"விடுதலைப்புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதிகள்" – இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் பேட்டி

12.11.2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

எனதருமை அண்ணன் ராவணன், ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் வெளிவந்துள்ள இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் அவர்களின் பேட்டியினை அனுப்பி “இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாதா.. இதுவும் இலங்கை பிரச்சினை பற்றிய மாதிரிதான் இருக்கு..” என்று உரிமையாகக் கடிந்து கொண்டுள்ளார்.

எல்லா கருத்துக்களுக்கும் மாற்றுக் கருத்து ஒன்று உண்டு என்கிற கருத்துச் சுதந்திரத்தைப் பேணிக் காப்பதில் வலைப்பதிவர்கள் என்றைக்கும் சளைத்தவர்களில்லை என்பதினால் அதனை இங்கே பதிவிடுகிறேன்.

தம்பி சரவணா,

இது கூட ஏதோ இலங்கை தொடர்புடையது போல உள்ளது?

தமிழக காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்து, ஈழத் தமிழர்களின் சார்பில் கோரிக்கைகளை எடுத்து வைக்கிறார்கள். விரைவில் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வரவிருக்கின்ற சூழ்நிலையில், இந்தக் கூட்டமைப்பைச் சேர்ந்த இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கத்தை சந்தித்தோம். ஈழப் பிரச்சினை தொடர்பான நம் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இங்கே!

“விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே இலங்கையில் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று இலங்கை அதிபர் ராஜபக்சே மீண்டும் மீண்டும் கூறி வருகிறாரே…?

விடுதலைப் புலிகளுக்கு எதிரானது என்று கூறிக் கொண்டாலும்கூட அது இலங்கை தமிழ் மக்களை அழிக்கின்ற இனப்படு கொலைக்கான யுத்தம் என்பதே எங்கள் கருத்து. இதைத்தான் நாங்கள் இலங்கை பாராளுமன்றத்திலும் கூறியுள்ளோம்; வெளியிலும் கூறியுள்ளோம். அதுதான் உண்மை.

இலங்கை அதிபர் தற்போது “4டி’ பாலிஸியை அறிவித்துள்ளார். அதன்படி புலிகளுக்கு எதிரான நடவடிக்கையே “முதல் டி’ (demilitarisation) ஆக இருக்கிறது. தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முதலில் இது முக்கியம் என்கிறாரே…!

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலேயே இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. ஈழத் தமிழர் தலைவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை அமல்படுத்தாமல் விட்டார்கள். அதனால்தான் ஆயுதப் போராட்டமே உருவெடுத்தது. அதற்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அதை விடுத்து அழிப்பதோ, பலவீனப்படுத்துவதோ முடியாத காரியம்.

“விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை வேறு, தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு வேறு’ என்றோ, “4டி’ என்றெல்லாமோ சொல்வதெல்லாம் வெறும் ஏமாற்று வேலை. முன்பு பிரதமராக இருந்த பிரேமதாசாகூட “மூன்று சி’ (consultation, consensus, and compromise)என்று சொன்னார். இவர் “4டி’ என்று சொல்கிறார். இப்படிப்பட்ட”ஏ’,”பி’,”சி’,”டி’க்களை நாங்கள் பார்த்துவிட்டோம். ஒட்டுமொத்தமாக தமிழின மக்களை அடிமைப்படுத்தி ஏமாற்ற நினைக்கும் சிங்கள ஆட்சியாளர்களின் மனநிலையைத்தான் இது காட்டுகிறது.

இந்தியா இலங்கை ஒப்பந்தம்; 13வது சட்டத் திருத்தம்; அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு என்று பல தீர்வுகள் முன் வைக்கப்பட்டன. இந்நிலையில் தமிழர்களுக்கு உண்மையான தீர்வுதான் என்ன?

இப்படிச் சங்கிலித் தொடர் போல் பல பிரேரணைகள் வந்தாலும், தமிழர்களின் உணர்வுகளை இலங்கை அரசு மதிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு காலத்தில் இலங்கையில் தமிழ் அரசுகள் தனி அரசுகளாக இருந்தன. இந்தியா சுதந்திரம் பெற்ற போது ஜின்னா பிரிவினை கேட்டதுபோல், இலங்கை சுதந்திரம் அடைந்தபோதே எங்களுடைய தலைவர்கள் கேட்டிருந்தால் தமிழினத்திடம் தனி ஆட்சி இருந்திருக்கும்.

ஆனால் ஒன்றாக வாழ முடியும் என்று நம்பினோம்; நாங்கள் ஏமாற்றப்பட்டோம். சமஷ்டி ஆட்சியை நாங்கள் கேட்டோம். அதுவும் கிடைக்கவில்லை என்ற பிறகுதான் தனிநாடு கோரிக்கை எழுந்தது. இப்பிரச்சினைக்கு 13வது அரசியல் சட்ட திருத்தமோ,அரைகுறை அரசியல் தீர்வோ தீர்வாக அமைய முடியாது. இடைக்கால அரசியல் அமைப்போ, கூட்டு இணைப்பு ஆட்சி (Confederation) என்ற அடிப்படையிலோ பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசு விரும்பினால் எங்கள் மக்கள் பரிசீலிப்பார்கள். விடுதலைப்புலிகளும் நிச்சயமாக அதை பரிசீலிப்பார்கள்.

கூட்டு இணைப்பு ஆட்சி பற்றி சற்று விரிவாகச் சொல்லுங்கள்…?

கான்ஃபெடரேஷன் என்று சொன்னால் இரண்டு பிரதமர்கள் இருப்பார்கள். அதில் தமிழரும் பிரதமராக இருப்பார்.இந்த முறையில் பாதுகாப்பு, வெளிவிவகாரம் போன்றவை பொதுவான விஷயங்களாக இருக்கும். இதை ஏற்றுக்கொள்ள இலங்கை தயார் என்றால் அதை நாங்கள் பரிசீலிக்க முடியும்.

இதுபோன்ற ஓர் அமைப்பு அடங்கிய தீர்வை, 1995ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா அவர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் போது, லண்டனில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்று கொடுத்தது. 1995ல் பரிசீலிக்க முடியும் என்றால் 2008ல் நிலைமை மோசமடைந்துள்ள சூழ்நிலையில் ஏன் அந்த கான்ஃபெடரேஷன் பற்றி பரிசீலிக்கக்கூடாது என்பதுதான் எங்களுடைய கேள்வி.

ஆனால் அதற்கு இலங்கை அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும். 225 எம்.பி.க்களில் 60க்கும் குறைவான எம்.பி.க்களை மட்டுமே தன் கட்சியில் வைத்துக் கொண்டு கூட்டணி ஆட்சி நடத்தும் அதிபர் ராஜபக்சேவால் இது போன்ற தீர்வைக் கொடுக்க முடியுமா?

அவர் கட்சிக்கு குறைந்த எம்.பி.க்கள் இருந்தாலும் ஆட்சி நடத்த அவருக்கு பெரும்பான்மை இருக்கிறது. அது பிரச்சினையல்ல. அதிபர் ராஜபக்சே அதைச் செய்ய விரும்பவில்லை என்பதுதான் இங்கே தெளிவு. ஏனென்றால் “இந்திய இலங்கை’ ஒப்பந்தப்படி ஏற்பட்ட இரு மாகாண இணைப்பு (கிழக்கு-வடக்கு மாகாணம்) செல்லாது என்று இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அத்தீர்ப்பிலேயேகூட “இது சட்ட ரீதியாக ஓர் டெக்னிக்கலான விஷயத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பு. இணைப்பு வேண்டுமென்றால் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொள்ளலாம்’என்றே கூறப்பட்டது. அரசுக்கு சாதாரணப் பெரும்பான்மை இருக்கிறது. அதற்கும் மேல் ரணில் விக்ரமசிங்கேயும், நான் உள்பட 22 தமிழ் எம்.பி.க்களும் அப்படியொரு தீர்மானம் வந்தால் ஆதரிப்போம் என்று அறிவித்திருந்தோம்.

அது மாதிரி சூழ்நிலையில்,மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி வந்துவிடுகிறது. அப்படியிருந்தும் “மாகாண இணைப்பு’ விஷயத்தில் இந்தியப் பேரரசின் ஒப்பந்தத்தையே கிழித்து குப்பைக் கூடையிலே வீசியவர் அதிபர் ராஜபக்சே. இவருடைய நடவடிக்கையை ஏன் இந்தியா இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் எங்களுக்கு வேதனையாக இருக்கிறது.

தற்போது, “தமிழக முதல்வருக்கு இலங்கை வருமாறு அழைப்பு விடுப்பேன்’ என்று அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். அதுபோல் விடுதலைப் புலிகளோ, தமிழர் கட்சிகளோ முதல்வருக்கு அழைப்பு விடுப்பீர்களா?

அதிபர் ராஜபக்சேயின் அழைப்பு ஒட்டுமொத்த ஏமாற்று வேலை. ராஜபக்சேயின் வயது 63. முதலமைச்சர் கலைஞரின் அரசியல் அனுபவம் அதற்கும் மேலானது. அதிபரின் பசப்பு வார்த்தை மற்றும் ஏமாற்று வித்தைகளுக்கு மயங்க தமிழக முதல்வர் ஒன்றும் ஏமாளி அல்ல. ஆகவே முதல்வருக்கு அழைப்புவிடும் முன்னர் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை முதலில் மனிதர்களாக ராஜபக்சே நடத்தட்டும்.

அங்கு ஒற்றை ஆட்சி முறையைக் கைவிட்டு, பௌத்த மத ஆட்சியைத் துறக்கத் தயார் என்பதை அவர் முதலில் அறிவிக்கட்டும். மற்றபடி முதல்வர் உட்பட இந்தியாவிலும், தமிழகத்திலும் உள்ள கட்சிகள் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்; இலங்கைக்கு கண்காணிப்புக் குழுவாகச் சென்று இந்த விஷயங்களில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்பதே எங்கள் ஆசை.

அப்படியொரு அனுமதியை விடுதலைப் புலிகள் மற்ற தமிழர் அமைப்புகளுக்கு கொடுத்துள்ளார்களா?

2004ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில்,”தமிழீழ விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதிகள்’ என்றோம். அதற்கான ஆணையை மக்கள் தந்துள்ளார்கள். அதற்கு முன்பே 2002ல் சமாதான ஒப்பந்தம் செய்த போதே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், மறைந்த தமிழ்ச்செல்வன் ஆகியோர் எங்களுடன் கலந்து பேசித்தான் அரசியல் முடிவுகள் அனைத்தையும் எடுத்தார்கள். இன்னும் சொல்லப் போனால் நாங்கள் விடுதலைப் புலிகளுடன் கடந்த காலத்தில் ஆயுத ரீதியாக மோதிய இயக்கங்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் புலிகளால் கொல்லப்பட்டார். அதேபோல் தமிழீழ விடுதலை (டெலோ) இயக்கத்தின் தலைவர் ஸ்ரீசபாரத்தினம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எஃப்) தலைவர் பத்மனாபா ஆகியோர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்கள்.

இப்போது இந்த மூன்று கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலே சேர்ந்து செயல்படுகிறோம். நான்காவதாக காலஞ்சென்ற குமார் பொன்னம்பலம் அவர்களின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் இந்தக் கூட்டமைப்பில் இருக்கிறது. ஆயுத மோதல்களில் ஈடுபட்ட நாங்கள் எல்லாம் ஒற்றுமைப்பட்டு முன்னேறி வருகிறோம் என்பதுதான் உங்கள் கேள்விக்கு பதில்.

ஆனாலும் மற்ற தமிழர் இயக்கங்கள் பேசுவதை வைத்துக்கொண்டு புலிகளை நம்ப முடியாது என்ற நிலை இந்தியாவிலும், தமிழகத்திலும் இருக்கிறதே…?

மற்ற இயக்கங்கள் இந்திய அரசுடன் ஒரு தீர்வைக் கண்டால் அதை புலிகள் ஏற்கமாட்டார்கள் என்ற கருத்தில் நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் மாறி வருகின்ற சூழ்நிலையில் விடுதலைப் புலிகளும், பல விஷயங்களில் மாற்றம் அடைந்துள்ளார்கள். கடந்த காலங்களிலே அவர்கள் ஒரு சில தவறுகள் செய்திருக்கலாம்.

இன்றைக்கு அவர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நாங்கள் மனப்பூர்வமாக நம்புகின்றோம். இன்றைய சர்வதேச சூழ்நிலையில், விடுதலைப்புலிகள் அப்படியொரு பின்னடைவு செய்தால் (ஏற்காவிட்டால்)அது இந்தியா போன்ற நாடுகளிலும், சர்வதேச அளவிலும் விடுதலைப் புலிகளைக் கடுமையாகப் பாதிக்கும். ஆகவே நிச்சயமாக அந்தத் தவறை அவர்கள் செய்ய மாட்டார்கள். இந்திய அரசு தலையிட்டு வரும் முடிவினை நிச்சயம் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கும், மக்களுக்கும் இருக்கிறது.

ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு புலிகளிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. தமிழக தலைவர்களை மிரட்டுவது தீர்வுக்கு உதவுமா?

புலிகள் பெயரிலே ஒரு சிலர் மிரட்டல்கள் விடுவது, ஈழத்தமிழர் போராட்டத்தை சிதைப்பதற்காக ஈழத் தமிழர்களுக்கு எதிரான சக்திகள் செய்யும் வேலை. ஏனென்றால் இந்திய மண்ணிலோ, தமிழக மண்ணிலோ எந்த விதமான வன்முறைச் செயலிலும் இனி புலிகள் ஈடுபட மாட்டார்கள் என்பதை எங்களால் அறுதியிட்டுச் சொல்ல முடியும்.

புலிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால்கூட ஒரு சதவிகிதம்கூட இந்திய மண்ணில் வன்செயல் செய்யமாட்டார்கள். அது பற்றி நினைத்துப் பார்க்கவே மாட்டார்கள். இதுபற்றி நாங்கள் ஏற்கெனவே அவர்களுடன் பேசியிருக்கின்றோம். தமிழ்ச்செல்வனின் மரண சடங்கிற்கு பின்னர் நவம்பர் 6ம் தேதி புதிய பொறுப்பாளர் நடேசன் அவர்கள், “நான் தலைவர் பிரபாகரனிடம் பேசியிருக்கிறேன். இந்தியாவுக்கு எதிரான சக்திகள் நமக்கு ஆயுத உதவி செய்ய முன் வந்தார்கள்.

அதை தலைவர் வேண்டாம் என்று கூறி விட்டார். தலைவரைப் பொறுத்தமட்டில் இந்தியா நமக்கு உதவி செய்யவில்லை என்றால்கூட பரவாயில்லை. இலங்கை அரசுடன் போராடி அழிவை சந்திக்கும் சூழ்நிலை வந்தால்கூட நாம் இந்தியாவுக்கு எதிரான சக்திகளிடமிருந்து ஆயுதம் வாங்கக் கூடாது’ என்றார். இந்தச் செய்தியை இந்திய மக்களுக்குச் சொல்லுங்கள்” என்று எங்களிடம் சொன்னார். இதை இப்போது பகிரங்கமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் தமிழக மற்றும் இந்திய மக்களுக்குச் சொல்ல விரும்புகிறோம்.

விரைவில் இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே. அதற்கு முன்பு கிழக்கு மாகாணத்தில் தமிழ் டி.ஐ.ஜி. ஒருவரை நியமித்துள்ளார். இது பற்றியெல்லாம் என்ன கூற விரும்புகிறீர்கள்?

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையன் “மாநிலப் போலீஸ் சர்வீஸ் வேண்டும்’ என்றார். அது 13 வது அரசியல் சட்டத் திருத்தத்திலும் இருக்கிறது. அதைக் கொடுக்க விரும்பாமல் தமிழ் டி.ஐ.ஜி.யாக சங்கர் என்பவரை நியமித்துள்ளார். பிள்ளையன் கோரிக்கையைத் திசை திருப்பவே இப்படிச் செய்துள்ளார் அதிபர்.

இது ஒரு தீர்வாகாது. இந்த சங்கரை பொன்சேகாவாக மாற்ற அதிபருக்கு எவ்வளவு நாள் ஆகும்? ஆகவே, இனி மேலாவது பிள்ளையனும், கருணாவும் அதிபர் ராஜபக்சேயின் உண்மை நிறத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ராஜபக்சே இந்தியாவுக்கு வரும்போது, “முதலில் யுத்தத்தை நிறுத்துங்கள்’ என்று இந்தியா அவரிடம் சொல்ல வேண்டும். ஏனென்றால் நாங்கள் நிம்மதியாக அங்கே கஞ்சி குடிக்க விரும்புகிறோம்.

போர் நிறுத்தம் இல்லையென்றால் அங்குள்ள அப்பாவித் தமிழினத்தை முற்றிலும் அழித்து விடுவார்கள். பிறகு இந்தியா அனுப்பும் 800 டன் உணவுப் பொருள்கள் ஈழத்தமிழரின் வாய்க்கரிசிக்குத்தான் பயன்படும்! தமிழர்களுக்கு வாய்க்கரிசி போட இந்தியா துணை போக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இங்கே இருந்து சுட்டது:

http://www.tamilanexpress.com/cover/cover.asp

“என்னவென்று படித்து ஒரு ஆயிரம் பக்கத்திற்கு இலங்கை தமிழ் எம்.பி சிவாஜிலிங்கத்திற்கு நீங்கள் எழுதும் பகிரங்க வேண்டுகோளைப் படிக்க ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியோடு கூறி விடை பெறுவது..

ராவணன்.

23 பதில்கள் to “"விடுதலைப்புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதிகள்" – இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் பேட்டி”

 1. வெண்தாடிதாசன் Says:

  புலிகளை ஆதரித்து பதிவிட்ட டுபாக்கூர் தமிழரை உடனடியாக கைது செய்து நாடு கடத்த வேண்டும் என்று அகில உலக stanjoe ரசிகர் மன்ற சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.

  டுபாக்கூர் தமிழரை கைது செய்யும் வரை தூங்க போவதில்லை என்று சிங்கம் EVKS அறிக்கை வெளியிட்டு உள்ளதாக பதிவுலக சிங்கம் sanjai அறிவிப்பு.

 2. வெத்து வேட்டு Says:

  “அதை தலைவர் வேண்டாம் என்று கூறி விட்டார். தலைவரைப் பொறுத்தமட்டில் இந்தியா நமக்கு உதவி செய்யவில்லை என்றால்கூட பரவாயில்லை. இலங்கை அரசுடன் போராடி அழிவை சந்திக்கும் சூழ்நிலை வந்தால்கூட நாம் இந்தியாவுக்கு எதிரான சக்திகளிடமிருந்து ஆயுதம் வாங்கக் கூடாது’ என்றார். இந்தச் செய்தியை இந்திய மக்களுக்குச் சொல்லுங்கள்” என்று எங்களிடம் சொன்னார். இதை இப்போது பகிரங்கமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் தமிழக மற்றும் இந்திய மக்களுக்குச் சொல்ல விரும்புகிறோம்.”

  தலைவரை வைச்சு காமெடி கீமெடி பண்ணலேயே……

 3. ஆட்காட்டி Says:

  யதார்த்தங்கள் பலருக்கும் புரிவதில்லை.

 4. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வெண்தாடிதாசன் said…
  புலிகளை ஆதரித்து பதிவிட்ட டுபாக்கூர் தமிழரை உடனடியாக கைது செய்து நாடு கடத்த வேண்டும் என்று அகில உலக stanjoe ரசிகர் மன்ற சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.
  டுபாக்கூர் தமிழரை கைது செய்யும் வரை தூங்க போவதில்லை என்று சிங்கம் EVKS அறிக்கை வெளியிட்டு உள்ளதாக பதிவுலக சிங்கம் sanjai அறிவிப்பு.//

  ஏன்யா இந்தக் கொலை வெறி.. நான் உள்ள போனா உங்களுக்குத்தானய்யா செலவு.. கஷ்டம்..

  சஞ்சய்கிட்ட சொல்லுங்க.. கோயம்புத்தூர்ல இருந்து வாராவாரம் வந்தாகணும்னு.. சும்மா கையை வீசிட்டு வரப்படாது.. எதையாச்சும் அள்ளிக்கிட்டு வரணுமாக்கும்..

  ஆமா.. அதென்ன டுபாக்கூர் தமிழன்.. எவ்ளோ அழகா உண்மைத்தமிழன்னு பேர் வைச்சிருக்கே.. ஏம்பா இம்சை பண்றீங்க..

 5. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///வெத்து வேட்டு said…
  “அதை தலைவர் வேண்டாம் என்று கூறி விட்டார். தலைவரைப் பொறுத்தமட்டில் இந்தியா நமக்கு உதவி செய்யவில்லை என்றால்கூட பரவாயில்லை. இலங்கை அரசுடன் போராடி அழிவை சந்திக்கும் சூழ்நிலை வந்தால்கூட நாம் இந்தியாவுக்கு எதிரான சக்திகளிடமிருந்து ஆயுதம் வாங்கக் கூடாது’ என்றார். இந்தச் செய்தியை இந்திய மக்களுக்குச் சொல்லுங்கள்” என்று எங்களிடம் சொன்னார். இதை இப்போது பகிரங்கமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் தமிழக மற்றும் இந்திய மக்களுக்குச் சொல்ல விரும்புகிறோம்.”//

  தலைவரை வைச்சு காமெடி கீமெடி பண்ணலேயே……///

  அதானே.. எனக்கும் கொஞ்சம் டவுட்டாத்தான் இருக்கு..

 6. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ஆட்காட்டி said…
  யதார்த்தங்கள் பலருக்கும் புரிவதில்லை.//

  இப்போது பிரச்சினையே இதுதான் ஸார்..

  புரிந்தாலும் அவரவர் அவரவர் வசதிக்கேற்ப புரிந்து கொள்கிறார்கள். பொதுத்தன்மை எந்தவொரு விஷயத்திலும் உருவாக மறுக்கிறது..

 7. கொழுவி Says:

  இந்தியாவுக்கு எதிரான சக்திகள் நமக்கு ஆயுத உதவி செய்ய முன் வந்தார்கள்.

  அதை தலைவர் வேண்டாம் என்று கூறி விட்டார்.//

  இது முதற்தடவையல்ல
  இது முன்பும் ஒருதடவை நடந்தது.

 8. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  இது புலி ஆதரவுப் பதிவாகப் போய்விட்டது..

  அதனால் மைனஸ் குத்து இல்லாமல், ப்ளஸ் குத்துக்கள்தான் விழுந்துள்ளன.

  என்னவொரு கருத்து சுதந்திரம்..

 9. kanaga Says:

  /இது புலி ஆதரவுப் பதிவாகப் போய்விட்டது..

  அதனால் மைனஸ் குத்து இல்லாமல், ப்ளஸ் குத்துக்கள்தான் விழுந்துள்ளன.

  என்னவொரு கருத்து சுதந்திரம்../

  எதுக்கு அழுகிறீர்கள் உன்மைத்தமிழரே. பிளசும் மைனசும் போடுவது அவரவர் கருத்துச்சுதந்திரம் இல்லையா தங்கள் பாரதபூமியிலே? மைனசுதான் விழவேண்டுமென்றோ புலி எதிர்ப்புத்தான் இருக்கவேண்டுமென்றோ உங்கள்விருப்பதை எல்லாம் பதிவு நேயர் விருப்பமாக எதிர்பார்ப்பது முறையல்ல அல்ல.

 10. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///கொழுவி said…
  //இந்தியாவுக்கு எதிரான சக்திகள் நமக்கு ஆயுத உதவி செய்ய முன் வந்தார்கள். அதை தலைவர் வேண்டாம் என்று கூறி விட்டார்.//
  இது முதற் தடவையல்ல. இது முன்பும் ஒரு தடவை நடந்தது.///

  தெரியாத விஷயம். தெரிந்து கொண்டேன்..

 11. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///kanaga said…
  //இது புலி ஆதரவுப் பதிவாகப் போய்விட்டது.. அதனால் மைனஸ் குத்து இல்லாமல், ப்ளஸ் குத்துக்கள்தான் விழுந்துள்ளன. என்னவொரு கருத்து சுதந்திரம்..//
  எதுக்கு அழுகிறீர்கள் உன்மைத்தமிழரே. பிளசும் மைனசும் போடுவது அவரவர் கருத்துச் சுதந்திரம் இல்லையா தங்கள் பாரத பூமியிலே? மைனசுதான் விழவேண்டுமென்றோ புலி எதிர்ப்புத்தான் இருக்க வேண்டுமென்றோ உங்கள் விருப்பதை எல்லாம் பதிவு நேயர் விருப்பமாக எதிர்பார்ப்பது முறையல்ல அல்ல.///

  உண்மைதான்.. எதிர்பார்ப்பது சரியல்ல.. நான் எதிர்பார்க்காத ‘குத்து’தான் இது..

 12. நல்லதந்தி Says:

  //எல்லா கருத்துக்களுக்கும் மாற்றுக் கருத்து ஒன்று உண்டு என்கிற கருத்துச் சுதந்திரத்தைப் பேணிக் காப்பதில் வலைப்பதிவர்கள் என்றைக்கும் சளைத்தவர்களில்லை என்பதினால் அதனை இங்கே பதிவிடுகிறேன்.//

  இந்த வாரச் சிரிப்பு! :))

 13. கொழுவி Says:

  அப்போது விரிவாக எழுத முடியவில்லை.

  உண்மைத் தமிழன் சார்
  உலகத்தில் எந்த நாடும் ஜென்டில்மென் பொலிட்டிக்ஸ் நடாத்தவில்லை. இந்தியா உட்பட
  யாரை யார் எப்போ எப்பிடி கவிழ்க்கலாம் என்றுதான் அலைகிறார்கள்.
  முன்பு நேரடியாக படையெடுத்து போய் தமது விருப்பத்தை நிறைவேற்றினார்கள்.
  இப்போது பொருளாதார அரசியல் வழிகளில் மற்றய நாடுகளில் ஏதோ விதத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

  இப்பிடியான நிலையில் இந்தியாவோடு சீண்ட விரும்பும் ஏதோ ஒரு நாடு புலிகளை தொடர்பு கொள்வதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

  புலிகளோடு யாரும் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் அவர்கள் இல்லையென்று நீங்கள் கருதினால் அது உங்கள் தவறு.
  புலிகள் பணம் கொடுத்து ஆயுதங்களை எங்கோ ஏதோ நாடுகளில் வாங்குகிறார்கள் என்பதுவும் அவை கப்பல்களில் முல்லைத்தீவில் வந்து இறங்கின / இறங்குகின்றன என்பதுவும் உங்களுக்குத் தெரியாததல்ல.

  ஆனால் இந்திய மக்கள் தம் எதிரிகளாகக் கருதும் நாடுகளில் இருந்து ஆயுதங்களைப் பெறுவது நீண்ட கால நோக்கில் பாதகமானது என்பதை புலிகள் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்தும் வெளிப்படுத்தியுமிருக்கிறார்கள்.

  இன்னுமொரு தகவல்
  புலிகளின் ஆயுதக் கப்பல்கள் வந்த போதெல்லாம் அது சில தடவைகள் இந்திய கடற்படைகளால் தாக்கியுமழிக்கப் பட்டிருக்கின்றன. அப்போதெல்லாம் பதில் தாக்குதல் நடாத்த வேண்டாம் என்ற ஆணை கப்பலில் இருந்தவர்களுக்கு சென்றிருக்கிறது என்பதை நீங்கள் அறியாது இருக்கலாம்.

  1996 பெப்ரவரியில் புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்று இந்தியக் கடற்படையால் தாக்கி அழிக்கப் பட்ட செய்தி உங்களுக்கு தெரியாது இருக்கலாம்.

  எந்த வகையிலும் இந்தியாவோடு ஆயுத வழியில் மோதுவதில்லை என்பதில் புலிகள் தெளிவாய் இருக்கிறார்கள்.

  ஒரு தனி நாட்டுக்காய் போராடுபவர்களுக்கு – அந்த நாட்டின் எதிர்காலம் பிராந்தியம் அமைவு அரசியல் பொருளாதாரம் எல்லாம் குறித்த நோக்கமும் கொஞ்சமும் இருக்கும் சார்

 14. ஆட்காட்டி Says:

  //உலகத்தில் எந்த நாடும் ஜென்டில்மென் பொலிட்டிக்ஸ் நடாத்தவில்லை. இந்தியா உட்பட
  யாரை யார் எப்போ எப்பிடி கவிழ்க்கலாம் என்றுதான் அலைகிறார்கள்.
  முன்பு நேரடியாக படையெடுத்து போய் தமது விருப்பத்தை நிறைவேற்றினார்கள்.
  இப்போது பொருளாதார அரசியல் வழிகளில் மற்றய நாடுகளில் ஏதோ விதத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.//

  confession of a economic hit man- ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் , த்மிழிலயே இருக்கு. படியுங்கோ.

 15. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///நல்லதந்தி said…
  //எல்லா கருத்துக்களுக்கும் மாற்றுக் கருத்து ஒன்று உண்டு என்கிற கருத்துச் சுதந்திரத்தைப் பேணிக் காப்பதில் வலைப்பதிவர்கள் என்றைக்கும் சளைத்தவர்களில்லை என்பதினால் அதனை இங்கே பதிவிடுகிறேன்.//
  இந்த வாரச் சிரிப்பு! :))///

  ஏன் சிரிப்புங்குறேன்..

  எல்லாரையும் ஒரே மாதிரி நினைக்கக் கூடாதுங்குறேன்..

  தந்தியாரே.. என்ன கொஞ்ச நாளா சைலண்ட்டா இருக்கீங்க.. ஆணி அதிகமோ..?

 16. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கொழுவி said…
  அப்போது விரிவாக எழுத முடியவில்லை.
  உண்மைத் தமிழன் சார்.. உலகத்தில் எந்த நாடும் ஜென்டில்மென் பொலிட்டிக்ஸ் நடாத்தவில்லை. இந்தியா உட்பட. யாரை யார் எப்போ எப்பிடி கவிழ்க்கலாம் என்றுதான் அலைகிறார்கள். முன்பு நேரடியாக படையெடுத்து போய் தமது விருப்பத்தை நிறைவேற்றினார்கள். இப்போது பொருளாதார அரசியல் வழிகளில் மற்றய நாடுகளில் ஏதோ விதத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

  இப்பிடியான நிலையில் இந்தியாவோடு சீண்ட விரும்பும் ஏதோ ஒரு நாடு புலிகளை தொடர்பு கொள்வதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. புலிகளோடு யாரும் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் அவர்கள் இல்லையென்று நீங்கள் கருதினால் அது உங்கள் தவறு. புலிகள் பணம் கொடுத்து ஆயுதங்களை எங்கோ ஏதோ நாடுகளில் வாங்குகிறார்கள் என்பதுவும் அவை கப்பல்களில் முல்லைத்தீவில் வந்து இறங்கின / இறங்குகின்றன என்பதுவும் உங்களுக்குத் தெரியாததல்ல.

  ஆனால் இந்திய மக்கள் தம் எதிரிகளாகக் கருதும் நாடுகளில் இருந்து ஆயுதங்களைப் பெறுவது நீண்ட கால நோக்கில் பாதகமானது என்பதை புலிகள் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்தும் வெளிப்படுத்தியுமிருக்கிறார்கள்.

  இன்னுமொரு தகவல்.

  புலிகளின் ஆயுதக் கப்பல்கள் வந்த போதெல்லாம் அது சில தடவைகள் இந்திய கடற்படைகளால் தாக்கியுமழிக்கப் பட்டிருக்கின்றன. அப்போதெல்லாம் பதில் தாக்குதல் நடாத்த வேண்டாம் என்ற ஆணை கப்பலில் இருந்தவர்களுக்கு சென்றிருக்கிறது என்பதை நீங்கள் அறியாது இருக்கலாம்.

  1996 பெப்ரவரியில் புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்று இந்தியக் கடற்படையால் தாக்கி அழிக்கப் பட்ட செய்தி உங்களுக்கு தெரியாது இருக்கலாம்.

  எந்த வகையிலும் இந்தியாவோடு ஆயுத வழியில் மோதுவதில்லை என்பதில் புலிகள் தெளிவாய் இருக்கிறார்கள்.

  ஒரு தனி நாட்டுக்காய் போராடுபவர்களுக்கு – அந்த நாட்டின் எதிர்காலம் பிராந்தியம் அமைவு அரசியல் பொருளாதாரம் எல்லாம் குறித்த நோக்கமும் கொஞ்சமும் இருக்கும் சார்.//

  நான் அப்படி நினைக்கவில்லை ஸார்..

  இப்படியெல்லாம் மக்களுக்கு நேரடித் தொடர்பில்லாத விஷயங்களிலெல்லாம் மோதல் போக்கைத் தொடராதவர்கள்.. நாட்டின் தலைவரை மட்டும் ஏன் கொலை செய்தார்களாம்.. அதன் பின் மக்கள் அதை மறந்து அடுத்து வரும் தலைவர்களும் மறந்துபோய் புதிய நாடு அமைந்தால் இரு தரப்பு நட்பும் வளரும் என்று தொலைநோக்கில் நினைத்தார்களோ..? புரியவில்லை..

 17. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///ஆட்காட்டி said…
  //உலகத்தில் எந்த நாடும் ஜென்டில்மென் பொலிட்டிக்ஸ் நடாத்தவில்லை. இந்தியா உட்பட யாரை யார் எப்போ எப்பிடி கவிழ்க்கலாம் என்றுதான் அலைகிறார்கள். முன்பு நேரடியாக படையெடுத்து போய் தமது விருப்பத்தை நிறைவேற்றினார்கள். இப்போது பொருளாதார அரசியல் வழிகளில் மற்றய நாடுகளில் ஏதோ விதத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.//
  confession of a economic hit man- ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் , த்மிழிலயே இருக்கு. படியுங்கோ.///

  ஆட்காட்டி ஸார்.. லின்க் எங்கே..?

 18. ஆட்காட்டி Says:

  ஐயோ அது புத்தகம். கொப்பி உரிமை இல்லாட்டி உள்ள போட்டிருவான். இது என்ன இந்தியாவா?

 19. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ஆட்காட்டி said…
  ஐயோ அது புத்தகம். கொப்பி உரிமை இல்லாட்டி உள்ள போட்டிருவான். இது என்ன இந்தியாவா?//

  என்ன ஆட்காட்டி ஸார்.. ஒரு தமிழனா இருந்து இதுக்கெல்லாம் போய் பயப்படலாமா..

  எத்தனை பேரை பார்த்திருக்கோம்.. இதையும் கொஞ்சம் பார்த்திரலாமே..

  அதை ஸ்கேன் பண்ணி அனுப்பி வைங்க.. நான் படிச்சிட்டு நல்லாயிருந்தா, பப்ளிஷ் பண்ணிர்றேன்..)))))))))))))

 20. ஆட்காட்டி Says:

  முடியாது. நான் இருக்கும் நாட்டில் தடை. இந்தியப்பெறுமதி 100 மட்டுமே>

 21. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ஆட்காட்டி said…
  முடியாது. நான் இருக்கும் நாட்டில் தடை. இந்தியப் பெறுமதி 100 மட்டுமே//

  வேறு எவ்வழியில் பெறலாம்.. புத்தகப் பதிப்பகம், எங்கு கிடைக்கும், விலை, தலைப்பு இவற்றைக் குறிப்பிடுங்களேன்..

 22. ஆட்காட்டி Says:

  விடியல் பதிப்பகம், விலை ரூ100, ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம், மூலம் ஜோன் பெர்க்கின்சன், தமிழில் இரா.முருகவேள். (confessions of an economic hit man.) முடிஞ்சா e-mule போட்டு இறக்குங்கோ.

 23. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ஆட்காட்டி said…
  விடியல் பதிப்பகம், விலை ரூ100, ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், மூலம் ஜோன் பெர்க்கின்சன், தமிழில் இரா.முருகவேள். (confessions of an economic hit man.) முடிஞ்சா e-mule போட்டு இறக்குங்கோ.//

  சரிங்க ஸார்.. வாங்கிப் படிச்சு அப்புறமா உங்களுக்கு பதில் போடுறேன்.. தகவலுக்கு நன்றி..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: