென்படும் அழகு இருப்பதால் பி.ஏ. தமிழ் லிட்ரேச்சர் படிப்புக்கு ஏற்ற முகம்தான்..

முந்தைய இவருடைய படங்களில் பார்த்த அளவுக்கான நடிப்பு இப்படத்தில் இல்லை என்பேன். அடக்கியே வாசிக்க வைக்கப்பட்டிருக்கிறார் அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்படி.. ஒரு முஸ்லீம் குடும்பத்து பெண் எப்படி உருவாக்கப்பட்டிருப்பாள், வளர்க்கப்பட்டிருப்பாள் என்பதைத்தான் சேரன் வன்மையாக இதில் காட்டியிருக்கிறார்.

அந்த பர்தாவை அணிந்து கொண்டு ஒரு ஐந்து நிமிடம்கூட நம்மால் நிற்க முடியாது.. எப்படித்தான் அந்தப் பெண்கள் அணிகிறார்களோ தெரியவில்லை. ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாட்டுக்கு முதல் உதாரணம் அந்த பர்தாதான் என்பதில் எனக்கு இன்றைக்கும் சந்தேகமில்லை.

காதல் கடிதங்களில் தனது தமிழை நுழைத்து விளையாடி, அவ்வப்போது பேசி, பாடல் காட்சிகளில் நடந்து, திரிந்து அலைந்து அவ்வளவுதான் நதீரா என்று நினைத்தபோது..

அந்த கடைசி 20 நிமிடங்கள்தான் திரைப்படமே.. வெளியில் எழுந்து போன ரசிகர்கள் இறுக்கத்தை உடைத்து உள்ளே ஓடி வந்தார்கள். தனது அப்பா கண்டுபிடிக்க முடியாமல் போன காதலி நதீராவுக்கு அனுப்புவதற்காக வைத்திருந்த காதல் கடிதங்களை நதீராவைத் தேடிக் கண்டுபிடித்து அவளிடம் அந்தக் கடிதத்தை ஒப்படைக்க முயல்கிறான் மகேஷ்.

இந்தத் தேடுதலும், நதீரா கிடைப்பாளா..? எந்தக் கோலத்தில் இருப்பாள்..? என்னவாக இருப்பாள்..? என்கிற ஆர்வத்தையும் கொஞ்சம் வெறியோடு கொண்டு போயிருக்கிறார் சேரன். பதட்டம் நிலவிய சூழல் அது.

அந்த வயதான நதீராவுக்குள் அந்தக் கடிதங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தையும் அவளுடைய குடும்பம் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் மனதை நெகிழ வைத்தது.

இந்த கடைசி 20 நிமிடங்களுக்கான லீடாக அவர் கொடுத்திருக்கும் இரண்டு மணி நேர இலக்கிய யுத்தத்தையும், குடும்பக் கதையையும் பார்க்கத்தான் நமக்கு பொறுமை வேண்டும். எனக்கு இருந்தது.. மற்றவர்களுக்கு..?

சேரனின் அப்பாவாக விஜயகுமார். வழக்கம்போல மென்மையான அப்பாவாக, சோலாவாக நடித்துக் கொடுத்திருக்கிறார். சேரனின் மனைவியாக ஒரு புதுமுகம். மேக்கப் எந்தவிதத்திலும் அவர் வயதானவர் என்பதைக் காட்டவில்லை. ஆனால் நடிப்பு அருமை..

நதீராவும், சேரனின் மனைவியும் போனில் பேசிக் கொள்ளும் காட்சியில் இருக்கும் ஆழம் நிச்சயம் பெண்களின் தனி உலகத்தைக் காட்டியிருக்க வேண்டும். அது மிஸ்ஸாகிவிட்டது என்று நினைக்கிறேன்.

நதீராவின் அப்பாவாக நடித்திருப்பவர் படு இயல்பு. அவரைப் போலவே அவரது வீடும் இருக்கிறது.. “முஸ்லீம் வீடுங்கிறதால வீட்டுக்குள்ள வெளி ஆளை அனுமதிக்க மாட்டோம். ஆனா நீங்க எங்களுக்கு பெரும் உதவி செய்தவர்ங்கிறதால அதையெல்லாம் நான் பார்க்கலை..” என்று சொல்கின்றபோது முஸ்லீம சமுதாயத்தினரின் கட்டுப்பெட்டியான அந்த விதிமுறைகள் மீதிருக்கும் கோபம் தெறிக்கிறது.

“மதமா, மனிதனா என்று பார்த்தால் நான் மனிதனே முக்கியம்” என்பேன் என்று சொல்லும் நதீராவின் அப்பா, பிறகு குடும்பத்தோடு காணாமல் போய்விடுவதைப் பார்க்கின்றபோது மதங்களின் பெயரால் மனிதன்தான் எத்தனை, எத்தனை வேஷங்கள் போடுகிறான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

1970-களில் கலப்புத் திருமணங்கள் சொற்ப அளவில் நடந்து கொண்டிருக்கும்போது அதனை ஏற்கத் தயங்கும் ஒரு குடும்பத்துப் பெண்ணாக நதீராவைக் காட்டியதிலேயே சினிமா கதை இப்படித்தான் இருக்கும் என்கிற சின்ன முணுமுணுப்பை திரையரங்கில் கேட்க முடிந்தது.

முஸ்லீம் பெண்களுக்குத்தான் எத்தனை, எத்தனை கஷ்டங்கள்..? ‘வெளியாட்கள் யாரைப் பார்த்தாலும் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும்..’ ‘உடல் முழுக்க போர்த்திக் கொண்டுதான் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டும்’. ‘வெளி நபர்களிடம் பேசக் கூடாது..’ ‘பழக்கம் கூடாது’ என்று காட்டுமிராண்டித்தனமான இந்தப் பழக்கத்தை தட்டிக் கேட்கும் வாய்ப்பு அண்ணன் சேரனுக்கு இருந்தும், அவரது ஒரே நோக்கம் ‘காதல்’தான் என்பதால் அதனை லேசாகத் தொட்டுப் பார்த்து அகன்றுவிட்டார்.

மருத்துவமனையில் ஆபரேஷனுக்காக வந்து படுத்திருக்கும் நதீராவின் தாயாரே மிகக் கஷ்டப்பட்டு பேசும் நிலையில் இருக்கும்போது தனக்காகவும், நதீராவுக்காகவும் பேச வருகின்ற காட்சியே இதற்கு சாட்சி. இப்படியொரு சூழல் முஸ்லீம் பெண்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்.. வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டாமா..? என்று தணியும் இந்தக் கொடுமை..

கல்கத்தாவில் தபால் ஆபீஸில் கடிதத்தை போடுவதும், அஞ்சல் பெட்டி அருகேயே கால் கடுக்க நிற்பதும், மழையில் தோய்ந்து நின்று கடிதத்துக்காகக் காத்திருப்பதும், தபால்காரரின் பின்னாலேயே போய் தபால் தமிழ்நாட்டுக்குப் போகிறதா என்று செக் செய்வதுமாக அவருடைய திரைக்கதை அவ்வப்போது பாடல் காட்சிகளின் இடை, இடையே வருவதால் முழுவதுமாக ரசிக்க முடியாமல் போய்விட்டது.

பாடல்கள் அனைத்துமே இலக்கியம்தான்.. ‘அஞ்சல்பெட்டி’ பாடலும் ‘நிலா, நீ வானம் காற்று மழை’ என்கிற பாடலும் முழுமையாக இசையை ஓரங்கட்டி வார்த்தைகளை முன் நிறுத்தி வைத்திருக்கின்றன. சபேஷ்-முரளியின் பின்னணி இசைதான் எந்தவிதத்திலும் படத்தின் கதையோடு ஒன்றவில்லை. இறுக்கத்தைக் கொடுத்திருக்கும் கதைக்கு பொருத்தமான இசை இல்லாமல் போய் ஒருவித நழுவல் தென்படுகிறது.

அந்த இறுதி கிளைமாக்ஸ் காட்சியில்கூட சாதாரணமாக விசிறியிருப்பதை நினைத்தால் வருத்தம்தான் வருகிறது. எந்தவொரு உருக்கத்திலும் அதன் தாக்கத்தில் பாதியை பின்னணி இசைதான் உருவாக்க வேண்டும்.. அது இங்கே மிஸ்ஸிங்..

இடைவேளையின்போது போடப்படும் கார்டுகள் மிகப் புதுமையாக இருந்தது. இப்படியும் யோசிக்க வேண்டும் என்பதை அடுத்தக் கட்ட இயக்குநர்களுக்குச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் சேரன்.

கல்கத்தாவையும், துறைமுகத்தையும், செப்பனிடப்பட்ட அந்தக் கால இடங்களையும் படம் பிடித்திருப்பதில் அழகு தெரிகிறது. ஒளிப்பதிவாளர் ராஜேஷ்யாதவிற்கு பாராட்டுக்கள்..

படத்திற்காக மிக மிக மெனக்கெட்டிருக்கிறார் அண்ணன் சேரன். மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார். பிரேம் பை பிரேம் செதுக்கியிருக்கிறார் என்பதை பார்த்தாலே தெரிகிறது. பாராட்டியே தீர வேண்டும்..

1970-களில் நடக்கக் கூடிய கதை என்பதால் அதற்கான அடையாளங்களைத் தேடித் தேடிப் பிடித்திருக்கிறார். லூனா மொபெட், ஸ்கூட்டர், மாட்டு வண்டி, சைக்கிள் ரிக்ஷாக்கள், ரூபாய் நோட்டுக்கள் என்று சகலத்தையும் செய்தாலும் இரண்டு இடங்களில் கோட்டை விட்டார் என்று நினைக்கிறேன்.

1970-களில் பேருந்துகளில் “கரம், சிரம் புறம் நீட்டாதீர்” என்பது பதிவாகியிருந்ததா என்பது எனக்கு சந்தேகம் அளிக்கிறது. இந்த வார்த்தையை நான் 1980-களில்தான் முதன் முதலாகப் பார்த்தேன். அடுத்து, லெனின் நதீராவை காரைக்கால் பேருந்து நிலையத்தில் வைத்து சந்திக்கும்போது எம்.ஜி.ஆர். பட சினிமா போஸ்டர்களுடன், இந்தக் கால டிஸைன் போஸ்டர் ஒன்றும் கண்ணில் பட்டது.

ஒரு திரைப்படத்தின் வெற்றி, தோல்வி என்பது ரூபாய் நோட்டுக்களால் அடையாளம் காட்டப்படும் சூழலில், தமிழகத்து ரசிகர்களிடையே இத்திரைப்படம் எப்படி எதிர்கொள்ளப்படும் என்பதில் எனக்கு பெரும் அச்சம் உள்ளது.

காதல் கதைகளை காதலர்களிடமிருந்து பிரித்தெடுத்து அவர்களது காதலை அவர்களிடமே காண்பித்து வசூலை அள்ளிக் கொண்டு போன பல திரைப்படங்களில் இருந்து ஒப்பீட்டுப் பார்த்தோமானால் இந்தத் திரைப்படம் இன்னுமொரு ‘ஆட்டோகிராப்’தான்.. சந்தேகமில்லை. அழுத்தம் இருக்கிறது. ஆனால் வெகுஜனத்திற்கு அது புரியுமா என்பது தெரியவில்லை. திரைக்கதையில் சுவாரசியமும், ஈர்ப்பும் இல்லாமல் போனது நமது துரதிருஷ்டம்.

சேரனின் படைப்பு வெறியை மேலும் கூட்டும்வகையில் இத்திரைப்படம் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்..

இலக்கிய காதலர்களைப் பற்றி இலக்கியங்களால் இலக்கியத்தனமாக இயக்கப்பட்ட பொக்கிஷமான இலக்கியத் திரைப்படம் இது..

அண்ணன் சேரனின் கடுமையான உழைப்பிற்கு எனது ராயல் சல்யூட்..

எனது பொக்கிஷம் திரைப்பட விமர்சனத்தை இத்துடன் முடிச்சுக்கிறேன் மக்களே..

பதிவர்கள் அனைவரும் உடம்பை கவனிச்சுக்குங்க.. வேற ஏதாவது விஷயம் இருந்தா லெட்டர் போடுங்க..

மறுபடியும் அடுத்த திரைப்பட விமர்சனத்தில் சந்திப்போம்..

நன்றி..!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: