திருச்சி – நகர்வலம்..!

18-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதல் பாகம் இது

தமிழகத்தின் மத்தியப் பகுதியில் வீற்றிருக்கும் திருச்சி மாநகரம், இப்போதே இந்த பிப்ரவரி மாதமே வெயிலில் கொதிக்கிறது. தமிழகத்தின் நடுப்பகுதி என்பதால் நெய்வேலிக்கு அடுத்து திருச்சியில்தான் அதிகமான வெயில் கொளுத்தும்.

கொள்ளிடக் கரையும், காவிரி ஆறும் திருச்சிக்கு பெயர் சொல்லும்விதமாக அமைந்திருந்தாலும் வருடத்தில் முக்கால் மாதங்கள் காவிரி ஆறு வரண்டு போய் கிடப்பதால் அதிலிருந்து வர வேண்டிய காற்றும், இயற்கை தாலாட்டும் கோடை காலத்தில் திருச்சி மக்களுக்குக் கிடைப்பதேயில்லை.

மதுரை நகரைப் போலவே திருச்சியிலும் இப்போது ஒரு பட்டத்து இளவரசர் கோலோச்சுகிறார். பெயர் கே.என்.நேரு. தமிழக அமைச்சரவையில் அசைக்க முடியாத உடன்பிறப்பு. திருச்சியிலும் அப்படியே. திரும்பிய பக்கமெல்லாம் அண்ணனின் புகைப்படங்கள்தான்.. போஸ்டர்கள்தான்.. இளவரசரின் சொந்த ஊரும், சொந்தத் தொகுதியும் இதுதான் என்பதால், ஐயா கக்கூஸ் திறக்க வந்தால்கூட அதற்கும் ஒரு போஸ்டர் அடித்து போஸ்டர் தொழிலை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள் தொண்டர்கள்..

நான் சென்றிருந்தபோது அன்று காலையில்தான் நேரு திருச்சி வந்திருந்தார். அன்றைக்கு அவருக்கு நிறைய நிகழ்ச்சிகள் என்பதால் திருச்சியில் எங்கு பார்த்தாலும், விதம், விதமான போஸ்டர்கள்.. .

இந்தப் பட்டத்து இளவரசருக்கு ஒரு மாற்று இளவரசர் இருக்கிறார். ஆனால் கொஞ்சம் ஜபஸ்து குறைந்தவர். பெயர் தி.சிவா. ரயில்வே பட்ஜெட்டில் திருச்சிக்கு புதிய ரயில் பாதையைப் பெற்றுக் கொடுத்ததற்காக ‘மண்ணின் மைந்தன் வாழ்க’ என்று குதர்க்கமான வார்த்தைகளோடு போஸ்டர்கள் ஜொலித்தன. எங்கெல்லாம் நேருவை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கிறதோ, அங்கெல்லாம் சிவாவின் போஸ்டர்களும் பக்கத்திலேயோ, எதிரிலேயோ ஒட்டப்பட்டிருந்தது.

திருச்சி தி.மு.க.வில் இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் லீடிங்கில் இல்லை. இன்னொரு அமைச்சர் இருக்கிறார். செல்வராஜ் என்று பெயர். சில காலம் வைகோவுடன் சென்று அஞ்ஞாதவாசத்தை அனுபவித்துவிட்டு ‘விட்டதடா சனியன்’ என்று திரும்பி ஓடி வந்தவர் என்பதால் கொஞ்சம் தொண்டர்கள் செல்வாக்கு குறைந்தவர். அமைச்சர் என்பதால் புறநகரில் மட்டும் கோலோச்சுகிறாராம். அங்கொன்றும், இங்கொன்றுமாக கல்யாண வரவேற்புக்கு அவர் வருவதை வரவேற்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில் கைகூப்பி வணங்கிக் கொண்டிருந்தார்.

தளபதி ஸ்டாலின் எப்போது திருச்சி வந்தாலும் அவரது காருக்கு சாரதியாக பவனி வந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரணிகுமார், இப்போது முழுவதுமாக தளபதியால் ஓரங்கட்டப்பட்டுவிட்டதால் தனது சீட்டாட்டத் தொழிலிலேயே மூழ்கிவிட்டதாக பத்திரிகை நண்பர் ஒருவர் தெரிவித்தார். அன்பில் பொய்யாமொழி அளவுக்கு அவரது தம்பி அன்பில் பெரியசாமிக்கு மக்களிடையே பெயரும் இல்லை.. செல்வாக்கும் இல்லை என்பதால் அவரும் நேருவின் நிழலில் பதுங்கிவிட்டாராம். இது திருச்சி நகர தி.மு.க.வின் நிலைமை.

இதேபோல் பிப்ரவரி 24-ல் வருடாவருடம் வரும் அம்மாவின் பிறந்த நாளுக்காக இப்பவே போஸ்டர்களை வைத்து தமது பாசத்தையும், உழைப்பையும் காட்டியுள்ளார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். அதுவும் குறைச்சலில்லை.. தி.மு.க.வுக்கு ஈடாகத்தான் போஸ்டர்கள் களை கட்டியிருந்தன. அன்றைக்கு முதல் நாள் சென்னைக்கு சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்ட திருச்சி மாநகராட்சியின் மன்ற அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவருக்கும் அங்கேயே மண்டகப்படி விழுந்து ஒட்டு மொத்த மாநகராட்சி மன்ற நிர்வாகிகள் அனைவரும் மாற்றப்பட்டிருந்ததால் ஏதாவது திகில் நடக்கும் என்று எதிர்பார்த்து பத்திரிகையாளர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.

மாற்றப்பட்ட நிர்வாகிகளோ சென்னையிலேயே தங்களது சோகத்தைத் தணித்துக் கொண்டிருந்ததாலும், புதிய நிர்வாகிகளோ எப்போது வேண்டுமானாலும் நாமளும் ‘முன்னாள்’ ஆகலாம் என்ற பய உணர்வுடன் பதுங்கிக் கொண்டதாலும் மாநகராட்சி முன்பும், கட்சி அலுவலகம் முன்பும் ஒரு சிறிய வெடிகூட வெடிக்கவில்லையாம்.. அ.தி.மு.க. தொண்டர்கள் சோகத்துடன் இருப்பதாக நான் சந்தித்த பத்திரிகை நண்பர் தெரிவித்தார்.

அரசியல்வாதிகளுக்குச் சற்றும் குறையாத அளவுக்கு திடீர் போஸ்டர்கள் குவிந்திருந்தன நமது தற்போதைய கவர்ச்சிக் கன்னி ‘மச்சான்ஸ்’ புகழ் செல்வி நமீதாவிற்கு.. ஆலுக்காஸ் ஜூவல்லர்ஸ் திறப்பு விழாவிற்காக வரவிருந்த அவரை வரவேற்று அந்தக் கடைக்காரர்கள் மொக்குக்கு மொக்கு தட்டியும், பிளக்ஸ் போர்டுகளும் வைத்திருந்தார்கள்.

ஆக மொத்தம் திருச்சி மாநகரமே போஸ்டர்கள் சூழ்ந்த நகரமாக காணப்படுகிறது. சுவர்களை ஒட்டுமொத்தமாக மறைத்திருந்தார்கள். இரவு நேரங்களில் மாடுகளுக்குக் கொண்டாட்டமோ கொண்டாட்டமாகத்தான் இருக்கும். சாப்பிடட்டுமே..!

திருச்சியின் மையப் பகுதியில் இருக்கும் காந்தி மார்க்கெட் மிக நெருக்கடியான பகுதி. நமது அண்ணா சாலையில் இருக்கும் ரிச்சி தெருவைப் போல.. அந்த வழியாக பேருந்துகளும் பயணிக்கின்றன என்பதால் பேருந்துகளுக்குள்ளேயே கீரைக்கட்டுகள் அமோகமாக விற்பனையாவது பார்ப்பவரின் கண்களைக் குளிர வைக்கிறது.

ஆனால் அந்த வழியை பேருந்துகள் கடப்பதற்குள் பிரசவ வேதனைதான்.. மிகக் குறுகலான சாலை.. அதில் இரு வழிப் பயணம்.. போதாததற்கு கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் நிறுத்தியிருக்கும் வண்டிகள்..

எதிர்காலத் தேவையை மனதில் வைத்து எதையுமே நமது அரசியல்வியாதிகள் செய்ய மாட்டார்கள். வெல்ல மண்டி, அரிசி மண்டி, வெங்காய மண்டி என்று அனைத்து மண்டிகளுமே அதே தெருவில் இருக்கின்றன. ஒரு வழிப் பாதையாக ஆக்கினாலும் போக்குவரத்துக்கு சிரமமமில்லாமல் இருக்கும். ஆனால் தஞ்சாவூர் செல்லும் பாதையைப் பிடிக்க இந்த சாலையைவிட்டால் பின்பு மத்தியப் பேருந்து நிலையம் வழியாக பைபாஸ் போய் சுற்ற வேண்டும் என்பதால் அப்படியே விட்டுவிட்டதாக பயணி ஒருவர் சொன்னார்.

சென்னை மாநகரைப் போலவே பல்வேறு இடங்களிலும் பாலங்களைக் கட்டி மக்கள் மனதில் பால்வார்த்திருக்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்கு முன்பாக நான் சென்றிருந்த ஓரிடத்திற்கு மீண்டும் இந்த முறை சென்றபோது, இரட்டைப் பிரிவு பாலங்கள் வழியாக பேருந்து கொண்டு சென்று இறக்கியபோது சுகமாகத்தான் இருந்தது.

தஞ்சாவூர், சென்னை பேருந்துகள் சந்திக்கும் இடத்தில் இப்போதுதான் பாலம் கட்ட அஸ்திவாரம் தோண்டியிருக்கிறார்கள். இளவரசரின் தொகுதி என்பதால் எப்படியும் ஒரு வருடத்தில் முடிந்துவிடும் என்கிறார்கள். அந்த சாலையிலும் பாலம் வந்துவிட்டால் சென்னை செல்லும் பேருந்துகளுக்கு இன்னும் கொஞ்சம் சவுகரியம். ஜம்மென்று சிக்னலுக்கு நிற்காமல் பறக்கலாம். ஆனாலும் எனக்குக் கிடைத்த டிரைவர் போல் உங்களுக்குக் கிடைத்துவிட்டால் நித்யகண்டம் பூரண ஆயுசுதான்..

சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம் என்று இரண்டு பேருந்து நிலையங்களை வைத்துக் கொண்டு, தமிழகத்தின் அனைத்துப் பகுதியையும் இணைக்கும் நகரம் என்பதால் ஒரு நாளைக்கு திருச்சிக்குள் வந்து போகும் வெளியூர் பேருந்துகளே 800 இருக்கும் என்கிறார்கள்.

மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்துதான் சென்னை செல்லும் பேருந்துகள் கிளம்புகின்றன. மேலும் பல்வேறு வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகளும் இங்கிருந்துதான் இயங்குகின்றன என்பதாலும் கூட்டம் அதிகம்தான்.. நள்ளிரவிலும் பகல்போல் கூட்டம் இருப்பது இங்குதான் என்கிறார்கள். பேருந்து நிலையத்தில் இருக்கும் ஹோட்டலில் மூன்று ஷிப்ட் போட்டு சமைக்கிறார்களாம். விடியற்காலை 3 மணிக்குக்கூட தோசை கிடைக்கிறது.. ‘தூங்கா நகரம்’ என்ற பெருமையை திருச்சி மாநகரம், மதுரை மாநகரத்திடம் இருந்து கைப்பற்றி ரொம்ப நாளாகிறது என்கிறார்கள்.

திருச்சி மலைக்கோட்டையும், முக்கொம்பும்தான் திருச்சி மக்களின் ஹாட் ஸ்பாட். சுற்றிப் பார்க்க வேறு இடமில்லை.. நான் அங்கேயிருந்த காதலர் தினத்தன்று முக்கொம்பிற்கு வந்த காதலர்களை புதிய கலாச்சார ரவுடிகள் விரட்டியடித்திருக்கிறார்கள். அங்கே காதலர்களுக்கு காவலாக புதிய அவதாரமெடுத்திருக்கும் ஒரு இளைஞர் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும், கலாச்சார ரவுடிகளுக்கும் இடையில் கை கலப்பே நடந்திருக்கிறது.

மலைக்கோட்டை வாசலில் இருந்து உச்சிப்பிள்ளை விநாயகர் கோவிலுக்குச் செல்லும் வழியெங்கும் இரு புறங்களிலும் சிறு கடைகள்.. தெப்பக் குளத்தைச் சுற்றிலும் கால் வைக்க முடியாத அளவுக்கு கடைகள்.. சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டிய இடங்களிலெல்லாம் அரசியல் காரணத்திற்காகவும், பணத்திற்காகவும், மாநகராட்சிக்காரர்கள் கடைகளுக்கு அனுமதி கொடுத்திருப்பதால் கடுமையான இட நெரிசல்.. அந்தக் கடைகள் மட்டு்ம் அங்கே இல்லாமல் இருந்தால் அது நிஜமாகவே ஒரு கோட்டையின் உள்பிரகாரம்தான் என்று சொல்லிவிடலாம்.


சாலையை ஆக்கிரமித்து சாரதாஸ் நிறுவனமே கடை கட்டியிருக்கிறது. கேட்க வேண்டியவர்கள் நோட்டீஸ் அனுப்பி விசாரித்ததோடு அவ்வளவுதான். மூடிக் கொண்டுவிட்டார்கள். பணம் பத்தும் செய்யும். அதிகார வர்க்கம் சூட்கேஸ்களுக்கு மட்டு்ம்தான் காது கொடுக்கும்.. இது நமது தலைவிதி..

உச்சிப் பிள்ளையார் கோவில் வாசலில் அம்சமான யானை ஒன்று நின்று கொண்டு வருவோர் போவோருக்கெல்லாம் ஆசீர்வாதத்தை வாரி வழங்கிக் கொண்டிருந்தது. நானும் நின்றேன். தும்பிக்கையால் தலையில் ஒரு கொட்டு.. கொட்டிய வேகத்தைப் பார்த்தால் அது நிச்சயம் எனது அண்ணன் விநாயகர்தான் என்பது தெரிந்தது. ஆனால் அண்ணன் இதற்கு 1 ரூபாய் லஞ்சமாக கேட்கிறார் என்பது கொடுமையான விஷயம்.

யானைக்கு வாழைப்பழமும், தேங்காயையும் சிலர் கொடுத்தார்கள். பாகன் அதைக் கொடுக்காதீர்கள் என்று சொல்லி தான் கையில் வாங்கி வைத்துக் கொண்டார். பாவம் யானையார்.. கண் சிமிட்டி பார்த்துக் கொண்டேயிருந்தார். தும்பிக்கையால் பாகனைத் துழாவினார். பாகன் அதனை ஒரு பையில் போட்டு பையை ஓரமாக வைத்துவிட்டார். சாயந்தரமாக தருவாராம்.. அதுவரையில் விநாயகர் பசியோடு இருக்க வேண்டுமாம்.. என்ன உலகமய்யா இது..?

கீழே குடியிருக்கும் பிள்ளையாருக்கு ஒரு மதிய வணக்கத்தைச் சொல்லிவிட்டு, மேலே ஏறும்போது கர்ச்சீப் முதல் கொண்டு வெளியில் எடுத்துக் காண்பித்த பின்புதான் படியேற அனுமதி்த்தார்கள். அல்கொய்தா தாக்குதல் நடத்தும் அபாயம் இருக்கிறதாம்.. விநாயகருக்கே இது நிச்சயம் அடுக்காது..

மேலே படியேறும்போதுதான் கவனித்தேன். எங்கெங்கு காணினும் காதலர்களடா..!!! அன்றைக்கு காதலர் தினம் என்பதால் என்னமோ வருகின்ற தம்பதிகளைக்கூட போலீஸார் விசாரிக்கத் துவங்கினார்கள்.. காதலர்களாகத் தெரிந்தவர்களை “இங்கேயே சாமி கும்பிட்டுட்டு போயிருங்க..” என்று மேலே அனுமதிக்க மறுத்தார்கள். சிலர் ஏமாற்றத்துடன் வெளியேற.. பலர் சண்டையிட்டார்கள். “இது எங்களோட அடிப்படை உரிமை” என்று ஒரு பெண் சப்தமாக சண்டையிட்டது பார்க்க ரசனையாக இருந்தது. பாதி ஆங்கிலமும், பாதி தமிழுமாக கலக்கிவிட்டார். “போய்த் தொலைங்க..” என்று ஒரு அதிகாரி ஒதுங்கிக் கொள்ள.. அதுவரையில் நின்று கொண்டிருந்த மொத்தக் காதலர்களும் திமு, திமுவென்று முதல் இரவு அறைக்குள் நுழைவதைப் போல் ஓடியது பார்க்க சுவாரசியம். இதனைப் பார்த்து தம்பதிகளாக வந்தவர்களே ஒதுங்கிக் கொள்ள.. காதலர்கள் சங்கத்தினரே படியேறுவதுபோல் இருந்தது பார்ப்பதற்கு..

ஒவ்வொரு படி திருப்பத்திலும் போலீஸார் காவலுக்கு நின்றார்கள். இம்முறை பெண் காவலர்களும் அதிகம். கூட்டமாக வந்த காவலர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் என்னவென்று கேட்க.. “கீழேதான் அனுமதித்தார்கள். வழியை விடுங்க..” என்று அதிகாரமாகச் சொல்லிவிட்டுச் சிலர் மேலே ஏற.. வாக்கிடாக்கியில் கீழேயிருந்த போலீஸாரை மேலேயிருந்த ஒரு அதிகாரி போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தார். அதையெல்லாம் கேக்குற மூடு யாருக்கும் இல்ல..

பார்த்தார்கள் சில காதலர்கள்.. ஏன் ஒண்ணா போய் மாட்டிக்கணும்.. தனித்தனியா வர்ற மாதிரி பாவ்லா காட்டி ஏற ஆரம்பிச்சாங்க.. உச்சிக்கு வந்தவுடனே ஜோடியா கடைல பாண்ட்டா வாங்கி கைய மாத்தி வைச்சு போலீஸ் முன்னாடியே குடிச்சதை பார்த்து சத்தியமா அந்த குண்டான பெண் போலீஸ் ராத்திரில தூங்கிருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன்.. இப்பல்லாம் பொண்ணுக ரொம்பத்தான் தைரியமாக இருக்காங்கப்பா..

ஒவ்வொரு திருப்பத்திலும் சுவரில் எழுதப்பட்டிருக்கும் பழங்கால ஆன்மிகக் கதைகளை அனைவருமே பக்தி ரசம் சொட்டச் சொட்டப் படித்துப் பார்க்கிறார்கள். சிலர் எழுத்துக் கூட்டிப் படித்துப் பார்ப்பது நகைச்சுவையாக இருக்கிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கைடாக வருபவர்கள் ஏதோ ஒரு ஆங்கிலத்தில் தங்களது அறிவுத் திறனைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் புரிந்ததோ, புரியலையோ.. அது விநாயகருக்கே வெளிச்சம்..

பல்லவ மாமன்னர்கள் பாவம்.. தங்களது ஆட்சிக் காலத்து கலைத்திறனை வருங்கால மக்களுக்கு வெளிப்படுத்தி அசத்திவிட வேண்டும் என்று அரும்பாடுபட்டு கட்டியிருந்த பல்லவர் கால குகையில் நமது காதலர்கள் ஆளுக்கொரு மூலையில் நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும் தத்தமது ‘கைத்திறனைக்’ காட்டிக் கொண்டிருந்தது மகா கொடுமை.

விநாயகப் பெருமான் ஜெகஜோதியாக இருக்கிறார். அவ்ளோ உசரத்தில் இருப்பதால் அவருக்குக் கொஞ்சமும் பயம் இருப்பதாகத் தெரியவில்லை. நான் பார்த்தபோது அப்படியே ஆடாமல், அசையாமல் சிரித்தபடியேதான் இருந்தார். ஒருவேளை பூசாரி போகும்போது கதவைச் சாத்திவிட்டுப் போவதால் பயமில்லாமல் இருக்கிறாரோ என்னவோ..?

உச்சியில் இருந்து பார்த்தால் திருச்சி மாநகரம் அம்சமாக தெரிகிறது.. காவிரி ஆற்றின் பிரம்மாண்டத்தை இங்கிருந்துதான் முழுமையாகப் பார்க்க முடிகிறது. திருவரங்கப் பெருமானின் வீட்டுக் கோபுரம்கூட தெரிகிறது. இங்கிருந்தே கன்னத்தில் போட்டுக் கொண்டேன். விநாயகரை சுற்றி வந்து வணங்கிவிட்டு அங்கேயே சம்மணங்கால் போட்டு அமர்ந்து பலரும் ஊர்ககதை, உலகக் கதையெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

தரை முழுவதும் பளாபளாவென்று மொஸைக் போட்டிருந்ததால் யாருக்கும் எந்திரிக்க மனசில்லை. பிள்ளையார் சிலையாகவே இருந்தாலும், இப்படியொரு சூழலில் இருப்பதற்கு இந்தக் கற்சிலை கொடுத்து வைத்திருக்க வேண்டும். மேலேறி வரும் பலரும் அப்படி, அப்படியே ஜன்னலோரம் நின்றபடியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க.. கூட்ட நெரிசலில் கொஞ்ச நேரம் திணறினோம்.

5 மாத கர்ப்பம்போல் வயிற்றைத் தள்ளிக் கொண்டு வந்த ஒருவர், பாதி இடத்தை அடைத்துக் கொண்டு பராக்கு பார்த்துக் கொண்டிருக்க.. அவரைக் கடந்து வருவதற்குள் பலரும் திணறியேவிட்டார்கள். அவருடைய ‘பாஜி’யோ, ‘பாபி’யோ அவரைக் கையைப் பிடித்து கீழே இழுத்துக் கொண்டு போன பின்புதான் இடம் கொஞ்சம் மூச்சுவிட்டது.

படியிறங்கி வரும்போது நான்கைந்து இளைஞர்கள் சட்டென்று ஸ்டீல் கம்பியைத் தாண்டி ஜம்ப் செய்து பாறையில் குதித்தோடினார்கள். வாலிப வயசு..! அங்கேயும் சிலர் உட்கார்ந்திருந்தார்கள். தம்பதிகளோ..! காதலர்களோ..!! கீழே ஒரு கூட்டம் புகைப்படம் எடுக்கிறேன் என்று சொல்லி மாறி மாறி புல்தரையில் படுத்து உருண்டு கொண்டிருந்தார்கள்.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்களது முதல் பிள்ளை சிவப்பா இருக்குமா? கருப்பா இருக்குமா என்கிற ஆராய்ச்சியில் சில காதலர்கள் தீவிரமாக இறங்கியிருந்தார்கள். கோவிலிலுமா.. கொடுமை விநாயகா.. கொடுமை..!

எல்லாம் கொஞ்ச நேரம்தான்.. கடையில் முறுக்கு வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வித்தியாசமான முறையில் ஒரு கூட்டம் மேலேயேறி வந்தது. அவர்களைப் பார்த்தவுடனேயே தெரிந்தது வில்லங்கப் பார்ட்டிகள்தான் என்று.. அவர்கள் பின்னாலேயே போலீஸாரும் திமு, திமுவென்று வந்து நிற்க..

அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் சில காதலர்கள் விசுக்கென்று எழுந்து தனித்தனியே பிரிந்தார்கள். அப்படியும் பிரியாதவர்களின் அருகில் போன கலாச்சாரக் காவலர்கள் எதையோ கேட்க.. அவர்கள் பதிலுக்கு எதையோ சொல்ல.. போலீஸ் இடையில் புகுந்து சமாதானம் செய்து “மேல போங்க.. மேல போங்க..” என்று விநாயகர் இருக்குமிடத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அங்கே போனால் அவர் யானை வடிவில் வந்து காப்பாற்றுவார் என்று நினைத்தார்களோ என்னவோ..?

ஆனாலும் சில நிமிடங்களில் குடும்பத்தினரைத் தவிர மற்ற காதலர்கள் ஓட்டமோ ஓட்டம் எடுத்து ஓடி ஒளிந்தார்கள். இந்த மட்டுக்கும் சந்தோஷம் என்று சொல்லி கலாச்சாரக் காவலர்கள் கீழேயிறங்கி போக, கடைக்காரர் மட்டும் “நாசமாப் போறவனுக.. பொழைப்பைக் கெடுத்துட்டானுகளே..” என்று திட்டித் தீர்த்தார்.

நான் கீழேயிறங்கி வந்தபோது தெரிந்தது, கீழேயே சில தாக்குதல்களும், தள்ளுமுள்ளுகளும் நடந்ததாக.. எது எப்படியோ அடுத்து வரும் பிப்ரவரி 14-களில் காதலர்களைவிட போலீஸாருக்குத்தான் அதிக வேலையிருக்கும் என்று நினைக்கிறேன்.

திருச்சி சினிமா தியேட்டர்கள் வித்தியாசமாக இருக்கின்றன. காலை 10 மணி, மதியம் 2 மணி, மாலை 6 மணி இரவு 10 மணி என்றுதான் காட்சிகள் திரையிடப்படுகின்றன. ஆச்சரியமாக உள்ளது. 11, 2.30, 6.45, 10.15 என்று பார்த்து, பார்த்து இருந்த எனக்கு இது ஆச்சரியம்தான். காரணம் கேட்டால், “உண்மையான காரணம் யாருக்கும் தெரியவி்ல்லை. எல்லாரும் இதைப் பின்பற்றுகிறார்கள். அவ்வளவுதான்..” என்றார்கள்.

என் கண்களைக் குளிர்ச்சியடைய வைத்த விதமாக பார்த்து பல மாதங்களாக பார்க்காமல் இருந்த எனது உள்ளங்கவர் கள்ளி, திருமதி ஷகீலாவின்(ஆமாங்க.. ஷகீலாவுக்கு கல்யாணமாயிருச்சாம்.. கண்ணைத் தொடைச்சுக்குங்க..) போஸ்டர்கள் சில இடங்களில் ஒட்டப்பட்டிருந்தது. ஒரிஜினல் படத்தின் பெயர் ‘தங்கத்தோணி’. ஆனால் போஸ்டரில் “என் ஆசை உயிரே” என்று மாற்றியிருந்தார்கள். ஆனால் போஸ்டரில் இருந்த ஸ்டில்ஸைப் பார்த்தவுடனேயே அது இந்தப் படம்தான் என்பதைப் புரிந்து கொண்டேன்.

எனக்கா தெரியாது..? ஜோதி தியேட்டர்லேயே 10 தடவை பாத்திருக்கேன்.. அந்தப் படத்தை ஷாட் பை ஷாட்டா பிரிச்சு மேய்ஞ்சவனாக்கும்.. இப்படித்தான் ஷகீலாவின் திரைக்காவியங்கள் அனைத்தையும் பெயர் மாற்றி மாற்றி ஓட்டுகிறார்கள். உள்ளே நுழைந்தவர்கள் இதுக்கா வந்தோம் என்று கோபப்பட்டாலும், இடையில் ஓட்டப் போகிற பிட்டுக்காக இதையும் பொறுத்துக் கொள்கிறார்கள்.

திருச்சியில் ராஜாளி ஹோட்டலின் பின்புறம் உள்ள கனி தியேட்டரில்தான் இன்றைக்கும் ஷகீலாவின் திரைக்காவியங்கள் திரையிடப்படுகிறதாம்.. ஊருக்கு இது மாதிரி ஒரு தியேட்டராவது இல்லைன்னா எப்படி? சிங்காரச் சென்னையில்தான் ஒழித்துக் கட்டிவிட்டார்கள் கலாரசனை தெரியாத வெட்டி ஆபீஸர்கள்..

நான் சென்னைக்குக் கிளம்பிய அன்று காலையில் மறுபடியும் நகர்வலம் வரும்போது பல இடங்களில் டிராபிக் ஜாம். அதிலும சிங்காரத்தோப்பு செல்லும் வழியில் சைக்கள்கூட போக முடியவில்லை.. தமிழ்த் திரையுலகின் அணுகுண்டு நமீதாவின் வருகையே அதற்குக் காரணமாம்.

ஆலுக்காஸ் ஜூவல்லர்ஸ் தமிழகத்தின் பல ஊர்களிலும் கிளைகளைப் பரப்பி வருகிறது. செம துட்டு கைல இருக்கு போல.. ஒவ்வொரு ஊர் திறப்பு விழாவுக்கும் திரை நட்சத்திரங்களை (கிலோ கணக்கில் தங்கமோ, பணமோ கொடுத்துத்தான்) அழைத்திருக்கிறார்கள். அப்படி திருச்சிக்கு நம்ம நமீதாவுடன், பானு, மோனிகா என்று சில குட்டித் தெய்வங்களும் வந்திருந்தார்கள்..

தெய்வங்களை தரிசிக்க வந்த கூட்டத்தினால் போக்குவரத்து முற்றிலுமாக சேதாரமானது என்றாலும், வந்திருந்த குட்டி தெய்வங்கள் மட்டும் சேதாரமில்லாமல் சகல பாதுகாப்போடு திரும்பிச் சென்றார்கள்.. அவுகளுக்காக சிக்னலையே நிறுத்திவிட்டு அவுக மொதல்ல போறதுக்கு வழியைவிட்டா என்னன்னு சொல்றது..? அடுத்தப் பிறவிலயாவது..?

முன்பெல்லாம் அடிக்கடி திருச்சி செல்லும் வாய்ப்பு வரும்போது நேரங்கெட்ட நேரத்தில் சத்திரம் பஸ்ஸ்டாண்டில் சிக்கிக் கொண்டால் அப்படியே பொடி நடையாய் நடந்து வந்து மத்திய நூலகத்தில் புத்தகத்துக்கு மத்தியில் முகத்தைப் புதைத்துக் கொள்வேன். இப்போது மத்திய நூலகத்தை எங்கயோ கொண்டு போய்விட்டார்களாம்.. மதிய நேரத்தில் எப்போது திருச்சியின் மத்தியில் சிக்கினாலும் இப்போது மலைக்கோட்டையை விட்டால் ஒரு வழியும் இல்லை..

புத்தகம் என்றவுடன் நினைவுக்கு வருகிறது..

சென்னையில் கிழக்குப் பதிப்பகம் அலுவலகத்திற்கு நேரில் சென்று கேட்டும் கிடைக்காத “பிரபாகரன்” புத்தகத்தை திருச்சியைத் தாண்டி திருவெறும்பூர் பெல் தொழிற்சாலையின் உள்ளேயிருந்த ஒரு பேன்ஸி ஸ்டோரில் கிடைக்கப் பெற்றேன். ஆச்சரியமாக இருந்தது. கிழக்குப் பதிப்பகத்தின் பல புத்தகங்கள் இங்கே தொங்கவிடப்பட்டுள்ளன.

அடுத்த அதிர்ச்சி மலைக்கோட்டையில் ஏறி இறங்கி வெளியே வரும்போது ரோட்டோரமாக இருந்த பிளாட்பாரக் கடைகளை மேய்ந்தபோது கிடைத்தது. கிழக்குப் பதிப்பகத்தின் பல புத்தகங்கள் இங்கே பாதி விலைக்குக் கிடைத்தன. முன் ஜாக்கிரதையாக விலை குறிப்பிடப்பட்டிருந்த பக்கத்தை கிழித்துப் போட்டிருந்தார்கள். வாங்கும்போதே புத்தகத்தின் பாதி விலை, அல்லது கால்வாசி விலைக்குத்தான் வாங்குவார்கள். ஆனால் விற்கும்போது மட்டும் 10 அல்லது 15 ரூபாய் கூட்டி விற்றுவிடுவார்களாம்..

“இந்த டைப் புஸ்தகம்தான் ஜோரா விக்குது ஸார்.. நிறைய பேர் வாங்குறாங்க.. இன்னும் தில்லை நகர்ல, புத்தூர் பக்கம்கூட நிறைய பேர்.. நம்ம தோஸ்துக வைச்சிருக்காங்க. அங்கேயும் இது மாதிரி புத்தகம்தான் உடனேயே வித்திருது.. யாரோடது ஸார் இது..?” என்றார் கடைக்காரர். ‘கிழக்கின்’ ஆதியையும், அந்தத்தையும் ஒரு நிமிடத்தில் சொல்ல முடியுமா என்ன..? என்னிடம் இல்லாத ‘அல்கொய்தா’ புத்தகத்தை மட்டும் வாங்கிக் கொண்டு வந்துவிட்டேன்..

கிழக்குப் பதிப்பககத்தில் மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்ட் மட்டும் ரொம்ப சுறுசுறுப்பா வேலை பார்க்குறாங்க போலிருக்கு.. நல்லாயிருக்கட்டும்..

‘பிரபாகரன்’ புத்தகத்தைத்தான் முதல் பாகத்தில் சொன்னதுபோல் சென்னை திரும்பும்போது படித்தபடியே வந்தேன். நேரம் போனதே தெரியவில்லை.

விமர்சனம்..?

வரும்ல.. என்ன அவசரம்..?

(திருச்சி பயணம் தொடரும்)

41 பதில்கள் to “திருச்சி – நகர்வலம்..!”

 1. Arun Kumar Says:

  /கொள்ளிடக் கரையும், காவிரி ஆறும் திருச்சிக்கு பெயர் சொல்லும்விதமாக அமைந்திருந்தாலும் வருடத்தில் முக்கால் மாதங்கள் காவிரி ஆறு வரண்டு போய் கிடப்பதால் அதிலிருந்து வர வேண்டிய காற்றும், இயற்கை தாலாட்டும் கோடை காலத்தில் திருச்சி மக்களுக்குக் கிடைப்பதேயில்லை//இல்லையே.. பிப்ரவரி மாதம் முதல் ஜீன் இரண்டாம் வாரம் வரை தானே வறண்டு இருக்கு.. அதை கூட வறணு போனது என சொல்ல முடியாது..சிறு ஓடையாக தண்ணீர் அந்த காலத்தில் இருக்குமே..எனக்கு தெரிந்து 2002ல் மட்டும் தான் வறண்ட காவிரியை பார்த்தேன்..//சாலையை ஆக்கிரமித்து சாரதாஸ் நிறுவனமே கடை கட்டியிருக்கிறது. கேட்க வேண்டியவர்கள் நோட்டீஸ் அனுப்பி விசாரித்ததோடு அவ்வளவுதான். மூடிக் கொண்டுவிட்டார்கள். பணம் பத்தும் செய்யும். அதிகார வர்க்கம் சூட்கேஸ்களுக்கு மட்டு்ம்தான் காது கொடுக்கும்.. இது நமது தலைவிதி..//சுவரண் சிங் திருச்சி கமிசனராக இருந்த போது சாரதாஸ் ஆக்கிரமித்து இருந்த பல நூற்றாண்டு பழைமையான ஒரு கால்வாயை கண்டுபிடித்து அதை மீண்டும் பயனுக்கு கொண்டு வந்தார். அவரு போன பின்பு.. பழைய குருடி கதவ திறடி தான்.ஆனா சென்னை சில்க்ஸ் வந்த பின்னாடி சாரதாஸ்க்கு முன்பு போல வியாபாரம் இல்லை..

 2. Arun Kumar Says:

  //உச்சியில் இருந்து பார்த்தால் திருச்சி மாநகரம் அம்சமாக தெரிகிறது.. காவிரி ஆற்றின் பிரம்மாண்டத்தை இங்கிருந்துதான் முழுமையாகப் பார்க்க முடிகிறது. திருவரங்கப் பெருமானின் வீட்டுக் கோபுரம்கூட தெரிகிறது. இங்கிருந்தே கன்னத்தில் போட்டுக் கொண்டேன். விநாயகரை சுற்றி வந்து வணங்கிவிட்டு அங்கேயே சம்மணங்கால் போட்டு அமர்ந்து பலரும் ஊர்ககதை, உலகக் கதையெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள்.//பிப்ரவரி மாதத்தில் மாலை நேரத்தில் மலைகோட்டையில் இருந்து திருச்சி நகரை வேடிக்கை பார்க்க கண் கோடி வேண்டும்..திருவானைகோவில் திருவரங்கம்…அப்புறம் மேககூட்டம் இல்லாம இருந்தா சமயபுர கோவில் கோபுரம் கூட தெரியும்..தூரத்தில் ரயில் காவிரி ஆற்றை கடந்து திருச்சியின் அடுத்த பக்கத்துக்கு செல்லவதை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்//திருச்சி சினிமா தியேட்டர்கள் வித்தியாசமாக இருக்கின்றன. காலை 10 மணி, மதியம் 2 மணி, மாலை 6 மணி இரவு 10 மணி என்றுதான் காட்சிகள் திரையிடப்படுகின்றன. ஆச்சரியமாக உள்ளது. 11, 2.30, 6.45, 10.15 என்று பார்த்து, பார்த்து இருந்த எனக்கு இது ஆச்சரியம்தான். காரணம் கேட்டால், “உண்மையான காரணம் யாருக்கும் தெரியவி்ல்லை. எல்லாரும் இதைப் பின்பற்றுகிறார்கள். அவ்வளவுதான்..” என்றார்கள்///முன்பு 5 தியேட்டர்களாக இருந்த மாரீஸ் காம்லக்ஸில் தான் இந்த பழக்கம் இருந்தது. மாரீஸில் இருந்து மற்ற தியேட்டர்களுக்கு இந்த பழக்கம் தொடர்ந்து இருக்கலாம்..//பிரபாகரன்’ புத்தகத்தைத்தான் முதல் பாகத்தில் சொன்னதுபோல் சென்னை திரும்பும்போது படித்தபடியே வந்தேன். நேரம் போனதே தெரியவில்லை.//உங்க விமர்சனத்துக்கு வெயிட்ட்ங்..நானும் அந்த புத்தகத்தை படித்தேன்.ஆரம்பம் நன்றாக இருந்தது ஆனால் போக போக ஏதோ புலிகளின் ஆதரவு தளங்களின் கட்டுரை படிப்பது போல இருந்தது.

 3. மணிகண்டன் Says:

  நீங்க திருச்சி ஒரு வாரம் போயிட்டு வந்தா பதிவோட நீளம் எப்படி இருக்கும் ?

 4. மணிகண்டன் Says:

  ***திருச்சி நகரை வேடிக்கை பார்க்க கண் கோடி வேண்டும்..***அருணு, இது எல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல ?

 5. இரா. வசந்த குமார். Says:

  அன்பு உண்மைத்தமிழன்…வழக்கம் போல் கண் முன் விவரிப்பு.நம்ம திருச்சி பதிவுகளையும் ஒரு லுக் விடுங்களேன்…!!!ஸ்ரீரங்கம்.சிராப்பள்ளி சுற்றுலா.நன்றிகள்.

 6. அபி அப்பா Says:

  ஆகா மாசி முதல் ஆணி கடைசி வரை எப்போதுமே காவிரியில் தண்ணி வராதே சரவணா! ராஜ ராஜ சோழன் காலத்தில் கூட வந்ததில்லையே!அதனால் தானே நாங்க தஞ்சை மாவட்டம் “ஆடிப்பட்டம் தேடி விதைத்தோம்” ஆடி 18 ஆடிப்பெருக்கு அன்னிக்கு தண்ணி கரை புரண்டு ஓடுமே!என்ன கொடுமைன்னா, ஆடி கறக்கும் மாட்டை ஆடி கறக்கனும் பாடிக்கறக்கும் மாட்டை பாடிக்கறக்கனும். அது அந்த செயலலிதாக்கு தெரியாது! ஆனா இந்த 3 வருஷமா காவிரி பிரச்சனைன்னு எப்பவாவது கேள்விப்பட்டதுண்டா நீங்க?

 7. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Arun Kumar said…/கொள்ளிடக் கரையும், காவிரி ஆறும் திருச்சிக்கு பெயர் சொல்லும்விதமாக அமைந்திருந்தாலும் வருடத்தில் முக்கால் மாதங்கள் காவிரி ஆறு வரண்டு போய் கிடப்பதால் அதிலிருந்து வர வேண்டிய காற்றும், இயற்கை தாலாட்டும் கோடை காலத்தில் திருச்சி மக்களுக்குக் கிடைப்பதேயில்லை//இல்லையே.. பிப்ரவரி மாதம் முதல் ஜீன் இரண்டாம் வாரம் வரைதானே வறண்டு இருக்கு.. அதை கூட வறணு போனது என சொல்ல முடியாது.. சிறு ஓடையாக தண்ணீர் அந்த காலத்தில் இருக்குமே..எனக்கு தெரிந்து 2002ல் மட்டும்தான் வறண்ட காவிரியை பார்த்தேன்..//நான் மழைக்காலங்களில் அதிகம் திருச்சிக்கு வந்ததில்லை. கரைபுரண்டோடியதை வெள்ளப் பெருக்கின்போதுதான் பார்த்தேன்..//சாலையை ஆக்கிரமித்து சாரதாஸ் நிறுவனமே கடை கட்டியிருக்கிறது. கேட்க வேண்டியவர்கள் நோட்டீஸ் அனுப்பி விசாரித்ததோடு அவ்வளவுதான். மூடிக் கொண்டுவிட்டார்கள். பணம் பத்தும் செய்யும். அதிகார வர்க்கம் சூட்கேஸ்களுக்கு மட்டு்ம்தான் காது கொடுக்கும்.. இது நமது தலைவிதி..//சுவரண்சிங் திருச்சி கமிசனராக இருந்த போது சாரதாஸ் ஆக்கிரமித்து இருந்த பல நூற்றாண்டு பழைமையான ஒரு கால்வாயை கண்டுபிடித்து அதை மீண்டும் பயனுக்கு கொண்டு வந்தார். அவரு போன பின்பு.. பழைய குருடி கதவ திறடிதான். ஆனா சென்னை சில்க்ஸ் வந்த பின்னாடி சாரதாஸ்க்கு முன்பு போல வியாபாரம் இல்லை..//வியாபாரம் இருந்தா என்ன.. போனா என்ன அருண்..?பொதுச்சொத்தை வைத்து சம்பாதித்து குவித்துவிட்டார்களே.. போதாதா..?இப்போதும் சாலையின் குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்து உள்ளதாக அங்கே இருந்த ஒருவர் சொன்னார். அதோடு அது எந்த இடம் என்பதையும் என்னிடம் காண்பித்தார். அதனால்தான் எழுதினேன்..

 8. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Arun Kumar said…பிப்ரவரி மாதத்தில் மாலை நேரத்தில் மலைகோட்டையில் இருந்து திருச்சி நகரை வேடிக்கை பார்க்க கண் கோடி வேண்டும்..திருவானைகோவில் திருவரங்கம்…அப்புறம் மேககூட்டம் இல்லாம இருந்தா சமயபுர கோவில் கோபுரம்கூட தெரியும்.. தூரத்தில் ரயில் காவிரி ஆற்றை கடந்து திருச்சியின் அடுத்த பக்கத்துக்கு செல்லவதை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்.//எனக்கும் மேலேயிருந்து படியிறங்கவே மனசில்லை. நேரமில்லாததால் மனமில்லாமல் வந்தேன்..//திருச்சி சினிமா தியேட்டர்கள் வித்தியாசமாக இருக்கின்றன. காலை 10 மணி, மதியம் 2 மணி, மாலை 6 மணி இரவு 10 மணி என்றுதான் காட்சிகள் திரையிடப்படுகின்றன. 11, 2.30, 6.45, 10.15 என்று பார்த்து, பார்த்து இருந்த எனக்கு இது ஆச்சரியம்தான். காரணம் கேட்டால், “உண்மையான காரணம் யாருக்கும் தெரியவி்ல்லை. எல்லாரும் இதைப் பின்பற்றுகிறார்கள். அவ்வளவுதான்..” என்றார்கள்///முன்பு 5 தியேட்டர்களாக இருந்த மாரீஸ் காம்லக்ஸில்தான் இந்த பழக்கம் இருந்தது. மாரீஸில் இருந்து மற்ற தியேட்டர்களுக்கு இந்த பழக்கம் தொடர்ந்து இருக்கலாம்..///ஓ.. அப்படியா..?மாரீஸ் காம்ப்ளெக்ஸிலும் இப்போது இரண்டு தியேட்டர்கள் மட்டுமே இயங்குவதாகக் கேள்விப்பட்டேன். உண்மையா அருண்..?///பிரபாகரன்’ புத்தகத்தைத்தான் முதல் பாகத்தில் சொன்னதுபோல் சென்னை திரும்பும்போது படித்தபடியே வந்தேன். நேரம் போனதே தெரியவில்லை.//உங்க விமர்சனத்துக்கு வெயிட்ட்ங்..நானும் அந்த புத்தகத்தை படித்தேன்.ஆரம்பம் நன்றாக இருந்தது ஆனால் போக போக ஏதோ புலிகளின் ஆதரவு தளங்களின் கட்டுரை படிப்பது போல இருந்தது.///எழுதிருவோம்.. கொஞ்ச நாளாகட்டும்னு பாக்குறேன்.. ஒரு காரணமாகத்தான்..

 9. Valaipookkal Says:

  Hiஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory – http://www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.நட்புடன் வலைபூக்கள் குழுவிநர்

 10. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //மணிகண்டன் said…நீங்க திருச்சி ஒரு வாரம் போயிட்டு வந்தா பதிவோட நீளம் எப்படி இருக்கும்?//ஒரு நாளைக்கு 10 பக்கம் என்று வைத்துக் கொண்டால் 7 நாட்களுக்கு 70 பக்கம் வருமே..ஐயோ முருகா.. அவ்வளவு தட்டச்சு செய்யணுமா..? என் கை செத்திரும்..

 11. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //மணிகண்டன் said…***திருச்சி நகரை வேடிக்கை பார்க்க கண் கோடி வேண்டும்..***அருணு, இது எல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல ?//இதிலென்ன ஓவர் மணி.அவரவர்க்கு சொந்த ஊர் என்பது சொந்த வீடு மாதிரி.. அந்த பெருமித உணர்வு தானாகவே வரும்.. அதில் குற்றம் காணக்கூடாது..

 12. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //இரா. வசந்த குமார். said…அன்பு உண்மைத்தமிழன்…வழக்கம் போல் கண் முன் விவரிப்பு.நம்ம திருச்சி பதிவுகளையும் ஒரு லுக் விடுங்களேன்…!!!ஸ்ரீரங்கம்.சிராப்பள்ளி சுற்றுலா.நன்றிகள்.//நன்றி வசந்தகுமார் ஸார்..நாளை நிச்சயம் படிக்கிறேன்..

 13. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //அபி அப்பா said…ஆகா மாசி முதல் ஆணி கடைசிவரை எப்போதுமே காவிரியில் தண்ணி வராதே சரவணா! ராஜராஜசோழன் காலத்தில்கூட வந்ததில்லையே!//அப்படியா..? கோடைக் காலத்தில் தண்ணீர் வரத்து இல்லாமல் சோழன் காலத்தில் என்ன செய்தார்கள் அபிப்பா..?//அதனால்தானே நாங்க தஞ்சை மாவட்டம் “ஆடிப்பட்டம் தேடி விதைத்தோம்” ஆடி 18 ஆடிப்பெருக்கு அன்னிக்கு தண்ணி கரை புரண்டு ஓடுமே!//வருஷத்துல அந்த ஒரு நாள்ல மட்டும்தான் நம்ம டிவிக்காரங்க காவிரி தண்ணியை காட்டுறாங்க..//என்ன கொடுமைன்னா, ஆடி கறக்கும் மாட்டை ஆடி கறக்கனும் பாடிக்கறக்கும் மாட்டை பாடிக்கறக்கனும். அது அந்த செயலலிதாக்கு தெரியாது!//இந்த இடத்துல எதுக்கு புரட்சித் தலைவியை இழுக்குறீங்க அபிப்பா.. எனக்கு என்னமோ பண்ணுது..//ஆனா இந்த 3 வருஷமா காவிரி பிரச்சனைன்னு எப்பவாவது கேள்விப்பட்டதுண்டா நீங்க?//அதான.. ஏன் வரலை..வருண பகவான் நல்லா கவனிச்சுக்கிட்டாரா..?

 14. மணிகண்டன் Says:

  ****அவரவர்க்கு சொந்த ஊர் என்பது சொந்த வீடு மாதிரி.. அந்த பெருமித உணர்வு தானாகவே வரும்****நிச்சயமா

 15. அத்திரி Says:

  //மணிகண்டன் said… நீங்க திருச்சி ஒரு வாரம் போயிட்டு வந்தா பதிவோட நீளம் எப்படி இருக்கும் ?//நாம படிக்கிறதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் அதிகம் ஆகும்……அவ்வ்வ்வ்வ்

 16. கிரி Says:

  //தமிழகத்தின் மத்தியப் பகுதியில் வீற்றிருக்கும் திருச்சி மாநகரம், இப்போதே இந்த பிப்ரவரி மாதமே வெயிலில் கொதிக்கிறது//இப்போதெல்லாம் பிப்ரவரி மாதமே வெய்யில் தொடங்கி விடுகிறது முதல் பாதி அரசியல் பதிவை போல உள்ளது 🙂

 17. அது சரி Says:

  //மதுரை நகரைப் போலவே திருச்சியிலும் இப்போது ஒரு பட்டத்து இளவரசர் கோலோச்சுகிறார். பெயர் கே.என்.நேரு. தமிழக அமைச்சரவையில் அசைக்க முடியாத உடன்பிறப்//என்ன ஒடன்பொறப்போ…ஆளுக்கு ஒரு ஏரியான்னு பட்டா போட்டு குடுத்துட்டானுங்க போல….இந்த ஒடன்பொறப்பு, ரத்தத்தின் ரத்தங்கள் தொல்லை தாங்க முடியலைப்பா….

 18. அது சரி Says:

  // திரும்பிய பக்கமெல்லாம் அண்ணனின் புகைப்படங்கள்தான்.. போஸ்டர்கள்தான்.. இளவரசரின் சொந்த ஊரும், சொந்தத் தொகுதியும் இதுதான் என்பதால், ஐயா கக்கூஸ் திறக்க வந்தால்கூட அதற்கும் ஒரு போஸ்டர் அடித்து போஸ்டர் தொழிலை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள் தொண்டர்கள்..//ஆமா, அந்த போஸ்டரையெல்லாம் கக்கூஸ்ல ஒட்ட வேண்டியது தான…எதுக்கு ஊரெல்லாம் ஒட்டி இப்பிடி அசிங்கப்படுத்துறானுங்க??திருச்சின்னு இல்ல…தமிழ்நாட்டுல எந்த ஊருக்கு போனாலும் எதுனா ஒரு அண்ணன் அழைச்சிக்கிட்டு தான் இருக்கான்…இல்ல ஒரு ஜாதி தலைவன் காளைகளெ வாருங்கள், பசுக்களே வாருங்கள், குவாட்டரும் கோழி பிரியாணியும், தலைக்கு இருநூத்து அம்பதும் தருகிறோம் வாருங்கள்னு ஒரே அழைப்பு தான்….

 19. அது சரி Says:

  //கொள்ளிடக் கரையும், காவிரி ஆறும் திருச்சிக்கு பெயர் சொல்லும்விதமாக அமைந்திருந்தாலும் வருடத்தில் முக்கால் மாதங்கள் காவிரி ஆறு வரண்டு போய் கிடப்பதால் அதிலிருந்து வர வேண்டிய காற்றும், இயற்கை தாலாட்டும் கோடை காலத்தில் திருச்சி மக்களுக்குக் கிடைப்பதேயில்லை.//ஸ்ஸ்ஸ்ஸ்…கேட்டா கருணாநிதி துரோகம்னு அம்மா சொல்லும்…அம்மையார் பிலாக்கணம்னு அய்யா சொல்லுவாரு….மாறி மாறி ஒரே அறிக்கை மாரி தான் வருமே ஒழிய வேற ஒண்ணும் வராது….தண்ணி இல்லாட்டி கூட பரவால்லைனு பார்த்தா இப்ப மணலையும் உடன்பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும், தேசியவியாதிகளும் திருடிக்கிட்டு இருக்காணுங்க..இன்னும் நாலு வருசத்துல இந்த பக்கம் தான் காவிரி ஓடிச்சினு மேப்புல தான் பார்க்கணும்!

 20. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //மணிகண்டன் said… **** அவரவர்க்கு சொந்த ஊர் என்பது சொந்த வீடு மாதிரி.. அந்த பெருமித உணர்வு தானாகவே வரும் **** நிச்சயமா//மணிகண்டன், உங்க சொந்த ஊர் திருச்சியோ..?

 21. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //அத்திரி said…/மணிகண்டன் said…நீங்க திருச்சி ஒரு வாரம் போயிட்டு வந்தா பதிவோட நீளம் எப்படி இருக்கும்?/நாம படிக்கிறதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் அதிகம் ஆகும். அவ்வ்வ்வ்வ்//அப்பாடா.. என்னைத் தெளிவா புரிஞ்சுக்கிட்ட ஒரு ஆள் பக்கத்துலேயே இருக்காரு.. சந்தோஷம் அத்திரி..

 22. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///கிரி said…//தமிழகத்தின் மத்தியப் பகுதியில் வீற்றிருக்கும் திருச்சி மாநகரம், இப்போதே இந்த பிப்ரவரி மாதமே வெயிலில் கொதிக்கிறது//இப்போதெல்லாம் பிப்ரவரி மாதமே வெய்யில் தொடங்கி விடுகிறது.முதல் பாதி அரசியல் பதிவை போல உள்ளது :-)//டைப்பிங் பண்ணி முடிச்ச பி்ன்னாடிதான் எனக்கே தெரிஞ்சது.சரி.. போகட்டும்னு விட்டுட்டேன்..தெரிஞ்சுக்கட்டுமே.. என்ன தப்பு கிரியாரே..?

 23. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///அது சரி said…//மதுரை நகரைப் போலவே திருச்சியிலும் இப்போது ஒரு பட்டத்து இளவரசர் கோலோச்சுகிறார். பெயர் கே.என்.நேரு. தமிழக அமைச்சரவையில் அசைக்க முடியாத உடன்பிறப்//என்ன ஒடன்பொறப்போ… ஆளுக்கு ஒரு ஏரியான்னு பட்டா போட்டு குடுத்துட்டானுங்க போல…. இந்த ஒடன்பொறப்பு, ரத்தத்தின் ரத்தங்கள் தொல்லை தாங்க முடியலைப்பா.//இதுக்குத்தான் இந்த ரெண்டு பேரையும் விரட்டிட்டு வேற ஒருத்தருக்கு வாய்ப்பு தரலாம்னு சொல்றது..அந்த ஒருத்தரும் ஜாம்பவனா கண்ணுல பட மாட்டேங்குறாரு.. நோஞ்சானா இருக்காரே.. நாம என்னத்த செய்றது ஸார்..?

 24. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///அது சரி said…//திரும்பிய பக்கமெல்லாம் அண்ணனின் புகைப்படங்கள்தான்.. போஸ்டர்கள்தான்.. இளவரசரின் சொந்த ஊரும், சொந்தத் தொகுதியும் இதுதான் என்பதால், ஐயா கக்கூஸ் திறக்க வந்தால்கூட அதற்கும் ஒரு போஸ்டர் அடித்து போஸ்டர் தொழிலை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள் தொண்டர்கள்.//ஆமா, அந்த போஸ்டரையெல்லாம் கக்கூஸ்ல ஒட்ட வேண்டியதுதான. எதுக்கு ஊரெல்லாம் ஒட்டி இப்பிடி அசிங்கப்படுத்துறானுங்க??திருச்சின்னு இல்ல. தமிழ்நாட்டுல எந்த ஊருக்கு போனாலும் எதுனா ஒரு அண்ணன் அழைச்சிக்கிட்டுதான் இருக்கான். இல்ல.. ஒரு ஜாதி தலைவன் காளைகளெ வாருங்கள், பசுக்களே வாருங்கள், குவாட்டரும் கோழி பிரியாணியும், தலைக்கு இருநூத்து அம்பதும் தருகிறோம் வாருங்கள்னு ஒரே அழைப்புதான்.//இதுதான் தமிழ்நாட்டோட அரசியல்..காசு இருக்கிறவன் தன்னை வாழ்த்தை கோஷம் போடுறதுக்கு ஒரு ஆளைத் தேடுறான்..எவனாச்சும் காசு கொடுக்க மாட்டானான்னு உழைக்காம திங்கறதுக்குன்னு ஒரு கூட்டம் ஆலாயாப் பறக்குது..இந்த ரெண்டும் ஒண்ணா சேர்ந்துதான் அரசியல் கொடி பிடிச்சுர்றாங்க..நம்ம தலைவிதி..

 25. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///அது சரி said…//கொள்ளிடக் கரையும், காவிரி ஆறும் திருச்சிக்கு பெயர் சொல்லும்விதமாக அமைந்திருந்தாலும் வருடத்தில் முக்கால் மாதங்கள் காவிரி ஆறு வரண்டு போய் கிடப்பதால் அதிலிருந்து வர வேண்டிய காற்றும், இயற்கை தாலாட்டும் கோடை காலத்தில் திருச்சி மக்களுக்குக் கிடைப்பதேயில்லை.//ஸ்ஸ்ஸ்ஸ்… கேட்டா கருணாநிதி துரோகம்னு அம்மா சொல்லும்… அம்மையார் பிலாக்கணம்னு அய்யா சொல்லுவாரு…. மாறி மாறி ஒரே அறிக்கை மாரிதான் வருமே ஒழிய வேற ஒண்ணும் வராது….///உண்மை.. உண்மை.. அதைத்தானே இந்த இருபது வருஷமா பார்த்துக்கிட்டிருக்கோம்..//தண்ணி இல்லாட்டி கூட பரவால்லைனு பார்த்தா இப்ப மணலையும் உடன்பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும், தேசிய வியாதிகளும் திருடிக்கிட்டு இருக்காணுங்க. இன்னும் நாலு வருசத்துல இந்த பக்கம்தான் காவிரி ஓடிச்சினு மேப்புலதான் பார்க்கணும்!//உண்மைதான் ஸார்..முசிறி ஆற்றின் கரையில்தான் அதிகமாக மணல் அள்ளுவதாக கேள்விப்பட்டேன்..கட்டிங் எல்லாம் மிகச் சரியாக மேலிடத்திற்குப் போய்ச் சேர்கிறதாம்..ஆட்சி மாற்றம் நடந்தால்கூட பணத்தால் அனைவரையும் அடித்து விடுகிறார்கள் பண முதலைகள்..பெட்டி என்றவுடன் வாயைப் பிளந்து காத்திருக்கிறார்கள் அரசியல்வியாதிகள்.இந்த விஷயத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் (கம்யூனிஸ்டுகளைத் தவிர) ஓரணியில் திரண்டு மாமூலை பெறுகின்றனவாம்..எல்லாம் பண மயம்..

 26. Anonymous Says:

  என்னது?தங்கத் தலைவி ஷகீலாவுக்கு கல்யாணமாயிருச்சா..?எனக்கு நெஞ்சுல பாறாங்கல்லைத் தூக்கிப் போட்ட மாதிரியிருக்கு..உ.த. எப்படி எங்களைக் கேக்காம எங்க தலைவி கல்யாணம் பண்ணலாம்..? கேட்டுச் சொல்லுங்க..

 27. செல்வன் Says:

  இரு பகுதிகளையும் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் உண்மைதமிழன்.வாழ்த்துக்கள்.

 28. கே.ஆர்.பி.செந்தில் Says:

  மதிப்புற்குரிய உண்மைத்தமிழன் அவர்களுக்கு”முன்பெல்லாம் அடிக்கடி திருச்சி செல்லும் வாய்ப்பு வரும்போது நேரங்கெட்ட நேரத்தில் சத்திரம் பஸ்ஸ்டாண்டில் சிக்கிக் கொண்டால் அப்படியே பொடி நடையாய் நடந்து வந்து மத்திய நூலகத்தில் புத்தகத்துக்கு மத்தியில் முகத்தைப் புதைத்துக் கொள்வேன். இப்போது மத்திய நூலகத்தை எங்கயோ கொண்டு போய்விட்டார்களாம்.. மதிய நேரத்தில் எப்போது திருச்சியின் மத்தியில் சிக்கினாலும் இப்போது மலைக்கோட்டையை விட்டால் ஒரு வழியும் இல்லை”எனக்கும் அப்படிதான் நண்பரே .. ஆனாலும் திருச்சியும், மதுரை மற்றும் கோவையைபோல் ஒரு சுவரஸ்யமான ஊர்தான் ,உங்களின் அடுத்த பயணத்தை எதிர்பார்க்கிறேன் நன்றி…

 29. நையாண்டி நைனா Says:

  என்னை வளர்த்த தாய்மண் திருச்சி. அதற்கு சென்று வந்த எங்கள் அண்ணன் உண்மை தமிழனே வாழ்கதமிழாய் வாழ்கமுத்தமிழே வாழ்கபரணியே வாழ்கபோர்வீரனே வாழ்கஅலெக்ஸ் சாண்டரே வாழ்ககோர்பசேவே வாழ்கபான்-கி-மூனே வாழ்க ரொனால்டு ரீகனே வாழ்க (அட… இதுக்கு தான் ஓவரா கழக கண்மணிகளோட போஸ்டரை படிக்க கூடாதோ? )

 30. SurveySan Says:

  //உச்சியில் இருந்து பார்த்தால் திருச்சி மாநகரம் அம்சமாக தெரிகிறது.. காவிரி ஆற்றின் பிரம்மாண்டத்தை இங்கிருந்துதான் முழுமையாகப் பார்க்க முடிகிறது. //போட்டோ?

 31. தேனியார் Says:

  திருச்சியை போகிற வழியில் பார்த்தால்தான் உண்டு,இலவசமாக் என் கண்முன்னே நிறுத்தியத்ற்கு நன்றி.ஆனால் ரொம்ப நீ…………ளம்,எனினும் அருமையானப் பதிவு.

 32. அருப்புக்கோட்டை பாஸ்கர் Says:

  அண்ணே !!நீங்க நல்லவரா? இல்லை கெட்டவரா ? ( நாயகன் பட குழந்தை போல் வாசிக்கவும் )

 33. வண்ணத்துபூச்சியார் Says:

  கிழக்குப் பதிப்பகத்தின் பல புத்தகங்கள் இங்கே பாதி விலைக்குக் கிடைத்தன.?????????//மாயவலை கிடைத்தால் two copies. வாங்கி வரவும்

 34. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…என்னது? தங்கத் தலைவி ஷகீலாவுக்கு கல்யாணமாயிருச்சா..?எனக்கு நெஞ்சுல பாறாங்கல்லைத் தூக்கிப் போட்ட மாதிரியிருக்கு..உ.த. எப்படி எங்களைக் கேக்காம எங்க தலைவி கல்யாணம் பண்ணலாம்..? கேட்டுச் சொல்லுங்க..//பொறுங்க அனானியாரே..அவுககிட்டேயே கேட்டுச் சொல்றேன்..

 35. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //செல்வன் said…இரு பகுதிகளையும் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் உண்மைதமிழன். வாழ்த்துக்கள்.//நன்றி செல்வன்..நாம் சந்தித்து வெகு காலமாகிவிட்டது. நலம்தானே..?

 36. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கே.ஆர்.பி.செந்தில் said…மதிப்புற்குரிய உண்மைத்தமிழன் அவர்களுக்கு//எதுக்கு ஸார் இந்த பில்டப்பெல்லாம்.. சும்மா உ.த. அப்படீன்னு கூப்பிட்டாகூட போதும்..//”முன்பெல்லாம் அடிக்கடி திருச்சி செல்லும் வாய்ப்பு வரும்போது நேரங்கெட்ட நேரத்தில் சத்திரம் பஸ்ஸ்டாண்டில் சிக்கிக் கொண்டால் அப்படியே பொடி நடையாய் நடந்து வந்து மத்திய நூலகத்தில் புத்தகத்துக்கு மத்தியில் முகத்தைப் புதைத்துக் கொள்வேன். இப்போது மத்திய நூலகத்தை எங்கயோ கொண்டு போய்விட்டார்களாம்.. மதிய நேரத்தில் எப்போது திருச்சியின் மத்தியில் சிக்கினாலும் இப்போது மலைக்கோட்டையை விட்டால் ஒரு வழியும் இல்லை”எனக்கும் அப்படிதான் நண்பரே .. ஆனாலும் திருச்சியும், மதுரை மற்றும் கோவையைபோல் ஒரு சுவரஸ்யமான ஊர்தான் ,உங்களின் அடுத்த பயணத்தை எதிர்பார்க்கிறேன். நன்றி…//நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்..வருகைக்கு நன்றிகள்..

 37. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //நையாண்டி நைனா said…என்னை வளர்த்த தாய்மண் திருச்சி.அதற்கு சென்று வந்தஎங்கள் அண்ணன்உண்மை தமிழனே வாழ்கதமிழாய் வாழ்கமுத்தமிழே வாழ்கபரணியே வாழ்கபோர்வீரனே வாழ்கஅலெக்ஸ்சாண்டரே வாழ்ககோர்பசேவே வாழ்கபான்-கி-மூனே வாழ்கரொனால்டு ரீகனே வாழ்க(அட… இதுக்குதான் ஓவரா கழக கண்மணிகளோட போஸ்டரை படிக்க கூடாதோ?)//நைனா..இதெல்லாம் உங்களுக்கு ஓவரா இல்லியா..?அதே போஸ்டர்ல சாணியைக் கரைச்சு ஊத்துன மாதிரியிருக்கு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…….

 38. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  SurveySan said…//உச்சியில் இருந்து பார்த்தால் திருச்சி மாநகரம் அம்சமாக தெரிகிறது.. காவிரி ஆற்றின் பிரம்மாண்டத்தை இங்கிருந்துதான் முழுமையாகப் பார்க்க முடிகிறது. //போட்டோ?///மொதல்ல ஒரு டிஜிட்டல் கேமிரா வாங்கி அனுப்புறது..!

 39. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //தேனியார் said…திருச்சியை போகிற வழியில் பார்த்தால்தான் உண்டு,இலவசமாக் என் கண்முன்னே நிறுத்தியத்ற்கு நன்றி.ஆனால் ரொம்ப நீ…………ளம்,எனினும் அருமையானப் பதிவு.//இது நீளமா..?தேனியாரே இதெல்லாம் நல்லாயில்ல.. சொல்லிட்டேன்..இதுவே நீளம்னா.. என்னோட மத்தப் பதிவுகளையெல்லாம் என்னன்னு சொல்வீங்க?

 40. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //அருப்புக்கோட்டை பாஸ்கர் said…அண்ணே!! நீங்க நல்லவரா? இல்லை கெட்டவரா ? ( நாயகன் பட குழந்தை போல் வாசிக்கவும் )//தெரியலியே.. (நாயகன் கமல் சொல்வது மாதிரி வாசிக்கவும்)

 41. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வண்ணத்துபூச்சியார் said…கிழக்குப் பதிப்பகத்தின் பல புத்தகங்கள் இங்கே பாதி விலைக்குக் கிடைத்தன.?????????//மாயவலை கிடைத்தால் two copies. வாங்கி வரவும்.///மாயவலையெல்லாம் அங்கே வருவதற்கு சில காலமாகலாம் பூச்சியாரே..உடனேயே கிழக்கில் சென்று வாங்கிவிடுங்கள்.. அப்புறம் லேட்டானால் காலியாகிவிடும். அவ்ளோ பரபரப்பாம் அந்தப் புத்தகத்திற்கு..

உண்மைத் தமிழன்(15270788164745573644) க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: