ரேணுகாஜியிடம் எனக்குப் பிடித்த தைரியம்

13-09-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


“உடல் பாதுகாப்பு விஷயத்தில் கணவர்களை நம்பக்கூடாது. தங்கள் பாதுகாப்புக்கு பெண்களே ஆணுறையை வாங்கிக் கொள்ள பழக வேண்டும்..” என்று மத்திய பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரி அட்வைஸ் செய்துள்ளார்.

சுகாதாரம் மற்றும் செக்ஸ் கல்வி உட்பட பல பிரச்சனைகளில் தன் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்து முன்னர் சர்ச்சையை ஏற்படுத்தியவர் ரேணுகா சவுத்ரி. தற்போது ஆணுறை குறித்து பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் பேசியுள்ளார்.

சமீபத்தில், எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களின் தேசிய அமைப்பின் சார்பில் டில்லியில் நடந்த கூட்டத்தில்தான் மத்திய அமைச்சர் ரேணுகா இப்படி பேசியுள்ளார்.

“பெண்கள் எய்ட்சிலிருந்து தங்களைப் பாதுகாப்பதில் ஆண்களை நம்பக்கூடாது. இந்த விஷயத்தில் அவர்கள் ஆண்களை சார்ந்திருக்காமல், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் ஆணுறையை வாங்கி வர தெரிந்து கொள்ள வேண்டும். ஆணுறையால் மட்டுமே நோயிலிருந்து ஒருவருக்கு பாதுகாப்பு அளிக்க முடியும். கடைகளிலோ அல்லது மருந்து கடைகளிலோ ஆணுறைகளை வாங்குவது குறித்து பெண்கள் கூச்சப்படக்கூடாது.

ஆண்களையோ அல்லது கணவன்களையோ பெண்கள் நம்புவது கூடாது. இந்த விஷயத்தில் ஆண்கள் கவனமாக இருப்பார்கள் என்று நம்பினால், நீங்கள் நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்க மறந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

ஆண்கள் ஆணுறைகளை வாங்க மாட்டார்கள். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கணவர்களால் ஆணுறைகளை எப்படி வாங்க முடியும்? எனவே பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வது நல்லது. இதில் கணவர்கள் சந்தேகப்பட்டால் சந்தேகப்பட்டுக் கொள்ளட்டும்..

பாலியல் தொடர்பான பிரச்சினைகள் பற்றி சிறு வயதிலேயே அனைவரும் அறிய வேண்டும். இல்லாவிடில் எதிர்கால சந்ததியினர் பெரிதும் பாதிக்கப்படுவர். இதை உணர்ந்துதான் பள்ளி பாடத் திட்டத்தில் பாலியல் கல்வி பாடத்தைச் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதை எதிர்ப்பவர்கள் கபடதாரிகள் என்றுதான் அர்த்தம்..” என்றெல்லாம் அட்வைஸ் மழை பொழிந்திருக்கிறார்.

எய்ட்ஸ் நோய் பொதுவாகவே 15 முதல் 49 வயதுக்கு உட்பட்டவரையே தாக்குகிறது. இந்நோயைத் தடுக்க முடியும் என்றாலும் விரைவில் கண்டறியப்பட முடிவதில்லை. நோய்க்கான அறிகுறிகள் அவ்வளவு எளிதில் ஒருவருக்கு நோய் இருப்பதை உணர்த்துவதில்லை.

கடந்தாண்டு ஆய்வுப்படி உலகில் 3.95 கோடி பேரும், இந்தியாவில் 25 லட்சம் பேரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் நைஜீரியாவைத் தொடர்ந்து இந்தியாவில்தான் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ளனர்.

இந்நோய் உடலுறவால் 85.34 சதவீதமும், பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு 3.80 சதவீதமும், ரத்தம் சார்ந்த வகையில் 2.05 சதவீதமும், போதை ஊசி மூலம் 2.34 சதவீதமும் பரவுகிறது. இதில் ஆச்சரியப்படும் விஷயமாக 6.46 சதவீதம் நோய் பரவும் விதமே தெரியவில்லை என்கிறார்கள்.

தினமும் 1500 குழந்தைகள் உட்பட 11,000 ஆயிரம் பேர் எய்ட்ஸால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 95 சதவீதத்துக்கு மேல் ஏழை மற்றும் நடுத்தர மக்களே அதிகம்.

ஆனாலும் எய்ட்ஸ் பாதித்த ஒருவர், பல ஆண்டுகள் பாதுகாப்பான வாழ்க்கை வாழ முடியும். குணப்படுத்த முடியாது என்றாலும் அவரின் ஆயுள் காலத்தை நீட்டிக்க முடியும். அவருடன் பணியாற்றுவதாலோ, பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்துவதாலோ பாதிப்பு ஏற்படுவதில்லை. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குள் திருமணங்கள்கூட நடந்து வருகின்றன.

எய்ட்ஸ் நோய் முறையற்ற உடலுறவால்தான் மிக அதிகமாகப் பரவி வருகிறது என்பதால்தான் அதைத் தடுக்க ஆணுறை அவசியம் என்ற பிரச்சாரம் வலுப்பட்டு வருகிறது.

இப்போது ஆணுறைகளை வாங்குவதே யாருடைய வேலை என்கின்ற அளவிற்கு பேச்சு எழுந்துள்ளது ஆச்சரியமான விஷயம்தான்..

“ஆண்களையோ அல்லது கணவன்களையோ பெண்கள் நம்புவது கூடாது. இந்த விஷயத்தில் ஆண்கள் கவனமாக இருப்பார்கள் என்று நம்பினால், நீங்கள் நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்க மறந்து விட்டீர்கள் என்று அர்த்தம்..” என்று ரேணுகா பேசியதிலிருந்தே தெரிகிறது.. இது யாருக்கான அட்வைஸ் என்று..

மத்திய அமைச்சரே என்றாலும் எதற்கு பொய் சொல்ல வேண்டும்? எதற்கு வீணாக பெண்ணியத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்று முடிவெடுத்து நிகழ்கால வாழ்க்கையோடு ஒத்துப் போகத்தான் வேண்டும் என்கின்ற நல்ல நோக்கத்தில் தெளிவாகத்தான் சொல்லியிருக்கிறார் ரேணுகா.

“ஆண்கள் ஆணுறைகளை வாங்க மாட்டார்கள். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கணவர்களால் ஆணுறைகளை எப்படி வாங்க முடியும்? எனவே பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வது நல்லது. இதில் கணவர்கள் சந்தேகப்பட்டால் சந்தேகப்பட்டுக் கொள்ளட்டும்..” — இப்படிப் போட்டுத் தாளித்திருக்கிறார்.

குடிகார கணவர்களை ஒதுக்கும்படியோ, அவர்களிடமிருந்து விலகும்படியோ பெண்களுக்கு புத்தி சொல்ல முன் வரவில்லை அமைச்சர் ரேணுகா. “அவர்கள் அப்படித்தான் வருவார்கள். நாம்தான் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்..” என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஏற்கெனவே ஒரு முறை இந்தியா டுடே பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியன்றில் “செக்ஸை நான் வெறுக்கவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை. அதற்காக நான் இப்போது சாமியாரிணியாகவும் இல்லை” என்று கண் சிமிட்டிச் சொல்லி அசர வைத்திருந்தார்.

இந்தத் தைரியம்தான் ரேணுகாஜிகிட்ட எனக்கு ரொம்பப் புடிச்சது..

21 பதில்கள் to “ரேணுகாஜியிடம் எனக்குப் பிடித்த தைரியம்”

 1. TBCD Says:

  பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் பேச்சு இது…பெண் என்றால் அடிமையா என்ன..விருப்பம் இல்லாமல் எதுவும் இல்லை என்று சொல்லுங்கள் என்று சொன்னால் அது புரட்சி..அவன் பண்ணுறத பண்ணுவான்..நீ…சூதனமா இருந்துக்கோன்னா என்னா பேச்சு..இதுல அங்களுக்கு ஒரு ஜி பட்டம் வேற…

  வேனுமின்னா ஒரு மான்புமிகு போடுங்க..இல்லையென்றால் திருமதி என்று போடுங்கள் அய்யா…

  //*குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கணவர்களால் ஆணுறைகளை எப்படி வாங்க முடியும்? எனவே பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வது நல்லது. *//

 2. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //TBCD said…
  பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் பேச்சு இது…பெண் என்றால் அடிமையா என்ன..விருப்பம் இல்லாமல் எதுவும் இல்லை என்று சொல்லுங்கள் என்று சொன்னால் அது புரட்சி..அவன் பண்ணுறத பண்ணுவான்..நீ…சூதனமா இருந்துக்கோன்னா என்னா பேச்சு..இதுல அங்களுக்கு ஒரு ஜி பட்டம் வேற… வேனுமின்னா ஒரு மான்புமிகு போடுங்க..இல்லையென்றால் திருமதி என்று போடுங்கள் அய்யா…//

  வேற என்ன செய்யணும்னு எதிர்பார்க்குறீங்க ஸார்..? குடித்துவிட்டுத்தான் வீட்டுக்கு வர வேண்டும் என்று பெண்கள் சொல்வதில்லையே.. அப்படியே குடித்துவிட்டு வந்தால் அவனை வீட்டை விட்டுத் துரத்தும்படி நாம் நமது வீட்டுப் பெண்களுக்கு இன்னும் சொல்லித் தரவில்லையே.. ஏஞ்சாமி..?

  குடிப்பது தவறென்றால் மதுகடைகளை திறந்து வைத்திருக்கும் அரசாங்கத்தைத்தானே நீங்கள் குற்றம் சொல்ல வேண்டும்.. ஆண்களைக் குற்றம் சொல்லி என்ன புண்ணியம்..?

  இவர்கள் இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் பெண்களை நாம் அனுதாபத்துடன் பார்ப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்..?

  அவர் இப்போதும் மாண்புமிகு மந்திரிதான்.. தமிழ்நாட்டில் மாண்புமிகு என்பார்கள். வடக்கே கடைசியில் ஒரு ஜி போட்டு மரியாதை கொடுப்பார்கள். நானும் அதைத்தான் செய்திருக்கிறேன்..

 3. Anonymous Says:

  இந்த விஷயம் விளக்குமாத்தோட தெருவுக்கு வந்த தமிழ்க்குடிமக்களுக்குத் தெரியுமாமா?

  என்னமோ போங்க.. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டிதானாம்.. அது மாதிரி குஷ்பூதான் பாவம்..

 4. வடுவூர் குமார் Says:

  அதுக்காக மொத்த பதிவையும் சிகப்பு எழுத்திலா?
  கண்ணை வலிக்குது உண்மைத்தமிழன்.

 5. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  வடுவூர் ஸார்.. முதல் இரண்டு வரிகள் மட்டும்தான் சிவப்பு எழுத்தில்.. மற்றவை நார்மல்தானே..

  ஓ.. நீங்க ‘அந்த’ அர்த்தத்துல சொல்றீங்களா..?

 6. Anonymous Says:

  en ippadi pakkam pakkama ezuthi uyirai edukiRingka.

 7. TBCD Says:

  சரி நீங்க பிடிச்ச முயலுக்கு மூனே காலு தான்..வச்சிக்கோங்க…
  நியாயப்படுத்தி நியாயப்படுத்தியே..எல்லாம்..விளாங்கமா போகுது…கொலைகாரன் கூட கொலைய நியாயப்படுத்துறான்…கொலை தப்பில்லை என்று ஆகிவிடும்மா…நான் சொன்னத மறந்துடுங்க…உறை வாங்க சொல்லுங்க…அவன் வீட்டுக்கு வந்ததும்…குடிச்ச வாயிக்கு…மிக்ஸர் வாங்கி தரச் சொல்லுங்க..ஏன் ஊத்திக் கொடுக்க சொல்லுங்க…கம்பெணிக்கு சேர்ந்து குடிக்கச் சொல்லுங்க…

 8. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //TBCD said…
  சரி நீங்க பிடிச்ச முயலுக்கு மூனே காலு தான்..வச்சிக்கோங்க… நியாயப்படுத்தி நியாயப்படுத்தியே..எல்லாம்..விளாங்கமா போகுது…கொலைகாரன் கூட கொலைய நியாயப்படுத்துறான்…கொலை தப்பில்லை என்று ஆகிவிடும்மா…நான் சொன்னத மறந்துடுங்க…உறை வாங்க சொல்லுங்க…அவன் வீட்டுக்கு வந்ததும்…குடிச்ச வாயிக்கு…மிக்ஸர் வாங்கி தரச் சொல்லுங்க..ஏன் ஊத்திக் கொடுக்க சொல்லுங்க…கம்பெணிக்கு சேர்ந்து குடிக்கச் சொல்லுங்க…//

  டிபிசிடி.. என்ன பேரு ஸார் இது? மொதல்ல பேரை மாத்துங்கப்பா.. தமிழ்.. தமிழ்ன்னு சொல்லிட்டு ஏபிசிடின்னு வைச்சுக்கிட்டு..

  தம்பி.. அந்தம்மா பேசினது நிஜ வாழ்க்கையைப் பத்தி.. நாம இங்க எழுதறதும், பேசறதும் கனவுலக வாழ்க்கையைப் பத்தி..

  ரோட்டோரமா குடிசை வீட்ல இருக்குறவன் டாஸ்மாக்குல சுதி ஏத்திப்புட்டு நேரா கடைக்குப் போய் உறையை வாங்கிட்டு அப்புறமா பொண்டாட்டியைத் தேடி வருவான்னு என்ன நிச்சயம்? சரி அப்படியே அந்த மட்டுக்கும் அவனுக்கு அவ்ளோ அறிவிருந்தா அவன் ஏன் ரோட்டோரமா வாழுறான்.. தன் வாழ்க்கை நிலையை எப்பவோ உயர்த்திருயிருப்பானேப்பா..?

  நாம இப்படி வெளிப்படையா பேசுறது.. எதுக்குமே மடங்காம நான் ஆம்பளை.. அப்படித்தான் இருப்பேன்னு கலர் காமிச்சிட்டிருக்கான் பாரு.. அவனுக்காகத்தான்..

 9. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…
  en ippadi pakkam pakkama ezuthi uyirai edukiRingka.//

  ஏம்ப்பா அனானி.. டைப்பிங் செய்ற எனக்கே அலுக்கலை.. ஏஸி ரூம்ல குந்திக்கின்னு சும்மா மெளஸை உருட்டிக்கின்னு படிக்குற உனக்கு அலுப்பா கீதா..?

  ராங்காயிருவ மக்கா..

 10. TBCD Says:

  எல்லாம்..நல்ல பேரு தான்..இப்போ நீங்க கூட ஆங்கில எண் தானே போட்டிருக்கிறீங்க…அது என்ன நீங்க..டோண்டு ரசிகர்ன்னு காட்டவா..

  சரி..விசயத்துக்கு வருவோம்….

  அண்ணே,

  ஏன்…இப்படி நமக்கு நாமே சமரசம் சொல்லிக்கனும்…
  பெண்ணியம் மாடியில இருக்கிற ஷிலா, மீனாவுக்கு மட்டும்மா..
  ஏன்…ராக்காயி, மூக்காயிக்கு கிடையாதா..
  எங்க சொல்லி பாருங்க உங்க வசனத்தை அவங்க கிட்ட..பெண்டு எடுத்துடுவாங்க…

  பெண்ணியம் பேசுறவங்க புரிஞ்சிக்கிட்டு பேசனும், தப்பு பண்ணுறவன தடுக்க துப்பில்ல அப்படின்னு..சும்மா இருக்கனும்..

  அவனுங்க அப்படி தான் பண்ணுவாங்க…நீங்க..உறை வாங்குங்க

  உறை 100% பாதுகாப்பு இல்ல…1% தப்பாச்சினாலும், அவளுக்கு பாதிப்பு தானே…
  விபாச்சரம் இல்லாம பண்ண போராடுவோம் அப்படின்னு சொன்னா அது பேச்சு…

  அவன் கண்ட இடத்தில் போவான், வாங்கிட்டு வருவான், நீங்க உறை வாங்கி வைங்க அப்படின்னா என்னா வார்த்தை…
  மததவங்க இப்படி அறிவுரை சொல்லலாம்…அமைச்சர்கள் அப்படி பேசக்கூடாது அது அவர்களின் கையாலாகத நிலைமையயை சமாளிக்க சொல்வது…

  சரியப்பா பெண் அப்படி போவா புருசன்காரன் எல்லாம் உறை வாங்க தயாரா அப்படின்னு ஒரு பெண்ணு கேட்ட எங்க வச்சிக்கிறது மூஞ்சிய…

  தனி மனித ஒழுக்கம் இருக்கனும்..அத வலியுறுத்தனும்…அப்படி இல்லையின்னா, விபச்சாரத்த முறைபடுத்தனும்..அப்படி அங்க போறவனுக்கு தனி அடையாளம் குடுக்கனும்..அப்படி இருக்கிறவங்கள ஒதுக்கனும்..

  செஞ்சதயே..திருப்பி திருப்பி பண்ணிட்டு பிரச்சனை தீரவில்லை என்று புலம்பக்கூடாது…

  ஆச்சர்யம் ஆனால் உன்மை இது பெண்கள் பேசனும்..நான் பேசிட்டேன்…ஏன்..உங்களுக்கு பெண் வாசகர்கள் இல்லியா…:))))
  //*
  உண்மைத் தமிழன்(15270788164745573644) said…

  .

  டிபிசிடி.. என்ன பேரு ஸார் இது? மொதல்ல பேரை மாத்துங்கப்பா.. தமிழ்.. தமிழ்ன்னு சொல்லிட்டு ஏபிசிடின்னு வைச்சுக்கிட்டு..

  தம்பி.. அந்தம்மா பேசினது நிஜ வாழ்க்கையைப் பத்தி.. நாம இங்க எழுதறதும், பேசறதும் கனவுலக வாழ்க்கையைப் பத்தி..

  ரோட்டோரமா குடிசை வீட்ல இருக்குறவன் டாஸ்மாக்குல சுதி ஏத்திப்புட்டு நேரா கடைக்குப் போய் உறையை வாங்கிட்டு அப்புறமா பொண்டாட்டியைத் தேடி வருவான்னு என்ன நிச்சயம்? சரி அப்படியே அந்த மட்டுக்கும் அவனுக்கு அவ்ளோ அறிவிருந்தா அவன் ஏன் ரோட்டோரமா வாழுறான்.. தன் வாழ்க்கை நிலையை எப்பவோ உயர்த்திருயிருப்பானேப்பா..?

  நாம இப்படி வெளிப்படையா பேசுறது.. எதுக்குமே மடங்காம நான் ஆம்பளை.. அப்படித்தான் இருப்பேன்னு கலர் காமிச்சிட்டிருக்கான் பாரு.. அவனுக்காகத்தான்..*//

 11. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //TBCD said…
  எல்லாம்..நல்ல பேரு தான்..இப்போ நீங்க கூட ஆங்கில எண் தானே போட்டிருக்கிறீங்க…

  ஏம்ப்பா தம்பி.. நானா ஆங்கில நம்பர் வேணும்னு சொல்லி வாங்கிப் போட்டிருக்கேன். அது கூகிள் கம்பெனிக்காரன் போட்டிருக்கான். வேண்ணா இதைத் தமிழ்ல எப்படி எழுதுறதுன்னு சொல்லிக் கொடு. போட்டுக்குறேன்..

  //அது என்ன நீங்க..டோண்டு ரசிகர்ன்னு காட்டவா..//

  போச்சுடா.. நீ நல்ல புள்ளைன்னு நினைச்சேன். இம்புட்டு நல்ல புள்ளையா இருப்பன்னு நினைக்கலப்பூ.. அவரை ஏன்யா வம்புக்கு இழுக்குறீங்க.. சும்மாவே இருக்க முடியாதா உங்களுக்கு?

  //அண்ணே, ஏன்…இப்படி நமக்கு நாமே சமரசம் சொல்லிக்கனும்… பெண்ணியம் மாடியில இருக்கிற ஷிலா, மீனாவுக்கு மட்டும்மா.. ஏன்…ராக்காயி, மூக்காயிக்கு கிடையாதா.. எங்க சொல்லி பாருங்க உங்க வசனத்தை அவங்ககிட்ட..பெண்டு எடுத்துடுவாங்க…//

  கண்ணா குடிச்சிட்டு ரோட்டோரமா விழுந்து கிடந்தாலும் தூக்கிட்டுப் போய் கரிசனமான வூட்ல வைச்சுக்கிறவுக அதிகம் பேரு ராக்காயியும், மூக்காயியும்தான்..

  ஷீலாவும், மீனாவும் ரெண்டு நாள் செய்வாங்க.. மூணாவது நாள்..?

  இப்ப மினிஸ்டர்ஜி சொன்னது எல்லாருக்கும் சேர்த்துத்தான்.. ஆனா குடிசை வீட்ல இருக்குறவுங்களைத் தவிர மத்த ஏரியால ஆம்பளைங்களே டப்பா டப்பாவா வாங்கி வைச்சிர்றானுக.. குடிசை வீட்டுக்காரன் மட்டும்தான் அதுக்கொசரம் எதுக்கு ஒரு ரெண்டு ரூபாயை செலவு பண்ணனும்..? அதுல நாலு பீடி குடிச்சிரலாமேன்னு நினைச்சுத்தான் அப்படி ஆம்பளைத் திமிரைக் காட்டுறான். ஏன்னா அவனுக்கு நோயோட தாக்கம் தெரியலை.. புரியலை..

  மத்தவன் டெய்லி பேப்பர் படிக்கிறான்.. புத்தகம் படிக்கிறான்.. படிச்சுத் தெரிஞ்சுக்குறான்.. ஆனா குடிசைக்காரன்.. டெய்லி காலைல இருந்து ராத்திரிவரைக்கும் வண்டி இழுக்குறவன்கிட்ட போய் பேப்பர்லாம் படிச்சியான்னு கேட்டா இன்னாகும்..? அவனுக்கு எதிர்காலத்தைப் பத்தி கவலையிருந்தா வண்டி இழுத்துக்கிட்டே இருக்க மாட்டாம்பா.. கொஞ்சம் நிஜ வாழ்க்கைக்கு வாப்பூ..

  //பெண்ணியம் பேசுறவங்க புரிஞ்சிக்கிட்டு பேசனும், தப்பு பண்ணுறவன தடுக்க துப்பில்ல அப்படின்னு..சும்மா இருக்கனும்.. அவனுங்க அப்படி தான் பண்ணுவாங்க…நீங்க..உறை வாங்குங்க. உறை 100% பாதுகாப்பு இல்ல…1% தப்பாச்சினாலும், அவளுக்கு பாதிப்பு தானே…விபாச்சரம் இல்லாம பண்ண போராடுவோம் அப்படின்னு சொன்னா அது பேச்சு… அவன் கண்ட இடத்தில் போவான், வாங்கிட்டு வருவான், நீங்க உறை வாங்கி வைங்க அப்படின்னா என்னா வார்த்தை.. மததவங்க இப்படி அறிவுரை சொல்லலாம்…அமைச்சர்கள் அப்படி பேசக்கூடாது அது அவர்களின் கையாலாகத நிலைமையயை சமாளிக்க சொல்வது…//

  தம்பீ.. ரேணுகாஜி சொன்னாப்புல அம்புட்டு ஆம்பளைங்களும் கேட்டிருவானுகளா.. நீ சொல்ற மாதிரி தப்பு பண்றவனை எதை வைச்சுத் தடுக்கிறது சொல்லு.. விபச்சார விடுதிக்கு போகாதடான்னு சொன்னா எவன் கேக்குறான்.. போலீஸ் ரெய்டு நடத்துது. ரிக்ஷா ஓட்டுறவனை பிடிச்சா போட்டோ புடிச்சு நியூஸ் கொடுக்குது.. கார்ல வந்தவனை புடிச்சா அவன் கொடுக்கிறதை வாங்கிட்டு விட்டுர்றாங்க.. இதை யார் கேக்குறது..?

  சரி அப்படியே புருஷன்காரன் தப்புத் தண்டா பண்றவனா இருக்கிறதால அவனை விட்டுட்டுப் பிரியச் சொல்றியா.. ஷீலாவும், மீனாவும் வேண்ணா கேப்பாங்க.. ஒத்துக்குவாங்க.. ராக்காயியும், மூக்காயியும்.. போய்ச் சொல்லிப் பாரு.. போவே.. உன் வேலைய பார்த்துக்கிட்டு அப்படீன்னுதான் சொல்வாங்க.. அது அவர்களிடைய அடிப்படை கல்வியறிவு இல்லாமையைக் காட்டுகிறது.

  இதை ஒரே நாள்ல திருத்தி நல்ல சமுதாயத்தைக் கொண்டு வர முடியாது.. அதுக்கு படிப்படியாகத்தான் போகணும். சின்ன வயசுல இருந்தே பாலியல் கல்வியைப் போதிக்கணும்னு இதுக்குத்தான் சொல்றது.. தெருவுல, ரோட்டோரமா இருக்குற பொம்பளையா இருந்தாலும், கொஞ்சம் படிச்சிருந்தா புருஷன் உறை வாங்காம பக்கத்துல வந்தா சொல்லுவால்லே.. இல்லாட்டி விபச்சார விடுதிக்குப் போற பழக்கம் இருக்கிறவனா இருந்தா அவ பாதுகாப்பா இருந்துக்குவா இல்லையா.. அதுக்குத்தான் அந்தம்மா ஆம்பளைங்களை நம்பாதீங்கன்னு சொல்லுது..

  //சரியப்பா பெண் அப்படி போவா புருசன்காரன் எல்லாம் உறை வாங்க தயாரா அப்படின்னு ஒரு பெண்ணு கேட்ட எங்க வச்சிக்கிறது மூஞ்சிய… தனி மனித ஒழுக்கம் இருக்கனும்..அத வலியுறுத்தனும்…அப்படி இல்லையின்னா, விபச்சாரத்த முறைபடுத்தனும்..அப்படி அங்க போறவனுக்கு தனி அடையாளம் குடுக்கனும்..அப்படி இருக்கிறவங்கள ஒதுக்கனும்.. செஞ்சதயே..திருப்பி திருப்பி பண்ணிட்டு பிரச்சனை தீரவில்லை என்று புலம்பக்கூடாது…//

  இப்ப நீ யாருக்கு சப்போர்ட் பண்றன்னு எனக்குப் புரியவே இல்லை.. ஆம்பளை அப்படி போறதால பொம்பளையும் அப்படிப் போகணும்னா எதிர்பார்த்தா அது எங்க போய் முடியும்னு யோசிச்சுப் பார்த்தியா..? தனி மனித ஒழுக்கம் வேணும்தான்.. யார் இல்லைன்னா.. அது இல்லைன்றதுதான் கண் முன்னாடி தெரியுதே.. அதுக்காக இஇந்தியால இருக்குற ஆம்பளைங்க அத்தனை பேரும் ராமனுகதான் அப்படீன்னு அந்தம்மா சர்டிபிகேட் கொடுக்கணும்னு சொல்றியா..? அப்புறம் அது பாட்டுக்கு ஒரு பத்து பதிவுக்குப் போதும்.. வேணாம்.. இ

  ரேணுகா புலம்பலை.. சமூகம் நிஜத்துல எப்படி இருக்குன்றதை சுட்டிக் காட்டு அதுக்கேத்தாப்புல நீங்களும் மாறிக்குங்க பொண்ணுகளான்னு சொல்லியிருக்காங்க.. அவ்ளோதான்..

  //ஆச்சர்யம் ஆனால் உன்மை இது பெண்கள் பேசனும்..நான் பேசிட்டேன்…ஏன்..உங்களுக்கு பெண் வாசகர்கள் இல்லியா…:))))//

  நல்லது ராசா.. யாராச்சும் இந்தப் பக்கம் வந்தா உன் பேரைச் சொல்லி அங்கிட்டு அனுப்பி வைக்கிறேன்.. சரியா..?

 12. TBCD Says:

  //*இதைத் தமிழ்ல எப்படி எழுதுறதுன்னு சொல்லிக் கொடு. போட்டுக்குறேன்..*//
  நல்லா இருக்கே….அதுக்கு..நீங்க..நல்ல தமிழ் படிங்க..

  //*கண்ணா குடிச்சிட்டு ரோட்டோரமா விழுந்து கிடந்தாலும் தூக்கிட்டுப் ய் கரிசனமான வூட்ல வைச்சுக்கிறவுக அதிகம் பேரு ராக்காயியும், மூக்காயியும்தான்..

  ஷீலாவும், மீனாவும் ரெண்டு நாள் செய்வாங்க.. மூணாவது நாள்..?*//

  அப்படி பண்ணுறதினாலே தான் அவனுங்க திருந்திரது இல்ல…அதுனால அவங்க எல்லாம்..நளாயினி மாதிரி தூக்கி வைக்க வேண்டாம்..தப்புக்கு காரணம்..அவங்க தப்ப சகிச்சிக்கிறது தான்..

  //* கொஞ்சம் நிஜ வாழ்க்கைக்கு வாப்பூ..*//

  நீங்க நிச வாழ்க்கையின்னு எதைச் சொல்லுறீங்க…இது திருத்த முடியாத கேஸ் அப்படின்னு முடிவு பண்ணிட்டு இருக்கிறத சொல்லுறீங்க..நான் என்ன சொல்லுறேன்…தவறுக்கு பரிகாரம் அதை சகிச்சுக்கிறது இல்ல…
  நிதர்சனத்துக்கு வாங்க…அப்படி அவள பத்தி கவலைப்படாமா இருக்கிறவன இவ மட்டும் ஏன் கவலப்படனும்..

  இது எல்லாம்..சினிமாவிலே..கதாநாயகன் குடிகாரன அடிக்கும் போது பொண்டாட்டி கை எடுத்து கும்பிடுவா…நிச வாழ்கையில…புருசன்காரன வெட்டுற பொண்டாட்டிங்க எல்லாம் இருக்குங்க…..நீங்க..எதுக்கும் ஒரு தடவ சரியா பாத்திட்டு வாங்க…

  குடிச்சிட்டு..பெத்த பொண்ண கெடுக்கிறான்…அப்ப என்ன சொல்லுவீங்கப்பூ..அவனுக்கு நிதானம் இல்ல…அதுனால..அப்படி கையப்பிடிச்சு இழுத்தா…கைய தட்டி விடுங்கன்னா…

  நம்ம நாட்ல தான் பெயிலியருக்கு சிஸ்டம் டிசைன் பண்ணுவோம்..
  அதுக்கு இது மட்டும் விதி விலக்கா என்னா..

  //*இதை யார் கேக்குறது..? *//

  வேற யாரு கேக்குறது..இதுக்கு தானே ஒட்ட போட்டு உக்கார வச்சிய்ருக்கோம்…அவங்க..மூக்க சீந்தினா செய்தி போடுற நீங்க..இந்த கேள்விய அவங்க கிட்ட கேக்கனும்..

  //*ராக்காயியும், மூக்காயியும்.. போய்ச் சொல்லிப் பாரு.. போவே.. உன் வேலைய பார்த்துக்கிட்டு அப்படீன்னுதான் சொல்வாங்க.. அது அவர்களிடைய அடிப்படை கல்வியறிவு இல்லாமையைக் காட்டுகிறது.*//

  இது உங்க குறிகிய மணப்பாண்மையயைக் காட்டுது…படிப்புக்கும்..அவங்க சுயமரியாதைக்கும் தொடர்பு இல்ல…கிரமத்தில…படிக்காத பொமபளை புருசன் தப்பு பண்ணா..அறுத்து கட்டுவாங்க தெரியும்மா..மறுமணமும் சாதரணம்..திண்டுகல்லு பக்கம் அப்படி இல்லையா என்ன..

  //*இப்ப நீ யாருக்கு சப்போர்ட் பண்றன்னு எனக்குப் புரியவே இல்லை.. ஆம்பளை அப்படி போறதால பொம்பளையும் அப்படிப் போகணும்னா எதிர்பார்த்தா அது எங்க போய் முடியும்னு யோசிச்சுப் பார்த்தியா..? *//

  அத தான்ய்யா நானும் கேக்குறேன்….

  //*இந்தியால இருக்குற ஆம்பளைங்க அத்தனை பேரும் ராமனுகதான் அப்படீன்னு அந்தம்மா சர்டிபிகேட் கொடுக்கணும்னு சொல்றியா..? *//
  அவங்க சான்றிதழ் தர வேண்டாம்…அவங்க வேலையாச் செஞ்சாப்போதும்…ஒரு பாரளுமன்ற உறுப்பினாரா..இதுக்கு ஒரு கல்லு வச்சாலும்…அது ஒரு தொடக்கத்திற்கு வழி வகுக்கும்…

  //*ரேணுகா புலம்பலை.. சமூகம் நிஜத்துல எப்படி இருக்குன்றதை சுட்டிக் காட்டு அதுக்கேத்தாப்புல நீங்களும் மாறிக்குங்க பொண்ணுகளான்னு சொல்லியிருக்காங்க.. அவ்ளோதான்..*//

  உங்களுக்கு…எப்படி புரிய வைக்கிறது….தப்ப தப்பில்லாம பன்னச் சொல்லுறாங்க..நான் தப்பு பண்ணவேக் கூடாதுன்னு சொல்லுறேன்…

  தப்ப தப்பில்லாம பண்ணுன்னா. தப்ப ஆதரிக்கிறீங்க…..

  இவ்வளவும் சொல்லியும் புரியவில்லை என்றால்..
  ஒரு குட்டிக் கதை சொல்லுறேன்…புரியுதான்னு பாருங்க..
  இல்லையின்னா..மறுபடியும்..ஒரு பக்கத்துக்கு பின்னுட்டம்..போடுங்க..

  ஒரு ஊர் இருந்திச்சி…
  அதுல மக்கள் தொகை பெருகிச்சி..
  கட்டமைப்பு மாறவில்லை..
  மழை வந்திச்சி…
  ஊரெல்லாம்..ஒரே தண்ணி….
  அப்ப என்ன பன்னாங்க..மோட்டார் வைச்சு..
  தண்ணியெல்லாம்..எடுத்துட்டாங்க..
  அப்ப என்ன சொன்னாங்க..
  நிறைய மோட்டர்…வாங்கனும்…
  அப்படின்னு..முடிவு பண்ணாங்க..
  இதுல என்ன தவறுன்னு புரியுதா…

 13. வவ்வால் Says:

  உண்ம்மைத்தமிழர்,

  ஒரு பொறுப்புள்ளப்பதவியில் இருப்பவர்கள் அப்படி சொல்வது தவறு, பிரச்சினைக்கு தீர்வு சொல்ல வேண்டும், தப்பிக்கும் வழி சொல்லக்கூடாது.

  பீரோ புல்லிங்க் திருடன் என்று ஒருவன் கலக்கிட்டு இருந்தான், அவனைப்பிடிக்காம(தற்போது பிடிச்சாச்சு) காவல் துறை எதுக்கு பீரோ வச்சு இருக்கிங்க அதானால தானே அவன் வந்து புல் பண்றான்னு சொல்லி இருந்தா ஆக நல்ல ஆலோசனைனு சொல்லி இருப்பிங்களா,

  ஒரு மக்கள் பிரதிநிதியா பொறுப்போட பேசனும். ஆனா அந்த அம்மா என்ன பண்ணுவாங்க அந்த காலத்துல என்.டி.ராமாராவுக்கு செட் அப் ஆக இருந்து அரசியல் வாழ்வு பெற்றவங்க தானே, அவங்க இன்னும் செல்வி தான் எனவே திருமதினு கூட போட முடியாது :-))

 14. TBCD Says:

  வவ்வால் தலைகிழாக தொங்கினாலும் சட்டுன்னு கருத்தை கவ்வி விட்டீர்கள்…நன்றி..

 15. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //அப்படி பண்ணுறதினாலே தான் அவனுங்க திருந்திரது இல்ல…அதுனால அவங்க எல்லாம்..நளாயினி மாதிரி தூக்கி வைக்க வேண்டாம்..தப்புக்கு காரணம்..அவங்க தப்ப சகிச்சிக்கிறது தான்..//

  சகிச்சிக்க வேண்டாம். தூக்கியெறிஞ்சிரலாம்.. எத்தனை வீட்ல தம்பி தூக்கியெறியது..? இந்தக் கதை அப்படியே என் குடிக்கிறான்னு போய் நிக்கும். அதான் போன தடவையே சொன்னனே.. அது வேற தளத்துல போய் முட்டிக்கும். அதுக்குக் காரணமும் நம்ம சமூகம்தான்..

  //நீங்க நிச வாழ்க்கையின்னு எதைச் சொல்லுறீங்க…இது திருத்த முடியாத கேஸ் அப்படின்னு முடிவு பண்ணிட்டு இருக்கிறத சொல்லுறீங்க..நான் என்ன சொல்லுறேன்…தவறுக்கு பரிகாரம் அதை சகிச்சுக்கிறது இல்ல… நிதர்சனத்துக்கு வாங்க…அப்படி அவள பத்தி கவலைப்படாமா இருக்கிறவன இவ மட்டும் ஏன் கவலப்படனும்..

  இது எல்லாம்..சினிமாவிலே..கதாநாயகன் குடிகாரன அடிக்கும் போது பொண்டாட்டி கை எடுத்து கும்பிடுவா…நிச வாழ்கையில…புருசன்காரன வெட்டுற பொண்டாட்டிங்க எல்லாம் இருக்குங்க…..நீங்க..எதுக்கும் ஒரு தடவ சரியா பாத்திட்டு வாங்க…குடிச்சிட்டு..பெத்த பொண்ண கெடுக்கிறான்…அப்ப என்ன சொல்லுவீங்கப்பூ..அவனுக்கு நிதானம் இல்ல…அதுனால..அப்படி கையப்பிடிச்சு இழுத்தா…கைய தட்டி விடுங்கன்னா… நம்ம நாட்ல தான் பெயிலியருக்கு சிஸ்டம் டிசைன் பண்ணுவோம்.. அதுக்கு இது மட்டும் விதி விலக்கா என்னா..//

  தம்பி நீ சொல்றதெல்லாம் வாஸ்தவந்தான்.. நம்ம சமூகமே குடும்பம் என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அமைந்தது. அதுனாலதான் இந்தக் கல்யாணம், கருமாதியெல்லாம். இல்லேன்னா மத்த நாடுக மாதிரி சேர்ந்து வாழ்ந்துட்டு அத்துட்டுப் போக முடியாதா என்ன?

  கம்யூட்டர் இன்ஜினியரா வேலை பார்க்குற பொண்ணா இருந்தாலும் ஒரு நாள்தான குடிக்கிறான்.. குடிச்சிட்டுப் போறான்னுட்டுத்தான் விடுவாங்க.. அந்த ஒரு நாள் குடிக்காகவோ, அல்லது வாரத்தில் ஒரு நாள் குடிக்காகவோ அல்லது அவ்வப்போது குடிக்கும் குடிக்காகவோ எல்லாருமே அத்துக்கிட்டுப் போகணும். டைவர்ஸ் பண்ணணும்.. பிரிஞ்சிரணும் அப்படீன்னு சொன்னா.. சரி.. சொல்லு.. எத்தனை பேர் கேப்பாங்க.. அதுலதான் விஷயமே இருக்கு..

  //வேற யாரு கேக்குறது..இதுக்கு தானே ஒட்ட போட்டு உக்கார வச்சிய்ருக்கோம்…அவங்க..மூக்க சீந்தினா செய்தி போடுற நீங்க..இந்த கேள்விய அவங்க கிட்ட கேக்கனும்..//

  தம்பி நம்ம நாட்டு அரசியல்வாதிகளைப் பத்தி தெரியாதா உனக்கு..? அவுங்க வீட்ல தண்ணி வரலைன்னா மட்டும்தான் அவுங்க போன் போடுவாங்க.. மத்தவங்களைப் பத்தி அவுங்க என்னிக்குக் கவலைப்பட்டிருக்காங்க. அப்படிக் கவலைப்படுற கவர்ன்மெண்ட்டா இருந்தா மது, புகையிலை, விபச்சார விடுதி என எதுவுமே நாட்ல இருக்காது.. எல்லாத்தையும் தொறந்துவிட்டுட்டு மக்களின் சுகாதாரப் பணிகளைப் பத்தியும், சமூகத்தின் மேல் அக்கறையையும் பத்தி அஞ்சு மணி நேரம் பேசுவாங்க.. அவுங்கதான் அரசியல்வாதிகள்..

  //இது உங்க குறிகிய மணப்பாண்மையயைக் காட்டுது…படிப்புக்கும்..அவங்க சுயமரியாதைக்கும் தொடர்பு இல்ல…கிரமத்தில…படிக்காத பொமபளை புருசன் தப்பு பண்ணா..அறுத்து கட்டுவாங்க தெரியும்மா..மறுமணமும் சாதரணம்..திண்டுகல்லு பக்கம் அப்படி இல்லையா என்ன..//

  இருக்கு சாமி.. இல்லேன்னு சொல்லலை.. ஆனா எத்தனை சதவிகிதம்.. அதிகம் பேர் இருக்குறவரைக்கும் ஒப்பேத்துவோம்.. நமக்கு வாய்ச்சது அவ்ளோதான் என்று தங்களைத் தாங்களே திருப்திப்பட்டுக் கொண்டு வாழறாங்க.. இதுல எது சரி எது தப்பு? சகிச்சிக்கிட்டு போறது தப்புன்றியா.. இல்லை பிரியறது சரின்றியா..? அது அவுங்கவுங்க இஷ்டமாச்சேப்பா.. நம்ம என்ன பண்ண முடியும்? அவுங்க பிரியலாம்னு சொன்னா.. ஆம்பளை 50 வயசுலேயும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிடடு இன்னொரு பாதுகாப்பான குடும்பத்தை உருவாக்கிக்குவான். ஆனால் பெண்.. அதுக்காக அவன் கொடுமைக்காரனாக இருந்தால் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. பெருவாரியான மக்களின் எண்ணத்தைத்தான் சொல்கிறேன்.. இதனால்தான் அவர்கள் சகித்துக் கொள்கிறார்கள்.

  //அவங்க சான்றிதழ் தர வேண்டாம்…அவங்க வேலையாச் செஞ்சாப்போதும்…ஒரு பாரளுமன்ற உறுப்பினாரா..இதுக்கு ஒரு கல்லு வச்சாலும்…அது ஒரு தொடக்கத்திற்கு வழி வகுக்கும்…//

  என்னைப் பொறுத்தவரை அவுங்க இப்படி வெளிப்படையா பெண்களுக்கு அட்வைஸ் கொடுத்ததுகூட இந்த விஷயத்தில் ஆண்களுக்கெதிரா அவுங்க பேசுற ஒரு விஷயமாத்தான் எனக்குத் தோணுது.. வேற எந்த ஆம்பளை மினிஸ்டரும் இது மாதிரி உறை யூஸ் பண்ணுங்கடா மக்கான்னு பேசலையே.. இஇந்தத் தாய்க்குலம்தான பேசியிருக்கு.. இதுவே பெரிய விஷயம்தானப்பூ..

  //உங்களுக்கு…எப்படி புரிய வைக்கிறது….தப்ப தப்பில்லாம பன்னச் சொல்லுறாங்க..நான் தப்பு பண்ணவேக் கூடாதுன்னு சொல்லுறேன்… தப்ப தப்பில்லாம பண்ணுன்னா. தப்ப ஆதரிக்கிறீங்க…..

  இவ்வளவும் சொல்லியும் புரியவில்லை என்றால்.. ஒரு குட்டிக் கதை சொல்லுறேன்…புரியுதான்னு பாருங்க..
  இல்லையின்னா..மறுபடியும்..ஒரு பக்கத்துக்கு பின்னுட்டம்..போடுங்க..

  ஒரு ஊர் இருந்திச்சி…
  அதுல மக்கள் தொகை பெருகிச்சி..
  கட்டமைப்பு மாறவில்லை..
  மழை வந்திச்சி…
  ஊரெல்லாம்..ஒரே தண்ணி….
  அப்ப என்ன பன்னாங்க..மோட்டார் வைச்சு..
  தண்ணியெல்லாம்..எடுத்துட்டாங்க..
  அப்ப என்ன சொன்னாங்க..
  நிறைய மோட்டர்…வாங்கனும்…
  அப்படின்னு..முடிவு பண்ணாங்க..
  இதுல என்ன தவறுன்னு புரியுதா…//

  ஐயையோ.. மறுபடியும் புறப்பட்ட இடத்துக்கே வந்துட்ட ராசா.. அந்தம்மா சொன்னது ஒரு பெண்ணுக்கு இன்னொரு பக்கத்து வீட்டுப் பெண் சொல்ற அட்வைஸ் மாதிரி.. அவுங்க அமைச்சர் மாதிரி சொல்லியிருக்கணும்னா “உறை வாங்காம உங்க வீட்டுக்காரனுக வந்தா பக்கத்துலேயே விட்ராதீங்கன்னுதான் சொல்லியிருப்பாங்க.. அப்புறம் புருஷன் அடிப்பானேன்னு பயப்படாதீங்க.. அடிச்சான்னா போலீஸ்ல புடிச்சுக் குடுங்க. அப்புறமா அவனை விட்டு விலகி உங்களுக்குன்னு ஒரு தனி வாழ்க்கையை ஆரம்பிங்க..” இப்படித்தான் அவுங்க சொல்லிருக்கணும்..

  நாம இப்படி ஈஸியா சொல்லிட்டுப் போயிருவோம்.. ஆனா அது எவ்வளவு கஷ்டம்னு ந்தம்மாவுக்கு நல்லாத் தெரியும். அதுனாலதான் சனியை உசிரோட இருந்துதான் சமாளிக்கணும்னு சொல்லிருக்காங்க.. அவ்ளோதாம்ப்பூ.

 16. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வவ்வால் said…
  உண்ம்மைத்தமிழர், ஒரு பொறுப்புள்ளப்பதவியில் இருப்பவர்கள் அப்படி சொல்வது தவறு, பிரச்சினைக்கு தீர்வு சொல்ல வேண்டும், தப்பிக்கும் வழி சொல்லக்கூடாது.

  பீரோ புல்லிங்க் திருடன் என்று ஒருவன் கலக்கிட்டு இருந்தான், அவனைப்பிடிக்காம(தற்போது பிடிச்சாச்சு) காவல் துறை எதுக்கு பீரோ வச்சு இருக்கிங்க அதானால தானே அவன் வந்து புல் பண்றான்னு சொல்லி இருந்தா ஆக நல்ல ஆலோசனைனு சொல்லி இருப்பிங்களா,

  ஒரு மக்கள் பிரதிநிதியா பொறுப்போட பேசனும். ஆனா அந்த அம்மா என்ன பண்ணுவாங்க அந்த காலத்துல என்.டி.ராமாராவுக்கு செட் அப் ஆக இருந்து அரசியல் வாழ்வு பெற்றவங்க தானே, அவங்க இன்னும் செல்வி தான் எனவே திருமதினு கூட போட முடியாது :-))//

  வவ்வால் ஸார்.. மேலே தம்பி டிபிசிடிக்கு விரிவா பதில் சொல்லியிருக்கேன்.. படிச்சிக்குங்க..

  அந்தம்மாவுக்கு கல்யாணமாகி ரெண்டு பொண்ணுக.. அதுலேயும் ஒரு பொண்ணுக்கு சமீபமாத்தான் கல்யாணமும் ஆச்சு.. நீங்க சொல்ற மாதிரியான சினிமாத்தனமான செயல்களைப் பற்றி நான் கேள்விப்படவில்லை..

  அப்புறம், அதென்ன ஒரு பொம்பளை மேலை குத்தம் சொல்ல ரொம்ப ஈஸியா அவுங்களோ தனிப்பட்ட வாழ்க்கையை கைல எடுக்குறீங்க. இது ஒரு வகை ஆணாதிக்கம் வவ்வால்ஜி.. வன்மையாகக் கண்டிக்கிறேன்..

 17. முரளி கண்ணன் Says:

  nice sir good reply to vavvaal

 18. வவ்வால் Says:

  //அதுலேயும் ஒரு பொண்ணுக்கு சமீபமாத்தான் கல்யாணமும் ஆச்சு.. நீங்க சொல்ற மாதிரியான சினிமாத்தனமான செயல்களைப் பற்றி நான் கேள்விப்படவில்லை..

  அப்புறம், அதென்ன ஒரு பொம்பளை மேலை குத்தம் சொல்ல ரொம்ப ஈஸியா அவுங்களோ தனிப்பட்ட வாழ்க்கையை கைல எடுக்குறீங்க. இது ஒரு வகை ஆணாதிக்கம் வவ்வால்ஜி.. வன்மையாகக் கண்டிக்கிறேன்..//

  பழைய அரசியல் விவரம் தெரிந்தவர்களை கேட்டுப்பாருங்கள், ராமாராவ், ரேணுகா பற்றி சொல்வார்கள், மேலும் அப்போது குண்டுராவ் என்று ஒரு அரசியல்வாதிக்கும் , ரேணுகாவிற்கும் இது குறித்து சண்டை எல்லாம் நடந்தது, இவர்கள் அவரை செருப்பால் அடிக்கும் அளவுக்கு போயிற்று. ஆந்திரா அரசியல் இல்லையா காரமாதான் இருந்து இருக்கும்.

  இப்போ அந்தம்மா ஆண்கள் குடித்து விட்டு வருவாங்கனு யாரை சொன்னாங்க அவங்க வீட்டுக்காரர் பற்றியா சொன்னாங்க , அதுவும் யாரோ ஒரு முகம் இல்லா மனிதன் மீதான தனி நபர் தாக்குதல் தானே!

  இதுவே ஒரு ஆண் உறை வாங்கி வச்சுக்கோங்கனு சொல்லி இருந்தா அதை ஆண் ஆதிக்க பேச்சுனு இந்தம்மாவே சண்டைக்கு போய் இருக்கும்!

  //எல்லாத்தையும் தொறந்துவிட்டுட்டு மக்களின் சுகாதாரப் பணிகளைப் பத்தியும், சமூகத்தின் மேல் அக்கறையையும் பத்தி அஞ்சு மணி நேரம் பேசுவாங்க.. அவுங்கதான் அரசியல்வாதிகள்..
  //

  அப்படி பேசும் ஒரு அரசியல்வாதிக்கு தான் நீங்க மாலை மரியாதை பண்றிங்க :-)) அது எதுக்குன்னு தான் தெரியலை!

 19. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //பழைய அரசியல் விவரம் தெரிந்தவர்களை கேட்டுப்பாருங்கள், ராமாராவ், ரேணுகா பற்றி சொல்வார்கள், மேலும் அப்போது குண்டுராவ் என்று ஒரு அரசியல்வாதிக்கும் , ரேணுகாவிற்கும் இது குறித்து சண்டை எல்லாம் நடந்தது, இவர்கள் அவரை செருப்பால் அடிக்கும் அளவுக்கு போயிற்று. ஆந்திரா அரசியல் இல்லையா காரமாதான் இருந்து இருக்கும்.//

  இது உண்மையோ.. பொய்யோ.. இதை எதற்கு இந்தப் பிரச்சினையில் நுழைக்க வேண்டும் வவ்வால்ஜி..? நாம் பேசுவது அந்தம்மா பேசிய பேச்சுக்கள் சரியா இல்லையா என்பதைப் பற்றித்தான். இதில் எதற்கு சொந்த வாழ்க்கை பற்றிய கதையைத் திணிக்கிறீர்கள்.? பெண் என்பதால் ஈஸியாக அவரது கற்பு மீது ஒரு பழியைப் போட்டுவிட்டு அவரது நடத்தை சரியில்லை.. ஆகவே அவர் அப்படித்தான் பேசுவார் என்று சொல்லிவிட்டு போய்விடலாம் என்று நினைத்தீர்களா?

  //இப்போ அந்தம்மா ஆண்கள் குடித்து விட்டு வருவாங்கனு யாரை சொன்னாங்க அவங்க வீட்டுக்காரர் பற்றியா சொன்னாங்க , அதுவும் யாரோ ஒரு முகம் இல்லா மனிதன் மீதான தனி நபர் தாக்குதல் தானே!//

  தனி நபர் தாக்குதல்தான்.. ஆனால் அதுவொன்றும் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லையே.. பொதுவாக குடித்து விட்டு வீட்டுக்கு வரும் ஆண்களைத்தான்.. ஆனால் நீங்கள் எழுதியிருப்பது என்ன..?

  //இதுவே ஒரு ஆண் உறை வாங்கி வச்சுக்கோங்கனு சொல்லி இருந்தா அதை ஆண் ஆதிக்க பேச்சுனு இந்தம்மாவே சண்டைக்கு போய் இருக்கும்!//

  அப்படி ஒரு ஆண் சொல்லி இந்தம்மா சண்டை போட்டிருந்தாலும் நான் அந்த ஆணு ஆதரவாகத்தான் பதில் சொல்லியிருப்பேன்..

  //அப்படி பேசும் ஒரு அரசியல்வாதிக்கு தான் நீங்க மாலை மரியாதை பண்றிங்க :-)) அது எதுக்குன்னு தான் தெரியலை!//

  ந்த அம்மாவைப் பற்றி நான் எழுதியிருப்பது இதுதான் முதல் முறை. ரேணுகாவுக்காக நான் இதை எழுதவில்லை. ஒரு மத்திய அமைச்சர், அதிலும் ஒரு பெண் அமைச்சர்.. நிஜ வாழ்க்கையோடு ஒத்துப் போய் உருப்படியாக ஒரு அட்வைஸ் செய்திருக்கிறாரே என்பதால்தான்..

 20. வவ்வால் Says:

  நடைமுறையில் இருக்கும் அசிங்கம்லாம் மாறனும்னு தான் பல போராட்டங்கள் நடக்கும் ,அதை செய்யாமல் ஆனா அதுக்கு எப்படி அட்ஜஸ்ட் செய்து போவதுனு பேசினா , அது சரி தான்னு கேட்டுக்க வேண்டியது தான் :-))

  பிரதம மந்திரி வருவதால் சாலை போக்குவரத்து நிறுத்தி இருந்தார்கள் நான் உடனே போகனும்னு அதே சாலையில் கார் விட்டாங்க , அதை மறுத்த போக்குவரத்து காவலரை பலர் முன்னிலையில் பத்திரிக்கையாளர்கள் எல்லாம் இருக்கும் போதே அடித்தவர் தான் ரேணுகா சவுத்ரி, இதற்காக கைது செய்யும் நிலை கூட ஏற்பட்டது. அமைச்சர் என்பதால் எப்படியோ தப்பினார். அவங்க அறிவுரை சொன்னா சரியாத்தான் இருக்கும். இது வும் தனி நபர் தாக்குதல்னு சொல்லிடாதிங்க :-))

 21. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வவ்வால் said…
  நடைமுறையில் இருக்கும் அசிங்கம்லாம் மாறனும்னு தான் பல போராட்டங்கள் நடக்கும் ,அதை செய்யாமல் ஆனா அதுக்கு எப்படி அட்ஜஸ்ட் செய்து போவதுனு பேசினா , அது சரி தான்னு கேட்டுக்க வேண்டியது தான் :-))//

  வவ்வால்ஜி.. அசிங்கங்கள் மறைய வேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன். அது உடனே மறைய வாய்ப்பில்லை என்னும்போது வாழுகின்றவரையிலும் அதிலிருந்து நம்மை எப்படித் தற்காத்துக் கொள்வது என்றுதான் நாம் யோசனை செய்ய வேண்டும். அதுதானே புத்திசாலித்தனம்.

  //பிரதம மந்திரி வருவதால் சாலை போக்குவரத்து நிறுத்தி இருந்தார்கள் நான் உடனே போகனும்னு அதே சாலையில் கார் விட்டாங்க , அதை மறுத்த போக்குவரத்து காவலரை பலர் முன்னிலையில் பத்திரிக்கையாளர்கள் எல்லாம் இருக்கும் போதே அடித்தவர் தான் ரேணுகா சவுத்ரி, இதற்காக கைது செய்யும் நிலை கூட ஏற்பட்டது. அமைச்சர் என்பதால் எப்படியோ தப்பினார். அவங்க அறிவுரை சொன்னா சரியாத்தான் இருக்கும். இது வும் தனி நபர் தாக்குதல்னு சொல்லிடாதிங்க :-))//

  இதுவும் தவறுதான்.. இல்லையென்று மறுக்கவில்லை.

  நான் ஒன்றும் திருமதி ரேணுகா சவுத்ரி மிக மிக நேர்மையான அரசியல்வாதி என்று ஒட்டு மொத்தமாக சர்டிபிகேட் தரவில்லையே..? அவர் சொன்ன ஒரு விஷயம் எனக்குப் பிடித்திருந்தது. அதைத்தான் சொன்னேன்.. அவ்வளவுதான்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: