கிரிக்கெட் வளர்த்த தமிழ் வர்ணனையாளர்கள்

08-10-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அன்றைய தினம் என்றைக்கும் போலவே என் குடும்பத்தாருக்குத் தெரிந்தாலும் எனக்கு மட்டும் ஸ்பெஷல்.. காலையில் வேகவேகமாக எழுந்து ரெடியாகி சாப்பாட்டை முடித்துவிட்டு கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு ரேடியோவின் அருகில் நான் உட்காரும் ‘அழகைப்’ பார்த்தவுடனேயே என் அக்கா கேட்பார், “ஓ.. இன்னிக்கு மேட்ச் இருக்கா..?” என்று.. “அப்புறம்.. டெஸ்ட் மேட்ச்சு…” என்பேன்.. அவ்வளவுதான் எனது பேச்சு.. அதற்குப் பின் மாலை 4.40 மணிக்கு மேட்ச் முடியும்வரை ரேடியோவே கதி.

நான் மட்டுமல்ல.. அன்றைக்கு இந்தியா முழுமைக்குமே இருந்த இளைய சமுதாயத்தினரை கட்டிப் போட்டிருந்தது கிரிக்கெட்.. எப்படி..?

கிரிக்கெட் கிரவுண்டின் சுற்றளவு எவ்வளவு..? பந்து எதனால் ஆனது..? பிட்ச் என்றால் என்ன? கிரிக்கெட் பேட் என்ன விலை..? அதை எப்படித் தயாரிக்கிறார்கள்? என்கின்ற கிரிக்கெட்டின் அடிப்படை தெரியாதவர்கள்கூட ரேடியோவில் தலை சாய்த்துப் படுத்துறங்கினார்கள் என்றால்… என்ன காரணம்? கிரிக்கெட்டா..? அல்லது பொழுது போகாமல் இருந்தார்களா..?

என்னைக் கேட்டால் இவை இரண்டுமில்லை.. மொழிதான் முதல் காரணம்.. என்பேன்.

ஆம்.. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டின் நகரப் பகுதிகளிலும், ரேடியோ கோலோச்சிக் கொண்டிருந்த கிராமப்புறங்களிலும் கிரிக்கெட் என்னும் விளையாட்டை வளர்த்தவர்கள் யாரெனில், கிரிக்கெட் வீரர்களைவிட கிரிக்கெட் போட்டியின் தமிழ் வர்ணனையாளர்கள்தான்.

காலை 9 மணிக்கெல்லாம் ரேடியோவில் நிகழ்ச்சிகள் முடிந்து, “மீண்டும் ஒலிபரப்பு, சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் பற்றிய நேரடி தமிழ் வர்ணனையோடு காலை 9.55 மணிக்குத் துவங்கும்..” என்ற அறிவிப்போடு முடிவடையும்.

இந்த 55 நிமிடத்திற்குள்தான் வீட்டினர் யாராக இருந்தாலும் என்னிடம் வேலை சொல்ல வேண்டும். அதற்கு மேல் என்றால், வீட்டில் ஒரு ‘இராமாயணம்’தான். என் தந்தையும் கொஞ்சம் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவர் என்பதால் அவரும் தயாராக இருப்பார்.

நேரம் நெருங்க, நெருங்க அடிவயிற்றில் ஒரு இனம் புரியாத சந்தோஷம். கிரிக்கெட் கேட்கப் போகிறேன் என்பதைவிட, எனக்குத் தெரிந்த மொழியில் கேட்கப் போகிறேன் என்கிற சந்தோஷம்தான் அதிகம்.

மணி 9.55 மணிக்கு ஒருவித அறிமுக இசையோடு ரேடியோ தனது ஒலிபரப்பைத் துவக்கும். முதலில், “வணக்கம். திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்.. நேரம் காலை 9 மணி 55 நிமிடங்கள். இப்பொழுது சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று துவங்கும் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் பற்றிய நேரடி ஒலிபரப்பு, இன்னும் சில நொடிகளில் சென்னையிலிருந்து ஒலிபரப்பாகும்..”

இந்த வரிகளைக் கேட்டதும் என்னையறியாமல் கை தட்டுவேன்.. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத மட்டற்ற ஒரு சந்தோஷம் அன்றைக்கு..

தொடர்ந்து, “நேயர்களே.. இப்பொழுது உங்களை சென்னை, எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கிற்கு அழைத்துச் செல்கின்றோம்..” என்று சென்னை வானொலி நிலையத்திலிருந்து பேசுவார்கள்..

இதுவரைதான் நான் நானாக இருப்பேன்.. இதற்குமேல் நான் பொம்மலாட்டக் கலைஞர்கள் போன்ற கிரிக்கெட் வர்ணனையாளர்களின் கையில்தான்.. அவர்கள் மதியம் லன்ச் பிரேக் விடும்போதுதான் எனது கவனமும் வீட்டுப் பக்கம் திரும்பும். அதுவரையில் நான் அவர்களது அடிமைதான்.. காரணம் அவர்கள் பேசிய தமிழ்.. தமிழ்.. தமிழ்..

முதலில் கேட்பது கிரிக்கெட் ரசிகர்களின் கூச்சலும், விசில் சப்தமும்தான்.. அப்போதே என்னை யாரோ மாயக் கம்பளத்தில் வைத்து தூக்கிச் சென்று ஸ்டேடியத்தில் அமர வைத்திருப்பது போல் தோன்றும்.

“வணக்கம் நேயர்களே.. சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திலிருந்து கூத்தபிரான் பேசுகிறேன்..” என்று முதல் குரல் ஒலிக்கும்.. அடுத்து அவர் என்ன பேசுவார் என்பதை நானே முடிவு செய்து ரேடியோ குரலுக்கு ஊடாக பேசுவேன்.

“இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்னும் சில நொடிகளில் துவங்க இருக்கிறது.. ‘பூவா’, ‘தலையா’ போட்டுப் பார்த்ததில் இங்கிலாந்து அணி டாஸ் ஜெயித்து, பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது.. முதலில் இரு அணியிலும் உள்ள வீரர்களைப் பற்றிப் பார்ப்போம்..” என்று சொல்லி இரு அணி வீரர்களின் பெயர்களையும் சொல்வார்.

அநேகமாக இந்திய அணி நான் ரேடியோவில் தமிழ் வர்ணனை கேட்கத் துவங்கிய காலக்கட்டத்தில் இப்படித்தான் இருந்தது என்று நினைக்கிறேன்.

சுனில் மனோகர் கவாஸ்கர், அன்ஷ¤மன் கெய்க்வாட், திலீப் வெங்க்சர்க்கார், குண்டப்பா விஸ்வநாத், சந்தீப் பாட்டீல், மொஹீந்தர் அமர்நாத், கபில்தேவ், கிர்மானி, யஷ்பால் சர்மா, ரோஜர் பின்னி, திலீப் தோஷி, கார்சன் காவ்ரி” என்று இருக்கும்.(என் நினைவில் இருக்கும்வரையிலும் எழுதியிருக்கிறேன்)

“வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சியளிக்கிறது.. போதுமான அளவு வெளிச்சம் மைதானத்தில் பரவியுள்ளது. ஸ்டேடியம் ரசிகர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிகிறது..” என்று கூத்தபிரான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே திடீரென்று ரசிகர்களின் கை தட்டல் ஓசை பலமாகக் கேட்கத் துவங்க.. முதல் பந்தை வீச கபில்தேவ் தயாராகிவிட்டார் என்பதை நான் புரிந்து கொள்வேன்.

“இதோ இந்தப் போட்டியின் முதல் பந்தை வீசுவதற்காக ஆயத்தமாகிறார் ஹரியானா சிங்கம் கபில்தேவ்.. ஆஜானுபாகுவான தோற்றம்.. நெடு நெடு என்ற உயரம்.. இதோ வாலாஜா சாலை முனையிலிருந்து தனது ஓட்டத்தைத் துவக்குகிறார் கபில்தேவ்.. குதிரையின் ஓட்டத்தைப் போல், படிப்படியாக, சீரான வேகம் பெற்று, வலக்கை விக்கெட்டின் மேல் வர பந்தை வீசுகிறார். பந்து off stemp-க்கு சற்று வெளியே விழுந்து செல்ல இயான் போத்தம்(என்று நினைத்துக் கொள்ளுங்கள்) அதை ஆடாமல் அப்படியே விட்டு விடுகிறார். ரன் எடுக்கும் வாய்ப்பு இல்லை…” என்று முதல் பந்திற்கான கமெண்ட்ரி முடிவடையும்.

நான் அப்போது பள்ளியில் படிக்கும் சிறுவன் என்பதனால் இந்த வார்த்தைப் பிரயோகங்கள் என்னைக் கட்டிப் போட்டிருந்தன. இதில் சொல்லப்பட்ட “ஆஜானுபாகுவான தோற்றம், நெடு நெடு என்ற உயரம்..” போன்ற வரிகள் ஒரு புதிய தமிழை எனக்கு அப்பொழுதே கற்றுக் கொடுத்தன.

கபில்தேவை புகைப்படத்தில் பார்த்திருப்பதினால் ‘குண்டா, உசரமா இருந்தா இப்படிச் சொல்வாங்க போலிருக்கு’ என்று நானே நினைத்துக் கொள்வேன்..

“படிப்படியாக, சீரான வேகம் பெற்று..” என்ற வரிகள் ஓடி வருவதை வர்ணித்துச் சொன்னவைகள் என்றாலும், ஒரு கவன ஈர்ப்பைச் செய்தன என்பதை மறுப்பதற்கில்லை.

“வலக்கை விக்கெட்டின் மேல் வர..” என்ற வரிகள் நிரம்பவே யோசிக்க வைத்த வரிகள். இதற்கான விளக்கத்தை நான் அப்போது விளையாடி வந்த கிரிக்கெட் டீம் கேப்டனும் நான் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரின் மகனுமான ஏசு அண்ணனிடம் பின்பு கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

வலது கையைத்தான் ‘வலக்கை’ என்றும், அம்பயர் நிற்குமிடத்தில் நிறுவப்பட்டிருக்கும் ஸ்டம்ப்புகளைத்தான் ‘விக்கெட்டுகள்’ என்றும் வர்ணிக்கிறார்கள் என்பது புரிந்தது. அதென்ன “மேல் வர..?” இதற்கும் ஒரு தனி விளக்கம் கிடைத்தது. பந்தைப் பிடித்து வீசுகின்ற கை, அந்த ஸ்டம்ப்புகளின் மேலே உயரத்தில் செல்வதைத்தான் “மேல் வர..” என்று வர்ணிக்கிறார்கள் என்பது புரிந்தது.

“வாலாஜா சாலை முனை, பட்டாபிராம் கேட் முனை” என்று இரண்டு இடங்களில் இருந்துதான், பந்து வீச்சாளர்கள் பந்து வீச வருவதாக வர்ணனையாளர்கள் சொல்வார்கள்.

‘அதென்ன வாலாஜா சாலை முனை, பட்டாபிராம் கேட் முனை..?’ என்று முனைப்புடன் விசாரித்து சென்னை எந்தப் பக்கம் இருக்கிறது என்பது கூடத் தெரியாத நிலையில் சேப்பாக்கம் ஸ்டேடியம் அமைந்திருக்கும் ரோட்டின் பெயர் ‘வாலாஜா ரோடு’ என்ற செய்தியை ஏதோ எனக்கு மட்டும்தான் தெரிந்த ரகசியம்போல் சக மாணவர்களுடன் வகுப்பறையில் கிசுகிசு பாணியில் பகிர்ந்து கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டது நினைவுக்கு வந்து தொலைகிறது..

தொடர்ந்து வர்ணனையில் “இதோ அடுத்த பந்தை வீச ஓடி வருகிறார் கபில்தேவ். வீசுகிறார். அளவு குறைந்து வந்த பந்து.. போத்தம் அதை மிக அழகாக மிட்ஆன் திசையிலே திருப்பி அடித்துள்ளார்.. பந்து எல்லைக் கோட்டை நோக்கிச் செல்கிறது. மொஹீந்தர் துரத்திச் செல்கிறார். இல்லை.. அவரால் பிடிக்க முடியவில்லை.. பந்து எல்லைக் கோட்டைக் கடந்து சென்று விட்டது.. நான்கு ரன்கள்.. இங்கிலாந்தின் எண்ணிக்கை விக்கெட் இழப்பின்றி நான்கு ரன்களாக உயர்ந்துள்ளது. இயான் போத்தம்(என்று நினைத்துக் கொள்ளுங்கள்) நான்கு ரன்களுடன் களத்தில் இருக்கிறார்..” என்று தொடர்ந்து மின்னல் வேகத்தில் வெளியாகும் வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியப்படும் முதல் விஷயம்.. “எப்படி இவ்ளோ ஸ்பீடா பேசுறாங்க..?” என்று..

பந்து வீச்சைத் தொடர்ந்து சென்று மட்டையில் அடி வாங்கி, அடிக்கப்பட்ட திசையில் பந்து சென்று ஓரிடத்தில் முட்டி மோதி நிற்கும்வரையிலும் இவர்கள் கொடுத்த வர்ணனை இருக்கிறதே.. அதைக் கேட்கும்போதே ஏதோ நானும் உடன் கூடவே ஓடிச் செல்வதைப் போலவே இருக்கும்.

இந்த ‘எல்லைக்கோடு’, ‘பவுண்டரி லைன்’, ‘விக்கெட் இழப்பின்றி’ என்ற புதிய தமிழ் வார்த்தைகளெல்லாம் என்னைப் போன்ற சிறுவர்களுக்கு தமிழ் மொழியின் மீது ஒருவித ஆர்வத்தை ஏற்படுத்திய வார்த்தைகள்.

ஒரு முறை மணீந்தர்சிங் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். யார் பந்து வீசினார்கள் என்பது தெரியாது. ஆனால் மணீந்தர்சிங் கிளீன்போல்டு ஆனார், அதை மிக அழகாகச் சொன்னார்கள் வர்ணனையில் இப்படி..

“பந்தும் வந்தது.. மணீந்தர்சிங்கும் பாதி மைதானம் இறங்கி மட்டையை வீசினார். வீசின வேகத்துடனேயே ஒரு சுற்று சுற்றித் திரும்பிப் பார்த்தார். மிடில் ஸ்டம்ப்பை காணவில்லை..” என்று.. அவுட் ஆனதையே கொஞ்சம், கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தியது வர்ணனைக்கு அழகு சேர்த்த விஷயம்.

மொஹீந்தர் அமர்நாத் வீசிய இந்தப் பந்தை முடாசர் நாசர் ஏறி வந்து அடித்தார். பந்து எல்லைக் கோட்டை அல்ல.. மைதானத்தை வானத்திலேயே கடந்தது..” என்று சிக்ஸர் அடித்த அழகை, இவர்கள் சொன்ன தமிழ் இன்னும் கொஞ்சம் கூட்டியது.

சுனில் கவாஸ்கர்.. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்.. இதோ தயாராக இருக்கிறார். அவருக்கு பந்து வீச வருவது மால்கம் மார்ஷல்.. இதோ வருகிறார் மார்ஷல்.. வீசுகிறார்.. out side of the off stump.. கவாஸ்கர் இதை மிக மிக அழகாக டிரைவ் செய்தார்.. கண்டிப்பாக நான்கு ரன்கள். சந்தேகமேயில்லை…” என்று பவுண்டரியை இவர்களே முடிவு செய்து சொல்லும்போது கவாஸ்கரைவிட வர்ணனையாளர்தான் எங்களுக்குப் பிடித்தமானவராக இருந்தார்.

வர்ணனையாளர்கள் யார், யார் என்று பார்த்தால் கூத்தபிரான், கணேசன், அப்துல்ஜப்பார், ராமமூர்த்தி என்ற நான்கு பெயர்கள் மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது. இவர்களோடு புள்ளியியல் நிபுணராக சாரி என்பவர் இருப்பார்.

கணேசன் எதற்கெடுத்தாலும் ஒரு புள்ளிவிவரத்தைச் சொல்லி நம்முடைய புள்ளியாளர் சாரி அவர்கள் இதைச் சொல்கிறார் என்று அவரையும் எங்களிடத்தில் அறிமுகப்படுத்துவார்.

கூத்தபிரானின் குரல் கொஞ்சம் வெண்கலக் குரல்.. ஒலி அதிகமாகவே இருக்கும். கணேசனின் குரல் நடுவாந்திரம்.. அதில் மென்மை கலந்திருக்கும். ஆனால் அப்துல்ஜப்பார்.. ?

“அடுத்து பட்டாபிராம் கேட் முனையிலிருந்து மால்கம் மார்ஷல் பந்து வீச வருகிறார். இங்கே வர்ணனையைத் தொடர நண்பர் அப்துல்ஜப்பார் அவர்கள் வருகிறார்.. வாருங்கள் ஜப்பார்..” என்று சொல்லி கணேசன் விலகியவுடன் “வணக்கம் நேயர்களே..” என்று ஜப்பார் ஸார் ஆரம்பித்தவுடன் என் தந்தை “டேய் சவுண்டை குறைடா..” என்பார். எனக்கு அப்போதெல்லாம் பிடிக்காத ஒரு விஷயம் ரேடியோவில் சவுண்டை குறைப்பதுதான்.. “முடியாது..” என்பேன். வீட்டினர் அனைவரும் சவுண்ட்டை “குறையேண்டா..” என்று கத்தியவுடன் வேண்டாவெறுப்பாக குறைப்பேன். அவ்வளவு உச்சஸ்தாயி சவுண்ட்.. ஆனாலும் மிக மிக கவர்ச்சியான குரல் அந்த மனிதருக்கு..

“மூன்று ஸ்லிப்கள், ஒரு கவர் பாயிண்ட், மிட் ஆன், மிட் ஆ·ப், மிட் விக்கெட், லாங் ஆன், லாங் ஆ·ப் என்ற பரந்த வியூக அமைப்பு” என்று அப்துல் ஜப்பார் அவர்கள் சொல்கின்ற அழகே தனி அழகு.

இதில் இந்த ‘பரந்த வியூக அமைப்பு’ என்கிற வார்த்தைக்கு மறுநாள் தமிழ் ஆசிரியரிடம் விளக்கம் கேட்டுத் தெரிந்து கொண்டது எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது.

இது போன்ற தமிழ் வார்த்தைகள் அநேகம் கல்லூரி பாட நூல்களில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள்.. மிக, மிக எளிதாக இதையெல்லாம் பள்ளிச் சிறுவர்களிடம் கொண்டு சென்ற பெருமைக்குரியவர்கள் இந்த ஆசான்கள்தான்.

மற்ற வர்ணனையாளர்களைவிட எனக்கு ஜப்பாரையை அதிகம் பிடிக்கும். காரணம் அவரது குரல் வளம்தான்..

சில சமயங்களில் மதிய நேரத்தில் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு ஸ்கூலுக்குத் திரும்பிப் போகும்போது ரோட்டோர கடைகளிலும், வீடுகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் ரேடியோவில் கமெண்ட்ரியை நின்று, நின்று கேட்டபடியே பள்ளிக்குச் செல்வேன். அப்போதெல்லாம் அனைவரையும்விட நிமிடத்திற்கு நிமிடம் ஸ்கோர் போர்டை சொன்னது ஜப்பார் ஸார்தான்.

இந்த நான்கு வர்ணனையாளர்களும் ஆளுக்கு 10 அல்லது 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். அவரவரின் நேரங்களில் தங்களுக்குத் தெரிந்த தமிழை, விளையாட்டோடு இணைத்து உணர்ச்சி ததும்ப சொன்னதுதான் இவர்களது சிறப்பு.

கவாஸ்கரோ, கபில்தேவோ அவுட்டானால் சாதாரணமாகச் சொல்ல மாட்டார்கள். “இந்தியா தனது விலை மதிக்க முடியாத விக்கெட்டை இழந்துவிட்டது” என்பார்கள். இதில்கூட ஒரு அழகுத் தமிழைப் புகுத்தி கேட்பவரை உணர்ச்சிவசப்பட வைக்கும் ஆற்றல் இந்த வர்ணனையாளர்களுக்கு இருந்தது.

கவாஸ்கர் எப்போதுமே காட்டடியெல்லாம் அடிக்க மாட்டார். அவருடைய ஸ்ட்ரோக்குகள் எல்லாமே அழகாக இருக்கும். இப்போது டெண்டுல்கர் விளையாடுவதைப் போல..

“ஹாட்லி வீசிய அந்தப் பந்தை மிக அழகாக, பந்து காலில் பட்டதா அல்லது கால்காப்பில் பட்டதா என்பதே தெரியாத அளவுக்கு மிக நுணுக்கமாக தனது கால் திசையிலே திருப்பி விட்டார் கவாஸ்கர்.. பந்து எல்லைக் கோட்டை மின்னல் வேகத்தில் கடந்தது..” என்பார்கள்.

இதிலே காலில் கட்டிக் கொள்ளும் Pad-ஐ கால்காப்பு என்றழைப்பதாக தெரிந்து கொண்டேன். இதிலே சொல்லப்படுகின்ற தமிழாலேயே, கவாஸ்கர் என்றாலே மிக அழகாக அடிப்பவர் என்று நானே நினைத்துக் கொண்டேன்.

அன்றைய காலக்கட்டத்தில் மைதானத்தில் ஜென்டில்மேன் என்றால் திலீப் வெங்ச்சர்க்காரைத்தான் சொல்வார்கள். ஏன் என்றால் அவர் ஆர்ப்பாட்டமில்லாமல் வருவார். அதேபோல் திரும்பிச் செல்வார்.

“நான் பேசிக் கொண்டிருக்கும்போதே பந்தை வீசுகிறார் இம்ரான்கான். அளவு குறைந்து வந்த பந்து. வெங்க்ச்சர்க்காரின் கால்காப்பில் படுகிறது.. வீரர்கள் எல்.பி.டபிள்யூ கேட்டுள்ளார்.. ஆம்.. வெங்க்ச்சர்க்கார் அவுட். இந்தியா தனது நான்காவது விக்கெட்டை இழக்கிறது…” என்பார்கள்..

இதில் எல்.பி.டபிள்யூ என்பதற்கான விரிவாக்கமான ‘Leg Before Wicket’ என்பதை கிரிக்கெட் மேட்ச் விளையாடப் போகும்போது சக வீரர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

“இதுக்கு என்னடா அர்த்தம்..?” என்று என் அப்பா கேட்க நான் அதற்கு “Leg Before Wicket” என்று கிளாஸ் ரூமில் சொல்வதைப் போல் சத்தமாகச் சொல்ல, என் அம்மா அப்பாவிடம் பெருமையாக, “எம்புள்ளை எப்படி இங்கிலீஷ் பேசுறான் பாருங்க..” என்று சொல்லி சிரித்ததை இப்போது நினைத்தாலும் ஒரு மாதிரி வெட்கமாகத்தான் உள்ளது.

ஆனாலும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் ஒரு நொடி மகிழ்ச்சிக்கும் ஒரு மொழி காரணகர்த்தாவாக இருக்க முடிகிறதே என்பது, உங்களது வாழ்க்கையிலும் நிச்சயம் நடந்திருக்கும்.

அப்துல் காதீர் வீசிய அந்தப் பந்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தின் கால் காப்பில் பட்டுள்ளது. வீரர்கள் அவுட் கோருகின்றனர். ஆனால் அம்பயரோ திட்டவட்டமாக அது அவுட் இல்லை என்று தலையை அசைத்து மறுக்கிறார். இதனால் இந்திய அணிக்கு எந்த ஆபத்தும் இல்லை..” என்று சற்று டென்ஷனைக் கூட்டிச் சொல்லும்போது உட்கார்ந்து கேட்கின்ற நான் அப்படியே எழுந்து ரேடியோவின் அருகில் சென்று காதை வைப்பேன்.. அந்த அளவுக்கு வர்ணனையின்போதே கிரிக்கெட் மீதான ஆர்வத்தை வெறியாக மாற்றிய பெருமை, இந்த கிரிக்கெட் வர்ணனையாளர்களுக்கே உண்டு.

ஒரு டெஸ்ட் மேட்ச்சில் இந்திய அணி வீரர்கள் ஒரு நாள் மேட்ச்சைப் போல் விளையாடி ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து, “யாராவது இந்திய அணி வீரர்களிடம் சென்று இன்றைக்கு நடப்பது டெஸ்ட் மேட்ச் என்று ஞாபகப்படுத்தினால் நல்லது என்றே நினைக்கிறோம்.. ஒரு நாள் போட்டியின் தாக்கம் இன்னும் நமது வீரர்களை விடவில்லை போலும்..” என்று இவர்களே இந்திய அணியின் ரசிகர்களாக மாறி எங்களைப் போன்றவர்களின் எண்ணங்களையும் அப்போதே வெளிப்படுத்தியுள்ளார்கள்.

ஒரு முறை சென்னையில் ரவிசங்கர் சாஸ்திரி பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போதே அவருக்கு நாங்கள் ‘கட்டை மன்னன்’ என்று பெயர் வைத்திருந்தோம். அவ்வளவு ஸ்லோவாக ரன் எடுப்பார்.. அது ஒரு நாள் போட்டி. அன்றைக்குப் பார்த்து தொடர்ந்து 2 ஓவர்களில் ரவிசாஸ்திரி ரன் எடுக்காமல் ‘தடவிக்’ கொண்டிருக்க.. ரசிகர்கள் கூச்சலிடத் துவங்கினார்கள்.

அப்போது வர்ணனை செய்தவர், “ரவிசங்கர் சாஸ்திரி தனது கால் காப்பு, கை காப்பு, ஹெல்மெட் என்று அனைத்தையும் சரி செய்து கொண்டு இதோ விவியன் ரிச்சர்டின் பந்து வீச்சை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்.. ரிச்சர்டும் பந்து வீச தயாராக இருக்கிறார்.. ரசிகர்களும் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு இப்போதாவது ரவிசாஸ்திரி தனது மட்டைக்கு வேலை கொடுக்க மாட்டாரா என்ற பரிதவிப்போடு உள்ளார்கள். இதோ commentators-ஆன நாங்களும், எங்களது கமெண்ட்ரி வேலைக்கு ஒரு வாய்ப்பு வராதா என்று காத்திருக்கிறோம்..” என்று சற்று நகைச்சுவையாகச் சொன்னது இன்றைக்கும் எனக்கு நினைவிருக்கிறது.

ஆட்ட நேரம் முடிந்தவுடன் அன்றைய போட்டியின் ஸ்கோர் போர்டை வாசிக்கும் அழகுக்கே தனி சல்யூட் செய்யலாம்.

கவாஸ்கர் caught சர்பிராஸ்நவாஸ் bowl இம்ரான்கான் 32. அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 64..” என்று ஆரம்பித்து 10 பேர்களின் பெயர்களையும் சொல்லி முடிப்பதற்குள் நான் அதை குறித்து வைக்கத் திணறுவேன்.. ஆனால் இதில் அனைத்திலும் ஒரு அழகு இருந்தது.. வேகம் இருந்தது.. சுவை இருந்தது.

கிரிக்கெட்டின் அனைத்து நுணுக்கங்களையும், அதன் உபகரணங்களையும், கிரிக்கெட் பீல்டின் அமைப்புகளையும் அந்தச் சிறு வயதிலேயே எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவர்கள் இந்த பிரதிபலன் எதிர்பாராத தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர்கள்தான்.

அப்போதெல்லாம் ‘கல்லி’ எங்கே இருக்கிறது.. ‘ஸ்லிப்’ எங்கே இருக்கிறது.. ‘டீப் ஸ்கொயர் லெக்’ எங்கே இருக்கிறது என்று யாருக்குத் தெரியும்..? நாங்கள் விளையாடுகின்ற மேட்ச்சில்கூட நாங்க பார்த்து எங்கே ஆளை நிறுத்துகிறோமே அதுதான் ‘கல்லி’.. அதுதான் ‘ஸ்லிப்’.. அதுதான் ‘ஸில்லி பாயிண்ட்’..

இப்படி கிரிக்கெட்டின் அனைத்து நுணுக்கங்களையும் எந்தப் பள்ளியிலும் சொல்லித் தராமல் நாங்களே கற்றுக் கொண்டோம் என்றால் அது இந்த கிரிக்கெட் வர்ணனையாளர்களால்தான்.

காலம் மாறியது.. காட்சிகளும் மாறியது.. கோலங்களும் மாறின. தொலைக்காட்சிகள் வீட்டின் சமையல்கட்டுவரைக்கும் தனது ஆக்கிரமிப்பைத் தொடங்கியவுடன், ரேடியோவின் தமிழ் வர்ணனை கொஞ்சம் கொஞ்சமாக தனது முக்கியத்துவத்தை இழந்தது.

நானும் ஒரு முறை சென்னையில் நடந்த மேட்ச்சை ரேடியோ கமெண்ட்ரியையும், டிவியையும் அருகருகே வைத்து பார்த்தும், கேட்டும் கொண்டிருந்தேன். அப்போதுதான் தெரிந்தது கிரிக்கெட் வர்ணனையாளர்கள் எப்பேர்ப்பட்ட ரசிகர்கள் என்று.. எப்பேர்ப்பட்ட ஆசான்கள் என்று..

ஒவ்வொரு முறையும் பந்து பவுண்டரி லைனைக் கடக்கும்போது ரசிகர்களின் கை தட்டலுக்கு ஈடாக, இந்த வர்ணனையாளர்களும் ஒரு உற்சாகத்தை தங்களுக்குள் வரவழைத்து ரேடியோ ரசிகர்களையும் பரவசப்பட வைத்துள்ளார்கள் என்பது கண்கூடாகத் தெரிந்தது.

காலம் செல்லச் செல்ல ஒதுக்கப்பட்ட ரேடியோவைப் போலவே, இந்த கிரிக்கெட் வர்ணனையாளர்களும் ஒதுக்கப்பட்டு விட்டார்கள் என்றே தோன்றுகிறது.

சமீபத்தில் லேட்டஸ்டாக சென்னையில் நடந்த ஒரு மேட்ச்சில் தமிழில் வர்ணனை செய்யப்படவில்லை. காரணம் கேட்டால் யாரும் பதில் சொல்ல முன் வரவில்லை.

தொலைக்காட்சியில் பார்க்க வாய்ப்பில்லாதவர்கள் ரேடியோவில் கமெண்ட்ரியாவது கேட்டு ஆசுவாசப்படுவார்களே என்றால், இப்போது கிரிக்கெட்டிற்கு தமிழ் மொழி தேவையில்லாததாகிவிட்டது போலும்.. ஆங்கிலம், இந்தி கமெண்ட்ரி மட்டுமே.

என்னைக் கேட்டால் இந்தியாவில் எங்கே கிரிக்கெட் மேட்ச் நடந்தாலும் அங்கே அனைத்து பிராந்திய மொழி நேரடி வர்ணனைகளும் ஒலிபரப்பு செய்யப்பட வேண்டும். இது கிரிக்கெட்டிற்காக அல்ல.. என்னைப் போன்ற இப்போது வளர்ந்து வரக்கூடிய சிறுவர்கள் தத்தமது மொழியை இலகுவாக கற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

மொழி ஒரு பிரச்சினை இல்லையெனில், எந்தவொரு விஷயத்தையும் எளிதாகச் செய்து முடிக்க முடியும்.

எங்கோ இங்கிலாந்தில் ஆரம்பித்து இன்றைக்கு இந்தியா முழுமைக்குமே மூணு குச்சி, ஒரு பேட், ஒரு பால் என்று வைத்து இணைக்க முடிந்ததெனில் அது மொழியால் மட்டுமே முடிந்த செயல்..

அந்த நல்லிதயம் படைத்த தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர்களுக்கு என்னைப் போன்ற அவர்களது தயவால் வளர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

46 பதில்கள் to “கிரிக்கெட் வளர்த்த தமிழ் வர்ணனையாளர்கள்”

 1. முரளி கண்ணன் Says:

  நமது பதிவரின் (ஆசிப்) உறவினர் தானே அப்துல்ஜப்பார்?

 2. முரளி கண்ணன் Says:

  நமது பதிவரின் (ஆசிப்) உறவினர் தானே அப்துல்ஜப்பார்?

 3. செந்தழல் ரவி Says:

  அப்துல் ஜப்பார் வர்ணனை செய்யும் அழகே அழகு…சில முறை மட்டுமே கேட்டிருக்கிறேன்…!!!!

  ///நமது பதிவரின் (ஆசிப்) உறவினர் தானே அப்துல்ஜப்பார்?///

  ஆமாம், ஆசிப் அண்ணாச்சிக்கு ரொம்ப நெருங்கிய…

 4. செந்தழல் ரவி Says:

  அப்துல் ஜப்பார் வர்ணனை செய்யும் அழகே அழகு…சில முறை மட்டுமே கேட்டிருக்கிறேன்…!!!!///நமது பதிவரின் (ஆசிப்) உறவினர் தானே அப்துல்ஜப்பார்?///ஆமாம், ஆசிப் அண்ணாச்சிக்கு ரொம்ப நெருங்கிய…

 5. பொன்வண்டு Says:

  ஸ்டார் கிரிக்கெட், சன் டிவி களில் ஒளிபரப்பான போட்டிகளில் பாஸ்கியின் வர்ணனையைச் சொல்லாமல் விட்டுட்டீங்களே .. அவ்வளவு அபத்தம்..

  போட்டி நடுவர் பில்லி பாடன் குறித்து “இவர் கையில் ஒரு கிளியைக் கொடுத்துட்டா பார்க்க ஆண்டாள் மாதிரியே இருக்கும்” ன்னார் புண்ணியவான். இதுவும் காமெடி நிகழ்ச்சின்னு நினைச்சுட்டார் போல…

 6. பொன்வண்டு Says:

  ஸ்டார் கிரிக்கெட், சன் டிவி களில் ஒளிபரப்பான போட்டிகளில் பாஸ்கியின் வர்ணனையைச் சொல்லாமல் விட்டுட்டீங்களே .. அவ்வளவு அபத்தம்..போட்டி நடுவர் பில்லி பாடன் குறித்து “இவர் கையில் ஒரு கிளியைக் கொடுத்துட்டா பார்க்க ஆண்டாள் மாதிரியே இருக்கும்” ன்னார் புண்ணியவான். இதுவும் காமெடி நிகழ்ச்சின்னு நினைச்சுட்டார் போல…

 7. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //முரளி கண்ணன் said…
  நமது பதிவரின் (ஆசிப்) உறவினர் தானே அப்துல்ஜப்பார்?//

  ஆம் முரளி.. ஆசிப் அண்ணாச்சியின் தந்தைதான் திரு.அப்துல்ஜப்பார்..

 8. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //முரளி கண்ணன் said… நமது பதிவரின் (ஆசிப்) உறவினர் தானே அப்துல்ஜப்பார்?//ஆம் முரளி.. ஆசிப் அண்ணாச்சியின் தந்தைதான் திரு.அப்துல்ஜப்பார்..

 9. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //செந்தழல் ரவி said…
  அப்துல் ஜப்பார் வர்ணனை செய்யும் அழகே அழகு…சில முறை மட்டுமே கேட்டிருக்கிறேன்…!!!!//

  நன்றி ரவி.. ரசிகர்களின் உணர்வைத் தூண்டிவிடும் சக்தி அவரது குரலுக்கு வாய்த்தது இறை செயல்தான்..

 10. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //செந்தழல் ரவி said… அப்துல் ஜப்பார் வர்ணனை செய்யும் அழகே அழகு…சில முறை மட்டுமே கேட்டிருக்கிறேன்…!!!!//நன்றி ரவி.. ரசிகர்களின் உணர்வைத் தூண்டிவிடும் சக்தி அவரது குரலுக்கு வாய்த்தது இறை செயல்தான்..

 11. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //பொன்வண்டு said…
  ஸ்டார் கிரிக்கெட், சன் டிவி களில் ஒளிபரப்பான போட்டிகளில் பாஸ்கியின் வர்ணனையைச் சொல்லாமல் விட்டுட்டீங்களே .. அவ்வளவு அபத்தம்.. போட்டி நடுவர் பில்லி பாடன் குறித்து “இவர் கையில் ஒரு கிளியைக் கொடுத்துட்டா பார்க்க ஆண்டாள் மாதிரியே இருக்கும்”ன்னார் புண்ணியவான். இதுவும் காமெடி நிகழ்ச்சின்னு நினைச்சுட்டார் போல…//

  இது பணத்துக்காக செய்த கூலி வேலை.. நம்மவர்கள் செய்தது அதுவல்ல.. ஆத்மார்த்தமான பணி.. இரண்டையும் ஒப்பிடவே கூடாது பொன்வண்டு.. வருகைக்கு நன்றி..

 12. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //பொன்வண்டு said… ஸ்டார் கிரிக்கெட், சன் டிவி களில் ஒளிபரப்பான போட்டிகளில் பாஸ்கியின் வர்ணனையைச் சொல்லாமல் விட்டுட்டீங்களே .. அவ்வளவு அபத்தம்.. போட்டி நடுவர் பில்லி பாடன் குறித்து “இவர் கையில் ஒரு கிளியைக் கொடுத்துட்டா பார்க்க ஆண்டாள் மாதிரியே இருக்கும்”ன்னார் புண்ணியவான். இதுவும் காமெடி நிகழ்ச்சின்னு நினைச்சுட்டார் போல…//இது பணத்துக்காக செய்த கூலி வேலை.. நம்மவர்கள் செய்தது அதுவல்ல.. ஆத்மார்த்தமான பணி.. இரண்டையும் ஒப்பிடவே கூடாது பொன்வண்டு.. வருகைக்கு நன்றி..

 13. கிரிக்கெட் ரசிகை. Says:

  கல்லூரி நாட்களை நினைவுப்படுத்தி விட்டது இப்பதிவு.
  கமெண்டரிக்காக பாக்கெட் ரேடியோவை கல்லூரிக்கு எடுத்துச் சென்று,கடைசி டெஸ்கில் அமர்ந்து கொண்டு காமெண்டரி கேட்ட வண்ணம், கிரிக்கெட் பற்றி பேப்பரில் எழுதி வகுப்பு முழுவதும் பாஸ் செய்தது நினைவுக்கு வருகிறது.கபில் தேவ் அப்பொழுது புதிய முகம்.

 14. கிரிக்கெட் ரசிகை. Says:

  கல்லூரி நாட்களை நினைவுப்படுத்தி விட்டது இப்பதிவு.கமெண்டரிக்காக பாக்கெட் ரேடியோவை கல்லூரிக்கு எடுத்துச் சென்று,கடைசி டெஸ்கில் அமர்ந்து கொண்டு காமெண்டரி கேட்ட வண்ணம், கிரிக்கெட் பற்றி பேப்பரில் எழுதி வகுப்பு முழுவதும் பாஸ் செய்தது நினைவுக்கு வருகிறது.கபில் தேவ் அப்பொழுது புதிய முகம்.

 15. ஆசிப் மீரான் Says:

  //ஆம் முரளி.. ஆசிப் அண்ணாச்சியின் தந்தைதான் திரு.அப்துல்ஜப்பார்..//

  உண்மைத்தமிழன் அண்ணாச்சி

  இப்படிச் சொன்னா அப்துல்ஜப்பார் வருத்தப்பட்டாலும் படலாம். ஜப்பார் அண்ணாச்சியின் பையன் தான் ஆசிப் மீரான்னு சொல்லுங்கய்யா :-)))

  பாஸ்கியைப் பத்தி பாமரன் குமுதத்துல அழகா எழுதியிருந்தாரு. நீங்க ‘தமிழ்’ வர்ணனையாளர்களைப் பத்தி எழுதும்போது பாஸ்கி எங்கேருந்து வருவாரு? 🙂

  சாத்தான்குளத்தான்

 16. ஆசிப் மீரான் Says:

  //ஆம் முரளி.. ஆசிப் அண்ணாச்சியின் தந்தைதான் திரு.அப்துல்ஜப்பார்..//உண்மைத்தமிழன் அண்ணாச்சிஇப்படிச் சொன்னா அப்துல்ஜப்பார் வருத்தப்பட்டாலும் படலாம். ஜப்பார் அண்ணாச்சியின் பையன் தான் ஆசிப் மீரான்னு சொல்லுங்கய்யா :-)))பாஸ்கியைப் பத்தி பாமரன் குமுதத்துல அழகா எழுதியிருந்தாரு. நீங்க ‘தமிழ்’ வர்ணனையாளர்களைப் பத்தி எழுதும்போது பாஸ்கி எங்கேருந்து வருவாரு? :-)சாத்தான்குளத்தான்

 17. செந்தழல் ரவி Says:

  சாத்தான்குளத்தாரின் தன்னடக்கத்தை பாருங்க….

  இந்த இனிமையான மனிதரை ஜாலியான ஒரு பொழுதில் பெங்களூர் லால்பாக்கில் சந்திந்து நீண்ட நேரம் மொக்கைபோட்ட சாதனையாளன் இந்த ரவி…!!!!

 18. செந்தழல் ரவி Says:

  சாத்தான்குளத்தாரின் தன்னடக்கத்தை பாருங்க….இந்த இனிமையான மனிதரை ஜாலியான ஒரு பொழுதில் பெங்களூர் லால்பாக்கில் சந்திந்து நீண்ட நேரம் மொக்கைபோட்ட சாதனையாளன் இந்த ரவி…!!!!

 19. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கிரிக்கெட் ரசிகை. said…
  கல்லூரி நாட்களை நினைவுப்படுத்தி விட்டது இப்பதிவு. கமெண்டரிக்காக பாக்கெட் ரேடியோவை கல்லூரிக்கு எடுத்துச் சென்று, கடைசி டெஸ்கில் அமர்ந்து கொண்டு காமெண்டரி கேட்ட வண்ணம், கிரிக்கெட் பற்றி பேப்பரில் எழுதி வகுப்பு முழுவதும் பாஸ் செய்தது நினைவுக்கு வருகிறது. கபில்தேவ் அப்பொழுது புதிய முகம்.//

  நன்றி கிரிக்கெட் ரசிகை அவர்களே… உங்களுக்கும் இந்த அனுபவம் உண்டா..? எல்லாருக்குமே கிரிக்கெட் விஷயத்தில் மட்டும் இப்படி ஒரு ஒற்றுமை உண்டு. இந்தியாவை இணைத்திருப்பதில் இப்போது முதலிடத்திற்கு வந்துவிட்டது கிரிக்கெட்.. தங்களது வருகைக்கு நன்றி..

 20. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கிரிக்கெட் ரசிகை. said… கல்லூரி நாட்களை நினைவுப்படுத்தி விட்டது இப்பதிவு. கமெண்டரிக்காக பாக்கெட் ரேடியோவை கல்லூரிக்கு எடுத்துச் சென்று, கடைசி டெஸ்கில் அமர்ந்து கொண்டு காமெண்டரி கேட்ட வண்ணம், கிரிக்கெட் பற்றி பேப்பரில் எழுதி வகுப்பு முழுவதும் பாஸ் செய்தது நினைவுக்கு வருகிறது. கபில்தேவ் அப்பொழுது புதிய முகம்.//நன்றி கிரிக்கெட் ரசிகை அவர்களே… உங்களுக்கும் இந்த அனுபவம் உண்டா..? எல்லாருக்குமே கிரிக்கெட் விஷயத்தில் மட்டும் இப்படி ஒரு ஒற்றுமை உண்டு. இந்தியாவை இணைத்திருப்பதில் இப்போது முதலிடத்திற்கு வந்துவிட்டது கிரிக்கெட்.. தங்களது வருகைக்கு நன்றி..

 21. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///ஆசிப் மீரான் said…
  //ஆம் முரளி.. ஆசிப் அண்ணாச்சியின் தந்தைதான் திரு.அப்துல்ஜப்பார்..//
  உண்மைத்தமிழன் அண்ணாச்சி

  இப்படிச் சொன்னா அப்துல்ஜப்பார் வருத்தப்பட்டாலும் படலாம். ஜப்பார் அண்ணாச்சியின் பையன்தான் ஆசிப் மீரான்னு சொல்லுங்கய்யா :-)))///

  ஆஹா.. அண்ணாச்சி அப்பாரு மேல இம்புட்டு மரியாதையும், பாசமும் இருக்கிறதை பார்த்தா சந்தோஷமாத்தான் இருக்கு.. எழுதிப்புட்டனே.. மாத்தினா நல்லாயிருக்காது.. அதுனால இந்தப் பதிவுல மட்டும் இருக்கட்டும். அடுத்து எதை எழுதினாலும் நம்ம அப்துல் ஜப்பார் அண்ணாச்சியோட புள்ளைதான் ஆசீப்புன்னு சொல்லிப்புடறேன்..

  //பாஸ்கியைப் பத்தி பாமரன் குமுதத்துல அழகா எழுதியிருந்தாரு. நீங்க ‘தமிழ்’ வர்ணனையாளர்களைப் பத்தி எழுதும்போது பாஸ்கி எங்கேருந்து வருவாரு? :-)//

  அதை நான் இதுவரைக்கும் படிக்கல அண்ணாச்சி.. பொன்வண்டு பொதுவா வர்ணனையாளர்களைப் பத்தி பேசிட்டாரு.. நமக்கும் வந்திருக்கிறது ஒண்ணே ஒண்ணு. கண்ணே கண்ணுன்ற மாதிரி கமெண்ட்டு. நாம பதிலுக்குச் சொல்லக்கூடாதே அண்ணாச்சி. அது நல்லாயில்லையே.. என்ன நான் சொல்றது.. அதான் பொதுவான வர்ணனையைப் பத்தின்னு நானும் கமெண்ட் போட்டேன்.. கண்ணு வைக்காத அண்ணாச்சி..

 22. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///ஆசிப் மீரான் said… //ஆம் முரளி.. ஆசிப் அண்ணாச்சியின் தந்தைதான் திரு.அப்துல்ஜப்பார்..//உண்மைத்தமிழன் அண்ணாச்சிஇப்படிச் சொன்னா அப்துல்ஜப்பார் வருத்தப்பட்டாலும் படலாம். ஜப்பார் அண்ணாச்சியின் பையன்தான் ஆசிப் மீரான்னு சொல்லுங்கய்யா :-)))///ஆஹா.. அண்ணாச்சி அப்பாரு மேல இம்புட்டு மரியாதையும், பாசமும் இருக்கிறதை பார்த்தா சந்தோஷமாத்தான் இருக்கு.. எழுதிப்புட்டனே.. மாத்தினா நல்லாயிருக்காது.. அதுனால இந்தப் பதிவுல மட்டும் இருக்கட்டும். அடுத்து எதை எழுதினாலும் நம்ம அப்துல் ஜப்பார் அண்ணாச்சியோட புள்ளைதான் ஆசீப்புன்னு சொல்லிப்புடறேன்..//பாஸ்கியைப் பத்தி பாமரன் குமுதத்துல அழகா எழுதியிருந்தாரு. நீங்க ‘தமிழ்’ வர்ணனையாளர்களைப் பத்தி எழுதும்போது பாஸ்கி எங்கேருந்து வருவாரு? :-)//அதை நான் இதுவரைக்கும் படிக்கல அண்ணாச்சி.. பொன்வண்டு பொதுவா வர்ணனையாளர்களைப் பத்தி பேசிட்டாரு.. நமக்கும் வந்திருக்கிறது ஒண்ணே ஒண்ணு. கண்ணே கண்ணுன்ற மாதிரி கமெண்ட்டு. நாம பதிலுக்குச் சொல்லக்கூடாதே அண்ணாச்சி. அது நல்லாயில்லையே.. என்ன நான் சொல்றது.. அதான் பொதுவான வர்ணனையைப் பத்தின்னு நானும் கமெண்ட் போட்டேன்.. கண்ணு வைக்காத அண்ணாச்சி..

 23. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //செந்தழல் ரவி said…
  சாத்தான்குளத்தாரின் தன்னடக்கத்தை பாருங்க…. இந்த இனிமையான மனிதரை ஜாலியான ஒரு பொழுதில் பெங்களூர் லால்பாக்கில் சந்திந்து நீண்ட நேரம் மொக்கைபோட்ட சாதனையாளன் இந்த ரவி…!!!!//

  டேய் ராசா.. மொக்கை போடுறதையே இன்னும் எத்தனை நாளைக்குத்தாம்பா சாதனையா சொல்லுவீக.. அண்ணாச்சியை கேட்டா அந்த அறுவையை நீண்ட நேரம் தாங்கிக்கிட்ட ஒரே ஆள் நான்தாம்பாரு..

  நல்லா இருங்கடே..

 24. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //செந்தழல் ரவி said… சாத்தான்குளத்தாரின் தன்னடக்கத்தை பாருங்க…. இந்த இனிமையான மனிதரை ஜாலியான ஒரு பொழுதில் பெங்களூர் லால்பாக்கில் சந்திந்து நீண்ட நேரம் மொக்கைபோட்ட சாதனையாளன் இந்த ரவி…!!!!//டேய் ராசா.. மொக்கை போடுறதையே இன்னும் எத்தனை நாளைக்குத்தாம்பா சாதனையா சொல்லுவீக.. அண்ணாச்சியை கேட்டா அந்த அறுவையை நீண்ட நேரம் தாங்கிக்கிட்ட ஒரே ஆள் நான்தாம்பாரு.. நல்லா இருங்கடே..

 25. Anonymous Says:

  Yeah, I was a small boy, I think at that time the pocket radio got introduced in my village. I can’t understand what they are listening. My uncle ( sitthappa !) he is on his 20+ age. enjoyed really.
  The biggest tragidy or joke was during that time in our village ( not only in our village, whole india ) electricity is the biggest problem ( now also !! ). He is running for a double A battery. Sine he didnt have enough money ( I think he was doing his college at that time ) he asks me to get money from my mother. ( he feel shy to ask my mother ).
  Vow!!! what a heavenly moments !!!!!!!
  I really missed.

  -Raj.

 26. Anonymous Says:

  Yeah, I was a small boy, I think at that time the pocket radio got introduced in my village. I can’t understand what they are listening. My uncle ( sitthappa !) he is on his 20+ age. enjoyed really. The biggest tragidy or joke was during that time in our village ( not only in our village, whole india ) electricity is the biggest problem ( now also !! ). He is running for a double A battery. Sine he didnt have enough money ( I think he was doing his college at that time ) he asks me to get money from my mother. ( he feel shy to ask my mother ). Vow!!! what a heavenly moments !!!!!!!I really missed. -Raj.

 27. இராம்/Raam Says:

  உண்மைதமிழன் சார்,

  பதிவே ஸ்க்ரல் பண்ணவே எவ்வளோ நேரம் ஆகுது??? :))

  ஆனாலும் நல்லா எழுதியிருக்கீங்க…..

 28. இராம்/Raam Says:

  உண்மைதமிழன் சார்,பதிவே ஸ்க்ரல் பண்ணவே எவ்வளோ நேரம் ஆகுது??? :))ஆனாலும் நல்லா எழுதியிருக்கீங்க…..

 29. இராம்/Raam Says:

  //செந்தழல் ரவி said…
  சாத்தான்குளத்தாரின் தன்னடக்கத்தை பாருங்க…. இந்த இனிமையான மனிதரை ஜாலியான ஒரு பொழுதில் பெங்களூர் லால்பாக்கில் சந்திந்து நீண்ட நேரம் மொக்கைபோட்ட சாதனையாளன் இந்த ரவி…!!!!//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்

  நாமே எல்லாரும்’ன்னு் சொல்லுங்க ரெட்பயர்… 🙂

 30. இராம்/Raam Says:

  //செந்தழல் ரவி said…சாத்தான்குளத்தாரின் தன்னடக்கத்தை பாருங்க…. இந்த இனிமையான மனிதரை ஜாலியான ஒரு பொழுதில் பெங்களூர் லால்பாக்கில் சந்திந்து நீண்ட நேரம் மொக்கைபோட்ட சாதனையாளன் இந்த ரவி…!!!!//அவ்வ்வ்வ்வ்வ்வ்நாமே எல்லாரும்’ன்னு் சொல்லுங்க ரெட்பயர்… 🙂

 31. அபி அப்பா Says:

  உனாதானா, நம்ம ஜப்பார் சார்கூட நான் துபாய்முதல் அபுதாபி வரை நம்ம ஆசீப் வண்டி(வாயை பொத்திகிட்டு வண்டிய ஓட்டிகிட்டு வந்தாரு அத்தினி மருவாத அப்பா மேல)முரண்பட்ட கருத்துகளை விவாதிச்சுகிட்டு வந்து பின்ன அபுதாபி தமிழ் சங்கத்து நிகழ்ச்சில ஜப்பார் சார் பிஸியாகிவிட நானும் அண்ணாச்சியும் கேண்டீன்ல மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுட்டு அப்பாவின் கருத்துகளை தொடர நானும் தொடர ரொம்ப சுவாரஸ்யம்யா…இது நடந்து பல வருஷம் ஆச்சு….

  யோவ், என்ன மாயம்யா செஞ்சீர், பின்னூட்டம் கூட பெருச்சா வருது உம்ம பதிவுக்கு:-))

 32. அபி அப்பா Says:

  உனாதானா, நம்ம ஜப்பார் சார்கூட நான் துபாய்முதல் அபுதாபி வரை நம்ம ஆசீப் வண்டி(வாயை பொத்திகிட்டு வண்டிய ஓட்டிகிட்டு வந்தாரு அத்தினி மருவாத அப்பா மேல)முரண்பட்ட கருத்துகளை விவாதிச்சுகிட்டு வந்து பின்ன அபுதாபி தமிழ் சங்கத்து நிகழ்ச்சில ஜப்பார் சார் பிஸியாகிவிட நானும் அண்ணாச்சியும் கேண்டீன்ல மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுட்டு அப்பாவின் கருத்துகளை தொடர நானும் தொடர ரொம்ப சுவாரஸ்யம்யா…இது நடந்து பல வருஷம் ஆச்சு….யோவ், என்ன மாயம்யா செஞ்சீர், பின்னூட்டம் கூட பெருச்சா வருது உம்ம பதிவுக்கு:-))

 33. செந்தழல் ரவி Says:

  ///நாமே எல்லாரும்’ன்னு் சொல்லுங்க ரெட்பயர்…///

  மதுரைசிங்கமே, கைப்பு தங்கமே,

  நீ இல்லாமலா ????

 34. செந்தழல் ரவி Says:

  ///நாமே எல்லாரும்’ன்னு் சொல்லுங்க ரெட்பயர்…///மதுரைசிங்கமே, கைப்பு தங்கமே,நீ இல்லாமலா ????

 35. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…
  Yeah, I was a small boy, I think at that time the pocket radio got introduced in my village. I can’t understand what they are listening. My uncle ( sitthappa !) he is on his 20+ age. enjoyed really. The biggest tragidy or joke was during that time in our village ( not only in our village, whole india ) electricity is the biggest problem ( now also !! ). He is running for a double A battery. Sine he didnt have enough money ( I think he was doing his college at that time ) he asks me to get money from my mother. ( he feel shy to ask my mother ). Vow!!! what a heavenly moments !!!!!!! I really missed. -Raj.//

  ராஜ்.. இதே அனுபவம் எனக்கும் நேர்ந்தது.. எங்கள் வீட்டு ரேடியோவிற்கு 4 பேட்டரிகள் போட வேண்டும். தினமும் காலையில் அதை வெளியில் எடுத்து வெயில் படம் அளவில் வைப்போம்.. அப்போது அதற்கு சார்ஜ் ஏறும் என்று என் அப்பா சொல்லுவார்.. பேட்டரி குறைய, குறைய சவுண்டும் குறையும்.. பேட்டரி வாங்க என் அப்பாவையும், அண்ணனையும் நச்செடுத்து பணம் வாங்குவேன்.. ரசிகர்கள் அனைவருக்குமே இது மாதிரியான ஒன்று போல் அனுபவங்கள் கிட்டியிருப்பது ஆச்சரியமல்ல.. நாமெல்லாம் ரசிகர்கள்தான்..

 36. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said… Yeah, I was a small boy, I think at that time the pocket radio got introduced in my village. I can’t understand what they are listening. My uncle ( sitthappa !) he is on his 20+ age. enjoyed really. The biggest tragidy or joke was during that time in our village ( not only in our village, whole india ) electricity is the biggest problem ( now also !! ). He is running for a double A battery. Sine he didnt have enough money ( I think he was doing his college at that time ) he asks me to get money from my mother. ( he feel shy to ask my mother ). Vow!!! what a heavenly moments !!!!!!! I really missed. -Raj.//ராஜ்.. இதே அனுபவம் எனக்கும் நேர்ந்தது.. எங்கள் வீட்டு ரேடியோவிற்கு 4 பேட்டரிகள் போட வேண்டும். தினமும் காலையில் அதை வெளியில் எடுத்து வெயில் படம் அளவில் வைப்போம்.. அப்போது அதற்கு சார்ஜ் ஏறும் என்று என் அப்பா சொல்லுவார்.. பேட்டரி குறைய, குறைய சவுண்டும் குறையும்.. பேட்டரி வாங்க என் அப்பாவையும், அண்ணனையும் நச்செடுத்து பணம் வாங்குவேன்.. ரசிகர்கள் அனைவருக்குமே இது மாதிரியான ஒன்று போல் அனுபவங்கள் கிட்டியிருப்பது ஆச்சரியமல்ல.. நாமெல்லாம் ரசிகர்கள்தான்..

 37. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //இராம்/Raam said…
  உண்மைதமிழன் சார், பதிவே ஸ்க்ரல் பண்ணவே எவ்வளோ நேரம் ஆகுது??? :)) ஆனாலும் நல்லா எழுதியிருக்கீங்க…..//

  ராம் தம்பி, எத்தனை வருஷமா கேட்டது தெரியுமா..? காதுக்குள்ளயே இன்னும் இருக்கு.. கை வலிச்சதால கால்வாசியோட நிறுத்திட்டேன்..

  //செந்தழல் ரவி said…
  சாத்தான்குளத்தாரின் தன்னடக்கத்தை பாருங்க…. இந்த இனிமையான மனிதரை ஜாலியான ஒரு பொழுதில் பெங்களூர் லால்பாக்கில் சந்திந்து நீண்ட நேரம் மொக்கைபோட்ட சாதனையாளன் இந்த ரவி…!!!!//
  அவ்வ்வ்வ்வ்வ்வ்.. நாமே எல்லாரும்’ன்னு் சொல்லுங்க ரெட்பயர்… :)///

  இந்த ரெட்பயர்ன்னா இன்னா ராசா.. ஆளாளுக்கு யூஸ் பண்றீங்க..?

 38. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //இராம்/Raam said… உண்மைதமிழன் சார், பதிவே ஸ்க்ரல் பண்ணவே எவ்வளோ நேரம் ஆகுது??? :)) ஆனாலும் நல்லா எழுதியிருக்கீங்க…..//ராம் தம்பி, எத்தனை வருஷமா கேட்டது தெரியுமா..? காதுக்குள்ளயே இன்னும் இருக்கு.. கை வலிச்சதால கால்வாசியோட நிறுத்திட்டேன்..//செந்தழல் ரவி said…சாத்தான்குளத்தாரின் தன்னடக்கத்தை பாருங்க…. இந்த இனிமையான மனிதரை ஜாலியான ஒரு பொழுதில் பெங்களூர் லால்பாக்கில் சந்திந்து நீண்ட நேரம் மொக்கைபோட்ட சாதனையாளன் இந்த ரவி…!!!!//அவ்வ்வ்வ்வ்வ்வ்.. நாமே எல்லாரும்’ன்னு் சொல்லுங்க ரெட்பயர்… :)///இந்த ரெட்பயர்ன்னா இன்னா ராசா.. ஆளாளுக்கு யூஸ் பண்றீங்க..?

 39. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //அபி அப்பா said…
  உனாதானா, நம்ம ஜப்பார் சார்கூட நான் துபாய் முதல் அபுதாபி வரை நம்ம ஆசீப் வண்டி(வாயை பொத்திகிட்டு வண்டிய ஓட்டிகிட்டு வந்தாரு அத்தினி மருவாத அப்பா மேல)முரண்பட்ட கருத்துகளை விவாதிச்சுகிட்டு வந்து பின்ன அபுதாபி தமிழ் சங்கத்து நிகழ்ச்சில ஜப்பார் சார் பிஸியாகிவிட நானும் அண்ணாச்சியும் கேண்டீன்ல மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுட்டு அப்பாவின் கருத்துகளை தொடர நானும் தொடர ரொம்ப சுவாரஸ்யம்யா…இது நடந்து பல வருஷம் ஆச்சு….//

  பரவாயில்லையே.. இந்தளவுக்கு அண்ணாச்சிக்கிட்ட நெருங்கிட்டீரா.. நல்லாயிரும்.. அப்பா-பிள்ளை மரியாதையை பார்த்தால் பெருமையா இருக்கு.. இப்படித்தான இருக்கோணும்..

  //யோவ், என்ன மாயம்யா செஞ்சீர், பின்னூட்டம் கூட பெருச்சா வருது உம்ம பதிவுக்கு:-))//

  ஐயையோ.. கண்ணு வைச்சிட்டீதீரா..? நானே கொஞ்சம்தான் வந்திருக்குன்னு கவலைல இருக்கேன்.. இருக்குறதையும் கழட்டுறதுலயே குறியா இருக்குதீரே..

 40. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //அபி அப்பா said… உனாதானா, நம்ம ஜப்பார் சார்கூட நான் துபாய் முதல் அபுதாபி வரை நம்ம ஆசீப் வண்டி(வாயை பொத்திகிட்டு வண்டிய ஓட்டிகிட்டு வந்தாரு அத்தினி மருவாத அப்பா மேல)முரண்பட்ட கருத்துகளை விவாதிச்சுகிட்டு வந்து பின்ன அபுதாபி தமிழ் சங்கத்து நிகழ்ச்சில ஜப்பார் சார் பிஸியாகிவிட நானும் அண்ணாச்சியும் கேண்டீன்ல மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுட்டு அப்பாவின் கருத்துகளை தொடர நானும் தொடர ரொம்ப சுவாரஸ்யம்யா…இது நடந்து பல வருஷம் ஆச்சு….//பரவாயில்லையே.. இந்தளவுக்கு அண்ணாச்சிக்கிட்ட நெருங்கிட்டீரா.. நல்லாயிரும்.. அப்பா-பிள்ளை மரியாதையை பார்த்தால் பெருமையா இருக்கு.. இப்படித்தான இருக்கோணும்.. //யோவ், என்ன மாயம்யா செஞ்சீர், பின்னூட்டம் கூட பெருச்சா வருது உம்ம பதிவுக்கு:-))//ஐயையோ.. கண்ணு வைச்சிட்டீதீரா..? நானே கொஞ்சம்தான் வந்திருக்குன்னு கவலைல இருக்கேன்.. இருக்குறதையும் கழட்டுறதுலயே குறியா இருக்குதீரே..

 41. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///செந்தழல் ரவி said…
  //நாமே எல்லாரும்’ன்னு் சொல்லுங்க ரெட்பயர்…//
  மதுரை சிங்கமே, கைப்பு தங்கமே, நீ இல்லாமலா ????///

  ம்.. சொன்னவுடனே வந்து ஒட்டியாச்சா.. இதுக்குப் பேர்தான் ரெட்பயரா..?

 42. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///செந்தழல் ரவி said… //நாமே எல்லாரும்’ன்னு் சொல்லுங்க ரெட்பயர்…//மதுரை சிங்கமே, கைப்பு தங்கமே, நீ இல்லாமலா ????///ம்.. சொன்னவுடனே வந்து ஒட்டியாச்சா.. இதுக்குப் பேர்தான் ரெட்பயரா..?

 43. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  தகவல் பிழையைச் சுட்டிக் காட்டி அனானி தெய்வத்திற்கு எனது நன்றிகள். நானும் செக் செய்கிறேன்.. நன்றி அனானி..

 44. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  தகவல் பிழையைச் சுட்டிக் காட்டி அனானி தெய்வத்திற்கு எனது நன்றிகள். நானும் செக் செய்கிறேன்.. நன்றி அனானி..

 45. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  மற்றுமொரு அனானி இப்பதிவிற்குச் சம்பந்தமில்லாமல் ஒரு லின்க்கை கொடுத்துப் படிக்கச் சொல்லியிருக்கிறார். அந்த லின்க் ‘கிண்டி’ பக்கத்திற்குச் செல்கிறது. அந்தத் தளத்தை நான் எனது பார்வையிலேயே படக்கூடாது என்று தடையுத்தரவு விதித்திருப்பதால் அதை என் பதிவில் அனுமதிக்க முடியாது என்பதை அந்த அனானிக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்..

 46. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  மற்றுமொரு அனானி இப்பதிவிற்குச் சம்பந்தமில்லாமல் ஒரு லின்க்கை கொடுத்துப் படிக்கச் சொல்லியிருக்கிறார். அந்த லின்க் ‘கிண்டி’ பக்கத்திற்குச் செல்கிறது. அந்தத் தளத்தை நான் எனது பார்வையிலேயே படக்கூடாது என்று தடையுத்தரவு விதித்திருப்பதால் அதை என் பதிவில் அனுமதிக்க முடியாது என்பதை அந்த அனானிக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: