தமிழக உறவுகளே! வன்னி மக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கும்படி புலிகளிடம் வலியுறுத்துங்கள்!!

13-11-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தக் கட்டுரையும் இன்றைக்கு வந்த பின்னூட்டம்தான்..

ஒரே பார்வையில் ஈழத்து மக்களின் பிரச்சினை சென்று கொண்டிருப்பது போல் தோன்றுகின்ற நேரத்தில் மாற்றுக் கருத்துள்ள ஈழத்து தமிழ் மக்களும் களத்தில் இருக்கிறார்கள் என்பதனை நாம் உணர்தல் வேண்டும்.

அவர்களின் கட்டுரை இது..!

தமிழக உறவுகளே! வன்னி மக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கும்படி புலிகளிடம் வலியுறுத்துங்கள்!!

– வன்னியூரான்

இந்தியத் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் போர்நிறுத்தம் ஒன்றை கொண்டுவந்துவிட, திரும்ப திரும்ப குரல் எழுப்பியவண்ணம் உள்ளதாக இங்கு வன்னி மக்கள் அறிகின்றனர்.

மேலெழுந்த ரீதியாக பார்க்கும்போது உங்களது நோக்கம், இங்குவன்னியில் வாழுகின்ற சுமார் 4 லட்சம் அப்பாவி தமிழ் மக்களை பாதுகாப்பதுதான் என்பது போலத்தோன்றும்.

தா.பாண்டியன் முதல் முதலமைச்சர் கருணாநிதி வரை இந்த போர் நிறுத்தத்தை வலியுறுத்துகின்றனர். தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோரும் இப்படி ஏகோபித்த குரலில் போர்நிறுத்தத்தை வலியுறுத்துவதால், அதில் ஏதோ விடயமிருப்பதாக தமிழக மக்களும் நம்ப வைக்கப்படுகின்றனர். இதற்கு மேல் தமிழக மக்களிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாதுதான்.

எனினும் வன்னியில் வாழுகின்ற தமிழ் மக்களின் உண்மையான நிலை என்ன என்பதை, திரும்ப திரும்ப நமது தமிழக உறவுகளுக்கு விளக்குவது இலங்கைத் தமிழ் மக்களின் தவிர்க்கவியலாத கடமையாக இருக்கின்றது. ஏனெனில் தமிழக மக்களுக்கு வன்னி நிலவரம் பற்றி சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும், தமிழக அரசியல்வாதிகளால் சொல்லப்படுகின்றது.

இந்தத் தமிழக அரசியல்வாதிகளுக்கு புலிகளினால் ஒழுங்கு முறையாக பணம் வழங்கப்படும் என்பது, தமிழக மக்களுக்கு தெரிய வருவதில்லை.

அண்மைக்காலங்களில் கனடாவிலும் ஐரோப்பாவிலும் வாழுகின்ற தமிழ் மக்களிடம் பணம் சேகரிக்கும் புலி முகவர்கள், தமிழ்நாட்டில் தமக்கு ஆதரவாக கூட்டங்கள், ஊர்வலங்கள் நடாத்துகின்ற அரசியல்வாதிகளுக்கு பெரும்தொகை பணம் வழங்கவேண்டியிருப்பதால், புலிகளுக்கு அதிகளவு பணம் வழங்கும்படி வெளிப்படையாகவே கோரிவருகின்றனர். இதுவும் தமிழக மக்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

வன்னி நிலைமைகள் தமிழக அரசியல்வாதிகள் சொல்வதற்கு எதிர்மாறானது என்பதை, தமிழக மக்கள் புரிந்துகொள்வது அவசியம்.

வன்னியில் உணவுக்கு தட்டுப்பாடு, மருந்துக்கு தட்டுப்பாடு, மக்கள் வகைதொகையில்லாமல் கொல்லப்படுகிறார்கள், பெண்கள் இலங்கை இராணுவத்தால் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள் என்றெல்லாம் தமிழக அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள்.

இவ்வாறெல்லாம் பிரச்சாரம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள், தினமும் வன்னி யுத்தமுனையில் இலங்கை இராணுவத்தால் டசின் கணக்கில் கொல்லப்படும் புலி உறுப்பினர்கள் (சிறுவர்கள் முதல் இளைஞர்கள், இளம் யுவதிகள் வரை) குறித்து எதுவும் சொல்லாமல் மௌனம் காக்கிறார்கள்.

புலிகள்தான் இலங்கை தமிழ் மக்களின் பாதுகாவலர்கள் என்றால் புலிகள் கொல்லப்படுவதற்கும் கண்டனக்குரல் எழுப்பலாம்தானே? இங்குதான் தமிழக அரசியல்வாதிகளின் கபடத்தனம் அம்பலத்துக்கு வருகிறது. அதாவது புலிகளுக்காக வெளிப்படையாக குரல் எழுப்பினால், தமிழக அரசியல் தலைவர்களது அந்தரங்க நோக்கம் அம்பலமாகிவிடும். அதாவது ஈழத்தமிழர்களை பாதுகாப்பது இவர்களது நோக்கமல்ல, புலிகளைப் பாதுகாப்பதே இவர்களது நோக்கம் என்பது தெரிய வந்துவிடும்.

புலிகளைப் பாதுகாப்பதுதான் இவர்களது நோக்கம் என்றால், தமிழகமக்கள் இவர்களுக்கு ஆதரவு வழங்காமல் தூரவிலகிவிடுவார்கள் என்பது தமிழக அரசியல் தலைவர்களுக்கு நன்கு தெரியும்.

தமிழக அரசியல்வாதிகள் சொல்வதுபோல, வன்னியில் உணவுத் தட்டுப்பாட்டால் எந்தவொரு நபரும் இதுவரை இறந்துவிடவில்லை. இனிமேலும் இறக்கப்போவதும் இல்லை. இங்கு இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளும் வாராவாரம் போதிய உணவுப்பொருட்களை அனுப்பி வருகின்றன.

தமிழக அரசியல்வாதிகளை தவிர, இலங்கையில் செயல்படுகின்ற சர்வதேச நிறுவனங்களோ,அல்லது வேறு நாடுகளில் உள்ள எந்தவொரு அரசாங்கங்கமோ, வன்னியில் உணவுத்தட்டுப்பாடு நிலவுவதாக இதுவரை சொல்லவில்லை.

மேலும் இலங்கை இராணுவம் இங்கு எந்தவொரு தமிழ் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கவுமில்லை. 1995ல் இராணுவம் யாழ்ப்பாணத்தை விடுவித்த பொழுதோ, சென்றவருடம் கிழக்கு மாகாணத்தை விடுவித்தபோதோ,இலங்கை இராணுவம் தமிழ்ப்பெண்களிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக ஒரு முறைப்பாடுதன்னும் வரவில்லை. புலிகள்கூட அவ்வாறு ஒரு குற்றச்சாட்டை இதுவரை இலங்கை இராணுவம் மீது சுமத்தவில்லை. தவிரவும் இலங்கை இராணுவம் தற்போது வன்னியில் கைப்பற்றியுள்ள இடங்களில் பொதுமக்கள் எவரும் இல்லாதபடியால், இராணுவம் எவ்வாறு பாலியல் வன்செயல்களில் ஈடுபட முடியும்?

ஆனால் தொல்.திருமாவளவன்,வை.கோபாலசாமி,

டாக்டர் ராமதாஸ், பழ.நெடுமாறன்போன்றோர் நடாத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில், வன்னியில் இலங்கை இராணுவம் தமிழ் பெண்களை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குவதாக தெரிவிக்கும் சுலோக அட்டைகளை காணக்கூடியதாக இருந்தது. இவ்வளவு மலினமான பொய்ப்பிரச்சாரங்கள் மூலம்தான் தமிழக மக்களை தமது பக்கம் திருப்பமுடியும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள் போலும்!

அளவுக்கதிமாக பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தமிழக புலி ஆதரவாளர்களின் பிரச்சாரத்திலும் எவ்வித உண்மையுமில்லை. இதுவரை நடந்த விமானப்படையின் தாக்குதல்களின்போது மிகக்குறைவான அளவில் பொதுமக்கள் கொல்லப்பட்டது உண்மையே.

அதற்கு காரணம் புலிகள் தமது பாதுகாப்புக்காக, வன்னி மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் முகாம் அமைத்துப் பதுங்கியிருப்பதாகும். புலிகளின் முகாம்கள் இலங்கை இராணுவத்தால் தாக்கப்படும்போது சில வேளைகளில் பொதுமக்களும் அதில் அகப்பட்டு விடுகிறார்கள். (புலிகளின் முகாம்கள் பற்றிய தகவல்களையும் புலிகளின் அதிருப்தியாளாகளும் வன்னிப் பொதுமக்களுமே இராணுவத்துக்கு வழங்குகின்றனர்) அதற்காகத்தான் யுத்தம் ஆரம்பித்தவுடனேயே, வன்னி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வருமாறு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்தது. ஆனால் வன்னி மக்கள் பாதுகாப்பாக வெளியேறிச் செல்லமுடியாதபடி புலிகள் இங்கு தடைவிதித்ததுடன், மக்களை தமது பாதுகாப்பு கேடயமாக வைத்திருக்கிறாhகள். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறிச் செல்ல அனுமதிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையும் பிரித்தானிய அரசாங்கமும் வேண்டிக்கொண்டபோதும், புலிகள் செவிமடுக்கவில்லை.

அதன்பின்னரே இலங்கை அரசாங்கம் வன்னிக்குள்ளேயே விசுவமடுவிலிருந்து ஒட்டிசுட்டான் வரையிலான பகுதியை பாதுகாப்பு வலயமாக அறிவித்தது. பொதுமக்களின் உயிர்கள்மீது இலங்கை அரசாங்கத்திற்கு அக்கறையில்லையெனில், இலங்கை அரசாங்கம் இவ்வாறெல்லாம் செயல்படுமா?

இலங்கை அரசாங்கம் வன்னிக்குள்ளேயே பாதுகாப்பு வலயத்தை அறிவித்தபின்பும், மக்களை அங்குசென்று வாழமுடியாதபடி புலிகள் தடுத்து வருகின்றனர். உதாரணமாக அண்மைக் காலங்களில் பரந்தனில் உள்ள குமரபுரம் கிராமம் மீது, விமானப்படை மூன்று தடவைகள் குண்டு வீசியது. இதில் நான்கைந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், சிலர் காயமும் அடைந்தனர். இதற்குக்காரணம் புலிகள் அந்தப்பகுதியில் முகாம்கள் அமைத்திருப்பதால், தமது பாதுகாப்புக்காக அங்குள்ள மக்களை வெளியேறாதபடி தடுத்து வைத்திருக்கின்றனர். ஆனால் இலங்கை இராணுவத்தின் முன்நகர்வைப் பொறுத்தவரையில், பரந்தன் அவர்களுக்கு முக்கியமான ஒரு இடம்.

இப்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் பூநரியை நோக்கி முன்னேறும் இராணுவம், பூநகரியை கைப்பற்றிய பின்னர், குடமுறுட்டி ஆற்றை ஊடறுத்து, பரந்தனை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு. அதேவேளை விரைவில் கிளிநொச்சியை கைப்பற்றப்போகும் இராணுவம், அடுத்ததாக பரந்தனை நோக்கியே முன்னேறும்.

இந்த இரண்டு இராணுவங்களும் ஒன்று சேர்ந்தபின், ஒரு பிரிவு ஆனையிறவை நோக்கி நகர, இன்னொரு பகுதி முல்லைத்தீவை நோக்கி விசுவமடு –புதுக்குடியிருப்புக்கூடாக நகரும் சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே எப்படிப் பார்த்தாலும் இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவரையில், பரந்தன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம்.

இந்த இடத்தில் புலிகள் பொதுமக்களை பலவந்தமாக தடுத்து வைத்திருப்பது தமது பாதுகாப்புக்கேயொழிய, மக்களின் பாதுகாப்புக்கல்ல. இதிலிருந்தே புலிகளால் தமிழ் பொதுமக்களுக்கு பாதுகாப்பா அல்லது ஆபத்தா என்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்தகொள்ள முடியும். புலிகள் தமது தமிழக ஆதரவாளர்கள் மூலம் யுத்த நிறுத்தத்தை கோருவது தம்மை அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவே.

வன்னியிலுள்ள பொதுமக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள தயாராக இருப்பதால், அவர்களுக்கு போர்நிறுத்தம் ஒன்றும் தேவையில்லை. அவர்கள் கோருவது எல்லாம் பிரபாகரனும் அவரது கூட்டமும், வன்னி மண்ணை விட்டு நீங்கிவிட்டால் யுத்தமும் நின்றுவிடும், இலங்கை இராணுவமும் விலகிவிடும் என்பதாகும்.

புலிகள் அவ்வாறு விலகத் தயாராக இல்லாவிடின், தங்களையாவது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அனுமதிக்கும்படி புலிகளிடம் வன்னி மக்கள் வேண்டுகிறார்கள். ஆனால் புலிகள் வன்னி மக்களது வேண்டுகோளை ஏற்க மறுப்பதுடன், வன்னி மக்களின் பிள்ளைகளையும் பலாத்காரமாப் பிடித்து போர்முனைக்கு கொண்டு செல்கிறார்கள். இந்தக் கொடுமையை தமிழக அரசியல்வாதிகள் யாரும் தட்டிக்கேட்காதது,வன்னிமக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஏறக்குறைய 13 ஆண்டுகளாக புலிகளின் கொடுமைக்குக்கீழ் வாழும் வன்னித்தமிழ் மக்களுக்காக, தமிழக சகோதர உறவுகள் குரலெழுப்பாதது மிகவும் வேதனைக்குரிய விடயம் என வன்னி மக்கள் கருதுகிறார்கள்.

புலிகள் வீசியெறியும் வெறும் எலும்புத் துண்டுகளுக்காக தமிழக அரசியல்வாதிகள் இந்த மக்களின் வேதனையை கண்டும்காணாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை. எனவேதான் வன்னி மக்கள் இன்று தமிழக அரசியல்வாதிகளைவிட்டு, தமிழக மக்களிடம் தமது வேதனையையும் வேண்டுகோள்களையும் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

வன்னி மக்களின் கோரிக்கை ஒன்றேயொன்றுதான். போரை நிறுத்துவதும் தொடர்வதும் இலங்கை அரசாங்கத்தையும் புலிகளையும் பொறுத்தவிடயம். போர் புரியும் இரு பகுதியினரும் ஒரு முடிவுக்கு வரும்வரை, நாம் வீடுவாசல்களை இழந்து அனாதைகளாக மரங்களின் கீழும் திறந்த வெளிகளிலும் எத்தனை காலம்தான் வாழ்வது? புலிகள் வேறு, வன்னி மக்கள் வேறு என்றே, வன்னி மக்கள் குரலெழுப்புகின்றனர்.

எனவே இந்தப்போர் முடியும்வரை வன்னியைவிட்டு வெளியேறி, யாழ்ப்பாணத்திலோ, வவுனியாவிலோ,கொழும்பிலோ இருக்கின்ற தமது உறவுகளிடம் சென்றுவாழ உதவிசெய்யுங்கள் என அனைத்துநாட்டு அரசாங்கங்களிடமும்,குறிப்பாக தமது தமிழக உறவுகளிடமும் வேண்டுகின்றோம்.

புலிகளுக்கு கடுமையான நிர்ப்பந்தம் கொடுக்காவிட்டால், வன்னி மக்களை இந்த யுத்தகளத்திலிருந்து புலிகள் விடுவிக்கப்போவதில்லை. இந்த யுத்தத்தில் புலிகள் தப்பிப்பிழைப்பதற்கு எவ்வித வழியுமில்லாமல் இருப்பதால், தங்களுடைய அழிவுடன் வன்னி மக்களையும் பிணைத்து வைத்திருக்க முயல்கின்றனர் என எமது மக்கள் கருதுகின்றனர். அதை உணர்ந்துதான் தினமும் ஒரு சில வன்னி மக்களாவது புலிகளது பிடியிலிருந்து கடலுக்கூடாகவும் காடுகளுக்கூடாகவும் தப்பிச்செல்கின்றனர். இதுவொன்றே வன்னி மக்களின் இன்றைய உணர்வைக்காட்டபோதுமானதாகும்.

எனவே தமிழக உறவுகளே! நாங்களும் நீங்களும் தொப்புள்கொடி உறவுள்ளவர்கள் என நீங்கள் பேசுவது உண்மையானால், இந்தப்போர் முடியும்வரை எம்மை வன்னியிலிருந்து வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கு அனுமதிக்கும்படி புலிகளிடம் தொடர்ந்து வலியுறுத்துங்கள்.

அத்துடன் அதற்கான முயற்சிகளில் ஈடுபடும்படி தமிழக அரசையும், இந்திய நடுவண் அரசையும் வலியுறுத்துங்கள். இதைத்தவிர நீங்கள் வெறுமனே நடாத்தும் ஆர்ப்பாட்டங்களால் எமக்கு எவ்வித பயனும் விளையப்போவதில்லை.

http://www.thenee.com/html/121108-1.html

நன்றி : வதா

21 பதில்கள் to “தமிழக உறவுகளே! வன்னி மக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கும்படி புலிகளிடம் வலியுறுத்துங்கள்!!”

 1. தமிழ் விரும்பி Says:

  டோய் டோய் என்னங்கடா! உண்மைத்தமிழா, இதை “தேனீ”ல இருந்து சுட்டதா? அட அது தமிழின துரோக கும்பலின் இருப்பிடமாச்சே. இனவெறி ராஜபக்ஸ வின் கால்கழுவும் எட்டப்பர் கூட்டங்களின் கூடாரமாச்சே! போடா போ!! 1996 ம் ஆண்டு சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி கற்பழிக்கப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டது அவரை தேடி வந்த தம்பி,தாய்,அயலவர்கள் கொல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டது இந்த தமிழ்த்துரோகிக்கு தெரியாதா? செம்மணியிலே கொன்று புதைக்கப்பட்ட 600ற்கும் மேற்பட்ட அப்பாவித்தமிழர்கள் கதை இந்த கோடரிக்காம்புக்கு தெரியாதா? உரும்பிராயிலே வன்புணர்ச்சிக்கு பின்னர் கொல்லப்பட்ட ரஜினி என்கிற பெண்ணின் சோக கதை தெரியாதா? புங்குடுதீவிலே சாரதாம்பாள் என்ற ஒரு அந்தணப்பெண் கடற்படையால் கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட்டது தெரியாதா? அல்லைப்பிட்டியிலே ஒருகுடும்பத்தை கூண்டோடு அழித்து அந்த தலைவியை சின்னாபின்னமாக்கி விட அதன் பயத்தில் அந்த கிராம மக்களே இடம்பெயர்ந்தது தெரியாதா? மன்னார் வங்காலையில் ஒருகுடும்பம் கொலைசெய்யப்பட அந்தக் குடும்ப பெண் கற்பழிக்கப்பட்ட துன்பம் தெரியாதா? அந்த ஊரைச்சேர்ந்தோர் பயத்தினால் தமிழகம் வந்து சொன்ன சோக கதை ‘சன்’ ரீவியிலே சொன்னார்களே அது உனக்கு தெரியாதா உண்மைத்தமிழா? ‘தேனி’ இணையத்தளம் வைத்திருப்பவர்களுக்கு ராஜபக்ஸவின் எலும்புத்துண்டுகள் கிடைக்குது. உண்மைத்தமிழா உனக்கும் ஏதாவது கையூட்டு கிடைக்கிறதா? அதுதான் உனது எழுத்தில் இவ்வளவு தீவிரம் தெரிகிறது. மாற்றுக்கருத்தை வரவேற்கிறேன். விடுதலைப்புலிகள் செய்யும் தவறுகளை சொல். நான் கேட்கமாட்டேன். கோடரிக்காம்புகளே உண்மைகளைப் புதைக்காதீர்கள். 1987ற்கும் 1990 ற்கும் இடையில் ஈழதேசத்தில் கொல்லப்பட்டும் கற்பழிக்கப்பட்டும் துன்புறுத்தப்பட்ட அப்பாவிதமிழர் அனுபவித்த கொடுமை யாராலே? இந்தியா என்ற வல்லாதிக்க படைகளாலே? உனக்கு தெரியாது உண்மைத்தமிழா? 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிவிட தமிழ் மக்கள் யாழ்ப்பாணம் திரும்புகிறார்கள். ஒன்றை இந்த இடத்தில் நினைவில் கொள் வன்னி செல்ல முடியாத நிலைமையில்தான் யாழ்ப்பாணம் சென்றார்கள். அப்போது யாழ்ப்பாணம் திரும்பியவர்கள் செம்மணி ஊடாகத்தான் செல்ல வேண்டும். அப்போது போகும் வழியில் கைது செய்யப்பட்டவர்களும் பின்னர் சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்பட்டவர்களும் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார்கள். இவை எல்லாம் எங்கே உங்களுக்கு தெரிய போகிறது. இந்த காரணங்களுக்காகத்தான் வன்னியில் இருந்து மக்கள் மாற்று இடங்களுக்கு செல்ல மறுக்கிறார்களே தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது. மாற்றுக்கருத்துக்களை சொல்லுங்கள் ஐயா. வரவேற்கிறோம். மிகச்சிறந்த ஜனநாயக நாட்டில் வாழ்கிறீர்கள். உங்கள் நாட்டில் கருத்துக்கு கிடைக்கும் உரிமையை தப்பாக பாவிக்காதீர்கள். பரந்தனில் குண்டு போடப்பட்டதை நியாயப்படுத்துகிறானே அந்த பிரகிருதி. அதற்கு நீயும் ஒத்து ஊதுகிறாயே? நீ ஒரு நியாயவாதி என்றால் அந்த கொலைகளை கண்டித்திருப்பாயே? இந்த “உண்மைகள்”(?) போலத்தான் தமிழக அரசியல்வாதிகள் வாங்கும் பணக்கதையும் இருக்கும். ஐயா நாங்களும் இப்படியான் யுத்த சூழலுக்குள் வாழ்ந்தவர்கள். 100 குண்டு போட்டால் ஒரு 4 அல்லது 5 குண்டுதான் விடுதலைப்புலிகள் மீது வீழும். தமிழ்ச்செல்வன் மீது குண்டுபோட்டதை உதாரணமாக சொல்வார்கள். எனது சிற்றறிவுக்கு எட்டின வகையில் வேறஎங்காவது போட்ட குண்டுதான் அவர் இருப்பிடத்தின் மீது விழுந்திருக்கும். 6000 தடவை குண்டு போட்டார்களாமே? இதுவரையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அழிந்திருக்க வேண்டுமே? என்ன நடக்கிறது? நீங்களும் சிந்தியுங்கள். அமெரிக்கா 6000 தடவை குண்டு போட்டால் ஒரு கண்டத்தையே நிர்மூலமாக்குவார்கள். இவர்கள்….! தேனி எழுத்தாளர் ஏன் யாழ்ப்பாணத்தின் திறந்தவெளி சிறைச்சாலை பற்றி எழுதவில்லை. கிழக்கின் துயரம் பற்றி எழுதவில்லை. அதை எழுதினால் காசு கிடையாது. யாழ்ப்பாணத்தில் 7மணியுடன் ஊரடங்கு சட்டம். இராணுவத்தின் பூரணகட்டுப்பாட்டில் தானே உள்ளது. ஏன் இந்த அவலம்? அங்கு கைது செய்யதலும் காணமல் போவது யாராலே? பல்கலைக்கழக மாணவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்களே ஏன்? யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு போவதற்கு படையினர் அனுமதி கொடுக்க வேண்டும். ஏன்? நாங்கள் என்ன வேற்று நாட்டவரா? வவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற புகையிரதம் இப்போது மதவாச்சியுடன் நின்றுவிடுகிறது. தேவை என்றால் நீங்கள் பேரூந்துகளில் வவுனியா செல்லுங்கள் என்கிறார்களே! ஏன்? சிறிலங்கா அரசே தமிழ்மக்களை பிரித்துவிட்டதா? கொழும்பில் தமிழ்மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைப்பற்றி ஏன் இந்த தேனி எழுத்தாளர் எழுதவில்லை. ஏன்? ஏன் அவர் எழுதவில்லை என்றால் இவைகளை எழுதினால் காசு கிடையாது. அவரையும் போட்டுத்தள்ளிபோட்டு சுலபமாக விடுதலைப்புலிகள் மீது பழியைபோட்டுவிடுவார்கள். உண்மைத்தமிழா? உங்கள் பெயரை தயவு செய்து காப்பாற்றுங்கள். ஞாநி போல பிதற்ற வேண்டாம். அல்லது பெயரிற்கு தகுந்த படி உண்மைகளை எழுதுங்கள். விடுதலைப்புலிகள் செய்யும் தவறுகளை எழுதுங்கள். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் உண்மையாய் எழுதுங்கள். அது முக்கியம். இதுவரை எவ்வளவு காசு வாங்கிவிட்டீர்கள். நீங்களுமா? தயவு செய்து பெயரை மாற்றுங்கள். அல்லது உண்மையை எழுதுங்கள்.

 2. ஆட்காட்டி Says:

  புலிகள் பயங்கரவாதிகள், கொலைகாரர்கள். அவர்களை விடுங்கோ. அரசு யாழில் உள்ள மக்களை வெளியேற விடுமா? இல்லை வவுனியாவுக்கு தான் புகைவண்டி ஓடுதா? எதுக்கு கிளியரன்ஸ். வவுனியாவில இருந்து கொழும்புக்கு போக முடியுமோ? அது என்ன நாலைஞ்சு பேர் செத்தாங்கள்? எழுதினவனுக்கு கணக்கு தெரியாதா?

 3. கதியால் Says:

  ஒருசில சிறீலங்கா அரசின் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்தான் இப்படியான கதைகளை அளக்குது. ‘உண்மை'(?)த்தமிழா எழுதுங்கோ நல்லா எழுதுங்கோ! அதுக்காக பொய்களை எழுத வேணாம்.

 4. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ஐயா தமிழ்விரும்பி..உங்களது கோபம் புரிகிறது.. ஒரே இனமாக வாழ்ந்து ஒருமித்தக் குரலில் எழுப்பியிருக்க வேண்டிய கோரிக்கைகளை ஆறுமுகங்களாகத் திசை திருப்பிக் கொண்டு பல்வேறு குரல்களில் ஒலித்துக் கொண்டிருப்பது தமிழ் ஈழத்து மக்களின் துரதிருஷ்டம்தான்..இந்தக் கட்டுரை பின்னூட்டமாக வந்திருந்தது. அதைத்தான் வெளியிட்டுள்ளேன்.. எனக்கும் இக்கட்டுரையுடன் மாற்றுக் கருத்து உண்டு.. இது இல்லாமல் யாரும் இருக்க முடியாதே.. முதலில் ஈழத்து அரசியல்வாதிகளும், தலைவர்களும் ஒன்றுபட வேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற தமிழகத்தவர்களின் முதல் கோரிக்கை.ஆயிரம் கைகள் சேர்ந்து நின்று கோரிக்கை வைத்தால்தான் அது செவிகளுக்கு எட்டப்படும். தனித்தனி கோஷங்கள் எந்தவிதத்திலும், எவ்விடத்திலும் எடுபடாது..சிங்கள ராணுவத்தின் கொடுமைகளை சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் பட்டியல் போட்டுக் கொடுத்திருக்கின்றன. இது ஒன்றும் ஆச்சரியமில்லை. அவிழ்த்துவிடப்பட்ட சர்வாதிகாரம் இதைத்தான் செய்யும்.. தட்டிக் கேட்கத்தான் நமக்குள் ஒற்றுமையில்லை..

 5. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ஆட்காட்டி said… புலிகள் பயங்கரவாதிகள், கொலைகாரர்கள். அவர்களை விடுங்கோ. அரசு யாழில் உள்ள மக்களை வெளியேற விடுமா? இல்லை வவுனியாவுக்குதான் புகைவண்டி ஓடுதா? எதுக்கு கிளியரன்ஸ். வவுனியாவில இருந்து கொழும்புக்கு போக முடியுமோ? அது என்ன நாலைஞ்சு பேர் செத்தாங்கள்? எழுதினவனுக்கு கணக்கு தெரியாதா?//ஆட்காட்டி ஸார்.. ஒருவிதத்தில் பார்த்தால் இருவருமே பயங்கரவாதிகள் போலத்தான் தெரிகிறார்கள்..

 6. தமிழ் விரும்பி Says:

  புரிதலுக்கு நன்றி உண்மைத்தமிழா! இப்படித்தான் நிறைய அப்பாவிகள் ஏமாற்றப்படுகிறார்கள் போலும். எனக்கு என்ன கவலை என்றால் மாற்றுக்கருத்துக்கு இடம் அளிக்கவேண்டும்தான். அதில் மாற்றுக்கருத்துக்கு எனக்கு இடமில்லை. ஆனால் இப்போதுள்ள சூழல் என்ன என்பதை அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஐயா நீங்கள் ஒருதடவை இலங்கை வந்து நிலைமைகளைப் பாருங்கள். அல்லது ஒழுங்கானவர்களிடம் உங்கள் கருத்துக்களை கேளுங்கள். சொல்லுங்கள். தேனீ என்ற இணையத்தளம் தமிழ்த்தேசிய விரோதப்போக்கை கொண்டுள்ளது. 100%வீத மக்களும் தமிழீழத்திற்கு ஆதரவாக இருப்பார்கள் என எண்ண முடியாது. கலைஞருக்கு 55விழுக்காடு ஆதரவு எனில் அம்மாவிற்கு 35% வீதமிருக்கும். ஏனையோர் மிகுதிக்குள் அடங்குவர். ஆகவே எவரையும் திருப்திப்படுத்த முடியாது. இன்று பாருங்கள் களமுனைகளில் ஆடி பல வெற்றிச்சமர்களில் பங்குபற்றி தேசவிடுதலையில் பன்ங்கெடுத்த கருணா என்ற விஷப்பாம்பு இன்று எப்படி உள்ளது. அவரது பிரிவில் நியாயம் இருக்கு என்று சொல்பவரும் உள்ளார்கள். ஆனால் அந்த கருணா சாக கூடாது என தனது உயிரை துச்சமாக மதித்தி கடலில் கரும்புலியாக வீரகாவியம் ஆனவன் எனது ஊரைச்சேர்ந்தவர். இதையெல்லாம் அவர் நினைக்கவில்லை. எதையும் பேசித்தீர்த்திருக்கலாம். தாங்கள் தாங்கள் பிழைகளை விட்டுவிட்டு பின்னர் கதையழப்பதில் பயனில்லை. இன்று டக்ளஸ் என்ற இனத்துரோகி என்ன செய்கிறான். அவனால் என்ன பலன் மக்களுக்கு. ரோட் போடவும் கோவில் கட்டவும் காசு கொடுத்தால் சரியா. மக்களுக்கு நிம்மதி வேணும். விடுதலை வேணும். இன்று வன்னி மண்ணுக்குள் நடப்பதை ஏன் இந்த சர்வதேசம் கண்மூடி மவுனிகளாக நின்று வேடிக்கை பார்க்கிறது. ஏன் பாரதம் கூட அதைத்தான் செய்கிறது. ஆனால் எல்லாவற்றிற்கும் தேசியத்தலைவன் முடிவெடுப்பான். அவன் விரல் நீளும் திசையில் புலிச்சேனை பாயும். வெல்லும். இதைவிட மோசமான நிலையில் 1999ம் ஆண்டு நிலை இருந்தது. ஓயாத அலைகளாக் பொங்கி யாழ்ப்பாணம் அரியாலை வந்து வாயிற்கதவை தட்டிய போது இந்தியா தலையிட்டு சிறிலங்கா இராணுவத்தை காப்பாற்றியது. இம்முறை அப்படி எதுவும் நடக்காது. எவர் சொல்லையும் தலைவர் கேட்கமாட்டார். இப்போது எவரும் கவனிக்கவில்லை. இனிமேல் அவர் கவனிக்கவில்லை. இதை நீங்கள் நகைப்பாகப் பார்க்கலாம். ஆனால் அந்தக் களத்தில், தளத்தில் நின்றவன் என்ற நம்பிக்கையில் பேசுகிறேன்.அன்பின் உண்மைத்தமிழன், உங்களின் எழுத்து நன்றாக உள்ளது. அதை ஏன் ஒரு நல்லவிடயத்துக்கு பாவிக்க கூடாது. ஊர்கூடித்தேர் இழுக்கும் நேரம். கைகட்டியும், கைகொட்டியும் சிரிப்பவர்களுடன் நீங்களும் இணைந்து உங்கள் அறிவை,ஆற்றலை தவறாக பயன்படுத்தாதீர்கள். நீங்களும் இந்த விடுதலைத்தேரில் ஒரு கரம் பிடித்தால் விரைவில் இருப்பை சென்றடையும். பிடிக்காவிட்டால் ஒன்றுமில்லை. கொஞ்சம் தாமதமாகும். ஆனால் இருப்பை அடைந்தே தீருவோம். சூரியத்தேவனின் கரங்கள் இன்னும் நீளவில்லை. தமிழினத்தலைவன் தலைதிரும்பும் திசை தானைகள் செல்லும். இது அறப்போர். 30 வருடங்களாக இந்த உலக ஒத்தாசையுடன் அழிக்கமுடியவில்லையே. விடுதலைப்புலிகளின் பலம் மனபலம். என்றுமே மறாத மக்களின் பலம். இனிமேல் சொல்வதற்கில்லை. உண்மையை உண்மையாய் எழுதுங்கள். அடிவருடிகள் கதைகளை கேட்காதீர்கள். மாற்றுக்கருத்து எனற கோதாவில் தப்பான பரப்புரையை நிகழ்த்த வேண்டாம். ஆதரவுக்கரம் நீளுகிறது. அணைக்கத்துடிக்கிறது. அதை தயவ்வு செய்து வெட்ட நினைக்காதீர்கள். பிடிக்கவில்லை எனில் ஓரமாக நில்லுங்கள். இப்படி அநியாயமாக விலைபோகாதீர்கள். நிச்சயம் வெல்வோம். அந்த மணியான ஈழத்தை எடுத்தாள்வோம். நன்றி உண்மைத்தமிழன். புண்படும் படி ஏதாவது சொன்னால் மன்னித்து கொள்ளுங்கள். நன்றி.

 7. வல்வை சகாறா Says:

  வணக்கம் உண்மைத்தமிழன்,எங்கள் மக்களின் வாழ்க்கைப் போராட்டம் ஒரு சில விசமிகளால் உலக அரங்கில் மலினப்படுத்தப்படுவது ஒன்றும் புதிதல்ல, காலங்காலமாக சிங்கள அரசுகளின் கைக்கூலிகளாக தாயின் முந்தானையைக் களைந்து காண்பிக்கும் ஈனப்பிறவிகளும் தமிழினத்திற்குள் இருக்கத்தான் செய்கிறார்கள். இத்தகையவர்களின் பொய்யான கருத்துக்களைச் சமந்து சிங்கள அரசின் இனஒடுக்குமுறைக்கு நீங்களும் துணைபோகாதீர்கள். நன்றி

 8. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கதியால் said…ஒருசில சிறீலங்கா அரசின் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்தான் இப்படியான கதைகளை அளக்குது.’உண்மை'(?)த்தமிழா எழுதுங்கோ.. நல்லா எழுதுங்கோ! அதுக்காக பொய்களை எழுத வேணாம்.//கதியால் ஸார்..எழுதப்பட்ட கட்டுரை முழுக்க, முழுக்க எனக்கு ஏற்புடையதல்ல.. ஆனால் இதில் சிலவை உண்மையாகவும் இருக்கலாம் என்று நம்புகிறேன்..

 9. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //நீங்களும் இந்த விடுதலைத் தேரில் ஒரு கரம் பிடித்தால் விரைவில் இருப்பை சென்றடையும்.//உங்களுடைய விடுதலைத் தேர் இருப்பில் நிலை கொள்ள என் அப்பன் முருகனை மனமுருக வேண்டிக் கொள்கிறேன்..நன்றி தமிழ்விரும்பி

 10. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வல்வை சகாறா said…வணக்கம் உண்மைத்தமிழன்,எங்கள் மக்களின் வாழ்க்கைப் போராட்டம் ஒரு சில விசமிகளால் உலக அரங்கில் மலினப்படுத்தப்படுவது ஒன்றும் புதிதல்ல, காலங்காலமாக சிங்கள அரசுகளின் கைக்கூலிகளாக தாயின் முந்தானையைக் களைந்து காண்பிக்கும் ஈனப்பிறவிகளும் தமிழினத்திற்குள் இருக்கத்தான் செய்கிறார்கள். இத்தகையவர்களின் பொய்யான கருத்துக்களைச் சமந்து சிங்கள அரசின் இன ஒடுக்கு முறைக்கு நீங்களும் துணை போகாதீர்கள். நன்றி//மறுபடியும் சொல்கிறேன்.. இக்கட்டுரையில் கண்டுள்ள விஷயங்களை முழுமையாக எனக்கு ஏற்புடையதல்ல..ஆனால் தெரிந்தோ, தெரியாமலோ நான் அனுமதித்த பின்னூட்டங்களுக்கு மரியாதை அளிக்கும் பொருட்டு இரு தரப்புக் கருத்துக்களையும் அனுமதிக்கும் சூழல் எனக்கு உள்ளது.என்னுடைய கருத்தின்படி ஈழப் பிரச்சினையை போராலோ, துப்பாக்கியாலோ தீர்க்க முடியாது.. அரசியல் தீர்வு ஒன்றுதான் முடிவு.அந்த அரசியல் தீர்வை நோக்கி நாம் முன்னேற வேண்டுமெனில் முதலில் நம்மிடையே உள்ள பிளவு நீக்கப்படுதல் வேண்டும்.எதிரிகளுக்கு மிக முக்கிய பலம் நம்முடைய பிளவுகள்தான் என்பதை தயவு செய்து நீங்கள் முதலில் உணருங்கள்..

 11. Chandran Says:

  //என்னுடைய கருத்தின்படி ஈழப் பிரச்சினையை போராலோ, துப்பாக்கியாலோ தீர்க்க முடியாது.. அரசியல் தீர்வு ஒன்றுதான் முடிவு.//துப்பாக்கியால் தான் தீர்க்கமுடியும் என்று சொல்வது புலிகள் தான் என்பது உங்களுக்கு தெரியாதா?//அந்த அரசியல் தீர்வை நோக்கி நாம் முன்னேற வேண்டுமெனில் முதலில் நம்மிடையே உள்ள பிளவு நீக்கப்படுதல் வேண்டும்.// எப்படி புலிகள் மாற்றுக்கருத்து தெரிவிப்பவர்களை அழித்து விடுகிறார்களே?

 12. Thooya Says:

  தங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவா?ஏமாற்றமாகவும், வேதனையாகவும் உள்ளது.

 13. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Chandran said…//என்னுடைய கருத்தின்படி ஈழப் பிரச்சினையை போராலோ, துப்பாக்கியாலோ தீர்க்க முடியாது.. அரசியல் தீர்வு ஒன்றுதான் முடிவு.//துப்பாக்கியால்தான் தீர்க்கமுடியும் என்று சொல்வது புலிகள்தான் என்பது உங்களுக்கு தெரியாதா?///இப்போது போர் நிறுத்தத்திற்கு ஒத்துக் கொண்டுள்ளார்களே.. அதற்கென்ன அர்த்தம்..?///அந்த அரசியல் தீர்வை நோக்கி நாம் முன்னேற வேண்டுமெனில் முதலில் நம்மிடையே உள்ள பிளவு நீக்கப்படுதல் வேண்டும்.//எப்படி புலிகள் மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்களை அழித்து விடுகிறார்களே?///அதுதான் மாபெரும் தவறு என்று சொல்லி வருகிறேன்.. அனைவரையும் அரவணைத்துத்தான் செல்ல வேண்டும். இது காலத்தின் கட்டாயம். இதை என்றைக்கு புலித்தலைமை உணர்கிறதோ அன்றைக்குத்தான் இந்தப் பிரச்சினையின் முடிவு அத்தியாயம் துவங்கும்..

 14. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Thooya said…தங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவா?ஏமாற்றமாகவும், வேதனையாகவும் உள்ளது.//தங்கச்சி.. இது 5-வது பதிவு.. முதல் 4 பதிவுகளையும், பின்னூட்டங்களையும் தயவு செய்து சிரமம் பார்க்காமல் படிக்கவும். எனது கருத்து என்னவென்று புரியும்..

 15. Thooya Says:

  படித்தேன் அண்ணா..அதனால் தான் ஏமாற்றம் என்றேன்..உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகின்றேன்..

 16. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Thooya said…படித்தேன் அண்ணா..அதனால்தான் ஏமாற்றம் என்றேன்..//காலம் புரிய வைக்கும். அதுவரையில் பொறுத்திரு மகளே.. //உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகின்றேன்..//ஆனால், இதுதான் முதல் வருகை என்பதையும் நினைவில் கொள்ளவும்..

 17. சக்திவேல் Says:

  தமிழ் விரும்பி யின் நம்பிக்கை சிலிர்க்க வைக்கின்றது. நம்பிக்கை உயிர்ப்பெறும் காலம் வந்துகொன்டிருக்கின்றது. நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள் சகோதரர்களே!!!

 18. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //சக்திவேல் said…தமிழ் விரும்பியின் நம்பிக்கை சிலிர்க்க வைக்கின்றது. நம்பிக்கை உயிர்ப் பெறும் காலம் வந்துகொன்டிருக்கின்றது. நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள் சகோதரர்களே!!!//எப்படி..? போரை தொடர்ந்து நடத்தி இருக்குறவங்களையெல்லாம் சாகடிச்சிட்டு அப்புறம் கடைசியா சுதந்திர ஈழத்துல யார்தான் இருப்பான்னு நினைக்குறீங்க..?

 19. வெத்து வேட்டு Says:

  somebody asked why SLArmy is not letting Jaffna Tamil leave..actually most of Jaffna Tamils left with LTTE and came back to Army’s area :)Army is putting restriction to see who is leaving and coming back…but LTTE STOPPED people from “leaving” them :)LTTE and their supporters are the biggest liers..they change stories to fit them …

 20. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வெத்து வேட்டு said…somebody asked why SLArmy is not letting Jaffna Tamil leave.. actually most of Jaffna Tamils left with LTTE and came back to Army’s area:) Army is putting restriction to see who is leaving and coming back… but LTTE STOPPED people from “leaving” them:)//LTTE and their supporters are the biggest liers..they change stories to fit them …//புலிகள், சிங்கள ராணுவம் இரண்டுமே மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தி விளையாடக் கற்றுக் கொண்டுவிட்டன. இருவரில் பொய் சொல்வது யார் என்று சதவிகிதக் கணக்கில்தான் பின் தங்கியிருக்கிறார்கள்..

 21. Anonymous Says:

  இக்கட்டுரையில் உண்மை இருக்குமெனில் ஏன் வவுனியாவில் வன்னியில் இருந்து வந்த அகதிகள் தாய் வேறு , ஆண்கள் வேறு, பெண்கள் வேறு என பிரிக்கப்படுகிறார்கள். யார் யார் எங்கு இருக்கிறார்கள் என அறிய விடாமல் அரசு தடுப்பதேன். ஏன் உறவினர்கள் , நண்பர்கள், பத்திரிகையாளர்கள் சந்திக்க அரசு விடவில்லை.? பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் அரச கூலிப்படைகளால் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள் என்பது தான் உண்மை. இதனை கடைசியாக கொல்லப்பட்ட சிங்கள பத்திரிகையாளரின் மனைவி சோனாலி கூட கனேடிய சி .பி சி தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருந்தார். இந்த உண்மைகளை சொன்ன சிங்கள பத்திரிகையாளரின் உயிர் எடுக்கப்பட்டது. அவரின் இரு மாதமே திருமணமான மனைவி நாட்டை விட்டு ஓட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை சிங்களவருக்கே எனில் தமிழரின் நிலையை சொல்லவும் வேண்டுமா?நுணா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: