“கண்கள் பனித்தன; இதயம் இனித்தது..!”

13-12-28

என் இனிய வலைத்தமிழ் மக்களே..
பிரிந்தவர் கூடினால் உள்ளம் மகிழும்; உவகை பொங்கும். இது குடும்பத்தில். இதுவே ஒரு அமைப்பில் என்றால்..?

முதலிலேயே ஒன்றை சொல்லிவிடுகிறேன்.

‘அம்மா(AMMA)’ என்பது ‘Association of Malayalam Movie Actors’ என்பதன் சுருக்கம். மலையாளத் திரைப்பட நடிகர் சங்கம். தங்களது சங்கத்தின் வளர்ச்சிக்காக நிதி திரட்ட முடிவெடுத்தனர் மலையாள நடிகர்கள். நிதி திரட்டுவதற்காக ஊர், ஊராகச் சென்று நட்சத்திர கலைவிழாக்கள் நடத்துவதற்குப் பதிலாக ஒரு திரைப்படத்தைத் தயாரித்துவிடலாம் என்ற நல்லதொரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

இதற்கு முதல் பிள்ளையார் சுழி போட்டுத் துவக்கி வைத்திருப்பவர் இப்போதைய மலையாள உலகின் முன்னணி நடிகர் திலீப். தானே சொந்தமாக அப்படத்தினைத் தயாரிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து சங்கத்தில் இருக்கும் அனைத்து நடிகர்களும் பைசா காசு வாங்காமல் நடிப்பதற்காக ஒத்துக் கொண்டனர். வேலைகள் துவங்கின. படத்தின் பெயர் டுவென்ட்டி டுவென்ட்டி(Twenty 20).


மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, ஜெயராம், திலீப், பிருத்விராஜ், முகேஷ் என்று தனி ஹீரோக்கள் அனைவருமே முண்டாசுகட்டி கோதாவில் இறங்கிவிட்டதால் இவர்கள் அனைவருக்கும் ஏற்றாற்போல் கதை செய்து, அதற்கேற்றாற்போல் திரைக்கதை அமைத்து கடைசியாக நிதி திரட்டுவதற்கான படம் என்பதனால், இதனை வெற்றிப் படமாகவும் ஆக்க வேண்டிய கட்டாயம் இருந்ததினால் இயக்குநரை மட்டும் மிகக் கச்சிதமாக தேர்வு செய்திருக்கிறார்கள்.

ஜோஷி. மலையாளத் திரைப்பட உலகில் 1985-க்குப் பிற்காலத்திய திரைப்படங்களிலிருந்து இன்றுவரையிலும் திரைக்கதைக்கு என்று தனி முத்திரை பதித்த திரைப்படம் “நம்பர் 20 மெட்ராஸ் மெயில்”. இன்றைக்கும் கமர்ஷியல் திரைப்படம் என்றாலும், சஸ்பென்ஸ் திரைப்படம் என்றாலும் சரி இரண்டிற்குமே விறுவிறுப்பான, வேகமான திரைக்கதை என்கிற உதாரணத்திற்கு இத்திரைப்படத்தைத்தான் சினிமா ஆர்வலர்கள் கை காட்டுவார்கள்.
அதிலும் அப்போதைய சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் இருவரும் சில வருடங்களுக்குப் பிறகு ஒன்றாக சேர்ந்து நடித்த திரைப்படம் அது. அவர்கள் இருவருக்கும் போதுமான ஸ்கோப் வைத்து திரைக்கதையை கச்சிதமாக செய்திருந்தார் ஜோஷி. தமிழகத்தில்கூட பரபரப்பாக ஓடிய பெருமையுடையது அத்திரைப்படம்.
அதே ஜோஷியிடம் இத்திரைப்படமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருடைய ஒரே பணி படம் ஹிட்டாக வேண்டும். அவ்வளவுதான். அதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நடிகர்கள் இறங்கி வருவார்கள். ஒத்துழைப்பார்கள் என்று முன்னமேயே தெரிவிக்கப்பட்டிருந்ததால் ஜோஷிக்கு எந்தவிதப் பிரச்சினையும் இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.

மிகச் சின்ன கதை. பழி வாங்குதல்தான். சினிமா பாணியில் கதைக்கு வெள்ளி முலாம் பூசும் வேலையை எல்லாம் விட்டுவிட்டு காலத்திற்கேற்றாற்போல் தற்போது வைர முலாம் பூசி வெளிக்கொணர்ந்திருக்கிறார் ஜோஷி.
ஒரு கொலையும், அதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களிற்குள் அனைத்து நட்சத்திரங்களையும் வைத்து தேர் இழுத்திருக்கிறார் இயக்குநர்.

ஓய்வு பெற்ற நீதிபதி விஸ்வநாதனின் பாரம்பரிய குடும்பத்தின் இன்றைய வாரிசுகள், அக்குடும்பத்து பெயரைக் கெடுப்பவர்கள் போல் நடந்து கொள்ள அதில் ஒரு பேரனை போலீஸ் கைது செய்கிறது. அவனைக் காப்பாற்ற வருகிறார் பிரபலமான வக்கீல் தினேஷ் நம்பியார். காப்பாற்றியும்விடுகிறார்.

ஆனால் அடுத்த நாளே அந்த பேரன் கொலை செய்யப்படுகிறார். கொலையாளியை சம்பவ இடத்திலேயே கைது செய்கிறார் மாவட்ட எஸ்.பி. ஆனால் அவன் கொலையாளி இல்லை என்று அவன் குடும்பத்தினர் வக்கீல் தினேஷ் நம்பியாரிடம் வந்து கண் கலங்கி அழுக.. தீவிரமாக களமிறங்கும் வக்கீல் கொலையாளியை காப்பாற்றிவிடுகிறார்.
இதன் பின்தான் கதையே.. இப்போது கொலையாளி தானே முன் வந்து வக்கீலிடம் “நான்தான்.. இதே கையாலதான்.. அவனை கொலை செஞ்சேன்..” என்று சொல்ல வக்கீல் அதிர்ச்சியாகிறார்.

இதில் இருக்கும் மர்மத்தை உடைக்க புறப்படுகிறார் வக்கீல். மர்மத்தின் முடிச்சுகள் அவிழ, அவிழ.. மர்மத்தின் துவக்கப் புள்ளி தன்னிடமே வந்து நிற்பதை உணர்கிறார் வக்கீல்.

முடிவில் தான் காப்பாற்ற நினைத்தவர்களே தனக்கு வில்லன்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் அவர், அந்தக் கொலையாளியுடன் இணைந்து திரைப்படங்களின் சம்பிராதயமான, வழக்கமான முடிவுரையை செய்து படத்தினை நிறைவு செய்கிறார்.

இப்படித்தான் இக்கதையை சொல்ல முடியும். முழுக் கதையையும் கேட்டீர்களானால் திரைக்கதை உங்களுக்கு சலிப்பாகிவிடும். ஏனெனில் இதில் நடிப்பு என்பது அதிகமில்லை. அனைத்தும் ஆக்ஷன்தான்.
வக்கீலாக மம்முட்டியும், கொலையாளியாக மோகன்லாலும், எஸ்.பி.யாக வழக்கம்போல சுரேஷ்கோபியும் நடித்திருக்கிறார்கள். மேலும் சீனிவாசன், மனோஜ் கே.ஜெயன், முகேஷ், திலீப், இன்னசென்ட், ஜெயராம், மது, கவியூர் பொன்னம்மா, நயன்தாரா, சிந்து, கோபிகா, காவ்யா மாதவன், கார்த்திகா, பாவனா, ஜெயசூர்யா, குஞ்சக்கோகாபன், மேலும் எனக்குப் பெயர் தெரியாத மலையாள நட்சத்திர பட்டாளங்களும் ஏராளம். ஏராளம்..
ஒரேயொரு காட்சியில் சும்மா நிற்கின்ற மாதிரியாகக்கூட நடிகர்கள் நடித்து ஒத்துழைத்திருக்கிறார்கள். சீனிவாசன் அவருக்கே உரித்தான அடக்கமான முறையில் ஒரேயொரு ஒரு நிமிட காட்சியில் வருகிறார். நமது நயன்தாராவும் ஒரேயொரு குத்துப் பாடலுக்கு தனது உடலைக் காட்டி்விட்டுப் போகிறார்.

படத்தின் குறிப்பிடத்தக்க அம்சமே வழக்கம்போல ஜோஷியின் திரைக்கதை வேகம்தான். படம் 3 மணி நேரம் என்பதால் பல காட்சிகளில் கத்திரிக்கோல் அடுத்தக் காட்சியை உடனுக்குடன் கொண்டு வருவதைப் போல் வெட்டித் தள்ளியுள்ளது. கார்களும், வேன்களும் cut to shot-களாக இந்தப் படத்தில்தான் அதிகம் பறந்துள்ளன.

சில இடங்களில் கொட்டாவி விடும் அளவுக்கு வேகத்தைக் குறைத்த காட்சிகளும் உண்டு. உதாரணம் மம்முட்டி அறிமுகக் காட்சியில்.. அவர் கோர்ட்டுக்குள் நுழையும்போது அவரைத் தடுத்து அவரது குமாஸ்தா பேசும் காட்சி ஸ்பீடை வெகுவாகக் குறைத்துவிட்டது. அதேபோல் மம்முட்டியும், மோகன்லாலும் பிளாட் வீட்டுக்குள் பேசுவதும், பின்பு அடித்துக் கொள்வதும் சின்னப்பிள்ளைத்தனமாகப் போய்விட்டது.

நல்லவேளையாக.. இந்தத் தொழில் நுட்பம் என்ற ஒன்று வந்தாலும் வந்தது. நமது வயதான நடிகர்கள் தப்பித்தார்கள். இல்லையேல் அவ்ளோதான். சண்டைக் காட்சிகளே நமக்கு காமெடியாகிவிடும்.

கிளைமாக்ஸ் காட்சியில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, முகேஷ், ஜெயராம் என்று ஐந்து பேரின் சண்டைக் காட்சியில் வேறு வழியே இல்லாமல் தொழில் நுட்பந்தான் இயக்குநருக்கு கை கொடுத்துள்ளது. வேறென்ன செய்வது? மலையாள நடிகர்களுக்கு நடிப்பு வருகின்ற அளவுக்கு சண்டைப் பயிற்சி வராது என்பது ஊர், உலகத்திற்கே தெரியும்.

மற்றபடிக்கு படம் ஒன்றும் மோசமில்லை. ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம். பொழுதுபோவது தெரியவில்லை. படம் கேரளாவில் மிகப் பெரிய ஹிட். போட்ட பணத்திற்கும் மேலாக முதல் வாரத்திலேயே கோடிக்கணக்கில் அள்ளிவிட்டார்கள். ‘அம்மா’ அமைப்பினர் இப்போது மிக மிக சந்தோஷத்தில் திளைத்திருக்கின்றனர். அவர்களுடைய நோக்கம் நிறைவேறிவிட்டது. அவ்வளவே..

இந்தத் திரைப்படத்தினால் எனக்கும் ஒரே ஒரு பேருதவி. கடந்த ஒரு மாத காலமாக நகம் கடிக்காததினால் கன்னாபின்னாவென்று வளர்ந்திருந்த எனது பத்து விரல்களின் நகங்களையும், இந்தப் படத்தினை பார்த்துக் கொண்டிருந்தபோது கடித்துக் குதறி எடுத்துவிட்டேன். நீண்ட நாட்கள் கழித்து இப்படியொரு கொலை வெறி.
இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் மலையாளத் திரைப்பட உலகின் பெருமையைச் சொல்லக்கூடிய இத்திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற, குறிப்பிடத்தக்க இரண்டு மலையாள நடிகர்கள் இடம் பெறாதது எனக்கு வருத்தமே. ஒருவர் திலகன், மற்றொருவர் நெடுமுடி வேணு.
அதற்கு முன் சில காலம் முன்பு ‘அம்மா’வில் நடந்த குடும்பச் சண்டையை லேசுபாசாக சொல்லிவிடுகிறேன்.
முன்னொரு காலத்தில் திடீரென்று மலையாளத் திரையுலகில் எந்த ஹீரோவுமே ஹிட் கொடுக்க முடியாமல் படத் தயாரிப்பில் நஷ்டமோ நஷ்டம் ஏற்பட்டு கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில், தமிழ்த் திரைப்பட நடிகர்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு தடை விதித்து ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்திருந்தார்கள்.
இதனை அப்படியே காப்பியடித்தால் வெளியிடங்களில் தங்களது அபிமான நட்சத்திரங்களைக் காண முடியாத ரசிகர்கள், தியேட்டர்களுக்கு கும்பலாக ஓடி வருவார்கள் என்று கணக்குப் போட்ட மலையாள திரையரங்கு அதிபர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் மூன்றும் இணைந்து மலையாள நடிகர்கள் வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை கைவிடும்படி கேட்டுக் கொண்டார்கள்.

மலையாள சேச்சிகளும், சேட்டன்களும் அதிகம் கும்மியடித்துக் கொண்டிருக்கும் வளைகுடா நாடுகளில் மாதத்திற்கு பல கலை நிகழ்ச்சிகள் பல்லாண்டுகளாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில்தான் மலையாள நட்சத்திரங்களுக்கு செம துட்டு. ஏற்கெனவே மலையாளத் தயாரிப்பாளர்கள் தங்களுக்கான சம்பளத்தை கர்ச்சீப்பில்தான் சுருட்டி தருவதாக பொறுமிக் கொண்டிருந்த மலையாள நடிகர் சங்கம் இதை முழுமையாக நிராகரித்தது.
கோபமான தயாரிப்பாளர் சங்கம் தங்களது தயாரிப்புக்களை சில காலம் நிறுத்தி வைக்க முடிவெடுத்தது. தொடர்ந்து அங்கே ஸ்டிரைக் துவங்கியது.

இந்தக் காலக்கட்டத்தில் ‘அம்மா’வின் அனைத்து உறுப்பினர்களும் இந்த விஷயத்தில் ஒற்றுமை காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டிருந்தது. இந்த நேரத்தில்தான் மலையாளத் திரையுலகின் மூத்த நடிகரான திரு.திலகன் “தயாரிப்பாளர்கள் சொல்வது சரிதான். நாம் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது கூடாது..” என்று தயாரிப்பாளர்களுக்குச் சாதகமாகப் பேசினார். இதனை மிக, மிக மரியாதைக் குறைவாக எடுத்துக் கொண்டார்கள் மம்முட்டியும், மோகன்லாலும் பிற நடிகர்களும். அன்றிலிருந்து அவருடன் பேசுவதையே நிறுத்திவிட்டார்களாம் சூப்பர் ஸ்டார்களான இந்த இருவரும்.

பின்பு ஒரு வழியாக தயாரிப்பாளர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கம்போல திரையுலகம் இயங்கத் தொடங்கிய பின்பும் மம்முட்டியும், மோகன்லாலும் திலகனை தங்களுடைய படங்களில் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். திலகன் மீதான புறக்கணிப்பு மிகப் பெரியத் திரைப்படங்களிலும் தொடர ஆரம்பித்ததால்.. புதிய சிறிய, இயக்குநர்கள், மற்றும் சிறிய நடிகர்களின் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் நடிக்கத் துவங்கினார் திலகன்.

தன்னை அனைவரும் புறக்கணிக்கிறார்கள் என்பது தெரிய வந்ததும் பொங்கித் தீர்த்தார் திலகன். “ஸ்கிரீனில் பெயர் முழுவதையும் நானே தட்டிச் சென்றுவிடுவேன் என்கிற வெற்று பொறாமையால், சூப்பர் ஸ்டார்களே என் நடிப்பைக் கண்டு பயப்படுகிறார்கள்..” என்றெல்லாம் பேட்டியளித்தார்.
மோகன்லாலையும், மம்முட்டியையும் பெயர் குறிப்பிடாமலே “மலையாளத் திரையுலகில் யாரும் சூப்பர் ஸ்டார்களே இல்லை..” என்றெல்லாம் திலகன் சொல்ல ஆரம்பிக்க, இந்த சூப்பர் ஸ்டார்களின் திரைப்படங்களில் திலகன் இருக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே போய்விட்டது.

ஆனாலும், “திலகனுடைய கோபமெல்லாம் சக நடிகர் நெடுமுடி வேணு மீதுதான்” என்கிறார்கள் மலையாளப் பத்திரிகையாளர்கள். நெடுமுடி வேணுதான் தன்னைப் பற்றி நடிகர் சங்க கூட்டத்தில் இல்லாததும், பொல்லாததுமாகச் சொல்லி தனது அனைத்து பிள்ளைகளையும் தனக்கெதிராக திசை திருப்பிவிட்டதாகக் காட்டமாகப் பேட்டியளித்திருக்கிறார் திலகன். “நெடுமுடிவேணு நல்ல மனிதரல்ல. அவர் யாரையும் வாழ விடமாட்டார்..” என்கிற ரீதியில் திலகனின் பேட்டி இருந்தது.

அதன் பின் இதே ஜோஷியின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் மம்முட்டியுடன் திலகன் நடிக்க வேண்டி வந்தது. ஜோஷியின் விருப்பம் என்பதால் மம்முட்டியும் இதில் தலையிடவில்லை. ஆனாலும் ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் திலகன் மட்டும் தனித்துவிடப்பட்டு மற்ற நடிகர்களெல்லாம் மம்முட்டியின் பின்னால் அணி வகுத்தது அப்போதைய ஷ¥ட்டிங்கின்போது பரபரப்பான விஷயம். (சூர்யா டிவியில் பரபரப்பு ஸ்கூப் நியூஸாக இதனை சுடச்சுட ஒளிபரப்பினார்கள். நான் பார்த்தேனாக்கும்..)
சமீபத்தில் நடந்த திலகனின் மகள் திருமணத்திலும் முக்கிய நடிகர், நடிகைகள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பதில் மனிதர் ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறார்.

இந்த நேரத்தில் எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. இதற்கு முன்பு ஒரு முறை சென்னையில் திலகனுக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றபோது, மலையாளத் திரையுலகமே திரண்டு வந்து ஒருவர் மாற்றி ஒருவர் முறை வைத்து அவரைப் பார்த்துக் கொண்டது மலையாளத் திரையுலகில் மிகப் பிரசித்தி பெற்ற சம்பவம். ஏனெனில் இந்த நிகழ்ச்சியினைப் பற்றி பல்வேறு தமிழ்ப் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டு “இது போல் தமிழ் நடிகர்கள் நடந்து கொள்வார்களா?” என்றெல்லாம் எழுதியிருந்தது இப்போது எனக்கு ஞாபகம் வருகிறது.

சரி விடுங்கள். என்றாவது ஒரு நாள் அவர்கள் ஒன்று சேரட்டும். மனிதர்கள் முனையவில்லை என்றாலும், காலம் நிச்சயம் அதனை செய்யும்.

திலகன் சரி.. நெடுமுடிவேணு ஏன் இத்திரைப்படத்தில் இடம் பெறவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவருக்கேற்ற வேடம் இதில் இருந்தது. மேலும் நடிகைகளில் சுகுமாரி, கவியூர் பொன்னம்மா தவிர கே.பி.சி.பி.லலிதாவைக் காணவில்லை. ஊர்வசிக்கு பதிலாக அவரது சகோதரி நடித்திருக்கிறார்.

இத்தனை நடிகர்களையும் ஒரே திரைப்படத்தில் பார்ப்பது என்பது இனிமேல் முடியாத காரியம்போல்தான் தெரிகிறது. தனித்தனியாக ஆவர்த்தனம் செய்து தனி ராஜ்யம் கட்டிக் கொண்டிருந்தவர்கர் தங்களுடைய தாய் அமைப்புக்காக ஒரு குடிலுக்குள் வந்திருப்பது அவர்களுடைய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி.

இவர்களாவது ஒற்றுமையாக, சந்தோஷமாக வாழட்டும்..

தமிழ்நாட்டில் இப்போதெல்லாம் பிரிந்திருக்கும் குடும்பத்தினர், ஒன்றுகூடினால் “கண்கள் பனித்தன; இதயம் இனித்தது” என்று சொல்வதுதான் “பேஷன்” என்று கேள்விப்பட்டேன். அதனால்தான் நானும் அதையே இப்பதிவின் தலைப்பில் வைத்தேன்.

அவ்வளவுதான்..
நன்றி..

14 பதில்கள் to ““கண்கள் பனித்தன; இதயம் இனித்தது..!””

 1. dondu(#11168674346665545885) Says:

  //தமிழ்நாட்டில் இப்போதெல்லாம் பிரிந்திருக்கும் குடும்பத்தினர், ஒன்றுகூடினால் “கண்கள் பனித்தன; இதயம் இனித்தது” என்று சொல்வதுதான் “பேஷன்” என்று கேள்விப்பட்டேன். அதனால்தான் நானும் அதையே இப்பதிவின் தலைப்பில் வைத்தேன்.//
  அவ்வ்வ்வ்…

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 2. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///dondu(#11168674346665545885) said…
  //தமிழ்நாட்டில் இப்போதெல்லாம் பிரிந்திருக்கும் குடும்பத்தினர், ஒன்றுகூடினால் “கண்கள் பனித்தன; இதயம் இனித்தது” என்று சொல்வதுதான் “பேஷன்” என்று கேள்விப்பட்டேன். அதனால்தான் நானும் அதையே இப்பதிவின் தலைப்பில் வைத்தேன்.//
  அவ்வ்வ்வ்…
  அன்புடன்,
  டோண்டு ராகவன்///

  ஸார் நீங்களுமா.. இந்த சேட்டையை விடவே மாட்டீங்களா.. சின்னப்புள்ளைங்க மாதிரி..

 3. தயாநிதி மாறன் Says:

  எவனோ சேர்ந்தா எவன் எவனுக்கொ வயிறு எரியுதோ?

  :))

 4. வண்ணத்துபூச்சியார் Says:

  சென்னையில் தமிழக அரசு உதவியுடன் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது.

  இதனை ICFA ( International Cine Appreciation Forum) ஏற்பாடு செய்துள்ளது.

  10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 36 நாடுகளைச் சேர்ந்த 120 படங்கள் பங்கேற்கின்றன.
  சென்னையில் உள்ள பிலிம் சேம்பர், உட்லண்ட்ஸ், சிம்பொனி ஆகிய திரையரங்குகளில் தினசரி 4 முதல் 5 காட்சிகளாக இந்தப் படங்கள் காட்டப்படுகின்றன

  மேலும் தகவலுக்கு:

  butterflysurya.blogspot.com/

 5. செந்தழல் ரவி Says:

  மலையாளக்கரையோரம் பற்றி எழுதும்போது கலைச்சூறாவளி கலக்கல் காமினி ஜெகன் மோகினி ஸ்ரீ ஸ்ரீ ஷகீலா தேவி அம்மையார் பற்றி ஒரு வார்த்தை கூட எழுத மனம் வரவில்லையா உமக்கு ?

  இந்த பதிவை நான் முற்றுமுழுதாக புறக்கணிக்கிறேன்…

 6. அ நம்பி Says:

  அவர்களுக்கு `அம்மா’ (Association of Malayalam Movie Actors).

  தமிழ்த் திரைப்பட நடிகர், நடிகையருக்கு `ஆத்மா’ (Association of Tamil Movie Actors) இல்லையோ?

 7. வடகரை வேலன் Says:

  பின்புலத் தகவல்களுடன் மிக நல்ல விமர்சனம்.

  படம் அசல் மசாலா ஆனால் அதை நிறைவாகத் தந்திருக்கிறார்கள்.

 8. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //தயாநிதி மாறன் said…
  எவனோ சேர்ந்தா எவன் எவனுக்கொ வயிறு எரியுதோ?:))//

  சத்தியமாக எரியவில்லை. மனம் சந்தோஷந்தான் பட்டது. இன்னுமொரு படுகொலைகள் குடும்பப் பிளவையொட்டி நடக்காது அல்லவா.. அதனை நினைத்துத்தான்..

 9. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //செந்தழல் ரவி said…
  மலையாளக் கரையோரம் பற்றி எழுதும்போது கலைச்சூறாவளி கலக்கல் காமினி, ஜெகன் மோகினி, ஸ்ரீஸ்ரீஷகீலா தேவி அம்மையார் பற்றி ஒரு வார்த்தைகூட எழுத மனம் வரவில்லையா உமக்கு? இந்த பதிவை நான் முற்று முழுதாக புறக்கணிக்கிறேன்…//

  ஷகீலாவைப் பற்றி கேரள வயசுப் பசங்களிடம் சொன்னால் ஜொள்ளுவிடுவார்கள்..

  ஆனால் கேரள சினிமாக்காரர்களிடம் சொன்னால் தோலை உரித்துவிடுவார்கள். அவ்வளவு ‘காண்டு’வில் இருக்கிறார்கள் தம்பி..

 10. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //அ நம்பி said…
  அவர்களுக்கு `அம்மா’ (Association of Malayalam Movie Actors).
  தமிழ்த் திரைப்பட நடிகர், நடிகையருக்கு `ஆத்மா’ (Association of Tamil Movie Actors) இல்லையோ?//

  நம்பி ஸார் மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.. ஆனால் நாம்தான் முன்பே பெயர் வைத்துவிட்டோமே.. தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் என்று..

 11. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வடகரை வேலன் said…
  பின்புலத் தகவல்களுடன் மிக நல்ல விமர்சனம். படம் அசல் மசாலா ஆனால் அதை நிறைவாகத் தந்திருக்கிறார்கள்.//

  நன்றி வேலன் ஸார்.. போரடிக்காமல் சென்ற திரைக்கதையால்தான் இது சாத்தியமானது.. அதுதான் ஜோஷி.. அவருடைய அனைத்துத் திரைப்படங்களுமே திரைக்கதைக்காகப் பேசப்படுபவைதான்.. அவ்வளவு திறமையானவர் அவர்..

 12. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  வண்ணத்துப் பூச்சியார் அவர்களே.. நானும் இந்த சர்வதேச திரைப்பட விழா பற்றி 3 பதிவுகள் இட்டுள்ளேன்.. பார்க்கவும்..

  http://truetamilans.blogspot.com/2008/12/blog-post_6368.html

 13. வண்ணத்துபூச்சியார் Says:

  பார்த்தேன்.

  நுழைவு சீட்டு எடுத்து விட்டேன்.

  விழாவில் சந்திக்கலாம்.

 14. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வண்ணத்துபூச்சியார் said…
  பார்த்தேன். நுழைவு சீட்டு எடுத்து விட்டேன். விழாவில் சந்திக்கலாம்.//

  நிச்சயம் சந்திப்போம்.. உங்கள் நம்பரை கொடுங்கள். நான் தொடர்பு கொள்கிறேன். அல்லது எனது பதிவில் எனது தொலைபேசி எண் உள்ளது. குறித்துக் கொள்ளவும். அரங்கத்திற்கு வந்தவுடன் அழைக்கவும். காத்திருக்கிறேன்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: