எழுத்தாளர் திரு.பாரதிமணி அவர்களை வாழ்த்துகிறேன்


19-12-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

சமீப காலமாக நான் ‘உயிர்மைபுத்தகத்தை வாங்கியவுடன் முதலில் படிக்கத் துவங்கியது பெரியவர் திரு.பாரதிமணி அவர்களின் கட்டுரையைத்தான்.

இப்படி ஒரு பெயரில் ஒரு எழுத்தாளரா என்றெண்ணிதான் அவருடைய கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கினேன்.. அது கற்கண்டாக இனிக்கத் துவங்கியது எனக்கு.. இந்தப் புது எழுத்தாளர் யார் என்று விசாரித்து தெரிந்து கொண்ட பின்பு, “அவரா இவரு..” என்ற ஆச்சரியமும் எனக்குள் தோன்றியது.

எழுத்து நடை எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாய் என்னை பெரிதும் கவர்ந்தது. அதிலும் புதுதில்லியின் சுடுகாட்டை பற்றி அவர் எழுதியிருந்த கட்டுரை அவர் எழுத்திலேயே சிறந்தது என்று நான் சொல்வேன். அக்கட்டுரையின் பாதிப்பு எனக்குள் ஏனோ பல நாட்கள் நீடித்திருந்தது. இந்தப் பெரியவரை எனக்கு முன்பே தெரியும் என்றாலும் நேரில் பழக்கம் இல்லாமல் இருந்தது. அந்தக் குறையும் அப்பன் முருகன் புண்ணியத்தில் சமீபத்தில் தீர்ந்து போனது.

ஒரு பின் மாலைப்பொழுதில் ஆரம்பித்து இரவு வரையிலும் அவருடன் இருந்து, கலந்து பேசி அவருடைய வாழ்க்கை அனுபவங்கள் பலவற்றையும் கேட்டுத் தெரிந்ததில் எனக்குள்ள பிரமிப்பு இன்னமும் அப்படியே உள்ளது.

நாடக நடிகராக, சினிமா நடிகராகவெல்லாம் அவரை அறிந்திருக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் இப்போது எழுத்தாளர் என்கிற அவதாரத்திலும் இவரை பார்க்க ஆவலோடு காத்திருக்கிறது. அந்த நன்னாள் பற்றி ஐயா எனக்கு அனுப்பியுள்ள கடிதத்தை இங்கே பெருமகிழ்வுடன் பதிவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

பல நேரங்களில் பல மனிதர்கள்.

திரு.உண்மைத்தமிழன்: குழும நண்பர்களுக்கு ஒரு செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கடந்த வருடத்தில், நான் ‘உயிர்மையில் எழுதிய 13 கட்டுரைகள், ‘தீராநதி’யில் எழுதிய ஒரு கட்டுரை, ‘அமுத சுரபி’யில் எழுதிய 4 கட்டுரைகள் – மொத்தம் 18 கட்டுரைகள் கொண்ட ஒரு தொகுப்பு ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ என்ற தலைப்பில் ‘உயிர்மை பதிப்பகம்’ வெளியீடாக சென்னை புத்தகவிழாவுக்கு முன்பாக வெளிவர இருக்கிறது..

புத்தகத்தலைப்பு உபயம் என் நண்பர் வ.ஸ்ரீநிவாஸன். ஜெயகாந்தன் சண்டைக்கு வருவாரா என்று தெரியவில்லை. எனது முதலும் கடைசியுமான இந்த புத்தகத்துக்கு கனம் சேர்ப்பது பல துறைகளிலும் நான் சேர்த்த ஒரே சொத்தான என் நண்பர்களில் பலர் என்னைப்பற்றி உயர்வாக எழுதியிருக்கும் ‘பொய்கள்’. சுமார் 25 பிரபலங்கள் பொய் சொல்லியிருக்கிறார்கள். இதில் பாவண்ணன், அ. முத்துலிங்கம், ஜெயமோகன், நாஞ்சில் நாடன் அடக்கம். தவிர இலக்கியத்துறையிலிருந்து அசோகமித்திரன், இ.பா, ஆ. மாதவன், நீல. பத்மநாபன், கடுகு, வாஸந்தி, எஸ். ராமகிருஷ்ணன், நாடகத்துறையிலிருந்து கூத்துப்பட்டறை ந. முத்துசாமி, வெளி ரங்கராஜன், பேரா. எஸ். ராமானுஜம், வேலு சரவணன், இசைத்துறையிலிருந்து லால்குடி ஜெயராமன், T.V.G., சினிமாத்துறையிலிருந்து பி. லெனின், சத்யராஜ், டெல்லி கணேஷ், அம்ஷன் குமார் போன்றோர் என்னைப்பற்றிய உண்மைகளைத்தவிர்த்து நிறையவே புகழ்ந்திருக்கிறார்கள். நாஞ்சில் நாடன் முன்னுரை எழுதுகிறார். எத்தனை பொய்களை அள்ளி வீசுவாரென்று தெரியவில்லை!

இத்தனை பிரபலங்களை ஒன்றுசேர்த்து ஆயிரம் பொய்களை சொல்ல வைத்த என்னை எத்தனை பாராட்டினாலும் தகும்! நாஞ்சிலிடம் இந்த புகழாரங்களை உயிருடன் இருக்கும்போதே என் Obituary-யாகத்தான் பார்க்கிறேன் என்று தமாஷாக சொல்லப்போக, அவரிடமிருந்து செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டேன். நான் இருந்து அவருக்கு வழி நடத்தவேண்டுமாம்! செய்துட்டா போச்சு!

போனவருடம் யாராவது என்னிடம் என் புத்தகம் வெளிவரும் என்று சொல்லியிருந்தால், அவனை பரிதாபமாக பார்த்திருப்பேன். ஆக்ராவுக்கு இல்லை கீழ்ப்பாக்கத்துக்கு – திருவனந்தபுரமென்றால் ஊளம்பாறை – போகவேண்டியவன் என்றுதான் நினைத்திருப்பேன். விதி யாரை விட்டது?

இதைப் படித்து விட்டு, எல்லோரும், ‘வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்’ என்று எழுத வேண்டுகிறேன்.

பாரதி மணி

எனக்கும் வேலை வைக்காமல் தாங்களே சொல்லியிருப்பதுபோல் “வாழ்த்த வயதில்லை ஐயா, வணங்குகிறேன்..” என்று முதல் நபராகச் சொல்லி வாழ்த்துகிறேன்.. தங்களுடைய புத்தகம் விற்பனையில் சாதனை படைக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. ‘சரக்கு’ நன்றாக இருந்தால், அது எந்த நாடாக, எந்த இடமாக இருந்தாலும் விற்றே தீரும் என்பது தாங்கள் அறியாததல்ல..

மீதியை புத்தக விமர்சனத்தில் வைத்துக் கொள்கிறேன்.)))))))))))))))

நன்றி..

19 பதில்கள் to “எழுத்தாளர் திரு.பாரதிமணி அவர்களை வாழ்த்துகிறேன்”

 1. Nilofer Anbarasu Says:

  வாழ்த்த வயதில்லாவிட்டாலும், மனம் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

 2. Nilofer Anbarasu Says:

  சின்ன பதிவாய்ப் போட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள் 🙂

 3. துளசி கோபால் Says:

  இப்போதான் ஜெமோ அவர்களின் பார்வதிபுரம் மணி படிச்சுட்டு இங்கே வந்தால் அவரே இருக்கார்.

  நானும் உயிரோசையில் இவரைப் பார்த்த நினைவு இருக்கு.

  சினிமாவில் நடிச்சுமிருக்காராமே. முகம் நினைவு இல்லை. படம் இருந்தால் போடுங்க.

  பழைய படங்களைத் தேடிப்பார்க்க ஒரு சின்ன சோம்பல்(-:

  புது எழுத்தாளர் பாரதி மணியை வாழ்த்துகின்றேன்.

 4. பாரதி மணி Says:

  நண்பர்களுக்கு:

  71 வயது இளைஞனான நான், என் எழுபதாவது வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டேன்! என்னாலும் எழுதமுடியும் என்ற நம்பிக்கையையும், உத்சாகத்தையும் தந்தவர்கள் மனுஷ்ய புத்திரனும், திருப்பூர் கிருஷ்ணனும்.

  பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தகத்தில் எழுதியிருக்கும் 25 பிரபலங்களின் பொய்களைக்கேட்டு என் மனம் பூரிக்கிறது. எனக்கு தில்லி குளிரும் பிடிக்கும், புகழுரைகளும் நிறையவே பிடிக்கும்.

  இதுவே என் முதலும் கடைசியுமான புத்தகம். நாடகத்தில் இருக்கும் ஆர்வமும் உந்துதலும் எனக்கு எழுதுவதில் இல்லை. அதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, நிறையவே பாராட்டுங்கள்.

  நன்றி!

  பாரதி மணி

 5. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Nilofer Anbarasu said…
  வாழ்த்த வயதில்லாவிட்டாலும், மனம் இருக்கிறது. வாழ்த்துக்கள்.//

  நன்றி ராஜா..

  ஐயாவின் எழுத்தும் ஒரு தினுசாக கடைசிவரையில் படிக்க வைக்கிறது. அநத எழுத்து நடையில் நான் சொக்கித்தான் போனேன்..

  தங்களது தளம் எப்படி என் கண்பார்வையில் படாமல் இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை..

  வலைப்பதிவுகளில் நிறைய வலம் வரலாமே.. கவனிக்கப்படுவீர்கள்..

 6. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //துளசி கோபால் said…
  இப்போதான் ஜெமோ அவர்களின் பார்வதிபுரம் மணி படிச்சுட்டு இங்கே வந்தால் அவரே இருக்கார். நானும் உயிரோசையில் இவரைப் பார்த்த நினைவு இருக்கு. சினிமாவில் நடிச்சுமிருக்காராமே.//

  ஆமாங்க டீச்சர்.. நிறைய.. கிட்டத்தட்ட 42 திரைப்படங்கள் என்கிறார். பாபாவில் முதலமைச்சர் கேரக்டரில் நடித்தவர் இவர்தான். பாரதியிலும் நடித்திருக்கிறார். ஞாபகப்படுத்திப் பாருங்கள்..

  //முகம் நினைவு இல்லை. படம் இருந்தால் போடுங்க. பழைய படங்களைத் தேடிப்பார்க்க ஒரு சின்ன சோம்பல்(-://

  உங்களுக்காகவே கேட்டு வாங்கிப் போட்டுவிட்டேன்..

  //புது எழுத்தாளர் பாரதி மணியை வாழ்த்துகின்றேன்.//

  பாரதி ஐயா.. நியூஸிலாந்துலேர்ந்து மாதாஜி துளசியாஜி அவர்கள் தங்களது வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவித்துள்ளார்கள்.. பெற்றுக் கொள்ளவும்..

  டீச்சர் சொல்லிவிட்டேன்..

 7. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //பாரதி மணி said…
  நண்பர்களுக்கு: 71 வயது இளைஞனான நான், என் எழுபதாவது வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டேன்!//

  ஆனால் பெற்றிருக்கும் அனுபவங்களுக்கு வயதில்லையே ஐயா.. 71 வயதிலும் இப்படி எழுதினால் இதற்கு முன்பு எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும்..?

  //என்னாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கையையும், உத்சாகத்தையும் தந்தவர்கள் மனுஷ்யபுத்திரனும், திருப்பூர் கிருஷ்ணனும்.//

  இவர்களுக்கு எனது நன்றிகள்..

  //பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தகத்தில் எழுதியிருக்கும் 25 பிரபலங்களின் பொய்களைக்கேட்டு என் மனம் பூரிக்கிறது. எனக்கு தில்லி குளிரும் பிடிக்கும், புகழுரைகளும் நிறையவே பிடிக்கும்.//

  இதுதான்.. இது போன்ற நயமான சொற்கள்தான் உங்களை பிடிக்க வைக்கிறது ஐயா..

  //இதுவே என் முதலும் கடைசியுமான புத்தகம்.//

  இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.. முதல் புத்தகம் என்று மட்டுமே இருந்திருக்க வேண்டும். இன்னும் தாங்கள் எங்களுக்காக படைக்க வேண்டியது நிறையவே உள்ளது..

  //நாடகத்தில் இருக்கும் ஆர்வமும் உந்துதலும் எனக்கு எழுதுவதில் இல்லை.//

  புத்தகம் படித்தலில் இருக்கும் ஆர்வமும், வெறியும் நாடகங்களைப் பார்ப்பதில் எனக்கில்லை.

  //அதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, நிறையவே பாராட்டுங்கள்.
  நன்றி!
  பாரதி மணி//

  நான் நிறைய.. நிறையவே பாராட்டிவிட்டேன் ஐயா..

  இதையும் உங்கள் பாணியில் ஒரு ‘பொய்’யாக ஏற்றுக் கொள்ளுங்கள்..

  வாழ்க வளமுடன்

 8. துளசி கோபால் Says:

  அட! இவரா? நிறையப் படங்களில் பார்த்துருக்கேனே!!!!!

  நன்றி சரவணன்.

  நல்லா எழுதறார் இல்லே!!!

 9. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //துளசி கோபால் said…
  அட! இவரா? நிறையப் படங்களில் பார்த்துருக்கேனே!!!!! நன்றி சரவணன்.
  நல்லா எழுதறார் இல்லே!!!//

  42 திரைப்படங்கள் என்று கணக்கு வைத்துச் சொல்கிறார் டீச்சர்.. நல்லாவே எழுதுகிறார். இன்னும் எழுதுங்க ஸார் என்றால் சோம்பேறித்தனப்படுகிறார்.. கூச்சப்படுகிறார்.. அவருடைய எழுத்தின் வன்மை அவருக்கே தெரியவில்லை.

  நான் சொன்ன அந்த தில்லி நிஜாம்பாக் சுடுகாடு கட்டுரையை ஒரு முறை படித்துப் பாருங்கள்.. தெரியும்..

 10. மதுமிதா Says:

  எங்களுக்கும் பொய் சொல்லும் விருப்பத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்:)
  ஆனால், வாய்ப்பை ஏன் தரவில்லை ஐயா.

  வாழ்த்தி வணங்குகிறோம்.

  இந்த ஒன்று பலவாக பல்கிப் பெருகட்டும்.

  அன்புடன்
  மதுமிதா

 11. துளசி கோபால் Says:

  சரவணன்,

  மீண்டும் தொந்திரவு தரேன்,மன்னிக்கணும்.

  //தில்லி நிஜாம்பாக் சுடுகாடு//

  சுட்டி உண்டா ப்ளீஸ்?

  உயிர்மையில் கிடைக்கலை. நவம்பர் மாதமா?

 12. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //மதுமிதா said…
  எங்களுக்கும் பொய் சொல்லும் விருப்பத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்:)
  ஆனால், வாய்ப்பை ஏன் தரவில்லை ஐயா. வாழ்த்தி வணங்குகிறோம்.
  இந்த ஒன்று பலவாக பல்கிப் பெருகட்டும்.
  அன்புடன்
  மதுமிதா//

  முதல் வருகைக்கும், பெரியவரை வாழ்த்தியதற்கும் நன்றி மதுமிதா..

 13. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //துளசி கோபால் said…
  சரவணன், மீண்டும் தொந்திரவு தரேன், மன்னிக்கணும்.//

  ஐய்ய.. உங்க வீட்டுக்குள்ள வர்றதுக்கு உங்களுக்கெதுக்கு இம்புட்டுத் தயக்கம்..?

  ///தில்லி நிஜாம்பாக் சுடுகாடு//
  சுட்டி உண்டா ப்ளீஸ்? உயிர்மையில் கிடைக்கலை. நவம்பர் மாதமா?//

  அது ஏப்ரல் அல்லது மே மாதம் என்று நினைக்கிறேன் டீச்சர்.. நானும் வீட்டில் தேடுகிறேன்.. கிடைத்தவுடன் ஸ்கேன் செய்து உங்களுக்கு அனுப்புகிறேன்..

  உயிர்மையில் இருக்காது என்று நினைக்கிறேன்..

 14. பாரதி மணி Says:

  எனது குறிப்பை புகைப்படத்துடன் வெளியிட்ட உண்மைத்தமிழனுக்கும், வாழ்த்துகள் தெரிவித்த எல்லா நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

  தில்லியில் நாடகங்களில் நடிக்கும்போது ஒரு குறுகிய தமிழ் வட்டத்துக்குள்ளேயே அறிமுகமாயிருந்தேன். திரைப்படங்கள் அதை இன்னொரு தளத்துக்கு கொண்டு சென்றது.

  நேரிலும் மின்னஞ்சலிலும் வரும் வாசகர் கடிதங்களைப்பார்க்கும்போது என் எழுத்துக்கு இத்தனை வரவேற்பா என்று பிரமிப்பு வருகிறது.

  துளசி கோபால் அவர்களுக்கு எப்படி உதவுவதென்று தெரியவில்லை. நான் ஒரு கணினி நிரட்சரகுக்‌ஷி. எதுவும் தெரியாது. என்னிடம் எல்லா கட்டுரைகளும் முரசு அஞ்சல் ஃபார்மாட்டில் இருக்கிறது. உங்கள் மின்னஞ்சல் முகவரி இருந்தால் அனுப்பி வைக்கிறேன்.

  எனக்குப்பெருமை என்னவென்றால், ஆஸ்பத்திரியில் இருக்கும்போது மறைந்த நண்பர் சுஜாதா ஆறு தடவை படித்துவிட்டு, எப்போவாவது ஒரு தடவை தான் இம்மாதிரி நல்ல கட்டுரை படிக்கக்கிடைக்கிறது என்று அருகிலிருந்த தேசிகனிடம் சொன்னாராம்.

  எனது மின்னஞ்சல்: bharatimani90@gmail.com

  எல்லாருடைய பாராட்டுக்களுக்கும் நன்றி.

  பாரதி மணி

 15. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  பாரதி மணி said…
  எனது குறிப்பை புகைப்படத்துடன் வெளியிட்ட உண்மைத்தமிழனுக்கும், வாழ்த்துகள் தெரிவித்த எல்லா நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. தில்லியில் நாடகங்களில் நடிக்கும்போது ஒரு குறுகிய தமிழ் வட்டத்துக்குள்ளேயே அறிமுகமாயிருந்தேன். திரைப்படங்கள் அதை இன்னொரு தளத்துக்கு கொண்டு சென்றது.
  நேரிலும் மின்னஞ்சலிலும் வரும் வாசகர் கடிதங்களைப் பார்க்கும்போது என் எழுத்துக்கு இத்தனை வரவேற்பா என்று பிரமிப்பு வருகிறது.
  துளசி கோபால் அவர்களுக்கு எப்படி உதவுவதென்று தெரியவில்லை. நான் ஒரு கணினி நிரட்சரகுக்‌ஷி. எதுவும் தெரியாது. என்னிடம் எல்லா கட்டுரைகளும் முரசு அஞ்சல் ஃபார்மாட்டில் இருக்கிறது. உங்கள் மின்னஞ்சல் முகவரி இருந்தால் அனுப்பி வைக்கிறேன்.//

  மிக்க நன்றி ஐயா.. அந்த முரசு அஞ்சல் டெக்ஸ்ட்டை எனக்கு அனுப்பி வையுங்கள்.. நான் அதனை யுனிகோடில் மாற்றி டீச்சரம்மாவுக்கு அனுப்பி வைக்கிறேன்..

  //எனக்குப் பெருமை என்னவென்றால், ஆஸ்பத்திரியில் இருக்கும்போது மறைந்த நண்பர் சுஜாதா ஆறு தடவை படித்துவிட்டு, எப்போவாவது ஒரு தடவை தான் இம்மாதிரி நல்ல கட்டுரை படிக்கக் கிடைக்கிறது என்று அருகிலிருந்த தேசிகனிடம் சொன்னாராம்.//

  இது நாங்கள் முன்பே கேள்விப்பட்டதுதான்.. அதனால்தான் மறுபடியும் சொன்னேன் அந்த நிஜாம்பாக் சுடுகாடு கட்டுரை டாப் கிளாஸ் என்று..

  தயவு செய்து இதுதான் கடைசி என்று சொல்லி எழுத்தை நிறுத்திவிடாதீர்கள்.. தொடருங்கள்..

 16. Anonymous Says:

  இவரு உன்கிட்ட எப்படி சிக்கினாரு? ச்சும்மா தமாசு தமாசு…:))

 17. வல்லிசிம்ஹன் Says:

  தமிழன்லின்க் கிடைத்தால் படிக்கலாம். உயிர்மை’யில் கிடைக்கும் இல்லையா. வாங்கியே படிக்கலாம்.
  நான்றி நல்லதொரு எழுத்தாளரை அறிமுகம் செய்ட்தத்தற்கு. ஆமாம் இவரை சினிமாக்களில் பார்த்த நினைவுஇருக்க்கிறது.

  வணக்கமும் வாழ்த்துக்களும் அவரிடம் சொல்லிவிடுங்கள்.

 18. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…
  இவரு உன்கிட்ட எப்படி சிக்கினாரு? ச்சும்மா தமாசு தமாசு…:))//

  இவரு என்கிட்ட சிக்கலை. நான்தான் இவர்கிட்ட சிக்கிக்கிட்டேன்..

 19. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வல்லிசிம்ஹன் said…
  தமிழன்,
  லின்க் கிடைத்தால் படிக்கலாம். உயிர்மை’யில் கிடைக்கும் இல்லையா. வாங்கியே படிக்கலாம்.//

  வல்லிம்மா..

  இமெயில் முகவரியை அனுப்புங்கள். யுனிகோடு டைப்பிங்கில் இருக்கும் கதைகளை அனுப்புகிறேன்.. படித்துப் பாருங்கள்..

  //நான்றி நல்லதொரு எழுத்தாளரை அறிமுகம் செய்ட்தத்தற்கு. ஆமாம் இவரை சினிமாக்களில் பார்த்த நினைவு இருக்க்கிறது.
  வணக்கமும் வாழ்த்துக்களும் அவரிடம் சொல்லிவிடுங்கள்.//

  நிச்சயம் சொல்லி விடுகிறேம்மா.. தங்களது வருகைக்கு நன்றிகள் அம்மா..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: