சரவணன்-நமீதா-கெளபாய்

27.01.2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

பயப்பட வேண்டாம்..!

இன்று மாலை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் நான் பார்த்த மூன்று குறும்படங்கள் பற்றி(கொஞ்சமாகத்தான்) உங்களிடம் பேசப் போகிறேன்.. அவ்வளவுதான்..

“பெண் புத்தி பின் புத்தி!”


படத்தின் பெயர் தெரியாது. ஆனால் திரைப்படம் போலவே எடுத்திருக்கிறார்கள்.

இரவு நேரத்தில் கொட்டுகின்ற மழையில் ஒரு பெண் பேருந்திற்காக காத்திருக்கிறாள். ஏதோ நிறைய நடந்து செல்லும் வேலை செய்திருக்கிறாள் போலிருக்கிறது. அலுப்பாய் இருக்கிறாள். கால் பாதத்தைப் பிடித்துவிட்டுக் கொண்டிருக்கிறாள். அப்போது நமது பருத்திவீரன் ஸ்டைலில் ஒரு இளைஞன் வாயில் பற்ற வைக்காத சிகரெட்டுடன் வருகிறான். அவனைப் பார்த்ததும் கையது, வாயது பொத்தி அடக்க ஒடுக்கமாக பயந்தவள் போலாகிறாள் பெண்.

பேருந்து வருகிறது. அந்த இளைஞனும், அவளும் கை காட்ட பேருந்து நிற்கிறது. பேருந்தில் ஏறும் இளைஞனிடம் “உள்ளே சிகரெட் பிடிக்கக் கூடாது..” என்று ஓட்டுநர் எச்சரிக்கிறார். பயல் கேட்காமல் அலட்சியமாக பார்க்கிறான். அவன் அருகில் நிற்கும் பதட்டத்தில் அந்தப் பெண் தனது பர்ஸை துழாவி, துழாவி நாணயத்தை எடுத்து உண்டியலில் போட்டுவிட்டு உள்ளே செல்கிறாள்.

டிரைவர் போட்ட பிரேக்கில் அவள் கையில் இருந்த பை நழுவி விழுக.. அதில் இருந்தவைகள் அனைத்தும் பேருந்தின் உள்ளே சிதற.. அவளும் கீழே விழுகிறாள். ஆபாத்பாந்தனாக இளைஞன் அவளுக்குக் கை கொடுத்துத் தூக்க முயல.. அவனது கையைத் தட்டிவிட்டுவிட்டு கீழே விழுந்தவைகளை பொறுக்கியெடுத்துக் கொண்டு பேருந்தின் ஒரு மூலைக்குச் சென்று அமர்கிறாள்.

இளைஞன் ஸ்டைலாக அவளைப் பார்த்தபடியே வர தன்னை நோக்கித்தான் வருகிறானோ என்று நினைத்து ஒரு நொடி பயப்படுகிறாள். ஆனால் இளைஞனோ சும்மா, அவளருகில் வருவதைப்போல் பாவ்லா காட்டிவிட்டு வேறொரு இடத்தில் சென்று அமர்கிறான். பெண் பெருமூச்சுவிடுகிறாள்.

அப்படியே தனது கைகளைப் பார்ப்பவள் திடுக்கிறாள். கையில் வாட்ச் இல்லை. எங்கே என்று சீட்டுகளுக்கு அடியில் குனிந்து தேடுகிறாள். அக்கம், பக்கம் தேடுகிறாள். அப்போது அந்த சண்டியர், தனது கையைப் பிடித்தது அவளது நினைவுக்கு வர அவன்தான் திருடியிருக்கிறான் என்று நினைக்கிறாள். அதற்கேற்றாற்போல் அந்த இளைஞனும் அவளுடைய படபடப்பையும், பயத்தையும் பார்த்து நக்கலாகச் சிரிக்க கோபாவேசம் ஏற்படுகிறது அவளுக்குள்.

தன் பையில் வைத்திருந்த ஸ்வெட்டர் பின்னும் ஊசியை எடுத்துக் கொண்டு பட்டென்று இளைஞனின் அருகில் வந்து அமர்கிறாள். ஊசியால் ஒரே குத்து.. “மரியாதையா வாட்ச்சை எடுத்து பேக்ல வை.. கமான்.. க்விக்..” என்று வெறி வந்தவள் போல் அவன் காதோரம் சொல்லியபடியே ஊசியால் குத்தத் துவங்க..

எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து போன இளைஞன் தனது பையில் இருந்த வாட்ச்சை கழட்டி அவள் பேக்கில் போடுகிறான். விருட்டென்று எழும் அந்தப் பெண் பேருந்தை நிறுத்தும் சுவிட்ச்சை அழுத்திக் கொண்டேயிருக்கிறாள் டிரைவர் பிரேக் போடும்வரை.

கதவு திறந்தவுடன் மின்னல் வேகத்தில் தாவிக் குதித்து செல்கிறாள். சோர்வுடன் கதவைத் திறந்து வீட்டுக்குள் வருபவள் வந்த வேகத்தில் தனது பேகை அப்படியே கவிழ்க்கிறாள். ஒவ்வொன்றாக கீழே விழுகின்றன. அதில் அந்த இளைஞன் போட்ட வாட்ச்சும் விழுகிறது. அது அவளுடைய வாட்ச் இல்லை. அவனுடைய வாட்ச்.

அப்படியே அவளுடைய பார்வை அங்கேயிருக்கும் டேபிள் நோக்கிப் பாய.. அங்கே சமர்த்துப் பிள்ளையாக இருக்கிறது அவளுடைய வாட்ச்.

“ஐயோ” என்ற உணர்வோடு அவள் பார்க்க..

படம் முடிவடைகிறது.

இரண்டாவது குறும்படம்

சரவணன்-நமீதா-கெளபாய்


இது ஒரு அனிமேஷன் திரைப்படம்.

ஒரு குடியிருப்பில் குடியிருக்கும் நாய் ஒன்று எதிர் பிளாட்டில் குடியிருக்கும் நாய் போன்ற நிலையில் இருக்கும் ஒரு சரவணனைப் பார்த்து தினமும் குறைக்கிறது.. சரவணன் தாங்க முடியாத மனக்குடைச்சலில் இருக்கிறான். அக்கம்பக்கம் அனைவருமே தினமும் நடக்கும் கூத்து என்பதாகவே இதனைப் பார்க்கிறார்கள். வாழ்க்கை வெறுக்கிறது சரவணனுக்கு.

மொட்டை மாடிக்கு வருகிறான் சரவணன். அந்தக் கட்டிடத்தின் மேலே மாட்டப்பட்டிருக்கும் ஒரு வினைல் போர்டில் குதிரை ஓட்டியபடி கெளபாய் தோற்றத்தில் ஒருவன் காட்சியளிக்கிறான். அவன் நிற்கும் கட்டிடத்திற்கு நேர் எதிரே பிரம்மாண்டமான போர்டு. அதில் ஒரு நமீதா தனது முன்னழகை மட்டும் காட்டியபடியே இருக்கிறாள்.

இரண்டையும் மாறி, மாறி பார்த்த சரவணன் “நமக்கில்லை.. நமக்கில்லை.. இந்த ஜென்மத்தில் இல்லை.. முருகன்கிட்ட போய் சேருவோம்..” என்று நினைத்து ‘தொபுக்கடீர்’ என்று கீழே குதிக்கிறான். அவன் குதிப்பை பார்த்தவுடன் பக்கத்து வீடு, எதிர் வீடு, என்று மனிதர்கள் அலற.. குரைத்த நாய் மேலும் கூடுதலாக குரைக்கத் துவங்குகிறது.

அதுவரையில் போர்டில் சிற்பமாக இருந்த நமீதா படாரென்று போர்டை உடைத்துக் கொண்டு உண்மையான நமீதாவாக வந்து சரவணனை பரிதாபமாக பார்க்கிறாள். நமீதாவே உண்மையாக வந்த பின்பு எதிர்த் திசையில் இருக்கும் கெளபாய் மட்டும் சும்மா இருப்பானா..? அவனும் உயிருடன் வந்தவன் வழக்கமான நம்மூர் சினிமா போல் நமீதாவிடம் சைட் டிராக் ஓட்ட வேண்டியிருப்பதால் தனது வீரத்தைக் காட்டுவதைப் போல் குதிரையில் கழுத்தில் வைத்திருந்த கயிற்றை கீழே போய்க்கொண்டேயிருக்கும் சரவணன் மீது வீசுகிறான்.

பாவிப் பய கெளபாய்.. சொர்க்கத்துல எண்ட்ரியாகி ரம்பா, மேனகா, ஊர்வசியைப் பார்க்க ஆசையாப் போன சரவணன் கழுத்துல கயிறு மாட்டி, அவனை ‘அம்போ’ன்னு அப்படியே தொட்டில் கட்டி ஆட்டுற மாதிரி ஆட்ட வைக்குது.

மேலே நமீதாவைப் பார்த்து கெளபாய், “எப்படி காப்பாத்திட்டேன் பாத்தியா..? வர்றியா கண்ணே.. ‘முக்காபுலா’ன்னு பாடிக்கிட்டே ஆடலாம்..” என்று கண் சிமிட்டி அழைக்கிறான். ஆனால் முருகனின் விளையாட்டு வேறு மாதிரி இருக்கு.. வைச்சான் பாருங்க ஆப்பு..

தன் கழுத்தில் இறுகிக் கொண்டிருந்த கயிற்றை சரவணன் பிடித்திழுக்க.. அது இன்னொரு முனையைக் கையில் பிடித்திருந்த அந்த கெளபாயின் கையில் சுறுக்காக விழுந்து அவனை கீழே இழுத்து விடுகிறது.

ஒரு நொடியில் கெளபாய் முருகனனின் திருவடியைச் சேர.. தூக்கிவீசப்படும் அப்பாவி சரவணனோ நமீதாவின்……………………………………… “மார்புக்கு மத்தியிலே செத்துவிடத் தோணுதடி காதலியே” என்பதை நிஜமாகவே உணர்கிறான் அந்த அப்பாவி சரவணன்.

கெளபாயின் சடலத்தை போலீஸார் தூக்கிச் செல்ல..

இங்கே நமீதா உங்களது ‘செல்லத்தைத்’ தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்ள..

படமும் முடிந்துவிட்டது.

மூன்றாவது குறும்படம்

இரண்டு முட்டாள்கள்!

இதுவும் அனிமேஷன் திரைப்படம்தான்..

ஒரு மைதானம் போன்ற நிலப்பரப்பு. வேகாத வெயிலில் ‘வெக்கு’, ‘வெக்கு’ என்று நடந்து வருகிறான் ஒரு சொட்டைத் தலை மனிதன். அவன் நடையைப் பார்த்தால் எதையோ ஒன்றைத் தேடி அலைகிறான் என்பது மட்டும் புரிகிறது.

வருபவனை வழி மறிக்கிறது ஒரு தடுப்புச் சுவர். வெறியில் வருபவன் திகைக்கிறான். கோபப்படுகிறான். ஆத்திரப்படுகிறான்.

என்ன செய்துவிடும் இந்த சுவர் என்று நினைத்து தனது உடல் வலுவால் அதன் மீது மோதி விழுகிறான். உடல் வலிக்கிறது. தலையால் முட்டுகிறான். தலை வலிக்கிறது. கை முஷ்டியால் குத்துகிறான். வலி தாங்காமல் கையைப் பிடித்துக் கொள்கிறான். காலால் எட்டி உதைக்கிறான். பாதத்தைப் பிடித்துக் கொண்டு அனத்துகிறான். ஓடி வந்து உதைக்கிறான். உதைத்த வேகத்தில் பின்புறமாகப் போய் விழுகிறான்.

எவன் கட்டியது இந்தச் சுவர்..? இதென்ன பெர்லின் சுவரா..? இடிபடாமல் போவதற்கு என்றவன் எவ்வளவோ முயன்றும் பயனளிக்காமல் சோர்ந்து போய் அப்படியே சுவரில் சாய்ந்து அமர்கிறான்.

கேமிரா மெல்ல, மெல்ல முழு மைதானத்தையும் காட்ட.. இப்போது அந்தச் சுவர் அந்த மைதானத்தின் பாதி அளவு நீளத்திற்குத்தான் உள்ளது. இரண்டு புற ஓரங்களிலும் செல்வதற்கு பாதை இருப்பது தெரிகிறது. பின் எதற்கு சுவரை உடைக்க முயலும் முட்டாள்தனம்..?

கேமிரா மேலே எழும்பி இந்தப் பக்கம் வர இங்கே கன்னியொருவள் அதே போன்று இந்தப் பக்கமிருந்து சுவற்றை இடிக்க முயற்சித்து முடியாமல் போய், அதே சுவரின் மறுபக்கத்தில் குறுகிப் போய் அமர்ந்திருக்கிறாள்.

இருவரையும் திரையில் ஒன்று சேர காண்பிப்பதோடு படம் நிறைவடைகிறது.

அவ்வளவுதான் மக்களே..

மெக்ஸிகன் நாட்டுத் திரைப்படம் என்று ஆசையோடு போனேன்.. அந்தத் திரைப்படத்திற்குப் பதிலாக முதலில் காட்டிய இந்த மூன்று குறும்படங்களே அருமையாக இருந்ததால் அவற்றையே எழுதிவிட்டேன்.

நன்றி..

எனது ‘புனிதப்போர்’ படத்தையும் நான் எங்கிட்டு போய் யார்கிட்ட.. இது மாதிரி போட்டுக் காட்டுறது..? நாலு பேராவது பார்த்தாத்தானே எனக்கு மருவாதை.. முருகன் ஒண்ணும் கண்டுக்க மாட்டேங்குறான்பா..

16 பதில்கள் to “சரவணன்-நமீதா-கெளபாய்”

 1. Anonymous Says:

  நமீதா படம் போடுறதுக்கு ஒரு சான்ஸா..? அதுவும் உங்க பதிவுலயா..? முருகன் கோச்சுக்க மாட்டானா..?

 2. நையாண்டி நைனா Says:

  படத்தின் பெயரையும் கூட சொல்லி இருக்கலாம். மற்ற படி குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை

 3. கார்த்திகைப் பாண்டியன் Says:

  முதல் படத்தின் கருத்து அருமை.. நமீதா படம் பற்றி ஒன்றும் சொல்வதற்க்கில்லை.. நகைச்சுவை மட்டுமே.. மூன்றாவது படம் நம்மை பற்றி பேசுவது போல உள்ளது.. நாம் அவ்வாறு தானே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.. நல்ல பதிவு..

 4. அபி அப்பா Says:

  //எனது ‘புனிதப்போர்’ படத்தையும் நான் எங்கிட்டு போய் யார்கிட்ட.. இது மாதிரி போட்டுக் காட்டுறது..? நாலு பேராவது பார்த்தாத்தானே எனக்கு மருவாதை.. முருகன் ஒண்ணும் கண்டுக்க மாட்டேங்குறான்பா..//

  இன்னுமா சி.பி.ஐ., ரா அமைப்பிலே இருந்து வாங்கிட்டு போகலை? ஆச்சர்யமா இருக்கே! அந்த மும்பை படுகொலை தீவிரவாதி இன்னும் கொஞ்சம் உண்மையை மறைக்கிறானாம். அவனை கட்டி போட்டு “புனிதப்போர்” காமிச்சு உண்மை வரவழைக்க போறதா கிடேசன் பார்க்கிலே ஒரு பேச்சு அடிபட்டுச்சே:-)))

 5. உண்மைத்தமிழன் Says:

  //Anonymous said…
  நமீதா படம் போடுறதுக்கு ஒரு சான்ஸா..? அதுவும் உங்க பதிவுலயா..? முருகன் கோச்சுக்க மாட்டானா..?//

  கோச்சுக்கட்டுமே.. அப்படியாவது கோவம் வந்து கூப்பிட்டுத் தொலைய மாட்டானான்னு ஒரு சின்ன நப்பாசை.. அம்புட்டுத்தான்..

 6. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…
  நமீதா படம் போடுறதுக்கு ஒரு சான்ஸா..? அதுவும் உங்க பதிவுலயா..? முருகன் கோச்சுக்க மாட்டானா..?//

  கோச்சுக்கட்டுமே..

  அப்படியாச்சும் என்னைக் கூப்பிட்டுக்க மாட்டானான்னு சின்னதா ஒரு ஆசை..

 7. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //நையாண்டி நைனா said…
  படத்தின் பெயரையும் கூட சொல்லி இருக்கலாம். மற்ற படி குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை.//

  நையாண்டி ஸார்.. படத்தின் பெயர்கள் மெக்ஸிகன் மொழியில் இருந்ததால் புரியவில்லை. அதனால்தான் போடவில்லை..

  வருகைக்கு நன்னி..

 8. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கார்த்திகைப் பாண்டியன் said…
  முதல் படத்தின் கருத்து அருமை.. நமீதா படம் பற்றி ஒன்றும் சொல்வதற்க்கில்லை.. நகைச்சுவை மட்டுமே.. மூன்றாவது படம் நம்மை பற்றி பேசுவது போல உள்ளது.. நாம் அவ்வாறு தானே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.. நல்ல பதிவு..//

  நன்றி பாண்டியன்.. புதிய பதிவரோ.. இப்போதுதான் பார்க்கிறேன்..

  வாழ்க வளமுடன்

 9. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///அபி அப்பா said…
  //எனது ‘புனிதப்போர்’ படத்தையும் நான் எங்கிட்டு போய் யார்கிட்ட.. இது மாதிரி போட்டுக் காட்டுறது..? நாலு பேராவது பார்த்தாத்தானே எனக்கு மருவாதை.. முருகன் ஒண்ணும் கண்டுக்க மாட்டேங்குறான்பா..//
  இன்னுமா சி.பி.ஐ., ரா அமைப்பிலே இருந்து வாங்கிட்டு போகலை? ஆச்சர்யமா இருக்கே! அந்த மும்பை படுகொலை தீவிரவாதி இன்னும் கொஞ்சம் உண்மையை மறைக்கிறானாம். அவனை கட்டி போட்டு “புனிதப்போர்” காமிச்சு உண்மை வரவழைக்க போறதா கிடேசன் பார்க்கிலே ஒரு பேச்சு அடிபட்டுச்சே:-)))///

  அபிப்பா.. நான் பாவமில்லையா..?

  நீங்களே இந்த வாங்கு வாங்கலாமா..?

 10. அபி அப்பா Says:

  அட நான் என் தம்பியை கிண்டல் பண்ணாம யார் பன்ணுவாங்க!

  அன்புடன்
  அபிஅப்பா

  அபிஅப்பாவின் மனசாட்சி: அடங்கொய்யால , சூடான இட்லியும் தொட்டுக்க ஜீனியில கலந்த நெய்யும் ன்னு 2 நாள் முன்ன பதிவு போட்டு தாக்கு தாக்குன்னு தாக்கிட்டு இப்ப இங்க வந்து இந்த பில்டப்பா!

 11. அபி அப்பா Says:

  //அபிப்பா.. நான் பாவமில்லையா..?

  நீங்களே இந்த வாங்கு வாங்கலாமா..?//
  அடங்கொக்கமக்கா! அங்க வந்து என் பதிவிலே கொலவெறியாட்டம் ஆடிட்டு இங்க நல்ல புள்ளயாட்டம் பம்மிகிட்டு இருக்குறத பாரு:-))

 12. Valaipookkal Says:

  Hi,

  We have just added your blog link to Tamil Blogs Directory – http://www.valaipookkal.com. Please check your blog post link here

  Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

  Thanks

  Valaipookkal Team

 13. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //அபி அப்பா said…
  அட நான் என் தம்பியை கிண்டல் பண்ணாம யார் பன்ணுவாங்க!
  அன்புடன்
  அபிஅப்பா//

  தம்பியா.. அப்படியா..?

  மிக்க நன்றி.. உரிமையான கிண்டலா..?

  //அபிஅப்பாவின் மனசாட்சி: அடங்கொய்யால , சூடான இட்லியும் தொட்டுக்க ஜீனியில கலந்த நெய்யும் ன்னு 2 நாள் முன்ன பதிவு போட்டு தாக்கு தாக்குன்னு தாக்கிட்டு இப்ப இங்க வந்து இந்த பில்டப்பா!//

  பில்டப்ப பார்த்தோம்ல.. அதுவும் கிண்டலாக்கும்..?

 14. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///அபி அப்பா said…
  //அபிப்பா.. நான் பாவமில்லையா..?
  நீங்களே இந்த வாங்கு வாங்கலாமா..?//
  அடங்கொக்கமக்கா! அங்க வந்து என் பதிவிலே கொலவெறியாட்டம் ஆடிட்டு இங்க நல்ல புள்ளயாட்டம் பம்மிகிட்டு இருக்குறத பாரு:-))///

  ஹா.. ஹா.. ஹா..

  எப்படி நீங்க பண்ணினா கிண்டல்.. நான் பண்ணினா கொலைவெறியா..?

  சும்மா கிடக்குற சிங்கத்தை சீண்டினா..

 15. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Valaipookkal said…
  Hi, We have just added your blog link to Tamil Blogs Directory – http://www.valaipookkal.com. Please check your blog post link here. Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
  Thanks
  Valaipookkal Team//

  மிக்க நன்றி வலைப்பூக்களே..

 16. கார்த்திகைப் பாண்டியன் Says:

  என் வலைப்பூவிற்கு வருகை தந்து.. பின்தொடரவும் செய்கிறீர்கள்.. நன்றி நண்பா..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: