மறக்க முடியாத வி.பி.சிங்..!

28-11-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அது 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி. காலை தினசரிகளில் “வி.பி.சிங்கின் ஆட்சி இன்று கவிழுமா..?” என்ற தலைப்பிலேயே தலைப்புச் செய்திகள்.. “அடுத்த பிரதமராக மீண்டும் ராஜீவ்காந்தியா..? அல்லது சந்திரசேகரா..? அல்லது தேர்தல்தானா..?” என்றெல்லாம் யூகங்களையும் சொன்னது மீடியாக்கள்.

நான் அப்போது மதுரையில் எனது அண்ணன் வீட்டில் அழையாத விருந்தாளியாக, வெட்டி ஆபீஸராக இருந்தேன். காலை முதலே எனக்குள் ஒரே பரபப்பு. எனது அண்ணன் வி.பி.சிங் தோற்றுவிடுவார் என்று என்னிடம் பந்தயம் கட்டினார். எனக்கு ஒரு நப்பாசை. “இது போனால் அடுத்து தேர்தல் வரும்பட்சத்தில் எதிர்க்கட்சிகளின் ‘ராசி’ப்படி காங்கிரஸ்தான் ஆட்சியைப் பிடிக்கும். அதனால் எதையாவது செய்து வி.பி.சிங் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வார்” என்றேன் நான். “பார்க்கலாம்” என்றார் எனது அண்ணன்.

தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு என்பதால் துவங்குவதற்குள் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு கையில் முறுக்கு பாக்கெட், சொம்ப தண்ணீரோடு டிவி முன் அமர்ந்துவிட்டேன். தூர்தர்ஷனுக்குள் போவதற்கு முன்பாக வி.பி.சிங் பற்றி ஒரு அறிமுகம்.(பல்வேறு பத்திரிகைகளில் வந்த செய்திகளின் தொகுப்பு)

1931-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி அலகாபாத் நகரில் பிறந்த வி.பி.சிங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை உத்தரப்பிரதேசத்தில் இருந்த தையா சமஸ்தான மன்னர் ஆவார். அந்த மன்னருக்கு 2 மகன்கள். மூத்த மகன் சந்திரசேகர் பிரதாப்சிங். இரண்டாவது மகன்தான் வி.பி.சிங் என்றழைக்கப்பட்ட விஸ்வநாதன் பிரதாப்சிங்.

வி.பி.சிங்குக்கு 5 வயதானபோது மண்டா நகரின் மன்னர் ராவ்பகதூர் அவரை தனது வாரிசாகத் தத்தெடுத்துக் கொண்டார். டேராடூன் கர்னல் பிரவுன் பள்ளியில் படிப்பைத் தொடங்கிய வி.பி. சிங், பின்பு அலகாபாத்தில் உள்ள பாய்ஸ் உயர்நிலைப் பள்ளியிலும், புனே பெர்குஷன் கல்லூரியில் பி.எஸ்.சி,யும் படித்தார்.

அப்போது அணுசக்தி விஞ்ஞானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த வி.பி.சிங் கல்லூரியில் சிறந்த மாணவராகவும் தேர்ச்சி பெற்றார். 1950-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி பட்டப் படிப்பை முடித்த வி.பி. சிங் தீவிர அரசியலில் குதித்தார். வினோபாவேயின் பூமிதான இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர். தனது சொந்த நிலத்தையே அந்த இயக்கத்துக்கு தானமாகக் கொடுத்தார்.

1969-ம் ஆண்டு உ.பி. சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 1971-ல் முதல் முறையாக பாராளுமன்றத்துக்கு போட்டியிட்டு எம்.பி. ஆனார். 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி மந்திரி சபையில் துணை வர்த்தக மந்திரி ஆனார்.

பிறகு மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பி 1980-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில முதல் மந்திரியாகப் பணியாற்றினார். இந்தச் சமயத்தில்தான் உத்தரப்பிரதேசம் கொள்ளைக்காரர்களால் சூழப்பட்டிருந்தது. தடியெடுத்தவன் தண்டல்காரன் கதையாக மாநிலமெங்கும் கொள்ளைக் கும்பல்கள் நிரம்பி வழிந்தன. அவர்களை ஒடுக்குவதுதான் தனது முதல் பணி என்று அறிவிப்பு வெளியிட்டார். சில கொள்ளையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை ஜனநாயகப் பாதைக்குத் திருப்பினார். மிச்சம், மீதி இருப்போரையும் தான் நிச்சயம் மாற்றுவேன் அல்லது சிறை பிடிப்பேன் என்றார். ஆனால் இவரது துரதிருஷ்டம், இவரது சொந்த அண்ணனையே கொள்ளையர்கள் கொன்றுவிட தடுக்க முடியாமல் போய்விட்டதே என்று மனம் குமைந்த வி.பி.சிங் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகினார். (இந்த ஆட்சி விலகல் சம்பவம்தான் இவருடைய பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தின்போது பல பத்திரிகைகளில் “நேர்மையாளர், பண்பாளர்” என்ற பட்டம் சூட்ட முதல் காரணமாக இருந்தது)

1983-ல் மறுபடியும் இந்திராகாந்தியின் மத்திய மந்திரிசபையில் சேர்க்கப்பட்டு வர்த்தக மந்திரியாக நியமிக்கப்பட்டார். 1984-ம் ஆண்டு ராஜீவ்காந்தி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது நிதி மந்திரியாகப் பொறுப்பேற்றார் வி.பி.சிங். இங்கேதான் ஐயாவின் அனர்த்தம் துவங்கியது. பொதுவாகவே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மும்பை தொழிலதிபர்களின் லாபியின் தயவு அவர்களுக்குத் தேவை. இந்திராகாந்தி முதல்கொண்டு அனைவருமே அவர்களை அட்ஜஸ்ட் செய்துதான் போனார்கள். ஆனால் வி.பி.சிங் வந்தவுடன் தனது நிதி அமைச்சர் அதிகாரத்தைப் பயன்படுத்தி முதலில் அந்த லாபியை உடைத்தார்.

ஒரு புறம் நேர்மையான தொழிதிபர்கள் மறுபுறம் அரசியல்வாதிகளுக்கு எலும்புத் துண்டை வீசும் நேர்மையற்ற தொழிலதிபர்கள் என்று இந்திய வர்த்தகத்தையே இரு கூறாக்கினார். இந்திராவே மோதத் தயங்கிய திருபாய் அம்பானியிடமே தனது திருவிளையாடலைத் துவக்கினார். அம்பானி குழும அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினார். இதில்தான் முதலில் அவர் பிரபலமானார்.

இதாவது பரவாயில்லை. ராஜீவ்காந்தியின் மிக நெருங்கிய நண்பரான அமிதாப்பச்சனின் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தினார். அப்போதைக்கு ஆடித்தான் போனார் அமிதாப். யாராலேயும் நம்ப முடியவில்லை. எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது அந்தச் செய்தி. அந்தப் பதவி அவருக்கு நித்தியகண்டம்தான் என்பது அப்போதே தெரிந்தது.. அதற்கேற்றாற்போல் நிதி அமைச்சகத்திலிருந்து மாற்றப்பட்டு ராணுவ அமைச்சரானார். ஆனால் அங்கே ஒரு புயலே கிளம்பப் போகிறது என்பது ராஜீவ்காந்திக்குத் தெரியாமல் போனது அவருடைய துரதிருஷ்டம்.

1987 ஏப்ரல் 16ம் நாள் ஸ்வீடன் நாட்டின் வானொலியில் போபர்ஸ் பீரங்கி பேரத்தில் கமிஷன் பணம் கையாளப்பட்டதாகச் சொல்லி செய்தி வெளியானது. செய்தி வெளியானவுடனேயே இந்தியாவே பற்றிக் கொண்டது. இதுதான் சமயம் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கிக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு அவல் மெல்வது போல ராணுவ மந்திரியாக இருந்த வி.பி.சிங் அந்த ஊழலை விசாரிக்க கமிட்டி ஒன்றை நியமிப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்புதான் அவர் தேசியத் தலைவராக உருவெடுக்க முதல் படியாக அமைந்துவிட்டது. பிரதமரான தனக்கு தெரியாமல், தன்னிடம் கலந்தாலோசிக்காமல் இப்படி ஒரு கமிட்டியை அமைத்தது பற்றி ராஜீவ் கோபம் கொண்டார். இந்த மனக்கசப்பு வளர்ந்து தன் அமைச்சர் பதவியிலிருந்து விலகியதும் இல்லாமல் காங்கிரஸை விட்டே விலக நேர்ந்தது. கூடவே எம்.பி. பதவியிலிருந்தும் விலகினார்.

இனிதான் தீவிர அரசியல் என்று நினைத்தாரோ என்னவோ “ஜனமோர்ச்சா” என்ற கட்சியைத் தொடங்கினார் வி.பி.சிங். இந்த ஜனமோர்ச்சாவில் அவருக்குத் துணையாக நின்றவர்கள் ராஜீவ்காந்தியின் அத்தை மகன் அருண்நேருவும், ஆரீப் முகமது கானும். போகிற இடங்களிலெல்லாம் ராஜீவ்காந்தியை வெளுத்து வாங்கினார் சிங். போபர்ஸ் ஊழலில் ராஜீவ்காந்தி லஞ்சம் வாங்கியிருக்கிறார். தான் அதை எதிர்த்துக் கேட்டதால்தான் தன்னை அமைச்சரவையிலிருந்து நீக்கினார் என்று புகார் பாடினார். அவருடைய இந்தத் திடீர் புரட்சியால் கவரப்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து 1988-ல் வி.பி.சிங் ராஜினாமா செய்த அதே அலகாபாத் இடைத்தேர்தலில் போட்டியிட வைத்து ஜெயிக்க வைத்தனர். இவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றுப் போனவர் லால்பகதூர் சாஸ்திரியின் மகன் அனில்சாஸ்திரி.

அதன் பின் காங்கிரஸ¤க்கு எதிராக கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் முழு மூச்சுடன் வெற்றி கண்டார் வி.பி.சிங். ஜனதா கட்சி, ஜனமோர்ச்சா, தெலுங்கு தேசம், லோக்தளம், தி.மு.க. அசாம் கணபரிஷத், காங்கிரஸ்(எஸ்) ஆகிய 7 கட்சிகள் கொண்டு தேசிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி அதன் அமைப்பாளர் ஆனார். அப்போதைக்கு அவருக்கு முழு ஆதரவு கொடுத்து கை கொடுத்தவர் கலைஞர். போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் பற்றி ‘முரசொலி’ இதழில் செய்தி வராத நாளே கிடையாது. அதோடு வி.பி.சிங்கை அழைத்துக் கொண்டு ஊர், ஊராக பொதுக்கூட்டம் நடத்தி காங்கிரஸ¤க்கு எதிராக புயலைக் கிளப்பினார் கலைஞர்.

வி.பி.சிங் தனக்கும் ஒரு தனி அடையாளம் வேண்டும் என்பதற்காக ஜனதா, மக்கள் கட்சி, ஜனமோர்ச்சா, காங்கிரஸ்(எஸ்) ஆகிய 4 கட்சிகளை ஒன்றாக இணைத்து ஜனதா தளம் கட்சியைத் தொடங்கினார். இந்த ஜனதா தளம் கட்சியில்தான் எஸ்.ஆர்.பொம்மை, தேவேகவுடா, ராமகிருஷ்ணஹெக்டே ஆகியோர் ஒன்றாக இருந்தனர்.

இந்த நேரத்தில்தான் ராஜீவ்காந்தி போபர்ஸ் பிரச்சினையை திசை திருப்பும்விதமாக எதையாவது செய்து மக்களின் அபிமானத்தைப் பெறத் துடித்தார். அப்போது அவர் கண்ணில் சிக்கியது இலங்கை பிரச்சினை. எப்பாடுபட்டாவது ஒரு உடன்பாடு கண்டாவது தனது இழந்து போன இமேஜை தக்க வைக்க முடிவு செய்தார். பிடித்தார் ஒரு பிடி.. உடன் இருந்த ஆலோசகர்களின் அனைத்து ஆலோசனைகளுக்கும் தலை ஆட்டினார். அதன் விளைவையும் அவர் ஒருவரே அனுபவித்தார். போகட்டும்.

போபர்ஸ் புயலில் சிக்கி காங்கிரஸ் கவிழ, 1989-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி கூட்டணி வெற்றி பெற்றது. ஆனாலும் அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்காக எலியும், பூனையுமான பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவையும் சேர்த்துக் கொண்டு ஆட்சி அமைக்க முடிவு செய்தார்.

இவர் பிரதமராக வர நடத்திய ஒரு காமெடி நாடகமும் அன்றைக்கு அரங்கேறியது. 1989 டிசம்பர் 1, அன்று பாராளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டியிருந்தார்கள்.(இதையும் நான் தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்பில் பார்த்தேன்) பழைய ஜனதா கட்சியின் இளம் துருக்கியரான சந்திரசேகரும் வந்திருந்தார். பாவம் இளைத்துப் போய் டைபாய்டு காய்ச்சலில் அவதிப்பட்ட நிலையில் சால்வையை போர்த்திக் கொண்டு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார்.

கூட்டணி வெற்றி என்றவுடனேயே அவருக்குத் தான் பிரதமராக வேண்டும் என்கிற ஆசை. அவரைப் பார்க்க வந்த தேவிலாலிடம் தன்னை பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கும்படி கேட்டுக் கொண்டார். தனக்கே ஆதரவு கேட்டு வந்த தேவிலாலுக்கு புரையேறியது. வெளியில் குழப்பம் அதிகரித்துக் கொண்டே போக.. ஜனதா தளத்தின் சீனியர்கள் ஒரு குழப்படி செய்தார்கள். “சந்திரசேகர் வந்தால் உங்களை அமைச்சரவையில் சேர்க்க மாட்டார். அவர் நிறைய ஈகோ பார்ப்பார். வி.பி.சிங் என்றால் யாருக்குமே பிரச்சினையில்லை” என்று சொல்லி அவரை மூளைச் சலவை செய்துவிட்டார்கள்.

மண்டபத்தில் வி.பிசிங் “நான் பிரதமர் பதவிக்குப் .போட்டியிடவில்லை. எனக்கு ஆசையுமில்லை..” என்றார். சந்திரசேகர் அடுத்தது தனக்குத்தான் என்ற சந்தோஷத்தில் திளைத்ததை அவரது முகமே எடுத்துக் காட்டியது. அடுத்து தேவிலால் வந்தார். “வி.பி.சிங்தான் பிரதமர்.. இதில் யாருக்கும் ஆட்சேபணையில்லை.. அவரைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் தகுதியுள்ளவர்கள்..?” என்று பேச.. சந்திரசேகருக்கோ அதிர்ச்சி. பேச முடியவில்லை. முடிந்தது நாடகம்.

வீடு திரும்பிய சந்திரசேகர் அனைவரும் தன்னை நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டதாக பத்திரிகையாளர்களிடம் சொல்லி புலம்பினார். மந்திரிசபையில் சேர வரும்படி வி.பி.சிங் அழைத்தும் வர மறுத்துவிட்டார். (ஆனால் நேரம், காலம் பார்த்துக் காத்திருந்தார். பின்பு அதில் வெற்றியும் பெற்றார்.)

வி.பி.சிங் மறுநாள் டிசம்பர் 2-ம் தேதி இந்தியாவின் 10-வது பிரதமராகப் பதவியேற்றார். காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் இணைந்து மத்தியில் முதல் கூட்டணி அரசை அமைத்தவர் என்ற பெருமையும் வி.பி,சிங்குக்கு உண்டு.

பதவியேற்ற சில நாட்களிலேயே இவருக்கு வந்த சோதனை அப்போதைய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சையத்தின் மகள் மெகபூபை காஷ்மீர் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். சிறையில் இருக்கும் தங்களுடைய தீவிரவாத நண்பர்களை விடுவித்தால்தான் அவரை விடுவிப்போம் என்று நிபந்தனை விதித்தார்கள். என்னென்னமோ அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் தீவிரவாதிகள் தங்கள் நிலையில் உறுதியாக இருக்க.. வேறு வழியில்லாமல் அவர்கள் கேட்ட தீவிரவாதிகளை விடுவித்து உள்துறை அமைச்சரின் மகளை காப்பாற்றியது மத்திய அரசு. இந்த ஒரு செயலே மக்கள் வேறு.. மந்திரி வேறா.. என்ற வாதப் பிரதிவாதங்கள் எழ காரணமாக அமைந்தது. (இந்த மெகபூபா பிற்பாடு சென்னைவாழ் முஸ்லீம் ஒருவருக்குத் திருமணம் செய்விக்கப்பட்டு பின்பு விவாகரத்து பெற்று இப்போது முப்தி முகமது சையத்தின் கட்சித் தலைவராக காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் நடத்தி வருகிறார்.)

இலங்கையில் இருந்த அமைதி காப்புப் படையின் ‘திருவிளையாடல்கள்’ அனைத்தும் பிரதான கூட்டணிக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் மூலம் வி.பிசிங்கிற்கு போக, அமைதி காப்புப் படையை நாடு திரும்ப உத்தரவிட்டார் சிங். நமது ராணுவம் அமைதியை நிலை நாட்டப் போய் எக்கச்சக்கக் கெட்டப் பெயரோடு திரும்பி வந்தது இந்திய வரலாற்றில் ஒரு மறக்க முடியாத சோக நிகழ்ச்சியாகும்.

அமிர்தசரஸ் பொற்கோவிலில் ராணுவம் நுழைந்து பிந்தரன்வாலேயை சுட்டுக் கொன்ற நிகழ்ச்சிதான் இந்திராவின் படுகொலைக்கே ஒரு காரணமாக அமைந்துவிட்டது. இதற்காக அப்போதைய உள்துறை அமைச்சர் பூட்டாசிங்கும், ஜனாதிபதி ஜெயில்சிங்கும் தனித்தனியே மன்னிப்பு கேட்டு பொற்கோவிலில் செருப்பு துடைத்தும் தங்களது மன்னிப்பை பெற்றுக் கொண்டார்கள். பிரதமர் என்ற பொறுப்பில் தானும் தனியே மன்னிப்பு கேட்டு பெருந்தன்மையை மேற்கொண்டார் வி.பி.சிங்.

சரியாக 11 மாதங்களே ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இந்தக் காலக்கட்டத்தில் அவர் செய்த இரண்டு செயல்கள்தான் இன்றைக்கு வரைக்கும் தமிழகத் தலைவர்களும், மக்களும் அவரை மறக்க முடியாத அளவுக்கு வைத்திருக்கிறது.

பல்லாண்டுகளாக பிரச்சினையில் இருந்த காவிரி நதி நீர்ப் பிரச்சினைக்காக நடுவர் மன்றத்தை அமைத்தார் வி.பி.சிங்.

இரண்டாவதாக மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று பிற்பட்டோர்களுக்கான இட ஒதுக்கிட்டை அமல்படுத்தினார். இந்த அறிவிப்பு வந்த பின்புதான் மண்டல் கமிஷன் என்றால் என்ன என்பதெல்லாம் என்னைப் போன்ற அப்பிராணிகளுக்குத் தெரிந்தது. அந்த அளவுக்கு அந்த கமிஷனும், கமிஷன் அறிக்கையும் வெளிப்படுத்தாமல் கிடந்தன.

அந்தச் சமயத்தில் வடநாட்டில் தினமும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. டில்லி பல்கலைக்கழகத்தில் சில மாணவர்கள் தீக்குளித்து இறந்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிறிய சலசலப்புகூட எழவில்லை. இதன் பின்புதான் சமூக நீதிக் காவலரானார் வி.பி.சிங்.

இப்போதும் அம்பானியை விடவில்லை வி.பி.சிங். எல்.அண்ட் டி. நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிற்கு திருபாய்அம்பானி முயற்சி செய்த போது அதனைப் பலவித மோதல்கள், வேலைகள் செய்து தடுத்து நிறுத்தி அம்பானியை அந்நிறுவனத்தைவிட்டு வெளியேற்றிய பெருமை இவரையே சேரும்.

எந்த ஒரு மனிதருக்கும் புனிதர் பட்டம் தர முடியாத சூழல் உருவாகும் என்பது உலக நியதி. இவருக்கும் உண்டானது. இந்த முறை இவருடைய அண்ணன் மகளின் கணவர் அபயசிங்கோ, அஜயசிங்கோ.. இவரும் ராஜ பரம்பரைதான்.. காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இந்தியாவின் பிரபலமான பாட்மிண்டன் வீரர் ஒருவரின் கொலை வழக்கில் சிக்கினார். அந்த வீரரின் மனைவிக்கும் அஜயசிங்கிற்கும் நெருங்கிய உறவு இருந்ததாகவும், அதனாலேயே இந்தக் கொலை நடந்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. இந்த வழக்கு பின்பு சி.பி.ஐ. வசமும் சென்றது. என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆனால் பின்னாளில் கொல்லப்பட்ட வீரரின் மனைவியை அஜயசிங் திருமணம் செய்து கொண்டது மட்டும் நடந்தது. இந்த வழக்கில் அஜயசிங்கிற்கு சாதகமாக அரசுத் தரப்பு நடந்து கொள்வதாக வி.பி.சிங்கை சம்பந்தப்படுத்தி செய்திகள் புறப்பட்டன. இது ஒன்றுதான் எனக்குத் தெரிந்து அவர் சம்பந்தப்பட்டு எழுந்த சலசலப்பு.

தமிழ்நாட்டில் கலைஞர் 89-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற போது நேரில் வந்திருந்து கலைஞரை பாராட்டிவிட்டுப் போனார். கலைஞருக்கும், இவருக்குமான நட்பு ஆட்சி மாறினாலும், அணிகள் மாறினாலும் மாறாமல்தான் இருந்தது. கலைஞர் தில்லி செல்லும்போதெல்லாம் வி.பி.,சிங்கை சென்று பார்த்துவிட்டுத்தான் வருவார்.

கலைஞருக்காக வந்த விமர்சனங்களைக்கூட தாங்கிக் கொண்டார் வி.பி.சிங். சென்னையில் புதிதாக அமைக்கப்பட்ட பன்னாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரையும், உள்நாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டுவதுதான் முறை என்றாலும், அதனை அப்படியே உல்டா செய்து பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பெயரையும், உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரையும் வைக்க பேருதவிகள் செய்தார். இது அப்போதே பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஆனாலும் காங்கிரஸ்காரர்கள் கேட்ட கேள்விகளையெல்லாம் கலைஞர் தனது சாதுர்யத்தால் சமாளித்துவிட்டார்.

பொதுவாக நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது இவருடைய ஆட்சி. யார் கண் பட்டதோ தெரியவில்லை. திரு.லால்கிஷன் அத்வானியால் அனர்த்தம் துவங்கியது. இராமஜென்ம பூமியை மையாக வைத்து, இந்துத்துவாவை இந்திய வாக்காளர்களிடம் திணித்துத்தான் பாரதீய ஜனதா வெற்றி பெற்றிருந்தது. இன்னும் அடுத்த ஸ்டெப்பிற்கு போக நினைத்த அத்வானி சோம்நாத்தில் இருந்து அயோத்திக்கு ரத யாத்திரை செல்வதாக அறிவித்து தனது வேலையை ஆரம்பித்தார்.

இந்த ரத யாத்திரைக்கு எந்த இடைஞ்சலும் தரக்கூடாது என்று முன்பேயே வி.பிசிங்கிடம் கேட்டுக் கொண்டார். வி.பி.சிங் போக வேண்டாம் என்று மறுத்தும் தனது அரசியல் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு அயோத்திக்கு வீர நடை நடந்தார் அத்வானி. அப்போது நமது லாலூஜி பீகாரின் முதல்வர். ஆனால் ஜனதா தளத்தின் சார்பாக ஆட்சியில் இருந்தார். அயோத்தியில் இன்றைய நிலைமையில் அத்வானி உள்ளே நுழைந்தாரெனில் எரிமலைதான் வெடிக்கும் என்பதை உணர்ந்திருந்தார் லாலூ. ஆனால் தன்னைத் தடுத்தால் பூகம்பமே வெடிக்கும் என்று சொல்லியிருந்தார் அத்வானி. அதையும்தான் பார்த்துவிடுவோமே என்றெண்ணி லாலூஜி திருமிகு அத்வானியை கைது செய்வதாகச் சொல்லி ரத யாத்திரையை தடை செய்ய.. அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே வி.பி.சிங் தலைமையிலான ஆட்சிக்கு தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டது பாரதீய ஜனதா.

இப்போது விட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன்.

தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்த நிலையில் நிச்சயம் நமக்குப் புரியாது என்றாலும் எப்படித்தான் பேசுகிறார்கள் என்பதை பார்ப்போமே என்ற ஆசையில் பார்க்கத் துவங்கினேன்.. அப்போதே எனது உடல் லேசாக ஆடவும் தொடங்கியது. நான் சரியாகக் கணிக்கவில்லை எது என்னவென்று..? ஓட்டெடுப்புக்கான நேரம் நெருங்க, நெருங்க எனது உடலும் ஜிவ்வென்றானது. போர்வையை போர்த்திக் கொண்டு அமர வேண்டியதாக இருந்தது.

நள்ளிரவு கடந்த பின்புதான் ஓட்டெடுப்பு நடந்தது.. காங்கிரஸ், பாரதீய ஜனதா கூட்டணி என்று 316 பேர் நம்பிக்கை கோரும் மசோதாவை எதிர்த்தும், தேசிய முன்னணியினர் 142 பேர் நம்பிக்கை கோரும் மசோதாவிற்கு ஆதரவளித்தும் ஓட்டளிக்க வி.பி.சிங் தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்தது. இங்கே என்னால் உட்காரவும், முடியவில்லை.. படுக்கவும் முடியவில்லை. அப்படியொரு அவஸ்தைக்கு உள்ளானேன்.. என்னவென்றே தெரியாமல் டிவியை ஆ•ப் செய்துவிட்டு அடுத்து ஆட்சிக்கு வரப் போவது யார்? சந்திரசேகரா? ராஜீவ்காந்தியா..? என்றெல்லாம் எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டு விடிய விடிய தூங்காமல் முழித்துக் கொண்டிருந்தேன்.

விடிந்தது. அக்கா காபி போட்டுக் கொடுக்க ஒரு சிப் அருந்தியிருப்பேன். அப்படியே வாந்தி. அடுத்து சுடு தண்ணீர் போட்டுக் கொடுத்தார்கள் அக்கா. அதுவும் வாந்தி. நீராகாரம் வந்தது. அதுவும் வாந்தி.. இப்படி எதுவெடுத்தாலும் குமட்டிக் கொண்டு வர.. அண்ணனும், அக்காவும் கவலைப்பட்டார்கள். “உன்னை யார் ராத்திரி முழுக்க டிவி பார்க்கச் சொன்னது..?” என்றார்கள். அப்போதும் நான் கேட்ட கேள்வி, “அடுத்த பிரதமர் யாருண்ணே..? சந்திரசேகரா? ராஜீவ்காந்தியா..” என்று.. (அன்றைக்கு அவ்வளவு அரசியல் வெறி)

என் அண்ணன் தலையில் அடித்துக் கொண்டு பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போனார். ரத்த ஓட்டத்தை சோதனை செய்தார்கள். இருக்க வேண்டிய அளவை விட மிக, மிக குறைவாக இருந்ததாம். “பெட்டில்தான் சேர்க்க வேண்டும். வேறு வழியில்லை” என்றார் மருத்துவர். அண்ணன் உதட்டைப் பிதுக்கி, என்னை கோபப் பார்வை பார்த்துவிட்டு “சரி” என்றார்..

படுத்தேன்.. குளுகோஸ் ஏற்றினார்கள்.. 8 பாட்டில்கள்.. “ராத்திரி முழுக்கத் தூக்கம் இல்லை” என்றேன்.. ஒரு ஊசி போட்டார்கள். சும்மா சுகமாகத் தூங்கினேன்.. மறுநாள் மதியம்தான் கண் விழித்தேன். இப்போதும் எனது அக்காவிடம் “சந்திரசேகரா? ராஜீவ்காந்தியா?” என்றேன்.. “செருப்பால அடிப்பேன்.. கம்முன்னு கிடடா..” என்றார். “வி.பி.சிங், சந்திரசேகர், ராஜீவ்காந்தி..” என்று முணுமுணுத்தபடியே ஊசி போட வந்த நர்ஸ்களிடம் இதே கேள்வியைக் கேட்டு அளப்பறை செய்ததை என்னால் மறக்க முடியவில்லை.

அன்றைக்குத்தான் முதல் முறையாக நினைவு தெரிந்து மருத்துவமனை பெட்டில் இருந்தேன் என்று நினைக்கிறேன். தொடர்ந்து 4 நாட்கள் சேர்ந்தாற்போல் இருந்துவிட்டு ஹாயாக வீடு திரும்பினேன்.. வீட்டில் இருந்த பத்திரிகைகள் ‘சந்திரசேகர் பிரதமர்’ என்று சொன்னது.. சுப்பிரமணியசாமியின் திருவிளையாடலால்தான் இவர் பிரதமரானார் என்று நான் வீட்டில் சொல்ல, அக்காவோ “பாவி.. பாவி.. எவன் வந்தா நமக்கென்ன? போனா நமக்கென்ன? 2000 ரூபா போச்சு..?” என்று என்னைத் திட்டிக் கொண்டிருந்தது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.

அண்ணன் விஸ்வநாதன் பிரதாப் சிங்கை இந்த ஒரு காரணத்திற்காகவே என்னால் மறக்கவே முடியாது. ஆஸ்பத்திரி வாழ்க்கை, குளுகோஸ் ஏற்றுதல், நர்ஸ்களின் ஊசி ஏற்ற நரம்பு தேடி நம்மையே பயிற்சி உடலாக்குதல்.. நேரத்தைக் கணித்து காசு பார்த்துவிட்டு நம்மை வெளியே அனுப்பும் ஆஸ்பத்திரிகளின் தில்லுமுல்லு என்று சகலத்தையும் அறிந்து கொண்டேன். இது பற்றித் தனிப் பதிவே போடலாம்..

இப்போது மீண்டும் வி.பி.சிங்கிற்கு வருவோம்.

வி.பி.சிங்கிற்கு பிறகு சந்திரசேகர் தனது நீண்ட நாள் கனவான பிரதமர் பதவியை ராஜீவ்காந்தியின் துணையோடு கைப்பற்றினார். இதுவும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. தேன்நிலவு ஆறே மாதங்கள்தான். அரியானா மாநில கான்ஸ்டபிள்கள் இரண்டு பேர் ஜன்பத் சாலையில் குச்சி மிட்டாய் சாப்பிடப் போய் அது பிரச்சினையாகி சந்திரசேகர் தன்மானச் சிங்கமாகி “உன் ஆதரவும் வேணாம்.. நீயும் வேணாம்.. இந்தா பிடிய்யா..” என்று சொல்லி ராஜினாமா கடிதத்தை நீட்ட தேர்தல் வந்தது.

தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் துன்பியல் சம்பவத்திற்கு உள்ளாக்க.. அதன் பலனாக எதிர்க்கட்சிகளை துவைத்துக் காயப்போட்ட செல்வாக்கில் காங்கிரஸ் அரியணை ஏற அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அசைக்க முடியாது என்ற நிலையில் எதிர்க்கட்சி கூட்டணி கலகலத்துப் போனது.

மறுபடியும் காட்சிகள் மாறி கோலங்களும் மாறின. 1996-ம் ஆண்டு எதிர்க்கட்சி கூட்டணியான ஐக்கிய முன்னணியின் ஆட்சி அமைய வி.பி.சிங் முக்கிய பங்காற்றினார். அப்போது அவரையே மீண்டும் பிரதமர் பதவியை ஏற்கும்படி கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கேட்டுக் கொண்டனர். ஆனால் தனக்குப் பதவி ஆசையில்லை. ஏற்கெனவே ஒரு முறை இருந்துவிட்டேனே.. என்றெல்லாம் சல்ஜாப்பி சொல்லி மறுத்தார். தலைவர்கள் அவரைப் பார்த்து இரண்டில் ஒன்றை பார்த்துவிடுவது என்று சொல்லி அவரது வீட்டிற்கு வர.. அவர்கள் வருவதை தெரிந்து கொண்டு வீட்டின் பின்புற வாசல் வழியே எஸ்கேப்பானார் வி.பி.சிங். இதன் பின்புதான் தேவேகவுடா பிரதமரானார். அந்த வகையில் தேவேகவுடாவும் குஜ்ராலும் வி.பி.சிங்கிற்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும்.

இந்த நேரத்தில்தான் அவருக்கு சிறுநீரகக் கோளாறும், ரத்தப் புற்று நோயும் தோன்றின. வாரத்திற்கு மூன்று முறை டயாலிஸஸ் செய்ய வேண்டிய நிலைமையிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கட்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டார். குஜ்ரால் அமைச்சரவை வரையிலும் இவரும் லைம்லைட்டில்தான் இருந்தார். வாஜ்பாய் அரசு அமைந்த பின்பு கலைஞரும் அவருக்கு ஆதரவளித்து ஆட்சியை ஸ்திரப்படுத்தி, எதிர்க்கட்சிகளை சின்னாபின்னமாக்கிய பின்பு, தனது உடல் நலனை முன்னிட்டு தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கினார்.

சமீப காலமாக சற்று உடல் நலம் தேறிய நிலையில் ‘ஜன்மோர்ச்சா’ கட்சியை மீண்டும் தோற்றுவித்தார். இக்கட்சிக்கு நடிகர் ராஜ்பாப்பரை தலைவராகவும் நியமித்தார். அதுவும் கொஞ்ச நாட்கள் ஓடியது. குடிசை வாழ் மக்களுக்காக போராடத் துவங்கினார். உண்ணாவிரதப் போராட்டமெல்லாம் நடத்தினார். உ.பி.யில் மாயாவதி ஆட்சி அமைத்த பின்பு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த விஷயத்தில் நேரடியாகக் களத்தில் இறங்கி போராடி கைதானார். இதுதான் அவர் கடைசியாக செய்த போராட்டம் என்று நினைக்கிறேன். கடைசிக் காலக்கட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ராஜ்பாப்பரும் கட்சியில் இருந்து கழண்டு கொள்ள தனது மகனையே கட்சித் தலைவராக்க எண்ணியிருந்தாராம். அதற்கான செயல்பாடுகளில் முனைந்திருந்தபோது நோய் கடுமையாகத் தாக்கிவிட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வி.பி.சிங்.

2 மாத போராட்டத்திற்குப் பிறகு நோயின் பிடியிலிருந்து விடுதலையாகியுள்ளார் வி.பி.சிங். எத்தனையோ பிரதமர்களைப் பார்த்துவிட்ட இந்தியாவிற்கு இப்படியும் ஒரு பிரதமர் என்ற வரிசையில் மொரார்ஜி தேசாய்க்கு பிறகு பொருத்தமானவராக இருந்தவர் வி.பிசிங் மட்டுமே.. இந்த ஒரு பெயரே அவருக்குப் போதும் என்று நினைக்கிறேன்.

அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.

20 பதில்கள் to “மறக்க முடியாத வி.பி.சிங்..!”

 1. benzaloy Says:

  அட, இவ்வளவு உண்மைகளை கொண்டுளதா ''உண்மைத்தமிழன்''?

  என்னைப் படைத்தவனை திட்டுகின்றேன் ''ஏனடா என்னை பிந்தி படைத்தாய்''

  [ஆமா அண்ணா >>> கடவுள் ஆண் வர்க்கம் தானே?]

  Beautiful, you cleared a lot of doubts of V P. Singh, yet one remains with me: Is the name ''Singh''
  rightfully belongs to Sheik North Indian? And does NOT belong to a Tamil of South India.

  தங்களது எழுத்துக்களை ஆர்வமாக வாசிக்க முயல்வேன் … அறிவு கள்ளஞ்சியமையா உங்களது Blog site.

 2. Kasilingam Says:

  Good post. Thanks U.T.

 3. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //benzaloy said…
  அட, இவ்வளவு உண்மைகளை கொண்டுளதா ''உண்மைத்தமிழன்''?
  என்னைப் படைத்தவனை திட்டுகின்றேன் ''ஏனடா என்னை பிந்தி படைத்தாய்''
  [ஆமா அண்ணா >>> கடவுள் ஆண் வர்க்கம்தானே?]
  Beautiful, you cleared a lot of doubts of V P. Singh, yet one remains with me: Is the name ''Singh'' rightfully belongs to Sheik North Indian? And does NOT belong to a Tamil of South India.
  தங்களது எழுத்துக்களை ஆர்வமாக வாசிக்க முயல்வேன் … அறிவு கள்ளஞ்சியமையா உங்களது Blog site.//

  நான் எழுதியது கொஞ்சம்தான்.. இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம். ஆனால் நேரமில்லாமல் போய்விட்டது. சுருக்கிவிட்டேன்.

  வருகைக்கு நன்றி..

 4. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Kasilingam said…
  Good post. Thanks U.T.//

  காசி ஸார்.. எங்களையெல்லாம் ஞாபகத்துல இருக்கா..?

  வழக்கம்போல அப்பன் முருகனின் வேலையால் தமிழ்மணத்தில் ஏற மறுக்கிறது.. கருவிப்பட்டை வேலை செய்யவில்லை.. என்ன செய்யலாம்?

 5. முகமது பாருக் Says:

  தோழரே

  அனைத்தும் நெகிழ்ச்சியாக இருந்தது..

  //வி.பி.சிங் மறுநாள் டிசம்பர் 2-ம் தேதி இந்தியாவின் 7-வது பிரதமராகப் பதவியேற்றார்.//

  *சின்ன செய்தி வி.பி.சிங் நமது நாட்டின் பத்தாவது பிரதமர்.

  http://en.wikipedia.org/wiki/Prime_Minister_of_India

  என்றும் தோழமையுடன்

  முகமது பாருக்

 6. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //முகமது பாருக் said…
  தோழரே, அனைத்தும் நெகிழ்ச்சியாக இருந்தது..
  //வி.பி.சிங் மறுநாள் டிசம்பர் 2-ம் தேதி இந்தியாவின் 7-வது பிரதமராகப் பதவியேற்றார்.//
  சின்ன செய்தி வி.பி.சிங் நமது நாட்டின் பத்தாவது பிரதமர்.
  http://en.wikipedia.org/wiki/Prime_Minister_of_India
  என்றும் தோழமையுடன்
  முகமது பாருக்//

  திருத்திவிட்டேன் ஸார்.. குல்சாரிலால் நந்தாவைக் கணக்கில் எடுக்காமல் நானே எழுதினேன். அதிலேயும் ஒரு சிறிய தவறு நடந்து விட்டது..

  வருகைக்கு, சுட்டிக் காட்டியமைக்கும் நன்றிகள்..

 7. Anonymous Says:

  வி பி சிங் போன்ற மாமனிதரின் மறைவுக்கு வருத்த பட நேரமிலாமல் மும்பை திவிரவாத தாக்குதலில் முழ்கிபோனது இந்தியா.ராஜீவ்காந்தி மட்டும் கொலையுராவிட்டால் கண்டிப்பாய் மறுமுறை பிரதமர் ஆகிஇருப்பார் இந்த்யாவின் துரதிஷ்டம் அது நடக்காமலே போய்விட்டது பிற்படுத்தபட்டோர் நலனுக்காக அவர் கொண்டுவந்த மண்டல் கமிசன் அமுல் படுத்தாமலே போனது;சந்திரசேகர் ,அத்வானி தேவிலால் போன்ற சுயநல பதவி பெயர்களால் ஆட்சியை பறிகொடுத்தவர்.
  அவர் ஆட்சி கவிழ்ந்த பொது சுரத்தில் விழந்தவர்களில் நானும் ஒருவன்.ஒரு நல்ல தலைவரின் மறைவுக்கு ஏன் கண்ணீர் அஞ்சலி

 8. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…
  வி.பி.சிங் போன்ற மாமனிதரின் மறைவுக்கு வருத்த பட நேரமிலாமல் மும்பை திவிரவாத தாக்குதலில் முழ்கி போனது இந்தியா. ராஜீவ்காந்தி மட்டும் கொலையுராவிட்டால் கண்டிப்பாய் மறுமுறை பிரதமர் ஆகி இருப்பார். இந்த்யாவின் துரதிஷ்டம் அது நடக்காமலே போய்விட்டது. பிற்படுத்தபட்டோர் நலனுக்காக அவர் கொண்டுவந்த மண்டல் கமிசன் அமுல்படுத்தாமலே போனது; சந்திரசேகர், அத்வானி, தேவிலால் போன்ற சுயநல பதவி பெயர்களால் ஆட்சியை பறிகொடுத்தவர்.
  அவர் ஆட்சி கவிழ்ந்த பொது சுரத்தில் விழந்தவர்களில் நானும் ஒருவன். ஒரு நல்ல தலைவரின் மறைவுக்கு ஏன் கண்ணீர் அஞ்சலி.//

  அனானியாரே.. வருகைக்கு நன்றி..

  தட்டச்சில் அதிகப் பரிச்சயம் இல்லாவிட்டாலும் இது போன்ற 7 வரிகளில் பின்னூட்டம் போ்ட்டாலும் கடைசி முறையாக ஒரு முறை படித்துப் பார்ப்பது நலம். சில எழுத்துப் பிழைகளால் பின்னூட்டத்தின் அர்த்தமே மாறிவிடும் சூழல் உண்டாகிவிடும். தமிழ் மொழியின் சக்தி அப்படி..?

  உதாரணம் “ஒரு நல்ல தலைவரின் மறைவுக்கு ஏன் கண்ணீர் அஞ்சலி” என்ற வரிகள்..

  முழுவதையும் படிப்பவர்களுக்கு அர்த்தம் புரியும். இதனை மட்டும் படித்தவர்களுக்கு அர்த்தம் தவறாகத்தான் படும்..

  வாழ்க வளமுடன்

 9. Arun Kumar Says:

  2005 ஆண்டில் சென்னை விமான நிலையத்தில் என் வேலை காரணமாக secured bayல் இருந்த போது அவரை மிக நெருக்க மாகவே பார்த்தேன்.சென்னைக்கு எந்த காரணமாகவோ அவர் வந்தார். டி ஆர் பாலு தயாநிதி மாறன் போன்றவர்கள் அவரை வரவேற்று அழைத்து சென்றார்கள்.

  பொதுவாக அந்த இடத்தில் ஜனாதிபதி பிரதமர் ,மத்திய காபினேட் மந்திரிகள் தவிரை அனைவரும் frisking சொதனைக்கு பிறகே செல்ல வேண்டும். ஆனால் விஜபி என்றால் அந்த சோதனை கிடையாது.,இருந்தாலும் தன்னை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தும் படி விபிசிங் அவர்கள் தாமகவே பாதுகாப்பு படையினரிடம் கேட்டு கொண்டார். இதை போல பந்தா இல்லாத விஜபிகளை பார்பது அரிது.

  அப்போதய நாட்களில் திமுக + அதிமுக எம்பிகள் என்னை frisking செய்ய கூடாது என்று ஒவ்வோரு முறையும் சண்டை போட்டு கொண்டு தான் இருப்பார்கள்.

  நல்ல மனிதர்.,

 10. benzaloy Says:

  தீர விசாரி >>> வாசிபதெல்லாம் உண்மையாகாது >>> ''உண்மைத்தமிழன்'' எழுதிய இந்த வசனத்தை பார்த்தும் எனது முனைய சற்று மாறியது >>>

  ''இலங்கையில் இருந்த அமைதி காப்புப் படையின் ‘திருவிளையாடல்கள்’ >>> அமைதி காப்புப் படையை நாடு திரும்ப உத்தரவிட்டார் சிங்'' >>>

  எமது எண்ணம் இலங்கை பிரதமர் பிரேமதாசா [புலிக்கு இவரும் பலி] வினது உத்தரவின் அடிப்படையிலேயே இந்திய போர் படை நாடு திரும்ப்பியதென்று >>>.

  ''அக்கா காபி போட்டுக் கொடுக்க …
  அக்காவோ “பாவி.. பாவி.. எவன் வந்தா நமக்கென்ன? போனா நமக்கென்ன? என்று என்னைத் திட்டிக் கொண்டிருந்தது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது''

  இந்த வசனம் என்னை உலுப்பி எடுத்து >>> நானும் ஒரு ''அக்கா'' பக்தன் [அவரும்
  இந்திய படைக்கு பலி] >>>

  இந்த வசனம் இன்னமும் குழப்பிக்கொண்டே இருக்கின்றது > ''அண்ணன் விஸ்வநாதன் பிரதாப் சிங்கை'' >>>

  பிரதாப் சிங் உங்களது அண்ணனா? அல்லது ஒரு பேச்சுக்கு அண்ணன் என்று
  சொன்னிர்களா?

  தயை செய்து இக் கடைசி வசனத்தின் விளக்கத்தை தாருங்கள் >>> நன்றி
  .

 11. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Arun Kumar said…
  2005 ஆண்டில் சென்னை விமான நிலையத்தில் என் வேலை காரணமாக secured bayல் இருந்த போது அவரை மிக நெருக்க மாகவே பார்த்தேன்.சென்னைக்கு எந்த காரணமாகவோ அவர் வந்தார். டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் போன்றவர்கள் அவரை வரவேற்று அழைத்து சென்றார்கள்.
  பொதுவாக அந்த இடத்தில் ஜனாதிபதி பிரதமர், மத்திய காபினேட் மந்திரிகள் தவிரை அனைவரும் frisking சொதனைக்கு பிறகே செல்ல வேண்டும். ஆனால் விஜபி என்றால் அந்த சோதனை கிடையாது., இருந்தாலும் தன்னை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தும் படி வி.பி.சிங் அவர்கள் தாமகவே பாதுகாப்பு படையினரிடம் கேட்டு கொண்டார். இதை போல பந்தா இல்லாத விஜபிகளை பார்பது அரிது.//

  நூற்றுக்கு நூறு உண்மை தம்பி.. அதனால்தான் இப்படி ஒரு பிரதமர் என்கிற லிஸ்ட்டில் இவரும் இருக்கிறார் என்று சொல்லியுள்ளேன்..

  //அப்போதய நாட்களில் திமுக + அதிமுக எம்பிகள் என்னை frisking செய்ய கூடாது என்று ஒவ்வோரு முறையும் சண்டை போட்டு கொண்டுதான் இருப்பார்கள்.//

  பின்ன.. தொகுதியின் அரசர்களாச்சே.. அப்படித்தான் செய்வார்கள்.. நம்மூரில்தான் அரசியல்வாதிகளுக்கும், ஆண்டவனுக்கும் வித்தியாசம் கிடையாதே என்கிறார்களே..

  நல்ல மனிதர்.,

 12. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //benzaloy said…
  தீர விசாரி >>> வாசிபதெல்லாம் உண்மையாகாது >>> ''உண்மைத்தமிழன்'' எழுதிய இந்த வசனத்தை பார்த்தும் எனது முனைய சற்று மாறியது >>>
  ''இலங்கையில் இருந்த அமைதி காப்புப் படையின் ‘திருவிளையாடல்கள்’ >>> அமைதி காப்புப் படையை நாடு திரும்ப உத்தரவிட்டார் சிங்'' >>>
  எமது எண்ணம் இலங்கை பிரதமர் பிரேமதாசா[புலிக்கு இவரும் பலி]வினது உத்தரவின் அடிப்படையிலேயே இந்திய போர் படை நாடு திரும்ப்பியதென்று >>>.//

  அதுவும் ஒரு காரணம்.. இல்லை என்று மறுக்க முடியாது.. ஆனால் பட்டது போதும்.. திரும்பி வரச் சொல்லுங்கள் என்று முடிவெடுத்தது வி.பி.சிங்தான். அவர் நினைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் நாட்கள் இழுத்திரு்க்கலாம். பட்டது போதும் என்று நினைத்துவிட்டார்.

  //அக்கா காபி போட்டுக் கொடுக்க …
  அக்காவோ “பாவி.. பாவி.. எவன் வந்தா நமக்கென்ன? போனா நமக்கென்ன? என்று என்னைத் திட்டிக் கொண்டிருந்தது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது''
  இந்த வசனம் என்னை உலுப்பி எடுத்து >>> நானும் ஒரு ''அக்கா'' பக்தன் [அவரும் இந்திய படைக்கு பலி]//

  ஸோ ஸாரி ஸார்.. என் வருத்தங்களை சமர்ப்பிக்கிறேன்.. இந்த அக்காவும் இப்போது உயிருடன் இல்லை..

  //இந்த வசனம் இன்னமும் குழப்பிக்கொண்டே இருக்கின்றது > ''அண்ணன் விஸ்வநாதன் பிரதாப் சிங்கை''>>>//
  பிரதாப் சிங் உங்களது அண்ணனா? அல்லது ஒரு பேச்சுக்கு அண்ணன் என்று சொன்னிர்களா?
  தயை செய்து இக்கடைசி வசனத்தின் விளக்கத்தை தாருங்கள். நன்றி//

  ச்சும்மா.. ஒரு எதுகை, மோனைக்காகப் பயன்படுத்திய வார்த்தை அது… கொஞ்சம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளத்தான். அப்போதுதான் ஒரு ஒட்டுதலுடன் எழுத முடியும்..

  உங்களுடைய ஆர்வம் என்னை பெரிதும் கவர்கிறது ஸார்.. நன்றி..

 13. ஆட்காட்டி Says:

  வித்தியாசமா இருக்கு.

 14. ராவணன் Says:

  தம்பி சரவணா,

  1989-ல் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் நடந்த ஜனதா தள எம்.பிக்கள் கூட்டத்தில் தேவிலாலைத் தான் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள்.
  அதன் பின்னர் தேவிலால்தான் வி.பி சிங்கை பிரதமராக இருக்கும்படி கூறினார்.இது,சந்திரசேகர் வராதிருக்க வி.பி.சிங் நடத்திய நாடகம்.அதற்கு தேவிலாலும் உடந்தை.இதைத் தான் தன்னை நம்பவைத்து மோசம் செய்துவிட்டார்கள் என்று மீடியாக்களிடம் சந்திரசேகர் புலம்பியது.

  வி.பி.சிங் பிரதமராக இருந்த போதுதான் தேவிலால் துணைப் பிரதமராக இருந்தார்.(சந்திரசேகர் காலத்தில் இல்லை).

  அந்த நேரத்தில் வந்த அனைத்து செய்திகளிலும் இதைக் காணலாம்.

  இதே தேவிலால்,தான் பதவி ஏற்ற கையோடு நமது கனிமொழி அம்மையாரின் முதல் திருமணத்திற்கு தனி விமானத்தில் பறந்து வந்தது தனிக்கதை.

  மக்களவையில் திமுகவிற்கு ஒரு உறுப்பினர்கூட இல்லாதநிலையில் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த முரசொலிமாறன் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணை அமைச்சரானார்.

  நீள நீளமாக பதிவுகள் எழுதும் முன் உண்மை என்னவென்று சரி பார்ப்பது கிடையாதா?

  உண்மைத்தமிழன் பொய்ச்செய்திகளையும் பரப்புவது தொடர்கின்றதோ?

  இப்படிக்கு,
  ராவணன்.

 15. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ராவணன் said…
  தம்பி சரவணா, 1989-ல் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் நடந்த ஜனதா தள எம்.பிக்கள் கூட்டத்தில் தேவிலாலைத்தான் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள்.
  அதன் பின்னர் தேவிலால்தான் வி.பி சிங்கை பிரதமராக இருக்கும்படி கூறினார். இது, சந்திரசேகர் வராதிருக்க வி.பி.சிங் நடத்திய நாடகம். அதற்கு தேவிலாலும் உடந்தை. இதைத்தான் தன்னை நம்பவைத்து மோசம் செய்துவிட்டார்கள் என்று மீடியாக்களிடம் சந்திரசேகர் புலம்பியது.//

  அன்றைக்கு எம்.பி.க்களின் கூட்டுக் கூட்டத்தில் நடந்ததைத்தாண்ணா சொன்னேன்.. இரண்டும் ஒன்றுதானே..

  //வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான் தேவிலால் துணைப் பிரதமராக இருந்தார்.(சந்திரசேகர் காலத்தில் இல்லை).//

  கரெக்ட்.. நான்தான் தவறாக எழுதிவிட்டேன்..

  //இதே தேவிலால், தான் பதவி ஏற்ற கையோடு நமது கனிமொழி அம்மையாரின் முதல் திருமணத்திற்கு தனி விமானத்தில் பறந்து வந்தது தனிக்கதை.//

  தெரியும்.. அதையெல்லாம் சேர்த்து எழுதணுமான்னு யோசிச்சேன்.. தேவிலாலைப் பத்தி தனியா எழுதும்போது வைச்சுக்கலாம்னு நினைச்சேனுங்கண்ணா..

  //மக்களவையில் திமுகவிற்கு ஒரு உறுப்பினர்கூட இல்லாத நிலையில் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த முரசொலிமாறன் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணை அமைச்சரானார்.//

  இது கலைஞர் மீது வி.பி.சிங் மீது வைத்திருந்த மரியாதைக்காக..

  //நீள நீளமாக பதிவுகள் எழுதும் முன் உண்மை என்னவென்று சரி பார்ப்பது கிடையாதா?//

  அண்ணே.. கிடைத்த சொற்பக் கால அவகாசத்தில் கூகிளாண்டவரின் துணையை நாட நேரமில்லாமல் போய்விட்டதண்ணா..

  பரவாயில்லை.. அதனால் என்ன? அதுதான் விநாயகப் பெருமான் மாதிரி நீங்க இருக்கீங்களே..

  //உண்மைத்தமிழன் பொய்ச் செய்திகளையும் பரப்புவது தொடர்கின்றதோ?//

  இந்தக் குத்தல் எதுக்குண்ணா..?

 16. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ஆட்காட்டி said…
  வித்தியாசமா இருக்கு.//

  கமெண்ட்டும் வித்தியாசமாத்தான் இருக்கு ஸார்..

 17. Raj Says:

  //வி.பி.சிங்கை அழைத்துக் கொண்டு ஊர், ஊராக பொதுக்கூட்டம் நடத்தி காங்கிரஸ¤க்கு எதிராக புயலைக் கிளப்பினார் கலைஞர்.
  //

  அதே காங்கிரசுக்கு இன்னைக்கு ஆதரவா….

 18. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Raj said…
  //வி.பி.சிங்கை அழைத்துக் கொண்டு ஊர், ஊராக பொதுக்கூட்டம் நடத்தி காங்கிரஸ¤க்கு எதிராக புயலைக் கிளப்பினார் கலைஞர்.//
  அதே காங்கிரசுக்கு இன்னைக்கு ஆதரவா….///

  அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.. ஓட்டுப் போறவங்க பழசையெல்லாம் மறந்திருப்பாங்கன்னு அவங்க மேல அவ்ளோ நம்பிக்கை..

  எல்லாம் சந்தர்ப்பவாத அரசியல்தான்.. நம் தலையெழுத்து.. வேறு யாரையும் குற்றம் சொல்ல முடியாது..

 19. தமிழ் பிரியன் Says:

  ஆமாங்க உண்மைத் தமிழன் ஐயா! உங்க பதிவில் இரண்டு இடத்தில் அந்த கோட் இருக்குது.
  <script type='text/javascript' src='http://deepa7476.googlepages.com/DeepaSmiley.js'></script&gt;

  இதை HTML ல் இருந்து நீக்கினால் தான் எங்களுக்கு நல்லது.. நாளைக்கு முயற்சி செய்ங்க.. உங்கள் அப்பன் முருகன் உதவி செய்வான்!.

 20. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //தமிழ் பிரியன் said…
  ஆமாங்க.. உண்மைத் தமிழன் ஐயா! உங்க பதிவில் இரண்டு இடத்தில் அந்த கோட் இருக்குது.
  இதை HTML-ல் இருந்து நீக்கினால் தான் எங்களுக்கு நல்லது.. நாளைக்கு முயற்சி செய்ங்க.. உங்கள் அப்பன் முருகன் உதவி செய்வான்!.//

  அதுதான் உங்கள் ரூபத்தில் வந்து உதவி செய்துவிட்டானே என் அப்பன் முருகன்..

  இப்போது எந்தவிதத் தடங்கலும் இல்லை. சீக்கிரமாக தளம் ஓப்பன் ஆகிறது..

  கோடானு கோடி நன்றி தமிழ்பிரியன்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: