‘ஈழம்’ பகுப்புக்கான தொகுப்பு

ஈழம்-வைகோவுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

நவம்பர் 7, 2008

07-11-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

அன்பு அண்ணன், சிங்கத் தமிழன், சிறைக்கஞ்சா தளபதி, இளைஞர்களின் இதயத் துடிப்பு, கலிங்கப்பட்டி சிங்கம், புரட்சிப் புயல் அண்ணன் வைகோ அவர்கள் அடக்குமுறையான, அராஜகமான, அட்டூழியமான ஒரு சதிகார, பழிவாங்கும், கொலைகாரத் திட்டத்தின்படி கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் கொடுஞ்சிறையிலிருந்து நேற்றுதான் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
அன்னாருக்கு எனது வந்தனங்கள்.. வாழ்த்துக்கள்..
அண்ணே வைகோண்ணே..

வணக்கம்ண்ணே…

புலி வாலை முன்னாடி இருந்து புடிச்சாலும் சரி.. பின்னாடி இருந்து புடிச்சாலும் சரி.. ரெண்டுமே ஆபத்துதாண்ணேன்.. வாலை விட்டீங்கன்னா அது உங்க மேல எந்த ஆங்கிள்ல பாயும்னு அந்தப் புலிக்கே தெரியாதுண்ணே.. ஆனா உங்களுக்கு நிச்சயமா தெரியுமேண்ணே.. தெரிஞ்சும் ஏண்ணே எப்பப் பார்த்தாலும் ‘புலி’, ‘புலி’ன்னு அது வாலைப் புடிச்சுக்கிட்டே அலையறீங்க..

“தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுறது சட்டப்படி தப்பில்லை”ன்னு ஒரு சொத்தை வாதத்தை வைச்சுக்கிட்டு நீங்க பண்ற அளப்பறை தாங்க முடியலேண்ணே.. ஈழத் தமிழர்களுக்காக பேசுங்க.. போராடுங்க.. ஆர்ப்பாட்டம் பண்ணுங்க.. யாருங்கண்ணே வேணாம்னு சொன்னது.. அது நம்ம கடமையும்கூடத்தாண்ணே.. ஆனா அந்தப் பாழாய்ப்போன ‘புலி’களுக்காக எதுக்குண்ணே போராடணும்..? ஜெயிலுக்குப் போகணும்..?
உங்களுக்கு போராடுறதுக்கு வேற காரணம் கிடைக்கலைன்னா சொல்லுங்கண்ணேன்.. நான் சொல்றேண்ணேன்.. நீங்களும், நானும் வாழுற நம்ம தமிழ்நாட்டுலேயே நிறைய விஷயம் இருக்குண்ணேன்.. ஒண்ணொண்ணா சொல்றேன்.. குறிச்சுக்குங்கண்ணேன்..
1. தமிழ்நாட்டுல இப்போதைக்கு மிகப் பெரிய மக்கள் விரோத பிரச்சினை மின்வெட்டுதாண்ணேன்.. சொல்லி வைச்சு கொள்ளையடிக்கிற மாதிரி.. முன்கூட்டிய திட்டமிட்டு மின்சாரத்தை பிடுங்கிட்டு பொதுமக்களை வேக வைக்குறாங்கண்ணேன்.. மின்வெட்டு பிரச்சினையை சரி செய்ய வக்கில்லாத அமைச்சர் ஆற்காடு வீராசாமி வீட்டு முன்னாடி, பிரச்சினை தீர்ற வரைக்கும் தொடர் போராட்டம் நடத்துங்கண்ணேன்..
2. சிங்கள ராணுவம் தமிழக மக்களை நிக்க வைச்சு சுட்டுக் கொல்லுதுன்னு சொல்லி போராடுறீங்களே.. இங்கன.. தமிழ்நாட்டுல நடு ராத்திரில நம்ம சக தமிழர்களை ஓட விட்டுக் கொல்றாங்கண்ணே தமிழ்நாட்டு போலீஸ¤.. இதுவரைக்கும் என்கவுண்ட்டர்ன்ற பேர்ல சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 50-க்கும் மேலண்ணேன்.. இவுகளுக்காகவும் கொஞ்சம் குரல் கொடுங்களேண்ணேன்..
3. என்கவுண்ட்டர்ன்னு சொன்னவுடனேயே தமிழர்களால் மறக்க முடியாதது வீரப்பன் வேட்டை. நம்ம தமிழக போலீஸ¤ம், கர்நாடக போலீஸ¤ம் சேர்ந்து மலைவாழ் தமிழக மக்களை சித்ரவதை செஞ்சு கொன்னதை மறக்க முடியுமாண்ணே..
நீங்க ஒரு வருஷம் பொடால ஜெயிலுக்குள்ளாற இருந்ததையும் 27 தடவை பல்வேறு ஜெயில்களுக்குள் போயிட்டு வந்ததையும் ஒவ்வொரு மீட்டிங்லேயும் சொல்றீங்களே.. எந்தத் தப்பும் பண்ணாத அப்பாவி சத்தியமங்கலம் பகுதி மலையகத் தமிழர்கள் 14 வருஷம் கர்நாடக ஜெயில்ல இருந்து வெளில வந்திருக்காங்கண்ணேன்.. ரெண்டு மாநில அரசுகளுமே அவுக அப்பாவிகதாண்ணு ஒத்துக்கிட்டாலும் அவுகளுக்குப் போய்ச் சேர வேண்டிய, சுப்ரீம் கோர்ட் கொடுக்கச் சொன்ன நிதியுதவி இன்னும் போய்ச் சேரலைண்ணேன்..
அதோட அந்த அப்பாவி மக்களை கேம்ப் என்ற பெயரில் ஹிட்லரின் நாஜி வதை முகாமையே தோக்கடிக்கிற மாதிரி சித்ரவதை கூடம் வைத்து சித்ரவதை செய்து அதுக்கும் மேல அவுங்க மேல பொய் வழக்குப் போட்டு 14 வருஷம் ஜெயிலுக்குள்ள தள்ளின போலீஸ் அதிகாரிகள் மேல எந்த நடவடிக்கையும் இதுவரைக்கும் எடுக்கலைண்ணேன்.. அந்த போலீஸ்காரங்க மேல நடவடிக்கை எடுக்கச் சொல்லி போராட்டம் நடத்தலாம்ணேன்..
4. ஏதோ சினிமா தியேட்டர்ல சூப்பர் ஸ்டார் படத்துக்கு டிக்கெட் எடுக்க விடியற்காலை 5 மணிக்கு கியூவுல நிக்குற மாதிரி மொதல்ல வந்தவங்களுக்குத்தான் உரிமம் என்று சொல்லி விலை மதிக்க முடியாத 3G அலைவரிசையை சொற்பத் தொகைக்கு தூக்கிக் கொடுத்திட்டு “எல்லாம் கரீக்ட்டுத்தான்” என்று வாய் கிழிய பொய் சொல்றாரே மத்திய அமைச்சர் ராசா.. அவரை எதிர்த்தும், இதுக்கு ஒத்து ஊதுற மத்திய அரசை எதிர்த்தும் போராட்டம் நடத்திக்கிட்டே இருக்கலாம்ணேன்.. அவ்ளோ மேட்டர் இருக்குண்ணேன் இதுல.. இதை ஏண்ணே லேசா நினைக்குறே..?
5. பத்திரப் பதிவுத் துறையில் ஏதோ ஒரு புரட்சி செய்யப் போவதாகச் சொல்லி கம்ப்யூட்டரில் பத்திரத்தை பதிவு செய்ய ஏற்பாடு செய்துவிட்டு கயவர்களுக்கு வசதியாக பத்திரத்தில் புகைப்படம் ஒட்டும் முறையை மட்டும் ரத்து செய்துவிட்டு அனைத்துக் கட்சியையும் சேர்ந்த கொள்ளைக்காரர்களுக்கும் வசதி செய்து கொடுத்திருக்கிறதே மாநில அரசு.. இதை எதிர்த்தும் போராட்டம் நடத்தலாம்ணேன்..
6. பெங்களூரில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் உங்களது அன்புச் சகோதரி ஜெயலலிதா வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டு தமிழக அரசு, மத்திய அரசுகளின் வரிப்பணத்தை அநியாயத்துக்கு வீணாக்கிக் கொண்டிருக்கிறார்ண்ணேன்.. கொஞ்சம் நீங்களாச்சும் அதை எடுத்துச் சொல்லக் கூடாதா..? அவர் கேக்க மாட்டேங்கிறார்ன்னா அதை அப்படியே விட்டுர்றதாண்ணேன்.. விடப்படாதுண்ணேன்.. “ஒழுங்கு, மரியாதையா ஒவ்வொரு வாய்தாவுக்கும் ஆஜராகி கேஸை நடத்தும்மா…”ன்னு சொல்லி அவுக வீட்டு முன்னாடி போராட்டம் நடத்தலாம்ண்ணேன்.
7. மதுரை ‘தினகரன்’ பத்திரிகை தாக்கப்பட்ட வழக்கில் செங்கோல் பிடித்த கையில் செங்கல்லை தூக்கிக் கொண்டு “அட்ரா அவனை” என்று சொன்னபடியே போஸ் கொடுத்த “மதுரை மாநகரின் தாய்” தேன்மொழியின் புகைப்படத்தை எல்லா பத்திரிகைகளும் வெளியிட்டும் இதுவரையில் அவர் பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்க்காததை கண்டித்து தாராளமா நீங்க மதுரைல இறங்கி போராட்டம் நடத்தலாம்ணேன்.. சகோதரர்கள் கலாநிதியும், தயாநிதியும் உங்களை தங்களோட மூத்த அண்ணனா தத்து எடுத்துக்குவாங்கண்ணேன்..
8. கேபிள் டி.வி. கார்ப்பரேஷன்னு ஒண்ண கொண்டாந்து “பாரு.. பாரு.. கேபிள் தொழில்ல புரட்சி வருது பாரு..” “ஒழிச்சிட்டோம் பாரு குண்டர்கள் கூட்டத்தை”ன்னு கோஷம் போட்டுட்டு இப்ப பத்தோட பதினொண்ணாவது கவர்ன்மெண்ட் டிபார்ட்மெண்ட்டா அதை நடத்திக்கிட்டிருக்காங்களே.. இந்த வெளிவேஷத்தை எதிர்த்துக் குரல் கொடுண்ணேன்..
9. சேலத்துல ‘நானே ராஜா.. நானே மந்திரி’ன்னு சொல்ற மாதிரி வீரபாண்டி ஆறுமுகத்தின் உடன்பிறப்புகள் பொழுது விடிந்து பொழுது போனால் ஊரையே வளைச்சு வேலி போட்டு அப்பாவிகளை தினமும் அழுக வைக்குறாங்களே.. அந்த கொள்ளைக்கூட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தலாம்ணேன்..
10. அண்ணா பிறந்த நாளில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்கிறேன் என்கிற பெயரில் சிலரை மட்டுமே விடுதலை செய்துவிட்டு 22 வருஷம், 20 வருஷம்,, 18 வருஷம்ன்னு இன்னும் உள்ள இருக்குறவங்களை ஏதோ ஒரு பிரிவு பெயரைச் சொல்லி இன்னமும் விடுதலை பண்ண மாட்டேங்குறாங்களே.. அதை எதிர்த்து குரல் கொடுண்ணே..
11. தண்டனை பெற்றவர்களாச்சும் பரவாயில்லைண்ணேன்.. ஆனா கேஸே இன்னும் முடியாமல் இருக்கும்போதும் 15 வருஷமா ஜாமீன் மறுக்கப்பட்டு இன்னமும் விசாரணைக் கைதியாகவே ஜெயிலுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவிகளை எப்பண்ணே மீட்கப் போறீங்க.. அவுங்க கேஸ் முடிஞ்சு தண்டனை 5 வருஷம்தான்னு தீர்ப்பு வந்தா மீதியிருக்குற 10 வருஷத்தை யார்ண்ணே ஈடு கட்டுறது..? இதுக்கெல்லாம் ஒரு முடிவு வேண்டாமாண்ணே..?
12. லஞ்சத்தையும், ஊழலையும்விட அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் சொத்து சேர்க்கும் விதத்தை கண்டே பிடிக்க முடியலண்ணே.. அம்மா ஆட்சி வந்தா, ஐயா ஆட்சி மந்திரிகள் மேல கேஸ¤.. ஐயா ஆட்சி வந்தா, அம்மா ஆட்சி அமைச்சர்கள் மேல வழக்கு.. இப்படியே ரெண்டு பேரும் மாறி மாறி கேஸ் போடுறது.. கேஸை வாபஸ் வாங்குறதுன்னு நமக்கு பிலிம் காட்டுறாங்கண்ணேன்.. மொதல்ல அரசியல்வாதிகள் மேல் போடப்படும் சொத்துக் குவிப்பு வழக்குகளை வாபஸ் வாங்க முடியாதது போல் ஒரு சட்டத்தை கொண்டு வரச் சொல்லி ஒரு போராட்டம் நடத்தலாம்ணே..
13. சொத்துன்னு சொன்னவுடனேயே திடீர்ன்னு ஒண்ணு ஞாபகத்துக்கு வருதுண்ணேன்.. காதை கிட்டக்க கொண்டாங்கண்ணே.. போன மாசம் ‘வாரணம் ஆயிரம்’னு ஒரு சினிமாவை கிட்டத்தட்ட 28 கோடி ரூபாய்க்கு மு.க.அழகிரியோட பையன் தயாநிதி வாங்கியிருக்காராம்ணேன்.. அந்தப் பையன் போன வருஷம்தாண்ணே காலேஜ்ல முடிச்சு வெளில வந்திருக்காரு.. அதுக்குள்ள எப்படிண்ணே 28 கோடி சம்பாதிச்சிருக்க முடியும்..?

ஒருவேளை குடும்பச் சொத்தா இருக்கலாம்னு நீங்க நினைக்குறீகளோ..? அப்ப அவர் குடும்பத்துல யாராச்சும் ஒருத்தர் இவருக்கு அன்பளிப்பா இவ்ளோ பணத்தைக் கொடுத்திருப்பாங்கண்ணே.. அந்த அன்பளிப்புக்கும் தனியா வருமான வரி உண்டுண்ணேன்.. வருமான வரித்துறையின் அனுமதியும் இருக்கணும்ணேன்.. அப்ப குடும்ப வருமானத்துல ஒரு பகுதி 28 கோடின்னா அந்தக் குடும்பம் எவ்ளோ பெரிய கோடீஸ்வர குடும்பமா தலைமுறை, தலைமுறையா இருந்திருக்கணும்..? கேக்கணும்லண்ணே..

நான் மதுரைல இருந்தப்ப பஸ்ஸ்டாண்ட் பக்கத்துல இருந்த ‘ராயல் வீடியோ கடை’க்கு VHS கேஸட்டு வாங்க அடிக்கடி போவண்ணே.. அப்பல்லாம் கடைக்குள்ளாற இருக்குற ஒரு சின்ன ரூம்ல உக்காந்து ‘முரசொலி’ படிச்சிட்டிருப்பாருண்ணேன் அவுக அப்பா. வர்றதும், போறதும் எல்லாமே ஆட்டோதாண்ணேன்.. அவர் கார்ல ஏறி நான் பார்த்ததில்லண்ணேன்.. அந்த சின்னக் கடைல அந்த பிஸினஸை பண்ணித்தான் 28 கோடின்னா.. அண்ணே.. அண்ணே.. எனக்காக கொஞ்சம் நீங்க அவர்கிட்ட பேசி அந்த ரகசியத்தை கேட்டு என்னை மாதிரி லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வாங்கிக் கொடுத்தீங்கண்ணா, எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் சரிண்ணேன்.. மதுரை மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்துக்கு நடுவுல நான் உங்களுக்கு சிலை வைக்கிறேண்ணேன்.. இது பேரறிஞர் அண்ணா மேல சத்தியம்ணேன்..
14. இவர் மட்டுமாண்ணேன்.. ‘தினகரன்’னு ஒரு உடன்பிறவா சகோதரியின் உடன் பிறந்த சகோதரியின் மகன்.. வெறும் பி.எஸ்.ஸி.தாண்ணே.. சிங்கிள் பெட்ரூம் வீட்ல குடியிருந்தவருண்ணே.. பரம்பரை சொத்தா இருந்தது மன்னார்குடில ஒரேயொரு ஓட்டு வீடுதாண்ணே.. திடீர்ன்னு பார்த்தா அன்னியச் செலாவணி மோசடி வழக்குன்னு அவர் மேல ஒண்ணை போட்டு 40 கோடி ரூபா அபராதம் போட்டிருக்காங்களாம்ணே.. நாடு தாங்குமாண்ணே.. எப்படிண்ணே இதெல்லாம்..
இதாவது பரவாயில்லை.. இப்படியே ஈ.சி.ஆர். ரோட்டுல பறந்து பாருண்ணே.. அவரோட சொந்தங்கள்.. அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி, மாமன், மச்சான், சித்தி, சித்தப்பா, பங்காளிகன்னு அல்லாரும் கடலைப் பார்த்தபடியே சொகுசா வீடு, வீடா கட்டி ஊஞ்சல்ல உக்காந்து ஆடிக்கிட்டிருக்காங்கண்ணே.. எப்படிண்ணே..
மன்னார்குடில காலேஜ்.. தஞ்சாவூர்ல காலேஜ்ன்னு அவுக குடும்பத்துல ரெண்டு, மூணு பேர் கல்வித் தந்தையாகவும் ஆகிட்டாங்கண்ணே.. நம்மாளல முடியற காரியமாண்ணே இது.. ஆனா, ஒண்ணு முடியும்ணே.. அது போராட்டம்தாண்ணே.. விட்டுறாதண்ணே..
15. அங்க பிடுங்கி.. இங்க பிடுங்கின்னு கடைசியா அப்பாவி தொழிலாளர்கள் மேலேயும் கை வைச்சுட்டாங்கண்ணே சென்ட்ரல் கவர்ன்மெண்ட்டு மந்திரிகள்.. தொழிலாளர் பெருமக்கள் வியர்வை சிந்தி உழைச்சு சேமிச்சு வைச்சிருக்குற பிராவிடண்ட் பண்ட் பணம் இதுவரைக்கும் அரசு வங்கிகளில் மட்டும்தாண்ணேன் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. ஆனா இப்போ திடுதிப்புன்னு சில தனியார் வங்கிகளிலும் முதலீடு பண்ணிட்டாங்கண்ணே.. அதுக்காக அரசு வங்கில இருந்த பி.எ·ப். பணத்தை சுரண்டி எடுத்திட்டுப் போயிட்டாங்களாம்ணேன்.. கூடவே மியூச்சுவல் பண்ட், ஷேர் மார்க்கெட்டுன்னு அந்த தனியார் வங்கிகள் மூலமாவே அந்த பி.எ·ப். பணத்தை வாரி இறைச்சிருக்காங்களாம்.. இப்ப ஷேர் மார்க்கெட்ல நஷ்டம் விழுந்தா அதுக்காக கார்ப்பரேஷன்ல தெருக்கூட்டுற தொழிலாளி என்னண்ணே செய்வான்..? கட்டியிருக்குற ஒரு துண்டையும் எடுத்துக் கழுத்துல இறுக்கிக்கிட்டு சாவுறதைத் தவிர வேற வழியில்லண்ணேன்.. இதுக்காக போராட்டம் நடத்தாம இருக்கலாமாண்ணே.. உங்க நெஞ்சு கொதிக்கல..
16. சென்ட்ரல் கவர்ன்மெண்ட் மட்டும்தான் சுரண்டுமா? அப்ப நாங்க எதுக்கு இருக்கோம்ன்ற மாதிரி ஸ்டேட் கவர்ன்மெண்ட்டும் ஏதோ அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடுன்னு ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து அதையும் தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைச்சிருக்குண்ணேன்.. லம்பத் தொகையை அள்ளுதுண்ணே அந்த கம்பெனி.. அரசு ஊழியர்களுக்கு முருகன் அருளால் உடம்பு கெடாம போனா அந்தக் கம்பெனிக்குத்தாண்ணே லாபம்.. அதுக்காக முருகனை கண்டுக்காதடான்னா சொல்ல முடியும்..? இதுல எவ்ளோ கமிஷன் யாருக்குப் போச்சுன்னு தெரியலைண்ணே.. இதுக்கு போராடாம இருக்க முடியுமாண்ணே.. நீங்களே சொல்லுங்க..
17. தமிழ்நாடு முழுக்க மணலை அள்ளோ, அள்ளுன்னு அள்ளிக்கிட்டிருக்காங்கண்ணே நம்ம கரை வேட்டிகள்.. அந்தக் கலர், இந்தக் கட்சின்னு இல்லைண்ணே.. எல்லா கட்சிக்காரர்களும்(உங்க கட்சிக்காரர்களும் சேர்ந்துதாண்ணேன்) ஒண்ணா சேர்ந்து இயற்கை வளத்தை கொள்ளையடிச்சிட்டிருக்காங்கண்ணே.. தலைமைக்கு கமிஷன் பக்காவா போய்ச் சேர்றதுக்காக எல்லாக் கட்சிக்காரர்களுக்கும் இணக்கமான ஒருத்தரைத்தான் பொறுப்பானவரா போட்டிருக்காங்களாம்ணேன்.. அட உங்களுக்கும் நல்லாத் தெரிஞ்சவர்தாண்ணே.. ஒரு காலத்துல உங்களுக்கே படியளந்தவர்தாண்ணே.. இதுக்கெல்லாம் கூச்சப்பட்டா முடியுமாண்ணே.. எடுண்ணே வண்டிய.. ஆரம்பிண்ணே போராட்டத்தை..
18. கோயம்பேட்டுல இன்னிக்கு விலைவாசி என்னன்னு தெரியுமாண்ணேன்.. ஒரு கிலோ தக்காளி 88 ரூபாயாம்ணேன்.. ரெண்டு தக்காளி 10 ரூபாயாம்ணேன்.. இந்த ரேஞ்சுல போனா இனிமே தக்காளியை கண்ல பார்த்துக்கிட்டே சப்புக் கொட்டிக்கிட்டு போகணும் போலிருக்குண்ணேன்.. விலைவாசி உயர்வைத் தடுக்க என்ன செய்யப் போறீங்கன்னு போராட்டம் நடத்தி கேளுங்கண்ணேன்..
19. விலைவாசின்னு சொன்னவுடனேயே எனக்கு பெட்ரோல் நினைப்பு வந்திருச்சுண்ணேன்.. கச்சா எண்ணெய்யின் விலை உலக மார்க்கெட்டில் ஏறியபோது நமக்கும் ஏத்துணாங்கண்ணேன்.. ஓகே.. ஒத்துக்குறோம்ணே.. ஆனா இப்ப விலை இறங்கும்போது நமக்கும் ரேட்டை குறைக்கணும்லண்ணே.. அதுதானே நியாயம்.. குறைக்கலையேண்ணே.. அதுனாலதான விலைவாசியெல்லாம் ஏறுதுன்றான் எல்லாக் கடைக்காரனும்.. மொதல்ல அடிப்படை விலைக்கு மேல லிட்டருக்கு ஒரு ரூபா வைச்சு அந்த அளவுக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கச் சொல்லி போராடுண்ணே..
20. ஆன்லைன் வர்த்தகம்னு சொல்லி விவசாய விளைபொருட்களின் விலையையும் கள்ளத்தனமா ஏத்துறதுக்கு மத்திய, மாநில அரசுகளே துணை நிக்குதுண்ணேன்.. ஒத்த பைசா முதல் போடாம எவனோ ஒரு கயவாளி நம்ம விவசாயிகளோட கோவணத்தையும் உருவிக்கிட்டுப் போயிட்டிருக்காண்ணேன்.. இதையெல்லாம் யாருண்ணே கேக்குறது.. நீங்கதான் கேக்கணும்.. மொதல்ல இந்த விவசாயத்துல ஆன்லைன் வர்த்தகத்தை அடியோட ஒழிக்கணும்னேன்.. என்னண்ணே சொல்றே..?

இம்புட்டு விஷயம் இருக்கறப்ப இதைப் பத்தியெல்லாம் கவலைப்படாம டெய்லி எப்பப் பார்த்தாலும் ‘புலி’, ‘புலி’ன்னு சொல்லிட்டுத் திரிஞ்சீங்கண்ணா.. எப்படிங்கண்ணா.. தப்பில்லையாண்ணா..?

ஈழத்து மக்கள் மேல அனுதாபமும், ஆர்வமும் தமிழ்நாட்டு மக்களுக்கு எப்பவுமே உண்டுண்ணா.. 1983-ல வெளிக்கடை சிறையில் நடந்த பயங்கரத்தையும், அதைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் நடந்த தமிழர்கள் மீதான தாக்குதலின்போதும் தமிழக மக்கள் காட்டிய எதிர்ப்பையும், பாசத்தையும், அன்பையும் ஒரு தடவை நினைச்சுப் பாருண்ணா.. நானெல்லாம் ஸ்கூல்ல உண்ணாவிரதம் இருந்தேண்ணா.. திண்டுக்கல் மணிக்கூண்டுல இருந்து கொடி புடிச்சு ஊர்வலமெல்லாம் போனோம்ண்ணா.. இப்பவும் அதே உணர்வு எங்களுக்கு இருக்குண்ணா..
ஆனா இந்தப் புலிகள் விஷயத்துல மட்டும் நாங்க எச்சரிக்கையா இருக்கணும்னு சொல்றோம்ண்ணா.. ஏன்னா படுகொலைகள் விஷயத்துல புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் வித்தியாசமே இல்லீங்கண்ணா..

மதுரைல நடந்த டெசோ மாநாட்டுல உங்க முன்னாள் அண்ணன் கலைஞர், அவுங்க ஆளுக கைய பிடிச்சு கெஞ்சி “சபாரத்தினத்தை விட்டிருங்க”ன்னு சொல்லியும் கேட்காம வெறிநாய் மாதிரி கொலை செய்யத் துவங்கி உமாமகேஸ்வரன், பத்மநாபா என்று பல்வேறு ஈழத்துத் தளபதிகளையும் படுகொலை செய்த நல்லதொரு ஜனநாயகத் தோழர்கள்தாண்ணே அந்தப் புலிகள்..
அவுக மண்ணுல மட்டுமில்லாம நம்ம நாட்டுக்குள்ளேயும் வந்து தங்களது வீரத்தைக் காட்டியதுனாலதான அவுகளுக்கு நம்ம நாட்டு மக்கள்கிட்ட மவுசு சுத்தமா போச்சு.. அதைப் புரிஞ்சுக்குங்கண்ணேன்..

ராஜீவ்காந்தி மட்டுமே சாகலைண்ணே.. அவர்கூட மொத்தம் 14 பேர் செத்திருக்காங்கண்ணே.. அத்தனை பேரும் தமிழ்நாட்டுக்காரங்கதாண்ணே.. தமிழச்சிகள்தாண்ணே.. அன்னைக்கு நடந்த அகோரத்துல பாதிக்கப்பட்டு அனுசூயான்னு ஒரு பெண் இன்ஸ்பெக்டர் இன்றுவரையிலும் படுத்த படுக்கையாவே இருக்காருண்ணேன்.. இவர்களது குடும்பத்தினருக்கு யாருண்ணே பதில் சொல்றது..?
வடசென்னையில் உன்னோட கட்சிக்காரர் ஏழுமலைன்னு ஒருத்தரை இன்னொரு கட்சிக்காரங்க கொலை செஞ்சப்ப என்னவெல்லாம் செஞ்ச..? எப்படியெல்லாம் கதறுனன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருண்ணே.. அந்த ஏழுமலை வேற..? இந்த அப்பாவிகளெல்லாம் வேறயாண்ணேன்..
பத்மநாபாவுடன் சேர்ந்து இறந்தவர்களும் 12 பேர்ண்ணேன்.. அவுக ஈழத்துக்காரங்களா இருக்கட்டும். ஆனா செத்தது நம்ம நாட்டுலயாச்சே.. சும்மா விட முடியுமா? இன்னொரு நாட்டுக்குள்ள வந்து குருவியைச் சுடுற மாதிரி நீ சுட்டுட்டுப் போவ.. நாங்க ஒண்ணுமே செய்யக்கூடாதுன்னா எப்படிண்ணேன்..
சும்மா தாம்பரம் பக்கத்துல கன்னம் வைத்து நடுராத்திரில கொள்ளையடிச்சுட்டு போனால்கூட கலைஞர் ஆட்சில சட்டம், ஒழுங்கு கிலோ என்ன விலை என்ற ரீதியில்தான் இருக்கிறது என்று அறிக்கை விடுறியேண்ணே.. இந்தப் படுகொலையை மறந்துட்டு அப்படியே குறட்டை விட்டுட்டு குப்புறப் படுத்துத் தூங்கச் சொல்றியே.. தப்பில்லையாண்ணேன்..?
சரி போகட்டும்.. நீ மட்டும் ஆதரிக்கல.. எல்லாரும்தான் ஆதரிச்சாங்க.. நானும் ஒத்துக்குறேன்.. எம்.ஜி.ஆர். 5 கோடி ரூபாய் கொடுத்தார்.. இந்திராகாந்தி ஆயுதங்கள் கொடுத்தாங்க.. தமிழ்நாடு முழுக்க பயிற்சி முகாம் வைச்சு இந்திய ராணுவம் பயிற்சி கொடுத்தாங்க.. “போய் அடிங்கடா.. சாகுங்கடா”ன்னு சொல்லி நம்மாளுகளே அனுப்பி வைச்சாங்க.. எல்லாரும் சேர்ந்து செஞ்ச தப்புதான்..
மொதல்ல ஆயுதத்தை தூக்குறதே தப்புன்னு ஏண்ணே உனக்குத் தோணவே மாட்டேங்குது..? விட்டா “மாசேதுங் சொன்னாரு.. காஸ்ட்ரோ பேசினாரு.. சேகுவேரா அளந்தாரு.. செங்கிஸ்கான்னு செஞ்சாரு”ன்னு உலக அளவுக்கு பேசுறியேண்ணேன்.. அஹிம்சையைத் தவிர உலகில் பெரிய ஆயுதம் வேறு எதுவுமில்லைன்றது உனக்குத் தெரியாதாண்ணேன்..
இப்பவும், இவ்ளோ தூரம் நடந்தும் இலங்கையில் ஈழத்தமிழர்களின் துயரம் நீங்கவில்லை என்பதற்கான முதல் காரணமே விடுதலைப்புலிகள்தான் என்பதை ஏண்ணே உணர மாட்டேங்குற..? ஆயுதப் போராட்டம் என்றாலே உலக நாடுகள் முழுவதுமே இப்போது ஒரே மாதிரியான பார்வையில்தான் பார்க்கிறார்கள். அது தீவிரவாதம்.. அவ்வளவுதாண்ணேன்…
ஈழத் தமிழர் போராட்டம் முழுக்க, முழுக்க அமைதியான வழியில் சத்தியாக்கிர முறையில் அஹிம்சையாக நடைபெற்று வந்திருந்தால் இந்நேரம் ஏதேனும் ஒரு நல்ல முடிவுக்கு வந்திருக்கும்ணேன்..
ஈழத்து இளைஞர்களின் ஆவேசத்தைத் தூண்டிவிட்டு சுலபத்தில் கிடைக்கக் கூடிய ஆயுதங்களை வழங்கி அவர்களை வன்முறை பாதைக்குத் திருப்பி இன்றைக்கு இந்த அளவுக்கு நிலைமை சிக்கலானதற்கு நமது தமிழக, இந்திய அரசியல்வாதிகளும் ஒரு காரணம்தாண்ணே..
வன்முறை என்பது இரண்டு பக்கமும் தவறுதான்.. கத்தி இரு பக்கமும் கூரானதுதான்.. இந்த வன்முறைப் போட்டியில் வெற்றி, தோல்வி என்பது இரண்டு பக்கமும் கிடைத்தே தீரும். இது தர்க்க நீதி. இதை வன்முறை வாழ்க்கையில் மாற்றவே முடியாது. ஆனால் அஹிம்சையில் அப்படியல்ல.. ஒட்டு மொத்த மக்களும் அமைதியான முறையில் போராடியிருந்தால் இந்நேரம் உலக சமுதாயமே ஈழத்துக்கு மக்களுக்காக திரண்டிருக்கும். ஆனால் இன்றைக்கு ஈழத்துப் பிரச்சினையை இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை என்கிற அளவுக்குத்தான் உலக நாடுகள் பார்க்கின்றன. காரணம் உள்ளூர் தீவிரவாத அமைப்புகளின் வன்செயல்கள்.
ஒரு நாட்டிற்கு விதிவிலக்கு அளித்தால் எல்லா நாடுகளும் கேட்குமே என்பதால்தான் அனைத்து நாடுகளும் வன்முறைக்கு ஆதரவளிக்க மறுக்கின்றன. அந்த அளவுக்கு நமக்கு சக்தியும் இல்லாதபோது எதற்காக வன்முறையை நாட வேண்டும்?
ஏதோ சிங்கள மக்கள் அனைவருமே வெறியர்கள் என்பதைப் போலவும், அனைத்து சிங்களவர்களும் தமிழர்களை கொலை செய்யத் துணிபவர்கள் என்ற ரீதியிலும் நமது தமிழகத்து சிறுத்தைகளும், சிங்கங்களும் பேசுவது வேடிக்கையாகவே உள்ளது.
எந்த நாட்டிலும் மக்கள் அன்பானவர்கள்தான்.. ஆனால் அரசியல்வாதிகள்தான் கில்லாடிகள் நமது நாட்டைப் போலவே. அடுத்த முறையும் ஆட்சிக் கட்டிலில் உட்கார வேண்டும் என்பதற்காகவே மிகத் திட்டமிட்டு சிங்கள, தமிழக மக்களிடையே பிரிவினையைத் தூண்டிவிட்டு இன்றைக்கு ஒரே நாடாக இருக்க முடியாத சூழலை உருவாக்கியது சிங்கள, பெளத்த அரசியல்வாதிகள் மட்டும்தான்.

தெரியாத்தனமாக நடுரோட்டில் ஒரு கல் தெரித்து வந்து விழுந்தால்கூட என்னைக் கொல்ல முயற்சி என்று நமது ஊரில் நீங்கள் உட்பட அனைவரும் கண்ணீர்விட்டு அழுது, எங்களுடைய சிறிய பாவப்பட்ட உணர்ச்சிகளைத் தூண்டி நீங்கள் அதில் குளிர் காய்கிறீர்களே.. அது போலத்தான் அங்கிருக்கும் சிங்கள இன மக்களின் மனதையும் சுரண்டியெடுத்து சுக வாழ்க்கை வாழ்கிறார்கள் சிங்கள அரசியல்வாதிகள்.
மனிதம் வேண்டும்.. மனிதம் வேண்டும் என்கிறீர்களே.. புலிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி ஆயிரக்கணக்கான சிங்கள சிப்பாய்களும் கை, கால்கள் இழந்த நிலையில் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்களே.. அது பாவமில்லையா..? இந்த ஒரு காரணத்திற்காகவே சிங்கள ராணுவத்தில் இருந்து வீரர்கள் தப்பித்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அதனை கேலி செய்கிறீர்கள். ஆனால் அவர்களுடைய குடும்பத்தினரை கொஞ்சம் நீங்கள் நினைத்துப் பாருங்கள்.. வீட்டில் ஒருவன் பாதிக்கப்பட்டால் நம்மைப் போலவே அடுத்தவனும் துப்பாக்கியைத் தூக்கத்தான் செய்வான். அப்படித்தான் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது.
நாம் அமைதி வழியில் துப்பாக்கியை ஏந்தாமல் போராடத் துவங்கினால், அப்பாவி மக்களை கொன்றொழிக்கும் அரசு என்ற பெயருடன் பல்வேறு நிர்ப்பந்தங்கள் இலங்கை அரசுக்கு நிச்சயம் வரும். இப்போதைய காலக்கட்டத்தில் அது போன்று ஒரு அரசே அப்பாவிகளை படுகொலைகளை செய்வதை உலக சமுதாயம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
இப்போது நடப்பதை இலங்கை அரசு மிக சாமர்த்தியமாக புலிகளின் பேரில் திசை திருப்பிக் கொண்டிருக்கிறது. அதற்குத் தோதாக புலிகளும் நடந்து கொள்கிறார்கள். ஆக, புலிகள், இலங்கை ராணுவம் இவை இரண்டும் என்றைக்கு ஓய்ந்து போய் துப்பாக்கியை கீழே போடுகின்றனவோ அன்றைக்குத்தான் ஈழத்து தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.
தென்ஆப்ரிக்காவில் நெல்சன் மாண்டேலா துப்பாக்கியவா தூக்கச் சொன்னார்..? எத்தனை, எத்தனை போராட்டங்கள்.. எத்தனை, எத்தனை துன்பங்கள் அந்நாட்டு கருப்பின மக்களுக்கு.. ஆயிரக்கணக்கான மக்களின் தியாகத்திற்குப் பின்பு, 27 ஆண்டுகளாக சிறைபட்ட மாண்டேலாவின் தியாகத்திற்கும் மதிப்பளித்து உலக சமுதாயம் ஒன்று திரண்ட பின்பு தானாகவே விடுதலை கிடைத்ததே.
யூகோஸ்லாவியாவில் கொசாவா பிரச்சினை எழுந்தபோது ஊருக்கு ஊர் முகாம் வைத்து சித்ரவதைக் கூடங்களை உருவாக்கினார் மிலோசெவிக். ஆனாலும் அம்மக்கள் வன்முறையில் அதிகம் நம்பிக்கை கொள்ளாமல் பேச்சு வார்த்தையிலும், அமைதிப் போராட்டத்திலுமாக உலக சமுதாயத்தை ஈர்த்து தங்களது பிரச்சினையில் தலையிட வைத்தனர். அதனால்தானே ஐ.நா.வும், உலக நாடுகளும் அங்கே தலையிட்டன..? பிரச்சினை முடிவுக்கு வந்ததே.. மிலோசெவிக் கதி கடைசியில் என்ன ஆனது..? எப்படி வெற்றி கிடைத்தது..?
இதோ இப்போது ஹைதி நாட்டில் அதுதான் நடந்து வருகிறது.. ஆயுதப் போராட்டம்.. ஐ.நா. அமைதி காப்பு படையே வந்தும் இரு தரப்பு கலவரக்காரர்களை அடக்க முடியவில்லை. இப்போது முடிவாக “என்னவோ செஞ்சு தொலையுங்கள்” என்று சொல்லி அமைதி காப்புப் படை வெளியேறிவிட்டது. ஹைதி நாடு அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு ஐ.நா.வை குறை சொல்ல முடியுமா?
எங்கே இரண்டு பேர் மோதிக் கொண்டாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அனைவரும் ஓடி வரத்தான் செய்வார்கள். வருபவர்களிடம் நாம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதைச் சொல்ல ஆதாரம் நிச்சயம் வேண்டும். ஈழத்தில் மக்கள் மட்டும்தான் சொல்ல முடியுமே தவிர, விடுதலைப்புலிகள் சொல்லவே முடியாது.
எத்தனை, எத்தனையோ சக தமிழர்களையோ படுகொலை செய்திருக்கிறார்கள். அந்த தமிழர்களெல்லாம் என்ன பாவம் செய்தார்கள். பேச்சுவார்த்தைக்கு என்று வீட்டுக்குள் போய் உட்கார்ந்திருந்த நிலையிலேயே ஏன் தனக்கு சாவு என்பதற்கான காரணம்கூட தெரியாமல் மரணித்தார் அமிர்தலிங்கம். அவரும் ஒரு தமிழர் தலைவர்தானே.. அவரை ஏன் கொலை செய்தார்கள்? சொல்ல முடியுமாண்ணே..
தமிழர்களின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவரை சுட்டுக் கொன்றுவிட்டு “நாங்கள்தான் கொலை செய்தோம்.. இப்ப என்ன அதற்கு?” என்று எகத்தாளமாக கேட்டவர்களை எந்தவிதத்திலும் போராளிகளாக எடுத்துக் கொள்ள முடியாது.
முதலில் விடுதலைப்புலிகள் தங்களைத் தவிர வேறு யாரும் ஈழ விடுதலைப் போராட்டம் பற்றி பேசவே கூடாது என்கிற அடக்குமுறையைக் கைவிட வேண்டும். இது முட்டாள்தனம், அராஜகம்.

இப்போதும் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறும் பொதுமக்களுக்காக உள்ளூரில் யாரையாவது ஜாமீன் கொடுத்தால்தான் வெளியில் விடுவதாக தமிழ் மக்களே வெளியில் வந்து சொல்கிறார்கள். அந்த அளவிற்கு அடக்குமுறையில்தான் தங்களது கட்டுப்பாட்டிற்குள் மக்களைத் திணித்து வைத்திருக்கிறார்கள் புலிகள்.

மக்களுக்குப் பின்புறமாக ஒளிந்து கொண்டு, பொதுமக்களைக் கேடயமாகப் பாவித்து அவர்கள் நடத்தி வருவதற்கு பெயர் விடுதலைப் போராட்டம் அல்ல. இதே முறையில்தான் இந்திய ராணுவத்திற்கு எதிராகவும் படுகொலைகளை நிகழ்த்தினார்கள் புலிகள். நமது ராணுவத்தை எதிர்த்துப் போரிட்ட காரணத்தினால்தான் இந்தியாவில் புலிகள் தங்களுக்கிருந்த தார்மீக உரிமையையும், அன்பையும் இழந்தார்கள். அதற்குப் பின்பு வந்த மத்திய அரசுகள் “எக்கேடு கெட்டுப் போங்க..” என்று சொன்னதற்கு காரணமும் அதுதான்.
“ம.தி.மு.க. தொண்டன் மீது கை வைத்துப் பார்.. எங்கள் கை என்ன பூ பறித்துக் கொண்டிருக்குமா? அல்லது பரங்கிக்காய் பறித்துக் கொண்டிருக்குமா? பரங்கியர் படைகளுக்கு நேர்ந்ததுதான் உங்களுக்குக் கிடைக்கும் துரோகிகளே..” என்று பொதுக்கூட்டத்தில் முழங்குவீங்களேண்ணா.. அப்ப நம்ம நாட்டு ராணுவ வீரர்களை கொன்னவுங்களை மட்டும் சும்மா விடணும்னு சொன்னா எப்படிங்கண்ணா..? சமயத்துக்கு ஏத்தாப்புல மாத்தி, மாத்தி பேசுவீங்களோ..?
முதலில் ஒரு நாட்டிற்குள், ஒரு அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதென்றால் அந்நாட்டின் சட்டத் திட்டங்களுக்குள் உட்பட்டு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும், எதிர்ப்புகளையும் நடத்தினால்தான் அது போராட்டம். இல்லையெனில் அது நிச்சயம் வன்முறைதான். வன்முறைக்கு பதில் வன்முறையாகத்தான் இருக்கும். இதைத்தான் சிங்கள அரசு கனகச்சிதமாக இப்போது தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது.
நமது மத்திய அரசு இலங்கை அரசுக்கு உதவி செய்கிறது என்றால் அதற்குக் காரணமும் விடுதலைப்புலிகளின் ஆயுத பலம்தான். அந்த ஆயுத பலம் ஒரு போதும், என்றைக்காவது ஒரு நாள் நாடு தாண்டி நமது நாட்டுக்குள் வந்துவிடக் கூடாது என்கின்ற எச்சரிக்கை உணர்வினால்தான்.
ஏற்கெனவே ஆந்திரா, காஷ்மீர், அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து, ஜார்கண்ட் என்று பல்வேறு மாநிலங்களில் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. அடக்க முடியாமல் தவித்துப் போய் இருக்கிறது மத்திய அரசு. ஆந்திர நக்ஸலைட்டுகளுக்கு விடுதலைப்புலிகளின் ஆதரவும், பயிற்சியும் கிடைத்திருக்கிறது என்கிற ஒரு செய்திகூட வெளியாகியுள்ளது. இது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் மிக, மிக ஆபத்தானது.
நமது சொந்தங்கள் என்பதாலேயே ஒரு வன்முறைக் கும்பலை நாமே வளர்த்துவிடக் கூடாது என்பதால்தான் மத்திய அரசு அந்த உதவிகளை தாராளமாக வழங்கி வருகிறது. அந்த உதவியும் செய்யாமல் போனால் வேறு பல நாடுகள் வரத்தான் போகின்றன. அப்போது நமது இந்தியத் துணைக் கண்டத்தில் நமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலும், பிரச்சினைகளும் உருவாகும். அதனை தவிர்க்க வேண்டுமெனில் மத்திய அரசு இதைத்தான் செய்ய முடியும். அதைத்தான் செய்து வருகிறது. இதுவே தவறு எனில் முதலில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவதாக அறிவித்து இந்தியாவை நடுவராகக் கொண்டு தீர்வு காண முயலச் சொல்லுங்கள்.. நிச்சயம் இந்தியா அப்போது தலையிடும்.

எப்படி பார்த்தாலும், எந்தத் திசையில், எந்தக் கோணத்தில் பார்த்தாலும் புலிகளின் ஆயுதப் போராட்டம் மட்டுமே ஈழப் பிரச்சினையில் தலையிட முடியாத அளவு இந்தியாவுக்கு பெருந்தலைவலியாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
மறுபடியும் சொல்கிறேன்.. உலக நாடுகள் அனைத்திற்கும் இந்தப் பிரச்சினை நன்கு தெரிகிறது.. புரிந்த பின்பும் அவர்கள் தலையிடாமல் இருப்பதற்கும், அல்லது தலையிட விரும்பாமைக்கும் ஒரே காரணம் புலிகளின் ஆயுதப் போராட்டம்தான். முடிஞ்சா உங்க புலிகளிடம் சொல்லி துப்பாக்கிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அறவழியில் போராடச் சொல்லுங்கள்.. போராட்டம் நிச்சயம் வெல்லும். வென்றே தீரும்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகத்தான் உங்களைப் போராட வேண்டாம் என்று சொல்கிறனே தவிர, ஈழ மக்களுக்கு ஆதரவாக போராடவேண்டாம் என்று நான் சொல்லவில்லை.
அரசுகளுக்கும், மக்களுக்கும் பிரச்சினை என்றால் அரசுகள்தான் தங்களது ஈகோவை பார்க்காமல், வலிமையுடைந்தவன் என்ற தோரணையில் ஆதிக்கம் காட்டாமல் பணிந்து செல்ல வேண்டும் என்பதுதான் அரச நீதி.
அந்த வகையில் உங்களுடைய போராட்டத்திற்கு இன்னும் சில காரணிகள் தயாராக இருக்குதுங்கண்ணா..
21. இன்றைய நிலைமையில் இலங்கை அரசு தானே முன் வந்து போர் நிறுத்தம் செய்ய வேண்டும். நிறுத்தம் செய்துவிட்டு ஆயுதங்களை கைவிட்டு புலிகள் பேச்சு நடந்த முன் வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் துணிய வேண்டும். நமது மத்திய அரசு இலங்கை அரசை வற்புறுத்தி போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும்.. பின்பு விடுதலைப்புலிகள் உட்பட பல்வேறு தமிழர் குழுக்களையும் ஒன்றிணைத்து பேச்சுவார்த்தை மூலம் ஈழப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்று சொல்லி முழு அளவில் போராட்டத்தைத் தொடரலாம்ண்ணேன்..
22. தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாம்களில் 20 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்புலிகள் என்று சந்தேகிக்கப்படும் ஈழத்து இளைஞர்கள் அனைவரையும் உடனேயே விடுவித்து அவர்கள் விரும்பும் தேசங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். யார், யாருக்கோ அனைவரும் குரல் கொடுக்கிறீங்களே.. இவுங்களைப் பத்தி ஏன் யாருமே பேச மாட்டேங்குறீங்கன்னு எனக்கு ஒண்ணுமே புரியலண்ணா..
20 வருஷமா பாஸ்போர்ட் இல்லை என்கிற ஒரேயொரு குற்றத்திற்காக வேலூர் கோட்டை சிறையிலும், செங்கல்பட்டு சிறப்பு முகாமிலும் அடைபட்டுக் கிடக்கும் இவர்களுக்கு விடிவுதான் என்ன? இலங்கை அரசிடமாவது எங்களை ஒப்படைத்துத் தொலையுங்கள் என்று சாகும்வரை உண்ணாவிரதம்கூட இருந்து பார்த்துவிட்டார்கள். உங்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்கு இவர்களது ஓட்டுக்கள் தேவையில்லை என்பதால் கண்டு கொள்ளாமலேயே இருக்கிறீர்களோ..?
23. ஐ.நா.வின் அகதிகள் மறுவாழ்வு ஒப்பந்தத்தில் இந்தியா இன்னமும் கைச்சாத்திடாமல் நழுவி வருகிறது. முதலில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று சொல்லி டெல்லி பாராளுமன்றத்தின் முன்பாகவோ, மன்மோகன்சிங் வீட்டு முன்பாகவோ தாராளமாக நீங்கள் போராடலாம்ண்ணேன்..
இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் இந்தியாவில் இருக்கும் அனைத்து நாட்டு அகதிகளும் இந்திய பிரஜைபோல் முழு உரிமை பெற்று வாழலாம்.
24. அகதிகளாக தமிழ்நாட்டை நாடி வந்த ஈழத்து மக்களை ஜெயில் மாதிரியான முகாம்களில் அடைத்து வைத்து பிச்சைக்காரர்களை விடவும் அடிமைத்தனமாக நடத்தும் நமது மாநில அரசின் கொடூரத்தனத்தை எதிர்த்துப் போராடலாம்ணேன்..
இந்தியா தவிர மற்ற நாடுகளிலெல்லாம் இலங்கை அகதிகள் கொஞ்சமாவது சுதந்திரமாக, அந்நாட்டு மக்களுக்கான உரிமைகளில் முக்கால்வாசியையாவது பெற்று வாழ்கிறார்கள். ஆனால் சக உணர்வுள்ளவர்கள், தொப்புள்கொடி சொந்தக்காரர்கள் என்று பேசப்படும் தமிழ்நாட்டில்தான் அவர்களது நிலைமை மிக, மிக பரிதாபமாக உள்ளது.
மாதத்திற்கு வெறும் 300(என்று நினைக்கிறேன்) ரூபாயை வைத்துக் கொண்டு அம்மக்கள் தங்களது குடும்பத்தினரை எப்படி காப்பாற்றப் போகிறார்கள்? வெளியில் வேலைக்குச் சென்றாலும் மாலை 6 மணிக்குள்ளாக முகாமுக்குத் திரும்ப வேண்டுமாம்.. கொடுமையாக இல்லை. இந்த இலட்சணத்தில் நீங்கள்தான் ஈழத்து மக்களின் துயரம் பற்றி பேசுகிறார்கள்.. எப்படிங்கண்ணே..?
25. மீனவர் பிரச்சினையில் பரஸ்பரம் எல்லை தாண்டும் மீனவர்களை தொந்தரவு செய்யாமல் அதனை முறைப்படி அனுமதித்து இரு நாட்டு அரசுகளும் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டு மீனவர் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்று இரு மாநில அரசுகளையும் எதிர்த்து போராட்டம் நடத்தலாம்.
அவர்கள்தான் நம்மவர்களை சுட்டுக் கொல்கிறார்கள். எந்த இலங்கை ஜனாதிபதி வந்தாலும் “சரி.. கவனிக்கிறேன்..” என்பார்கள். ஆனால் இங்கே தாக்குதலும், கொலையும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆக நமக்கு வாய்த்த மத்திய, மாநில அரசுகள் சரியில்லை.. நிர்வாகத் திறமை இல்லாதவர்கள் என்பது இதிலிருந்தே நமக்குத் தெரியுதுண்ணே.
ஒரு புறம் மத்திய அரசை ஆதரித்துக் கொண்டே அவர்களை எதிர்ப்பது போல் பாவ்லா காட்டும் மாநில அரசும், மாநில அரசின் சொல்படிதான் தாங்கள் நடந்து கொள்வதாக பிலிம் காட்டும் மத்திய அரசுமாக நமது இந்தியத் திருநாட்டின் நிலைமை போய்க் கொண்டிருக்கிறது. இந்தத் துயரத்தில் நம்மால் முடிந்தது உங்களிடம் இப்போது சொன்னது போல அற வழிப் போராட்டம் மட்டும்தாண்ணே..
நாம போராடலாம்ண்ணே.. போராடிக்கிட்டே இருக்கலாம்ணேன்.. நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தானே போராடுகிறோம்.. நம்பிக்கை ஒரு நாள் நிஜமாகும்ணேன்.. என்னைக்கோ ஒரு நாள் விடியல் பொறக்கும்ணேன்.. ஆனா நிச்சயமா பிறக்கும்ணேன்..
இரு புறமும் நமக்கான ஆட்சியாளர்களும், தலைவர்களும் ஒரு நாள் வரத்தான் போகிறார்கள். அந்த நாளில் அந்த அற்புதம் நிகழத்தான் போகிறது.

வாங்கண்ணே.. அதுக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போம்..

வேற என்னண்ணே சொல்றது..?
அன்புடன்
தங்களது அன்புத் தம்பியான ஒரு உண்மைத்தமிழன்