அல்லா காப்பாற்றாமல் இருப்பாராக..

10-08-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எப்போதும் போலத்தான் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து டிவியை ஆன் செய்தேன். எப்போதும் விரும்பிப் பார்ப்பது நியூஸ் சேனல்கள்தான் என்பதால் நியூஸ் சேனலுக்கு வந்தேன்.

ஒரு மேடையில் கலவரம் ஒன்று நடப்பது போல காட்சிகள் தெரிந்தன. சரி ஏதோ ஒரு அரசியல் மேடையாக இருக்குமோ என்று நினைத்தால் அது ஒரு இலக்கிய மேடை. தாக்கப்படுபவர் வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் என்று செய்தியில் சொல்லப்பட்டது. இது முதல் அதிர்ச்சி.

இரண்டாவது, பூந்தொட்டிகளை எடுத்து வீசியது. சேர்களை தூக்கி எறிந்தது, ‘வெளில வாடி’ என்று தெலுங்கில் மாடலாடி ரவுடித்தனம் செய்தவர்கள் ஆந்திரா சட்டப் பேரவையின் எம்.எல்.ஏ.க்கள் என்பது இரண்டாவது அதிர்ச்சி.

அரசியல்வாதிகளின் தூண்டுதலால் உட்கார்ந்த இடத்திலிருந்தே அடிக்க ள் அனுப்புவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சட்டமன்றத்தில் தாவித் தாவி அடிப்பதும், மைக்கை உடைப்பதுமாக தங்களது பராக்கிரமத்தைக் காட்டிய சட்டமன்ற உறுப்பினர்களையும் பார்த்திருக்கிறேன்.

ஆனால் இங்கே அதுவும் ஹைதராபாத்தின் பிரஸ் கிளப்பில், பத்திரிகையாளர்களுக்குச் சொந்தமான ஒரு அரங்கினுள் நுழைந்து ஒரு பெண்ணை, அதுவும் உலகறிந்த ஒரு எழுத்தாளரை கொலை செய்தாவது பரவாயில்லை என்ற நோக்கில் எம்.எல்.ஏ.க்களே செயல்பட்டது நமது ஜனநாயகம் எந்த அளவிற்கு தனி மனிதர்களுக்கு சுதந்திரம் அளித்துள்ளது என்பதை பறை சாற்றுகிறது.

தஸ்லிமா எழுதிய ‘ஷோத்’ நூலின் தெலுங்கு பதிப்பான ‘செல்லு கு செல்லு’ என்ற நூலின் வெளியீட்டு விழாவில்தான் இந்த ஜனநாயக அசிங்கங்கள் அரங்கேறியுள்ளது.

விழா முடியும் நேரத்தில் கூட்டரங்கில் அமர்ந்திருந்த மஜ்லிஸ் அதேஹதுல் முஸ்லிமீன் என்ற அமைப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேரும் அவர்களது தரவாளர்களும் திடீரென தஸ்லிமாவைத் தாக்க ஓடி வந்துள்ளனர். அவர்கள் கையில் சிக்கிய சேர்கள், டேபிள்கள், பூங்கொத்துகளை எடுத்து தஸ்லிமா மீது எறிய..

எதிர்பார்க்காத இந்தத் திடீர் ‘மரியாதையால்’ தஸ்லிமா நிலைகுலைந்து போனது தொலைக்காட்சிப் பதிவுகளில் தெளிவாகவே தெரிந்தது. அவரை மறைத்து காப்பாற்ற நினைத்த தெலுங்கு எழுத்தாளர் என்.இன்னையா, தஸ்லிமாவை நோக்கி வந்த பல ‘பரிசு’களை தன் உடம்பில் வாங்கிக் கொண்டது ஆந்திராவிற்கே அவமானம்.

கலவரக்காரர்களான முஸ்லீம் அமைப்பினர் தஸ்லிமாவை வெளியேற்றக் கோரி ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த அறை கண்ணாடிகளையும், பொருட்களையும் அடித்து சேதப்படுத்தினர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்து கூட்டத்தினரை விரட்டியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட மக்கள் பிரதிநிதிகளான மஜ்லிஸ் இதேஹதுல் முஸ்லீமின்(MIF) அமைப்பின் எம்.எல்.ஏ.க்கள் அ•ப்சர்கான், அகமது பாஷா மற்றும் மெளஸம்கான் உள்பட 7 பேரை பஞ்சாராஹில்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அப்படியென்ன தஸ்லிமா மீது முஸ்லீம் அமைப்பினருக்கு கோபம்?

அவர் பெண்களை அடிமைப்படுத்தும் முஸ்லீம் அடிப்படைவாதத்தை கேள்விக்குள்ளாக்கியவர். இவர் பிறந்து வளர்ந்த வங்காளதேசத்தில் முஸ்லீம் பெண்களின் நிலைமை சமூகத்தில் எந்த அளவுக்கு கீழான நிலையில் உள்ளது என்பதை தனது புத்தகத்தில் பதிவு செய்தவர்.

இந்த ஒரே காரணத்திற்காகவே தன் தாய் நாட்டில் இருந்து உயிருக்குப் பயந்து ஓட ஆரம்பித்து, இப்போது இந்தியாவில் கொல்கத்தாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இந்தியாவில் உள்ள முஸ்லீம் பழமைவாதிகளுக்கும் இந்த ஒரு விஷயத்துக்காகவே தஸ்லிமா மீது கோபம். அவருடைய ‘லஜ்ஜா’ புத்தகம் ஒரு முஸ்லீம் பெண் எந்த அளவிற்குத்தான் சமுதாயத்தில் உயர முடியும். அதற்கு அவள் எதிர்கொள்ளும் மத தடைகள் என்னென்ன என்பதைப் பற்றி எழுதியிருந்தார்.

அது நம்முடைய ஜமாத் தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை. முக்காடு அணிந்து வீட்டில் உட்கார வேண்டிய ஒரு பெண் நடுத்தெருவிற்கு வந்து கொடி பிடிக்கிறாளே என்ற அடிப்படைவாதமற்ற மத வெறி. அதுவே இன்றைக்கு தஸ்லிமாவை தாக்குகின்ற அளவுக்கு சென்றிருக்கிறது.

இது பங்களாதேஷில் சரி.. ஒப்புக்குக்கூட சொல்லலாம். ஆனால் இந்தியாவில். ந்திராவில் ஏன் நடக்க வேண்டும்? அதிலும் முஸ்லீம் சார்புள்ள கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களே நேரடியாக வந்து தாக்குதல் கொடுத்துள்ளார்கள் எனில் இவர்கள் முஸ்லீம் அடிப்படைவாதத்தை முன் வைத்துத்தான் இந்திய அரசியல் சட்டத்திற்குட்பட்ட தேர்தலில் நின்று ஜெயித்தார்களா என்பது கேள்விக்குறியான ஒன்று.

“என் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதற்காக அவர்களுக்கு அடிபணிய மாட்டேன். எனது கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிடுவேன்..” என்று இந்தச் சம்பவத்திற்குப் பின்பு தஸ்லிமா கூறியுள்ளார்.

தஸ்லிமா தாக்கப்பட்டதை கண்டித்து அதில் ஈடுபட்ட முஸ்லீம் அமைப்புகளை எதிர்த்து பத்திரிகையாளர்கள்தான் ஹைதராபாத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்திற்குக் காரணமான முஸ்லீம் அடிப்படைவாதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பி.ஜே.பியும் கோரியுள்ளன.

ஆனால் இந்த அடிப்படைவாதிகளை வளர்த்து விடுகின்ற சந்தர்ப்பவாத அரசியலுக்குச் சொந்தக்காரர்களே மற்றைய அரசியல் கட்சிகள்தான். பெரும்பாலான முஸ்லீம் பெண்கள் ஜமாத் என்ன முடிவு சொல்கிறதோ, செய்கிறதோ அதற்கே தேர்தல் நேரத்தில் கட்டுப்படக்கூடியவர்கள் என்பதால் தேர்தல் ஓட்டு என்பதைக் கணக்கில் கொண்டு நிச்சயம் இந்தச் சம்பவமும் நூற்றில் ஒன்றாக போய்விடும் அபாயம் உண்டு.

முஸ்லீம் அடிப்படைவாதம் என்பது, 2-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து முடித்து கார் குண்டு வைக்கும் தொழிலுக்குப் போன ஒரு தீவிரவாதியிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர் வரைக்கும் ஒரே மாதிரிதான் என்பது இதிலிருந்தே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

மதமா, மனிதமா என்ற சொற்போரை முதலில் மதங்களுக்கிடையில்தான் நாம் நடத்த வேண்டும் போலிருக்கிறது.

குற்றவாளிகளை அல்லா காப்பாற்றாமல் இருப்பாராக..

ஒரு பதில் to “அல்லா காப்பாற்றாமல் இருப்பாராக..”

  1. Deepa Says:

    Unmai Thamilan!!

    Good post!!! Like the guts to post about this which others dont dare

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: