கற்றது தமிழ்! திரை விமர்சனம்

12-10-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


பிரபாகரன் என்ற ஒரு இளைஞனுக்கு இளம் வயதில் ஏற்படுகின்ற சோதனைகள் அவனை எப்படியெல்லாம் வாழ்க்கையின் ஓரத்திற்குக் கொண்டு சென்றன என்பதை சொல்ல வந்த இயக்குநர் தனது முதல் திரைப்படம் என்கின்ற பய உணர்விலும், மாஸ் நடிகர் ஒருவரை நடிக்க வைத்திருக்கிறோமே என்கின்ற பயத்திலும் மனம் பிறழ்ந்த நோயாளி ஒருவரின் கதையாக மாற்றி ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்க மாட்டாத பின்னவீனத்துவ திரைப்படமாக மாற்றிக் காண்பித்திருக்கிறார். ஆனாலும்..

முதலில் தற்கொலை செய்யப் போகும் பிரபாகர் என்ற ஹீரோவைக் காட்டுவதிலிருந்து துவங்கும் கதையின் போக்கு பின்னவீனத்தனமான மாடலில் காட்சிகளை மாற்றிப் போட்டதில் ஏற்பட்ட குழப்பம்தான் படம் பற்றிய இன்றைய நிலைமைக்குக் காரணமாகிவிட்டது என்று நினைக்கிறேன். ஆனாலும்..

பள்ளிக்கூட வகுப்பறையில் மானம் பற்றிய வள்ளுவரின் குறளை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து அன்றைய தினமே ஒரு அவமானத்தைச் சந்திக்க நேரிடுகிறது பிரபாகரனுக்கு.

தமிழாசிரியர் என்பதற்காக அந்த இன்ஸ்பெக்டர் பொதுவிடத்தில் சிகரெட் பிடித்த ஹீரோ பிரபாகரனை ஸ்டேஷனுக்கு கொண்டு வரவில்லை. தனக்கு ஒரு நொடியில் ஏற்பட்ட ஒரு அவமானத்தைத் துடைக்க வேண்டி ஒரு அப்பாவியை வதைக்க முற்படுகிறார். அதற்குத் தோதாக கையில் சிக்கும் பிரபாகரன் ஜட்டியுடன் லாக்கப்பில் அமர வைக்கப்படுகிறார்.

ஏற்பட்ட இந்த அவமானத்தால் தற்கொலை முடிவுக்குச் செல்கிறார். அங்கேயிருந்து காப்பாற்றப்பட்டு காவல்துறையினரால் கஞ்சா கேஸ் போட்டு பத்து வருஷம் உள்ளே வைக்க முயற்சிக்கும் கடமை தவறாத நேர்மையான முயற்சியில், தப்பித்து ஓடுபவர் போகின்ற வழியில் ஏதோ குருவிகளைச் சுடுவதைப் போல் தனது மனம் பிறழ்ந்த நோயால் 22 கொலைகளைச் செய்வதாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்.

தனது பால்யகால காதலியைத் தேடிச் சென்று பார்த்துவிட்டு வெறுமனே திரும்பி வந்து, மீண்டும் ஒரு பிரார்த்தல் வீட்டில் அவளைக் கண்டெடுத்து தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

‘அரசன் அன்றே கொல்லுவான்; தெய்வம் நின்று கொல்லும்’ என்பதற்கேற்ப அவரைத் தேடி போலீஸ் வரும்போது தனது காதலியுடனே என்றோ ஒரு நாள் தன் ஆசைக்குரிய நாய்க்குட்டி தனது ஆயுளை எதிர்வரும் ரயிலில் மோதி முடித்துக் கொண்டதைப் போல் தங்கள் வாழ்வையும் முடித்துக் கொள்ள ஓடுவதோடு கற்றது தமிழ் முடிகிறது..

ஜீவாவின் நடிப்பைப் பொறுத்தமட்டில் இத்திரைப்படம் வெளிக்கொணர்ந்திருக்கும் அவருடைய புதிய தேடல் முயற்சிகளை மென்மேலும் தொடரட்டும் என்று வாழ்த்துவோம்.. அருமையான நடிப்பு. அவருக்குள் இருப்பதை, இருந்ததை வெளிக்கொணர்ந்திருக்கும் இயக்குநரைப் பாராட்டியே தீர வேண்டும்.

குறிப்பாக, அந்த மருத்தவரை கொலை செய்வதற்கு முன் அவரிடம் பேசியே படபடக்க வைக்கும் இடத்தில் ஜீவாவின் நடிப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

இன்னொன்று இரவில் மதுவருந்திவிட்டு காரில் வரும் BPO Staff ஒருவரைப் புரட்டியெடுக்கும் காட்சியில் மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் நடத்தையை ஒத்திருக்கிறது அவருடைய பாடி லாங்குவேஜ். மிகவும் பிரயத்தனப்பட்டிருக்கிறார் ஜீவா என்றே சொல்ல வேண்டும்.

ஆனாலும் இந்த இடத்தில் ஒரு விஷயம்.. அதென்ன கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்கள் அனைவரையும் ‘தொடை நடுங்கி பயில்வான்’களாகவே நமது தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..? ஏன் என்பது எனக்குப் புரியவில்லை. இதிலும் அப்படித்தான்.. அந்த BPO ஊழியர் அநியாயத்திற்குப் பயப்படுவதைப் போல் காட்டியிருப்பது மிகைப்படுத்தப்பட்டச் செயல் என்று நினைக்கிறேன். இன்னொன்று, இத்திரைப்படத்தின் இயக்குநருக்கு நம் வலைத்தளத்தில் இருக்கும் ‘வீராதிவீர’, ‘சூராதிசூர’, ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’களாக இருக்கும் கம்ப்யூட்டர் பொறியாளர்களைப் பற்றித் தெரியாது போலிருக்கிறது.. தெரிந்திருந்தால் இப்படி எடுத்திருக்க மாட்டாரோ, என்னமோ..? ஆனாலும்..

சின்ன வயது ஹீரோவாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் சிறுவனும், சிறுமியும் மிகப் பொருத்தம்.. அதிலும் வாலிப வயது ஜீவாவைவிட அந்தச் சின்னப் பையன் “நிசமாவே சொல்றியா” என்ற கேள்விக்கு செய்யும் தலையசைப்பை அருமை என்றே சொல்லலாம்.

சிறு வயசு ஆனந்தியும், பிரபாகரும் செல்லும் அந்த மலை உச்சி காட்சியின் பிரமிப்பில் கேமிரா சொக்கத்தான் வைத்துவிட்டது. அவ்வளவு அழகான லொகேஷன். கூடவே அந்தச் சிறுவன் சொல்லும் அழகழகான பொய்கள்..
இப்படி காட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக யுவான் ஷ¤வாங்கிடம் சொல்லச் சொல்ல நமக்குக் கொடுக்கும் விதம் இங்கே தமிழகத்தில் புதுசு என்று நினைக்கிறேன்.

திரையுலக வரலாற்றிலேயே ஒரு ஹீரோயின் அழுதபடியே அறிமுகமாவது இந்தப் படத்தில்தான் என்று நினைக்கிறேன். தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு வரும் குளோஸ்அப் காட்சியில் ஹீரோயினின் நடிப்பில் புதுமுகம் என்பதே தெரியவில்லை..

இசையமைப்பும், ஒலிப்பதிவும், ஒளிப்பதிவும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு இயக்குநருடன் ஒத்துழைத்துள்ளன..

யுவான் சுவாங்கிடம் கதையைச் சொல்லும்போது அவ்வப்போது கேமிராவின் கோணத்தை மாற்றி அந்த விசுக்கென்ற ஒலியமைப்பில் காட்சிகளைத் துவக்குகின்ற விஷயங்கள் இயக்குநர் விஷயமுள்ளவர் என்பதை உணர்த்துகிறது. காட்சிகளின் அழுத்தம் இங்கேதான் இருக்கிறது…

தமிழாசிரியராக வரும் அழகம்பெருமாளின் காட்சிகள் குறைவு என்றாலும் அழுத்தமும் குறைவு என்றாலும் நடிப்பு மிகைப்படுத்தப்படாதவை என்றே சொல்லலாம்..

ஆனால்..

திடீர் திடீரென்று மாறுகின்ற காட்சிகளாலும், கேரக்டர்களின் தொடர்பில்லாத முடிவுகளாலும் கதையின் போக்கு எதை நோக்கிச் செல்கிறது என்பதே புரியாமல் போய்விட்டது.

முதல் குழப்பம் முதல் சில நிமிடங்களிலேயே ரசிகர்களுக்கு கிடைத்துவிட்டது. போலீஸ் ஸ்டேஷனில் பிரபாகர் போலீஸாரிடம் அடிபடுவது சிகரெட் பிடித்ததனால் கொண்டு வரப்பட்ட காட்சிக்காகவா.. அல்லது தற்கொலைக்கு முயன்று பிடிபட்டதனால் ஏற்பட்ட விளைவா என்பதை வசனத்தில் ஒரு வரியில் சொல்லி முடித்துவிட்டார் இயக்குநர். ஆனாலும்..

தொடர்ந்து வரும் காட்சிகளை கங்காரு ஸ்டைலில் தவ்வ வைப்பதற்காக வசனங்களின் மூலம் கதையை நகர்த்தும் யுக்தியை இயக்குநர் தேர்ந்தெடுத்தது சரிதான் என்றாலும், இன்னமும் அலுமினிய தகரடப்பா கதவுகளும், மக்கர் செய்யும் ஸ்பீக்கர்களையும் கொண்ட இன்றைய சராசரி தமிழகச் சினிமாத் தியேட்டர்களில் இந்த வசனங்கள் எந்த அளவிற்கு ரசிகர்களின் காதுகளை எட்டும் என்பது இயக்குநருக்குத் தெரியாமல் போனது அவருடைய துரதிருஷ்டம். ஆனாலும்..

வீட்டில் மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கும் ஹீரோயினிடம் பிரபாகர் “நான் இருக்கிறேனே..” என்றவுடன் “நிசமாவா சொல்றே..” என்று உடனுக்குடன் நிஜ உலகிற்கு மாறுகின்றவிதம் அதுவரையில் கேரக்டரோடு ஒன்றிப் போயிருந்த ரசிகர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது போல் இருந்தது. ஆனாலும்..

இதே போல், ஆனந்தியைத் தேடிக் கண்டுபிடித்து பேசிவிட்டு விடைபெறும்போது “எனக்கு சீக்கிரம் வேலை கிடைச்சிரும்.. அப்புறம் வந்து உன்னையும், அம்மாவையும் கூட்டிட்டுப் போறேன்..” என்று பிரபாகர் சொல்லும்போது ஆனந்தி கேட்கும் “நிசமாவா சொல்ற..” என்பதிலும் நாடகத்தனமாகிவிட்டது. ஆனாலும்..

பிரார்த்தல் வீட்டில் பிரபாகர் தன்னோடு வரும்படி அழைக்கும்போது ஆனந்தி இதே போன்று சொல்லும்போதும் இது தொடர்கதையான ஒன்றாகி சப்பென்றானது. ஆனாலும்..

தமிழ் படிப்பதற்கான காரணமாக பிரபாகரன் சொல்வதில் அத்தனை வலு இல்லை என்பது உண்மை. அதனால்தான் இயக்குநரால் தமிழ் வாத்தியாரால் தமிழ்ச் சமூகத்தில் நிம்மதியாக வாழ முடியாது என்று நிதர்சனமாக சொல்ல முடியவில்லை. ஆனாலும்..

தமிழாசிரியர் மீதிருந்த பாசத்தால் மட்டுமே தமிழ் படிக்க விரும்புவதாகச் சொல்லும் பிரபாகர் பின்பு ஏன் தமிழுக்கும், ஆங்கிலத்திற்குமிடையே பொருளாதார அளவுகோல் எடுத்தார் என்பதும் தெரியவில்லை.(இது பற்றி எனது தனிப்பதிவு http://truetamilans.blogspot.com/2007/10/blog-post_3711.html) ஆனாலும்..

கம்ப்யூட்டர் பொறியாளரான தனது முன்னாள் ஹாஸ்டல் நண்பனைத் தேடி அவனது அலுவலகம் செல்லும் பிரபாகர் அங்கேயே தனது கிறுக்குத்தனமான நடவடிக்கைகளைத் துவக்க. அவருடைய மனப்பிறழ்வு நோய் எங்கே, எதனால் துவங்கியது என்பதே புரியாமல் போய் அவர் மீதான அனுதாபம் வராமல் குழப்பம்தான் வந்தது. ஆனாலும்..

BPO ஊழியனைத் தாக்கும்போது பிரபாகர் பேசுகின்ற பேச்சுக்கள் அனைத்துமே தமிழ், ஆங்கிலம் என்ற ரீதியிலேயே போய்விட இப்போது மனப்பிறழ்வு இந்த சம்பள வித்தியாசத்தால் விளைந்ததா அல்லது போலீஸ் ஸ்டேஷனில் அவர் பட்ட அவமானத்தினாலா என்பதும் தெரியாமல் அந்த இடத்தில் தியேட்டரில் பல இடங்களில் விசிலடிச்சான் குஞ்சுகளின் கை தட்டலை மட்டும் அள்ளிக் கொண்டுள்ளார் பிரபாகரான ஜீவா.. ஆனாலும்…

பிரபாகர் இரவில் தனியே நடந்து செல்லும்போது ‘பிரார்த்தல் வீடு.. அலறல் சப்தம்.. ஜீவா உள்ளே சென்று ஒரு பெண்ணைக் காப்பாற்றுவது. அந்தப் பெண்ணே அவருடைய ஆனந்தியாக இருப்பது’ என்பதெல்லாம் வலிந்து திணிக்கப்பட்ட காட்சியமைப்புகளைக் கொண்டு எடுக்கப்பட்டதாகவே தெரிகிறது.. ஆனாலும்..

இடையிடையே வந்த டாக்குமெண்ட்ரித்தனமான பேட்டிகள், பேச்சுகளும் சற்று ஆயாசத்தைத் தருகின்றன. ஆனாலும்..

இயக்குநருக்கு தமிழ் மொழியின் மீதிருந்த ஆர்வம் படத்தில் பயன்படுத்தியிருந்த பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் மூலம் தெரிய வருகிறது என்றாலும், விசிலடிச்சான் குஞ்சுகள் கூட்டம், கூட்டமாக ஓடி வந்தால்தான் கல்லா பெட்டி நிறையும் என்பதையும் கொஞ்சம் மனதில் வைத்திருந்திருக்கலாம்..

ஆனாலும்..

ஒரு ஊர்..

ஒரு வில்லன்..

ஒரு கோவில்..

அடியாட்கள்..

‘எத்தனை பேர்..?’
‘ஒருத்தன்தான்..’
என்ற எதிர்பார்த்த டயலாக்குகள்..

ரோட்டோரம் ஐஸ்கிரீம் சாப்பிடும் ஒரு பெண்ணைப் பார்த்த இரண்டாவது நிமிடமே சுவிஸ்லார்ந்து சென்று டூயட் பாடுவது..

பாடல் காட்சிகள் என்ற போர்வையில் குனிய வைத்து, நிமிர வைத்து பெண்களின் அங்கங்களை அப்பட்டமாகக் காட்டும் புண்ணியக் காட்சிகள்..

விட்டால் கழன்று விழுந்தாலும் விழுந்துவிடும் போன்ற உடையணிந்து தமிழ்க் கலாச்சாரத்தைக் காக்கும் ஹீரோயினின் ஆட்டம்..

இடைவேளையில் சாப்பிட்ட தின்பண்டம் செரிக்க விசிலடிச்சான் குஞ்சுகளை ஆர்ப்பரிக்க வைக்க ஒரு குத்தாட்டம் என்ற போதை வஸ்து..

70 கிலோ எடையுள்ள பத்து பேரை 50 கிலோ எடையுள்ள ஹீரோ பறந்து பறந்து தாக்கி, கொஞ்ச நஞ்சமிருக்கும் காதையும் கிழிக்கும் சண்டைக் காட்சிகள்..

ஒரே ஒரு சென்டிமெண்ட்டல் சீன் வைத்து ரசிகர்களை சீட்டிலேயே உட்கார வைத்துவிடலாம் என்ற மென்ட்டல் நினைப்பில் வைத்த காட்சிகள்..

இப்படி எதுவுமேயில்லாமல் பாடல்களில்கூட தமிழை உச்சஸ்தாயியில் உச்சரிக்க வைத்து குறிப்பிடும்படியாக அனைத்து நடிகர்களிடமிருந்தும் நடிப்பை வாங்கியிருக்கும் இந்த இயக்குநரை பாராட்டியே தீர வேண்டும்..
பாராட்டுகிறேன்..

வாழ்த்துகிறேன்..

இனியும் நல்லதொரு திரைப்படங்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்..

11 பதில்கள் to “கற்றது தமிழ்! திரை விமர்சனம்”

 1. வவ்வால் Says:

  உங்கள் பல ஆனால்களின் முடிவாக தற்போதைய தமிழ் சினிமாவின் மசலாத்தனங்களை பார்க்கும் போது இது வித்தியாசமாகவும், நல்லா இருக்காப்போலவும் இருக்கு. ஆனால் ,காசு கொடுத்து திரையரங்கிற்கு வரும் ரசிகனை ஏமாற்றும் மற்றொரு அரைவேக்காட்டுப்படமே இதுவும்!இதில் இயக்குனரின் முயற்சியை வேண்டுமானாலும் பாராட்டலாம்.இதுவே அவர் ஒரு இரண்டு படங்கள் இயக்கிய பின்னர் இக்கதையை எடுத்து இருந்தால் இப்படி தொடர்பற்ற கதைப்போக்குடன் , இருந்து இருக்காது. மனதில் இருப்பதை திரையில் காட்டுவதில் இருக்கும் அனுபவக்குறைவு தான் இதற்கு காரணம். ஆனால் படத்தில் வரும் எல்லாக்கதாப்பாத்திரமும் தனித்தீவுகளாக இருக்கிறது.கதாநாயகன் தாய் ,கூட ஒரு வயசான தம்பதி( தாத்தா பாட்டி) இறந்ததுமே அவருக்கு தந்தையை தவிர யாருமே இல்லாதது போல காட்டிவிடுவது. ஆசிரியர் இறந்ததும், அவருக்கும் யாரும் இல்லாதது போல அவர் புல்லட் எடுத்துக்கொண்டு வந்து விடுகிறார் ஜீவா. கதாநாயகி குடும்பமும் அப்படித்தான், யாரோ ஒரு மாமா வட இந்தியாவில் இருக்கிறார்( ஹீரோயின் விலைமாதாக மாறுவாள் என்பது பெரும்பாலோரால் யூகிக்க முடிந்தது)இப்படி எல்லா பாத்திரமும் நிர்க்கதியான நிலையிலேயே காட்டி படத்தின் முடிவை சொல்லி விடுகிறார்.சரி ராணுவத்தில் இருக்கும் அப்பா இறக்கிறார் என ஒரு கடிதத்தோடு விடுகிறார், இராணுவ வீரருக்கான பண உதவி, பணிக்காலத்தில் இறந்தால் இராணுவ வீரரின் வாரிசுக்கு வேலை எல்லாம் தருவார்களே . அப்படி எல்லாம் லாஜிக்கா படம் எடுத்தால் இப்படி வருமா கதை!

 2. செந்தழல் ரவி Says:

  இப்போ டவுண்டோட் செய்துட்டேன்…பார்த்துடறேன், அப்புறம் இங்கன வந்து பின்னூட்டுறேன்…

 3. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வவ்வால் said… உங்கள் பல ஆனால்களின் முடிவாக தற்போதைய தமிழ் சினிமாவின் மசலாத்தனங்களை பார்க்கும் போது இது வித்தியாசமாகவும், நல்லா இருக்காப் போலவும் இருக்கு. ஆனால், காசு கொடுத்து திரையரங்கிற்கு வரும் ரசிகனை ஏமாற்றும் மற்றொரு அரைவேக்காட்டுப் படமே இதுவும்!//வவ்வால்ஜி.. என்ன நீங்களே இப்படி சொல்லிட்டீங்க..? மலைக்கோட்டைக்கு இது எவ்வளவு பரவாயில்லை வவ்வால்ஜி.. அதுனாலதான் ஆனாலும்ன்ற இடத்துல அழுத்தமா சொல்லிருந்தேன்.. கர்மமா எதையும் செய்யாம, புதுசா எந்த அசிங்கத்தையும் கத்துக் கொடுக்காம புதுசா ஒரு ட்ரீட்மெண்ட்டை கொடுத்திருக்கும் அவரை கண்டிப்பா நாம பாராட்டத்தான் வேணும்..//இதில் இயக்குனரின் முயற்சியை வேண்டுமானாலும் பாராட்டலாம்.இதுவே அவர் ஒரு இரண்டு படங்கள் இயக்கிய பின்னர் இக்கதையை எடுத்து இருந்தால் இப்படி தொடர்பற்ற கதைப் போக்குடன் , இருந்து இருக்காது. மனதில் இருப்பதை திரையில் காட்டுவதில் இருக்கும் அனுபவக் குறைவுதான் இதற்கு காரணம்.//பக்கா உண்மை வவ்வால்ஜி.. இயக்குநரின் சிறு குழப்பமே படத்தை மிகவும் பாதித்துவிட்டது..//ஆனால் படத்தில் வரும் எல்லாக் கதாப்பாத்திரமும் தனித்தீவுகளாக இருக்கிறது. கதாநாயகன் தாய் ,கூட ஒரு வயசான தம்பதி( தாத்தா பாட்டி) இறந்ததுமே அவருக்கு தந்தையை தவிர யாருமே இல்லாதது போல காட்டிவிடுவது. ஆசிரியர் இறந்ததும், அவருக்கும் யாரும் இல்லாதது போல அவர் புல்லட் எடுத்துக்கொண்டு வந்து விடுகிறார் ஜீவா. கதாநாயகி குடும்பமும் அப்படித்தான், யாரோ ஒரு மாமா வட இந்தியாவில் இருக்கிறார்( ஹீரோயின் விலைமாதாக மாறுவாள் என்பது பெரும்பாலோரால் யூகிக்க முடிந்தது) இப்படி எல்லா பாத்திரமும் நிர்க்கதியான நிலையிலேயே காட்டி படத்தின் முடிவை சொல்லி விடுகிறார்.//இது படத்தின் திரைக்கதையோட்டத்திற்கு தேவையில்லாதது என்று அவர் நினைத்துவிட்டார்.. அந்த ஆஸ்பத்திரி சீனில்கூட பாருங்கள்.. தேவையில்லாமல் எடுத்தவுடனேயே மார்ச்சுவரி காவலன்.. போவியா.. தமிழாசிரியர்ன்னு வந்துட்டான் என்பான்.. இதெல்லாம் தமிழ் என்ற மொழியை சிறுமைப்படுத்துவதாக நினைத்து இயக்குநர் புகுத்தியிருக்கும் தேவையற்ற வசனங்கள் என்று நான் நினைக்கிறேன்.. உடனடேயே அங்கேயே ஒரு இயற்கையான சண்டைக் காட்சியை வைத்து இப்போது பயத்துடன் அதே காவலன் வழி விடுவதைப் போல் நிஜ சினிமாவுக்கும் போய்விட்டார். //சரி ராணுவத்தில் இருக்கும் அப்பா இறக்கிறார் என ஒரு கடிதத்தோடு விடுகிறார், இராணுவ வீரருக்கான பண உதவி, பணிக்காலத்தில் இறந்தால் இராணுவ வீரரின் வாரிசுக்கு வேலை எல்லாம் தருவார்களே . அப்படி எல்லாம் லாஜிக்கா படம் எடுத்தால் இப்படி வருமா கதை!//இந்த மாதிரி லாஜிக் இக்கதைக்கு தேவையில்லை என்று அவர் நினைத்திருக்கலாம். ‘வெயில்’ படத்தின் பாதிப்பில் வசனத்தாலேயே கதையை நகர்த்த முடிவு செய்திருக்கிறார். ஆனால் வெயிலில் இருந்த ஒற்றை வரி கருவை மட்டும் இவர் மறந்துவிட்டார் என்று நினைக்கிறேன்..

 4. Anonymous Says:

  யுவான் ஷ¥வாங்கைப் பற்றி ஒரு வரிகூட எழுதவில்லையே..

 5. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //செந்தழல் ரவி said… இப்போ டவுன்லோட் செய்துட்டேன்…பார்த்துடறேன், அப்புறம் இங்கன வந்து பின்னூட்டுறேன்…// ரொம்ப சின்னதாதானப்பா எழுதியிருக்கேன். அதுக்கே இப்படி ஒரு பில்டப்பா..?

 6. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said… யுவான் ஷ¥வாங்கைப் பற்றி ஒரு வரிகூட எழுதவில்லையே..//ஸாரி அனானி.. இப்போது சொல்கிறேன்.. அதீதமான நடிப்பெல்லாம் இல்லாமல் வெகு இயல்பாக நடித்துள்ளார் யுவான் ஷவாங்காக நடித்த கருணாஸ். அதிலும் பிரபாகரனை இடையிடையே இண்டர்மீடியேட் செய்யும்போதெல்லாம் கலகலக்க வைக்கிறார். ஆனால் அதுவே படத்திற்கு மைனஸ் பாயிண்ட்டாகப் போய்விட்டது.இந்தப் படத்தின் மீது தயாரிப்பாளரையும், இயக்குநரையும், ஹீரோவாக நடித்த ஜீவாவையும் விட ஒரு கதாபாத்திரத்தில் யுவான் ஷவாங் என்ற கேரக்டரில் நடித்த கருணாஸ் அதீத நம்பிக்கை வைத்துவிட்டார்.தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய வீட்டை சமீபத்தில் விற்றுவிட்டு இந்தப் படத்தின் தமிழ்நாடு முழுவதுக்குமான உரிமையை வாங்கி படத்தினை வெளியிட்டுள்ளார்.அவருடைய தைரியத்தையும், மன உறுதியையும் பாராட்டியே ஆக வேண்டும்..

 7. Srikanth Says:

  //அதென்ன கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்கள் அனைவரையும் ‘தொடை நடுங்கி பயில்வான்’களாகவே நமது தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..?//சார் சார்…அதற்குள் நம்ம தலைவர் சிவாஜி! படத்துல software engineerஆ 200 கோடி சம்பாதிச்சு மக்களுக்கு சேவை செய்ய கிளம்பியதை மறந்துட்டீங்களே?!

 8. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Srikanth said… //அதென்ன கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்கள் அனைவரையும் ‘தொடை நடுங்கி பயில்வான்’களாகவே நமது தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..?//சார் சார்… அதற்குள் நம்ம தலைவர் சிவாஜி! படத்துல software engineerஆ 200 கோடி சம்பாதிச்சு மக்களுக்கு சேவை செய்ய கிளம்பியதை மறந்துட்டீங்களே?!///மறக்கலை சாமி.. ஒரு ‘சிவாஜி’தான வந்துச்சு.. ஒம்போது ‘சிவாஜி’ வரலியே.. இப்போது வருகின்ற பல திரைப்படங்களிலும் ஒழுக்கமாக ஆபீஸ் போய் வேலை பார்க்கும் டை கட்டின ஆசாமி என்றாலே தொடை நடுங்கிகள் என்பது போலத்தான் நமது இயக்குநர்கள் சித்தரிக்கிறார்கள்.உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா.. இப்போ இந்த சிவாஜி படம் வந்த பின்னாடி பட்டிதொட்டியெங்கும் தெரிந்துவிட்டது கம்ப்யூட்டர் படிச்சு வெளிநாட்டுக்குப் போனா காசை அள்ளலாம் என்று.. ஒரு விஷயத்திற்கு எப்போதுமே இரண்டுவிதமான பார்வைகள் நிச்சயம் இருக்கும்..

 9. வீர சுந்தர் Says:

  மற்ற தமிழ் படங்களுடன் ஒப்பிடும் போது, ‘கற்றது தமிழ்’ தரமானதாகத் தோணலாம். ஆனால், படத்தில் சொல்ல நிறைய தவறான கருத்துக்களைத் திணித்திருக்கிறார்கள். உதாரணம், ஐ.டி. துறையின் மீதான தாக்குதல்.சில குறைகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், வரவேற்கப்பட வேண்டிய படம்தான்.

 10. John P. Benedict Says:

  நேற்று “கற்றது தமிழ்” பார்த்தேன். சில நல்ல கருத்துக்களை சமுதாயத்திற்கு கொடுக்கத் துணிந்த இயக்குநர் ராம் அவர்களைப் பாராட்டுகிறேன். ஆனால், அந்தக் கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சொல்லவில்லை. “எனக்குப் பிடித்தமாதிரி தான் நான் சொல்லுவேன்” என்ற பாணியில் தான் சொல்லியிருக்கிறார். அவரது சமீபத்திய பேட்டியும் அவரது இந்த “don’t care” attitude-ஐ வெளிப்படுத்துவதாகவே இருந்தது. இது ஒரு படைப்பாளிக்கு அழகல்ல. படத்தில் பயமுறுத்தும் காட்சிகளும், அடுக்கடுக்கான சோகங்களும், இரத்தமும் அதிகம். எதாவது காரணங்களைச் சொல்லி, ஹீரோ எத்தனைக் கொலைகளை வேண்டுமானாலும் செய்யலாம் எனும் பல படங்களைப் போலவே இந்தப் படமும் இருந்தது. “இந்தப் படம் ஆசியாவின் சிறந்த 5 படங்களுள் ஒன்று” என்று அவரே பீத்துகிறார். ராம் திருந்தவேண்டும்.

 11. Baby Pavan Says:

  அம்மாடி மாம்ஸ் இப்ப படிக்க ஆரம்பிச்சா நான் பெரிய பையன் ஆகும் போது தான் படிச்சி முடிக்க முடியும் போல இருக்கு…சரி சரி கோச்சிக்காதிங்க….உங்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: