Archive for ஒக்ரோபர், 2007

தமிழென்ன..? ஆங்கிலமென்ன? – ஒரு எதிர்வினை

ஒக்ரோபர் 12, 2007

12-10-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


‘தமிழ் எம்.ஏ.’ என்கின்ற ‘கற்றது தமிழ்’ திரைப்படம் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் மீதான ஒரு நம்பிக்கையை இன்னும் கொஞ்சம் கூட்டியுள்ளது என்னவோ உண்மைதான்.
‘ராம்’ என்கின்ற புதிய இயக்குநர் புதிய வடிவத்தில், புதிய கோணத்தில் இத்திரைப்படத்தை நம் பார்வைக்கு வைத்துள்ளார். அத்திரைப்படம் பற்றிய எனது விமர்சனம் இங்கே(http://truetamilans.blogspot.com/2007/10/blog-post_12.html).
திரைப்படத்தில் சொல்லப்பட்ட ‘பல’ விஷயங்களில் ஒன்றான கல்லூரியில் தமிழை முதன்மைப் பாடமாகப் படித்து, ஆசிரியர் வேலை தேடியலையும் இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலமே இல்லை என்ற ரீதியில் ‘கற்றது தமிழ்’ படத்தின் இயக்குநர் ராம் தொட்டுள்ள ஒரு விஷயம்தான், இன்றைக்கு தமிழ்நாட்டில் பரவலாக ஒரு பேச்சை ஏற்படுத்தியிருக்கிறது.
“தமிழ் படித்தவர்களெல்லாம் மாதம் 2000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்ய, ஆங்கிலம் படித்தவன் மாதம் 30000 ரூபாய் சம்பளம் வாங்குவது எப்பேர்ப்பட்ட வெட்கக்கேடு..” என்கிறார் இயக்குநர்.
தமிழ் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் எதிர்பார்க்கும் சம்பளம் கிடைக்கவில்லை எனில் அதற்கு என்ன காரணம் என்று இயக்குநர் வேறு கோணத்தில் யோசித்திருந்தால், அவருக்கு இன்னொரு திரைப்படத்திற்கான கரு கிடைத்திருக்கும்.
தமிழ் மொழி தமிழ்நாட்டில் இன்னமும் பேச்சு மொழியாகவே இருந்து வருகிறது.. தொழில் மொழியாகவோ, பயிற்று மொழியாகவோ இன்னமும் 100 சதவிகிதம் முழு மூச்சுடன் வளரவில்லை. காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.. பொருளாதார நுகர்வால் விளைந்த ஆசை.

தமிழ் மொழியை தமிழ்நாட்டிற்குள்தான் பயன்படுத்தியாக வேண்டும் என்பதால், அதற்கேற்றவாறுதான் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
BPO என்கின்ற தொழிலையும், கம்ப்யூட்டர் என்ற தொழிலையும் உருவாக்கியவர்கள் ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். உலகம் பரவிய அந்த இணைப்பு மொழி இன்றைக்கு நிலாவரையிலும் வியாபித்திருக்கின்றபோது அதன் தாக்கத்தை நாமும் உணரத்தான் வேண்டும்.
அதற்காக அவர்களைக் குற்றம் சொல்லி என்ன புண்ணியம்..?
பட்டப்படிப்பில் தமிழை பாடமாக எடுத்துப் படிப்பவர்களுக்கு அடுத்து என்ன வேலை கிடைக்கும்..? அவர்கள் தொடர்ந்து மேலும் டீச்சர் டிரெயினிங் முடித்தால் தமிழாசிரியர் வேலை கிடைக்கலாம்.
இப்போது அரசு பள்ளிகளில் மட்டுமே ஆசிரியர்களுக்கான சம்பளம் நியாயமானதாக உள்ளது. மற்றபடி தெருவுக்குத் தெரு முளைத்திருக்கும் பள்ளிகளில் ஒரே ஆசிரியர்தான் அனைத்துப் பாடங்களையும் எடுக்கிறார். அந்த அளவிற்குத்தான் அவர்கள் தங்களது பள்ளியின் செலபஸை வைத்துக் கொள்கிறார்கள். சற்று பெரிய தனியார் பள்ளிகளிலும் 5000-த்திற்கு மேல் சம்பளம் இல்லை.
ஆனால் இதை கம்யூட்டர் பொறியாளர்களுடன் எதற்கு இயக்குநர் ஒப்பிட முயன்றார் என்பது எனக்குப் புரியவில்லை. இரண்டுமே வேறு வேறு விளைவுகளை கொண்டவை என்பதை இயக்குநர் புரிந்து கொள்ளவில்லை.

இங்கே சம்பளம் என்பதே வரவை எதிர்பொறுத்துதான்.. அரசுப் பள்ளிகள் மக்களுக்காக நடத்தப்படுபவை. அவை தொழிலகங்கள் அல்ல. கல்வி நிறுவனங்கள்.. அங்கே லாப, நஷ்டம் பார்க்கவே முடியாது..
அரசுப் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களைப் போலவே சம்பளம் பெறுகிறார்கள். அதாவது அரசுப் பணியாற்றுகிறார்கள். என்ன பணி என்பதில்தான் கோட்டையில் வேலை செய்யும் ஒரு செக்ஷன் கிளார்க்கிற்கும், ஆசிரியனுக்கும் வேறுபாடுகள் எழுகின்றன.. அவ்வளவே..
ஆனால் ஒரு BPO கம்பெனியோ அல்லது சாப்ட்வேர் நிறுவனங்களோ அப்படி அல்ல.. அவை லாப நோக்கில் நடத்தப்படுபவை. அவைகள் செய்யக்கூடிய தொழில்களோ மிகப் பெரிதான பணத்தை கணக்கில் கொண்டு செய்யப்படுபவை. அப்படியாயின் அங்கே ஊழியர்களுக்கான சம்பளமும் உயர்ந்துதான் இருக்கும். இது தொழில் நியதி. இதில் நாடு, மொழி, இனம், கலாச்சாரம் என்பதற்கெல்லாம் சம்பந்தமே இல்லை.
அவர்கள் கேட்கின்ற பணத்தைக் கொடுக்கிறார்கள். கொடுப்பவர்கள் கேட்கின்ற வேலையை அவர்கள் செய்து தருகிறார்கள். அவ்வளவுதான்.. ஆனால் இணைப்பாக அவர்கள் இதற்கு பயன்படுத்தும் மொழி ஆங்கிலம். ஆகவே ஆங்கிலம் படித்தவர்களும், கணினி அறிவியல் பயின்றவர்களும் ராஜகுமாரர்களாக இருப்பது கண்கூடு.
தமிழாசிரியரால் இச்சமூகத்திற்கு என்ன செய்ய முடியும் என்ற நோக்கில் பார்த்தீர்களானால் ஒரு நல்ல மாணவனை உருவாக்க முடியும். அந்த அனைத்து மாணவர்களுமே தமிழாசிரியர்களாக சென்றடைவார்களா என்பது சந்தேகமே..
ஒரு மாணவன் தனக்கு எதில் அதிக ஆர்வமோ அதைத்தான் தேடிச் செல்கிறான். அதில் அவனை குற்றமே சொல்ல முடியாது.. இந்த ஆர்வத் தேடலில் அவனுடைய குடும்பச் சூழலும் இணைந்திருக்கும்.
தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக வைக்க வேண்டும் என்று சொல்லும்போதே மருத்துவம், மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுமே என்ற நோக்கில் இப்போதும் அது ஆய்வு நிலையில்தான் உள்ளது.
மிகப் பெரிய அளவுக்கு பணத்தைச் செலவழிக்கும் தகுதி கம்யூட்டர் சம்பந்தப்பட்டத் தொழில்களுக்குத்தான் உண்டு. இதில் தமிழுக்கு இடமே இல்லையே..
தமிழ் மொழியை மட்டுமே கருத்தில் கொண்டு எந்தத் தொழிலும் வடிவமைக்கப்படவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
தமிழிலேயே BPO கம்பெனி ஒன்றை நிறுவுவோம் என்று வைத்துக் கொள்வோம். அதை எவ்வாறு செயல்படுத்துவது..? தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு மாநில மக்கள் இந்தக் கம்பெனியை எப்படி பயன்படுத்திக் கொள்வார்கள்..?
ஒரு இந்தி மட்டுமே தெரிந்தவரோ, அல்லது தெலுங்கு மட்டுமே தெரிந்தவரோ அல்லது அரைகுறையாக தமிழறிந்த ஒருவரால் இந்தக் கம்பெனியின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்ன..?
முழுக்க முழுக்க தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே என் கம்பெனியின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சென்னையை மையமாகக் கொண்ட எந்த நிறுவனமும் சொல்லாது.
தமிழ் நம் மாநிலத்தைவிட்டுத் தாண்டாத சூழலில் இணைப்பு மொழியின் தேவையும் உயரத்தான் செய்யும். அந்த வகையில் ஆங்கிலத்தின் வளர்ச்சி கணக்கிலடாங்காதது..
கணினியில் இவ்வளவு வசதியும், வாய்ப்புகளும் கிடைத்தவிட்ட போதும்கூட இந்த நேரத்திலும் தமிழில் கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்யலாம் என்பதே தமிழறிந்த நம்மவர்களுக்கு இன்னமும் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது எனில் எந்த அளவிற்கு நாம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சாதாரண டீக்கடைகளில்கூட இப்போது வெளி மாநில கம்பெனிகளின் விளம்பரப் பலகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அங்கே அந்த டீக்கடைக்காரர் சொல்வது, “கடை வாடகைல பாதியாவது இதுல வருதுல்ல.. நான் ஏன் விடணும்..? ‘தமிழ்..’ ‘தமிழ்’ன்னு சொன்னாப்புல இங்க எல்லாத்தையும் குறைக்கவா போறாங்க.. அது பாட்டுக்கு அது.. இது பாட்டுக்கு இது..” என்பார்கள்.
தொழில் வாய்ப்புகளில் தமிழ்நாட்டிற்குள் மட்டுமே வரக்கூடிய வாய்ப்புகள் குறைந்து அகில இந்திய அளவிலும், வெளிநாடு வழியாகவும் செல்லவும், வரவும்கூடியவைகள்தான் அசுர வளர்ச்சியடைந்து வருகின்றன.
இதில் முதலிடம் பிடிக்கக்கூடிய சாப்ட்வேர் துறையும், ஆயத்த ஆடை தொழிலும் பல நாடுகளில் செய்யப்பட்டு வருகிறது. அங்கே தொழில் பெருக நமக்கு ஒரு இணைப்பு மொழி கண்டிப்பாக தேவைதான்..
தமிழ் மட்டுமே போதும் என்று நினைத்தால் திருப்பூர் பனியனும், டைட்டல்பார்க்கும் நமக்குத் தேவையில்லாத ஒன்றாகத்தான் இருக்கும்.
ஆனால் இதன் மூலம் கிடைக்கும் தொழில் வாய்ப்புகளில் எத்தனை, எத்தனை லட்சம் தமிழ் குடும்பங்கள் பயன் பெறுகின்றன என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
உலகம் முழுவதையுமே ஒரே இணைப்பின் மூலம் கொண்டு வர முடிந்திருக்கிறது என்றால் அது இப்போதைக்கு கணினி அறிவியல் மூலம்தான். இதைப் பயன்படுத்தி நாம் தமிழையே தற்போது மேம்படுத்தி வருகிறோம்.. இதை யாரும் மறுக்க முடியாது..
தமிழ் வழி சார்ந்து தொழில் வாய்ப்புகள் பெருகினால் மட்டுமே தமிழுக்கென்றே தனி அடையாளமும், அதற்குரிய பொருளாதார பலன்களும் கிட்டும். அது நடக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.
ஒவ்வொரு நாளும் விதவிதமான கண்டுபிடிப்புகள் உலகின் பல்வேறு மொழிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டிருக்க, நாமும் அதனுடே பயணப்பட்டுத்தான் போக வேண்டும்.
நம் மொழியே போதும்.. என் மொழியைத் தவிர வேறு எதுவும் வேண்டாம் என்று நாம் நினைத்தால் அது பூனை கண்ணை மூடிக் கொள்ளும் கதைதான்..
ஏற்றத்தாழ்வுகள் என்பது படிப்பின் மூலமும் கிடைக்கும் என்பதால்தானே மதிப்பெண்கள் என்ற ஒரு விஷயமே இருக்கிறது.. இல்லாவிடில் அனைவருமே தமிழில்தானே படிக்கிறார்கள். எதற்கு மதிப்பெண் என்று சொல்லிவிடலாமே..
தமிழாசிரியர்களுக்கான சம்பளம் குறைவு என்பதைப் போல் பல தனியார் பள்ளிகளிலும் மற்றப் பிரிவு ஆசிரியர்களுக்கும் சம்பளம் குறைவுதான்.. தமிழுக்கு மட்டுமே அல்ல. அதை இயக்குநர் சொல்ல மறந்துவிட்டார் என்றே நினைக்கிறேன்.
அதிலும் தமிழாசிரியராகப் படித்தவர்களுக்காவது தமிழைப் பயன்படுத்துவதற்கு பல்வேறு தளங்கள் காத்திருக்கின்றன. ஆனால் வரலாறு, புவியியல் படித்த ஆசிரியப் பயிற்சியாளர்களைக் கேட்டுப் பாருங்கள். தெரியும் அவர்களது சோகக் கதை..
அதைப் படமெடுக்க இன்னொரு இயக்குநர் யாராவது ஒருவர் முன் வருவார் என்று நினைக்கிறேன். அதுவரைக்கும் பொறுத்திருப்போம்.