“நாங்க மட்டும் இல்லைன்னா.. இந்த வேலைக்கு யாரை கூப்பிடுவீங்க..?” – பதிவர்களே பதில் சொல்லுங்கள்..!


09-12-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நட்ட நடுநசியில், நடுத்தெருவில் நீங்கள் மட்டும் தனியாக சேர் போட்டு அமர்ந்திருக்கும் அனுபவத்தை உங்களில் யாராவது பெற்றிருக்கிறீர்களா..?

சில நாட்களுக்கு முன் எனக்கு நடந்தது.

என்னுடைய மிக நெருங்கிய அக்கா ஒருவர் சென்னையில் இருக்கிறார். நான் அவ்வப்போது உடல்நிலை சரியில்லாத நேரங்களில் அவர்கள் வீட்டிற்குச் சென்று ஓய்வு எடுப்பது வழக்கம். வஞ்சகமில்லாத பாசக்காரர்கள் அவரும், அவருடைய கணவரும். சில நாட்கள் அவர்கள் வீட்டிலிருந்தே வேலைக்கும் சென்று வந்திருக்கிறேன்.

சென்ற வாரம் தாங்கள் குடியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு தாம்பரம் அருகே புதிதாக வாங்கியிருந்த வீட்டிற்கு குடி புகுந்தார்கள். அவர்களுக்கு ஒரே பையன். இப்போது அமெரிக்காவில் பொட்டி தட்டிக் கொண்டிருக்கிறான். “துணைக்கு ஆள் இல்லாத காரணத்தால் என்னால் வர முடியுமா..?” என்று கேட்டார் அக்கா.

அதற்காகத்தானே அவதாரம் எடுத்திருக்கிறேன். முடியாது என்று சொல்வேனா..? “வருகிறேன்..” என்றேன். அவர்கள் அழைத்தது போல் சனிக்கிழமை இரவில் அவர்களது வீட்டில் ஆஜரானேன்.

“நம்மால் முடிந்ததை பேக் செய்து வைப்போம். மீதியை வருகின்ற ஏஜென்ஸிக்காரர்கள் செய்து கொள்வார்கள்..” என்றார் மாமா. அந்த ஏஜென்ஸிக்காரர்கள் பற்றி கேட்டேன். “Packers and Movers” என்றார் மாமா. அப்படியொரு தொழில் இப்போது சென்னையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது என்று அவர் சொல்லி சில உதாரணங்களையும் தெரிவித்தார்.

“ஒரே நாளில் மூன்று அஸைன்மெண்ட்டுகளைக்கூட கையில் எடுப்பார்கள். அவ்வளவு வேகமாக பேக் செய்வார்கள். ஒரு பொருள் உடைந்தாலும் அதற்கு நஷ்டஈடு தந்துவிடுவார்கள். உடையாமல் கொண்டு வந்து தருவதற்குத்தான் அவர்களுக்கு சம்பளம்..” என்றார் மாமா.

சனி இரவு விடிற்காலை 3 மணிவரை பேக் செய்தோம். மறுநாள் காலை 10 மணிக்குள்ளாக பாதியைக் கட்டி முடித்துவிட்டு ‘அக்கடா’ என்று காலை நீட்டி அமர்ந்து மாமா ஏஜென்ஸிக்காரர்களுக்கு போன் செய்தார். ‘இதோ வருகிறோம்’.. ‘அதோ வருகிறோம்’.. ‘வந்து கொண்டேயிருக்கிறோம்..’ என்றெல்லாம் சொல்லியபடியே இருந்தார்கள். நேரம் ஓடியதுதானே தவிர, ஆட்கள் வரவில்லை.

அக்கா இப்போது இருந்த வீட்டின் தெரு மிக மிக பிஸியான தெரு. பிரதான சாலையை இணைக்கக்கூடிய தெரு என்பதால் எப்போதும் கார்கள், டூவீலர்களின் அணிவகுப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும். அதனால் அந்த பிளாட்டில் இருப்பவர்களில் யாராவது வீட்டைக் காலி செய்தாலோ அல்லது புதிதாக வீட்டுக்குக் குடி வருகிறார்கள் என்றாலோ அவர்கள் வருகின்ற நேரம் அல்லது செல்கின்ற நேரம், விடியற்காலை அல்லது பின்னிரவு என்பதாகத்தான் இருக்கும். அல்லது ஞாயிறு பகலாக இருக்கும்.

காலையில் இருந்து காத்திருந்து இரவு 10.20 மணிக்குத்தான் லாரி வந்து சேர்ந்தது. மொத்தம் 4 பேர் டிரைவருடன் சேர்த்து. டிரைவர்தான் கேப்டனை போல். நான்கு பேருமே இளந்தாரிகள். இளைஞர்கள்.. பேச்சில் அச்சு அசலாக மெட்ராஸ் பாஷை பாடை கட்டி உட்கார்ந்திருந்தது. ஆனால் செயலில் சூப்பர்சானிக் விமானம் போல..

மடமடவென வேலையில் இறங்கினார்கள். வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்தவுடனேயே எத்தனை அட்டைப் பெட்டி பார்சல்கள் தேவைப்படும், எத்தனை சாக்குகள் தேவைப்படும் என்பதனை கண்களாலேயே முடிவு செய்து கனகச்சிதமாக எடுத்து வந்தார்கள்.

இதன் பின் வேகம், வேகம், வேகம்தான்.. அக்கா வீடு முதல் மாடியில் இருந்தது. இறங்கி அங்கிருந்து ஒரு 20 நடை நடந்துதான் ரோட்டிற்கு வர வேண்டும். பார்சல்களைக் கட்டி முடிக்க இரவு 12.30 ஆனது. அதன் பின் ஒவ்வொரு பொருளாக கொண்டு வந்து லாரியில் ஏற்றினார்கள். மாமா என்னை லாரியின் அருகில் நின்று கவனித்துக் கொள்ளும்படி சொன்னார். நானும் சென்றேன்.

அவ்வப்போது வந்து சென்ற கார்கள், டூவிலர்களைத் தவிர தெருவில் மயான அமைதி. நான்கைந்து நாய்கள் மட்டும் என்னை அடையாளம் கண்டு அருகில் வந்து குரைக்கத் துவங்கின. தொகுதி விட்டு தொகுதி வரும் யாரையும் நாய்கள் மட்டுமே மிக எளிதாகக் கண்டு கொள்ளுமாம். ஏதோ புத்தகத்தில் படித்தது.

கையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டில் இருந்து ஒன்று, இரண்டாக தூக்கியெறிந்து அவைகளை சிநேகம் பிடித்துக் கொண்டேன். அவ்வளவுதான்.. ஆடத் துவங்கிய வால், லாரி அந்தத் தெருவைக் கடக்கும்வரையில் உடன் ஓடிவரும்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கீழே சாய்ந்தது.

எவ்வளவு நேரம்தான் நிற்பது என்றெண்ணி ஏற்றவிருந்த சேரை மடக்கி அதில் உட்கார்ந்தேன். இடை, இடையே நாய்களுடன் கொஞ்சல் பேச்சு.. “உங்களுக்கெல்லாம் கவலையில்ல.. நிம்மதியா இருக்கீங்க.. வீடு மாத்தணும்னு இவ்ளோ பேஜாரு இல்ல.. கிடைக்கிறத சாப்பிட்டுட்டு, இருக்குற இடத்துல இருந்துட்டு, சோறு போடுறவனுக்கு வாலாட்டிட்டு நல்ல பேர் எடுத்திட்டு முருகன் கூப்பிடும்போது போய்ச் சேரலாம்.. நாங்களும்தான் வந்து மாட்டிக்கிட்டிருக்கோம்.. அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா உங்களை மாதிரிதான் பொறக்கணும்னு முருகன்கிட்ட வேண்டியிருக்கேன்..” என்று நாய்களோடு பேசிய என் பேச்சு அந்த நால்வரையும் வெகுவாகக் கவர்ந்து கொண்டுதான் இருந்தது.

அவ்வப்போது என்னருகில் வந்து நான் பேசுவதைக் கேட்டுவிட்டு சிரித்தபடியே போய்க் கொண்டிருந்தார்கள். என்ன, ‘லூஸ¤’ன்னு சொல்லலை.. அவ்ளோதான்.. ஆனாலும் அவர்களும் வேலையில் கெட்டி. அப்போதைக்கப்போ ரெண்டு சிகரெட்டை பற்ற வைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். இரண்டு புல் பாட்டில் தண்ணீர் காலி. ஆனால் ஒரு இளைஞர், வாஷிங்மெஷினை முதுகில் சுமந்து வந்த போது அதிர்ச்சியில் நான் எழுந்தேவிட்டேன்.

ஆத்தாடி.. என் பேகை குனிஞ்சு தூக்கமே எனக்கு முதுகு வலிக்கும்.. இது எப்படி? ‘அதுலேயும் சிரிச்சுக்கிட்டே செய்றாங்களே முருகா..’ என்று என்னை ரொம்பவே அவஸ்தைப்படுத்தியது அந்த இரவு. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடன் பேசத் துவங்கினேன். அனைவருக்குமே சொந்த ஊர் இதுதான். படிப்பு வயதில் குறைந்த ஒருவர் மட்டுமே 7-ம் வகுப்பு பாஸ். மற்றவர்கள் 4. 5, 6, என்று எண்ணிக்கை கணக்கில்தான்.

“ஏன் படிக்கவில்லை..?” என்றேன். சிரித்துக் கொண்டே சொன்னார் டிரைவர். “ஏன் படிக்க வைக்கலைன்னு கேளுங்க..”. எனக்கு சுருக்கென்றது. ஆஹா.. இவர் லேசுபட்ட ஆளில்லை சாமின்னு நினைச்சேன். “காலையில இருந்து வரலியே..?” என்று பேச்சைக் கொடுத்தபோது இன்று காலையில் இருந்து அவர்கள் இதுவரையில் இதுபோன்ற 3 வேலைகளை முடித்துவிட்டுத்தான் இங்கு வந்திருப்பதாகச் சொன்னார்கள். என்னால தாங்க முடியல.. “எப்படிங்க..?” என்றேன்.

அப்போதும் சிரிப்புதான்.. “என்ன செய்யறது சொல்லுங்க..? வேலை வரும்போது செஞ்சுத்தான் ஸார் ஆகணும்..” என்றார் டிரைவர். “இல்லை. இவ்ளோ கடுமையா உழைக்குறீங்களே.. உடம்பு தாங்குமா..?” என்றார். இன்னொருவர் சொன்னார்.. “தாங்குறவரைக்கும் உழைச்சுத்தான் ஸார் ஆகணும்.. வீட்ல அடுப்பு எரியணும்ல்ல..” என்றார் இன்னொருவர்.

நேரமானதால் பேச்சைக் குறைக்க வேண்டி வந்தது. இடையில் கடமை வீரர்களாக காவல்துறையினர் டூவீலர்களில் ரவுண்டு வந்து என்னருகே சடக்கென்று நிறுத்தினார்கள். “என்ன ஸார்?” என்றார்கள். “வீட்டைக் காலி பண்றோம்..” என்றேன். “இந்த நேரத்துலயா..?” என்றார் ஒரு காவலர். என்னை முந்திக் கொண்ட பில்லியன் காவலர், “பகல்ல ரோடு கிளியரா இருக்காது. அதான்.. இந்தத் தெருவே இப்படித்தான்.. சரி.. சரி..” என்று சொல்லிவிட்டு என் எதிரில் தன் முன்னங்கால்களைத் தாங்கிக் கொண்டு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்றிருந்த நாய்களை பார்த்து தன் தடியைக் காட்டி மிரட்டிவிட்டுப் போனார்.

ஒரு வழியாக இரவு 3.30 மணிக்கு அனைத்தையும் லாரியில் ஏற்றி புது வீட்டுக்குப் பயணமானோம். அக்காவுக்கு வருத்தமோ வருத்தம். 20 வருஷமா இருந்த வீட்டை காலி பண்றோமேன்னு பீலிங். மாமாவுக்கு ரொம்பவே சந்தோஷம். மகனுக்காக ஒரு வீட்டை வாங்கிக் கொடுத்தாச்சே என்ற கடமையாற்றிய திருப்தி.

தாம்பரம் அருகே புது வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது விடியற்காலை 4 மணி. அங்கேயும் unpack நடந்தது. இங்கே வீடு 2-வது மாடியில். “லிப்ட் இருப்பதால் தப்பித்தீர்கள்” என்று லாரிக்காரர்களிடம் சொல்லி சந்தோஷப்பட்டேன். என் வாய்முகூர்த்தம் பலித்துவிட்டது. பிரிட்ஜ், வாஷிங்மெஷின் இரண்டையும் லிப்ட் மூலமாக கொண்டு சென்ற பின்பு திடீரென்று ஓவர் லோடு காரணமாக லிப்ட் இயங்க மறுக்க.. டிரைவரைத் தவிர மற்ற மூவருக்கும் லேசான மனவருத்தம். ஆனாலும் முகத்தில் எந்தவித ரியாக்ஷனையும் காட்டாமல் மற்றவைகளையும் படியேறியே கொண்டு வந்து வைத்தார்கள்.

ஒரு கட்டில், 3 பீரோக்கள், 10 சாக்குப் பைகள், 18 பெரிய டிவி சைஸ் அட்டைப் பெட்டிகள், டிவி, 4 டேபிள்கள், கிரைண்டர் என்று அவர்கள் சுமந்தது ஒரு குட்டி நிவாரணப் பொருட்கள். சட்டை முழுவதும் நனைந்து தொப்பலாகிய நிலையில் எனக்கு பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. இடையிடையே தண்ணீர் மட்டுமே குடித்தவர்கள்.. டீ கேட்டார்கள். அக்கா பால்பாக்கெட் வாங்கி வர மறந்துவிட, கொடுக்க முடியவில்லையே என்று அவர்களுக்கும் மனம்கொள்ளா வருத்தம்.

விடியற்காலை 5.45 மணிக்கு அவ்வளவு வேகமாக வேலையைச் செய்து முடித்தார்கள். கீழ் மூச்சு, மேல் மூச்சு வாங்க நின்றவர்கள் வீட்டின் வாசலுக்குப் போய் நின்று கொண்டார்கள். உள்ளே அழைத்தும் வர மறுத்தார்கள். “அது எங்க ஏஜென்ஸில சொல்லிருக்கிற விதிமுறை ஸார்.. வேலைய முடிச்ச பின்னாடி, வீட்டுக்குள்ள நிக்கவே கூடாதுங்கறது ஓனர் உத்தரவு..” என்றார்கள்.

மொத்தமாக 3000 ரூபாய் பில். மாமா பணத்தைக் கொடுக்க நான் அவர்களது லாரி வரையிலும் சென்று அவர்களை வழியனுப்பி வைத்தேன். படிக்கட்டுகளில் இறங்கும்போது மெதுவாகக் கேட்டேன்.. “நீங்களும் நல்லா படிச்சிருக்கலாம்ல.. வீட்ல படிக்க வைச்சிருப்பாங்க. எங்களை மாதிரி ஆயிருக்கலாம்…” என்று இழுத்தேன்.

நால்வருமே சிரித்துக் கொண்டார்கள். “இப்ப நினைச்சு என்ன ஸார் ஆகப் போகுது..?” என்றார் ஒருவர். இன்னொருவர் “நினைக்கிறதே வேஸ்ட்டு..” என்றார் மற்றொருவர்.. “வீட்ல அப்பன், ஆத்தா இருந்திருந்தா படிக்க வைச்சிருப்பாங்க ஸார்” என்று எங்கோ பார்த்தபடியே சொன்னார் மூன்றாமவர். டிரைவர் மட்டுமே பதில் சொல்லாமல் வந்து கொண்டிருந்தார்.

“என்ன ஸார் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறீங்க?” என்றேன். லாரி அருகே வந்தவர் பின்புறக் கதவை பூட்டியபடியே “நீங்க என்ன படிச்சிருக்கீங்க?” என்றார். சொன்னேன்.. “படிப்புக்கு ஏத்த வேலை பாக்குறீங்களா..?” என்றார். “ஆமாம்..” என்றேன்.

“சரி.. எல்லாரும் உங்களை மாதிரியே படிச்சு, உங்க வேலை மாதிரியே தேடிட்டுப் போயிட்டா.. பின்ன இந்த மாதிரி வேலைக்கு யாரைத் தேடுவீங்க..? யார் வருவாங்க..? நீங்களே எல்லாத்தையும் தூக்கிருவீங்களா..?” என்றார்.

அந்த கார்த்திகை மாத குளிரிலும் என் உடம்பு குப்பென்று வியர்த்தது. மற்ற மூவரும் நான் என்ன பதில் சொல்வேன் என்று எதிர்பார்த்து ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்க.. என்ன பதில் சொல்வது என்று எனக்கும் தெரியவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போய் மெளனமாக நின்றேன்.

மின்னல் வேகத்தில் கதவுகளை மூடிவிட்டு என் தோளில் கை வைத்து தட்டிக் கொடுத்துவிட்டு “அப்பால பார்க்கலாம் ஸார்.. ஸார்கிட்ட நம்ம கார்டு இருக்கு.. வேற யாருக்காச்சும் வேலை இருந்தா சொல்லு.. வர்றோம்.. என்ன வர்ட்டா..?” என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு லாரியில் ஏறி அமர்ந்தார் டிரைவர்.

அந்த விடிந்தும், விடியாதப் பொழுதில் தெருமுனையில் மறையும் வரையில் அந்த லாரியையே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு இப்போதுவரையிலும் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

உங்களுக்குத் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்கள் பதிவர்களே..

33 பதில்கள் to ““நாங்க மட்டும் இல்லைன்னா.. இந்த வேலைக்கு யாரை கூப்பிடுவீங்க..?” – பதிவர்களே பதில் சொல்லுங்கள்..!”

 1. சுந்தரராஜன் Says:

  🙂

 2. சுந்தரராஜன் Says:

  🙂 (பதில் சொல்லத் தெரியவில்லை என்றால் இப்படித்தான் சிரிப்போம், அசடுவழிய)

 3. Arun Kumar Says:

  மிகவும் அருமையான பதிவு அண்ணா !!படித்து விட்டால் மட்டுமே மிக சொசுசான வேலை கிடைகக போவதில்லை. என்னோடு பொறியியல் படித்த சில நண்பர்கள் இன்னமும் சென்னையில் வேலை இல்லாமல் அல்லது கிடைக்காமல் இருக்கிறார்கள் ..அதுவும் 6 வருடமாக.. :)செய்யும் தொழிலே தெய்வம்எனக்கு இந்த தருணத்தில் நான் சமீபத்தில் பார்த்த ஐரோப்பா சென்று இருந்த போது அவதானித்தது. நான் இருந்த குடியிருப்பை சுத்தம் செய்ய ஒரு வேலையாள் வருவார். சுத்தமாக ஒரு பெரிய காரில். சுத்தம் செய்ய அனைத்து விதமான கருவிகளோடு. 30 நிமிடத்தில் வேலை முடிந்து போகும். டாய்லேட் சுத்தம் செய்ய கூட மிக நவீன கருவி வைத்து இருந்தார்.அழுக்கு வியர்வை படியும் தொழில் என்று சொல்லவே முடியாது.. அவ்வளவு சுத்தமாக ….கூடவே அவருக்கான சம்பளத்தை அவரின் வங்கி கணக்கில் செலுத்தி விடும்படி வங்கி கணக்கு எண் கொடுத்து விட்டு சென்றார் ..:)சற்றே நம் நாட்டு நிலை..ம் என்று தான் நாம் அந்த நிலையை அடைவோமோ?

 4. ILA Says:

  உங்க பதிவுலேயே இதுதாங்க டாப்.. அர்ருமையான பதிவு, எவ்வளவு பெரிசுன்னு பார்க்க கூடத் தோணலை. அவ்வளவு கச்சிதம்.

 5. NicePyg Says:

  சிம்பிள்.. காலம் மாறிக்கிட்டே போகும். முன்ன எல்லாம் பேக்கரும் கிடையாது, மூவரும் கிடையாது. அக்கம் பக்கம் தெரிஞ்ச வேலையாட்களை வச்சுதான் வீடு மாற்றல் நடக்கும்.இன்னும் பத்து வருஷத்துல பாக்க்ர்ஸ் & மூவர்ஸ் எல்லாம் பட்டப்படிப்பு படிச்சவங்களா இருப்பாங்க.. அதே நேரம் எல்லாத்துக்கும் நவீன மெஷின் வந்துடும். அவங்க (நம்ம) வேலை சுலபமாயிடும்..எல்லாரும் படிச்சு முன்னேறினா, எல்லா தொழிலும் புரொபஷனலா மாறிடும். யார் வேணாலும் எந்த தொழில் வேணாலும் செய்யலாம்.. அவங்க அவங்க திறமைக்கும், பணத்துக்கும் ஏத்தாப்போல..பொட்டி தட்டும் என்னோட புள்ள ஒரு புரொபஷனல் பேக்கரா கூட வரலாம்.. நிறைய சம்பளத்தோட 🙂

 6. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //சுந்தரராஜன் said…:) (பதில் சொல்லத் தெரியவில்லை என்றால் இப்படித்தான் சிரிப்போம், அசடு வழிய)//அண்ணா..அசடு வழிய நிற்கிறதுக்கெல்லாம் ஒரு வயசும், வருஷமும் இருந்துச்சுங்கண்ணா.. அப்பல்லாம் நிக்காம இப்போ போய் நின்னீங்கன்னா எப்படி? உங்களிடமிருந்து ஒரு அனைவராலும் ஏற்றுக் கொள்ளும்படியான, அனுசரணையான பதிலை எதிர்பார்த்தேன். நிச்சயம் எனக்கு இதில் வருத்தம்தான்..

 7. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Arun Kumar said…மிகவும் அருமையான பதிவு அண்ணா படித்து விட்டால் மட்டுமே மிக சொசுசான வேலை கிடைகக போவதில்லை. என்னோடு பொறியியல் படித்த சில நண்பர்கள் இன்னமும் சென்னையில் வேலை இல்லாமல் அல்லது கிடைக்காமல் இருக்கிறார்கள்.. அதுவும் 6 வருடமாக..:)//மதிப்பெண்கள் குறைவாகப் பெற்று ஆவரேஜாக பாஸ் செய்திருப்பார்கள் சரியா.. நான் சொன்ன இந்த அக்காவின் பையன் கேம்பஸ் இண்டர்வியூவிலேயே தேர்வாகி வாழ்க்கையைத் தொடங்கிவிட்டான்.//எனக்கு இந்த தருணத்தில் நான் சமீபத்தில் ஐரோப்பா சென்று இருந்த போது அவதானித்தது. நான் இருந்த குடியிருப்பை சுத்தம் செய்ய ஒரு வேலையாள் வருவார். சுத்தமாக ஒரு பெரிய காரில். சுத்தம் செய்ய அனைத்து விதமான கருவிகளோடு. 30 நிமிடத்தில் வேலை முடிந்து போகும். டாய்லேட் சுத்தம் செய்யகூட மிக நவீன கருவி வைத்து இருந்தார். அழுக்கு வியர்வை படியும் தொழில் என்று சொல்லவே முடியாது.. அவ்வளவு சுத்தமாக..//இங்கே இன்னமும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலேயே மலக்குழிக்குள் ஊழியர்கள் இறங்குகிறார்கள். பார்க்கக் கொடூரமாக உள்ளது.. //கூடவே அவருக்கான சம்பளத்தை அவரின் வங்கி கணக்கில் செலுத்தி விடும்படி வங்கி கணக்கு எண் கொடுத்து விட்டு சென்றார்:) சற்றே நம் நாட்டு நிலை..ம் என்றுதான் நாம் அந்த நிலையை அடைவோமோ?//நம்ம நாட்டுல அவுகளுக்கு வங்கியில் அக்கவுண்ட் இருக்கிறதா என்பதுகூட சந்தேகம்தான்.. நாடு மாற வேண்டுமெனில் நீயும், நானும் நினைத்தால் மட்டும் போதாது.. ஆளுபவர்களும், ஆளத் துடிப்பவர்களும் முன் வர வேண்டும்.

 8. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ILA said…உங்க பதிவுலேயே இதுதாங்க டாப்.. அர்ருமையான பதிவு, எவ்வளவு பெரிசுன்னு பார்க்க கூடத் தோணலை. அவ்வளவு கச்சிதம்.//நன்றி இளா..பெரிசெல்லாம் இல்லை.. சும்மா கொஞ்சமா 4 பக்கம்தான்..

 9. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //NicePyg said…சிம்பிள்.. காலம் மாறிக்கிட்டே போகும். முன்ன எல்லாம் பேக்கரும் கிடையாது, மூவரும் கிடையாது. அக்கம் பக்கம் தெரிஞ்ச வேலையாட்களை வச்சுதான் வீடு மாற்றல் நடக்கும். இன்னும் பத்து வருஷத்துல பாக்க்ர்ஸ் & மூவர்ஸ் எல்லாம் பட்டப் படிப்பு படிச்சவங்களா இருப்பாங்க.. அதே நேரம் எல்லாத்துக்கும் நவீன மெஷின் வந்துடும். அவங்க (நம்ம) வேலை சுலபமாயிடும்.. எல்லாரும் படிச்சு முன்னேறினா, எல்லா தொழிலும் புரொபஷனலா மாறிடும். யார் வேணாலும் எந்த தொழில் வேணாலும் செய்யலாம்.. அவங்க அவங்க திறமைக்கும், பணத்துக்கும் ஏத்தாப்போல.. பொட்டி தட்டும் என்னோட புள்ள ஒரு புரொபஷனல் பேக்கராகூட வரலாம்.. நிறைய சம்பளத்தோட:)//நன்றி Pyg அவர்களே.. உங்களுடைய எண்ணம்போல நடந்தால் முதலில் மூவர்ஸ் பேக்கர்ஸை விட்டுவிட்டு மலக்குழிக்குள் இறங்கும் நமது சகோதரர்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைத்தான் முதலில் செய்ய வேண்டும்.இத்தொழில் பெரிதாக வளரலாம். சிறியதாகவும் இப்போது வளர்ந்து கொண்டுதான் உள்ளது. மீன்பாடி வண்டிகளுக்கு இப்போது செம கிராக்கி. குடிசை வீட்டில் இருப்பவர்களுக்கெல்லாம் மீன்பாடி வண்டிதான் கண்கண்ட தெய்வம்.

 10. jackiesekar Says:

  உங்களுடைய எண்ணம்போல நடந்தால் முதலில் மூவர்ஸ் பேக்கர்ஸை விட்டுவிட்டு மலக்குழிக்குள் இறங்கும் நமது சகோதரர்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைத்தான் முதலில் செய்ய வேண்டும்.

 11. jackiesekar Says:

  உங்களுடைய எண்ணம்போல நடந்தால் முதலில் மூவர்ஸ் பேக்கர்ஸை விட்டுவிட்டு மலக்குழிக்குள் இறங்கும் நமது சகோதரர்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைத்தான் முதலில் செய்ய வேண்டும். yes i agree

 12. BG Says:

  Very observant post. In the US, getting similar service is really expensive. We pack our own stuff. All types packing material and tools are available for nominal fee in many stores. For really heavy items (much heavier than washing machine), people get some help.For shorter distance we rent a truck on our own and move ourselves. For long distance moving, we can either move ourselves or rent a national mover. In town moves cost around $600 – $1000 dollars. Out of state move costs $8000 and up.I wonder how does moving process happen in Western European countries?

 13. Raj Says:

  அவருடைய கேள்விக்கு நம் யாரிடமும் பதில் இல்லாமல் இருக்கலாம்…..ஆனால் நீங்கள் கேட்ட கேள்வி நிஜமான அக்கறையோடுதானே, அதில் ஒன்றும் தவறில்லை.

 14. தருமி Says:

  உங்க பதிவுலேயே இதுதாங்க டாப்.. வழிமொழிகிறேன்.அந்த ஐரோப்பாகாரர் மாதிரி நம்ம ஆளுக வேலைசெய்ற காலம் வர உங்க “ஆளை” நல்லா கும்பிடுங்க…

 15. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //jackiesekar said…உங்களுடைய எண்ணம்போல நடந்தால் முதலில் மூவர்ஸ் பேக்கர்ஸை விட்டுவிட்டு மலக்குழிக்குள் இறங்கும் நமது சகோதரர்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைத்தான் முதலில் செய்ய வேண்டும்.//உண்மை.. உண்மை.. கண்டுகொள்ளப்படாத ஒதுக்கப்பட்ட மக்கள் அவர்கள்தான்.. அவர்களுக்கென்று முறையான அமைப்பு கூட இல்லை என்பது கொடுமையான விஷயம்..

 16. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //BG said…Very observant post. In the US, getting similar service is really expensive. We pack our own stuff. All types packing material and tools are available for nominal fee in many stores. For really heavy items (much heavier than washing machine), people get some help. For shorter distance we rent a truck on our own and move ourselves. For long distance moving, we can either move ourselves or rent a national mover.In town moves cost around $600 – $1000 dollars. Out of state move costs $8000 and up.//ஆத்தி.. மாநிலம் விட்டு மாநிலம் போகணும்னா 50000 ரூபாய் ஆகுமா..? இதுக்கு நாங்களே பரவாயில்லையே.. //I wonder how does moving process happen in Western European countries?//யாராவது ஒருத்தர் வந்து சொல்வாங்க.. காத்திருங்க..

 17. அறிவன்#11802717200764379909 Says:

  நண்பர் உத(உதை இல்லை !),இந்த நிலை நாடுகளைப் பொறுத்தும் நமது செலவு செய்யும் திறனைப் பொறுத்தும் மாறுபடும்.இந்தியாவில் மனிதவளம் நிறைய இருக்கிறது;ஓரளவு தாங்கக் கூடிய விலைக்கு இந்த விதமான சேவைகளும் கிடைக்கின்றன.இன்னொரு சூழலை யோசித்துப் பாருங்கள்,இந்த சேவைக்கு நீங்கள் 3000 க்குப் பதிலாக 30000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் அப்போதும் இப்படித்தான் ஒட்டுனரின் கேள்விக்கு அதிர்ந்து கொண்டிருப்பீர்களா?அப்போது முதுகு வலித்தாலும் உங்கள் பொருள்களை நீங்களேதான் எடுத்துக் கொள்ள முடிவு செய்வீர்கள்.உண்மையில் இந்த வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காத சூழலையும்,இந்த வேலைகள்\சேவைகள் நவீனப் படுத்தப் படுவதும் ஒருவகையில் நல்லது;அப்போது சேவையில் தரம் வரும்,மேலும் அது அவசியம் தேவைப்படும் போதுதான் அவர்களை அணுகுவீர்கள் !

 18. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //BG said…Very observant post. In the US, getting similar service is really expensive. We pack our own stuff. All types packing material and tools are available for nominal fee in many stores. For really heavy items (much heavier than washing machine), people get some help.//இங்கேயும் கிடைக்கும். ஆனால் உடல் வளைந்து செய்ய முடியாத வயதானவர்களும், பணக்காரர்களும்தான் இது போன்ற அமைப்புகளைத் தேடிச் செல்கிறார்கள்.//For shorter distance we rent a truck on our own and move ourselves. For long distance moving, we can either move ourselves or rent a national mover.In town moves cost around $600 – $1000 dollars. Out of state move costs $8000 and up.//ஐயோ.. மாநிலம் விட்டு மாநிலம் போக 50000 ரூபாயா..? எங்க ஊர்ல டெல்லில இருந்து சென்னைக்கு வர்றதுக்கு 10000 ரூபாகூட ஆகாது.. //I wonder how does moving process happen in Western European countries?//வெயிட் பண்ணுவோம்.. நானும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கேன்.. யாராவது ஒருத்தர் வந்து சொல்லாமயா இருக்கப் போறாங்க..?

 19. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Raj said…அவருடைய கேள்விக்கு நம் யாரிடமும் பதில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் கேட்ட கேள்வி நிஜமான அக்கறையோடுதானே, அதில் ஒன்றும் தவறில்லை.//தவறில்லைதான் ராஜ்.. ஆனால் எத்தனை நாட்களாக இப்படியொரு எண்ணத்தை அவர் மனதில் பூட்டி வைத்திருந்திருப்பார் சொல்லுங்கள்.. சமத்துவ சமூகத்தின் முதல் படி இதுதான்.. யாரும், யாரையும் ஒருபோதும் புறக்கணித்துவிட்டு வாழ்ந்துவிட முடியாது.. ஒவ்வொருவரின் தயவும், உதவியும், பங்கும் உலக வாழ்க்கைக்கு அவசியம் என்பதை உணர்த்தியிருக்கிறார் அந்த டிரைவர்..

 20. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //தருமி said…உங்க பதிவுலேயே இதுதாங்க டாப்..வழிமொழிகிறேன்.//நன்றிங்க ஐயா..//அந்த ஐரோப்பாகாரர் மாதிரி நம்ம ஆளுக வேலைசெய்ற காலம் வர உங்க “ஆளை” நல்லா கும்பிடுங்க…//நிச்சயம் கும்பிட்டுக்குறேன்.. ஆமா.. என்னோட ஆளுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை..? ஏதாவது இருந்தா சொல்லுங்க.. நான் தீர்த்து வைக்குறேன்.. நான் சொல்ற இடத்துக்கு வந்தா போதும்.. பத்து நிமிஷத்துல பேசி முடிச்சு சமாதானமாயிடலாம்.. எனக்கு கமிஷன்லாம் வேண்டாம் சாமி..பின்குறிப்பு : பக்கத்துல பிளாக் அண்ட் ஒயிட் போட்டோல அசத்தலா ஒரு பெரிசு இருக்கே.. அது யாரு சாமி..?

 21. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //அறிவன்#11802717200764379909 said…நண்பர் உத(உதை இல்லை!), இந்த நிலை நாடுகளைப் பொறுத்தும் நமது செலவு செய்யும் திறனைப் பொறுத்தும் மாறுபடும். இந்தியாவில் மனிதவளம் நிறைய இருக்கிறது; ஓரளவு தாங்கக் கூடிய விலைக்கு இந்த விதமான சேவைகளும் கிடைக்கின்றன.இன்னொரு சூழலை யோசித்துப் பாருங்கள், இந்த சேவைக்கு நீங்கள் 3000-க்குப் பதிலாக 30000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் அப்போதும் இப்படித்தான் ஒட்டுனரின் கேள்விக்கு அதிர்ந்து கொண்டிருப்பீர்களா?அப்போது முதுகு வலித்தாலும் உங்கள் பொருள்களை நீங்களேதான் எடுத்துக் கொள்ள முடிவு செய்வீர்கள்.உண்மையில் இந்த வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காத சூழலையும், இந்த வேலைகள்\சேவைகள் நவீனப்படுத்தப்படுவதும் ஒருவகையில் நல்லது; அப்போது சேவையில் தரம் வரும். மேலும் அது அவசியம் தேவைப்படும்போதுதான் அவர்களை அணுகுவீர்கள்!//அறிவன் நான் சொல்ல வந்தது அவர்களுடைய சேவைகளையும், அதற்கான கூலியையும் பற்றியதல்ல..இது போன்ற வேலைக்கு வரும் வேலையாட்கள் ஏன் உருவாகிக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதற்கான காரணத்தைத் தேடும் கேள்விதான் அவர் கேட்ட கேள்வி.. யோசித்துப் பாருங்கள்..இது மாதிரி தொழில்கள் நிச்சயம் வரும்காலத்தில் மென்மேலும் நவீனப்படத்தான் போகிறது.. அது காலத்தின் கட்டாயம். தவிர்க்க முடியாது.. ஆனால் ஒரு பி.ஏ. படித்தவரோ, பி.பி.ஏ. படித்தவரோ, ப்ளஸ்டூவரை படித்தவரோ இந்த வேலைக்கு வந்து மூட்டைகளை தூக்கப் போகிறார்கள் என்று நான் நம்பவில்லை. அதற்குக் கீழாக படித்தவர்கள், ஆரம்பக் கல்வியுடன் தங்களது பள்ளிக் கல்வியை முடித்துக் கொண்டவர்கள்தான் எப்போதும் இந்த வேலைக்கு வர முடியும். வீட்டுக்குள் வந்து சாமான்களை அள்ளுவதற்கு மிஷினெல்லாம் வருவதற்கு சாத்தியமில்லை அறிவன் ஸார்.. அதுவும் நம்மூரில் முடியவே முடியாது.. எட்டுக்கு எட்டடி வீட்டில் எதை கொண்டு வந்து தூக்குவீர்கள்..? ஏஜென்ஸிகளை அணுகுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது பொருட்கள் உடையாமல், பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுதல் வேண்டும். இதை மட்டுமே நவீனப்படுத்தலாம். ஆனால் தூக்குபவர்கள் எப்போதும் இருக்கத்தான் வேண்டும். செய்வார்கள். வேறு வழியில்லை. அவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? அவர்கள் மட்டுமே ஏன் இந்தத் தொழிலுக்கு வருகிறார்கள்? ஏன் மற்றவர்களைப் போல தூக்க வைக்கும் தொழிலுக்கு அவர்களால் போக முடியவில்லை என்ற பரந்த சிந்தனையைத் தூண்டிவிட்டது அந்த டிரைவரின் கேள்வி.. பகிர்வுக்கு நன்றி அறிவன் ஸார்..

 22. ஆட்காட்டி Says:

  இது ஓவரு. நாங்க வீடு மாறினம். ஒரு வீடு 8ஆம் மாடி. அடுத்த வீடு 12ஆம் மாடி. நாங்க தானே மாத்தினோம். ஊரில தாத்தா சொல்லுவாரு கொழுப்பு எண்டு தானே?

 23. துளசி கோபால் Says:

  அடுத்தவன் காசுக்கு ஆசைப்படாம, உழைச்சுச் சாப்புடறாங்களே அதைப் பாராட்ட வேணாமா?செய்யும் தொழிலையும் அலட்சியப்படுத்தாம நீட்டாச் செஞ்சாங்க பாருங்க. அது நேர்மை.அருமையான பதிவு.

 24. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ஆட்காட்டி said…இது ஓவரு. நாங்க வீடு மாறினம். ஒரு வீடு 8ஆம் மாடி. அடுத்த வீடு 12ஆம் மாடி. நாங்கதானே மாத்தினோம்.//எத்தனை சாமான்கள் இருந்தன. வீட்டில் யார், யார் இருந்தீர்கள். அத்தனை பேரும் இளைஞர்கள்தானே.. வயதானவர்கள் இல்லையே.. தூக்கிக் கொண்டு எவ்ளோ தூரம் நடந்தீர்கள்? 15 கிலோ மீட்டர் இருக்குமா..? ஆட்காட்டி கொடுமை பண்ணாதீங்க சாமி..//ஊரில தாத்தா சொல்லுவாரு.. கொழுப்பு எண்டுதானே?//கொழுப்பா..? எங்களுக்கா..? இருக்கும்ல.. இருக்கும்..

 25. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //துளசி கோபால் said…அடுத்தவன் காசுக்கு ஆசைப்படாம, உழைச்சுச் சாப்புடறாங்களே அதைப் பாராட்ட வேணாமா?//நிச்சயமா பாராட்டணும் டீச்சர்..//செய்யும் தொழிலையும் அலட்சியப்படுத்தாம நீட்டா செஞ்சாங்க பாருங்க. அது நேர்மை.//ஆமாங்க டீச்சர்.. நிச்சயம் இது அவுகளோட நேர்மைதான்..//அருமையான பதிவு.//மூணு மாசம் கழிச்சு வந்துப்புட்டு நல்லாயிருக்கியா..? உசிரோடத்தான் இருக்கியான்னு ஒரு வார்த்தைகூட விசாரிக்காம ஏதோ கவர்ன்மெண்ட்டு ஆபீஸர் மாதிரி அடுக்கிக்கிட்டே போறீங்க.. இது உங்களுக்கே நியாயமா டீச்சர்..?

 26. ஜோ / Joe Says:

  இதுவரை உங்கள் பதிவுகளில் இது தான் மிக அருமையான பதிவு.

 27. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ஜோ / Joe said…இதுவரை உங்கள் பதிவுகளில் இதுதான் மிக அருமையான பதிவு.//நன்றி ஜோ..

 28. கிரி Says:

  உண்மை தமிழன் பதிவு பெரியதாக இருந்தாலும், படிக்கும் போது கொஞ்சம் கூட போர் அடிக்கவில்லை. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் நிஜமாகவே.இயல்பான உங்கள் எழுத்து நடை அட்டகாசம் போங்கள். வாழ்த்துக்கள்.

 29. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கிரி said…உண்மை தமிழன் பதிவு பெரியதாக இருந்தாலும், படிக்கும்போது கொஞ்சம்கூட போர் அடிக்கவில்லை. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.., நிஜமாகவே. இயல்பான உங்கள் எழுத்து நடை, அட்டகாசம் போங்கள். வாழ்த்துக்கள்.//நன்றி கிரி..

 30. ஆதித்தன் Says:

  உங்கள் பதிவு அருமை சதோதரரே!விளிம்புநிலையில் இருக்கும் நம் சகோதரர்களின் வாழ்க்கையை, மனதுக்கு உறைக்கும் வண்ணாம் சிறந்த முறையில் எடுத்துக்காட்டி விட்டீர்கள்.

 31. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ஆதித்தன் said…உங்கள் பதிவு அருமை சதோதரரே!விளிம்பு நிலையில் இருக்கும் நம் சகோதரர்களின் வாழ்க்கையை, மனதுக்கு உறைக்கும் வண்ணாம் சிறந்த முறையில் எடுத்துக்காட்டி விட்டீர்கள்.//நன்றி ஆதித்தன்.. அவர்களுடைய எண்ண ஓட்டத்தில் இருக்கின்ற நிம்மதிகூட படிததுப் பேர் வாங்கி, செல்வம் சம்பாதித்திருக்கும் உயர் வகுப்பினரிடம் கிடையாது.. இதுதான் இந்த அனுபவத்தில் நான் கற்றுக் கொண்டது..

 32. babu Says:

  மாமா, மச்சானைத்தான்

 33. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //babu said…மாமா, மச்சானைத்தான்..//அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போச்சு பாபு ஸார்..இப்ப கூடப் பொறந்த அண்ணன், தம்பியே வர மாட்டேங்குறாங்க.. மாமன், மச்சானா வரப் போறாங்க..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: