2009-ல் நாஞ்சில் நாடன் 2010-ல் எஸ்.ராமகிருஷ்ணன் 2011-ல் ஜெயமோகன்

06-01-09

என் இனிய வலைத்தமிழ் மக்களே..
உயிர்மை பதிப்பக வெளியீட்டில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள எட்டு நூல்களின் வெளியிட்டு விழா நேற்று மாலை 7 மணிக்கு சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலை இயக்குநர் திரு.தோட்டாதரணி, ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளருமான திரு.வெ.இறையன்பு, நாடக இயக்குநர் திரு.முத்துசாமி, எழுத்தாளர் திரு.திலீப்குமார், முனைவர் மணி, தேனுகா, தோழர் சி.மகேந்திரன், சன் செய்திகள் ஆசிரியர் திரு.ராஜா, டாக்டர் ஆர்.திருநாவுக்கரசு, கவிஞர் கெளரிசங்கர், கவிஞர் ரவிசுப்பிரமணியம் இவர்களுடன் புதுமுக எழுத்தாளர் திரு.பாரதிமணி அவர்களும் கலந்து கொண்டார்கள்.

திரு.பாரதிமணி அவர்களைப் பற்றி நான் ஏற்கெனவே (இந்தப் பதிவில்)
சொல்லியிருக்கிறேன். தனது 77-வது வயதில் எழுத்தாளராக அவதாரமெடுத்திருக்கும் திரு.பாரதிமணி அவர்கள்தான் நேற்றைய புத்தக வெளியீட்டு விழாவில் அத்தனை பேரையும் கவர்ந்திழுத்தவர். அவருடைய எழுத்து நடையைப் போலவே பேச்சும் அனைவரையும் நேரத்தைப் பார்க்க முடியாத அளவுக்குக் கட்டிப் போட்டிருந்தது.
அவருடைய பேச்சில் இருந்து சில வரிகளை என் நினைவில் இருந்து எழுதுகிறேன்.
“நான் ஒரு நடிகன். ஸ்கிரிப்ட் இல்லாமல் என்னால பேச முடியாது. அதுனால இந்த விழாவுக்கு அழைத்தபோதே என்னை பேச கூப்பிடக் கூடாது என்று சொல்லியிருந்தேன். அப்படியிருந்தும் மனுஷ்யபுத்திரன் பலியாடு மாதிரி முதல் ஆளா கூப்பிட்டு பேச வைச்சுட்டாரு..
நான் டில்லியில் இருந்த காலக்கட்டத்தில் தமிழகத்திலிருந்து வரும் அனைத்து பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் எனது வீட்டில் நடக்கும் ‘மண்டகப்படி பூசை’யில் கலந்து கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். அப்போது ஒரு முறை டெல்லியில் நடந்த உலகத் திரைப்பட விழாவை பார்ப்பதற்காக எஸ்.ராமகிருஷ்ணன், ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தியுடன் வந்திருந்தபோது எனது இல்லத்திற்கும் வந்தார். அதுதான் இவருடனான எனது முதல் சந்திப்பு.
இதன் பின்பு ‘ஊருக்கு நூறு பேர்’ என்கிற ஜெயகாந்தனின் கதையை எடிட்டர் லெனின் திரைப்படமாக ஆக்கிய போது அதன் பிரிவியூ காட்சி ‘குட்லக்’ தியேட்டரில் நடந்தது. அந்தக் காட்சி முடிந்தபோது பிரபல உலகப் புகழ் பெற்ற ஆவணப்பட இயக்குநர் சொர்ணவேல் என்னிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு “நான் ‘மின்பிம்பங்கள்’ நிறுவனத்துக்காக 10 எபிசோட் வரக்கூடிய அளவுக்கான டெலிசீரியல் எடுக்கப் போறேன். அதுல நீங்க நடிக்கணும்..” என்று கேட்டுக் கொண்டார். [நானும் அப்போதுதான் ஐயாவைப் பற்றி தெரிந்து கொண்டேன்]
நானும் ஒத்துக் கொண்டு அந்த சீரியலில் நடிப்பதற்காக காரைக்குடிக்கு சென்றபோதுதான் அந்த சீரியலின் கதை, திரைக்கதை, வசனத்தை நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதுகிறார் என்பது தெரிந்தது. இந்த சீரியல் கதை மிகவும் அற்புதமாகவும், அழகாகவும், நேர்த்தியான இயக்கத்திலும் செய்யப்பட்டிருந்தது.
இதன் பின்னர் பல இடங்களில் என்னைச் சந்தித்தவர்கள் அனைவருமே அந்த சீரியலில் நான் நடித்ததை சொல்லி என்னைப் பாராட்டத் துவங்கினார்கள். இத்தனைக்கும் அந்த சீரியல் ‘புகழ் பெற்ற’ சன் டிவியில் வரவில்லை.. ராஜ் டிவியில்தான் வந்தது. அதுக்கே இப்படி..?
இந்த சீரியலில் நடித்ததினால்தான் ‘பாபா’ படத்திலும் நான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலை தற்செயலாக பார்த்த ரஜினிகாந்த் தொடர்ந்து இந்த சீரியலை பார்க்க ஆரம்பித்திருக்கிறார். அவரால் முடியாத நாட்களில் அவருடைய மகள் செளந்தர்யாவிடம் அதனை டேப் செய்து வைக்கச் சொல்லி பின்பு அதனை போட்டுப் பார்த்ததாக ரஜினி என்னிடம் பின்பு சொன்னார்.
‘பாபா’ படத்தின் ஆர்ட்டிஸ்ட் செலக்ஷனின்போது எனது பெயர் தெரியாமல், அடையாளத்தை மட்டுமே சொல்லி இவர்தான் நமக்கு வேண்டும் என்று ரஜினியே சொல்லியிருக்கிறார். என்னென்னமோ அடையாளமெல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் வெரைட்டி டைரக்டரியை பார்த்து என்னை அடையாளம் காட்டி என்னை அழைத்தார் ரஜினி. அங்கேயும் நான் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் சென்ற பிறகுதான் அப்படத்திற்கு வசனம் நம்ம ராமகிருஷ்ணன்தான் என்பது தெரிந்தது.
…………………..விருதுகள் என்பதே இறந்த பின்பு கொடுக்கப்படுவது இல்லாட்டி வயசான பின்னாடி கொடுக்கணும் போல் ஆயிருச்சு. க.நா.சு.வுக்கே அவர் இறப்பதற்கு 2 வருஷத்துக்கு முன்னாடிதான் சாகித்ய அகாடமி விருது கிடைச்சுச்சு. அவர் டெல்லிலதான் இறந்தார்.
அவர் இறந்த பின்னாடி சென்னைல இருந்த அவருடைய பொருட்களையெல்லாம் பார்சல் கட்டி டிரெயின்ல டெல்லிக்கு அனுப்பி வைச்சாங்க. நான் டெல்லில அதை ரிசீவ் பண்ணி என் வீட்டுக்கு கார்ல கொண்டு வந்தேன். வீட்டு வாசல்ல காரை சாமானோட நிறுத்திட்டு மறுநாள் காலைல எடுத்துக்கலாம்னு இருந்தேன். ஆனா அதுக்குள்ள கார்ல இருந்த பொருட்கள்ல சிலது திருட்டுப் போயிருச்சு.. விலை உயர்ந்த அன்பளிப்பு தட்டுக்கள் அப்படி, இப்படின்னு சில.. அதுல என்னோட புகை பிடிக்கிற பைப்பும் சேர்ந்து காணோம்.
ஆனா பக்கத்துலேயே க.நா.சு. வாங்கின சாகித்ய அகாடமி விருதை மட்டும் கைல எடுத்துப் பார்த்தவங்க இது நமக்கெதுக்குன்னு சொல்லி ஓரமாத் தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டாங்க.. அவுங்களே அதை வேணாம்னுட்டு போயிட்டாங்க.
எழுத்தாளர்களை பாராட்ட வேண்டிய இடத்தில், நேரத்தில் பாராட்டியே ஆக வேண்டும். எனது ஆசை என்னன்னா 2009-ல் நாஞ்சில் நாடனுக்கும், 2010-ல் எஸ்.ராமகிருஷ்ணனுக்கும், 2011-ல் ஜெயமோகனுக்கும் அந்த விருதைக் கொடுக்கணும்..”

இனி நான்..
ஆசை, பேராசை. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் அந்த விஷயத்தில் இருக்கும் ஆர்வத்தின் சதவிகிதம் எவ்வளவு என்பதில் மட்டுமே. ஆனால் நோக்கம் மட்டும் ஒன்றுதான். ஒரு எழுத்தாளரை சக எழுத்தாளர் பாராட்டுவதில் சதவிகிதம் கணக்கெல்லாம் பார்க்கக் கூடாது என்றாலும், ஒருவரை மட்டும் அல்ல மூவரையும் சேர்த்துச் சொல்லி தமிழுக்கு தொண்டு செய்கிறார்கள். மூவருக்கும் விருது கிடைத்தே தீர வேண்டும் என்று இன்னொரு எழுத்தாளர் சொல்வது அபூர்வம்தான். இப்படி பாராட்டித் தள்ளிவிட்டார் எழுத்தாளர் திரு.பாரதிமணி அவர்கள்.
அவர் சொல்லியிருக்கும் மூவருமே தமிழில் வருடாவருடம் சிறந்த படைப்புகளை வழங்கியவண்ணமே இருக்கிறார்கள். விருதுக்கு தகுதியானவர்கள்தான்.
வருடாவருடம் எழுதுகின்ற சிறந்த படைப்புகளை வைத்தே சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இனி அவர்கள் அந்தத் தாமிரப் பதக்கத்தைக் குறி வைத்தே எழுதினாலும் சரி.. தமிழுக்கு நல்ல படைப்புகள் கிடைக்கும் என்பதால் அந்த வழியையும் தவறில்லை என்போம். எப்படியோ நமக்கு சிறந்த படைப்புகள் கிடைத்தால் போதும்.
இனி எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய எட்டு நூல்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.
பதினெட்டாம் நூற்றாண்டின் மழை : கடந்த இரண்டு ஆண்டுகளில் எழுதப்பட்ட முப்பது சிறுகதைகளின் தொகுப்பு. இது அவருடைய எட்டாவது சிறுகதை தொகுப்பு. விலை. ரூ.180.
காற்றில் யாரோ நடக்கிறார்கள் : சமூகம், கலாச்சாரம், கலை, இலக்கியம், குறித்து இதழ்களிலும் இணையத்திலும் சமீபத்திய ஆண்டுகளில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. விலை. ரூ.170
கோடுகள் இல்லாத வரைபடம் : யுவான் சுவாங், பாஹியான், வாஸ்கோட காமா, மார்கோ போலோ என்று நீளும் புகழ்பெற்ற பதிமூன்று யாத்ரீகர்களை பற்றிய அறிமுக நூல். விலை. ரூ.50
நம் காலத்து நாவல்கள் : பத்தொன்பதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற செவ்வியல் நாவல்கள் குறித்தும், உலக இலக்கியத்தின் முக்கிய படைப்புகள் குறித்தும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. உலக இலக்கியம் குறித்து அறிந்த கொள்ள விரும்புகின்றவர்களுக்கான முக்கிய படைப்பிது. விலை. ரூ.175
சித்திரங்களின் விசித்திரங்கள் : வான்கோ, பிகாசோ, ரெம்பிராண்ட். பிரைடா காலோ, பால் காகின், கோயா,டாலி , வெர்மர், டாவின்சி, பால் செசான் என்ற பத்து முக்கிய ஒவியர்களை பற்றியும் அவர்களை பற்றிய திரைப்படங்களையும் அறிமுகம் செய்யும் நவீன ஒவியம் குறித்த புத்தகம். விலை. 60
அதே இரவு அதே வரிகள் : எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய ‘அட்சரம்’ என்ற இலக்கிய இதழில் வெளியான நோபல் பரிசு பெற்ற படைப்பாளிகளின் நேர்காணல்கள், உலக இலக்கிய கட்டுரைகள், மொழிபெயர்ப்பு கதைகளின் தொகை நூல். இதில் மார்க்வெஸ், இசபெல் ஆலண்டே, போர்ஹே, குந்தர் கிராஸ், மிலாராட் பாவிக், மிலன் குந்தேரா, காப்கா, தஸ்தாயெவ்ஸ்கி, மாபௌஸ், ஜோசே சரமாகோ, கென்சுபரோ ஒயி, ஏ.கே.ராமானுஜம் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. விலை. 150
உலக சினிமா : நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான உலக சினிமா புத்தகத்தை தற்போது முழுமையாக மாற்றியமைத்து புதிய படங்கள், புதிய கட்டுரைகளுடன் திருத்தபட்ட விரிவான பதிப்பாக 800 பக்க அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. உலக சினிமாவை விரும்புகின்றவர்களுக்கான ரெபரென்ஸ் புத்தகம் இது. விலை. 550.
எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் : அவருடைய முதல் கதையிலிருந்து 2004 வரை வெளியான 90 கதைகளின் ஒட்டு மொத்த தொகுப்பு. 750 பக்கம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதன் முதல் பதிப்பை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருந்தது. தற்போது செம்பதிப்பாக உயிர்மை வெளியீட்டுள்ளது. விலை. 400

14 பதில்கள் to “2009-ல் நாஞ்சில் நாடன் 2010-ல் எஸ்.ராமகிருஷ்ணன் 2011-ல் ஜெயமோகன்”

 1. Anonymous Says:

  அப்ப 2012-ல சாருவுக்கா..? சாருவை ஏன் விட்டுவிட்டார் பாரதி..?

 2. Anonymous Says:

  யாருங்க சாரு ?

 3. Anonymous Says:

  cut & paste பத்தி எஸ்ரா கம்யூட்டர்டெக்னாலஜி பொத்தகம் ஒண்னு உயிர்மை ஊடாக இந்த வருசம் வெளியிடப்போறார்னு கண்காட்சிலே பேசிக்கிராங்களே? அது பத்தி ஏதாச்சியும் கூட்டத்துல பேசுனாரா அண்ணே

 4. Anonymous Says:

  அது cut & paste நூல் இல்லை. தவறான தகவல். தவறான தகவல்களைத் தராதீர்கள். Cut, Hastely Translate and Paste Book

 5. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…
  அப்ப 2012-ல சாருவுக்கா..? சாருவை ஏன் விட்டுவிட்டார் பாரதி..?//

  அவரிடம்தான் கேட்க வேண்டும். ஒரு வேளை இப்போதைக்கு மூவர் போதும் என்று நினைத்தாரோ என்னவோ..?

 6. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…
  யாருங்க சாரு?//

  நல்ல வேளை.. அனானியா வந்து கேட்டுட்டீங்க.. தப்பிச்சீங்க.. பொழைச்சுப் போங்க..

 7. வண்ணத்துபூச்சியார் Says:

  பாரதிமணி பேசியதில் அரங்கமே அதிர்ந்தது.

  ஆனால் கிடைக்குமா விருதுகள்…??

  நல்ல பதிவு.

  வாழ்த்துக்கள்

 8. அனுஜன்யா Says:

  நிகழ்ச்சி பற்றி எழுதியதற்கு நன்றி சார். பாரதி மணி அவர்களின் ஆசை நியாயமானதுதான் என்றாலும் இந்த மாதிரி விருதுகளில் நிலவும் அரசியல், சச்சரவுகள் பற்றி நாம் அவ்வபோது கேள்விப்படுவதை வைத்துப் பார்த்தால், கிடைத்தால் அந்த விருதுகளுக்குப் பெருமை இல்லாவிடில் நட்டம் அந்த எழுத்தாளர்களுக்கோ, வாசகர்களுக்கோ இல்லை என்ற நிலை.

  இந்த மூவரின் சமீப கால இலக்கியப்பணி மகத்தானது என்பதில் பெரும்பாலாருக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

  நூல் அறிமுகங்களுக்கும் நன்றி.

  அனுஜன்யா

 9. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…
  cut & paste பத்தி எஸ்ரா கம்யூட்டர் டெக்னாலஜி பொத்தகம் ஒண்னு உயிர்மை ஊடாக இந்த வருசம் வெளியிடப் போறார்னு கண்காட்சிலே பேசிக்கிராங்களே? அது பத்தி ஏதாச்சியும் கூட்டத்துல பேசுனாரா அண்ணே..//

  அனானி அண்ணே..

  எல்லா எழுத்துக்களுமே வாழ்க்கையின் ஊடாகப் பயணிப்பதால் எதை படித்தாலும் உங்களுக்கு பிரதிபிம்பமாகத்தான் தெரியும்.. அதனை சுவைபட ருசியாக படிப்பது போல் சொல்வதுதான் எழுத்து வன்மை.
  இல்லாத எதையும் யாராலும் எழுத முடியாது.. இறைவனைத் தவிர..
  மற்றவரை தூஷிப்பதைவிட்டுவி்ட்டு அவரால் நமக்குக் கிடைப்பது எது என்று யோசித்து அவரை வாசிப்பது உங்களது மனநலனுக்கு நலமாக இருக்கும் என்பது எனது ஆலோசனை.

  நன்றி

  வாழ்க வளமுடன்

 10. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…
  அது cut & paste நூல் இல்லை. தவறான தகவல். தவறான தகவல்களைத் தராதீர்கள். Cut, Hastely Translate and Paste Book//

  மேலே ஒரு அனானிக்குத் தந்த பதில்தான் இங்கேயும்..

  பரிதாபப்படுகிறேன் உங்களைப் பார்த்து..

 11. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வண்ணத்துபூச்சியார் said…
  பாரதிமணி பேசியதில் அரங்கமே அதிர்ந்தது. ஆனால் கிடைக்குமா விருதுகள்…??
  நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்//

  பூச்சியாரே.. ஏன் இவ்ளோ லேட்டு..?

  இன்னும் நிறைய எழுதியிருந்தேன் ஸார்.. வழக்கம்போல முருகனின் சோதனையால் பிளாக்கர் முழுசாக 2 பக்கங்களை முழுங்கிவிட்டது.

  விருதுகள் கிடைக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. நமது விருப்பமும் அதுவே..

 12. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //அனுஜன்யா said…
  நிகழ்ச்சி பற்றி எழுதியதற்கு நன்றி சார். பாரதி மணி அவர்களின் ஆசை நியாயமானதுதான் என்றாலும் இந்த மாதிரி விருதுகளில் நிலவும் அரசியல், சச்சரவுகள் பற்றி நாம் அவ்வபோது கேள்விப்படுவதை வைத்துப் பார்த்தால், கிடைத்தால் அந்த விருதுகளுக்குப் பெருமை இல்லாவிடில் நட்டம் அந்த எழுத்தாளர்களுக்கோ, வாசகர்களுக்கோ இல்லை என்ற நிலை.
  இந்த மூவரின் சமீப கால இலக்கியப் பணி மகத்தானது என்பதில் பெரும்பாலாருக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நூல் அறிமுகங்களுக்கும் நன்றி.
  அனுஜன்யா//

  வாங்க அனுஜன்யா.. இதுதான் தங்களின் முதல் வருகை என்று நினைக்கிறேன்.

  விருதுகளில் சர்ச்சை என்பதே வருடாவருடம் விருதைத் தொடர்ந்து வரும் விஷயம்தான்.
  சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு விருது கிடைத்தாலும் அதுவும் சரிதான். அப்போதுதான் அது அலசி, ஆராயப்படும். எழுத்தாளரின் திறமை அரங்கத்தில் அரங்கேறும். வரட்டும்..

  இந்த மூவரின் திறமைகளை எடை போட்டுப் பார்ப்பது என்பது சிரமம்தான்.. மணி ஸார் அவருடைய பார்வையில், படித்து வருகின்ற காலக்கட்டத்தை வைத்து வரிசைப்படுத்தியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்..

 13. அன்புமணி Says:

  விழாவிற்கு செல்லாத குறைய தீர்த்த உங்களுக்கு நன்றி. நல்ல பதிவு. பாரதி மணியின் வாக்கு பலிக்கட்டும்!

 14. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //அன்புமணி said…
  விழாவிற்கு செல்லாத குறைய தீர்த்த உங்களுக்கு நன்றி. நல்ல பதிவு. பாரதி மணியின் வாக்கு பலிக்கட்டும்!//

  நன்றி அன்புமணி அவர்களே..

  பாரதி கண்ட கனவு நனவாகட்டும்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: