ஒரு நட்பு முறிந்த சோகக் கதையைக் கேளுங்க..!

21-07-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


ரொம்ப நாளாக தொடர்பு கொள்ளாமல் இருந்த தம்பி சக்தி(புனை பெயர்) இன்று காலை திடீரென்று தொடர்பு கொண்டு தடித்த வார்த்தைகளால் கதறினான்.

“அண்ணே.. நம்ம கோபி(புனை பெயர்) இப்படி செய்வான்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலே.. மானம், மரியாதை போச்சுண்ணே.. வீட்ல வொய்ப் திட்டித் தீர்க்குறா.. போன் மேல போன் வருது.. மாமனார் ஊர்ல இருந்து கிளம்பிட்டாராம்.. மாமியாரே நொச்சுப் பிடிச்சாப்புல பேசுறாங்க.. இவனுக்கு ஏண்ணே இந்த வேலை..? ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லிட்டு வர வேண்டியதுதாண்ணே..” என்றான்.

இவனது போனை எதிர்பார்த்து நான் காத்திருந்ததால் எனக்கு ஒன்றும் பெரிய அதிர்ச்சியோ, ஆச்சரியமோ இல்லை. இவனும் இவனது சார்பு கதையை முழுதாகச் சொல்லி முடிக்கட்டும் என்று காத்திருந்தேன். எதிர்பார்த்தது போலவே இவனும் அவனது கதையைச் சொன்னான்.

அதற்கு முன்பாக இருவரின் கடந்த கால வாழ்க்கைக் கதையை சுருக்கமாகப் பார்ப்போம். கோபியும், சக்தியும் நீண்ட கால குடும்பத்து நண்பர்கள். இருவர் வீடும் அடுத்தடுத்தத் தெருக்களில்.. ஒரே பள்ளியில் ஒன்றாகவே படித்து வளர்ந்தவர்கள். பள்ளி நாட்களில் சக்தியின் வீட்டில் சமைக்கவில்லையெனில் அவன் நேராக கோபியின் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு மதியம் சோத்தையும் அங்கேயே கட்டி பார்சல் செய்து எடுத்துச் செல்வான்.

அதேபோலத்தான் கோபியும். தன் வீட்டுக்கு காய்கறி வாங்கப் போகும்போது அவர்கள் அழைக்கிறார்களோ இல்லையோ சக்தியின் வீட்டுக்கும் நேரில் சென்று அவர்களிடமும் லிஸ்ட் வாங்கிக் கொண்டு அவர்களுக்கும் வேண்டிய பொருட்களை வாங்கிக் கொடுப்பான். இருவர் குடும்பமும் இந்த அளவுக்கு அன்னியோண்யம்..

காலம்தான் எல்லாவற்றையும் மாற்றும் சக்தி படைத்ததே.. கோபி படிப்பில் பின் தங்கி தனது அப்பாவின் மரக்கடையை பார்த்துக் கொள்ளச் சென்றான். சக்தி மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து முடித்து சென்னைக்குச் சென்றுவிட்டான்.

அதன் பின்னர் சக்தியின் குடும்பத்தில் ஒருவனானான் கோபி. அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அவன்தான் செய்வான். சக்தியின் அப்பாவும், அம்மாவும் டூவீலரில் சென்றபோது விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் இருந்தபோது தனது மரக்கடையைக்கூட விட்டுவிட்டு பக்கத்திலேயே இருந்து மகனைப் போல பார்த்துக் கொண்டான் கோபி.

சக்தி ஞாயிற்றுக்கிழமை மட்டும் சென்னையில் இருந்து வந்து பார்த்துவிட்டு செல்வான். சக்திக்கு உடன் பிறந்தவர்கள் யாருமில்லை என்பதால் வயதான அவனது தாய், தந்தையர்க்கு செய்ய வேண்டிய அனைத்துவித உதவிகளுக்கும் அப்போதிலிருந்து கோபிதான் கை கொடுத்து வந்தான்.

சக்தி வேளச்சேரியில் சிங்கிள் பெட்ரூம் பிளாட் வாங்க முனைந்தான். பிளாட்டை விற்க வந்தவர் முன்பணமாக எட்டு லட்சம் ரூபாய் கொடுத்தால் பிற்பாடு மீதித் தொகையை தவணையில் வாங்கிக் கொள்ளத் தயார் என்றார். உடனேயே விழுந்தடித்து ஊருக்கு ஓடி வந்த சக்தி கோபியிடமும், அவனது தந்தையிடமும் பேசி எட்டு லட்சம் ரூபாயை பைசா வட்டியில்லாமல் வாங்கிச் சென்று வீட்டை பேசி முடித்து குடியேறினான்.

வீடு கிடைத்தவுடன் அவனாகவே பெண் தேடினான் சக்தி. அவனது அலுவலகத்திலேயே வேலை பார்த்த ஒரு பெண்ணை காதலித்தான். திருமணம் செய்ய அவனது அப்பா, அம்மாவிடம் கேட்க அனுமதி மறுத்தார்கள். முடியவே முடியாது என்று சாதித்தார்கள்.

இப்போதும் கோபிதான் கை கொடுத்து அவனுக்கு ஆதரவுக் கரம் கொடுத்து அவனை ரிஜிஸ்தர் மேரேஜ் செய்து கொள்ளச் சொல்லி ஆலோசனை சொன்னான். சக்தியின் பெற்றோரை தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டான். சக்தியும் தனது நண்பர்கள் உதவியோடு சென்னையில் தனது காதலியை மணந்து இல்லற வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டான். இது நடந்து மூன்று மாதங்களாகிவிட்டன.

சக்தியின் பெற்றோரோ அவன் தங்களைப் பார்க்க வரவேகூடாது என்று சொல்லிவிட்டார்கள். அங்கே அவர்களுக்கு கோபியே போதும் என்று அவர்கள் சொல்லிவிட இப்போது சக்திக்கு கோபியின் மீது ஒரு இனம் புரியாத கோபம் முளைத்துவிட்டது. ஆனாலும் இருவரும் அவ்வப்போது போனில் பேசிக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.

சமீபத்தில்.. அதாவது நேற்றைய தினம் காலை கோபி சென்னைக்கு விஜயம் செய்திருக்கிறான். தொழில் விஷயமாக புதுப்பேட்டை பகுதிக்கு வந்தவன், அங்கேயிருந்து கால்டாக்சியில் வேளச்சேரியில் சக்தியின் வீட்டுக்கு வந்திருக்கிறான் கோபி.

அவன் வந்த நேரம் பாருங்க.. சக்தியின் துணைவி வீட்டின் முன் கதவை லேசாகத் திறந்துவைத்துவிட்டு துவைத்த துணிகளை காயப்போடுவதற்காக வீட்டின் பின்புறமாகச் சென்றிருக்கிறார். அந்த வீடுதான் என்பதை சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படத்தின் மூலம் தெரிந்து கொண்ட கோபி விறுவிறுவென்று வீட்டுக்குள் நுழைந்தவன் பெட்டியை வைத்துவிட்டு அவசரமாக பாத்ரூம் போக வேண்டியிருந்த கடமை இருந்ததால் அதற்கு சென்றிருக்கிறான்.

இவன் உள்ளே போன நேரம் சக்தியின் துணைவி வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். பாத்ரூமில் தண்ணி கொட்டுவதை பார்த்து திகைத்திருக்கிறார். லேசாக பயந்து போய் வெளியில் வந்து நின்று பார்க்க நம்ம கோபியண்ணன்.. அலட்சியமாக அறைகளை நோட்டம் விட்டபடியே சமையல்கட்டுக்குள்ளும் நுழைந்திருக்கிறார்.

என்ன.. ஏதுவென்று யோசிக்க முடியாத சக்தியின் துணைவி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்ல.. அவர்கள் ஐடியாபடி கதவை இழுத்து வெளிப்புறமாகச் சாத்தியிருக்கிறார்கள். திருடன் ஒருவன் வந்திருக்கிறான் என்று திடமாக நம்பி போலீஸுக்கும் தகவல் கொடுத்துவிட்டார்கள்.

அதற்குள்ளாக வீட்டின் உள்ளேயிருந்த சிட்அவுட் பக்கம் போய் நின்று கொண்டு கோபி ரிலாக்ஸாக சிகரெட் பிடித்துக் கொண்டிருக்க.. ஒட்டு மொத்த பிளாட்டும் அந்த பக்கமாக வந்து அவனை வேடிக்கை பார்த்திருக்கிறது.

அவனுக்குள் ஏதோ ஒன்று சந்தேகப்பட வேகமாக வந்து கதவைத் திறக்க முயன்றிருக்கிறான். முடியவில்லை. ஏதோ சந்தேகப்பட்டவன் சிட்அவுட் பக்கம் வந்து நிற்க.. அவன் தப்பிக்க முயல்வதாக நினைத்து கீழே நின்றிருந்த அப்பாவி பொதுஜனங்கள் கைக்கு கிடைத்ததை எடுத்துக் கொண்டு தயாராக நிற்க.. பயலுக்கு கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை.

மக்களின் நண்பனான காவல்துறை மின்னல் வேகத்தில் வந்திருக்கிறது. காவல்துறை வந்து கதவைத் திறந்ததும் உள்ளே நுழைந்த இரண்டு காவலர்களைப் பார்த்து கோபி திகைத்துப் போய் நின்றிருக்கிறான். தான் சக்தியை பார்க்க வந்ததாகவும், தான் அவனது நண்பன் என்றும் ஊரிலிருந்து வந்திருக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறான்.

காவல்துறை நம்பாமல் அவனது செல்போனில் இருந்து சக்திக்கு போன் செய்து சொல்லியிருக்கிறது. இடையில் சக்தியின் மனைவியிடம் போலீஸ் கோபியிடம் பேசும்படி சொல்ல “அவர் யாருண்ணே தெரியாது. நான் எப்படி பேசுறது.. என் ஹஸ்பெண்ட் வரட்டும்.. அவரே பேசுவாரு..” என்று சொல்லிவிட கோபிக்கு அவமானத்துடன் கொஞ்சம் வெட்கமும் சேர்ந்துவிட்டது.

ஒட்டு மொத்த பிளாட்டும் உள்ளே வந்து “கதவு திறந்திருந்தா உள்ள வந்தர்றதா..? யார், என்னன்னு கேட்க வேணாமா? என்னய்யா நினைச்சிட்டிருக்க..? என்ன படிச்சிருக்க..” என்றெல்லாம் தாறுமாறான கேள்விகளோடு பயலை எகிறிவிட்டன.

சக்தி அரக்கப் பரக்க ஆட்டோவில் வீடு திரும்பியவன் கோபியை தனது நண்பன் என்று போலீஸிடம் அடையாளம் காட்ட.. போலீஸ் கோபியை லேசாக முறைத்துவிட்டு கடுமையாகத் திட்டித் தீர்த்துவிட்டுப் போனார்கள்.

சக்தியின் மனைவி ஒரு வார்த்தைகூட பேசாமல், ஸாரி என்றுகூட சொல்லாமல் பெட்ரூமிற்கு சென்று கதவை அடைத்துக் கொள்ள.. கோபிக்கு தன்மானம் பொங்கிவிட்டது. சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு அப்படியே தரையிரங்கி கோயம்பேட்டுக்கு ஆட்டோ பிடித்துவிட்டான்.

சக்திக்கு தனது மனைவியை சமாதானப்படுத்துவதா.. அல்லது கோபியை கூல் செய்வதா என்ற கவலையில் மனைவி மீது பாசம் அதிகமாகி வீட்டுக்குள்ளேயே இருந்துவிட.. இதுவும் கோபிக்கு கொஞ்சூண்டு வெறியை ஏற்படுத்திவிட்டது.

“முப்பது வருஷ நட்பு முப்பதே நிமிஷத்துல குழி தோண்டி புதைச்சுட்டாண்டா..” என்று ஒரு புல் ஓல்டு மாங்க் அடித்துவிட்டு என் குறை காதும் கிழிவதைப் போல் அழுதான் கோபி.

அவன் பேசிய பின்புதான் நம்ம சக்தி தம்பியும் என்னுடன் பேசி “கோபியை கோச்சுக்க வேண்டாம்னு சொல்லுங்கண்ணே..” என்கிறான்.

“ஏண்டா வெங்காயம்.. ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகிருக்கீங்களே.. உன் ஆரூயிர் நண்பன்னு அவனைப் பத்தி நல்லவிதமா உன் வொய்ப்கிட்ட சொல்லி வைச்சிருக்கலாம்ல.. லவ் பண்ணும்போதோ, கல்யாணம் பண்ணிக்கிட்ட பின்னாடியோ வொய்ப்கிட்ட போன்ல பேச வைச்சிருக்கலாம்ல..”ன்னு கேட்டேன்.

“நம்ம கோபிய பத்திதான் உனக்கே தெரியுமேண்ணே.. ஏதாவது உளறினாலும் உளறிருவான்னு நினைச்சுத்தான் தவிர்த்துட்டண்ணே..” என்று அராஜகத்தனமாகவே சொல்கிறான் சக்தி.

கோபியோ, “நான் செஞ்சது தப்புதாண்ணே.. தப்பாவே இருக்கட்டும். நான் கீழ இறங்கி வந்துட்டனே.. ஒரு வார்த்தை.. ஒரு வார்த்தை பின்னாடி வந்து பேசியிருக்கலாம்ல.. அஞ்சு நிமிஷம் நின்னு பார்த்தேண்ணே.. வரலைண்ணே அந்த நாயி.. அதான் நம்ம பொழைப்பை பார்க்கலாம்னு திரும்பி வந்துட்டேன். போதும்ணே அவன் சகவாசம். உணர்த்திட்டாண்ணா படிச்சவனோட பிரெண்ட்ஷிப்புன்னா என்னன்னு..? நான் படிக்காத முட்டாளாவே இருந்துட்டுப் போறேன்..” – நடு மண்டையில் அடிப்பதைப்போல் ஒரு போடு போடுகிறான் கோபி.

இப்போது சக்திக்கு இது வேறு விதமாகத் திசை மாறி எட்டு லட்சம் ரூபாய் மேட்டரில் தனக்கு ஆப்பு வருமா என்பதுதான் பெரும் கவலையாக இருக்கிறது..

எனக்கோ சக்தியின் பெற்றோருக்கு ஏதாவது சிக்கல்கள் கோபியால் வந்துவிடுமோ என்று கவலையாக இருக்கிறது.

இந்த லட்சணத்தில் இரண்டு பேரும் மாறி, மாறி “நீ பேசு.. நீ பேசுண்ணே..”ன்னு சொல்லி என் உயிரை எடுப்பதில் பொங்கி வந்த கோபத்தில் இதையும் டைப்பு செய்து தொலைத்துவிட்டேன். நமக்குத்தான் டைப்பு ஹாபியாச்சே..

அட்வைஸாவது மண்ணாவது.. !

இரண்டு பேர்கிட்டேயும் “ஒரு தெலுங்கு படத்தோட டிஸ்கஷனுக்கு ஹைதராபாத் போறேன்.. ஒரு வாரத்துல வந்திருவேன்.. வந்தவுடனே நேர்ல வந்து பேசுறேன்.. அதுவரைக்கும் ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்காம இருங்க. வந்து பேசிக்கலாம்…”னு சொல்லி வைத்திருக்கிறேன்.

உண்மையா ரெண்டு பேர்கிட்டேயுமே நான் எதையும் பேசப் போறதில்லை. அப்படியே விஷயத்தை ஊறப் போட்டு, ஆறப் போட்டுட்டு லூஸ்ல விட்டுற வேண்டியதுதான்..

ஏன்னா இந்தக் காலத்துப் பயலுகளை நம்பவே முடியாது.. எந்த நேரத்துல எப்படி கோஷ்டி சேருவாங்க.. எப்ப அத்து விடுவாங்கன்னே தெரியலை.. நமக்கெதுக்கு வம்பு..?

நாளைக்கே ஒரு ‘குவார்ட்டராலயோ’, ‘ஆஃபா’லயோ, ‘புல்’லாலயோ பிரச்சினை முடிஞ்சாலும் முடிஞ்சிரும்..!

இடைல போய் நாம அக்கறையாக அவங்களுக்காக பேசி.. கடைசியா அவங்களுக்கே சைடிஷ்ஷா நாம ஆயிறக்கூடாது பாருங்க..

ஏற்கெனவே அனுபவம் பலதும் இருக்கிறதாலதான் இந்த ஐடியா..!!!

என்ன நான் சொல்றது..?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: