Archive for ஜூன், 2009

மலையாள திரைப்பட கதாசிரியர், இயக்குநர் லோகிததாஸ் மரணம்..!

ஜூன் 28, 2009

28-06-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்று காலையில் தொலைக்காட்சியில் பிளாஷ் நியூஸாக ஓடிய இந்த செய்தி ஒரு கணம் என்னை ஆடத்தான் வைத்துவிட்டது..

மலையாளத் திரையுலகின் முன்னணி கதாசிரியரும், இயக்குநருமான லோகிததாஸ் மாரடைப்பால் காலமானார் என்கிற இந்த துயரச் செய்தி நிச்சயம் சினிமா ஆர்வலர்களுக்கு மிகப் பெரும் துக்கத்தைத் தரும்.


இன்று கொச்சியில் நடைபெற்ற மலையாளத் திரையுலகின் ‘அம்மா’ என்கிற அமைப்பின் பொதுக்குழுக்கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார் லோகிததாஸ். அப்போது திடீரென்று அவருக்கு நெஞ்சு வலி வர மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். தீவிர சிகிச்சையளித்தும் முடியாமல் காலை 10.50 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோகிததாஸ் மற்றும் இயக்குநர் சிபிமலையில் இருவரும் இணைந்து படைத்த மலையாளத் திரைப்படங்கள் அனைத்தும் இன்றைக்கும், என்றைக்கும் மலையாளத் திரையுலகின் பெயரை வெளியுலகத்திற்கு அடையாளம் காட்டக் கூடியத் திரைப்படங்கள்.

இந்த ஜோடி முதலில் இணைந்த திரைப்படம் ‘தனியாவர்த்தனம்’. 1987-ல் வெளி வந்தது. மம்முட்டியும், சரிதாவும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை இப்போது பார்த்தாலும் கண்ணில் குளம் கட்டாமல் விடாது. சிபியின் இயக்கம் அப்படி என்றாலும் தனது முதல் கதை, திரைக்கதையை அழுத்தமாகக் கொடுத்திருந்தார் லோகிததாஸ்.

‘எழுதாபுரங்கள்’, ‘கிரீடம்’, ‘முத்ரா’, ‘ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா’, ‘பரதம்’, ‘கமலாதலம்’, ‘தனம்’, ‘தசரதம்’, ‘செங்கோல்’ என்று இந்தக் கூட்டணி கொடுத்தத் திரைப்படங்கள் அனைத்தும் நல்ல கதையம்சமுள்ள திரைக்காவியங்கள்.

இதில் ‘கிரீடம்’, ‘பரதம்’, ‘தனம்’, ‘ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா’, ‘தசரதம்’, ‘செங்கோல்’ ஆகிய திரைப்படங்களை பார்த்து அழுதிருக்கிறேன்.

சிபியின் திரைப்படங்கள் முடிந்தவுடன் மனதில் ஒரு பாறாங்கல் அழுந்தியிருப்பது போலத்தான் தோன்றும். ஆனால் இன்றைக்கு யோசித்துப் பார்த்தால் அதற்கு அடித்தளமிட்டிருப்பது லோகிததாஸின் கதையும், திரைக்கதையும்தான் என்று யோசித்துப் பார்த்தால் வெற்றியின் பாதியை அவருக்கும் வழங்கத்தான் வேண்டும்.

லோகிததாஸ் இதுவரையிலும் தனித்து 12 திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார்.

இவர் இயக்கிய திரைப்படங்களில் ‘பூதக்கண்ணாடி’, ‘கண்மதம்’, ‘காருண்யம்’, ‘கஸ்தூரி மான்’, ‘அரையன்னங்களுடவீடு திரைப்படங்களை மட்டுமே பார்த்திருக்கிறேன்.

இதில் ‘பூதக்கண்ணாடி’யும், ‘கண்மதமும்’, ‘காருண்யமும்’ நெகிழ வைத்தத் திரைப்படங்கள். ‘பூதக்கண்ணாடி யில் மம்முட்டியின் அப்பாவித்தனமான அந்த செய்கையின் பின்னால் இருக்கும் சஸ்பென்ஸ் இறுதியில் உடைக்கப்படும்போது, ‘ஐயோ’ என்று அடிவயிற்றில் எழுந்த உணர்வை மறக்கவே முடியாது.

‘கண்மத’த்தில் மஞ்சுவாரியர் தனது நடிப்பு கேரியரில் மிகச் சிறந்த நடிப்பைக் கொட்டியிருந்தார். மோகன்லாலும் அப்படியே.. மிக மிக இயல்பான நடிப்பு. அப்படியெல்லாம் நடிப்பையும், இயக்கத்தையும் பார்த்த பின்புதான் தமிழ்த் திரைப்படங்களை பார்ப்பதற்கு சங்கடங்கள் ஏற்பட்டது.

தன்னுடைய முதல் படமான ‘தனியாவர்த்தனம்’ திரைப்படத்திற்கே கேரள மாநில அரசின் சிறந்த கதாசிரியருக்கான விருதை வாங்கியிருக்கிறார் தாஸ். ‘பூதக்கண்ணாடி’ திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும், மாநில விருதும் கிடைத்துள்ளது. லோகிததாஸ் தமிழில் இயக்கிய ‘கஸ்தூரிமான்’ திரைப்படத்திற்கு தமிழக அரசு சிறந்த திரைப்பட விருது வழங்கியுள்ளது.

இதுவரையில் 14 முறை சிறந்த கதாசிரியர் விருது, 4 முறை சிறந்த இயக்குநருக்கான விருது என்று கேரளாவின் சிறந்த திரைப்பட அமைப்பான Film Critics Award-ஐ பெற்றுள்ளார்.

இவர் கடைசியாக இயக்கிய ‘நைவேத்தியம்’ திரைப்படம்கூட சிறந்த திரைப்படம், சிறந்த கதை ஆகிய பிரிவுகளில் விருதுகளைப் பெற்றது.

சிறந்த கதாசிரியராக வலம் வந்து கொண்டிருந்த லோகிததாஸை மீராஜாஸ்மின் விவகாரம்தான் விவகாரமானவராக மாற்றிவிட்டது. 2001-ல் தான் இயக்கிய ‘சூத்ரதாரன்’ திரைப்படத்தின் மூலம் மீராவை மலையாளத் திரையுலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார் லோகி.

இதே லோகிததாஸ்தான் 1996-ல் ‘தூவல் கொட்டாரம்’ படத்தின் மூலம் மஞ்சுவாரியரையும், 1999-ல் சம்யுகத்வர்மாவையும் மலையாளத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்.

ஆனால் இவர்களையெல்லாம் தாண்டி மீராவின் விஷயம்தான் அவரை மிகவும் நெருக்கிவிட்டது. லோகி இயக்கிய 4 திரைப்படங்களில் மீரா கதாநாயகியாக நடித்திருந்தார். இதனை வைத்து மலையாள பத்திரிகையுலகம் இருவருக்குமான நட்பை கன்னாபின்னாவென்று எழுதித் தீர்த்துவிட்டது.

அவருக்கும் தனக்குமான நட்பு அப்பா, மகள் உறவுதான் என்று மீரா ஜாஸ்மீன் பல முறை சொல்லியும் பத்திரிகைகள் அதனை பொருட்படுத்தவில்லை. ஜாஸ்மீனுக்காகவே லோகிததாஸ் எடுத்த அடுத்த திரைப்படமும் பத்திரிகைகளுக்கு நன்றாகவே அவல் போட்டது. ஆனால் அந்தத் திரைப்படம் படுதோல்வியடைந்து அதற்காக முதல் போட்ட கடனுக்காக மீரா தனது வீட்டை விற்று கடனை அடைத்தார்.

இதன் பின்பு மீராவுடனான இவரது நட்பில் விரிசல் ஏற்பட்டாலும், சமீப நாட்களில் மீராவுக்காகவே தான் ஒரு கதையை தயார் செய்து வைத்திருப்பதாகவும், அதில் அவர்தான் நடிப்பார் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். கூடவே கமலஹாசனை வைத்தும் தான் ஒரு படத்தினை இயக்கப் போவதாகவும் சொன்னார்.

இவருடைய ‘சல்லாபம்’ திரைப்படம்தான் தற்போது ‘ரயிலு’ என்கிற பெயரில் ரஞ்சித் நடிப்பில் தமிழ்த் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

எனக்குத் தெரிந்து மலையாளத் திரையுலக கதாசிரியர்கள் பட்டியலில் எம்.டி.வாசுதேவன் நாயர், பத்மராஜன், வரிசையில் லோகிததாஸும், சீனிவாசனும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள். இந்தப் பட்டியலில் ஒன்று இன்றைக்கு விடைபெற்றுச் சென்றுவிட்டது.

மலையாளத் திரையுலகம் என்றில்லை பொதுவாகவே திரைப்படங்கள் மீதான ஆர்வலர்கள் அத்தனை பேருக்குமே லோகிததாஸின் மரணம் ஒரு மிகப் பெரும் சோகமே.

அவருடைய ‘கிரீடமும்’, ‘தசரதமும்’, ‘தனமும்’, ‘ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா’வும், ‘பரதமும்’ மலையாள மொழி என்றில்லை.. அனைத்து மொழி ரசிகர்களாலும் வெகுவாக ரசிக்கப்பட்டத் திரைப்படங்கள்.

இனி இது போன்ற திரைப்படங்கள் தோன்றவியலாது என்ற எண்ணம் நமக்குள் உதித்தாலும், இதுவரையில் படைத்திருப்பதே அவரது பெயரை வருங்கால சினிமா ரசிகர்களிடத்தில் அவருடைய பெயரைச் சொல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்.

அவருடைய ஆத்மா சாந்தியடைய என் அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்..